கூடங்குளம் – காத்திருக்கும் வெடிகுண்டு
இன்று(22.03.2012) மதியம் குறுஞ்செய்தி ஒன்று எனக்கு வந்தது.நண்பர் ஒருவர் அனுப்பிய அச்செய்தியைப் படித்தவுடன் இனம் புரியாத மனக்கிளர்ச்சி உண்டானது.அச்செய்தியை நண்பர்களுடன் உடனே பகிர்ந்துகொண்டேன்.’அண்ணாச்சி பொன்னீலன் கூடன்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி மற்றும் பொறுப்புகளிலிருந்து விலகினார்’என்பதுதான் அச்செய்தி.கூடங்குளம் திட்டத்தை எதிர்த்து பேசியும்,எழுதியும் வரும் என் போன்றவர்களுக்கு இச்செய்தி வேறு எப்படி இருந்திருக்கமுடியும்? இரவு அண்ணாச்சியிடம் பேசியபிறகு அது வெறும் வதந்தி என்பதை அறிந்துகொண்டேன்.தஞ்சாவூர் வரைக்கும் அச்செய்தி வந்துவிட்டதா என வியந்தார்.அவ்வதந்தி பற்றியும்,அது என்னுள் ஏற்படுத்திய மகிழ்ச்சியையும் நான் அண்ணாச்சியிடம் பகிர்ந்து கொண்டேன்.கூடங்குளம் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன் எனச் சொன்னார்.இப்படியாக நீடித்த இவ்வுரையாடல் என்னை என்னமோ செய்தது.அவசரநிலை காலத்தின்போது கட்சி எடுத்த நிலைப்பாட்டை விமர்சித்து தன்னுடைய புதிய தரிசனங்கள் நாவலில் அண்ணாச்சி நிறைய பேசியிருப்பார்.கூடங்குளம் அணுமின்திட்டத்தைப் பொறுத்தவரை தான் சார்ந்த கட்சிக்கு மாறான மனநிலையில் அவர் இருக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் எழுத்தாளர்கள்,படைப்பாளிகளோடு தானும் பங்கெடுத்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளை மற்ற வாக்குக்கட்சிகளைப் போல என்றும் நாம் கருதியதில்லை.தேர்தல்களில் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு போட்டியிடும்போதுகூட அவைகளைப் பற்றி நாம் குறைவாக மதிப்பிட்டதில்லை.மக்களின் துன்பங்களைப் புரிந்துகொண்டு அதில் பங்கெடுத்துக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத்தான் கடைசிப் புகலிடமாகக் கொண்டிருந்தோம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் அணு உலைகளையும் அதன் அரசியலையும் கடுமையாக எதிர்ப்பவர்களே.தாமிரபரணி ஆற்றைக் காப்பாற்றியது போல நீங்கள் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சரியான முடிவை எடுத்து உங்கள் கட்சி சார்பாக அறிவிக்கவேண்டும் என நல்லக்கண்ணு அய்யாவிடம் கூடங்குளம் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தனிப்பட்ட முறையில் சந்தித்து முறையிட்டபோது பல்வேறு அறிவியல் காரணங்களையும்,இயங்கியல் காரணங்களையும் என்னிடம் சுட்டிக்காட்டினார்.ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக நம் எதிர்கால சந்ததிகளின் பாதுகாப்பு முக்கியமல்லவா என அய்யாவிடம் கேட்டபோது புன்முறுவல் ஒன்றுதான் எனக்கு பரிசாகக் கிடைத்தது.இன்று போராட்டம் பல்வேறு கட்டங்களைக் கடந்து போராட்டத்திற்கு மேலும் உயிர்த்துடிப்பு வேண்டுகிற சமயத்தில் நல்லக்கண்ணு அய்யாவின் கூடங்குளம் வருகையும்,அணுசக்தி சார்பாக அக்கட்சியின் தலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் நாம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன(எல்லாமே காலம் கடந்தவையாக இருந்தாலும் கூட).அணு சக்தி,அணு உலை பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் இருவகைப்பட்டதாக உள்ளது.ஜெய்தாப்பூர் அணு உலையை எதிர்க்கும் அதே சமயத்தில் கூடங்குளத்தை மட்டும் ஆதரிக்கும் அக்கட்சியின் இயங்கியலை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்து அங்கு செல்லப்போவதாக அச்சுதானந்தன் அறிவித்துள்ள நிலையில் தோழர் அச்சுதானந்தத்தின் நிலைப்பாட்டையும் தோழர் ராமகிருஷ்ணனின் நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ள நாம் அக்கட்சியின் இயங்கியலுக்குள் ஆழச் செல்லவேண்டும்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாள் தமிழக அமைச்சரவைத் தீர்மானம் மூலம் கூடங்குளத்திற்குப் புத்துயிர் கொடுத்திருக்கிறார் முதல்வர்.முதல்வரின் நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டிருப்போருக்கு இது ஒன்றும் ஆச்சரியத்தை அளித்திருக்காது.முதல்வர் இவ்வாறு முடிவெடுத்ததற்கான இடியாப்பச் சிக்கலுக்குள் புக நான் விரும்பவில்லை. அரசியல் நிர்ப்பந்தங்கள் கூட காரணமாக இருக்கலாம்.
அணு உலை பற்றியும்,அதன் பாதிப்புகள் குறித்தும் ஏராளமான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.பல நூறு கட்டுரைகள் இணையங்களில் வாசிக்கக் கிடைக்கின்றன.5 மாதங்களுக்கும் மேலாக இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பாளர்களால் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அப்போராட்டத்தில் வன்முறை இல்லை.அதைப் பற்றிய சிறு உலுக்கல் கூட தமிழ்நாட்டு மக்களிடமும்,இளைஞர்களிடமும் எழவில்லை.தமிழ்நாட்டின் பல இடங்களில் கூடங்குளம் திறக்கப்படவேண்டும் என்ற எதிர்ப்போராட்டங்களும் நடைபெற்றன.ஏதோ ஒரு ஊரில் ஒருமின் கம்பத்தில் மின் தடை ஏற்பட்டிருந்தால் கூட அதற்கும் உதயகுமார்தான் காரண கர்த்தாவாக்கப்பட்டார். தமிழ்தேசியவாதிகள்தான் போராட்டத்தை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.
கூடங்குளம் போராட்டம் தொடர்ந்து கொச்சைப்படுத்தப்பட்டு வந்தது.அச்சுறுத்தப்பட்டும் வந்தது.கூடங்குளம் போராட்டத் தொடக்க நாட்களில் மிகவும் பவ்வியமாகப் போராட்டப் பந்தலைச் சுற்றி வந்த அமைச்சர் நாராயணசாமி போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.போராட்டக்குழுவினருக்கு பிரதமரைச் சந்தித்துப் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது.இந்தியாவில் உயர்வகை ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறதல்லவா?பிரதமர் மன்மோகனை நோக்கி கேள்விகள் கேட்க உதயகுமார் அனுமதிக்கப்பட்டார்.அக்கேள்விக்கானப் பதில்கள் மன்மோகனுக்கும்,நாராயணசாமிக்கும் தெரியும்.ஆனால் தேசப் பாதுகாப்பு இருக்கிறதல்லவா? அணு உலைகள் பற்றியும்,ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்த நகல்கள் குறித்தும் உதயகுமார் கேள்விகள் எழுப்பியபோது அவர் தேசத்தின் முதல்தர விரோதியாகிப் போனார்.அமெரிக்காவின் கைகூலிதான் உதயகுமார் எனச் சொல்லாதக் குறையாக பிரதமர் போராட்டக்காரர்களின் மீது குற்றம் சுமத்தினார்.வெளிநாட்டுப் பணத்தின் மூலமாகவோ,வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்கள் தரும் நிதி உதவி மூலமாகவோதான் போராட்டம் நடைபெற்று வருகிறது என்று நேற்று வரை சொன்ன அரசும்,நாராயணசாமியும் இன்று என்ன சொல்கிறார்கள் தெரியுமா? “அத்தகைய வெளிநாட்டு நிதி எதுவும் கூடங்குளம் போராட்டத்துக்குப் பயன்படுத்தப்படுவதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை”.அமைச்சர் நாராயணசாமி இக்குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.ஏனென்றால் அவரது ஆசையான கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டு விட்டது.போராட்டம் எந்நேரமும் முற்றிலும் நசுக்கப்பட்டுவிடும் சூழல் கனிந்திருக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு காணிக்கையும் செலுத்தியாகிவிட்டது.இதைவிட சந்தோஷமான தருணம் அமைச்சர் நாராயணசாமிக்கு எப்போதுமே வாய்த்திருக்காது.
கூடங்குளத்தில் முதல் அணு உலையில் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும்,இரண்டாவது உலையில் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும் என்று தொடர்ச்சியாக புனைவுகள் பரப்பப்படுகின்றன.ஒரு அணு உலை தனது முழு உற்பத்தியை என்றும் தொட்டது கிடையாது.1000 மெகாவாட் உலை 500 மெகாவாட் உற்பத்தி செய்து அனுப்பினால் நாம் ஆச்சரியப்படவேண்டும்.இன்னும் 3 மாதங்களில் நாமும் பார்க்கத்தான் போகிறோம்.இதுவரை பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முழுங்கியுள்ள நமது அணுசக்தித்துறை இன்றுவரை 4385 மெகாவாட்டுகளை மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடிந்துள்ளது என்பதை அறியும்போது,நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இது வெறும் 2.85 சதவிகிதம் மட்டுமே என உணரும்போது,நம்முடைய ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் இன்றைக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள(ஒரு நாளைக்கு 32 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத)பல கோடி மக்களின் வாழ்வை மேம்படுத்தாமல் எதை நோக்கி திசை திருப்பப்படுகிறது என்பதை என்ணி வேதனைப்படாமல் இருக்கமுடியவில்லை. கூடங்குளம் அணுமின் உலைகளிலிருந்து வரப்போகும் அணுக்கழிவுகளிலிருந்து கலாம் கூறுவது போல 75 சதவிகிதத்தை மறுசுழற்சி மூலம் பயன்படுத்திக்கொண்டாலும் எஞ்சியக் கழிவுகளை 40,50 ஆண்டுகள் கழித்து என்ன செய்யப்போகின்றோம் என்பதற்கு எந்த பதிலும் இல்லை.1000 மெகாவாட் அணுமின் உலையானது ஆண்டொன்றுக்கு 27 டன்கள் மிக உயர் அபாய அணுக்கழிவையும்,310 டன்கள் உயர் அபாய அணுக்கழிவையும்,460 டன்கள் குறை அபாய அணுக்கழிவையும் உருவாக்கவல்லது.கூடங்குளத்தில் தற்போது 1000 மெகாவாட் திறனுடைய இரண்டு மின் உலைகள் உள்ளது. மேலும் 1000 மெகாவாட் திறனுடைய 4 அணு உலைகள் நிறுவப்படும் என அரசின் அதிகாரிகளும்,அமைச்சர்களும் அறிவிக்கின்றனர்.உருவாகும் கழிவின் அளவை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அணு உலை விபத்து நஷ்ட ஈட்டு மசோதா 2010-ன் படி எந்த ஒரு அணு உலையில் விபத்து நடந்தாலும் அதற்கானப் பொறுப்பு அவ்வுலையை இயக்குபவரையேச் சாரும்.அவ்வுலையை வடிவமைத்து நல்லக் கொழுத்த லாபத்திற்கு விற்று லாபம் பார்க்கும் அந்நிய நிறுவனங்கள் அவ்விபத்துகளின் பொறுப்புகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.விபத்திற்கான உச்சக் கட்ட நஷ்ட ஈட்டுத்தொகை ரூ.1500 கோடி மட்டுமே.அதற்கு மேலும் ஆகும் அனைத்து செலவுகளையும் அரசு கவனித்துகொள்ளும்,நாம் செலுத்தும் வரிப்பணம் மூலமாக.அதாவது எல்லா வகை அணு விபத்துகளுக்கும் இந்திய அரசாங்கம் மட்டுமே பொறுப்பு.ஏனென்றால் நம் நாட்டைப் பொறுத்தவரை அணு உலையை நிர்வகித்து இயக்குபவர்கள் அரசு நிறுவனமான அணுமின் கழகத்தினர் மட்டுமே. அணுவிபத்து இழப்பீட்டு மசோதா,2010-ல் உள்ள இத்தகைய தடைகளையும்,போதாமைகளையும்,குறைகளையும் களைய உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் சமீபத்தில் நடந்த வாதப் பிரதிவாதங்களின்போது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனிடம் நீதிபதி பட்நாய்க் கேட்கிறார்:” விபத்துகள் நடப்பதால் தொடர்வண்டிகளையும்,விமானங்களையும் இயக்குவதை நிறுத்திவிடலாமா?”. முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூட இப்படித்தான் அணு உலைவிபத்துகளை ரயில் மற்றும் விமான விபத்துகளோடு ஒப்பிட்டார்.என்ன செய்வது? ஒரு அணு உலையில் ஏற்படுகின்ற விபத்துகளையும்,நாட்டில் அன்றாடம் நடக்கும் விமான,ரயில் விபத்துகளையும் ஒப்பிடுவது அறமற்றது என்று சொல்வதைத்தவிர வேறு என்ன சொல்லமுடியும்?
கூடங்குளம் அணு உலை தொடங்கப்பட்டதனால் எல்லாம் முடிந்துபோய்விட்டது என்று அர்த்தமல்ல. இன்னமும் உலையில் எரிபொருள் நிரப்பப்படவில்லை.கூடங்குளத்திற்கான மாற்று வாய்ப்புகள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன.கூடங்குளம் அணு மின் உலை இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி இயங்கும் மின் உற்பத்தி உலையாக மாற்றப்படவேண்டும்.அமெரிக்காவின் ஷோர்ஹேம் அணு உலை அங்கு வாழும் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தி இயங்கும் மின் உலையாக மாற்றப்பட்டிருக்கிறது.
கடந்த பல்லாண்டுகளில் அணுமின்சாரத்தின் உற்பத்தியை அதிகரிக்காமலேயே நாட்டின் வளர்ச்சி வீதம் 3.5-லிருந்து 7.5 வரை உயர்ந்துள்ளது என்றால் இதே மாதிரியான வளர்ச்சியை இன்னும் 100 வருடங்களுக்கு அணுமின்சாரம் இல்லாமலேயே சாதிக்கலாம் என்று முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் எல்.ராம்தாஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தனது மின் தேவையில் 53 சதவீதத்தை அணுமின்சாரம் மூலம் பெறும் ஜெர்மனி 2020-க்குள்ளும்,40 சதவீதத்தை அணுமின்சாரம் மூலம் பெறும் சுவிட்ஸர்லாந்து 2034-க்குள்ளும் தங்களது அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவு செய்துவிட்டபோது,வெறும் 2.5 சத மின் உற்பத்தியை மட்டும் அணுமின் உலைகளின் மூலம் பெறும் இந்தியா தனது எல்லா அணு உலைகளையும் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் மூட முடிவெடுக்கவேண்டும்.ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை இலங்கை என்றுமே ஜீரணித்துக் கொள்ளாது.மேலும் மேலும் அது சீனாவை நோக்கியே தள்ளப்படும்.எதிர்காலத்தில் சீனாவுக்கும் நமக்குமோ அல்லது இலங்கைக்கும் நமக்குமோ முறுகல் ஏற்பட்டால் மடியில் கட்டிக்கொண்ட பூனையான கூடங்குளத்தைப் பாதுகாக்க நாம் என்றென்றும் விழிப்புடன் இருந்தாகவேண்டும்.அது மட்டுமல்ல,தென் தமிழகம் முழுவதும் ராணுவமயமாகும் வாய்ப்பும் அதிகமாகும்.சுனாமியோ,நிலநடுக்கமோ தேவையில்லை.சீனாவின்,பாகிஸ்தானின் பயமுறுத்தல்களோ,தீவிரவாதிகளின் அடாவடித்தனங்களோ போதும்,நாம் என்றென்றும் செத்துப் பிழைக்க.
நம் நாட்டில் வளர்ந்துவரும் பயங்கரவாதங்களைப் பற்றி நாம் அறிவோம்.மும்பையில் கடல் மார்க்கமாகப் புகுந்து தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய வேட்டையை நம்மால் இன்னமும் மறக்கமுடியவில்லை.பல்வேறு தாக்குதல்களில் இன்னமும் துப்புகூட துலங்கவில்லை.நம்முடைய அணு உலைகளை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க நம்மால் முடியுமா?என்பதே மிகப்பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. In Fukushima’s Wake என்றக் கட்டுரையில் அலெக்ஸாண்டர் காக்பர்ன் பின்வருமாறு எழுதுகிறார்:” அமெரிக்கா மொத்தம் 104 அணு உலைகளைக் கொண்டுள்ளது.இவற்றுள் பலவும் ரொம்பவும் பழமையானவை.இவற்றுள் 24 அணு உலைகள் புகுஷிமாவைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டவை.வடக்கு கரோலினாவிலுள்ள ஸரோன் ஹாரிஸ் அணுமின் நிலையத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.இங்கு வேறு இரண்டு அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.நிலநடுக்கமோ,சுனாமியோ வேண்டாம்.ஒரு அறிவார்ந்த பயங்கரவாதி இம்மின்நிலையத்தின் தடுப்புகளை ஊடுருவி உலையின் குளிர்விக்கும் கருவிகளை சேதப்படுத்தி விடுவதாக வைத்துக்கொள்வோம்.அதன்பிறகு அங்கு ஏற்படும் ஒரு தீவிபத்தானது 140000 புற்று நோயாளிகளை உருவாக்கும்.சுற்றளவில் பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலங்களை நாசமாக்கும்”. சாத்தானின் குழந்தைகளான பயங்கரவாதிகள் இதையெல்லாம் செய்யமாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
கலாம் கனவு காண்பது போல இன்றிலிருந்து பத்தாவது வருடத்தில் மிகப்பெரும் அணு உலைப்பூங்காவாக கூடங்குளம் மாறக்கூடும்.கடலோரத்தில் நிறுவப்படும் அணு உலைகளின் பாதுகாப்புகளைக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள அவரது ஆலோசனையின்படி அணுப்பாதுகாப்பு நிறுவனம் நிர்மாணிக்கப் பட்டிருக்கும்.உலகின் 546 அணு உலைகளின் அனுபவங்களை இந்நிறுவனம் ஆய்வு செய்வதோடு,அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கும்.திருநெல்வேலியும்,அதன் சுற்று வட்டாரங்களும் வளம் கொழிக்கும் பூமியாக மாறியிருக்கும்.கூடங்குளத்தில் 500 கோடி பணம் வாரி இறைக்கப்பட்டிருக்கும். பத்து வருட முடிவில் மின்சாரத்திற்கு போனஸாக பல டன் அணுக்கழிவுகளும் கூடங்குளத்தில் இருக்கும்.ரஷ்யா அதை எடுத்துச் செல்லப்போவதில்லை.கூடவே அணுகுன்டுகளும் இலவசம்.ஆனால் கடல் தாயின் மடியில் தாலாட்டி வளர்க்கப்பட்ட மீனவர்களின் நிலமும்,வாழ்வாதாரமும்,இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களது மண்சார்ந்த வாழ்க்கையும் வெறும் கனவாகி சிதைந்துப் போயிருக்கும்.
மத்திய அரசின் நடவடிக்கையால் புற்று நோயைக் குணப்படுத்தவல்ல மிக முக்கியமான மருந்தின் விலை சில லட்சங்களிலிருந்து சில ஆயிரங்களாகக் குறையும் என சமீபத்தில் படித்தது நினைவிருக்கிறது.இப்போதுதான் புரிகிறது ஏன் அவ்வாறு குறைக்கப்பட்டது என்று!!
கூடங்குளத்தின் தொடக்கம் பலநூறு அணு உலைகளின் இந்திய வருகைக்கு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.நமது நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் சிதைக்கப்படவில்லை.அணுமின்சாரத்திற்கு எதிரான,அணு உலைகளுக்கு எதிரான உலகு தழுவியப் போராட்டங்களில் நம்மை இணைத்துக் கொள்வதே இன்றைய உடனடி தேவை.
(தீராநதி,ஏப்ரல்,2012)