தொற்று நோய்களால் கலவரப்படும் சமூகம் – ஒரு சமூகவியல் பார்வை
இந்தக் கட்டுரை வரையும்போது தமிழ்நாட்டில் ஒரளவு கணிசமானோர் கொரொனாவால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடும். எனினும் நிகழ்வன அவ்வளவு நம்பிக்கையைக் குலைக்கும் அளவு இல்லை. அரசினை விமர்சிப்போர் அரசியல் ரீதியாக எவ்வளவு விலகி இருப்பினும் நாம் சரியான தரவுகள் மூலமே உண்மைகளை அறிய இயலும். தொற்றுநோய்களின் வரலாறு என்பது கிபி 2 ஆம் நூற்றாண்டு துவங்கி உள்ளதாகும். மனிதகுலம் நோய்களை எதிர்த்தே தன்னை முன்னேற்றி வந்துள்ளது. மனிதஉடல் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் அறிவுடையது. ஆனால் கொள்ளை நோய்களை எதிர்க்கும் பாங்கில் மனிதமரபணு எவ்வாறு தன்னை அறிவுடையதாக ஆக்கிக்கொண்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள், ஆய்வுகளிலோ அல்லது ஆவணங்களாகவோ இல்லை. இலக்கியங்கள் மிகுந்த வலியுடன் கொள்ளை நோய்களைப் பற்றி எழுதி வந்துள்ளன. ஆல்பெர்ட் கம்யுவின் “ப்ளேக்” ( Albert camu’s PLAGUE) எனும் நாவல் கொள்ளைநோய் எனும் கருப்பு நோயான ப்ளேக்கைப் பற்றிய பதிவினை வெளியிட்டுள்ளது. அனந்தமூர்த்தியின் ’சமஸ்காரா’ ஒரு கொள்ளை நோயின் தாக்கம் மானுட நம்பிக்கைகளுக்கு ஊறுவிளைக்கும் வண்ணம் எதிர்நிலையில் உள்ளது என்பதனை எழுதுகிறது. மனிதனின் நம்பிக்கைகள் மட்டுமல்ல, அறிவியல், பகுத்தறிவு என அனைத்தையும் தகர்க்கும் பொருள் கொள்ளை நோய்களில் உள்ளதினை நாம் அறியலாம்.
நாவல் இலக்கியம்- அறிவியலும் நோயும் இணையும் களங்கள்.
ப்ராம்ஸ்டோக்கரின் ட்ராகுலாவிற்கு, ப்ளேக்தான் வரலாற்று அடிப்படை –ட்ராகுலா மற்றும் ப்ளேக் இரண்டும் அச்சுறுத்துவன என்பது-ஒரு ஒற்றை நிலைக் கருத்தாக்கமாக இங்கு கையாளப்பட்டுள்ளது.
உண்மையில் ட்ராகுலா எழுதப்பட்ட காலத்தில் இருந்த அறிவியல் நோக்கு மற்றும் ஆர்வம் என்ன? மேலும் அறிவியலின்பால் உள்ள நாட்டம் எப்போதும் மேற்கினைச் சார்ந்ததா? என்ற ஐயங்கள் நமக்கு எழக்கூடும். ருமெனிய மற்றும் அயர்லாந்துப் பழங்கதையான, ’ட்ராகுலா’ அறிவியல் நாட்டத்தின் அடிப்படையினில் சொல்லப்பட்டிருந்ததாக இல்லாவிட்டாலும் ‘ஸ்டோக்கர்’ அதனை எழுதிய காலத்தில் நிச்சயமாக மேற்கு, அறிவியல் நாட்டம் கொண்டதாகவே இருந்துள்ளது. ஜொனாதன் ஹார்க்கெர் ஒரு சொத்து வில்லங்கப் பிரச்சினை தொடர்பாக ட்ராகுலாவைச் சந்திக்க ட்ரான்சில்வெனியா செல்கின்றான். நன்கு உபசரிக்கும் ட்ராகுலா, ரத்தவெறிகொண்டவன் . அவன் ஜொனாதன் ஹார்க்கெரின் காதலியான மீனாவின் ஒவியம் ஒன்று ஜொனாதன் ஹார்க்கெரின் டாலரில் இருப்பதைக் காண்கின்றான். பின் அவனை மயக்கமுற்ற நிலையினில் விட்டுவிட்டு அவன் லண்டன் செல்கின்றான். லண்டனில் அவன் தனது சவப்பெட்டிகளை இறக்கும் சமயம் அதில் இருந்து எலிகள் பல ஒடுவதை நாம் காண இயலும். அந்த நகரில் பின் பெண்கள் பலர் கொல்லப்படுகின்றனர். அதேசமயம் ப்ளேக்நோயும் தொற்றுகிறது. பின் டாக்டர் வான் ஹெல்சிங்க் அதற்கு மருந்து கண்டுபிடிப்பதாக திரைப்படம், நாவல் ஆகியன சொல்கின்றன. (இந்தநாவலின்பின்னணியில் காலரா இருப்பதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனினும் ப்ளேக் தொடர்ந்து 14 கிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த நோய். திரைப்படத்தில் உள்ள குறியீடுகள் அதைத்தான் வலியுறுத்துகின்றன).
ஃபிராங்கன்ஸ்டைன் மற்றும் டிராகுலா: கோதிக்மான்ஸ்டர்ஸ், டிராகுலா, ஆகியன உண்மையில் நவீன அறிவியல் தொடர்புடையனவா?
ஃபிராங்கன்ஸ்டைனுக்கும் விஞ்ஞானக் கருப்பொருளுக்கும் இடையிலான தொடர்பைக் காண்பது கடினம் அல்ல, ஆனால் டிராகுலாவை அறிவியலில் ஆர்வமுள்ள மற்றொரு ‘கோதிக்’ நாவலாக வகைப்படுத்துவதைக் கண்டு பல வாசகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். கோதிக்வகை நவீனத்தில் சிறிய அளவில் திகில் ஊட்டுதல் போன்ற கூறுகளில் நாம் கவனம் செலுத்துகிறோம்: ஆபத்தான காட்டேரி பற்றிய ஸ்டோக்கரின் பார்வை இருள், உடல்பசி, காமம், மற்றும் கன்னிப்பெண்கள் கொடிய சூழ்நிலைகளில் வாழ்ந்து வருவது போன்ற நிலமைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு நாவல்— ஸ்டோக்கெரின் படைப்பு. அவ்விதமே ஸ்டோக்கரின் படைப்பு எனினும் சிறியஅளவில் திகிலூட்டும் அம்சங்களை அவர் கையாள மறக்கவில்லை.
ஆனால் பிராம் ஸ்டோக்கர் தனது சமகால விஞ்ஞானத்தால் – குறிப்பாக மருத்துவ அறிவியலால் ஈர்க்கப்பட்டார். அவரது மூத்தசகோதரர் ‘தோர்ன்லி’ ஒரு குறிப்பிடத்தக்க அறுவைசிகிச்சை நிபுணர். மூளை அறுவை சிகிச்சை குறித்த தோர்ன்லியின் சில சொற்பொழிவுகள், டிராகுலாவுக்கான பிராம்ஸ்டோக்கரின் குறிப்புகளில் காணப்படுகின்றன. நாவலில், லூசிவெஸ்டென்ரா ஒரு தூக்க நடையாளர்.அவர் தூக்க நடையில் இருக்கும்போது ட்ராகுலா அவரைக் காமுறுகின்றான். பின் அவர் நோய்வாய்ப்பட்டபோது, உளவியல் மருத்துவர் ஜான்செவார்ட் மற்றும் பேராசிரியர் ஆபிரகாம் வான்ஹெல்சிங் ஆகியோர் , அவரது கழுத்துக்காயம் மற்றும் இரத்தம் வெளிறிப்போன தன்மைக்கான மருத்துவக்காரணத்தை ஆராய்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மருத்துவஅறிவியலில் சில ஆய்வுத்துறைகள் இருந்தன.அவை இன்று அறிவியலை நாம் காணும் அளவில் சிறப்பாக உள்ளதாகக் கருதக்கூடாது. எடுத்துக்காட்டாக, பிராம்ஸ்டோக்கர் மனநல ஆராய்ச்சி சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். அன்றைய இறைநம்பிக்கையாளர்கள் மற்றும்ஆன்மீகவாதிகள் ஆகியோர் இத்தகு அறிவியல் நடவடிக்கைகள் மற்றும் படைப்புகள் ஆகியவற்றை எதிர்த்தே வந்துள்ளனர்.
டிராகுலாவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சில விஞ்ஞானக்கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் இன்றைய நாளில் மிகவும் பொருந்தாதன, ஆனால்அது இருபத்தியோராம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்கள் நமக்குச் செய்வதுபோல லாபகரமானதாகவும் ஆபத்தானதாகவும் நிச்சயமாகஇல்லை. இந்த நாவலில் காணும் கோதிக்திகில்- கிளாசிக்சூழலில், சஸ்பென்ஸ், புல்லரிப்பு மற்றும் அச்சத்தை அதிகரிப்பதில்அறிவியலும் மருத்துவமும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இரத்ததானம்- ரத்தமாற்று சிகிச்சை முறைகள்
லூசி – அவளது உறக்கநடை முடிந்தபிறகு, லூசி டிராகுலாவுடன் ஒரு நள்ளிரவு காமுறுகிறாள். பின் அவள் தனது படுக்கையில் காணப்படுகிறாள். அவளை உயிர்ப்பிக்க, வான்ஹெல்சிங் தனது இரத்தத்தை மாற்றாக அளிக்க முயல்கிறார். அதேபோல் லூசியின் சிறைபிடிக்கப்பட்ட காதலன், புகலிட மருத்துவர் ஜான்செவெல் ஆகியோரின் இரத்த நன்கொடைகளையும் அவர் வழங்குகிறார். இந்த நாவல் இரத்த மாதிரிகள் மற்றும் ரத்த சேமிப்பு நடைமுறைகள் ஆகியவற்றிற்கு முந்தையது. எனவே அவளை மீட்பவர்களின் இரத்தம் லூசியுடன் ஒத்துப்போகுமா என்பது குறிப்பிடப்படவில்லை; அவர்களின் ஆண் உயிர்ச்சக்தி அவளை உயர்த்தும் என்று கருதப்படுகிறது. இங்கு ஒரு மைக்ராஸ்கோப் உபயோகப்படுத்துவது குறிப்பிடத்தகுந்தது. நோய்தாக்கும் நுண்ணுயிரிகளை டாக்டெர் ‘வான்ஹெல்சிங்க்’ மைக்ராஸ்கோப் உதவியினால்தான் காண்கின்றார்.
அதேநேரத்தில், இரத்தம் ஏற்றுதல் எனும் நடைமுறை விலக்கமாக(taboo), இருந்தது. மேலும் உயிர்காக்கும் நடைமுறை என்றபோதும் இந்தக் கதாபாத்திரங்களுக்கு நிச்சயமற்ற மற்றும் சங்கடமானதாக்கங்களை அது உருவாக்குகின்றது. ஒரேநேரத்தில் பலஆண்களின்முக்கிய உதிரங்களுடன் லூசிக்கு ஊசிபோடுவதை, வாம்பயர் வேட்டையர்கள் ஓரளவு முறையற்றது என்று கருதுகின்றனர். ஆர்தர்ஹோல்ம்வுட், லூசியின் ஆரோக்கியத்திற்காக தனது பலத்தை தியாகம் செய்வதில் மிகவும்ஆர்வமாகஉள்ளார், அதனால்வான்ஹெல்சிங்கும் ஜான்செவெலும் அமைதியாக ஒப்புக்கொள்கிறார்கள். எனினும் ரத்தமாற்று போன்ற நடவடிக்கைகள் குறிப்பாக, மீனாவுக்கு ரத்தமாற்று செய்யும் போது அவர்கள் மிகுந்த குற்றவுணர்வு மற்றும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.
உடல் அம்சங்களைக் கொண்டு ஆளுமையை விளக்கமுடியும் என்ற நம்பிக்கை ஒரு பழங்கால அறிவாக அது இருந்தது. ஆனால் ஸ்டோக்கரின் நாட்களில் இயற்பியல், அறிவியலின் சிறப்பான இடத்தில் இருந்ததாகக் கூற இயலாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குற்றவியல் விசாரணையின் எழுச்சி மற்றும் மனித அடிமைத்தனத்தின் மீதான வன்முறை மோதல்கள் தொடர்பாக, குற்றவியல் விவரக்குறிப்பை ஆதரிக்கவும், இனப்பாகுபாட்டை நியாயப்படுத்தவும் இயற்பியல் கோட்பாடு பயன்படுத்தப்பட்டது: ஆய்வாளர்கள் குற்றவாளிகளின் நெற்றியின் அளவு, மூக்கின்வடிவம் அல்லது உளவுத்துறை மற்றும் ஒடுக்கப்பட்டபிரிவினரின் குற்றவியல் நடத்தைக்கான போக்கு பற்றிய பரந்த பொதுமைப்படுத்தலுக்கான ஆதாரங்களை, கண்களைக் கொண்டு அறிந்துகொண்டனர்.
அவ்வகையினில் நமக்குத்தெரிந்த மற்றும் நேசிக்கும் வில்லன் காட்டேரியைக்(Dracula) கட்டியெழுப்ப, சிறைபிடிக்க இயற்பியல் மூலம் விளக்க முடியும் என உணரப்பட்டது. டிராகுலாவின் சின்னமான ‘மீன்மூக்கு’ மற்றும் “கொடூரமான” சிவப்புவாய் ஆகியவை அவரது தீய இயல்பின் வெளிப்புறக் குறிகாட்டிகளாக இருக்கவேண்டும். (ஹேரிகூறுவதுபோல்) உள்ளங்கைகள் மற்றும் இறுக்கமான, பிடிவாதமான விரல்களுடன் …அவன் இருப்பான்.
இங்கே ரத்தமாற்று என்பதனை, இன்றைய காலகட்டத்திற்கு ஒப்பாக நாம் கொள்ளவில்லை என்றாலும் அதில் கிட்டத்தட்ட ப்ளாஸ்மா சிகிச்சைக்கான ஒற்றுமைகள் இருப்பதை நாம்புரிந்து கொள்ளலாம். நாவலில் ஒருநுண்கிருமி ஆய்வுக்கருவி(microscope) வான்ஹெல்சிங்க் ஆல் பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தகுந்தது.
இப்போது நாம் ஆய்வுசெய்யவேண்டிய தலைப்பு கொவிட் 19 ஐப்பொருத்தமட்டில் எவ்வாறு சமூகவியல், மருத்துவஇயல் அடிப்படைகள் கையாளப்படுகின்றன, போலவே எவ்வாறு சமூகஇயல் சூழ்நிலைமை தொற்றுநொய்களால் மாறுகின்றது என்பதனையே. பொதுவாக நமக்கு கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மிகாதசிறிய மற்றும் பெரியஅளவு தகவல்கள் நம்மிடையே உள்ளன.எனினும் ஆவணங்கள் நமக்கு ப்ரிட்டிஷ் ஆட்சிக்குப்பின்தான், அதாவது ஒரு 200 ஆண்டுகள் கொள்ளைநோய் வரலாறு மட்டும் நம்மிடம் உள்ளது. அதிலும் நமக்கு ப்ளேக் பற்றிய வரலாறு அவ்வளவாக இல்லை. ஏனென்றால், நாம் அப்போது கிட்டத்தட்ட சுதந்திரம் பெற்றுவிட்டோம். ஆங்கில ஆவணங்கள் கூட மலேரியா பற்றியே உள்ளன என்று கூறலாம். ஆய்வறிஞர்கள் மற்றும் மருத்துவர்கள் உருவாக்கிய நூல்கள் மட்டுமே நமக்குச் சான்றாக உள்ளன. நாம் கடந்த 20 ஆண்டுகளில் சார்ஸ் ,மெர்ஸ், ழிகா, நிஃபா,எபொலா, பன்றிகாய்ச்சல் எனும் எச் 1 என் 1 (SARS,MERS,ZICA,NIPAH,SWINE FLU OR H1 NI)ஆகிய நோய்கள் மற்றும் இப்பொதைய கொவிட் 19 (covid 19) ஆகிய வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 25 அல்லது 15 ஆண்டுகளிலாவது இது சார்ந்த தரவுகள் அல்லது ஆவணங்கள், ஊடக ஆய்வுகள் ஆகியவற்றைக்கையில் வைத்திருக்கலாம். இது குறித்த பள்ளிப்பாடங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. ஆகவே ஒன்று நிச்சயம். அரசுகள் அல்லது அதிகார மையங்கள் மற்றும்ஊடகங்ள் எதும் இத்தகைய தரவுகளின் அடிப்படைகளை வளர்த்துக் கொள்ளாதது, சந்தைசார்ந்த பொருளாதாரமுகம் மட்டுமே சமூகத்துக்கு உள்ளது என்பது நிரூபணம். உலகசுகாதார நிறுவனம்கூட கொவிட் 19 பற்றிக்குறிப்பிட, அதன்அபாயங்களைத் தெரிவிக்க, மிகவும் நாட்கள் எடுத்துக் கொண்டது. இதற்குக் காரணம், இந்த வைரஸ் டி என் எ (DNA) மூலம்பரவும் ஒன்று அல்ல. அதன் ஆர்என்எ(RNA) அமைப்பு பாலிமரீஸ்(polymerase) வகைச்செயல்முறையில் எவ்வாறு பல்கிப் பெருகுகிறது என்பது பற்றிய விளக்கம் நம்மிடையே இல்லை. குறிப்பாக முந்தைய அனுபவங்களை ஒப்பிடும்போது, சார்ஸ், மெர்ஸ் போன்றன இவ்வளவு வேகமாகச் செயல்படவில்லை என்பது பற்றிய விளக்கம் இல்லை. இப்போது ஒருசாமியார் பாம்புக்கறீிசாப்பிடும் நாடுகளில் தான் இது நன்றாகப்பரவுகிறது என்று கூறி வருகிறார்.
எனினும் நம்மிடம் கொவிட் 19 பரவுதல்,ஆய்வுசெய்தல் போன்ற செயல்முறைகளுக்கு இப்போது கணிசமான கருவிகள் உள்ளன. எக்ஸ்ரெய்(XRAY) கருவிமூலம் நெஞ்சகப்பகுதியை / நுரையீரலை ஆய்வு செய்தல், காய்ச்சல் போன்றவற்றை அறிதல், இன்னும் சிறப்பான ஆய்வுகள் இதனுடன் இப்போது ஆய்வு அட்டைகள் மற்றும் ரெபிட் ஆய்வுக்கருவி(RAPID TEST KIT) போன்றன கைவசம் உள்ளன. இன்று காலை வந்த ஒருசெய்தியில் கோயம்புத்தூரில் கொவிட் 19 க்கான சிகிச்சையைக் கையாளும் மருத்துவர்கள் மிகவும் எளிதாக இதனை செய்கின்றனர் என்பது. காரணம், அவர்கள் சாதாரண காய்ச்சலுக்குப் பயன்படும் எதிர் உயிர்க்கொல்லி (ANTI BIOTIC) ஆண்டிபயாடிக் மருந்துகளையே தருகிறார்கள் என்பது. இதுமிகவும் வியப்பானது. வெப்பநாடுகளில் இப்போது இது ஒரு வாய்ப்பு என்று மட்டும் இதை ஒப்புக்கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். பொதுவாகஆசிய நாடுகளை கொவிட் 19 அவ்வளவாகப் பாதிக்கவில்லை என்பது இது போன்ற ஒருஉண்மைதானா? எனினும் உலகசுகாதார ஆய்வுநிறுவனம் எவ்வாறு ஆய்வு செய்வது என்ற வழிகாட்டு நெறிகளை வகுத்துள்ளது.
இப்போதுள்ள கொவிட் 19 என்பது முந்தைய காலங்களில் நமக்கு அறிமுகம் ஆன ஒன்றுதான். இது இன்ஃப்லூயன்சா(influenza) வகையினைச் சேர்ந்தது. சிங்கப்பூரில் சார்ஸ் என்றோ அல்லது ஆசியநாடுகளில் மெர்ஸ் என்றோ அறிமுகமானதன் ஒருவடிவமே. சார்ஸ்ஐப் பொருத்தமட்டில் அது மூச்சுவிடுவதில் கடின சிக்கலை எற்படுத்தும். மற்றைய வைரஸ்கள் காய்ச்சல் , இருமல் போன்ற தொல்லைகளை அளிக்கும். கொவிட் 19 பற்றிய அல்லது அதுசார்ந்த அனைத்து வைரஸ்களின் சோதனைகளும் நியுக்லிக் ஆசிட் ஆம்ப்லிஃபிகெஷன் டெஸ்ட்( NAAT)எனப்படும்- அதாவது மரபணு தொடர்பான பரிசோதனைகள் ஆகும். எல்லா பாக்டீரிய அல்லது வைரஸ்கள் காற்று அல்லது நீர்மூலம் பரவக்கூடியன. ஆனால் கொரொனா வகைத் தொற்றுகள் காற்றில் பரவாது என்பதால்முககவசம் அணிவதில் இரண்டு வேறு கருத்துகள் உள்ளன. பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் வயிற்றுப்போக்கு, நீர்மாசினால் எற்படுவதே.
ஆகவே, பொதுவாக வைரஸ் பரவும் பகுதிகளென்று அறியப்படும் பகுதிகளான தொண்டை,,மூச்சுக்குழல், நுரையீரல் மாதிரிகளை சேகரித்து அதாவது ரத்தம், சிறுநீர், எச்சில் போன்றவற்றைக் கொண்டு இப்பரிசோதனை நடைபெறும். இன்குபெஷன்(incubation) காலம் என்பது பொதுவாக 5 நாளில்இருந்து 14 நாளென்ற அளவில்இருக்கும். ஆய்வுமுறை REAL TIME REVERSE TRANSCRIPTION POLYMERESE CHAINREACTION எனப்படும். இப்பொதெல்லாம் நடைமுறையினில் பரிசோதனை அட்டைகள்கூட(rapid test kit cards) வந்துவிட்டன. கிட்டத்தட்ட சில நிமிடங்களிலெயே கூட முடிவுகளை நாம் அறியமுடியும் என்று கூறப்பட்டாலும் நம்பகத்தன்மை அரிதானது.
தொற்றுபரவுதல்:
தொற்றுபரவுதல் பல் விதங்களில் உருவாகின்றது. அது நிச்சயமாக ஒருநேர்கோட்டில் பரவுவது கிடையாது. கொவிட் 19 காற்றில் இருக்கும். ஆனால் அது அதிக அளவு அவ்வாறு பரவுவது கிடையாது என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தொடுதல் மூலம் கையில் படிந்து அது மிக விரைவாகப் பரவுகின்றது என்பது நிரூபணம். மனிதர்களின் கையைக் கொண்டு அனைத்தையும் செய்து கொள்ளும் பழக்கமே இந்தநோய் அதிகம் பரவக்காரணம் என்றும் கூறலாம். மனிதன் உயர்வடைய அவனது கை மற்றும் கால்களின் செயலாக்கம் ஒரு முக்கியக் காரணமென்று டார்வின் மொழிந்ததை எங்கெல்ஸ் ஒப்புக்கொள்வார். மனிதர்கள் அனேகமாக, பெயர்வினில் இருப்பவர்கள். ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடம் மற்றும் இடையறாத பயணங்கள் மூலம் தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்டவர்கள். தொடுதல், தழுவிக்கொள்ளுதல் மற்றும் முத்தமிடல் ஆகியன மற்ற விலங்கினங்களிடம் இருந்து அவர்களைப் பிரிக்கும் முக்கியமான செயல்கள். விலங்குகள் இடத்தில் இவ்வாறு தொற்றுநோய்கள் அதிகம் பரவாமல் இருப்பதற்கு அவை இடம்விட்டு இடம் அதிகம் நகர்வதில்லை. அவற்றிக்கும் அவற்றின் செய்ககைகளுக்கும் ஊடகங்கள் என எதுவும் இருப்பதும் இல்லை. உதாரணமாக மனிதன் உண்பதற்கு வட்டிலை உபயோகப்படுத்துவான். அளவுகடந்த உபகரணங்கள், சாதனங்கள் ஆகியவற்றை அவன் பயன்படுத்துவது அவனுடைய அறிவின் மீதுள்ள நம்பிக்கை காரணம். மேலும் நாம் இன்று வசிக்கும் உலகம் நுகர்வு சார்ந்த ஒரு உலகம். எனவே நாம் பயன்படுத்தும் பொருட்கள் எண்ணிலடங்காதவை. விலங்குகள் பகுத்தறிவை உபயோகப்படுத்துவது கிடையாது. அது அவற்றிற்குக் கிடையாதும்கூட. ஆகவே அவை தமக்கு நன்றாகத் தெரிந்த வாழ்க்கை முறையை மட்டுமே தேர்ந்தெடுத்து வாழ்கின்றன. இயற்கையின் விதி என்னவோ அதனை அவை மீறுவதில்லை. ஒரு 10000 ஆண்டு கால பிரபஞ்ச வரலாற்றை நாம் ஆய்வு செய்ய, நமக்கு வைரஸ் பரவல் குறித்த தரவு முழுமையாகக் கிட்டலாம்.
மந்தைகளாக(herd) வாழ்வதால் விலங்குகளின் தொற்றும் ஒரு குறிப்பிட்ட புவியியல் சூழலுடன் முடிந்துபோய்விடும். தொற்றுக்கள் பாக்டீரிய
(bacterial) மற்றும் வைரஸ் சார்ந்தன என்பதால் அவை எல்லாவகையினிலும் பரவக்கூடும். நீர், காற்று, தொடுதல் மற்றும் மனிததொடர்புகள், பாலுறவு நடவடிக்கைகள் குறிப்பாக ஆண் பெண் மற்றும் ஒரினக்கலவி வகை பாலுணர்வு ஆகியவற்றால் பரவக்கூடும். ஃபாசிஸ்ட்டுக்கள் ஒரினக்கலவியாலளரைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். காரணம் அவர்கள் இயல்புப் பாலியல்வகையினர் அல்ல என்பதும், தூய இனவிருத்திக்கு எதிரானவர்கள் எனபதுமாக அவர்கள் கருதப்பட்டமை. ஃபாசிஸ்டுகள் ஃபாசிச இலட்சினையை அவர்கள் முதுகின் மீது நிரந்தரச் சின்னமாகக் குத்தியிருந்தனர் என்பது முக்கியமானது. இனவாதிகள் தொற்றுக்களுக்கு அவரவர் வகையினில் விளக்கம் அளிக்கக்கூடும் என்பதால் தொற்று- சமூகஅளவில் சகிப்பின்மையை உருவாக்கக்கூடியது. தீபச்செல்வன் தமது ஒருகட்டுரையினில் சமீபத்தில் தமிழ் இன மக்களுக்கு, இலங்கையில் தொற்றுக்கு சரியான சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்று தெரிவித்திருந்தார். பாலியல் கூட்டுறவில் இறுக்கமான உடல்இணைவு தொற்று அதிகரிக்க வாய்ப்பாகும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்(ஜியாங்க் மற்றும் சோஹ் 2018)ARTICLE -RESOUCE CONTROL AND EPIDEMIC SPREADING….நோய்த்தொற்று எற்படும்போது அது அடுக்கு அடுக்காக (layer by layer) ஏற்படுகின்றது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். வெவ்வேறு அடுக்குகள் வெவ்வேறு நிலைகளில் சமூகத்தில் காணப்படுபவை. ஒருபயணி, வானூர்தி மூலம் நோயினைக் கடத்திக்கொண்டு வரும்போது முதலில் அவர் சக பயணிகளைப் பாதிக்கிறார். பின்அவர் மேற்செல்லும் வழிகளில் டாக்சிஒட்டுனர், கடைக்காரர்கள், மற்றுமுள்ள தம்குடும்பத்தினர் ஆக அவர் களம் காணும் அத்துனை சமூகமும் தொற்றுக்கு ஆளாகிறது. இது முதல்அடுக்கு ஆகும். பின்அவரால் தொற்றப்பட்ட டாக்சி ஒட்டுனர் அவர் சார்ந்த களண்களைத் தொற்று உண்டாக்கச் செய்கிறார். இது இரண்டாம் அடுக்கு ஆகும். சமீபத்திய புள்ளிவிபரங்களைப் பார்க்கும்போது நமக்கு முதல் அடுக்குத் தொற்றாளர்கள் உயர்சமூகத்தினர் எனினும் அடுத்த அடுக்கு சார்ந்தவர்கள் ஏழ்மைச் சமூகத்தினர் என்பதனை உணரலாம். காரணம் இந்தச் சமூகமே உதிரிநிலைச்சமூகம். மூடியோ, கவசங்களோ இல்லாத ஒரு சமூகம். அமெரிக்காவில் இப்போதுள்ள புள்ளி விபரங்களின்படி கருப்பினமக்கள் அதிக தொற்றுக்கு உள்ளானதை நாம் அறியலாம். தொற்று நோயின் பரவல் தகவல்களின் அடிப்படையினில் மாறக்கூடியது என்று ஜியங்க் மற்றும் சொஹ் கூறுகின்றனர். ஆம், தகவல் சார்ந்த சமூகமான நடுத்தரவர்க்கம் முறையான மருத்துவத் தகவல்களை நோக்கி சென்றுவிடும். நாம் இப்போது காணலாம் ஒவ்வொரு இல்லத்திலும் பெண்கள் செய்திகளைக் காண்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தொற்று சார்ந்து தெரிந்து அதன்படி நடக்க விரும்புகிறார்கள். அடுக்குகளின் பலம் பலவீனம் சார்ந்தே அவைமற்ற அடுக்குகளுக்கு நோய்த் தொற்றைக் கடத்துமா இல்லையா என்பது தெரியும். தொற்றின் காலம் மற்றும் தொற்று, குறிப்பாக கொவிட் 19 ஐப் பொறுத்தமட்டில் அது பரவும் வேகம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தைவை. கொவிட்19 எதிர்பார்த்ததை விட வேகமாக பரவும் ஒரு வைரசாக உள்ளதொடு மனிதர்கள் இந்த நுகர்வுப் பருவத்தில் அதனைக் கடத்துவது வேகமாகஉள்ளது.
நோய்த்தொற்று மனிதர்களின் புலப்பெயர்வை வேகமாக்குகிறது மற்றும் அவர்கள் உயிர் அல்லது வாழ்வாதாரம் ஆகியவற்றைச் சிதைக்கிறது. 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது இந்திய அமைப்புசாராத் தொழிலாளர்கள் கால்நடையாகவே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடக்கும்படி ஏவப்பட்டனர். அவர்களே இப்பொது வாழ்வாதாரம் சிதைந்தும் காணப்படுகின்றனர். ப்ளேக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குடிபெயர்ந்ததோடு மரணமடைந்ததும் காணவேண்டியது. சம்ஸ்கார நாவல் ப்ளேக்காலத்தில் ப்ராமணர் அக்ரஹாரத்தை விட்டு நீங்க வேண்டியது குறித்த பதிவினைக் கொடுக்கிறது. நோய்கள் சாதிமதங்களைக் கடந்தன எனினும் வறுமையுடையோரே அதிகம் பாதிப்புக்கு உள்ளாவர்.
பரவலைப் பொறுத்தவரை முதல், இரண்டாம் நிலைஅடுக்குகள் அவ்வப்போது தமக்குள்ளும் தொடர்பில் இருக்கக்கூடியன. சமயங்களில்அவை தமக்குள்ளேயே சுற்றிச் சுழலக்கூடியன. விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நோய்பரவாமல் தடுக்கக்கூடியன. ஸ்வீடென் நாடு ஹெர்ட் இம்யுமுனிடி(HERD IMMUNITY) வகையினில் எந்த ஊரடங்கையும் அமல்படுத்தாமல் விட்டிருக்கிறது. வரலாற்றை நாம் நோக்கினால் முந்தைய காலங்களில் அரசுகள் இயன்ற அளவே நோய்த்தடுப்பில் ஈடுபட்டிருப்பதனை உணரலாம். அப்போது ஏன் மனித குலம் பிழைத்துக் கிடக்கிறது? இது நிச்சயமாக மனித உடலிலே உள்ள ஒரு எதிர்ப்புத்திறன் காரணமாகவே இருக்கும். மனிதஉடல்தானே தன்னைத் தற்காத்துக்கொள்ளும் தன்மை உடையது – அவ்வறிவு உடையது. இன்றைய தினம் டாக்டர் ஃபாசி, அமெரிக்கத் தொற்று நோய்த்தடுப்புநிபுணர் அமெரிக்காவில் ஏற்கனவே மருத்துவசிகிசசை எடுத்துக்கொண்ட நோயாளிகள் இம்யுனிட்டி அட்டை வழங்கப்படுவார்கள் என்று குறிப்பிடுகிறார். கொவிட் 19 ஒருபுதிய வைரஸ் என்பதால் மனிதஉடல் தனது இம்யுனிட்டி(immunity) எனும் நோய் எதிர்ப்புத் தன்மையை நன்குபெறும் என்று பல நிபுணர்களும் கருதுகின்றனர்.
வரலாறு தெரிந்தவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் தொற்றுநோய் குறித்தோ, எதிர்வரும் காலங்களில் பொதுசுகாதாரம் குறித்து எவ்வளவு அரசுகள் அல்லது அதிகார அமைப்புகள் கார்பரேட் நிறுவனங்கள் கொள்கை முடிவுகள் மற்றும் சட்டங்களை வகுத்துள்ளனர் என்றுகூறினால் நல்லது. பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவ நடவடிக்கைக்கு செலவுசெய்வதில் உண்மையான சமூக முன்னேற்றத்திற்கான ஆய்வுசெய்ய எவ்வளவு செலவுசெய்கின்றன என்பது கேள்வி.
இப்பொதுதான் நமது பாரதப்பிரதமர் ஊரடங்கு நீடிப்பு குறித்த தனது உரையை முடித்துள்ளார். விரைவில் நல்ல மாற்று இருக்கும் என நம்பலாம்.