சேஷசமுத்திரமும் இடஒதுக்கீடும்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித்துகளின் மீதும் அவர்களது பண்பாட்டின் மீதும் திட்டமிட்டு தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள் ஆதிக்க சாதி இந்துக்கள்.தாக்குதலின் முன்னணியில் இருந்தவர்களில் சிறார்களும்,பெண்களும் அடக்கம் என்னும் செய்தியைப் படிக்கும்போது எதிர்காலத் தமிழகத்தின் மீதான சாதிக் கலாச்சாரத்தின் கோரப்பிடியை நன்கு உணரமுடிகிறது.சாதிவெறியை சில அரசியல் சக்திகள் தங்களது சுய அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்போது ஏற்படும் கொடூரங்கள் அளவிடமுடியாதவையாக மாறிப்போகின்றன.கடந்த சில பத்தாண்டுகளாக தென் தமிழகத்திலும்,வட தமிழகத்திலும் நடத்தப்படும் சாதிக்கலவரங்களைக் குறித்து ஏராளம் பேசலாம்.முதுகளத்தூர் கலவரம் தொடங்கி,கொடியங்குளம்,தர்மபுரி வழியாக இன்று சேஷசமுத்திரம் வரை அது கடந்து வந்திருக்கும் பாதை ரத்த சகதியானது.அப்பாதை தமிழகத்தின் சாதிப்பண்பாட்டையும்,மதக் கலாச்சாரத்தையும் மாற்றிப்போட்டிருக்கிறது.மீனாட்சிபுரம் ரஹ்மத்நகராக உருமாறி இருக்கிறது.அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனிதர்களைக் கூட வாடா,போடா என்றும்,அவரகளது பெயரைச் சொல்லியும் கூப்பிடும் ஆதிக்கசாதி சிறுவர்கள் ஒருபுறம் இருக்க,அந்த தலித்துகள் இஸ்லாமியர்களாக மாறிய பின்னர் வாங்க பாய்,வாங்க அத்தாய் என்று ஆதிகசாதிப் பெரியவர்கள்கூட மரியாதையாய் விளிக்கும் கலாச்சாரம் இங்கு இருக்கிறது. கீழத்தஞ்சையில் பண்ணை அடிமைகளாக தங்கள் வாழ்க்கையை ஓட்டிய தலித்துகள் சாணிப்பாலுக்கும்,சவுக்கடிக்கும் பதிலாக செங்கொடி ஏந்தி திருப்பித் தாக்கியபோது பண்ணை அடிமை முறையும்,சாதிக் கொடுமைகளும் கலகலவென வீழ்ந்தன. பொருளாதார அடிமைத்தனமும்,சாதி அடிமைத்தனமும் பிணைந்தே இருந்ததால் இரண்டும் சேர்ந்தே வீழ்ந்தது.
இன்று கீழத்தஞ்சையில் தலித்துகள் ஒரு மரியாதையான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று மார்தட்டமுடியவில்லை என்றாலும் பெருமைப்பட்டுக்கொள்ளமுடியும். ஆனால் மேலத்தஞ்சையில் கீழத்தஞ்சை போல அல்லாமல் இன்னமும் பல இடங்களில் சாதி வெறி இருப்பதை பல நேரடி கள ஆய்வுகளில் பார்த்திருக்கிறேன். திருக்காட்டுப்பள்ளியின் ஒரு புகழ்மிக்க பள்ளியின் கழிவறைச் சுவர்களில் சாதி வெறி கொப்பளிக்கிறது.அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தலித் பள்ளிக்கூட மாணவர்கள் ஆதிக்கசாதியினரால் நடத்தப்படும் விதம் கீழ்த்தரமானது.ஆனால் இதைப்பற்றி அவர்களுக்கு கொஞ்சம் கூட கூச்சம் இருப்பதில்லை. நேற்று(21.08.15) இரவு ஒரத்தநாடு அருகே வடசேரியில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததை காவல் துறை கண்டுபிடித்து,மிகப்பெரும் அசம்பாவிதம் நேரவிருந்ததைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.அத்தாக்குதலைத் திட்டமிட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்.அவர்களுள் நன்கு படித்த பொறியாளர்களும் உண்டு என்னும் செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியை நமக்கு உருவாக்கவில்லை. இன்றைய இளைஞர்கள் சாதிச் சங்கங்களின் அரவணைப்பின்கீழ்தான் வளர்கின்றனர்.அதைக்குறித்து யாருக்கும் வெட்கம் இருப்பதில்லை.சாதிப்பேரவைக்குப் பின்னால் நடக்கும் அசிங்கங்களைக் குறித்து யாருக்கும் கவலை இல்லை. மேலத்தஞ்சையில் கம்யூனிஸ்டுகள் அவ்வளவாக ஊடுருவ முடியவில்லை என்பதும்,கம்யூனிச இயக்கங்களுக்குள்ளும் சாதி வெறி தலைதூக்கி நிற்பதையும் மறுக்கமுடியாது. தனது நினைவு தெரிந்த நாள் முதல் செங்கொடி ஏந்தி இயக்கத்தின் பின்னால் நின்ற தலித் எழுத்தாளர் துரை.குணா ஆதிக்கசாதியினரால் தாக்கப்பட்டபோது தான் சார்ந்த இயக்கம் ஆதிக்கசாதியினரின் பின்னால் நின்றதை எண்ணி அதிர்ச்சி அடைந்தார்.தன்னுடைய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ நூலுக்காக அவர் மீதும் அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது என எழுத்தாளர் துரை.குணா தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். தான் சார்ந்த கட்சியின் உயர் மட்டத் தலைமை அவர் மீது அனுதாபம் காட்டினாலும் அவரது ஊரைச் சேர்ந்த,மாவட்டத்தைச் சேர்ந்த இயக்கவாதிகள் அவரிடம் இன்னமும் சாதிப்பாகுபாடு காட்டி வருகிறார்கள். அதனால்தான் தலித் அமைப்புகளும்,இயக்கங்களும் தலித்துகளின் மத்தியில் செழிக்கின்றன.
இன்று தமிழ்நாடு முழுவதும் சாதிவெறி ஆட்டிப்படைக்கிறது.பள்ளிக்கூடங்களில் மாணவர்களை சாதிப்பித்து பிடித்து ஆட்டுகிறது.ஆசிரியர்கள் தலித் மாணவர்களை ஓரவஞ்சனையாக நடத்துவதாக புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தங்கிப்படிக்கும் விடுதிகள் படுமோசமான நிலையில் இருக்கின்றன.அவர்களுக்குப் பரிமாறப்படும் உணவு மிகக்கீழ்தரத்தில் இருப்பதாக விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் பலமுறை சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். தலித்துகளின் முன்னேறிய வாழ்வாதாரம் தலித்துகளின் மீதான பெரும்பாலான தாக்குதல்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.அவர்களது கல்வியும்,பொருளாதாரமும் ஆதிக்கசாதிகளின் கண்களை உறுத்துகிறது.ஆதிக்கசாதி பெண்களுடனான தலித் ஆண்களின் காதல் தலித்துகளின் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.இளவரசன் – திவ்யா காதல் தர்மபுரியில் தலித்துகள் மீதான மிகப்பெரும் தாக்குதலை நடத்துவதற்கு காரணமாக அமைந்தது. கலவரங்களுக்குப் பிறகான நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தர்மபுரி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வசமானது. பாட்டாளி மக்கள் கட்சியின் இவ்வெற்றியை கடந்த வருடம் உத்தரப்பிரதேசத்தின் முஸாபர்நகர் கலவரத்திற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. மிகப்பெரும் வெற்றியடைந்ததோடு ஒப்பிட்டுப் பார்ப்பது வேடிக்கையானது மட்டுமல்ல,தோலைச்சுடும் நிஜமும் கூட.இப்படியாகத்தான் மதமும்,சாதியும் தேர்தலுக்கான மிகச்சிறந்த கருவிகளாகப் பயன்பட்டு வருகின்றன. இக்கருவிகள் தலித்துகளின் உயிரையும்,முஸ்லிம்களின் உயிரையும் பலிவாங்கிக்கொண்டு இந்துத்வா சக்திகளுக்கும்,ஆதிக்கசாதிகளுக்கும் உயிர் மூச்சை வழங்குகின்றன.
விழுப்பரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் பெரும்பான்மை வன்னியர் சாதியினர் 5000 பேரும்,சிறுபான்மையினர் தலித்துகள் 200 குடும்பங்களும் வசிக்கின்றனர்.ஆகஸ்ட் 15 ( நமக்கு சுதந்திரம் கிடைத்த நாள் என்று மிகப்பெருமையாகக் குறிப்பிடும் தினம்தான் அது) அன்று இரவு இக்கிராமத்தின் தலித்துகள் திட்டமிட்டு தாக்கப்பட்டனர்.இம்முறை சேஷசமுத்திர தலித் இளைஞன் ஒருவன் இளவரசன் போன்று திவ்யா போன்ற ஆதிக்கசாதிப் பெண்ணைக் காதலிக்கவில்லை(சில நாட்கள் முன்னர் கோகுல்ராஜன் என்னும் தலித் மாணவன் காதல் விவகாரத்தில் தலை துண்டிக்கப்பட்டு தண்டவாளத்தில் தூக்கியெறியப்பட்டான் என்பது தனிக்கதை).வழிபாட்டுக்குரிய மாரியம்மன்தான் கலவரத்திற்கு முக்கிய காரணம்.வெகுநாட்களாக தலித்துகளுக்கென்று தனியாக ஒரு மாரியம்மன் கோவில் அங்கு இருக்கிறது.தலித் மாரியம்மன் என்று வேண்டுமானால் அடையாளத்திற்கு வைத்துக் கொள்ளலாம்.ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாவின்போது ஒரு மாட்டுவண்டியில் வைத்து அம்மன் வலமாகக் கொண்டுவரப்படும்.அம்மக்கள் தங்களுடைய மாரியம்மனை தேரில் அமர்த்தி வலம் வர ஆசைப்பட்டார்கள்.அதற்கு ஆகும் செலவை உத்தேசித்து அம்மன் தேருக்குப் பதிலாக தங்களுடைய வாக்கை உள்ளாட்சித்தேர்தலில் ஒரு ஆதிக்கசாதி வேட்பாளருக்கு விற்பனை செய்தார்கள்.அவரும் தான் வெற்றி பெற்றவுடன் தலித் மாரியம்மனுக்கு தேர் செய்யும் செலவில் ஒரு பகுதியை ஒப்புக்கொண்டார்.தேர் உருவானது.ஆனால் தேர் உருண்டோடவில்லை.தலித் மாரியம்மனுக்கு தேரா? ஆதிக்க சக்திகள் வெகுண்டனர்.தேர் ஓட்டப்படாமல் மூன்று வருடங்கள் கிடந்தன. தேரினை ஓட்ட அனுமதி மறுத்தால் கிராமத்தின் மொத்த தலித்துகளும் புத்த மதத்திற்கு மாறுவார்கள் என்ற மிரட்டலுக்கு மாவட்ட நிர்வாகம் பணிந்து பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு வந்தது.அரசு அதிகாரிகளின் மூன்றாண்டு சமாதானப் பேச்சின் முடிவில் ஆகஸ்ட் 16 அன்று தேரோட்டம் என்று முடிவு செய்யப்பட்டது. சமாதானப் பேச்சு வார்த்தையின் முடிவில்தான் இம்முடிவு எடுக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். ஊரில் உள்ள எல்லா சாலைகளும் அரசின் வரிப்பணத்தில் போடப்பட்டிருப்பதால் அது அரசுக்கும்,எல்லா மக்களுக்கும் சொந்தம் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அப்படியானால் தேர் சாலையில் ஓடுவதற்கு என்ன தடை இருக்கமுடியும்? உண்மைகளை உண்மையற்றது போலப் பேசித்திரியும் சாதி வெறியர்களை நாம் என்ன செய்வது?
தலித்துகள் மீதான தாக்குதல்கள் அவர்கள் மத்தியில் மதமாற்றம் குறித்த பிரக்ஞையை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது.இஸ்லாமுக்கு மாறுவதா,பௌத்தத்திற்கு மாறுவதா என்னும் தீவிர விவாதம் முகநூலில் நடந்துவருகிறது.தலித்துகளுக்கான இட ஒதுக்கீடு எங்களுக்கு வேண்டாம் என தேவேந்திரர் குல வேளாளர் வகுப்பினரின் ஒரு குழுவினர் மதுரையில் மாநாடு நடத்தி பா.ஜ.க.தலைவர் அமித்ஷா முன்னிலையில் தெரிவித்திருக்கிறார்கள்.கடந்த இரண்டாயிரம் வருட வர்ணாசிரம இந்துமதம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும், குறிப்பாக பஞ்சம சாதியினர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் கொடும் பாதிப்புகள் குறித்தும்,அதற்கான ஒரு மருந்தே இட ஒதுக்கீடு என்பதும் மேடையில் இருந்த அக்குறிப்பிட்ட குழுவின் தலைவருக்கும் சரி,அமித்ஷாவுக்கும் சரி,குருமூர்த்திக்கும் சரி தெரியும். ஆனால் இட ஒதுக்கீடு என்பது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்கும்,இயக்கங்களுக்கும் ஒவ்வாமையாகவே இருந்து வருகிறது..”எந்த இட ஒதுக்கீட்டின் பெயரால் சமூக நீதியை நிலைநாட்டுகிறோமோ,அதே இடஒதுக்கீடு அவர்களைக் காயப்படுத்தவும் செய்கிறது.சாதி ஒழிப்பைப் பற்றி வாய் கிழியப் பேசும் நம்முடைய அரசமைப்புதான் மறுபுறம் ஆரம்பப் பள்ளிகளிலேயே உன் சாதி என்ன? என்று பகிரங்கமாகக் கேட்டு,வடுவை மேலும் கிளறிக் காயத்துக்குப் புத்துயிர் கொடுக்கிறது.எனக்குச் சாதி அடையாளமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் ஒரு குடிமகனுக்கு நம்முடைய அமைப்பு கொடுக்கும் சமூகநீதி என்ன? இதற்கான மாற்று வழிமுறைகளே இல்லையா?ஏன் நாம் யோசிக்கக் கூடாது?” என்று ஒரு நாளிதழில் கேள்வி கேட்கிறார் சமஸ் என்னும் கட்டுரையாளர்(தி இந்து,ஆகஸ்ட்,12).இரண்டாயிரம் வருடக் கொடுமைகளை ஒரு எழுபது வருடத்தில் துடைத்துவிட முடியுமா? சமஸ்.இட ஒதுக்கீடு மூலம் இந்த எழுபது ஆண்டுகளில் யாருக்கு என்ன கிடைத்தது? தெரியுமா?தலித்துகளுக்கு ரயில்வேயில் தோட்டி வேலையும்,கீழ்நிலை உதவியாளர் வேலையும் மட்டுமே கிடைத்தது.ஆளும் வர்க்கமாக உள்ள ஆட்சிப்பணிகளில்,நீதிபதிகளில் எத்தனை சதவிகிதம் தலித்துகள் உள்ளனர்?ஒரு இடத்தில் சாதிக் கலவரம் நடக்கும்போதோ,மதக்கலவரம் நடக்கும்போதோ தலித்துகளும்,இஸ்லாமியர்களும் மிக அதிகமாக பாதிக்கப்படுவது, இவர்களல்லாதவர்கள் ஆளும் வர்க்கங்களில் நிரம்பி வழிவதால்தான் என்பது சமஸுக்குத் தெரியாதா?கல்வி நிலையங்களில் சாதிப் பெயர் என்ன என்று கேட்பது இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அச்சலுகைகளைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான்.எனக்குப் பசிக்கிறது என்று நான் தான் கேட்கவேண்டும்.எனக்குப் பசிக்கிறது என்று சொல்வதில் நான் ஏன் வெட்கப்படவேண்டும்? இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி தலித் பெரியவர்களை ஆதிக்கசாதிச் சிறுவர்கள் கூடப் பெயர் சொல்லி அழைக்கும் கேவலத்தைவிட, தனக்கான விடியலை நோக்கி நகரும் தலித் ஒருவன் தனது குழந்தையை கல்வி நிறுவனத்தில் சேர்க்கும்போது சாதிப் பெயர் சொல்லி சேர்ப்பது ஒன்றும் பெரிய கேவலம் அல்ல. இரண்டாயிரம் வருடக் கொடுமையை இப்போதுதான் துடைக்கவே ஆரம்பித்து இருக்கிறோம்.அதற்குள்ளாக இப்பணியை(இட ஒதுக்கீட்டை) பரிசீலனை செய்யவேண்டும் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.உயர் கல்வி நிறுவனங்களில்,உயர் ஆட்சிப்பணிகளில்,நீதிபதி நியமனங்களில் இன்னமும் இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.அரசின் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள இடங்களில் இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா?அடுத்த 100 வருடங்களுக்கு இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால் மட்டுமே இட ஒதுக்கீட்டை இந்த அறிவுஜீவிகளிடம் இருந்து காப்பாற்ற முடியும்.
சாதி அடையாளமே வேண்டாம் எனக் கூறும் குடிமகனுக்கு நமது அமைப்பு கொடுக்கும் சமூகநீதி என்ன என்று கேட்கிறார்?கல்வி நிலையத்தில் கேட்கப்படும் சாதி குறித்த கேள்வியைக் குறித்து மட்டுமே சமஸ் குழம்பிக்கொள்கிறார். கவிஞர் வாய்மைநாதனின் ‘ஒரு திருமணப்பந்தலின் கீழ்’ என்னும் கதைதான் என் நினைவுக்கு வருகிறது.ஆதிக்கசாதிக்காரர்களின் திருமணங்களில் தாலி கட்டும் சமயத்தில் நாவிதர் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சங்கு ஊதவேண்டும்.கதையின் அக்குறிப்பிட்ட ஆதிக்கசாதியைச் சேர்ந்தவர் இச்சடங்கை கடைப்பிடிக்க விரும்புபவர்.ஆனால் அவரது மகன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்.தாலிகட்டும்போது நீ சங்கு ஊதவேண்டும் என்று தந்தை ஆதிக்கம் சொல்ல,நீ ஊதக்கூடாது என்று மகன் ஆதிக்கம் சொல்ல இடையில் விழி பிதுங்கும் அந்நாவிதர் தாலி கட்டும்போது சங்கை ஊதாமல் தவிர்த்துவிட பளேரென்று ஒரு கன்னத்தில் அறை விழும்.அதைத் தாங்கமுடியாமல் அவர் சங்கை ஊத ஆரம்பிக்க, ஏன் ஊதுகிறாய் என்று மகன் ஆதிக்கம் மறு கன்னத்தில் அறை விடுவார்.வலி தாங்கமுடியாமல் அலறும் அந்நாவிதர் சங்கைத் தூக்கி எறிந்துவிட்டு ‘போங்கடா நீங்களும் உங்க சாதியும்’ என்று அரற்றி,ஓங்கிக் குரல் கொடுப்பதோடு கதை முடியும். நாவிதர் சாதிக்குரிய இழிவை நீக்கிக்கொள்ள,அச்சாதி அடையாளத்தைத் துடைத்துக்கொள்ள அந்நாவிதருக்கு ஆசைதான்.ஆனால் சமூகம் விட்டதா?ஆதிக்க சாதிகள் விடுவார்களா?சாதி அடையாளத்தை,சாதியை மறுக்கத் துணிந்த அந்நாவிதருக்குக் கிடைத்தது என்ன?சாதி வேண்டாம் என்று சொல்லும் உயர்சாதியினருக்குப் பிரச்னையில்லை. இடைசாதிகளும்,தலித்துகளும் அவ்வாறு பிரச்னையின்றி இருந்துவிட முடியுமா?.சாதி இல்லை என்று சொல்லிவிட்டு பிராமணரல்லாத ஒருவன் கோவில் கருவறைக்குள் நுழைந்திடமுடியுமா? கல்வி நிலையத்தில் மட்டும் சாதி இல்லையென்று மறுத்தால் போதுமா? சாதி இல்லையென்று கல்விக்கூடத்தில் மறுத்துவிட்டு வந்துவிட்டால் பக்கத்து வீட்டு ஆதிக்கம் சும்மா விட்டுவிடுமா?சமூகத்தின் நடைமுறைச் சிக்கலைப் பற்றி யோசிக்கவேண்டாமா?.
இட ஒதுக்கீடு என்பது சலுகையல்ல,அது ஒரு மறுபங்கீடு என்னும் உண்மையை தலித்,இடைநிலை சாதிகளைச் சேர்ந்த முற்போக்காளர்கள்(?) முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.பிரச்னை இடஒதுக்கீடு அல்ல,மாறாக அரசியல் சுயநலங்களுக்காக மாற்றம்,முன்னேற்றம் என்றப் போர்வையில் சாதிக்கட்சிகளையும்,இயக்கங்களையும்,பேரவைகளையும் திரட்டிக்கொண்டு தலித்துகள் மீது நடத்தப்படும் கொலைவெறித் தாக்குதல்கள்தான்.அதற்கு நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.சாதிவெறிக் கட்சிகளை தனிமைப்படுத்திடவேண்டும்.சாதிவெறியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.மதத்தின் பெயரால் நடத்தப்படும் ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் விதமாக, பாதிக்கப்பட்ட தலித்துகள் மேற்கொள்ளும் மதமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மக்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை குற்றவுணர்வோடு நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.
(உயிர்மை, செப்டம்பர்,2015)