தீஸ்தா செதல்வாட் கைதும், மக்களின் மறதியும்…
மறதி என்னும் நோய் மக்களை மட்டுமல்ல, ஒரு நாட்டின் வரலாற்றையும் அற்புதமாக வழிநடத்திச் செல்லக்கூடியது. அரசியல்வாதிகள் கொள்ளை கொண்ட பணம் என்றாவது திரும்ப அரசின் கஜானாவையோ, மக்களையோ வந்து சேர்ந்ததுண்டா? ஊழல் பெருச்சாளிகள் எந்தக் கட்சியைச் சேர்ந்தாலும் மெகா கூட்டணி அமைத்துக்கொள்ள தயங்கியதுண்டா? அதை என்றாவது மக்கள் தட்டிக் கேட்டதுண்டா? 2002 குஜராத் கலவரங்களை மக்கள் மறந்து வெகுகாலமாயிற்று. இந்திய வரலாற்றில் அப்படி ஒன்று நடந்ததா? என்று அடுத்த தலைமுறை கேட்குமளவிற்கு அச்சம்பவம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அவ்வப்போது தீஸ்டா செதல்வாட் என்னும் போராளி மட்டுமே நமக்கு அச்சம்பவத்தை நினைவூட்டிக் கொண்டிருப்பார். கடந்த 20 வருடங்களாக குஜராத் கலவர வழக்கை உச்சநீதிமன்றம் வரை கொண்டு சென்றவர். இவர் இல்லை என்றால் மக்கள் இன்னும் விரைவாகவே குஜராத் சம்பவத்தை மறந்து போயிருப்பர். உச்சநீதிமன்றமும் கூட இவருடைய வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இனி குஜராத் சம்பவம் மக்களின் எண்ணத்திலிருந்து முற்றாக துடைக்கப்பட்டுவிடும் என்று எண்ணிக்கொண்டிருந்த சமயத்தில்தான் தீஸ்தா செதல்வாட்டின் கைது செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. மக்களே மறந்தாலும் மோடியும், அமித்ஷாவும் அதை விடுவதாக இல்லை.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீஸ்டா செதல்வாட் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 24.06.2022 அன்று தள்ளுபடியான நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதாவது நீதிமன்றத்தில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த ஒரு வழக்கிலும் அதிகார வர்க்கத்தினருக்கு தீர்ப்பு சாதகமாக வரும்பட்சத்தில், வழக்கு தொடுப்பவரை நீங்கள் கைது செய்யமுடியும் என ஒரு முன்னுதாரணத்தை இக்கைது நடவடிக்கை கொடுத்திருக்கிறது. குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு(SIT) அளித்ததாகக் கூறி சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட் கைது செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று(24.06.2022), 2002 குஜராத் படுகொலையில் முன்னாள் முதல்வர் மோடிக்கு எதிரான “பெரும் சதித்திட்டம்” என்னும் குற்றச்சாட்டை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.
‘ஒரு அரசு இயந்திரத்தின் ஏதாவது ஒரு பகுதி செயல்படாமல், இதுபோன்ற படுகொலைகள் நடக்கும் பட்சத்தில் அந்த அரசின் தலைமையை இதில் சம்பந்தப்படுத்தமுடியாது. குற்றம் இழைப்பதற்காகவென்றே சதித்திட்டம் தீட்டி, அதை செயல்படுத்த அரசு இயந்திரத்தின் அனைத்து தரப்பும் ஒப்புக்கொண்டு செயல்படும் பட்சத்தில் மட்டுமே, அரசின் மீதான குற்றமாக இதை நாம் எடுத்துக்கொள்ளமுடியும்’ என்பதுவே உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சாரமாக இருக்கிறது. அதாவது முன்னாள் முதல்வரான மோடி தனது அரசு இயந்திரத்தைக் கூட்டி, பழிக்குப் பழி வாங்கப்படும் என பத்திரிகையாளர் மத்தியில் ஏதேனும் சொல்லியிருந்தால் உச்சநீதிமன்றம் அதை இந்த வழக்கில் முக்கியமாக எடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.
குஜராத் அரசின் செயலற்ற தன்மைதான் பிப்ரவரி,27,2002-க்குப் பிறகான (கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்திற்குப்பின்) வன்முறைச்சம்பவங்கள் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றதற்கானக் காரணம் என்று குஜராத் மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த மறுநாளே குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றமற்றவர் என குஜராத் கலவரங்களைப் பற்றி விசாரணை நடத்திவரும் சிறப்புப் புலனாய்வுக்குழு அறிவித்தது. குல்பர்க் சொசைட்டியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாஃப்ரி மற்றும் சமூகசேவகி தீஸ்தா செடல்வாட் ஆகியோரின் மனுக்களின் மீதான இறுதி முடிவாக இத்தகைய இயந்திரத்தனமான முடிவுக்கு சிறப்புப் புலனாய்வுக்குழு மட்டுமல்ல, இப்போது உச்சநீதிமன்றமும் வந்திருக்கிறது.
இந்நிலையில்தான் குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆவணங்கள், சாட்சியங்கள் வழங்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்டா செதல்வாட், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது தீஸ்டா செதல்வாட், ஜாகியா ஜாப்ரி மூலம் நீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்ததோடு, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (எஸ்.ஐ.டி) தவறான தகவல்கள் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இந்திய தண்டனை சட்டம் 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக போலியான தகவல்களை அளித்தல்), 471 (போலி ஆவணங்கள் பயன்படுத்துதல்), 194 (மரண தண்டனை பெறும் நோக்கத்துக்கு தவறான சாட்சியங்களை வழங்குதல்) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடிக்கு எதிரான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும் என்பதும் நாடறிந்த செய்திகள்தான். செதல்வாட்டின் இப்போதைய கைது நடவடிக்கைகள் கூட எவருக்கும் ஆச்சர்யம் அளிக்கப்போவதில்லை.
மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் தொழிற்சங்கவாதியாக இருந்து, பின்னர் காங்கிரஸில் இணைந்து, 1977 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, க்வாண்டில்(Lamp) என்ற கவிதைப் புத்தகத்தை 1994-ல் படைத்து, குல்பர்க் சொசைட்டி கலவரத்தில் கண்டம் துண்டமாக உயிரோடு வெட்டப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகடுக்கில் எரியூட்டப்பட்டு, குஜராத்தின் காற்றோடு காற்றாகக் கலந்து போய்விட்ட இஷான் ஜாஃப்ரியின் கவிதைவரிகள் மட்டுமே இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. இதோ அந்த உருது வரிகள் :
“ Geeton se teri zulfon ko meera ne sanwara/Gautam ne sada di tujhe Nanak ne pukara/Khusro ne kai rangon se daaman ko nikhara/Har dil mein muhabbat ki ukhuwat ki lagan hai/Ye mera watan mera watan mera watan hai “
“ உன் இதயக்கதவுகளை தன்
பாடல்கள் மூலம் மீரா அலங்கரித்தாள்
நானக் உன்னை எவ்வாறு அழைத்தாரோ
அவ்வாறே கௌதமும் அழைத்தார்
குஸ்ரோ உன் மகுடத்திற்குப்
பொலிவைச் சேர்த்தார்
அன்பும் பரந்த மனப்பான்மையும் இங்கு
ஒவ்வொரு இதயத்தின் துடிப்பாகவே உள்ளது
இது என்னுடைய நாடு
என்னுடைய நாடு, என்னுடைய நாடுதான் “
( நன்றி – மொழிபெயர்ப்பு : ராஃபியா பாஸ்ரின்)