உத்தரகாண்ட் சுரங்க விபத்து : வேகமான வளர்ச்சியும்….நியூட்டனின் முன்றாம் விதியும்.
Posted On November 30, 2023
0
178 Views
உத்தராகண்ட் சுரங்கப் பாதை விபத்திலிருந்து 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீண்டிருக்கிறார்கள். மீட்புக் குழுவிற்கு நம்முடைய பாராட்டுகள். இவ்விபத்து குறித்த சில புரிதல்கள் நமக்கு இருக்கவேண்டும். முதலில் இது இயற்கையினால் ஏற்பட்டது அல்ல. மனிதனால் உருவாக்கப்பட்டப் பேரிடர். அரசுகள், அதிகார வர்க்கங்கள், நீதிமன்றங்கள் ‘வளர்ச்சி’ எனும் போர்வையில் நடத்திய கொடும் தாக்குதல். நம்முடைய வளர்ச்சித் தேவைக்கு இயற்கையை எவ்வளவு தூரம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்னும் அக்கறை கொள்ளாத மனித இனம் இழைத்த மாபெரும் தவறு இது.
இந்தியாவில் மிக அதிகபட்சமாக உத்தராகாண்ட் மாநிலத்தில்தான் மலை என்னும் இயற்கை தெய்வம் அநியாயத்துக்கு கொள்ளை போயிருக்கிறது. மோடியின் தியான பீடங்கள் எல்லாம் உடனடியாக மக்களின் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படுகின்றன. ஒரு காலத்தில் சாமியார்கள் மட்டும் போய்க்கொண்டிருந்த கங்கோத்ரிக்கும், கேதர்நாத்துக்கும், பத்ரிநாத்துக்கும் இப்போது சொகுசுக் கார்களில் மக்கள் சுற்றுலாப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். பயண நேரத்தைக் குறைப்பதற்காக சாலையை விரிவாக்கம் செய்கிறார்கள். மலைகளைக் குடைந்து பயண தூரத்தையும் குறைக்கிறார்கள். எல்லாம் ஆண்ட்ராய்ட் வேகம். ஒரே நாளில் இவ்விடங்களுக்குச் சென்று பார்த்துவிட்டு, யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்யவேண்டும். எல்லாம் வேகம்.
கடந்த சில வருடங்களில் உத்தரகாண்ட் மாநிலத்தின் இயற்கை வளம் கடவுளின் பெயரால், சுற்றுலா பெயரால், வளர்ச்சி என்னும் பெயரால் மிக மோசமாக சுரண்டப்பட்டிருக்கிறது. இயற்கைக்கும் நியூட்டனின் மூன்றாம் விதி பொருந்தும்தானே!. மனிதனை விட பல மடங்கு கோபம் கொண்டு திருப்பித் தாக்குகிறது இயற்கை. கடந்த 2013 ஆம் வருடம் கேதர்நாத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் 500 பேர் உயிரிழந்தனர். ஒவ்வொரு வருடமும் உத்தரகாண்டில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை பொழிந்து பெரும் சேதம் தருகிறது. ஜோசிமத் என்னும் நகரமே புதையுண்டுவிட்டது.
இந்த மாநிலத்தில் மட்டும் கடந்த 20 வருடங்களில் கட்டிடங்களின் வளர்ச்சி 33 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்து 11000 கிமீ சாலை புதிதாக போடப்பட்டிருக்கிறது. புதிய சாலைகளும், அகலப்படுத்தப்படும் சாலைகளும், புதிய கட்டிடங்களும் , மலையைக்குடைந்து தோண்டப்படும் சுரங்கங்களும் நேரடியாக மண் வளத்தின் மீது தாக்குதல் தொடுக்கின்றன. மண் தனது கெட்டித்தன்மையை இழக்கிறது. இந்தியாவின் மலைகளில் இளமையான மலையான இமாலய மலைகள் விரைவில் தன்னுடைய உறுதித் தன்மையை இழந்து போகின்றன. நீர்மின் திட்டங்கள், சுரங்கப் பாதைகள், சாலை விரிவாக்கங்கள் மரங்களை விரைவில் வெட்டி வீழ்த்துகின்றன. மழைப்பொழிவில் பிழை நேர்கிறது. மேகவெடிப்பு இயல்பான ஒன்றாக மாறிப்போகிறது. கடந்த எட்டு வருடங்களில் இந்த வருடம்தான் உத்தரகாண்டில் மிக அதிகபட்சமாக 1100 நிலச்சரிவுகளும், அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
கூலித் தொழிலாளர்களும், மலை வளத்தை மட்டுமே நம்பி வாழும் பழங்குடி மக்களும் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர். உயர் நடுத்தர வர்க்கம் சுற்றுலா செல்கிறது. சுற்றுலா ஹோட்டல்கள் செழிக்கிறது. பெரும் திட்டங்களினால் கார்ப்பொரேட்டுகள் வளர்ச்சி பெறுகிறார்கள். அவர்கள் மூலம் தேர்தல் நிதி பெறும் முதலாளித்துவ அரசியல்வாதிகள் வளர்ச்சி என்னும் போர்வையில் நிம்மதியாகக் கொழுத்து வளர்கிறார்கள். நிலம் குறித்தும், மலையின் வளம் குறித்தும் அவர்களுக்குக் கிஞ்சித்தும் கவலை இருக்கப்போவதில்லை. தொழிலாளர்களை நாங்கள் காப்பாற்றினோம் என்று தேர்தலிலும் வலம் வருவார்கள். போகட்டும்.
இப்போது இடிந்து விழுந்திருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை சார்தாம் தேசிய நெடுஞ்சாலை உருவாக்கத்தின் கீழ் நடந்து வரும் வேலைகளின் ஒரு பகுதி. சார்தாம் நெடுஞ்சாலைத் திட்டம் என்பது உத்தரகாண்டின் பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என்னும் நான்கு இடங்களை இணைக்கும் மாபெரும் திட்டம். 2016 ஆம் ஆண்டில் மோடி அரசினால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் செலவு 12000 கோடி ரூபாய். 10 மீட்டர் அகலத்துக்கு சாலை விரிவுப்படுத்தப்பட்டு இரண்டு புறமும் இரு வழிச் சாலைகள் அமைக்கப்படும். மலைப் பகுதிகளில் சாலைகள் ஐந்தரை மீட்டர் அகலத்துக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்பது பொது விதி. சாலையை அகலப்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றம், சாலையை பத்து மீட்டர் அளவுக்கு அகலப்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்தது. இயற்கை வாழிடங்களில் செயல்படுத்தப்படும் எந்தப் பெரும் திட்டத்துக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீடு ( Environment Impact Assessment) செய்யப்படவேண்டும். இதிலிருந்து தப்பிக்க இத்திட்டம் முழுதும் சிறு சிறு திட்டங்களாக உடைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.
சட்டத்தை மீறியும், தந்திரங்கள் செய்தும், இயற்கையைச் சீர்குலைத்தும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் பலன்கள் உத்தரகாண்டிற்குக் கிடைக்குமோ கிடைக்காதோ..ஆனால் ஒவ்வொரு வருடமும் அங்கு சூழலியல் அழிவு உறுதியாகி இருக்கிறது. அப்படியானால் வளர்ச்சி வேண்டாமா? வளர்ச்சி வேண்டும். அதற்காக மரங்களை வெட்டி பத்து மீட்டர் அகல சாலைகள் வேண்டாமே!. விபத்து நடந்த சில்க்யாரா சுரங்கம் அமைந்திருக்கும் பாறை உறுதித் தன்மையற்றது என்ற அறிவியல் முடிவுக்குப் பிறகும் அதை நிறைவேற்ற முனைந்ததால் யாருக்கு என்ன பயன்? வளர்ச்சி என்றால் என்ன என்று தீர்க்கமாக வரையறை செய்துவிட்டு அதன் பிறகு இது போன்ற திட்டங்கள் குறித்து யோசித்தால் நாமும் நம் சந்ததிகளும் பிழைப்போம்.
Trending Now
மரணிக்க மறுத்த பேராசிரியர் சாய்பாபா
November 4, 2024
பேராசிரியர் G.N. சாய்பாபா கவிதைகள்
November 4, 2024