கண்ணகி – ஒரு பண்பாட்டுத் தேடல்
கண்ணகி என்னும் பெயரும்,அது காலம் காலமாக உருவாக்கி வைத்திருக்கிற படிமங்களும் சொல்லொணா ஆச்சரியத்தை நமக்குத் தருகிறது.சமீபத்திலான இரண்டு மூன்று நிகழ்வுகள் கண்ணகியை மீண்டும் எனக்கு நினைவுபடுத்தின. கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத்து கூத்துக் கலைஞர் மிக்கேல்தாஸின் பண்டாரவன்னியன் – கண்ணகி நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றபோது ஈழத்திலும்,இலங்கையிலும் கண்ணகி பற்றிய கதைகளும்,தொன்மங்களும் விரிவாக பேசப்பட்டன. கடந்த ஆண்டு வெளிவந்த ‘மிளிர்கல்’ என்னும் இரா.முருகவேளின் நாவல் தமிழ் அறிவுச்சூழலில் பெற்றுள்ள கவனம் பிரமிக்கத்தக்கது. கட்டுரைத் தன்மையுடனும்,விறு விறு த்ரில்லருடனும் கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறஅதன் கதை வடிவம் கண்ணகியை மீண்டும் ஒரு பேசுபொருளாக்கியிருக்கிறது. சமீபத்தில் ஜெயலலிதா விடுதலை அடையவேண்டும் என்று அதிமுகவினர் கண்ணகியிடமும் கூட வேண்டுதல் நடத்தினர் என்னும் செய்தியையும் படிக்கமுடிந்தது.
கி.பி.இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி இன்று வரை கண்ணகி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் ஈழத்திலும், இலங்கையிலும் கேரளாவிலும்,கர்நாடகாவிலும் முக்கியமான தொன்மமாகியிருக்கிறாள்.கண்ணகி என்றவுடன் கற்பும் கூடவே நினைவுக்கு வருகிறது. கண்ணகியின் கற்பும்,கோபத்தன்மையும் அவளுக்கு தெய்வத்தன்மையைக் கொடுத்திருக்கிறது. தமிழச்சியின் கற்புக்கோட்பாட்டை கண்ணகியே வடிவமைத்திருக்கிறாள்.தமிழின் ஒரே காப்பியமான சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியத்தையும்,தமிழ் வாழ்க்கைச் சூழலையும் பெருமளவு பாதித்திருக்கிறது. சமீபத்திய முருகவேளின் நாவலான மிளிர்கல் கண்ணகிப் படிமத்தை மீண்டும் ஒருமுறை தமிழ் அறிவுச்சூழலில் பேசுபொருளாக்கியுள்ளது.சிலப்பதிகார காப்பிய நாயகர்கள் திரிந்த இடங்களுக்குச் சென்று அவ்விடங்களைப் படம் பிடிக்கவேண்டும்,அதோடு கூடவே அதைப்பற்றிய ஒரு ஆவணப்படமும் எடுக்கவேண்டும் என்ற முருகவேளின் ஆசையின் பின்னது நிறைவேறாமல் “மிளிர்கல்” என்னும் நாவலாக உருமாறியிருக்கிறது.முல்லை என்னும் நவீனப் பெண் ஊடாக சிலப்பதிகாரத்தை,கண்ணகியை,அன்றைய தமிழ்ப்பண்பாட்டை ஊடுருவிப்பார்க்கும் முருகவேள் ஒரு சில இடங்களில் கண்ணகியையும் நம் மனக்கண் முன் கொண்டு வருகிறார். முல்லையின் நனவிலி மனம் பூம்புகாரின் ஓட்டல் அறையின் மாடியிலிருந்து கண்ணகியை கடற்கரையில் காணும் காட்சியையும்,கொடுங்கலூர் பகவதி அம்மன் ஆலயத்தின் கூட்ட நெரிசலில் சிக்கித் திணறும் முல்லையின் கரங்களை இரும்பைப் போன்ற உறுதியும்,மலரைப்போன்ற மென்மையும் கொண்ட ஒரு கரம் பற்றி இழுத்துச் சென்றதையும் படிக்கும்போது நமக்குள் கண்ணகி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறாள்.கண்ணகிப் படிமத்தை ரத்தமும் சதையுமாக நம்மை உணரச்செய்திருப்பதால்தான் ஒரு குடும்பத்தின் ஒரு நபருக்குச் செல்லும் அந்நாவல் அக்குடும்பத்தின் ஏனைய அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிந்து பரவுகிறது. பல கல்வி நிலையங்களில் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. பூம்புகாரின் கடற்கரையில் தொடங்கி கேரளத்து மலையகம் வரை நாவலின் வழி கண்ணகியைத் தேடி மீட்டு வந்திருக்கும் முருகவேளை நாம் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.
தமிழர்களின் ஆழ்மனத்தில் கண்ணகி பதிந்துவிட்டிருப்பதை கடந்த நூற்றாண்டின் நிகழ்வுகள் மூலம் அறியமுடியும்.’கண்ணகி’ திரைப்படத்தை பார்த்துதான் பெரியார் சிலப்பதிகாரத்தை மிகவும் கடுமையாக விமர்சித்திருப்பார்.பெரியாரின் இயங்குதளமும் சூழலும் சிலப்பதிகாரத்தையும்,கண்ணகியையும் மிகக்கடுமையாக அவரை விமர்சிக்க வைத்தது.பின்னர் ம.பொ.சி நடத்திய சிலம்பு மாநாட்டை பெரியார் வாழ்த்தி செய்தி அனுப்பியதும்,அச்செய்தியை விழாவில் ம.பொ.சி.படித்தவுடன் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்ததும் வரலாறு.கண்ணகி என்னும் படிமத்தைக் குறித்தே பெரியார் சிலப்பதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தினார்.கண்ணகி பெண்ணடிமைத்தனத்தின் உச்சம் என்றார். ” சிலப்பதிகாரம் விபசாரத்தில் தொடங்கிக் கற்பில் வளர்ந்து முட்டாள்தனத்தில் முடிந்தது” என்றும் பெரியாரால் உச்சக்கட்டமாக விமர்சிக்கமுடிந்தது. தன்னை விட்டு நீங்கிய கணவனை நினைத்து நினைத்து உடல் இளைத்து அக்கணவனுக்காகக் காத்திருந்து,பல்லாண்டுகள் கழித்து வரும் கணவனை ஒன்றுமே பேசாமல் ஏற்றுக்கொண்டு மதுரைக்குச் செல்வோம் என்றவுடன் உடன் கிளம்பி…இப்படியாக ஒரு அடிமையை விடவும் மோசமாக ஒருபெண் அன்று இருந்திருப்பதை நினைக்கும்போது நமக்கே கோபம் கொப்பளிக்கிறதென்றால் பெரியாருக்கு எப்படி இருந்திருக்கும்.ஆனாலும் ம.பொ.சியின் சிலம்பு மாநாடு பல திராவிடத் தலைவர்களுக்கு கண்ணகியிடம் பாசத்தை ஏற்படுத்தியது.கண்ணகியை மிகக்கடுமையாக விமர்சனம் செய்து வந்த அண்ணா தனது ஆட்சியில்தான் கண்ணகிக்கு மெரினாவில் சிலை வைத்தார். ‘கண்ணகி மார்பைப் பிய்த்து போட்டதால் மதுரை எரிந்ததென்றால் அதிலென்ன பாஸ்பரஸ் இருந்ததா?’ என்று கேட்ட அண்ணாதான்,கண்ணகி சிலை நிறுவப்படுவதற்கான காரணத்தையும் குறிப்பிடுகிறார் : ” கண்ணகி ஒரு கதாபாத்திரமாகவே இருக்கட்டும்.இந்தக் கடற்கரைச் சாலை வழியே தினமும் அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் கோட்டைக்குச் சிலையைப் பார்த்து விட்டுதான் வருவார்கள்.கோட்டைக்குச் சென்றதும் நாம் நீதி நேர்மை தவறாமல் நடக்கவேண்டும்.நாம் போடும் ஒவ்வொரு கையெழுத்தும் நீதி தவறாமல் இருக்கவேண்டும்.இல்லையேல் பாண்டிய மன்னனுக்கு நேர்ந்த கதியும்,அவனது தவறினால் மதுரையே எரிந்தது போன்ற நிகழ்வும் இங்கே எதுவும் நடக்கக்கூடாது என்ற உணர்வும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் ஏற்படும்.அதற்காகத்தான் இந்த கண்ணகி சிலை” என்று அண்ணா கூறியதை மீண்டும் ஒருமுறை நாம் நினைவு கூர்ந்தால் நமக்கு சிரிப்புதான் வரும்.ஏனெனில் கடந்த பல்லாண்டுகளில் சென்னை பலமுறை பற்றி எரிந்திருக்கவேண்டும்.தமிழகம் முழுவதும் பள்ளிக்கூட மாணவர்களும்,ஆசிரியர்களும் கண்ணகி சிலை அமைப்பதற்காக வசூல் செய்து கொடுத்த பணத்தில்தான் கண்ணகி சிலை அமைக்கப்பட்டது.கண்ணகி அக்கால மாணவர்களை,இளைஞர்களை அந்த அளவுக்கு ஆட்கொண்டிருந்தாள்.ஆண்களுக்கு கண்ணகி வழிபாடும்,அது பற்றிய பிம்பங்களைக் கட்டமைப்பதிலும் மிக்க விருப்பமாகவே இருந்து வந்திருக்கிறது.கண்ணகியை விட அழகிலும்,கலையிலும்,அறிவிலும் சிறந்திருந்த மாதவி ஏன் இளைஞர்களைக் கவர்ந்திழுக்கவில்லை? ஆண்களின் களவொழுக்கங்கள் எப்பொழுதும் சமூகத்தில் தூற்றப்பட்டுதான் வந்திருக்கின்றன..மாதவியும் அப்படியாகத்தான் சமூகத்தில் வேண்டாதவளாக வெறுக்கப்படுகிறாள்.அவள் செய்த தவறெல்லாம் பரத்தையர் குலத்தில் பிறந்து ஆடல் கலைகளைக் கற்று மன்னனின் அவையில் ஆடியதுதான்.மாதவிக்கு மன்னன் அணிவித்த மாலையை முச்சந்தியில் நின்று கூவிவிற்று அதை பத்தாயிரம் பொன் கொடுத்து வாங்குபவர்கள் மாதவியையும் வைத்துக் கொள்ளலாம் என்ற அடிமை வியாபாரத்தை, அக்காலச் சமூகத்தின் மறுபக்கத்தை சிலப்பதிகாரம் நமக்குக் காட்டியது. கோவலன் அம்மாலையையும் கூடவே மாதவியையும் வாங்கினான்.
ஒரே நேரத்தில் இரண்டு துருவங்களில் பயணிக்கிறது சிலம்பு.ஒன்று கற்பு என்பதே உயரிய நோக்கு என்ற பிம்பத்தைக் கட்டமைத்து கோவலனுக்காகக் கண்ணகியைப் பல்லாண்டுகாலம் காக்கவைத்தது.தார்மிகக் கோபம் கூடக் கொள்ளாமல் அவளை முடமாக்கியது. மறுபுறம் பெண்ணை ஒரு விற்பனைப் பொருளாகவும் ஆக்கியது. பெண் என்பவள் ஒரு பொருள் என்னும் போதனையை மிக நன்றாகவே கட்டமைத்திருந்தது.குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் அது பாராட்டப்படுவதெல்லாம் அதன் அறவழுவலில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.சிறு வயதில் என்னுடைய வகுப்புத் தோழியை கண்ணகி என்னும் பெயரை அவள் கொண்டிருந்தாள் என்பதற்காக விளையாட்டுக்கு சீண்டிப்பார்த்த ஞாபகம் வருகிறது.கூடவே நண்பர்களும் “கற்புக்கரசி கண்ணகி” என்னும் அடைமொழியையும் அவளுக்குத் தருவார்கள்.சில சமயம் பெருமையையும்,சில சமயம் கோபத்தையும் அவள் அடைந்தது நன்றாக நினைவுக்கு வருகிறது.இன்றும் கூட கண்ணகி பற்றி என்ன நினைக்கிறீர்கள் அல்லது கண்ணகி குறித்த உங்களது மனத்தின் வெளிப்பாடு என்ன என்று எப்பெண்ணையாவது கேட்டால் அப்பெண் உங்களைவிட்டு தூரத்திற்கு ஒதுங்கிவிடுவாள்.அல்லது தற்போதைய முற்போக்கு பெண்கள் உங்களை ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.தமிழ்நாடு மட்டுமல்ல திராவிட நாடு முழுவதும் கண்ணகி குறித்த ஆழ்மன பிம்பங்கள் மிகவும் கெட்டித்தட்டிப் போயிருக்கின்றன.தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஈழம்,இலங்கை இப்படியாக தமிழ் சூழ்ந்துள்ள பகுதிகள் அனைத்திலும் கண்ணகி வேரூன்றியிருக்கிறாள்.தமிழில் ஐம்பெருங்காப்பியங்களும்,ஐஞ்சிறு காப்பியங்களும் இருந்தாலும் தமிழின் ஒரே காப்பியம் சிலப்பதிகாரம் என்பதை நாம் அறிவோம். அந்த சிலம்பு தான் தமிழின்,தமிழினத்தின்,தமிழ்ப்பண்பாட்டின் அஸ்திவாரமாகவும் திகழ்வதை எவரும் மறுக்கமுடியாது.
கற்பு என்னும் வார்த்தைக்கு அகராதியில் கண்ணகி என்னும் பெயரைப் போட்டிருப்பதால்தான் இன்றைய நவீன கிழக்குக் கடற்கரைச் சாலை பப்புகளின் கலாச்சாரம் கண்ணகியை அடியோடு மறக்க முயல்கிறது.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெரினா கடற்கரையில் கண்ணகிச் சிலையை பெயர்த்து எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டதுபோல இன்றும்கூட அதைப் பெயர்த்து எடுத்து கடலுக்குள் தள்ள பலரது மனங்கள் விரும்புகின்றன.எல்லா அறமற்ற தீய ஒழுக்கங்களுக்கும் கண்ணகி சாட்சியாக இருப்பதை எவரும் விரும்பவில்லை.கண்ணகியை இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அவளை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான். கோவலனின் பிரிவால் வாடும் கண்ணகியைக் கண்டு தேற்றவந்த தேவந்தி கண்ணகிக்கு ஒரு பரிகாரம் சொல்லுகிறாள்.புகாருக்கு பக்கத்திலிருக்கும் ‘சோமகுண்டம்,சூரியகுண்டம்’ என்னும் இரண்டு பொய்கைத் துறைகளில் மூழ்கி,நீராடி அதன் கரையில் இருக்கும் காமவேளின் கோயிலைத் தொழுதால் கணவரைப்பிரிந்த மகளிர் கணவரோடு சேர்ந்து இம்மையில் மட்டுமல்ல,மறுமையிலும் இன்புற்று வாழ்வர்.நாம் ஒரு நாள் சென்று அங்கு நீராடிவிட்டு வருவோம் என்கிறாள் தேவந்தி.இந்த மூடப்பழக்கத்தை கண்ணகி ‘அஃது பெருமையன்று ‘ என்று மறுத்துவிடுகிறாள்.கண்ணகி காட்டிய பகுத்தறிவுப் பாதையைக் கூட இவர்கள் பின்பற்றத் தயாராக இல்லை. கண்ணகி தான் கணவனோடு வாழ்ந்த காலத்திலும் சரி,பிறகு கோவலனைப் பிரிந்து வாழ்ந்தபோதும் சரி கோவிலுக்குச் சென்றது கிடையாது.அதற்குக் காரணம் அவள் சமண சமயத்தைச் சேர்ந்த வணிகர் குலப் பெண்ணாக இருந்ததன் காரணமாகக்கூட இருக்கலாம். கோவலன் இறந்தபோதுகூட தன்னுடைய மங்கல அணிகலனை கண்ணகி கழற்றவில்லை.உடன்கட்டை ஏறவில்லை.மாதவி மட்டுமே இவ்விரண்டையும் செய்கிறாள். கண்ணகி கடவுளாக ஆக்கப்பட்ட நிகழ்வுக்கு முன்னர் வரை கண்ணகி என்னும் படிமம் காரணம் – காரியம் என்னும் பகுத்தறிவு எல்லைக்குள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கிறது.கணவன் கள்வன் என்னும் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கொலையுண்டு போகிறான் என்னும் செய்தி கேட்டவுடன் அவளது ஆளுமை சிதைவுறுவதாக முனைவர் க.பஞ்சாங்கம் கூறுகிறார்.அச்சிதைவுதான் அவளை பாண்டிய மன்னனையும்,அரசியையும் பழிவாங்க வைத்தது.மதுரையை எரிக்க வைத்தது என்றும் அவர் கூறுகிறார்.கணவனை இழந்தபோது அவளது ஆளுமை ஒருமுறை சிதைவுற்றது.அப்போது கோவலனையும்,மாதவியையும்,அவர்களது குழந்தையான மணிமேகலையையும் பழிவாங்காத அவளது ஆளுமைச் சிதைவு ஏன் தனது கணவன் கொல்லப்பட்டான் என்னும் செய்தி கேட்டவுடன் வேறுவிதமாகச் செயல்பட்டது என்பது ஆய்வுக்குரியதுதான்.இவ்வேறுபாட்டு இழைகொண்டுதான் தமிழ்ப்பண்பாடு மிக நுண்ணியமாகப் பின்னப்பட்டிருக்கிறது.அதனால்தான் பரத்தையர் தேடும் கணவன் பற்றிய செய்தி ஒருபோதும் செய்தியாக வெளிவருவதில்லை.வேறு பெண்ணோடு குடும்பம் நடத்தும் கணவனை மனைவி பழிவாங்கும்போது அது மிகப்பெரும் தலைப்புச் செய்தியாக வெளிவருகிறது.
சிலப்பதிகாரக் காப்பியம் ஏன் உருவாக்கப்பட்டது என்னும் விவாதம் மிகப்பெரியது.காப்பியம் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிற கி.பி.ஐந்தாம் நூற்றாண்டுத் தமிழகம் சோழ,சேர,பாண்டிய,இன்னும் பல சிற்றரசுகளால் பிளவுபட்டிருந்த காலம்.பௌத்த,சமண சமயங்கள் வணிக குல மக்களால் வளர்க்கப்பட்டு பல மன்னர்களின் ஆதரவோடு செழித்து வளர்ந்த காலம்.வணிகம் வளர்வதற்கு அன்றைய தமிழக அரசியல் சூழல் சரியானதாக இல்லை. சேரர்களும்,சோழர்களும்,பாண்டியர்களும்,பல சிற்றரசுகளும் எல்லைகளுக்காக கொடும் போர்களை நடத்திக் கொண்டிருந்த காலம். சோழ,சேர மன்னர்களைப் போல பாண்டிய மன்னன் தங்களுக்கிடையிலான திறந்த வணிகத்தை ஆதரிக்கவில்லை.ஆனால் வணிகம் வளர அமைதியும் வேண்டும்.பல சிறிய அரசுகள் ஒன்றிணைந்து பெரிய அரசு ஒன்றும் வேண்டும்.அதாவது ஒன்றுபட்ட தமிழகம் வேண்டும்.அப்போதுதான் தங்குதடையின்றி வணிகம் நடத்தமுடியும்.அதன் தொடர்ச்சிதான் வணிகக் குல பெண்கொண்டு(கண்ணகி) வணிகத்திற்குத் தடையாக விளங்கிய பாண்டிய மன்னனை வேரோடு சாய்த்தது. சிலப்பதிகாரத்தில் வர்க்க முரண்பாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டும் நா.வானமாமலை, ” நிலப்பிரபுத்துவத்தின் பிரதிநிதியான மன்னனுக்கும் தமிழ்நாட்டு வாணிபத்தின் பெருங்குடி வாணிபர்களுக்கும் இருந்த செல்வாக்கை,போட்டியைக் காட்டுகிறது ” என்கிறார். இன்னொரு விதமாகவும் சொல்லலாம்.பாண்டிய மன்னன் தனது எல்லைப்புற விரிவாக்கத்திற்கு தடங்கலாக இருக்கும் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து பழங்குடி இன மக்களையும் ஒடுக்குகிறான்.இப்படியாக கொங்குப் பகுதி மக்களையும் அவன் ஒடுக்கும்போதுதான் அதனை எதிர்த்து அப்பழங்குடி இனத்திலிருந்து தோன்றிய கொங்குச் செல்வியான கண்ணகி, பழங்குடி இன மக்களின் தலைவியான கண்ணகி, பாண்டியனை படையெடுத்துச் சென்று அழித்தாள். மையப்படுத்தப்பட்ட அரசுகளுக்கு எதிராக பழங்குடி மக்கள் அக்காலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியாகப் போராடி வந்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம். இப்படியாகத்தான் கண்ணகி என்னும் பிம்பம் கட்டமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு வழி சமைக்கப்பட்டது.அதோடு தமிழ்நாடு என்னும் நிலமும் நடைமுறை ரீதியாக உருவாக்கப்பட்டது.அதன் உருவாக்கத்திற்கு இம்மன்னர்களின் நிலப்பகுதிகளுக்கிடையில் சிக்கிக்கிடந்த எண்ணற்ற பழங்குடி இன மக்கள் அழித்தொடுக்கப்பட்டனர் என்னும் உண்மையும் புதைந்து கிடக்கிறது.
கண்ணகி என்னும் படிமம் ஒரு தெய்வமாக உருவாக்கப்படுகிறது. கண்ணகி மதுரையை எரித்த பிறகு,தனது வலது கையால் இடது முலையைத் திருகி மதுரைமீது அக்னி தெய்வத்தை ஏவுகிறாள். அறவோர்,அந்தணர்,குழந்தைகள்,பெண்கள்,முதியோர் தவிர தீயோர் அனைவரையும் அழித்துவிடு என்று உத்தரவிடுகிறாள். பின்னர் மதுரை தீயில் அழியத் தொடங்கியது.அது மட்டுமல்ல,அந்நிகழ்வுக்குப் பிறகு பாண்டியநாடு முழுவதும் மழை பெய்யாமல் கொடும் வறட்சி நிலவியது.இதன் தொடர்ச்சியாகத்தான் பல்லாயிரக்கணக்கான பொற்கொலர்களைப் பலியிட்டு, கண்ணகியின் கோபம் தணிந்து மழை பெய்ததாக கதைகள் உருவாகி மிக வலிமையாக மக்களின் மனங்களில் படிந்ததன் காரணமாகத்தான் கண்ணகி வழிபாடு மாரி தெய்வவழிபாடாக மாறியது.இதுதான் இன்று தமிழகத்தில் மாரியம்மனாக,கேரளத்தில் பகவதி அம்மனாக,கர்நாடகத்தில் மங்களதேவியாக,ஈழத்தில் கண்ணகித் தெய்வமாக கொண்டாடப்படுகிறாள்.அவள் தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல,திராவிட நாட்டுக்கும்கூட தெய்வமாகிவிட்டாள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. சிலப்பதிகாரத்தின் கண்ணகிப் படிமம் நமகு உணர்த்தும் முதல்செய்தி அவளுடைய கற்புத்திறம்.சமணம் கர்நாடகத்தின் வழி கொங்குப் பகுதி வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தபோது அக்காலத் தமிழகம் ” ஓயாத போர்,கொள்ளை,மரணம்,கட்டுப்பாடற்ற ஆண்-பெண் உறவு,மிதமிஞ்சிய மது,மாமிச ஊண் உண்ணும்” இருப்பிடமாக விளங்கியதை கலாநிதி க.கைலாசபதி குறிப்பிடுகிறார்.இச்சூழலில் சமணத்தை தமிழ்நாட்டில் பரப்பிட ஒரேவழி கண்ணகி போன்ற ஒரு படிமத்துடன் அக்கால தமிழ் மக்களின் வாழ்க்கைச் சூழல் கொண்டு ஒரு காப்பியம் படைக்கவேண்டும் என்னும் ஆவல் சமணத்துறவி இளங்கோவடிகளிடம் எழுந்திருக்கவேண்டும்.அதனால் தான் கண்ணகி என்றவுடன் ஒழுக்கம்,கற்பு என்று எண்ணத்தக்க அளவுக்கு இக்காப்பியத்தைப் படைத்திருக்கிறார் என்றும் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.
தமிழ்ச்சமுதாயத்தின் அறச்சீரழிவைத் தடுத்து நிறுத்தவும்,சிறந்த எதிர்கால தமிழ்ச்சமூகத்தைக் கட்டமைக்கவும் சிலப்பதிகாரம் படைக்கப்பட்டது என்பது உண்மையானால் இன்றைய,நாளைய தமிழ்ச்சமூகத்தின் நன்மை கருதி சிலப்பதிகாரத்தை மீள் உருவாக்கம் செய்யவும்,எதிர்கால தமிழ்ச்சமூகத்திற்குத் தேவையான இலக்கியங்களை நிகழ்காலத்தில் எப்படி உருவாக்கவேண்டும் என்னும் கடமையும் இன்றைய தமிழ் இலக்கியவாதிகளுக்கும்,தமிழறிஞர் பெருமக்களுக்கும் உண்டு.பெண்ணடிமைத்தனத்திலும்,சாதியிலும்,ஊழலிலும்,சாதிப்பாகுபாடுகளிலும் ஊறிப்போயிருக்கும் இன்றைய தமிழ்ச்சமூகத்தை மனத்தில் இருத்தித்தான் புதிய இலக்கியங்கள் உருவாக்கப்படவேண்டும்.சாதிப்பாகுபாடு,மனுதர்மம்,மதவேறுபாடுகள் இவற்றை தமிழர்கள் மத்தியில் செழிக்கச்செய்து தமிழ்ச்சமூகத்தைப் பிளவுபடுத்தி,மூடநம்பிக்கைச் சேற்றில் காலம் முழுவதும் உழன்றிட இன்று எழுத்துகளும்,இலக்கியங்களும் அச்சு ஊடகத்திலும்,சமூக வலைத்தளங்களிலும்,இணைய தளங்களிலும் உலவிக்கொண்டிருக்கின்றன.இதைத் தொடர்ந்து அனுமதிக்கப்போகிறோமா ? அல்லது எதிர்கால தமிழ்ச்சமூக நன்மை கருதி புதிய எழுத்துகளைப் படைக்கப்போகிறோமா?இளங்கோவடிகள் தனக்கான நுண் அரசியல் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும்பொருட்டு சிலப்பதிகாரத்தையும்,கண்ணகியையும் படைத்தார்.சாதியற்ற எதிர்கால தமிழ்ச்சமூகம் தான் நமக்கு வேண்டும்.சாதியை முழுவதுமாகப் புறம்தள்ளி புதுமைப் படைக்கப்போகும் புதுக்கண்ணகியை யார் படைக்கப்போகிறார்கள்?தனது மகளை புதுக்கண்ணகியாக உருவாக்குவதன்மூலம் ஒவ்வொரு தமிழ்த்தந்தையும் இளங்கோவடிகளின் பணியை ஏற்கவேண்டும்.அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ்ச்சமூகத்தை புதுக்கண்ணகி ஆட்கொள்ள எனக்கு ஆசை.
(தீராநதி,ஆகஸ்ட்,2015)