கொரோனா அழித்தெழுதும் உலகு!!
இரா.மோகன்ராஜன்
கொரோனாத் தொற்றுடன் வாழப் பழகுங்கள் என்று நாட்டின் முதல் குடிமகன், பிரதமர் முதல் அமெரிக்க சனாதிபதி வரை சொல்லிவிட்டார்கள். எனவே வாழப்பழகுவோம். மூக்கிருக்கும் வரை சளி இருக்கும் என்பது போல கடைசிக் குடிமகன் வரையிலும் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எப்படிப் பழகுவது?
மனைவியிடம் போலவா..
குழந்தைகள்
நெருங்கிய உறவுகள்
தூரத்து சொந்தங்கள் போலவா
அல்லது,
நண்பர்கள் போலவா..
முகம் தெரிந்த
முகம் தெரியாத
எதிரியைப் போலவா
எப்படி என்பதுதான் தெரியவில்லை. எப்படி என்பதைத்தான் இனிப் பழக வேண்டியிருக்கிறது.
அக்கம்பக்கம், வீதி, கடைத்தெரு என்று நடமாட முடியாத ஏக்கம் கால்களின் துயரமாக இருக்கிறது. ஏதாவது ஒரு காரணம் சொல்லி வெளியே செல்ல சிறைப்பட்ட உடம்பு, மனது சிறை விரித்துப் பார்க்கிறது. கால்களை இறுக வைத்துக் கயிறற்ற கயிரால் கட்டப்பழகத்தான் வேண்டும். மனதை கயிராகத் திரிக்க முடியுமென்றால் நன்று.
உலகம் இன்றைக்கு தலைகீழாக மாறிக் கொண்டுள்ளது. கொ. கு முன். கொ.. கு பின் என்று இனி உலகம் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. சமூகம், அரசியல், பொருளாதாரம், என அது ஒரு ஆழிப்பேரலை போன்று புரட்டிப் போட்டுக் கொண்டுள்ளது.
விடுதலைப்பற்றி பேசுவோர், யாதொருவரும் பேசாதோர் மொத்தமும் சிறையில்தாம் உளர். வீட்டுச் சிறை. தனிமைச் சிறை. சிறையற்ற சிறை.
கொரோனா தொற்று என்பது உலகச் சமூகத்தின் புது வகைத் தீண்டாமையை புதுவகை பண்பாட்டை அறத்தை(!) சமூகமயப்படுத்திக் கொண்டுள்ளது. எச்.ஐ.வி தொற்று சமூகத்தில், குடும்ப உறவுகளில், பண்பாட்டு ஒழுக்கங்களில் எவ்வாறு செயற்பட்டதோ அது போல அதற்கும் மேலாக கொரோனா தொற்றின் இயங்குதல் உள்ளது. பெனிக்சு முதல், ஜார்ஜ்ப்ளோய்ட் வரையிலுமான மரணங்கள் கொரோனா தொற்றின் பிறிதொரு வகை மரணம் என்பதை ஏற்கத்தான் வேண்டும்.
கொரோனாவுக்குப் பிறகான மரணங்களில் தொற்றற்ற தொற்று காணப்படவே செய்கிறது. தொற்றில்லாத மரணங்களையும் அது தொற்றிக் கொண்டதாகவே தெரிகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை கொரோனா பற்றிய அச்சம், அய்யம் நிழலைப் போல பிரியாதிருக்கிறது.
அறிகுறியற்ற தொற்றும் ஒரு வகையாம். பசுத் தோலைப் போர்த்திக் கொண்டிருக்கும் புலி போல.
சொந்த உடல் மீதான எல்லா நம்பிக்கைகளையும் அது கைகழுவுகிறது. அதனால் ஆயுள் ரேகை குறித்த அச்சத்தில் பிற எல்லா ரேகைகளும் அழியும் வரை கைகளைக் கழுவுகிறது இவ்வுலகு.
நுகர்வுக் குப்பைகளை நேற்றுவரை ஆபாசமாகச் சுமந்த உடல், பிறகெப்போதையும் விட ஒரு சுமையாகத் தோன்றத் தொடங்கியிருக்கிறது. உடல் ஒரு சுமையாக மாறுவதை கற்பனை கூடச் செய்ய முடியாதவர்களின் துயரம் இன்றைக்கு மிகப் பெரியது. ஒரு ஆமையைப் போன்று உடலுக்குள் முடங்கும் வித்தை, யோகா என்று ஏதாவது இருந்தால் யோகா-அரசியல்வாதிகள் பரிந்துரைக்கலாம்.
தொற்றின் மருத்துவயியல் போன்றே தொற்றின் அரசியலும் வேகமாகத் தொற்றிக் கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் தீண்டுவதை, உரையாடுவதை, கூடுவதை, திரள்வதை எல்லாவகையிலும் தடை செய்கிறது மட்டுமல்லாமல் மனிதனை மனிதன் நம்புவதையும் சேர்த்தே நிராகரிக்கிறது. எல்லாவற்றையும், சந்தேகப்படு என்கிறது கொரோனா தொற்றின் அறிவியல், கொரோனா தொற்றின் நோயியல், கொரோ தொற்றின் அரசியல்.
தமிழ், இந்தியச் சூழலில் இன்றைக்கு கொரோனா என்பது முந்தய தீண்டாமையின் இயல்புகளை உள்வாங்கிக் கொண்டதாக உள்ளது. மேல்வர்க்க கொரோனா உயர் வகையினதாகவும் சுத்தங்களை மீறி வருவதாகவும், கீழ்வர்க்க கொரோனா என்பது சுத்தமின்மையால், அசுத்தங்களால் வருவதாகவும் பெருந்திரளாக ஏரி குளங்களில் மீன் பிடிக்கத் திரள்வது, இறைச்சிக் கடைகளில் கூடுவது. சரக்குந்துகளில் சரக்குகளைக் கையாள்வது, முடி திருத்தகங்களின் விதி மீறல்கள் இப்படியானவையாகும்.
கொரோனா என்பது அரசின் பிறிதொரு அடக்குமுறைச் சட்டம். அப்படித்தான் அது கையாள்கிறது. கொரோனா என்பது அவசரநிலைச் சட்டம். கொரோனா என்பது ஒரு ஊரடங்கின் பெயர். கொரோனா என்பது அரசின் கொள்கை கடந்த இசம். இசம் கடந்த கொள்கை.
கொரோனா பெயரில் எதை வேண்டுமானாலும் நீதிபடுத்தும் இடத்தில் அதிகாரவர்க்கம் இருக்கிறது. பொது முடக்கத்தைக் காரணம் காட்டி பொதுத்துறைகளை மூடுவது முதல், தனியாருக்கு அவற்றைத் திறந்துவிடுவது வரை நியாயப்படுத்திக் கொள்ள முடியும். முடிகிறது.
கல்வி தொடங்கி சுற்றுசூழல் வரையில் அரசின் தன்னிச்சையான போக்குகள், மாநில அதிகாரப்பறிப்புகள் என்று கொரோனா காலத்தை ஒரு நெருக்கடியான காலமாகக் கருதி அதிகாரவர்க்கம் செயல்படுவதை மறுத்துவிட முடியாது. நீதியின் பெயரால் நடப்பவைப் போலவே கொரோனாவின் பெயரால் நடக்கிறது. கொரோனாவும் பிறிதொரு நீதிதான் போலும்.
நோய் தொற்றும் சாவு எண்ணிக்கையும் இலட்சக்கணக்கில் ஏறிக்கொண்டிருக்க மதவழிபாட்டுத்தலங்கள் எல்லாம் மூடிக்கிடக்க மதசார்பு நிறுவனங்களின் விழாக்களில் பிரதமர் உள்ளிடோர் பங்குபெறுவதும், மதசார்பற்ற கொள்கைகளை அரசின் பெயரிலேயே கொரோனா கொள்ளை நோய்க் குழியிலேயே தள்ளி மண் அள்ளிப் போடுவதும், பொறுப்பற்ற வகையில் பெருந்திரளில் கூடுவதும் சகிக்க முடியாத கொரோனா காலத் துயரமாகும். கொரோனா கால பயங்கரவாதமாகும்.
பொதுச் சமூகம் வீழ்ந்து கொண்டிருக்கும்போது நீரோ மன்னனின் பிடிலை இராமர் கோவில் வளாகத்தில் நின்று வாசிக்கிறார் நாட்டின் பிரதமர். கொள்ளை நோய் கூட பேதமற்று மனிதர்களை விழுங்கிக் கொண்டிருக்க மனிதர்களைப் பிளவுபடுத்தும் அரசியலை செய்வது கொள்ளை நோயைவிடக் கொடிய மனநோயாகும்.
அரசியலைப் பிடித்தாட்டும் மதவெறி நோய்த்தொற்றில் பலவீனமுற்று வீழ்ந்து கொண்டிருக்கும் உடல்களையும், மனங்களையும் தொற்றி, இக்காலத்தில் அதன் உச்சத்தைத் தொட்டுக் கொண்டுள்ளது.
கருவறையைவிட்டு கடவுள் வர பயப்படும் பெருந்தொற்றுக்காலத்தில் வரலாற்று கோபத்தை, வரலாற்று நியாயத்தை வரலாற்றின் பெயரால் நிறுவுகிறார்கள். கடவுளுக்கு செய்யும் நியாயத்தை மனிதருக்கு செய்ய மனமில்லாதவர்களின் மதத்தொற்றும், அதிகாரத் தொற்றும் பிற எல்லாத் தொற்றையும் விட உயிர் குடிப்பதாக உள்ளது.
பெருந்தொற்றின் சவப்பெட்டி மீது பெருந்தூண்கள் எழும்புகின்றன. கடவுள் மட்டும் இருந்து ஆளும் சுடுகாட்டை அவர்கள் கட்டியெழுப்புகிறார்கள்.
முன்னரும் எலும்புகள்தாம் சாட்சியாய் நிலத்திலிருந்து எழுந்து வந்தன பிறகும், பிறகெப்போதும் தோண்டத் தோண்ட வரலாற்றுத் தோண்டிகளின் நிலங்களில் பெருந்தொற்றுப் பிணங்களின் ஏக்கம் நிறைந்த எலும்புகளே கிடைக்கக் கூடும்.
எத்தனைவகை பிளவுகள் உண்டோ அவற்றையெல்லாம் கொரோனா காலத்தில் நிகழ்த்திப் பார்க்கின்றன அதிகாரவர்க்க முதலாளித்துவ அரசுகள்.
சூழலைச் சுரண்டுவது இன்றைக்கும் நின்றபாடில்லை. பொதுமுடக்கத்தின் காரணமாக சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாசற்ற நிலை அண்டார்ட்டிக்கா பகுதியின் வான்வெளியில் ஓசோன் படலத்தைக் கூட இயற்கை அதனளவின் சரி செய்து கொண்டுள்ளது. ஆனால் மனிதன் இயற்கையைச் சுரண்டும் அறமற்ற செயல் இன்றும் தொடர்வதை சகித்துக் கொள்ள முடியவில்லை. வனம், மலை, கடல், காற்று, நிலம், வெளி என சூழல் சுரண்டலே இன்றைய கொள்ளை நோயான கொரோனா உள்ளிட்டத் தொற்று நோய் பரவ காரணம் என்று சூழலியளாலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆயினும் சுரண்டலை வளர்ச்சியின் பெயரால் நீதி படுத்திக் கொண்டு மக்களை கைகளைக் கழுவி நோயிலிருந்து தப்பிச் செல்ல கேட்கப்படுகிறார்கள். தொற்றிலிருந்தும், தொற்றைக் காரணம் காட்டியும் தப்பிச் செல்வோரைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
மனித வரலாறென்பதே அவன் கொள்ளை நோய்களுடன் போரிட்டு வளர்ந்து வந்துள்ளதே என்பார் வரலாற்றாய்வாளர் யுவால்நோவா ஹராரி. ஒரு பக்கம் போரும், மறுபக்கம் சமாதானமும், பிறிதொருபக்கம் அதனைக் களையும் நடவடிக்கைகளையும் கூட வரலாறுதான் அப்படியான கொள்ளை நோய்களை மனிதன் தனது அனுபவ, அறிவியல் அறிவைக் கொண்டு முறியடித்து வந்துள்ளதை மனித வரலாற்றுடன் சேர்த்தே வாசிக்க வேண்டியிருக்கும்.
கொள்ளை நோய்களை தொடக்கத்தில் தன்னிடமிருக்கும் தாவர, வேதிமப் பொருட்களைக் கொண்டே அவன் விரட்டியடித்துக் கொண்டுள்ளான். அப்படியான நோய் தீர்க்கும் மருந்துகள், மனிதகுலத்தின் மொத்த அறிவாக அவனது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் கூடவே வளர்ந்து வந்துள்ளது. எதை விலக்குவது, எதை விழுங்குவது என்ற அனுபவ, அறிவியல் அறிவுக்கு ஏற்ப நோய் தீர்க்கும் அறிவியலும் சேர்த்தே வளர்ந்துள்ளது. மனிதனைத் தாக்கும் இன்றுவரையிலான நோய்கள் ஒட்டுமொத்தமாக 4,000 என்று சொல்லப்படுகிறது. இவைதான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பரிமாணங்களில் வருகிறது என்றும் அவ்வாறு அது வரும்போது பல புதிய புதிய பெயர்களை சூட்டி நவீன அரசியல் அறிவியல், மருத்துவம் பயமுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனிதனின் உடல், உள அமைப்பில் எதுவித பரிணமா வளர்ச்சியும் எட்டாத நிலையில் மனிதனைத் தாக்கும் நோய்கள் மட்டுமே அவ்வாறான நிலையை எட்டுகின்றன. எனவே குறிப்பிட்ட அந்த 4,000 எண்ணிக்கையிலான நோய்களும், அதற்கான மருந்துகளும், அலோபதி அற்ற பிற மருத்துவத் துறைகளில் ஏற்கனவே உள்ளதாக கூறுகிறார்கள். குறிப்பாக சித்த மருத்துவம் என்று கூறப்படும் மக்கள் மருத்துவம், மக்கள் மருத்துவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.
முதலாளித்துவ உலகில் எல்லாமே வணிகம், சுரண்டல், கொள்ளையிடல் என்பவற்றை நீதிபடுத்தும் இடத்தில் இருப்பதால், வணிக மருத்துவம், மருத்துவ வணிகம் அப்படியான பிற மருத்துவ முறைகளை அனுமதிப்பதோ, நோய்களைத் தீர்க்கவோ விரும்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மனிதனில் இருக்கும் பெருந்தொற்றின் வரலாற்று அச்சத்தை நிகழ்காலத்தில் வைத்து பணம்பறிக்கிறது மருத்துவ, அரசியல், அறிவியல் உலகு.
இயற்கையுடன் இணைந்த மனித உடலை, இயற்கையிலிருந்து வேறுபடுத்தி, இயற்கையின் எதிர்க்கூறுகளைக் கொண்டு மனித நோய்களைத் தீர்க்கும் முறைமையை மனித உடல் ஏற்றுக் கொள்ளாது என்று தெரிந்தும் வேதிமங்களால் தற்காலிகத் தீர்வை தரும் மருத்துவமுறையை வணிகத்தை மட்டுமே நோக்காகக் கொண்டு மனித உடலை தளமாகக் கொண்டு தற்காலிக மருந்துகளை சந்தைப்படுத்தும் ஆங்கில மருத்துவமும், அதனுடன் தொடர்புடைய ஆளும் அரசுகளும், அதிகாரவர்க்கமும் வணிக அரசியலும் பிற மருத்துவமுறைகளை ஒதுக்கியும், வளர்ச்சியை மட்டுப்படுத்தியும் சில பல நூறாண்டுகளாய் செய்துவரும் வன்முறை மருத்துவ அரசியல் கொரோனா போன்ற சவாலான-சவாலாக்கப்படும் நோய்களைத் தீர்ப்பதை தடுத்து வைத்துக் கொண்டுள்ளன.
கொரோனா கொள்ளை நோய்க்கு மருந்து இருப்பதாகச் சொல்லும் பிற மருத்துவ முறைகள், மருந்துகள், மருத்துவர்கள் போலி மருத்துவர்களாக, போலி மருந்துகளாக, போலி மனிதர்களாக சித்தரிக்கும் வணிக அரசியல் மெய்யாகவே நோயைத் தீர்ப்பதைவிட அதை அப்படியே வைத்திருக்கும் பயங்கரவாத அரசியலாகும். இதற்கு துணைபோகும் அரசுகள், அதிகாரவர்க்கம் என யாதொன்றும் கொள்ளை நோயைக் காட்டிலும் இரக்கமற்றதாகும். கொடூரமானதாகும்.
மக்கள் நலனா? வணிக நலனா? என்பதில் அவர்களுக்கு எதுவித குழப்பமும் கிடையாது. அலோபதியில் மட்டுமே தீர்வு என்ற அரசியல், உளவியல், உடம்பியல் நம்பிக்கையை அவர்கள் மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் அரசியலே மக்களை மரணக்குழிக்குள் தள்ளிக் கொண்டுள்ளது. வணிகத்தை முதன்மை படுத்தும் அரசுகளே மரணத்தை வளர்த்தெடுக்கின்றன. கொள்ளை நோயின் பெயரால் மக்களை கொல்வது இப்படியான அரசியலும், அதிகாரமுமே.
இந்த அரசியலே சமூகத்தையும் பிளவுபடுத்துவதாக இருக்கிறது. சமூகத்தின் நோய்க்கூறாகவும் மாறிக் கொண்டுள்ளது. உடலை ஒருவிதமாகவும், மனதை ஒருவிதமாகவும், சமூகத்தைப் பிறிதொருவிதமாகவும் அது ஊடுறுவிச் சென்று தாக்கிக் கொண்டுள்ளது.
மனிதனை மனிதன் கண்டு அச்சப்படவும், விலகிச் செல்லவும், வெறுப்படையவும், நம்பிக்கையிழக்கவும் வைக்கிறது.
இரு மனிதர்கள் மட்டுமே இருக்கும் படகு கவிழும் நிலையில் யார், யாரை கடலில் தள்ளிவிடுவது என்ற மனநிலையை இந்த முதலாளித்துவ அரசியலும், சமூகமும், நுகர்வியமும், நோய்த் தொற்றுக்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
“இரண்டு பேருமே தப்பிப்பிழைப்போம்!” என்ற ஆதி மனநிலையை, ஆதி அறத்தை அழித்ததுதான் இன்றைய அரசியலின், முதலாளித்துவத்தின் ஆகப்பெரிய சாதனை.
அரசியலில் கொரோனா என்பது அதிரடிச் சட்டங்களை, மனிதவிரோதச் சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள சட்டம், சட்டமல்லாத ஊரடங்காக இருக்கிறது. சமூகத்துக்குள், தனிமனிதனுக்குள், குடும்பங்களுக்குள் அது ஏற்படுத்திச் செல்லும் அரசியல், சமூக தனிமனிதன்சார் உளவியல் உள்ளிட்ட இன்னபிற பற்றி பேசித்தான் ஆக வேண்டும்.
தலித்துகள், பெண்கள், பழங்குடிகள், விளிம்புநிலையினர், குழந்தைகள் மீதான வன்முறைகள் இக்காலங்களில் அதிகரித்துச் செல்வதை ஏற்க முடியாது. இருபதுக்கும் கூடுதலான தலித்துகள் மீதான தாக்குதல்களும், குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் என்பன தனித்திருக்கும் தமிழ்ச் சமூகத்தின் நோய்மையை மிக ஆபாசமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.
கட்டுக்கடங்கா துய்ப்பின் வெறியை அவிழ்த்துவிடும் தொலைக்காட்சிகள் அச்சத்தையும், வெறுப்பையும், இருத்தலின்மையையும், பாலியல் பெருந்துய்ப்பையும் ஒருசேர இல்லங்களின் இருண்ட அறைகளில் கொட்டி இறைத்துச் செல்கின்றன இக்காலங்களில்.
இணையாக, கைபேசிகள் அவற்றை தூண்டி தனிமையை, பெரும் பாலியல் நுகர்வுக் குறிகளை விரைப்பாக்கி மனிதனை என்றுமில்லா திண்ம வணிகப் பண்டமாக மாற்றிக் கொண்டுள்ளன. பெருந்தொற்றைக் காட்டிலும் பெருந்தொற்றான இச்சாபங்கள் தமிழ் மண்ணில் ஒரு இருளைப் போல இன்றைக்குக் கவிழ்ந்து மூடிக் கொண்டுள்ளது.
ஆளற்றத் தெருக்கள் இருத்தலின்மையை வளரச் செய்வதால், ஆட்கள் பெருகிச் செல்லும் தெருக்கள் மனிதரை ஆசுவாசப்படுத்துகின்றன. பொருட்கள் வாங்கச் செல்வது ஒருவர் என்றால், சும்மாவேனும் வலம் செல்லவிரும்புவோர் பலர் இருக்கவே செய்வர். சுவருக்குள் இறுகிய மனங்கள் குழப்பமான அல்லது திட்டமிட்ட வகையிலான பண்பாட்டு அரசியல் திணிக்கப்பட்ட மனங்கள் குடும்ப வன்முறையில் இறங்குகின்றன. ஒரு தத்தளிக்கும் படகாகக் குடும்பங்கள் மாறிக்கொண்டுள்ளன. தடுமாறிக் கொண்டுள்ளன.
மரணமும் இப்போது ஒரு போதை என்பதை நம்பதான் வேண்டும். மரணம் குறித்த சொல், காட்சி, கற்பனை எது ஒன்றும் அருந்தத்தக்க போதையாக மாறிக் கொண்டுள்ளது. எனினும்,
.தமிழகம் குடிப்பதனால்தான் அரசாங்கம் வாழ்கிறது. அதிகாரம் வாழ்கிறது. அதிகாரவர்க்கம் வாழ்கிறது. சாராயத்தையும், போதையும், இலவசமாக கொரோனாத் தொற்றையும், மரணத்தையுமே அரசால் வழங்க முடிகிறது. அரசால்தான் வழங்க முடியும்.
கொரோனா அச்சம் மரணத்தின் அச்சம். இருத்தல் குறித்த அச்சம். அச்சம் தவிர வேறொன்னுமில்லை எனுமளவிற்கு அச்சம் சூழ் உலகாகியிருக்கிறது. அதிகாரவர்க்கத்தைப் பொறுத்தவரை அச்சம் பாதுகாப்பு, அச்சம் அரசியல், அச்சம் மூலதனக்குவிப்பு.
பெருந்தொற்று கூட்டுச் சமூகத்தை சிதறடித்திருக்கிறது. திருமணங்களை, இறப்புகளை எளிமைப்படுத்திக் கொண்டுள்ளது.
யானையும், ஒட்டகமும் இன்னும் டையனோசரஸ் இருந்தால் அவையும், உருவத்தில் எவையெல்லாம் பெரியவையோ அவையெல்லாம் தமது தகுதியின் உயரத்திற்கிணை என்ற வகையில் ஆடம்பரமானத் திருமண அரங்கின் வாசலில் கட்டப்பட்ட விலங்குகளைக் கொரோனா தொற்று கட்டவிழ்த்து விடுதலை செய்து கொண்டுள்ளது.
தகுதியின் போட்டியில் உணவிலைகள் உண்ணாமல் கொட்டப்பட்டவை காணாமல் போயிருக்கின்றன. சாலையில் அணிவகுக்கும் ஃபளக்ஸ் சட்டகங்கள் பொருளும், நிறமுமிழந்துவிட்டன. சட்டமியற்றாமலே கொரோனா எளிய திருமணத்தை அங்கீகரித்துக் கொண்டுள்ளது.
கொரோனா, கொரோனா அல்லா மரணங்கள் வீழ்ச்சியுறும் சமூகத்தின் சகல படிமங்களையும் கொண்டுள்ளது. முகக்கவசங்கள் மரணத்தை தற்காலிகமாகவேனும் தள்ளிப்போடும் என்ற நம்பிக்கையும் அச்சமும் சொந்த முகத்தையே ஒரு கவசமாக மாற்றிக் கொண்டுள்ளது. எது கவசம் எது முகம் என்று இப்போது யாதொருவருக்கும் புரியவில்லை. புரிய வேண்டுமென்பதுமில்லை.
முகமும், கைகளும், குறியும் இப்போது உறையில்லாமல் உரையாட முடியாது. உறவாட முடியாது. தழுவிக்கொள்ள இயலாது. நேசமிக்க எல்லா உரையாடல்களுக்கும் நடுவே உறைகள் வந்துவிட்டன. அன்பு, காதல், காமம் எல்லாம் உறையிலிடப்பட்டுவிட்டன. உறைகள் ஒரு உறுப்பாக மனிதரில் இனி மாறக்கூடும்.
குடும்பங்கள், இறந்த உறவுகளை தேவையற்றப் பெருந்தொற்றுப் பொதிகளாக கைவிட்டுச் செல்கின்றன. மருத்துவ எச்சரிக்கைகள், தொற்று மரணங்களை குழிக்குள் எல்லா அச்சங்களோடும் மானிடப் பெரும் நம்பிக்கைகளையும் சேர்த்தே புதைக்கின்றன.
வெட்டவெளியில் கழுகுக்கு இரையாகும் மனித உடலங்களுக்கு நிகராக யாருமற்று படுகுழியில் எந்திரங்களால் தள்ளப்படும் உடல்கள் யாதொருவருடையதாகவும் இருக்கிறது. மரணத்தைவிட, மரண வாதைகளைவிட மரண அடக்கம் இப்போது என்றுமில்லாத அச்சத்தைத் தருகிறது. கலாசார, கற்கால நாகரீகத்தின் மனித உடலடக்க நாகரீகத் தொடர்ச்சி தற்போது கற்காலத்துக்கு முந்தய இடத்திற்கு வந்துவிட்டது. மரணத்தைகூட ஏற்கும் கலாசார மனங்கள் அதன் அடக்க முறையை செரிக்கமுடியாமலிருக்கிறது.
எனினும் மனிதர்கள் தொற்றால் செத்துவிடுவதில்லை என்பதைத்தான் எழுதப்படும் எல்லா வரலாறுகளும் மீண்டும், மீண்டும் மனிதருக்குச் சொல்கின்றன. சொல்லவிருக்கின்றன. சொல்லும்.