தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சரியான தலைவர் – தொல். திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பாகவும், அதற்கு முகநூலில் வாழ்த்துகள் சொல்லியிருந்த என் பதிவுகளுக்குப் பின்னால் இடப்பட்ட பின்னூட்டங்களில் காணப்பட்ட இனம்புரியாத வெறுப்புகளும், ஆட்சேபனைகளும் சில விளக்கங்களுக்கு என்னை இட்டுச் செல்ல, அதன் தொடர்பில் எழுதப்பட்ட சில கருத்துகள் இப்படி கட்டுரையாக விரிந்துபோனது. நண்பர்களும் உரிய விளக்கங்கள் பெறுவார்கள் என நம்புகிறேன்.
திருமாவளவனின் மீது செலுத்தப்படும் இத்தகைய வெறுப்புணர்வுக்கு காரணம் என்ன? ஏன் அவர் இன்னமும் ஒரு சாராரால் வெறுக்கப்படுகிறார்? திருமா தலித் கட்சியின் தலைவர், அவர் எப்படி தமிழ்நாட்டின் தலைவராக இருக்கமுடியும்? என்கிற அதிபுத்திசாலித்தனமான கேள்விகளை(அப்படி அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்) அவர்கள் ஏன் தொடர்ச்சியாக எழுப்பிக்கொண்டே இருக்கிறார்கள்? ஒரு குறிப்பிட்ட சாதியின் மீதான வெறுப்புணர்வு ஏன் இன்னமும் தொடர்ச்சியாக தக்கவைக்கப்பட்டு வருகிறது?
ஏனென்றால் வரலாற்றின் நினைவுகள் எளிதில் அழிக்கப்படமுடியாதல்லவா? கடந்த காலங்களில் நிலத்திலும், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் காத்திரமானப் பாத்திரம் வகித்த ஆதிக்கசாதியினர் பார்வையில் படிந்து போயுள்ள பல பிம்பங்கள் கால ஓட்டத்தில் சுக்கு நூறாக நொறுங்கிப் போய்க்கிடப்பதை அவர்கள் உணர இன்னமும் மறுக்கிறார்கள்.
இப்போது திருமா ஒரு கட்சிக்கு, ஒரு சாதி இயக்கத்துக்கு மட்டுமான தலைவர் என்பதைக் கடந்து வந்திருக்கிறார். அவருடைய பொதுவாழ்வின் தொடக்கத்தில் அவர் அப்படி இருந்திருக்கலாம். இன்னமும் அவரை அப்படியாகக் குறுக்கிப் பார்த்துவிட இயலாது. கடந்துச் சென்றுவிட இயலாது. தமிழக அரசியல் களத்திலும், சமூகக் களத்திலும் ஒரு தவிர்க்க இயலாத ஆளுமையாக அவர் மிளிர்கிறார். சாதி வித்தியாசம் தொலைத்து அவரை நாம் எல்லோரும் ஏற்கும்போது மட்டுமே, மொத்த தமிழ்நாட்டுக்கும் அவர் உழைத்து வருவதற்கான அர்த்தம் உயிர்த்திருக்கும்.
வன்னியச் சங்கத்தை தொடக்கத்தில் ஆரம்பித்தபோது பிற்படுத்தப்பட்ட வன்னிய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பிரிவினராக அறிவிக்கவும், தனி இடஒதுக்கீடு வேண்டியும் மருத்துவர் ராமதாசு அன்றைக்குப் போராடினார். வன்முறைகளையும் கூட கையாண்ட அந்த இயக்கத்தை யாரும் வன்முறை இயக்கமாகக் கருதி அதைத் தடைசெய்துவிடவில்லை. மாறாக இன்று அந்த இயக்கம் வன்னிய மக்களின் சமூகநீதி காத்த இயக்கமாகப் போற்றப்படுகிறது. அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாசு அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியை நிறுவினார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மத்திய அரசிலும் கூட அமைச்சர் பதவிகள் வகிக்கக் கூடிய அளவுக்கு அக்கட்சி மிகவும் செல்வாக்கான கட்சியாக வளர்ந்தது.
தென்னிந்தியாவின், குறிப்பாக தமிழகத்தின் சாதிச்சமூக சூழல் மிகவும் சிக்கலானது. இங்கு கடந்த 1500 ஆண்டுகளாக பிறப்பினடிப்படையில் சாதி என்பது இங்கு மிகவும் வலுவாக நிறுவப்பட்டுள்ளது. புத்தருக்குப் பிறகான சூழலில் புத்தமும், சமணமும் தமிழகத்தில் மிக வலுவாகக் கால்கொண்டிருந்தன. பக்தி இயக்கக்காலம் வரை அதன் செல்வாக்கு அரசியல் செல்வாக்கோடு மிளிர்ந்தது. பின்னர் வந்த அரசியல் சூழலில் சைவ மதமும், வைணவ மதமும் பார்ப்பனியர்களால் கைப்பற்றப்பட்டுவிட்ட நிலையில் புத்தமும், சமணமும் தமிழ்நாட்டில் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டது, அதன் அழிவின் சுவடுகள் மட்டுமே இன்னமும் எஞ்சியிருக்கின்றன.
இந்தச் சூழலின் பின்னணியில் தமிழ்ச்சமுதாயத்தில் சாதியின் பெயரால், பார்ப்பனியத்தால் அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் ஒரே புகலிடமாக பண்டைய இந்தியாவின் ஒரே ஜனநாயக மதமான புத்தம் மட்டுமே திகழ்ந்தது, திகழ்கிறது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அம்பேத்கரின் கடைசிப் புகலிடமாக புத்த மதமே இருந்தது. இந்து வைதீக மதத்துக்கும், புத்த மதத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று மேம்போக்கான சமூக அறிவுகொண்டவர்களால் பேசிடமுடியும், அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் புத்தமதத்தை இந்து வைதீக மதம் விழுங்கிச் செரித்திருக்கிறது என்னும் வரலாற்று உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இந்தச் சூழலில் மட்டுமே இன்றைய தலித் இயக்கங்களை நாம் நோக்கவேண்டும். புத்தருக்குப் பிறகான இந்தியச் சூழலில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே புத்தரின் ஞானமரபுக்கு, கலக மரபுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார். வைதீக இந்துமதத்திற்கு எதிரானவராக அவர் திகழ்கிறார். பார்ப்பனிய சாதிக் கொடுமைகளுக்கு எதிரானவராக, அதன் தீண்டாமைக் கொடுங்கரங்களின் தீண்டுதலை உணர்ந்திருந்த காரணத்தினால் தனது தடத்தின் திசையை தெளிவாக உணர்ந்தவராக அவர் விளங்கினார்.
அம்பேத்கருக்குப் பிறகான சூழலில், தலித் இயக்கங்களின் செயல்பாடுகள் மராட்டியம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் சுருங்கிப்போனது. ஆனாலும் அதன் இருப்பிற்கான தேவைகள் மட்டும் இன்னமும் உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் இன்னமும் இங்கு குறைந்தபாடில்லை. இன்னமும் பல இடங்களில் தலித்துகளுக்கு சம உரிமைகள் மட்டுமல்ல, மனித உரிமைகளே தரப்படுவதில்லை. தீண்டாமையின் வடிவங்கள் மட்டும் நவீன வடிவத்திற்கு மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் ஆதிக்கசாதிகளுக்கு வெறுப்புணர்வைத் தோற்றுவிப்பவையாக இப்போது தேநீர்க்கடை குவளைகளுக்குப் பதிலாக தலித்துகள் அணியும் கூலிங்கிளாசும், ஜீன்சும் மாறிப்போயிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் திருமாவளவனின் மீதான வெறுப்புணர்வை நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அயோத்திதாசரும், பெரியாரும் ஆரம்பித்து வைத்த சமூகநீதிப் பயணங்களைத் தொடரவேண்டிய பெரும் பொறுப்பு திராவிட இயக்கங்களுக்கு மட்டுமல்ல, திருமாவுக்கு உண்டு. அதற்குத் துணை நிற்கவேண்டிய கடமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு மட்டுமல்ல, எல்லா ஆதிக்கசாதியினருக்கும் உண்டு. தலித் சமுதாயத்தினருக்கு எதிராக நடத்தப்படும் கொடும் அடக்குமுறைகளிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றால் மட்டுமே ஆதிக்கசாதியினரும் முழு விடுதலை அடையமுடியும். காடு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும்போது நடுவே உள்ள சில மரங்கள் மட்டும் எரிந்திடாமல் எப்படிக் காப்பாற்றிடமுடியும்? இதைத் தமிழ்நாட்டின் சமூக அறிவியல் அறிந்த எந்த ஒரு குழந்தையும் அறியும். வாழ்வின் கடைக்கோடியில் உழலும் மக்களுக்காக ஒரு இயக்கம் இருக்கிறது என்றால் அதை ஒரு சாதிய இயக்கமாகக் குறுக்கிப் பார்ப்பதை விடுத்து அம்மக்களின் விடுதலைக்காகவே, இறுதியாக தமிழ்மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காகவே அது இயங்குகிறது என்னும் பரந்த பார்வையை தமிழ்நாட்டின் ஆதிக்க சாதிப் பெருமக்கள் வரித்துக்கொள்ளவேண்டும்.
நடைமுறை வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில அற்பமான குற்றச்சாட்டுகள் அவர் மீதும், அவருடைய இயக்கத்தினர் மீதும் ஆதிக்கசாதியினர் சுமத்துகின்றனர். அதில் முக்கியமாக அவரும், அவருடைய இயக்கத்தினரும் கட்டப்பஞ்சாயத்துக்காரர்கள். கட்டப்பஞ்சாயத்தையே ஆதிக்கசாதிக்காரர்கள் செய்யும்போது அது சட்டப்பஞ்சாயத்தாக மாறிப்போவதுதான் பரிதாபம். பஞ்சாயத்து என்பதே நீதி சொல்வதுதானே!. நீதியை ஒரு தலித் சொன்னால் அது கட்டப்பஞ்சாயத்தாக உருமாற்றப்படும் என்பதுதானே நடைமுறை உண்மை?
திருமா இன்று ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற போதிலும், அதன் சுய நலத்திற்காக எக்காலத்திலும் தலித்துகளின் உரிமையை விட்டுக் கொடுத்ததில்லை. அதனால்தான் அவர்கள் வீறுகொண்டு திருமாவின் பின் திரள்கிறார்கள். திராவிட இயக்கத்தின் மீதான தொடக்ககால கடும் விமர்சனங்களை இப்போது திருமா செய்வதில்லை. நட்பு முரண்களை காலத்தின் போக்கில் களைந்திட இயலும் என்பதை திருமா உணர்ந்திருக்கிறார். ஆனால் சமுதாயக் களத்திலும், அரசியல் களத்திலும் துளிகூட இந்துத்துவத் தொடர்புகளை அவர் கைக்கொள்வதில்லை. அரசியல் களத்தில் பகுஜன் சமாஜம் கட்சியினர் கடந்த காலங்களில் இந்துத்துவர்களோடு கொண்டிருந்த உறவுகளையும், அப்படிப்பட்ட பொருந்தா உறவுகள் இறுதியில் பகுஜன் சமாஜத்தினருக்கு பேரிடியாக அமைந்துபோய் விட்டதையும் கடந்த கால வரலாறு நமக்குச் சொல்லித்தருகிறது. தமிழ்நாட்டில் தலித்துகள், இந்துத்துவாவில் ஐக்கியமாவதின் அபாயத்திலிருந்து முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது திருமா என்னும் தடுப்பரணால் மட்டுமே.
இந்துத்துவ அபாயம் தமிழகத்தை நெருங்கி வருவதிலிருந்து அதைத் தடுத்துக் காக்கும் ஒரு அரணாக திருமா இருப்பதோடு மட்டும் அவரது செயல்பாடுகள் முடிந்துபோகவில்லை. அவர் ஒரு தமிழ்த்தேசியவாதியாகவும் பரிணமிக்கிறார். அவருடைய தமிழ்த்தேசியத் தளம் பிற இன மக்களின் வெறுப்புக்குரிய பிரதேசமல்ல. தமிழ் மக்களின் உரிமைகளுக்கான தளம் அது. ஒட்டுமொத்த தமிழ்மக்களின் மீது உள்ள அக்கறையினால், அன்பினால் மட்டுமே ஒரு தலைவர் தமிழ் மக்களின் நலனுக்காகக் குரல் கொடுத்திட இயலும். திருமாவின் தமிழ்த்தேசியம் அயோத்திதாசரின் தமிழ்த்தேசியத்திலிருந்து கிளைத்து வெடித்து எழுந்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து சமூகப் பண்பாட்டுத் தீமைகளுக்கும் வேர் சமஸ்கிருதத்தில் இருக்கிறது என்னும் புரிதலைக் கொண்டிருக்கும் திருமா, தமிழ்ப்பெயர் ஏற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்துகிறார். இன்றைய தமிழ்ச்சமுதாயத்திற்குத் தேவையான தமிழ்த்தேசியத்தை திருமா முன்னிறுத்துகிறார். தமிழகத்தின் சில தலித் அறிவு ஜீவிகளும், பொதுவுடமை இயக்க ஆளுமைகளும், அறிவுஜீவிகளும் ஈழப்போராட்டத்தைக் கொச்சை செய்தபோது, திருமா அப்போராட்டங்களுக்குத் துணிந்து ஆதரவு தந்ததோடு, தனி ஈழம் கோரிக்கையை வெகுவாக ஆதரிக்கவும் செய்தார். தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக அவர் எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும் என்று சமீபத்தில், கொரோனா ஊரடங்குக் காலத்திலும் போராட்டங்களை அவர் முன்னெடுக்கிறார்.
திருமாவை ஒரு சாதியவாதி என்று தூற்றும் நண்பர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். அவர் சாதியவாதியிலிருந்து தத்துவவாதியாக பரிணாமம் அடைந்து பல காலமாகிவிட்டது. அவர் இப்போது சாதிகளின் அடிப்படையில் கட்சி நடத்துவதை விட்டுவிட்டு தத்துவத்தின் அடிப்படையில், கோட்பாடுகளின் அடிப்படையில் இயக்கம் கட்டுகிறார். தமிழர்களை அவர்களது உரிமைகளை வென்றெடுக்க அமைப்பாய்த் திரட்டுகிறார். சாதிய இழிவுகள் நீங்க, பாயும் சிறுத்தையாக இருந்த திருமா இப்போதும் இருக்கிறார். ஆனால் அது யாரையும் காயப்படுத்தாத சிறுத்தை. நீட்டுக்காக அனிதா உயிரை மாய்த்துக்கொண்ட போது அச்சிறுத்தை எல்லாத் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு அமைதியாகத்தான் வலம் வந்தது. இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் எழுந்த திருமாவின் சீற்றங்கள் இப்போது இல்லை, ஆனால் அறச்சீற்றம் இன்னமும் அப்படியே இருக்கிறது. அதனால்தான் சிக்கலான பிரச்னைகளுக்கு மிக அமைதியான, எளிமையான, எல்லோரும் ஒப்புக்கொள்ளகூடிய தீர்வுகளை அளிக்க அவரால் முடிகிறது. அவரைத் தூற்றும் ஆதிக்கவாதிகள் அவருடைய எழுத்துகளை வாசித்துப் பார்க்கட்டும். அவருடைய அமைப்பாய்த் திரள்வோம் நூலை ஒவ்வொருவரும் வாசித்துப் பார்க்கட்டும். ஒரு இயக்கத்தின் தலைவனிடம் இவ்வளவு தத்துவப்பார்வைகளா? என்ற வியப்பில் அசந்து போவீர்கள்.
பரந்த தமிழ்ச்சமுதாயத்திற்காகப் பாடுபடும் அதே வேளையில் தன்னுடைய அடிப்படையான சாதி சார்ந்த இயக்கப் பணிகளை அவர் நிறைவேற்றியே ஆகவேண்டும். அப்படி என்ன பணிகள்? ஒரு ஊரில் நடக்கும் வன்கொடுமைக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அல்லது வேறு தலித் அமைப்புகளும்தான் குரல் கொடுத்திடமுடியும் அல்லது அப்படியே ஆக்கப்பட்டுவிட்டது. செங்கொடி இயக்கம் வீறுகொண்டு எழுந்த கீழத்தஞ்சைப் பகுதிகளிலும், தீவிர கம்யூனிஸ்ட்கள் இயங்கிய தமிழகத்தின் வேறுசில பகுதிகளிலும் தலித்துகளின் அடிமைத்தனத்துக்கு எதிராக அவ்வியக்கங்கள் ஓங்கிக் குரல் கொடுத்த நிகழ்வுகளும் வரலாற்றில் உண்டு. கீழத்தஞ்சையில் தோழர் பி. சீனிவாசராவ் தலைமையில் செங்கொடி இயக்கம் தலித்துகளின் பல்வேறுபட்ட துன்பங்களை வர்க்கப் போராட்டத்தில் ஒழித்தது என்பது வரலாறு. ஒருபுறம் வர்க்கப்போராட்டத்தில் வர்க்க வேறுபாடுகள் ஒழிக்கப்பட்டபோது கூடவே தலித் மக்களின் சாதிய இழிவுகளும் நீங்கினாலும்கூட, சாதியத்தை வர்க்கப் போராட்டத்தின் ஒரு கூறாகப் பார்க்கத்தவறிய கம்யூனிஸ்ட் இயக்கங்களால்தான், தலித்துகளை மையப்படுத்திய இயக்கங்கள் உருப்பெற்றன என்பதை நாம் மறுத்துவிடமுடியாது.
அத்தவறுகளிலிருந்து மீண்டுவந்ததின் அடையாளம்தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள். கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நிலைப்பாடுகள் எல்லாம் காலம் கடந்தவையாகிப் போய்விட்டன. தென் தமிழகத்தில் மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களின் புதிய தமிழகம் கட்சியானது, தம் மக்கள் குறித்து அவர் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடுகளினால் மக்கள் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தமிழக தலித் மக்களின் ஒப்பற்றத் தலைவராக திருமா மாறியுள்ளார். எழுத்துவன்மை, பேச்சுவன்மை, செயல்திறம் இவை மூன்றிலும் திருமா மிளிர்கிறார். கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட காலங்களில் தமிழகத்தில் தலித் மக்களின் மீது நடத்தப்பட்ட அனைத்து வன்கொடுமைகளுக்கும் எதிராக அவர் வெகுமக்கள் போராட்டங்களை வீறுகொண்டு நடத்தியுள்ளார். குறிப்பாக திண்ணியத்தில் தலித் மக்களின் மீது திணிக்கப்பட்ட மனித நாகரிகமற்ற வன்கொடுமையான மனிதனின் மலத்தை மனிதனே தின்ன வைத்த கொடுமையைக் கண்டித்து, மாஞ்சோலைத் தொழிலாளர்களின் மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலைக் கண்டித்து, கொடியங்குளம் தலித் மக்களின் மீது போலீசார் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலைக் கண்டித்து, புளியங்குடிப் படுகொலைகளைக் கண்டித்து, மருக்காலம்பட்டி சாதிவெறியாட்டத்தைக் கண்டித்து, சங்கரலிங்கபுரம் சேரியில் நடத்தப்பட்ட போலீஸ் வெறியாட்டத்தைக் கண்டித்து, கூகையூர் கோவில் நுழைவுப்போராட்டம், ஜெயலலிதா கொண்டுவந்த மதமாற்றத் தடை சட்டத்திற்கு எதிராக நடத்தியப் போராட்டங்கள், தமிழ்ப்பெயர் ஏற்பு விழா இப்படியாக திருமா இத்தமிழ்ச்சமூகத்தின் கலாச்சார, பண்பாட்டு நலனுக்காக நடத்தியப் போராட்டங்களும், இயக்கங்களும் ஏராளம். இவை அனைத்தும் ஏதோ ஒரு தனிப்பட்ட சாதிக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்தின் அழுக்குகளைப் போக்க அவர் எடுத்த நடவடிக்கைகளே.
திருமாவின் தொடக்ககால எழுத்துகள் தொகுக்கப்பட்டு வெளிவந்த நூல் ‘அடங்க மறு’ என்னும் தலைப்பைக் கொண்டது. இந்நூலுக்கு புகழ்பெற்ற அம்பேத்கரிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான கெயில் ஓம்வெத் அணிந்துரை எழுதியிருப்பார். அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஒரு கருத்தை மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன். “சுயமரியாதை இயக்கத்தின் மண்ணான தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்ன ஆயிற்று? வரலாற்றில் தமிழ்ப்பண்பாடு என்பதன் பொருள்தான் என்ன?” என ஓம்வெத் கேள்வி எழுப்புகிறார். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் தொடங்கப்பட்டு பார்ப்பனர் அல்லாத, தலித் அல்லாத பிற்படுத்தப்பட்டவர்களின் சமூக நீதி தமிழ்நாட்டு அளவில் பரவலாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது என பெருமையாக ஒப்புக்கொண்டாலும், அந்த சமூக நீதி தலித்துகளுக்குக் கிடைத்திருக்கிறதா? அல்லது பெரியார் விரும்பியபடி, பெரியாருக்குப் பிறகான சூழலில் சாதியப் படிநிலைகளை வெட்டி எறிவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டனவா? அல்லது பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்துகளின் ஒற்றுமை வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறதா? ஏமாற்றமே விடை.
மேலவளவு பஞ்சாயத்துக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முருகேசனுக்கு என்ன ஆயிற்று? தலை போயிற்றே..இந்தியாவின் சட்டப்பஞ்சாயத்தை விட சாதிகளின் கட்டப்பஞ்சாயத்துதானே அங்கு ஆட்சி செய்தது? “நாளை ஒருவேளை, தப்பித்தவறி ஒரு சேரிக்காரன் முதல்வராகவோ, பிரதமராகவோ வரும்நிலை வந்துவிட்டால், இங்கு தேர்தலே வேண்டாமென்று கொக்கரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று ஒரு முறை திருமா எழுதியதுதான் நினைவுக்கு வருகிறது. நிறவெறிக்கு எதிரான டர்பன் ஐ.நா மாநாட்டில், தலித்துகளின் மீது இழைக்கப்படும் தீண்டாமைக்கொடுமையும் கூட நிறவெறிக்கு இணையானதுதான் என்று பிரகடனப்படுத்தப்படவேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமா போராடினார். இன்று அமெரிக்காவில் ஆளும் அதிகாரவர்க்கத்தினரிடையே மட்டும் நிறவெறி தாண்டவமாடுகிறதே தவிர, அமெரிக்க வெகுமக்கள் அந்தக் கொடுமையிலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டனர். அதனால்தான் நேற்று ஒரு ஒபாமாவும், இன்று ஒரு கமலா ஹாரிசும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடமுடிகிறது.
கமலா ஹாரிஸ் என்னும் அமெரிக்கக் கருப்பின, இந்திய வம்சாவளிக் கலப்பினப் பெண் அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நமக்குப் பெருமை என மார்தட்டும் நாம், நம் நாட்டில் பொதுத் தொகுதி ஏதாவது ஒன்றில் தலித் ஒருவர் போட்டியிட என்றாவது அனுமதித்திருக்கிறோமா? தமிழ்நாட்டின் பார்ப்பனர் அல்லாத, தலித் அல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதிப் பயணம், தலித்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது மட்டுமே அர்த்தப்படுவது மட்டுமல்ல, சாத்தியமுமாகும்.