Consumer Price Index – உண்மையைப் பிரதிபலிக்கிறதா?
ஒவ்வொரு மூன்று மாத கால இடைவெளியிலும் நம்முடைய அகவிலைப்படியானது நுகர்வோர் குறியீட்டு எண்களால் ( CPI Index) முடிவு செய்யப்படுகிறது. மக்கள் அன்றாடம் நுகரும் பொருள்கள் மற்றும் சேவைகளை கணக்கில்கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பொருட்கள், சேவைகளின் பட்டியல் அடிப்படையில் இக்குறியீட்டு எண் கணக்கிடப்படுகிறது. இப்பொருட்கள், சேவைகள் அனைத்தும் ஆறு தொகுப்புகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
1. உணவு மற்றும் பானங்கள்
2. பான், புகையிலை மற்றும் போதை வஸ்துக்கள்
3. ஆடை மற்றும் காலணிகள்
4. வீட்டு வசதிகள்
5. எரிபொருள்
6. இதர பொருட்கள்.
2011-12 ஆம் ஆண்டுகளில் National Sample Survey (NSS) – ன் கீழ் நடத்தப்பட்ட Consumer Expenditure Survey (CES) – க்களில் பெறப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே மேற்கண்ட 299 பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. 299 பொருட்களின் பட்டியலையும் இங்கே தருவது இக்கட்டுரையின் நோக்கமன்று. நுகர்வோர் குறியீட்டு எண் என்பது நம்மைப் போன்ற தொழிலாளர்களின் அகவிலைப்படியைக் கணக்கிட உதவுவதோடு நாட்டின் பொருளாதார நிலையையும் கூட தெரிவிப்பதாக உள்ளது. அமெரிக்க நாட்டின் நுகர்வோர் குறியீட்டு எண்ணை ஒவ்வொரு மாதமும் அந்நாட்டின் அரசு அறிவிக்கும்போது. பங்குச் சந்தைகளில் பெரும் ஏற்ற இறக்கமே ஏற்படுகிறது. நம் நாட்டிலும் கூட மொத்த விலைக் குறியீட்டு எண்ணை விட நுகர்வோர் குறியீட்டு எண் எல்லோராலும் கவனிக்கப்படக்கூடியதாக உள்ளது. இப்போது உள்ள குறியீட்டு எண்ணின் அடிப்படை 2012 = 100 எனக் கணக்கிடப்படுகிறது. நுகர்வுக்குரிய பொருட்கள் மட்டுமே இங்கு கணக்கில் கொள்ளப்படுகிறது. நீதிமன்றங்களில் சட்ட சேவைகளுக்காகச் செலவிடப்படும் தொகை இதில் கணக்கிடப்படமாட்டாது. நுகர்வோர் குறியீட்டு எண் குறித்த ஒரு முன்னுரை உங்களுக்குக் கிடைத்திருக்கும். போகட்டும்.
நாம் இக்கட்டுரையில் சுட்டிக்காட்ட விரும்புவது இப்பட்டியலில் உள்ள 299 பொருட்களும் 2012 ஆம் ஆண்டிலிருந்து மாறாத்தன்மை கொண்டிருப்பதைத்தான். 11 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் பட்டியல் இன்னமும் திருத்தப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நம் வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருட்களின் எண்ணிக்கை மாறுபடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் நாம் பயன்படுத்திய பொருட்கள் தொழில்நுட்ப மாற்றங்களினால் காலாவதியாகிப்போகின்றன. அவ்விடத்தை புதிய பொருட்கள் பிடிக்கின்றன. இல்லையானால் நாமும், நம் குடும்பமும், நம் சமூகமும் பின் தங்கி விடுவோம். கடந்த காலங்களில் சேமிப்பு என்பது வங்கி சேமிப்பு மட்டுமாகத்தான் இருந்தது. இன்று நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பங்குச்சந்தையிலும் ஒரு தொகையை முதலீடு செய்கிறோம். மணிபேக், எண்டௌவ்மண்ட் என ஒரு சில பாலிசிகளை மட்டுமே விற்றுவந்த நாம் இப்போது கணக்கற்ற புதுப்புது பாலிசிகளை அறிமுகம் செய்திருக்கிறோம். மாற்றம் ஒன்றே காலத்தின் கட்டாயமாக இருக்கையில், நம் நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் அகவிலைப்படியை நிர்ணயிப்பதில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் பட்டியல், விலையேற்ற மாறுபாடுகளில் அப்பொருட்கள் நூறுக்கு எவ்வளவு சதம் பங்களிக்கிறது என்னும் முக்கியத்துவம் மிக்க அப்பட்டியல் இன்னமும் அதரப் பழசாகவே இருக்கிறது.
299 பொருட்களுக்குமான வெயிட்டேஜ் என்பதை எப்படி புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் நாம் இப்பொருட்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதே.
ஒன்றிரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.
இணையதளப் பயன்பாட்டிற்கான பங்கு நூற்றுக்கு வெறும் 0.08004 மட்டுமே.
இப்போது பயன்பாட்டில் இல்லாத VCR/ VCD/ DVD Players க்கு 0.00579
வழக்கொழிந்து போயிருக்கும் CD/ DVD Cassettes க்கு 0.00469
VCD/ DVD Players வாடகைக்கு எடுப்பதற்கு 0.00280
தினந்தோறும் நாம் உபயோகப்படுத்தும் கணினி/ மடிக்கணினிக்கு வெறும் 0.1107
வழக்கொழிந்து போய்விட்ட தரை இணைப்பு தொலைபேசிக்கு 0.17064
பள்ளியில் படிக்கும் நம் பிள்ளைகளின் வேன் செலவுக்கு வெறும் 0.24583 மட்டும்.
பல மடங்கு உயர்த்தப்பட்டுவிட்ட ரயில் கட்டணத்திற்கு 0.18495 மட்டுமே.
பிற போக்குவரத்து செலவினங்களுக்கு ( other conveyance) 0.00985 மட்டுமே.
மருத்துவர்களின் முதல் ஆலோசனைக் கட்டணத்திற்கு வெறும் 0.79049
வீட்டுப் பணியாளர்களுக்கு 0.63912 என குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சிகரெட் பயன்பாட்டிற்கு 0.22928
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எரிவாயு உருளைகள் பயன்படுத்தபப்டும் இக்காலத்தில், சாணத்திலிருந்து பெறப்படும் dung cake (ராட்டி) – க்கு 0.44196
வீடு தோறும் அத்தியாவசியமாகிவிட்ட இன்வர்ட்டர் க்கு 0.04317
எரிவாயு அடுப்பு ( Gas Stove) க்கு 0.00001 மட்டுமே.
சமையல், மற்றும் பாத்திரங்களுக்கு 0.00539 மட்டுமே.
இன்று ஒவ்வொரு வீட்டிலும் அத்தியாவசியமாகிப்போன குக்கருக்கு 0.00023 மட்டும்தானாம்.
புதுப்பட சினிமாவிற்கு 0.13070 மட்டுமே.
தக்காளிக்கு 0.57488
வெங்காயத்திற்கு 0.64409.
சம்பளத்தில் பாதியை காலி செய்யும் பிள்ளைகளின் படிப்பிற்கு வெறும் 2.89814 தானாம். ஒவ்வொரு கல்லூரியும் கட்டணத்தை ஒவ்வொரு வருடமும் குறைந்தது பத்து சதம் உயர்த்துவது அரசுக்குத் தெரியாதா என்ன?
தங்கத்தின் விலை வருடத்திற்கு 15 சதம் அதிகரிக்க இங்கு வெறும் 1.08035 மட்டுமே.
யாருமே புத்தகம் வாங்கிப் படிப்பதில்லை என்று அரசுக்குத் தெரியும் போலும். அதனால்தான் புத்தகங்களுக்கு 0.00002 மட்டும் என மிகச் சரியாகவே ஒதுக்கியிருக்கிறது.
நாட்டின் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் பொருளாதார நலனை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார அளவுகோலையும் நிர்ணயிக்கவல்ல மிக முக்கியமான நுகர்வோர் குறியீட்டு எண்ணை நிர்ணயிப்பதில் அடிப்படையாகத் திகழும் இப்பட்டியலும், ஒவ்வொரு பொருளுக்கான வெயிட்டேஜும் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கத்தக்க விதத்தில் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். பொருட்களின், சேவைகளின் பட்டியலை, அதன் விலைமாற்றத்தை கணினி மயமாக்கினால் அப்பொருட்களின் வெயிட்டேஜை கணினியே தந்துவிடும் செயற்கை நுன்ணறிவு யுகத்தில் (Artificial Intelligence Era) நாம் இருக்கிறோம். அரசுக்கும், பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரிகளுக்கும் நுண்ணறிவு தேவைப்படும் காலமிது.