நவீன அமெரிக்காவின் இனவெறி முதலாளியத்தை மார்க்ஸ் எப்படி எதிர்கொண்டிருப்பார்?.
இன்று நாம் வியந்து பார்க்கும் அமெரிக்காவின் அடியில் ஓடிக் கொண்டிருக்கும் வற்றாத நாற்றமெடுக்கும் இனவாதமும், நிறவெறியும் குறித்து உங்களுக்குத் தெரியுமா? வரலாற்றின் மிக சமீபமான 1968 வரை கூட அங்கே மனிதருக்கு மனிதர் வேறுபாடும், நிறவெறியும், ஒதுக்கி வைத்தலும் இருந்தது குறித்து உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்கா என்னும் நாட்டினைக் கட்டியெழுப்பியதில் பெரும்பங்கு வகித்தவர்கள் கருப்பினத்தவர்கள். (கருப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டங்களை முழுமையாக விவரிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல.) சமீபத்தில் இல்லினாய்ஸ் போலீசாரால் ஜார்ஜ் ஃப்ளோய்டு என்னும் கருப்பினத்தவர் இனவெறிப் படுகொலை செய்யப்பட்டபிறகு, அப்படுகொலையைக் கண்டித்தும், கருப்பின மக்களின் மீதான நிறவெறி அதிகாரவர்க்கத்தின் பாசிசத்தை எதிர்த்துப் போராடும் வகையிலும் பெருந்திரளான அமெரிக்க வெகுமக்கள் இனம், நிறம் பாராது 150 நகரங்களின் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.
அமெரிக்க சமுதாயத்தில் நிலவும் இனவிரோதம் என்பது அமெரிக்க முதலாளித்துவத்தால் காலாவதியாகிப்போன உற்பத்தி முறைகளைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ஒன்று. அதன் நாகரிகத்தின் மிக கொடூரமான மற்றும் வெட்கக்கேடான அம்சங்களில் ஒன்றாக அது இன்று உருமாறியிருக்கிறது.
அமெரிக்க சமூக வாழ்வில் நிறவெறியும், இனவாதமும் ஊறிக்கலந்தவை. அடிமைமுறை ஒழிக்கப்பட்ட 1865 ஆம் ஆண்டு முதலே கருப்பர்களின் வாழ்வை ஜிம் குரோ(கருப்பினத்தவர்களின் நடைமுறை வாழ்வை நிர்ணயித்த இன ஒதுக்குமுறைச் சட்டங்கள்) பற்றிக்கொண்டது. அது முதல் 1968 ஆம் ஆண்டில் கருப்பினத்தவர்கள் முழுமையாக ஒதுக்குமுறைகளிலிருந்தும், ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவிக்கப்படும் வரை கருப்பின மக்கள் நடத்திய போராட்டங்கள் ஏராளம். கருப்பின மக்களின் போராட்டாங்களுக்கு வலுச்சேர்த்த கருத்தியல்களை உருவாக்கிய அறிஞர்கள் ஏராளம். அடித்துக் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்கள் பல்லாயிரம். தங்கள் சுயமரியாதையை மீட்டெடுக்க கருப்பினத்தவர்கள் திருப்பித் தாக்கிய பெரும் சம்பவங்களும் வரலாற்றில் உண்டு. அதில் முக்கியமானது 1943 இல் நடைபெற்ற நியூயார்க் ஹார்லெம் கலவரங்கள்.
ஆஃப்ரோ அமெரிக்க எழுத்தாளரும், செயற்பாட்டாளருமான ஷெர்லி கிரஹாம் டு போயிஸ் 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய “நீக்ரோக்களும், அமெரிக்காவில் முதலாளித்துவ நெருக்கடியும்” என்னும் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருப்பார்:
“அமெரிக்காவில் தற்போது நிலவும் அதன் சமூகக் கட்டமைப்பு, அதன் நிறவெறிக்கோடுகளை அழிப்பதற்கு எந்தவிதத்திலும் உதவி செய்யப்போவதில்லை. நிற மற்றும் இனப் பாகுபாட்டோடு அதன் நீதிமன்றங்களில் வழங்கப்படும் பாரபட்சமான தீர்ப்புகளை அது தடுத்து நிறுத்தப்போவதில்லை. நாட்டின் தெற்குப் பகுதியில் கருப்புநிறத் தொழிலாளர்களை வெள்ளை இன முதலீடுகள் சுரண்டுவதை அது தடுத்துநிறுத்தப்போவதில்லை. நாட்டின் வடக்குப் பகுதியோ கருப்பினத் தொழிலாளர்களைத் தொடர்ச்சியாக சோசலிசத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது”.
ஜார்ஜ் ஃப்ளோய்டு நிறவெறிப் படுகொலை செய்யப்பட்ட பிறகு அங்கு முகிழ்த்திருக்கும் வெகுமக்கள் இயக்கம் அமெரிக்க நிறவெறி அதிகார வர்க்கத்தையும், அதன் அடித்தளத்தையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை, அமெரிக்க சமுதாயம் வெகுதூரம் கடந்து வந்திருக்கிறது என்பதை அங்கு நடந்த போராட்டத்தின் போக்குகள் மெய்ப்பித்திருக்கிறது. வெள்ளை இன அதிகார வர்க்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் இப்போது கருப்பின மக்களோடு வெள்ளை இன வெகுமக்களும் மிகத் திரளாகப் பங்காற்றினர். ஜிம் குரோ சட்டங்கள் அமுலில் இருந்த 1968 க்கு முந்தைய நாட்களில் வெள்ளை இன வெகுமக்களே கருப்பின மக்களுக்கு எதிரானக் கலவரங்களில் மிகுதியாக ஈடுபட்டதை நாம் இப்போது கவனத்தில் கொள்ளவேண்டும்.
முதலாளித்துவம், ஏகாதிபத்தியத்திலிருந்து(Racial Capitalism) அமெரிக்கா இப்போது இனவெறி முதலாளித்துவத்தின் ஏகபோக அதிபதியாக மாறியிருக்கிறது. ஜார்ஜ் ஃப்ளோய்டு இனரீதியாகப் படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு நிற, இன வேறுபாடுகளைக் கடந்து அமெரிக்க மக்கள் நடத்திய எழுச்சிமிகுப் போராட்டங்கள் உலகமே கண்டிராதது. கொரோனாத் தாக்கத்தினால் அமெரிக்க மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் சமூக அமைதியின்மையும், வேலைவாய்ப்பு பறிபோனதன் காரணமாக மேலும், மேலும் இளம் அமெரிக்கர்கள் சோசலிசத்தை நோக்கிக் கவரப்படுவதும் அமெரிக்க சமுதாயம் குறித்து நமக்குப் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அமெரிக்க அரசியல் தலைவர்களின் மத்தியில் நமக்கு நம்பிக்கை அருகிப்போய்விட்டாலும், எளிய அமெரிக்க மக்கள் தங்கள் நாட்டின் அடிப்படையைக் காப்பதற்கானப் போராட்டத்தில் வேண்டும்போதெல்லாம் களம் இறங்குவார்கள் என்னும் நம்பிக்கை இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் நடக்கும் அரசியல் சட்டங்களைக் காக்கும் போராட்டத்திற்கு பெரும் துணையாக அமையும்.
இன(வெறி) முதலாளித்துவம்(Racial Capitalism) என்னும் கருத்தாக்கம் இன்று அமெரிக்காவின் மானுடவியல் துறையிலும், சமூக அறிவியல் துறையிலும் புது வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது. இக்கருத்தாக்கத்தைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஜார்ஜ் ஃப்ளோய்டு படுகொலைக்குப் பிறகான அமெரிக்க வெகுமக்களின் போராட்ட உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடியும்.
பலதரப்பட்டவைகளிலும் இது குறித்த அதிகரித்த ஆர்வம், எண்ணற்ற இனம் மற்றும் முதலாளித்துவ விவாதங்களில் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த கட்டமைப்பின் செல்வாக்கிற்கு 1983 ஆம் ஆண்டு செட்ரிக் ராபின்சனால் வெளியிடப்பட்ட Black Marxism: The Making of the Black Radical Tradition என்ற புத்தகமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும் இன முதலாளித்துவம் குறித்த மிகப் பெரும்பான்மையான விவாதங்களும், கடந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாகவே நடந்து வந்திருக்கின்றன.
ராபின்சனைப் பொறுத்தவரை, சமூக சித்தாந்தம் மற்றும் அரசியல் நடைமுறையைப் போலவே, “முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சி, அமைப்பு மற்றும் விரிவாக்கம் எவ்வாறு அடிப்படையில் இன திசைகளைப் பின்பற்றியது” என்பதை இன முதலாளித்துவம் விவரிக்கிறது. மேலும் இனவாதம் என்பது ஒரு தவிர்க்கமுடியாத காரணியாக பொருள் சக்தி என்னும் வடிவத்தில், முதலாளித்துவத்திலிருந்து வெளிப்படும் சமூக கட்டமைப்புகளில் ஊடுருவும் என்கிறார்.
ராபின்சனைப் பொறுத்தவரை, முதலாளித்துவம் என்பது நிலப் பிரபுத்துவத்தின் தீவிரப் பிளவுகளையோ அல்லது நிலப்பிரபுத்துவத்தின் மறுப்பையோ குறிக்கவில்லை. மாறாக அதன் இனவாதத்தை “நவீன உலகின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளின் பெரிய தளமாக விரிவுபடுத்துகிறது அல்லது விரிவுபடுத்த அது உதவுகிறது. எனவே, நவீன ஐரோப்பிய நாகரிகத்தை வடிவமைத்தது முதலாளித்துவம் அல்ல, மாறாக ஐரோப்பிய நாகரிகம்தான் முதலாளித்துவத்திற்கு அதன் உலக-வரலாற்று மற்றும் சமூக அரசியல் தன்மையை வழங்கியுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், இன முதலாளித்துவம் என்பது “ஐரோப்பிய நிலப்பிரபுத்துவங்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் கருத்தியல் சிக்கல்களின் ” அதாவது, அதன் “இன, பழங்குடி, மொழியியல் மற்றும் பிராந்திய முரண்பாடுகள்” முதலாளித்துவ வடிவத்தில் தொடர்வதாக இருக்கிறது. ஆகவே, நிலப்பிரபுத்துவத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான முதன்மை வேறுபாடு என்பது ஐரோப்பிய மக்களிடையேயும், அதற்கும் அப்பால் உள்ள உலகிலும் வளர்ச்சியின் சீரற்ற தன்மையிலும், ஐரோப்பியர் அல்லாதவரை ஆதிக்கம் செய்தல், சுரண்டுதல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் முதன்மையான நியாயப்பாடுகளின் ஊடே, 19 ஆம் நூற்றாண்டில் தங்கள் இனத்தை பலப்படுத்துவதிலும்தான் இருந்தது.
தொழிற்புரட்சிக் காலத்திற்குப் பிந்தைய ஐரோப்பிய சமூகம், உலகின் பிற கண்டங்களின் மீது, அதாவது முக்கியமாக வெள்ளை நிறத்தவர்களல்லாதவர் மீது தொடுத்த ஆதிக்கப்போர்கள், சுரண்டல்கள், பஞ்சங்கள், கொள்ளையிடல்கள் இவற்றின் ஊடாக மேற்குலகில் உருவாக்கப்பட்ட முதலாளிய சுரண்டல் கட்டமைப்புகள், அதிகாரங்கள் இவைகள்தான் மேற்குலகின் நாகரிகத்தை வடிவமைத்தன. அந்த நிறவெறித் தாக்குதலின் தொடர்ச்சியான சுரண்டல் வடிவங்கள்தான் இன்னமும் மூன்றாம் உலகநாடுகளின் மீது தொடரும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆதிக்க வடிவங்கள். இதன் தொடர்ச்சிதான் தனது சொந்த நாட்டு மக்களான கருப்பினத்தவரின் மீது நடத்தப்படும் நிறவெறித்தாக்குதல்களும், அநீதிகளும்.
முதலாளித்துவத்தின் இன அடித்தளங்களில் கவனம் செலுத்தும் கருப்பின கம்யூனிசத் தலைவரான கிளாடியா ஜோன்சின் ஆக்கங்கள் மிக முக்கியமானவையாக இக்கோட்பாட்டுத்தளத்தில் கவனிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் நீக்ரோ இருப்பு என்பது பெண்களின் பிரச்னைகளுக்கு சமமானதல்ல, மாறாக அதைவிட முந்தையது என நிறுவும் கிளாடியா, இன முதலாளித்துவம், தொழிலாளர் சந்தையில் நடக்கும் உச்சபட்ச சுரண்டல், கருப்பினப் பெண்களாக அவர்களின் விளிம்புநிலை, வெள்ளைப் பேரினவாதத்திற்குக் கீழ்படிதல், தொழிற்சங்கங்களிலிருந்து அவர்களை விலக்கி வைத்தல், போர் மற்றும் ராணுவமயப்படுத்தலின் விளைவாக அவர்கள் மீதும் அவர்களின் குடும்பங்கள் மீதும் ஏற்படக்கூடிய சுமைகள் என கருப்பின பெண்கள் ஒடுக்கப்பட்ட பல வழிகளை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
அடித்துக் கொல்லுதல் என்னும் வடிவம், இன மோதல்களும், நிறவெறி மோதல்களும் நடக்கும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இன மேலாதிக்கம் செலுத்தும் அதிகாரவர்க்கத்தினால் தொடர்ச்சியாக கையாளப்பட்டு வரும் ஒரு நடைமுறைத் தத்துவமாக இருந்து வருகிறது. ஏற்கனவே தங்களின் மீது திணிக்கப்படும் ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிச்சலற்று அமைதியாக இருக்கும் மக்களின் மீது மேலும் அச்சத்தைத் திணிப்பதற்கும், அவர்களை எதிர்காலத்தில் எந்த வடிவத்திலும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துவிடக்கூடாது என்பதற்காகவும் இந்தக் கொடுமையான முறை இப்போதும் இருக்கவே செய்கிறது. ஈழப்போராட்டத்தின் தொடக்கக் கட்டங்களில் கொழும்பு நகரில் நடைபெற்ற தமிழர் மீதான தாக்குதல் சம்பவங்கள் இதையொத்தனதான்.
மாட்டுக்கறி விவகாரத்தில் சங்கப்பரிவாரங்கள் இஸ்லாமியர்கள் மீது நடத்தும் கொலைவெறித் தாக்குதலும், அடித்துக் கொல்லுதலும் இந்தத் தத்துவத்தின் தொடர் விளைவுகள்தான். அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்போதும் தன் கருப்பின மக்களை அயலவர்களாகவேப் பார்த்து வந்திருக்கிறது. ஆனால் அமெரிக்க வெள்ளை இன வெகுமக்கள் இதிலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டார்கள் என்று சமீபத்திய மக்கள் இயக்கங்களின் போக்குகள் காட்டுகின்றன.
தெற்கின் அடிமை முதலாளிகளை எதிர்த்தும், போரின்போது தெற்கை எதிர்த்து மிகத் தீவிரமாக சண்டையிட்ட வடக்கின் முதலாளி வர்க்கத்துக்கு நீக்ரோக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஏனென்றால் அடிமை முறையை எப்பாடுபட்டாவது ஒழிக்கப்படவேண்டும் என்று கருப்பின மக்கள் விரும்பினர். படைகளைக் கொண்டும் கூட பல இடங்களில் அடிமை முதலாளிகளின் கொட்டத்தை வடக்கு அடக்கியது. அடிமை முறை முடிவுக்கு வந்த பின்னரான சூழலில், ஜிம் குரோ சட்டங்கள் வழி கருப்பின மக்களின் ஒதுக்குதல்கள் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றதும் இப்போது வடக்கு முதலாளித்துவமும், தெற்கின் முதலாளித்துவமும் கூட்டு சேர்ந்துகொண்டன. இரண்டாம் உலகப்போர்க் காலத்தின்போது அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் மிகுதியான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. வடக்கின் தொழிலாளர்கள் முழுவதும் (வெள்ளையின, கருப்பின இருவரும்) தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்து போராடியதன் விளைவாக தொழிலாளர்களுக்கான செலவு அதிகரித்ததன் காரணமாக புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்களில் மிகுதியாக தெற்கை நோக்கிச் சென்றன. அங்கே வெள்ளை இனத் தொழிலாளர்களை விட கருப்பினத் தொழிலாளர்களுக்குக் குறைவான சம்பளமும், வசதிகளும் செய்துதரப்பட்டன. இப்போது வடக்கின் முதலாளித்துவமும், தெற்கின் முதலாளித்துவமும் இணைந்து கருப்பின மக்களை எல்லாவிதத்திலும் ஏமாற்றி மோசம் செய்தன.
1968 வரை அமலில் இருந்த ஜிம் குரோ சட்டங்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட 1865 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட நூறு வருடங்கள் அமலில் இருந்த இச்சட்டம், புதிதாகக் கிடைத்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கவிடாமல் கருப்பின மக்களைத் தடுத்தது. மீண்டும் புதிய வடிவில் கருப்பின அடிமைத்தனம் பிரகடனப்படுத்தப்பட்டது. கருப்பினத்தவரின் மீதான வெள்ளை இன மக்களின் நிறவெறித்தாக்குதல்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. அல்லது அமெரிக்க நீதிமன்றங்கள் அதை ஏற்றுக்கொண்டன. அமெரிக்க வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் கருப்பின மக்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர். விபச்சார விடுதியிலும்கூட கருப்பினப் பெண்கள் தனித்து அடைக்கப்பட்டனர். இப்போது ஜார்ஜ் ஃப்ளோய்டு அடித்துக் கொல்லப்பட்டது போல அப்போது அது சர்வசாதாரணமாக நடந்துவந்தது. நீதிமன்றங்களில் கருப்பினத்தவர் உறுதிமொழி எடுக்கும் பைபிள் கூட தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டது என்பதிலிருந்து நிறவெறித் தாக்கத்தை நீங்கள் உணரக்கூடும்.
இப்போதைய ஒரே ஆறுதல் என்னவென்றால் பழைய ஜிம் குரோ சட்டங்களை வெள்ளை இன வெகுமக்களே கையிலெடுத்திருந்தார்கள். ஆனால் இப்போது புதிய ஜிம் குரோ சட்டங்களை மேல்மட்ட அதிகார வர்க்கத்தின் துணையுடன் வெள்ளையின போலீஸ் அதிகாரிகள் கையிலெடுத்திருக்கின்றனர். வெள்ளை இன வெகுமக்கள் நாட்டின் எப்பகுதியிலும் கருப்பினத்தவரின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்பதும் கூட அமெரிக்க வெகுமக்களின் நாகரிக முதிர்ச்சியை பறைசாற்றியிருக்கிறது.
ஜூனியர் மார்டின் லூதர் கிங் அவர்களின் புகழ்மிக்க கீழ்க்கண்ட சொற்றொடர்தான் உடனே நினைவுக்கு வருகிறது.
“அமெரிக்காவில் வெள்ளையர்களை நம்ப முடியாது என்று நினைப்பவர்களின் அதிருப்தியையும், வேதனையையும், ஏமாற்றத்தையும், கசப்பையும் நான் உணர்ந்து புரிந்துகொள்கிறேன். இனவெறி நெறிமுறைகளால் வழிநடத்தப்படுபவர்கள் பலர் இன்னமும் உள்ளனர் என்று நான் உறுதியாகக் கூறுவேன். நல்லெண்ணம் கொண்ட பல வெள்ளை இனத்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். எதிர்வரும் நாட்களில் நீதியையும், சிவில் உரிமைகளையும், சமாதானத்தையும் காப்பதற்காக ஜனநாயகக் கோட்பாடுகளையும் நீதியையும் தங்களின் கொள்கைக்கு மேலாக மதிக்கும் இளைய தலைமுறை மாணவர்களை நான் ஒவ்வொரு நாளும் காண்கிறேன்.. அதனால் நான் விரக்தியடைய மறுக்கிறேன்.”
நவீன அமெரிக்காவின் இனவெறி முதலாளியத்தை மார்க்ஸ் எப்படி எதிர்கொண்டிருப்பார்?.
அமெரிக்க சமூகத்தின் நீண்டகாலத் தீமைகளில் ஒன்றான அடிமை முறையையும், நிற ஒதுக்கலையும், இனவாதத்தையும் எதிர்த்து குரல் கொடுத்த, போராடிய அனைத்து கருப்பினத் தலைவர்களும் மார்க்சியத்தை நோக்கி கவர்ந்திழுக்கப்படவே செய்தனர்.
கருப்பினத்தலைவரும், கருப்பின மக்களுக்கு சம உரிமை வேண்டிய நயாகரா இயக்கத்தின் தலைவருமான டு போயிஸ் கூறியபடி, முதலாளித்துவமும், இனவாதமும் காலனியாதிக்கத்திலும், ஏகாதிபத்தியத்திலும் தங்களின் வேர்களைக் கொண்டிருக்கின்றன. மார்க்சியத்தை ஏற்கின்ற அல்லது மறுக்கின்ற பெரும்பாலான கருப்பின அறிஞர்களும் இக்கருத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். மார்க்ஸ் வெறுமனே மூலதனத்தின் கோட்பாடு குறித்து மட்டும் அக்கறை கொண்டிருக்கவில்லை, மாறாக அமெரிக்காவின் தெற்குப்பகுதி அடிமை உரிமையாளர்களின் முதலாளித்துவத்தை எதிர்த்து அவர் தீவிரமாக எழுதினார். தீவிர அடிமை ஒழிப்புவாதிகளை அவர் ஆதரித்தார். அடிமைத்தனம் குறித்து விரிவாக எழுதினார். தெற்கு அமெரிக்காவில் நிலவும் அடிமைத்தனத்திற்கு ஆதரவாக நடந்துகொண்ட பிரிட்டிஷ் அரசை எதிர்க்குமாறு இங்கிலாந்து நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தை அவர் வேண்டிக்கொண்டார் என டு போயிஸ் மேலும் கோடிட்டுக் காட்டுகிறார்.
முதலாளித்துவத்தை எதிர்க்கும் ஒரு பொருளாதார வேலையைச் செய்யாமல் இனவாதத்தில் வேர்கொண்டிருக்கும் அடிமைமுறைமை என்னும் அமெரிக்க சமூகப் பழக்கத்தை எதிர்க்கும் வேலையை மார்க்ஸ் ஏன் முன்னெடுத்தார்? ஏனென்றால் மார்க்சியம் என்பது அனைத்து தீமைகளையும் எதிர்த்துப் போரிடுவதுதான் என்பதை மார்க்ஸ் அறிவார். பாடநூல் மார்க்சியர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் இது.
மார்க்சுக்குப் பிறகும்கூட, கருப்பின மக்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட்கள் உடனிருந்தனர் என்பதை வரலாறு காட்டுகிறது. 1917 போல்ஷ்விக் புரட்சி கருப்பின மக்களிடையேயும், அதன் தலைவர்களிடையேயும் ஒரு புதிய நம்பிக்கையை தோற்றுவித்தது. 1919 இல் தோற்றுவிக்கப்பட்ட அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியில் பெருவாரியான கருப்பினத்தவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர். நாட்டின் வடக்கில் கருப்பினத் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் ஒருங்கிணைக்கப்பட கம்யூனிஸ்ட் கட்சியும், அதைச் சார்ந்த தொழிலாளர் இயக்கமுமே முக்கியக் காரணிகளாகத் திகழ்ந்தது. அமெரிக்க முதலாளி வர்க்கத்தினரை எதிர்ப்பது என்னும் பொருளாதார வேலைத்திட்டத்தையும், கருப்பின மக்களை சமூகத்தின் சகலத் துறைகளிலும் ஒதுக்கி வைப்பதற்கு எதிரான சமூகப் போராட்டத்திலும் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு சிரமங்களிடையே தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டது. 1934 வரை கூட இந்த இரட்டை வேலைத் திட்டங்களை அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாகவே நிறைவேற்றி வந்திருக்கிறது.
1934 க்குப் பிறகு சூழல் மாற்றமடையத் தொடங்குகிறது. சோவியத்தில் ஸ்டாலினின் அதிகாரம் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது போல்ஷ்விக் கட்சியின் பிடி இறுகிப்போயிற்று. இதுகாறும் கருப்பின மக்களின் விடுதலைக்காக, அவர்களின் மேன்மைக்காக இயக்கம் செய்துவந்த அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அப்படிப்பட்ட வேலைத்திட்டங்களைக் கைவிடும்படி மாஸ்கோவிலிருந்து கட்டளைகள் பறந்தன. ஒரு கருப்பின அமைப்பாக மக்கள் முன் தோன்றுவதன் மூலம், கட்சி வெள்ளைத் தொழிலாளர்களை அந்நியப்படுத்துகிறது என்று மாஸ்கோ பாடம் நடத்தியது. கருப்பின மக்களின் விடுதலை இயக்கத்தை நோக்கிய ஒரு தீர்க்கமான நோக்குநிலையை அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி இக்காலக் கட்டத்தில் முழுமையாகக் கைவிட்டது.
1934 க்குப் பிறகு அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பொருளாதார மந்தநிலையும், கருப்பின மக்களின் விடுதலையின்பால் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு ஏற்பட்ட கொள்கை மாறுபாடுகளும், சோவியத்தில் ஸ்டாலின் தன் நிலையைப் பலப்படுத்திக் கொள்ளுதலும் பெருவாரியான கருப்பின மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறுவதைத் துரிதப்படுத்தியது.
1934 வரையான இந்த அனுபவங்கள் அனைத்தும் நமக்கு ஒன்றைத் தெளிவாகச் சுட்டுகின்றன. மார்க்சியம் என்பது வெறும் “வெள்ளைச் சித்தாந்தம்” மட்டுமே அல்ல, மாறாக பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களின் (அமெரிக்காவில் கருப்பின மக்களின்) புரட்சிகர விடுதலைக்கான வழிகாட்டியாகவும் செயல்பட்டுள்ளது.
உலகெங்கிலும் சமூகப் பொருளாதாரச் சுரண்டல்களுக்கு, அடக்குமுறைகளுக்கு எதிராக எளிய மக்கள் ஏந்தும் வலுவான ஆயுதங்கள்தான் சோசலிசமும், கம்யூனிசமும், பொதுவுடைமையும். மார்க்சும் இதையேதான் விரும்புவார்.
(Monthly Review, ஜூலை – ஆகஸ்ட் இதழின் கட்டுரைகளும் அவைகளில் உள்ள இணைப்புகளுமே இக்கட்டுரைக்கு ஆதாரங்கள்)