சாம்ராஜ்யப் புகழில் ஜொலிக்கும் சாதி
மன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழாவான சதயத்திருவிழா ஒவ்வோராண்டும் தஞ்சையில் கொண்டாடப்படுவது வழக்கம்.கோயிலின் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகமும்,ராஜராஜனின் புகழைப் பரப்பும் பட்டிமன்றமும் வழக்கமானது.வழக்கமற்ற மரபுகள் சமீபத்தில் முளைத்திருக்கின்றன.சாதிக்கட்சிகளின் தலைவர்களும்,தொண்டர்களும் சதயத்திருவிழாவுக்காகத் திரளுகிறார்கள்.ராஜராஜசோழனோடு தங்கள்தங்கள் சாதிகளின் பெயர்களை இணைத்துக்கொண்டு அம்மன்னனை உரிமை கொண்டாடுகிறார்கள்.ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.ஊர்வலம் செல்கிறார்கள்.வரலாறு புதுப்புதுப் பரிமாணங்களை எடுக்கிறது.
சாதிகள் ராஜராஜனைக் கொண்டாடுவதன் மர்மம் என்ன?அவர்கள் அவ்வாறு கொண்டாடுவதற்கான தார்மீகபலம் எங்கிருந்து கிடைத்தது?தார்மீகபலம் இல்லாமல் தொண்டர்பலம் மட்டும் போதுமா? நம்முடைய தமிழ்ச்சமுதாயத்தின் மிகப்பெரும் சாபக்கேடு சாதி.தமிழகத்திற்கு மட்டுமல்ல.இந்தியா முழுமைக்கும்.நம்முடைய பேசுபொருள் தஞ்சை ராஜராஜசோழன் என்பதால் தமிழ்நாட்டிற்குள் நம்மை,நமது பேசுபொருள் எல்லையை வைத்துக்கொள்வோம்.ராஜராஜசோழத்தேவர்,வீர வன்னியன் ராஜராஜசோழன்,ராஜராஜசோழ தேவேந்திரன்,மாமள்ளன் ராஜராஜசோழன் என்று அடையாளப்படுத்துவதற்குள் ஏராளமான சமூகக் காரணங்கள் உள்ளன. பிராமணரல்லாத உயர்சாதி இந்துக்களைப் பொறுத்தவரை தங்களுடைய ஆதிக்கத்தை ராஜராஜசோழன் மற்றும் சோழமன்னர்களின் ஆதிக்கத்தோடு இணைத்துப்பார்ப்பதில் அவர்களுக்கு ஒருவித போதைவெறி.தங்கள் சாதியை நிலைநிறுத்திக்கொள்வதற்கும்,இன்றையக் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சமூகக் கலாச்சாரத்தில் தங்களது ஆதிக்கம் தொடரவும் அவர்களுக்கு ராஜராஜசோழன் முக்கியம்.ராஜராஜசோழனின் கலை அவர்களுக்கு முக்கியமில்லை.அவனது வீரம் முக்கியம்.பக்கத்து நாடுகளை அடிமைப்படுத்தியவிதம் முக்கியம்.அதாவது ராஜராஜனுக்குள் அடங்கியுள்ள ஆதிக்கவாதிதான் இவர்களுக்கு முக்கியம். மற்றொரு பக்கம் பரமக்குடி சம்பவத்திற்குப்பின்னர் தங்களது நிலையை வலுப்படுத்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு துருப்புச்சீட்டு அவசியம்.அதனால் தங்களது துருப்பாக ராஜராஜசோழனைக் களமிறக்கிவிட்டார்கள்.சாதி இந்துக்களுக்கு எதிராக எதிர்வினை புரியவேண்டுமல்லவா.தமிழ்நாட்டின் சாபக்கேடாக விளங்கும் சாதியை வளர்த்துவிட்டதில் மிகப்பெரும் பங்காற்றிய ராஜராஜசோழனுக்கும் அவனது குலத்தோன்றல்களுக்கும் பலநூறு வருடங்கள் கழித்து தங்களது நன்றிக்கடனை சாதிக்கட்சிகள் வருடாவருடம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு சோழமன்னர்களைக் கொண்டாடுவதற்கு மிகப்பெரும் முகாந்திரங்கள் ஏதும் உண்டா?வரலாற்றைத்தான் நாம் தேடிப்போகவேண்டும்.பிற்காலச் சோழர்கள்தான் சிறந்த மன்னர்களாகப் போற்றப்படுகின்றனர்(கரிகாலன் முந்தைய சோழர்களைச் சேர்ந்தவன்).இன்றைக்கும் நீடித்து நிற்கக்கூடிய மிகப்பெரும் கட்டுமானங்கள்தான் இவர்களது ஆட்சியின் புகழைப் பரப்பிக்கொண்டிருக்கும் தளங்கள்.புகழ்மிக்கக் கட்டுமானங்கள் மட்டுமே ஆட்சியாளர்களின் புகழைப் பறைசாற்றப் போதுமானதா?புதுதில்லியின் ராஷ்டிரபதி மாளிகை உட்பட பலக் கட்டுமானங்கள் ஆங்கிலக் காலனியாதிக்கத்தில் உருவானவை.புகழ்மிக்க ரயில்வே ஆங்கிலேயர்களின் காலனியாதிக்கத்தின் விரிவுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டது.அப்படியானால் டல்ஹௌசி முதல் மௌண்ட்பேட்டன் வரை அனைத்து காலனிய ஆட்சியாளர்களும் சிறந்தவர்களா?ஆங்கிலேய ஆதிக்கத்தின் நிலச்சட்டங்கள்,வரிவிதிப்புகள்,பஞ்சங்கள் பற்றியெல்லாம் பேசுகிறோமா இல்லையா?அந்நிய ஆங்கிலேயர்களையும்,தமிழ் மன்னர்களையும் இப்படி ஒப்பிடலாமா? என்னும் கேள்விக்கு நம்மிடம் உள்ள ஒரே பதில் இதுதான்: ” ஆங்கிலேயர்கள் அரசியின் பெயரால் கொள்ளையடித்து பஞ்சத்தை நமக்குக் கொடுத்தார்கள்.சோழமன்னர்கள் கோயிலின் பெயரால் கொள்ளையடித்து சாதியை,வர்ணத்தை பன்மடங்கு வளர்த்து நமக்குக் கொடுத்தார்கள்”. தஞ்சைப் பெரிய கோவில் மிகச்சிறந்த கட்டுமானம் என்பதில் சந்தேகமில்லை.தமிழர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும்,கலாச்சார,பண்பாட்டு வளர்ச்சிக்கும் மிகப் பெரும் கடமையாற்றியிருக்கிறது என்னும் வாதமும் முன்வைக்கப்படுகிறது.ஆனால் சமீபகாலம் வரை தாழ்த்தப்பட்ட மக்களின் கலாச்சாரக்குறியீடாக விளங்கும் பறையாட்டத்திற்கு பெரிய கோவிலில் இடமில்லை.அப்படியானால் தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழர்கள் இல்லையா?தமிழர்களின் கலாச்சாரம் வளர பெரியகோவில் இடமளித்தது.சரி.சாதாரண விவசாயக் குடியானவனை அது பிழிந்து எடுத்ததா இல்லையா?மீண்டும் நாம் சரித்திரச் சான்றுகளுக்குள்தான் செல்லவேண்டும்.
சோழமன்னர்களின் ஆதிக்கமையம் தஞ்சை பெரியகோவில்.தமிழர்களை ஒன்றுபடவிடாமல் தடுத்து நிறுத்தும் ஒரே சக்தியான சாதிகளைப் பெரிதும் பேணிக்காத்து வளர்த்தது சோழர்களின் அரசு.அவர்களின் கோவில்.சாதிய உருவாக்கத்திற்கு பிராமணர்கள் காரணமில்லாமல் இருந்திருக்கலாம்.ஆனால் அதைப்போற்றி வளர்த்து,நிலைபெறச்செய்ததில் பிராமணியத்திற்கு மிகப்பெரும் பங்குண்டு.பிராமணர்கள்தான் சாதிக்கு,வர்ணத்திற்கு சட்டரீதியான அங்கீகாரத்தை மனுதர்மத்தின் மூலமும்,வேதங்களின் மூலமும் வழங்கினர்.சோழமன்னர்கள் அதை மென்மேலும் கடைப்பிடித்து ஒழுகினர்.வேள்வியில் இட்ட தீ போல சாதியும் வளர்க்கப்பட்டது. வட இந்தியாவிலிருந்து மிகப்பெரும் என்ணிக்கையில் பிராமணர்கள் குடியமர்த்தப்பட்டனர்.வளமான நிலங்கள் கிராமம் கிராமமாக வேள்வி செய்யும் அந்தணருக்கு வழங்கப்பட்டன.நிலத்தில் வியர்வை சிந்தாதப் பிரிவினருக்கு நிலங்கள்.இப்படியாகத்தான் தமிழ்நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளர்ந்தது.கோவில்களுக்கும் தானமாக நிலங்கள் வழங்கப்பட்டன.இவ்விரு பிரிவினரும்(பிராமணரும்,கோவிலும்)அரசுக்கு வரிசெலுத்தவேண்டியதில்லை.இப்படியாக வரி இல்லா நிலங்கள் பெருகப்பெருக சாதாரணக்குடியானவர் நிலங்களின் வரிச்சுமை மிகப்பெருமளவில் அதிகரித்தது.அதோடு அவர்களின் துன்பமும் அதிகரித்தது.ஆனால் அரசவையும்,கோவில்களும் செல்வத்தில் பிரகாசித்தன.கூடவே பிராமணர்களும், அரசில் தனிப்பட்ட செல்வாக்கு செலுத்திய வேளாளர்களும் ஜொலித்தனர்.வேளாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ‘வேளான் வாகை’ என வழங்கப்பட்டன.கோவிலில் பணிபுரிந்த நாட்டிய மகளிர்க்கும்,அரசின் அதிகாரிகளுக்கும்,வீரர்களுக்கும் கூட நிலம் இலவசமாக அளிக்கப்பட்டது.இவ்வகை நிலங்கள் ஜீவிதங்கள் என்றழைக்கப்பட்டன.சிற்சில ஜீவித நிலங்களும் வரியில்லா நிலங்களாயின.இப்படியாக இலவச நிலங்கள் பெருகப் பெருக சாமானியக் குடியானவர்களின் சிறு,குறு நிலங்கள் மட்டும் நாட்டின் ஒட்டு மொத்த நிலவருவாயைத் தரவேண்டிய சுமையைப் பெற்றன.விளைவு.அம்மக்களின் மீது கொடிய வரிச்சுமை.முதலாம் குலோத்துங்கனின் காலத்தில்(1070-1120) பசுக்களுக்கும்,எருதுகளுக்கும்கூட வரி போடப்பட்டது.
இக்கடுமையான வரிவிதிப்பைக் கண்டு சாமன்ய மக்கள் சும்மா இருந்துவிடவில்லை.கடுமையானப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.பல்வேறு வடிவங்களை இப்போராட்டங்கள் அடைந்தது.அரசு நிர்ணயித்த வரியைச் செலுத்த குடியானவர்கள் மறுத்தனர்.வரியைக் குறைக்க இயக்கங்கள் மேற்கொண்டனர்.வரி குறைக்கப்படும்வரை நிலத்தில் விதையிடாமல் விவசாயம் செய்ய மறுத்தனர்.சில நேரங்களில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாங்கள் வசிக்கும் கிராமங்களை ஒட்டுமொத்தமாகக் காலிசெய்துவிட்டு வேறிடங்களுக்குக் குடி பெயர்ந்தனர்.சில நேரங்களில் தாங்களாகவே ஒன்றுகூடி வரி நிர்ணயம் செய்தனர்.மிகப்பெரும் ஆச்சரியம் என்னவென்றால் சோழசாம்ராஜ்யத்தின் வலிமைமிகு இரு சாதிக்குழுக்களான வலங்கை,இடங்கைப் பிரிவுகள் கூட மன்னனின் வரிவிதிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை.மன்னனின் வரிவிதிப்புகள் மிகக்கடுமையாக இருந்தபோது இவ்விரு எதிரெதிர் பிரிவுகளும் ஒன்றுகூடி, அசாத்திய ஒற்றுமையை வெளிப்படுத்தி மன்னனுக்கு எதிராக,மக்களுக்கு ஆதரவாக வரிநிர்ணயம் செய்தனர்(தஞ்சையின் கொருக்கை செப்பேடுகள்).அரசனின் அவையில் மிகப்பெரும் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்கள்,வேளாளர்களை இடங்கை,வலங்கைப் பிரிவினர் எதிர்த்தனர்.பிராமணரும்,வேளாளரும் நிலத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அட்டைகள்.இவ்விருவரும் தங்கள் தங்கள் நிலங்களை நிர்வாகம் செய்வதற்கு குடிமக்கள் யாரும் உதவிகள் செய்யக்கூடாது என தங்கள் சாதிப்பிரிவினருக்கு உத்தரவிட்டனர்.அவ்வாறு உதவி செய்பவர்களைக் கொல்வதற்கும் அவர்கள் தயங்கவில்லை.
பிராமணர்களும்,வேளாளர்களும் மட்டுமே பங்குபெற்ற ஊர்,சபை போன்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இடமும் இருப்பதில்லை.அவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பவர்களும் எவரும் இல்லை.அரசனைத் தவிர,அவனது ஆளுநர்களைத்தவிர நிலவரியை நிர்ணயம் செய்வதற்கு ஊர்,சபை அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது.மிகக் கடுமையான நிலவரியை எதிர்த்து மட்டும் மக்கள் திரளவில்லை.தங்களுக்கு நல்ல ஊதியம் தரப்படவேண்டும் என்றும் மக்கள் போராடினர்.பாகனேரி உள்ளிட்ட 24 கிராமங்களில் பறையர் இன மக்கள்(தாழ்த்தப்பட்ட மக்கள்) தங்களின் உழைப்புக்கு ஏற்ற கூலிவேண்டும் எனப் போராடினர்.ஊர்,சபையைச் சேர்ந்த ஆதிக்கவாதிகள் அவர்களை மிகக் கடுமையாக ஒடுக்கினர்.அம்மக்கள் ரத்தம் சிந்திப் போராடியதைத் தொடர்ந்து சில உரிமைகளைத் தர ஆதிக்கவாதிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.அதன்படி திருவிழாக்காலங்களிலும்,இறப்பு நிகழ்வுகளிலும் நெல்தானியம் வழங்குவது என ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது(Annual Report on Indian Epigraphy – 69,1924).இதைப் பொறுக்கமாட்டாத பிராமணர்களும்,வேளாளர்களும் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது மேலும்,மேலும் ஒடுக்குமுறைகளைத் தொடுத்தனர்.ஆதிக்கவாதிகளை எதிர்த்து சாதாரணக் குடியானவர்களும்,தாழ்த்தப்பட்ட மக்களும் நடத்தியப் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மன்னனின் கோபம் அப்பாவி மக்களின் மீது,சாதாரணக்குடியானவர்களின்மீது,தாழ்த்தப்பட்டவர்களின்மீது திரும்பியது. பொறுமையிழந்த மூன்றாம் குலோத்துங்கன்(1178-1218) பிராமணர்களுக்கும்,வேளாளர்களுக்கும் எதிரானப் போராட்டங்களையும், கலகங்களையும் தடை செய்தான்.மீறி கலகம் செய்பவர்களுக்கு 20000 காசுகள் அபராதம் விதிக்கப்படும் என தண்டனையையும் அறிவித்தான்(கீழையூர் செப்பேடுகள்).பிராமணிய,வேளாள நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து தன்னெழுச்சியாக நடைபெற்ற குடியானவர்களின் போராட்டங்களை நசுக்க சோழமன்னர்கள் கடும் ஒடுக்குமுறைகளை ஏவிவிட்டார்கள் என்றால் சோழ அரசும்,சோழ சாம்ராஜ்யமும்,சோழமன்னர்களும் யாருக்காகப் பணிபுரிந்தார்கள்? என்ற வினா தொக்கி நிற்கிறது.
சோழப்பேரரசில் எளிய மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட நூற்றுக்கணக்கான வன்முறைகள் பற்றியக் குறிப்புகள் வரலாற்றின் பக்கங்களில் விரவிக்கிடக்கின்றன.கோவில் பணியாளர்கள் நால்வர் தாங்கள் விவசாயம் செய்த நிலங்கள் கோவில் சொத்தாக மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து மாண்டதை தஞ்சையின் புஞ்சை செப்பேடுகள் தெரிவிக்கின்றன.சாதுரி மாணிக்கம் என்னும் நாட்டிய மங்கை தனக்கு அளிக்கப்பட்ட நிலத்தில் தனது உறவினர்களும் விவசாயம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்னும் தனது உரிமையை வலியுறுத்தி கோவிலின் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டது பற்றி ஆய்வாளர் நா.வானமாமலை குறிப்பிடுகிறார்(Introduction to South Indian Temple Inscriptions,cited by N.Vanamamalai).
பிராமணர்களுக்கும்,கோவில்களுக்கும் நிலங்கள் பிரம்மதேயமாக,தேவதானங்களாக அரசனால் கொடுக்கப்பட்டபோது குடியான மக்கள் ஏன் எதிர்த்தார்கள்?முதலாவதாக தங்களின் சொற்ப நிலங்களின் மீதான வரிச்சுமை கடுமையாக அதிகரிக்கும்.இரண்டாவதாக ஒரு கிராமம் முழுவதும் பிரம்மதேயமாக மாற்றப்படுமானால் அந்நிலங்களில் அதுவரை வியர்வை சிந்தி உழைத்த மக்கள் அந்நிலங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்.மூன்றாவதாக பிராமணக்கிராமங்களில் மீதமிருக்கும் பிராமணரல்லாதவர்கள் தங்களின் நிலங்களை பிராமணர்க்கு விற்றுவிடவேண்டும்.
இப்படியாக குடிமக்களின் வாழ்க்கை மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல்களை குடியானவர்கள்,ஏழை விவசாயிகள் அசுர பலத்துடன் எதிர்கொண்டதையும் பல செப்பேடுகள் தெரிவிக்கின்றன.பொதுவாக நிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆணைகளும்(மன்னர்களின்,கவர்னர்களின்,ஊர்,சபை போன்ற அமைப்புகளின் ஆணைகள்)கோவில் சுர்றுச்சுவர்களிலும்,கோவில் சுவர்களிலும்,கோவிலின் உட்பக்கமும் கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டிருக்கும்.மன்னனின் ஆணைகளுக்கு எதிராக திரண்டெழும் மக்கள் கோவிலின் சுற்றுச்சுவர்களை,கோவிலின் சுவர்களை,கோவில்களை நாசப்படுத்திய சம்பவங்களும் உண்டு.முதலாம் குலோத்துங்கனின் ஆட்சியில் ராஜமஹேந்திர சதுர்வேதிமங்கலம் என்னும் முழு கிராமமும் தீக்கிரையாக்கப்பட்டது.சதுர்வேதிமங்கலம் என்பது முழுமையான பிராமணிய கிராமமாகும்.மிகப்பெரும் கலகமாக உருவெடுத்த இக்கலவரத்தில் முழுக்கோவிலுமே சேதமாக்கப்பட்டது.மக்களின் கோபம் கடவுளின்மீது அல்ல.தங்களின் துன்பத்திற்குக் காரணமான அரசாணை கோவிலின் சுவர்களில் உள்ளதால் அந்த ஆணையை மக்கள் தரைமட்டமாக்கினர்.ஒடுக்கும் அரசும் சும்மா விடுமா என்ன?கோவிலைப் பாதுகாக்க,அங்கிருக்கும் ஆணைகளை(கல்வெட்டுகளை) காக்க ‘மூன்றுகை மகாசேனை’,’மதிற்சேவகற்படை’ போன்ற சிறப்புக் காவல் படைகளை(தற்போதைய கோப்ரா,பசுமைவேட்டைப்படைகள் போல)மன்னர்கள் ஏற்படுத்துகிறார்கள்.மக்களின் எழுச்சிகள் ஒடுக்கப்படுகின்றன(Annual Report on Indian Epigraphy – 189,1895).
சங்ககாலம் இறுதிதொட்டே பிராமணர்களுக்கும்,வெள்ளாளர்களுக்கும் இடையேயான கூட்டை உற்று நோக்கவேண்டும்.சோழப்பேரரசின் அதிகாரமையமாக இவர்கள்தான் விளங்கினர்.சோழப்பேரரசின் அடிப்படையும் இவர்கள்தான்.ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைப் பிடிக்கும்வரை இவ்விருவரின் கூட்டு நீடித்தது.தமிழகத்தின் மிகப்பெரும் நிலப்பிரபுக்களாக இவ்விருவரும்தான் விளங்கினர்.பிராமணரல்லாத,வெள்ளாளரல்லாத பிறசாதி மக்கள் ஒடுக்கப்பட்டனர்.தலித்துகள் இன்னும் கூடுதலாக ஒடுக்கப்பட்டனர்.ஆங்கிலேயர்களின் மேலைநாட்டுக் கல்வியும்,அரசதிகாரமும் பிராமணர்களை ஆதிக்கத்தட்டில் வெள்ளாளரைவிட ஒருபடி மேலே ஏற்றியது.ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பிராமணர்,வெள்ளாளர் முரண்பாடு கூர்மையடைந்தது.ஆங்கிலேயர்களின் ஆட்சியதிகார இறுதியில் பிராமணரல்லாதார் ஆட்சியதிகாரம் பெற்றபோது பிராமணர்களின் ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டது.திராவிடக்கட்சிகளின் ஆட்சியில் கிட்டத்தட்ட பிராமணர்கள் நிலங்களை விட்டு முழுமையாக வெளியேறியிருந்தனர்.இக்கட்டத்தில் உள்ளுக்குள் மறைக்கப்பட்டிருந்த தலித்துகளுக்கும்,தலித் அல்லாதவர்களுக்குமான முரண்பாடு பிராமணரல்லாத உயர்சாதியினருக்கும் தலித்துகளுக்குமான முரண்பாடாக மாறியது.மத்தியகாலம் தொட்டே தலித்துகளின் போராட்டத்தை(சமூக,அரசியல்,பண்பாட்டுத்தளங்களில்) பிராமணர்களோ,பிராமணரல்லாத உயர்சாதிக்காரர்களோ ஒரு பொருட்டாகக் கருதவில்லை.கீழ்வெண்மணியில் வெளிப்படையாகத் தெரிந்த பிராமணரல்லாத உயர்சாதி – தலித் முரண்பாடு இன்றைக்கு தர்மபுரி வரைக்கும் தொடர்கிறது.விழுப்புரத்தையும்,புளியங்குடியையும்,பரமக்குடியையும் அது கடந்து வந்திருக்கிறது.திராவிடம் ஆட்சியைப் பிடித்தபின்னர்தான் கீழ்வெண்மணி அரங்கேறியது.அன்றைக்கே பிராமணரல்லாத உயர்சாதிகளின் ஆதிக்கத்தை திராவிட அரசுகள் அகற்றியிருக்கவேண்டும்.இன்றைக்கு இம்முரண்பாடு தமிழ்நாட்டை,தமிழ்ச்சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.இம்முரண்பாட்டைத் தீர்க்க ஒரே வழி தலித்துகளின் போராட்டத்தை தலித்அல்லாத மக்கள் ஒப்புக்கொள்ளவேண்டும்.அவர்களது நூற்றாண்டுகள் வலியை பிராமணரல்லாத உயர்சாதிமக்கள் உணர முயற்சிக்கவேண்டும்.அவர்களது போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும்.”பிராமணர் மற்றும் பிராமணரல்லாதார் போராட்டம் ஒரு கட்டம்.வரலாற்றுத் தேவை.ஆனால் தலித் போராட்டத்தை மறைக்கக்கூடாது.அப்படி ஒரு பிரிவினர் இருப்பதையும்,அவர்கள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருபதையும் மறைப்பது வரலாற்றைக் கரிபூசி மறைக்கும் காரியமாகும்.அதுபோல் தமிழகத்தில் இனி நடக்கப்போகும் போராட்டம் உயர்சாதி பிராமணரல்லாதாருக்கும் தலித்துகள் உள்ளிட்ட எல்லா சாதி முற்போக்காளர்களுக்குமாக இருக்கும்”(தமிழவன்,தினமணிசுடர்,பிப்ரவரி-1992).
மீண்டும் சதயத்திருவிழாவிற்கு வருவோம்.தமிழ்த்தேசியவாதிகள் கூறிக்கொள்வதுபோல அம்மன்னன் தமிழர்களைப் பிணைக்கும் சக்தி அல்ல.தமிழர்களை எழுச்சிபெற வைக்கும் சக்தியும் அவனுக்கு இல்லை.தமிழர்களைப் பிரிக்கும் சக்தியான சாதியைப் போற்றி வளர்த்த மன்னன் எவ்வாறு தமிழர்களைப் பிணைக்கும் சக்தியாக மாறமுடியும்.அவன் ஒரு வரலாறு.அவ்வளவுதான்.இக்கால ஆட்சியாளர்களுக்கு இருக்கும் சாதிப்பாசங்கள் அவனுக்கும் இருந்திருக்கும்.வரலாறு அவனைப் பற்றிய எதிர்மறைச் செய்திகளையும் அம்பலப்படுத்திக்கொண்டேதான் இருக்கும்.நான்கில் ஒரு பங்கு செப்பேடுகள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டிருக்கும் சூழலில்,வருங்காலங்களில் சோழமன்னர்களின் பராக்கிரமங்கள் இன்னும் என்னென்ன வெளிவரப்போகின்றனவோ?!
சங்ககாலம் இறுதித்தொடங்கி தற்கால திராவிட அரசுகள் வரை சாதியை,வர்ணத்தை அதன் இறுக்கம் தளராமல் கடைப்பிடித்தும்,ஒழுகியும் வந்திருக்கின்றன.ஒருகாலத்தில் தொழில்பிரிவினை கூர்மையடையாமல் இருந்தபோது சாதியின் பிடியும் தளர்ந்திருந்தது.தொழிற்பிரிவினையைக் கூர்மையடையச் செய்து,சாதிகளின் படிநிலைகளை உறுதியாக்கி,தாழ்த்தப்பட்ட சமூக மக்களை அப்படிநிலையின் ஆகக் கீழ்நிலைக்குக் கொண்டுசென்றதில் மிகப்பெரும் பங்கு வகித்த ராஜராஜசோழனும் இன்னும் பிற மன்னர்களும் இன்றைக்கு தலித் கட்சிகளின் தலைவர்களால்,தொண்டர்களால் போற்றப்படுகிறார்கள் என்றால் அதையும் சாதியத்தின் சாதனையாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.
சுதந்திரம் அடைந்து ஜனநாயக முறைமைகள் பின்பற்றப்பட்டுவரும் இக்காலத்திலும்கூட மன்னர்கள் மீதும்,கோவில்களின் அதிகாரங்கள் மீதும்,பழம் சாம்ராஜ்யங்கள்மீதும் மக்களுக்கு,சாதிக்கட்சியின் தலைவர்களுக்கு,அதன் தொண்டர்களுக்கு மதிப்பும்,ஈர்ப்பும் இருக்குமானால் நம்முடைய சுயமரியாதையை மீண்டும் ஒருமுறை மறுவிமர்சனத்திற்கு உட்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம்.
(அம்ருதா,டிசம்பர்,2012)