கொட்டியபிறகு, தேனீக்கள் செத்துவிடும் என்பது உண்மையா ?
தேனீ என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது, சிறிதும் பெரிதுமாக
மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் தேன்கூடுகள்தான். மரங்களில்
மட்டுமல்ல, உயரமானப் பாறைகளிலும் தேனீக்கள் கூடுகட்டும். பாபனாசம்
மலையில் கல்யாணி தீர்த்தம் என்று ஓர் அருவி உள்ளது. அங்கு செங்குத்தாக
வளர்ந்திருக்கும் உயரமான பாறைகள் உள்ளன. அந்தப் பாறைச்சரிவுகளில்,
ஆள் செல்லமுடியாத உயரத்தில், ஆள் உயரத்திற்கு தேன் கூடுகளைப்
பார்க்கலாம். அந்தத் தேன்கூடுகளைக் கட்டியிருக்கும் மலைத்தேனீக்களைக்
‘கடந்தை’ (Apis dorsata) என்று சொல்வார்கள். வண்டுபோல் அளவில் பெரிதாக
இருக்கும். அதிக நச்சுகொண்ட கொடுக்குகளைக்கொண்டது. இந்தக் கடந்தைத்
தேன்கூடுகளை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காணலாம்.
மலர்களில் இருக்கும் பூந்தேனை (nectar) உறிஞ்சி உயிர் வாழும் பூச்சி இனங்கள்
அனைத்துமே தேனீக்கள்தான் (bees). பூக்களில் தேனெடுக்கவரும் தேனீக்களின்
கால்களில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தத்தால், மகர்ந்தச்சேர்க்கை (pollination)
நடைபெறுகிறது. ஒவ்வொரு பூவிலும் மிகக்குறைந்த அளவிலேயே பூந்தேன்
இருக்கும். அதன் காரணமாக தேனீக்களும், பூஞ்சிட்டுகளும்,
வண்ணத்துப்பூச்சிகளும், வண்டுகளும் பல பூக்களிலும் அமர்ந்து பூந்தேன்
எடுக்கவேண்டிய அவசியம் உண்டாகிறது. இது அயல் மகரந்தச்சேர்க்கைக்கு
உதவுகிறது.
அனைத்துத் தேனீக்களுமே (bees) மலர்களின் மகரந்தச்சேர்க்கைக்கு
உதவுகின்றன. பூமியில் 20.000 தேனீ இனங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள்
அடையாளப்படுத்தியுள்ளனர்.
அத்தனைத் தேனீ இனங்களும் மலர்களில் பூந்தேனை உறிஞ்சி எடுத்து
உயிர்வாழ்ந்தாலும், ஒருசில தேனீ இனங்கள் மட்டுமே, தேன்
உற்பத்திசெய்பவையாக (honey producing bees) உள்ளன. அவற்றைத்தான் நாம்
வழக்கமாகத் தேனீக்கள்’ (honeybees). அல்லது கொம்புத்தேனீக்கள் (Apis Florea)
என்று அழைக்கிறோம். கொம்புத்தேனீக்கள் உற்பத்திசெய்யும் தேன்
உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றது. தேனடைக்குப் பலவிதமான
பயன்கள் உள்ளன. தேனடையையும் உணவாகவும், மருந்தாகவும்
பயன்படுத்தலாம். காட்டில் வாழும் கரடியின் விருப்ப உணவு, தேனடையாகும்.
தேன் கூடுகளில், தேனைச் சேகரித்துவைக்கும் அறைகள் தேனீக்கள்
உருவாக்கும் ஒருவித மெழுகால் கட்டமைக்கப்படுகின்றன. அந்த அறைகள் முப்பரிமாணத்தில் நீள்சதுரஅறுகோணவடிவில் (rectangular hexagon)
அமைந்திருக்கும். அதிலும் ஒர் அறிவியல் கோட்பாடு உள்ளது. பக்கங்கள்
சமமாகவும், கோணங்கள் சமமாகவும் கொண்ட வடிவங்களில், சமபக்க
முக்கோணம், சதுரம், நீள்சதுர அறுகோணம் ஆகியவற்றை மட்டுமே
அடுத்தடுத்து வைத்து, இடைவெளி இன்றி ஒரு தளத்தை (plane) உருவாக்க
இயலும். என்றாலும், நீள்சதுர அறுகோண வடிவம் மட்டுமே, மற்ற இரண்டு
வடிவங்களை விடவும் கூடுதல் சுற்றளவு கொண்டிருக்கும். அந்தத் தளத்தை
முப்பரிமாணமாக விரிவுபடுத்தினால், ஒரு அறை உருவாகும். அதாவது,
கொடுக்கப்பட்ட சுற்றளவிற்கு நீள்சதுர அறுகோண வடிவ அறை மட்டுமே
அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். அதனால் கூடுதல் தேனைச்
சேகரித்துவைக்க முடியும். இந்த அறிவியல் உண்மையை கூடுகள் கட்டும்
தேனீக்கள் அறிந்துவைத்திருக்கின்றன. இயற்கையின் எத்தனையோ
அதிசயங்களில் இதுவும் ஒன்று.
இயற்கையில், மனிதர்களைத்தவிர மற்ற உயிரினங்களுக்கு நீண்ட நகங்கள்,
நீண்டப் பற்கள், நீண்ட கொம்புகள், கொடுக்குகள், நச்சுகள் இருப்பதற்கு இரண்டு
காரணங்களைச் சொல்லலாம்.. ஒன்று வேட்டையாடிப் பிழைப்பதற்கு, மற்றது
வேட்டையாடுவதிலிருந்துத் தப்பிப்பிழைப்பதற்கு.. தேனீக்களின் கொடுக்கு
தங்களது தேன்கூட்டைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, அதாவது
தற்காப்பிற்காகவே. அதனால், தேனீ மனிதர்களைத் தேடிக்கொட்டுவது
என்பதெல்லாம் இல்லை.
மனிதர்களையோ, மற்றப்பாலூட்டிகளையோக் கொட்டும் தேனீக்கள், அதன்
பிறகு உயிர் வாழாது என்பது சிறுவயதுமுதலே நமக்கு
சொல்லப்பட்டுவந்திருக்கிறது.. .நாமும் நம்பி வந்திர்க்கிறோம். அந்தச்செய்தி
முற்றிலும் உண்மை இல்லை என்பதாக அ|றிவியலாளர்கள் கூறுகிறார்கள். சில
தேனீக்கள் கொட்டிய பிறகு உயிர்வாழ்வதில்லை என்பது உண்மையே..
என்றாலும் அதனைப் பொதுமைப்படுத்த முடியாது. எல்லாத் தேனீக்களுக்கும்
(bees) இது பொருந்தாது. மாத்திரமல்ல, பூமியில் உள்ள 20,000 தேனீ இனங்கள்
அனைத்துமே கொட்டுவதில்லை என்று உயிரி-அறிவியல் ஆய்வு மாணவர்
ஆலிசன் ரே குறிப்பிடுகிறர் (Allyson Ray, molecular cellular doctoral student of Penn state).
சில தேனீ இனங்களுக்குக்’ (tribe meliponini) கொடுக்கே இல்லை. ஏறத்தாழ, 500
வகையான தேனீ இனங்களுக்குக் கொடுக்கு இல்லை எனவும், அவை
கொட்டுவதற்குப் பதிலாகக் கடிக்கின்றன (bite) என்றும் மூலக்கூறு உயிரி-
அறிவியலாலர் நிக்கோலஸ் நேஜர் (Nicholas Naeger, Molecular biologist in Washington
State university) கூறுகிறார். இப்படிக் கொடுக்கில்லாமல், கடிக்கும் தேனீ இனங்கள் பெரும்பாலும் வெப்பமண்டலப் பகுதிகளிலேயே (tropics)
காணப்படுவதாக அவர் மேலும் கூறுகிறார்.
‘சுரங்கத்தேனீக்கள்’ (mine bees) என்னும் தேனீவகைக்குக் கொடுக்கு உண்டு.
ஆனாலும், அவற்றைப் பயன்படுத்தி, அத்தேனீக்களால் கொட்ட இயலாது.
தேன் உற்பத்தி செய்யும் கொம்புத்தேனீக்கள் (honeybees), மனிதர்களையும்,
பாலூட்டிகளையும் கொட்டிய பிறகு பெரும்பாலும் மரணித்துவிடுகின்றன.
அதற்கு, அவற்றின் கொடுக்கின் அமைப்பே காரணம் என்று ரே கூறுகிறார்.
கொட்டியபிறகு, கொடுக்கு கொட்டப்பட்ட உடலில் புதைந்துவிடுகிறது.
கொட்டிவிட்டு தேனீ பறக்கும்போது, அதன் கொடுக்கு உடலிலிருந்து
பிய்ந்துவிடுகிறது. அதன் காரணமாக தேனீயின் அடிவயிற்றில்
ஓட்டைவிழுந்துவிடுகிறது. கொட்டியபிறகு சில மணி நேரங்கள்
உயிர்வாழ்ந்தாலும், அதிகப்படியான நீரிழப்பு (fluid loss) காரணமாக
மரணித்துவிடுகிறது.என்று நேஜர் கூறுகிறார்.
தேனீக்களில் (honeybees), 10 வகையானவை பூச்சிகளையோ, சிலந்திகளையோ
கொட்டியபிறகு மரணிப்பதில்லை என்று நேஜர் குறிப்பிடுகிறார். பூச்சிகளின்
மேல்தோல் மென்மையாக இருப்பதால், கொட்டியபிறகு, சேதாரமின்றி
கொடுக்குகளை எடுக்க முடிகிறது. மாறாக மனிதர்கள், மிருகங்களின் தோல்
தடிமனாக இருப்பதாலேயே கொடுக்கு மாட்டிக்கொண்டுவிடுகிறது.
தவிரவும், மற்ற தேனீக்களின் கொடுக்கின் அமைப்பு, கொட்டும்போது
மாட்டிக்கொள்ளாதவகையில் ஒருவித ஒழுங்குடன் இருப்பதால், அவை
கொட்டியபிறகும் உயிர்வாழ்கின்றன. காட்டாக. ‘ஒழுங்கற்றுப்பறக்கும் தேனீ’
(bumblebee) ஒழுங்கான கொடுக்கினைக் (smooth sting) கொண்டிருப்பதால், எவ்வித
சேதாரமும் இன்றி மீண்டும் மீண்டும் கொட்டமுடிகிறது.
தேனீக்கள் ஏன் கொட்டுகின்றன?
பொதுவாக இலக்கைத் தேடிச்சென்று கொட்டும் வழக்கம் தேனீக்களிடம்
இல்லை. ஒரு தேனீயைப் பிடித்துத் தொல்லைகொடுத்தால் கொட்டுகிறது.
மற்றொன்று, தேன்கூடுகளின் பக்கம் சென்றால், பாதுகாப்புகருதி தேனீக்கள்
கொட்டுகின்றன.
கொட்டும் தேனீக்கள் அனைத்துமே பெண் தேனீக்கள்தான். காரணம்
அவற்றிற்குத்தான் கொடுக்குகள் உள்ளன. கொடுக்கு என்பதே, கருமுட்டைகளை
வெளிப்படுத்துவதற்கான பெண்தேனீயின் குழல்வடிவ உடலுறுப்புத்தான். (modified
ovipositor) என்று அறிவியலாளர் ‘ரே’ குறிப்பிடுகிறார்.
ஒரு தேன்கூட்டில், ஆண் தேனீக்களைவிட பெண் தேனீக்கள் ஐந்து மடங்கு
எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. தேவை ஏற்படும்போது, ஒரு குழுவாக
இணைந்து சண்டையிடுவதைப் பெண்தேனீக்கள் விருப்புடன்
செயலாற்றுகின்றன. தனி ஒரு பெண் தேனீக்கு. எதிரியை எதிர்கொள்வது
முடியாது என்று தோன்றினால், ஒருவகை ஃபெரோமோனை (alarm pheromone)
வெளிப்படுத்துவதன் வழியே மற்றப் பெண்தேனீக்களை இணைத்துக்கொள்ளும்.
இந்த ஃபெரோமோன், பழுத்த வாழைப்பழத்திலிருந்து வரும் வாசத்திற்குக்
காரணமான மூலக்கூறைக் (isoamyl acetate). கொண்டுள்ளது. எனவே,
சிதைக்கப்பட்ட தேன்கூட்டிலிருந்து (upset honeybee colony) வாழைப்பழ வாசனை
வரும் என்று ஃப்ளோரிடாப் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த முனைவர் மார்லே
இரிடேல் (Dr. Marley Iredale University of Florida) தெரிவிக்கிறார்.
கொட்டிய பிறகு உயிர்வாழ முடியாது என்பது தெரிந்தேத் தேனீக்கள் (honeybees),
மனிதர்களையோ மற்ற தடித்தத்தோல்கொண்ட பாலூட்டிகளையோ
கொட்டுகின்றனவா என்னும் கேள்விக்கு இரண்டுவிதமான பதில்களை
அறிவியலாளர்கள் ரே மற்றும் இரிடேல் முன்வைக்கின்றனர். கொட்டியபிறகு
உயிர்வாழமுடியாது என்பது தேனீக்களுக்குத் தெரிந்திருக்காது என்பது ஒன்று.
அப்படித் தெரிந்திருந்தால், தங்களது தேன் கூட்டைப் பாதுகாப்பதற்காக அவை
விரும்பித் தங்கள் உயிர்களைத் தியாகம்செய்கின்றன என்பது மற்றொன்று,.
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், 20,000 தேனீ வகைகளில், தேன்கூடுகளைப்
பாதுகாக்கவேண்டிய அவசியம் கொம்புத்தேனீக்களுக்கு (honeybees) மட்டுமே
உள்ளது. எனவேதான் மனிதர்களையும், மற்றப் பாலூட்டிகளையும்
அச்சுறுத்தவும், விரட்டியடிக்கவும் அவற்றிற்குக் கொடுக்குகள்
தேவைப்படுகின்றன.