காஸா என்னும் வசிப்பிடம் இப்போது இல்லை
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீனிய தீவிரவாத இயக்கமான ஹமாஸ் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தி 1300 க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்று, நூற்றுக்கும் அதிகமான இஸ்ரேலியர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்தபிறகு காஸா மீது இன்னமும் தாக்குதலைத் தொடரும் இஸ்ரேல் இதுவரை 135000 பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்திருக்கிறது. இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள். ஒரு போரில் யாரெல்லாம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படவேண்டுமோ அவர்கள்தான் மிகுதியாக காஸாவில் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 2000 பவுண்டு எடை கொண்ட குண்டுகள் காஸாவின் கட்டிடங்களை கிட்டத்தட்ட தரைமட்டமாக்கிவிட்டன. இது போன்ற குண்டுகள் இந்நூற்றாண்டில் குறைவான அளவே பயன்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. காஸாவில் அப்பாவி மக்களின் பாதுகாப்பிடங்களாகத் திகழ்ந்த அகதி முகாம்களும், மருத்துவமனைகளும் இஸ்ரேலின் குண்டு வீச்சுகளுக்குத் தப்பவில்லை. சிகிச்சையில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான நோயாளிகள் கொல்லப்பட்டனர்.
இப்போது பாலஸ்தீனத்தில் காஸா என்ற ஒரு வசிப்பிடம் இல்லை. அது ஒரு சுடுகாடாக மாற்றப்பட்டுவிட்டது. எப்படி நாஜிக்களின் ஜெர்மனி யூத மக்களின் சுடுகாடாக மாற்றப்பட்டதோ அதேபோல இப்போது காஸா மாற்றப்பட்டுவிட்டது. ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு ஆற்றலைவிட பல மடங்கு அழிவைத்தரும் சக்திவாய்ந்த குண்டுகள் இத்தனை மாதங்களாக காஸாவில் போடப்பட்டிருக்கின்றன. உலகின் முன்னணிப் பத்திரிகையாளர்களின் இருப்பிடங்கள் தேடித் தேடி அழிக்கப்பட்டிருக்கின்றன. காஸாவில் பசிப்பிணி போக்கிய World Central Kitchen என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வாகனங்கள் மீதும் குண்டு வீசித் தாக்கி அழித்திருக்கிறது இஸ்ரேல்.
அவரவர் நியாயங்கள் மட்டும் தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. பின் விளைவுகளைத் தெரிந்தே தீவிரவாதத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகளை முழுவதும் ஒழிப்பதே தனது ஒரே குறிக்கோள் எனச் சொல்லும் இஸ்ரேல் இப்போது ஹமாஸ் பதுங்கியிருக்கும் காஸாவின் மற்றுமொரு முக்கியமானக் குடியிருப்பான ரஃபாவைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட பத்துலட்சம் மக்கள் வசிக்கும் ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமானால் அது பாலஸ்தீனியர்களுக்குப் பேரழிவாக முடியும்.
காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களும், பாலஸ்தீனியர்களின் பெரும் உயிரிழப்பும் இஸ்ரேலின் போர்க்குற்றமாகக் கருதப்படும். ‘பாலஸ்தீனியர்களின் மீதான இன அழிப்பாக இதைக் கொள்ள முடியாவிட்டாலும் இது மிகப்பெரும் போர்க்குற்றம் மட்டுமல்லாது மனிதகுலத்துக்கெதிரான குற்றமுமாகும்’ என பேரழிவு மற்றும் இனஅழிப்பு ஆய்வுத்துறையைச் சேர்ந்த பிரௌன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒமர் பார்டோவ் கூறுகிறார். ஆனால் இதே நிலை நீடித்தால் இப்போர்க்குற்றமானது பாலஸ்தீனியர்களின் இன அழிப்பில் போய் முடியும். இதைத் தடுத்து நிறுத்த நமக்கு இன்னமும் கால அவகாசம் உள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
ஹமாஸின் தாக்குதலுக்கு பிறகு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இப்படிக் கூறுகிறார்: ‘ காஸா மக்கள் மிகப்பெரும் விலையைத் தரவேண்டியிருக்கும். இஸ்ரேலிய ராணுவப்படைகள் காஸாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்பகுதிகளை தரைமட்டமாக்குவார்கள்’.
பழைய ஏற்பாட்டுக் கதைகளை நினைவுகூர்ந்து அக்டோபர் 28 ஆம் தேதியன்று நேதன்யாகு மீண்டும் இப்படி வெறுப்பை உமிழ்கிறார்: ‘அமலேக்கியர்கள் இஸ்ரவேலர்களுக்கு என்ன செய்தார்கள், மாறாக அமலேக்கியர்கள் எப்படி தோற்கடிக்கப்பட்டார்கள் என எந்த இஸ்ரேலியனும் மறக்கமாட்டான். அமலேக்கியர் ஒவ்வொருவரும் ஆண், பெண். குழந்தைகள், மிருகங்கள் என அனைத்தும் அழிக்கப்படவேண்டும்‘ என பழைய பைபிள் கூறியதை நினைவுப்படுத்திப் பேசிய நேதன்யாகுவின் செயல்கள் எப்படி இருக்கும் என எவரும் சொல்லத் தேவையில்லை.
அக்டோபர் 9 ஆம் தேதி இஸ்ரேலின் பாதுபாப்புத் துறை அமைச்சர் யோவ் காலன்ட் இப்படிக் கூறுகிறார்: ‘மனித மிருகங்களோடு இப்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்குத் தகுந்த முறையில் நாம் செயல்படுவோம்’. மனித நாகரிகமற்ற இக்கருத்துகள் நமக்கு உணர்த்துவது இஸ்ரேல், பாலஸ்தீன இன அழிப்பை நோக்கியே செல்கிறது என்பதைத்தான்.
இஸ்ரேலின் உயர் ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் காஸன் ஏலியன் காஸாவில் அம்மக்களை நோக்கி அராபியில் இப்படிக் கூறுகிறார்: ‘மனித மிருகங்கள் இப்படித்தான் நடத்தப்படவேண்டும். மின்சாரம் கிடையாது. குடிநீர் கிடையாது. எங்கும் அழிவுதான். நரகத்தை மட்டுமே நீங்கள் யாசித்தீர்கள். இப்போது நரகம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது’.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஜியோரா ஐலாண்ட் ஒரு இஸ்ரேலிய நாளிதழில் இப்படி எழுதுகிறார்: ‘காஸாவை மனிதர் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றுவதே இப்போது இஸ்ரேலின் இலக்கு. இஸ்ரேலுக்கு வேறு வழி ஏதும் இல்லை. மிகப்பெரும் மனிதப் பேரழிவை அங்கு ஏற்படுத்துவதன் மூலமே இக்குறிக்கோளை இஸ்ரேல் அடைய முடியும்’. அவர் வேறொரு கட்டுரையில் இப்படிக் கூறுகிறார்: ‘காஸாவில் இனி மனிதர்களின் நடமாட்டமே இருக்கமுடியாது’.
இப்படியாகத்தான் இஸ்ரேலிய உயர் அதிகார வர்க்கத்தினர் பலரும் பாலஸ்தீன மக்களின் மீது தொடர்ச்சியாக வெறுப்பை உமிழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் பாலஸ்தீன மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் இன அழிப்பு வடிவத்தைப் பெற்றுவிடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது.
காஸா மீதான இஸ்ரேலியத் தாக்குதலை நிறுத்துவதற்கு ஐ.நா., உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியையே அடைந்திருக்கின்றன. மிகப்பெரும் பேரழிவையும், பெரும் பஞ்சத்தையும் பாலஸ்தீன மக்கள் தினம் தினம் சந்தித்து வருகிறார்கள். சிலுவைப்போர்கள் பல நூறு ஆண்டுகள் நடந்தது பற்றி அறிவோம். குதிரைகளையும், வாள்களையும் கொண்டு போரிட்டவர்கள் அவர்கள். நேர்மையானவர்களும்கூட. ஏனென்றால் பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும் அவர்கள் ஒன்றுமே செய்ததில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருந்திருக்கலாம்.
ஒன்று தெரியமா? சிலுவைப்போரின் ஒரு காலக்கட்டத்தில் போரில் வென்ற ஒரு இஸ்லாமிய மன்னன், சிலுவைப்படை வீரர்களை பத்திரமாக தங்கள் நாடு போக அனுமதித்தான். ஆனால் அவர்கள் மீண்டும் பெரும் படையுடன் வந்து தங்களுக்கு மன்னிப்பு வழங்கிய மன்னனை துவம்சம் செய்த வரலாற்றுக் குறிப்புகளும் உண்டு. ஆனால் நவீனப் போர் வரலாற்றில் எதிரிகளுக்கிடையே மன்னிப்புச் சம்பவங்கள் நடந்தது கிடையாது. ஆனால் நிறைய பேரங்கள் நடப்பதுண்டு. போரை நிறுத்தச் செய்வதற்கு இஸ்ரேலிடம் தொடர்ச்சியாக அமெரிக்கா, கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகள் பேசி வருகின்றன. ஆனாலும் இஸ்ரேல் காஸாவின் ரஃபா நகரின் மீது தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டது. பத்துலட்சம் பாலஸ்தீனியர்களின் உயிர் உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்க இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
நன்றி : தமிழ் இந்து நாளிதழ், 14.05.2024