நாடிலி – கவிதை – விமர்சனம்
தோழர் சுகன்யா ஞானசூரியின் “நாடிலி” கவிதைத் தொகுப்பு சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. தமிழ்நாட்டின் ஈழத்தமிழருக்கான அகதி முகாம் ஒன்றில் வசித்துவருகிறார். 90 களில் நடைபெற்ற யாழ்ப்பாண, வன்னி சமர்களின் தொடர்ச்சியாக நடைபெற்ற இடப்பெயர்வுகளில் இவருடைய குடும்பமும் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
1980 களில் பள்ளிப் பருவத்தில் முத்துப்பேட்டை நகரில் நடைபெற்ற ஏராளமான ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், நிதித் திரட்டல்கள், முத்துப்பேட்டையில் குடியேறிய கணக்கற்ற ஈழ சொந்தங்கள் என் நினைவுக்கு வருகின்றன. புலம்பெயர்ந்த ஈழ சொந்தங்களுக்கு சிரமமின்றி வாடகை வீடுகள் கிடைப்பதற்கு அப்போது இளைஞர்கள் களம் இறங்கியிருந்தார்கள். அவர்களின் துயரம் துடைக்கும் அனைத்துப் பணிகளிலும் அப்போதைய இளைஞர்கள் சமரசமின்றி ஈடுபட்டதை நான் அறிவேன். தொடர்ச்சியாக ஈழ விடுதலைப் போராட்டம், அதையொட்டி செழித்து வளர்ந்த கடத்தல் தொழில், ஈழத்தின் சகோதர யுத்தங்கள், இந்திய அமைதிப்படையினாலும், இலங்கைப் படைகளினாலும், பிற்பாடு உலகின் பல்வேறு ராணுவங்களும் சேர்ந்து நடத்திய கொடுமையான இன அழிப்பு இவை அனைத்தையும் எவரும் மறந்துவிடுவதற்கில்லை. அனைத்தும் விரிவாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.
தமிழகத்தின் எந்தவொரு ஈழ அகதி முகாமும் சிறை வாழ்க்கையை நினைவுகூரவே செய்யும். தனது சொந்த இன மக்களின் மீது அகதிப்பட்டம் சுமத்தி வெகு சாமர்த்தியமாக அவர்களின் மீது பல்வேறு துன்பங்களை நாம் சுமத்தி வருகிறோம். கடலூருக்கு அருகில் இருக்கும் ஈழ அகதி முகாம் வாழ்க்கையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அகதி முகாம் வாழ்க்கையை தோழர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் இரண்டாம்தரக் குடிமக்களாகவே அவர்கள் இன்னமும் நடத்தப்படுகிறார்கள். அவர்களின் குடியுரிமைக் கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தோழரின் வலி மிகுந்த கவிதைகளின் ஒவ்வொரு வரியும் எனக்கு மேற்சொன்னவைகளை நினைவுக்குக் கொண்டுவந்தவண்ணமே உள்ளன. இவ்வுலகில் அகதியாய் இருப்பதன் பெருத்த வலியை அவரின் ஒவ்வொரு கவிதையும் சொல்லிச் செல்கின்றன.
“மழை நனைத்த மண்மீது
நடந்து அலைந்து தேசம் முழுமையும்
திரியவேண்டும்
பாடும் பறவையைப்போல்”
கவிஞரின் ஏக்கத்தை இக்கொடும் உலகம் எப்படி நிறைவேற்றப்போகிறது?
“என் தந்தையிடம்
இன்றும் கேட்கிறேன்
ஏன் என்னை அகதியாக்கினீங்கள்?”
என்னும் வரிகளினூடே முப்பது வருடங்களுக்கு முந்தைய ஈழத்து வாழ்க்கைச் சித்திரத்தை நமக்கு வரைந்து தருகிறார் கவிஞர்.
“நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்
யாதும் ஊருமில்லை
யாவரும் உறவுமில்லை”
என்னும் வரிகள் தமிழ்மண்ணின் பெரும் புகழை கேள்விக்கு உட்படுத்திவிடுகின்றன. இன்றைய தமிழனின் செயல்கள் பழம்பெருமைக்கு ஏற்ப அமைகிறதா? என்னும் கேள்வியும் கூடவே தொக்கி நிற்கிறது.
காடும், நதியும் காணாமலடிக்கப்பட்டதையும் கவிஞரின் உள்ளம் பேசும்போது கவிஞரின் அகண்ட மனசையும் நாம் தரிசனம் செய்யமுடிகிறது.
யாழ் வெளியேற்றம் என்னும் கவிதை வரிகளில் கவிஞரின் பரந்த உள்ளத்தை தரிசிக்க முடிகிறது.
கவிஞரின் அரசியலும், அன்பும், போர் தின்ற நிலத்தின் மீதான பற்றும், அகதி முகாம் வாழ்வும் வெறும் வார்த்தைகளால் விளக்கப்பட முடியாதவை. அவரின் கவிதை வரிகளினூடே நாம் அதை தரிசிக்க மட்டுமே முடியும்.
“போர் நிலத்தில்
ஒருகணம்
இறந்தே போயிருக்கலாம்
புலம் பெயராது”
என்னும் வரிகள் என்னை இன்னமும் ஏதேதோ செய்துகொண்டுதானிருக்கிறது.
நாடிலி – கவிதை
மா. ஞானசூரி
கடற்காகம் வெளியீடு
விலை ரூ. 110.
தொடர்புக்கு : 9790350714