அலெக்சாண்டிரா கொலந்தாய் – புதிய குரல்களின் முன்னோடி : கமலாலயன்
கொலந்தாயின் தன் வரலாற்று நூலை முன்வைத்து…
‘பாலியல் முதிர்ச்சி மிக்க கம்யூனிசப் பெண்ணின் தன் வரலாறு’ என்ற புத்தகம், தோழர் அ.மங்கை அவர்களால் தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்ட நூல். ரஷ்ய மொழியில் அலெக்சாண்டிரா கொலந்தாய் எழுதிய இந்தச் சிறு நூலை, ஆங்கிலத்தில் சல்வேதார் அத்தன்சியோ மொழிபெயர்த்திருக்கிறார். மார்க்சிய செவ்வியல் நூல்கள் பதினைந்தை ஒரு தொகுதியாக, பதினைந்து தனித்தனி நூல்களாக மிகவும் சிறந்த வடிவமைப்பில், வெவ்வேறு மொழிபெயர்ப் பாளர்களைக் கொண்டு தமிழில் வெளிக்கொணர்ந்துள்ளது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம். இந்த நூல்கள் அனைத்திற்கும் பதிப்பாசிரியராகப் பொறுப்பு வகித்து, அந்தந்த நூல்களின் ஆசிரியர்கள், அவை உருவான காலகட்டங்களின் பின்னணிச்சூழல்கள், மையப்பொருண்மைகள் பற்றிய அறிமுகத் தொகுப்புரைகளை செறிந்த ஆய்வுக் கண்ணோட்டத்தில் வழங்கி இருக்கிறார் மூத்த ஆய்வாளரான பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்கள்.
அலெக்சாண்டிரா கொலந்தாய் (1872- 1952) வசதியான மேட்டுக்குடியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த பெண். மரியா ஸ்ட்ராகோவா ஷுரா என்பது இவரின் இளம்பருவப் பெயர். வீட்டிலேயே கல்வி கற்றவர். இவர் குடும்பத்தினர் செல்வந்தர்களாக இருந்ததால் வறுமை என்பதன் பொருளை இவர் இளம் வயதில் சொந்த அனுபவத்தில் உணர முடியவில்லை. ஆனால் இவரின் தாத்தாவின் பண்ணையில் விவசாயிகள் இல்லக் குழந்தைகளாக இருந்த விளையாட்டுத் தோழர்களின் நிலைமையைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த அனுபவம் இவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிற குழந்தைகளுக்கு மறுக்கப்படும் பல விஷயங்கள் தனக்குக் கிடைப்பது பற்றி இவர் கவனித்தார். இவரைச் சூழ்ந்திருந்த பல்வேறு அன்புக்கான சாட்சியங்கள் தகரத் தொடங்கியதும், இவருக்குள் அவற்றுக்கெதிரான கிளர்ச்சி தொடங்கியிருக்கிறது. ஆண்டுகள் கடக்கக் கடக்க இவரின் விமரிசனங்கள் கூர்மையடைகின்றன.
வீட்டிலேயே கல்வி கற்ற இவர், பதினாறு வயது நிறைவடையும் முன்னரே பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை எழுதினார். தனது கல்விமுறை வழக்கத்திற்கு மாறானதாயிருந்ததால் நிறையத் தீமைகள் ஏற்பட்டன என்பது இவரின் கருத்து. பொதுவெளியில் வெட்கப்படுகிறவளாக, வாழ்வின் நடைமுறைச் செயல்களில் தேர்ச்சியற்றவளாக இருந்ததாகக் கூறுகிறார். பெற்றோர் பிற்போக்காளர்கள் அல்லர் என்றபோதிலும், தங்கள் வீட்டுக் கூரைக்குக் கீழே வசித்த குழந்தைகளைப் பொருத்தவரையில், மரபார்ந்த சிந்தனைகளின் பிடியிலேயே இருந்தார்கள். அதன் விளைவாகத் தனது மூத்த சகோதரியின் வாழ்க்கை எவ்வளவு மோசமாகப் பாதிப்புக்கு உள்ளானது என்ற உண்மையைக் கொலந்தாய் கூறுகிறார். பத்தொன்பது வயதேயான அந்த சகோதரியை எழுபது வயதுக்காரரான ஒரு பணக்காரருக்குத் திருமணம் செய்து வைத்தார்களாம் அந்தப் பெற்றோர்.
அலெக்சாண்டிராவுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று அவர்கள் முயன்றபோது, “அத்தகைய வசதிக்கான திருமணத்துக்கு எதிராக நான் கிளர்ந்தெழுந்தேன். அது பணங்களின் திருமணம். நானோ காதலுக்காக மணம் புரிய விரும்பினேன். கட்டுக்கடங்காத ஆசைக்காக மணம்புரிய நினைத்தேன். இளம்பெண்ணாக இருந்த நான், என் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக எனது உறவினர் மகனைத் தேர்ந்தெடுத்தேன். இளம் பொறியியலாளரான அவர் எந்தவித சொத்தோ வசதியோ அற்றவர்…” என்று தன் வரலாற்று நூலில் எழுதியிருக்கிறார். அந்தத் திருமணம் மூன்றாண்டுகள் கூட நீடிக்கவில்லை. ஒரு மகன் பிறந்து அவனை அக்கறையுடன் கொலந்தாய் வளர்த்த போதிலும், மனைவி-குடும்பப்பெண் போன்ற மகிழ்ச்சியான வாழ்வு ஒரு ‘கூண்டு’ போலாயிற்று என்கிறார்.
அலெக்சாண்டிராவின் அக்கறைகளும், ஈடுபாடுகளும் ரஷ்ய உழைக்கும் வர்க்கப் புரட்சியை நோக்கிக் கூடுதலாகத் திரும்பிய காலம் அது. தீவிரமான வாசிப்பில், சமூகச் சிக்கல்களை அறிவதில், சொற்பொழிவுகளைக் கேட்பதில் ஈடுபடுகிறார். 1893-96-க்கு இடைப்பட்ட இக்காலம், ரஷியாவில் மார்க்சியம் முகிழ்க்கத் தொடங்கிய காலம். ரஷிய இலக்கிய, புரட்சிகர வட்டாரங்களில் லெனின் புதிதாகப் புழங்கத் தொடங்கிய நேரம். ஜார்ஜ் பிளக்கனோவ் அப்போது தலைமைச் சிந்தனாவாதியாகத் திகழ்ந்தார்.
டார்வின், ரொயெல்ஷஸ் சிந்தனைகளைத் தொடர்ந்து கற்றுவந்த கொலந்தாய், 12,000 ஆண்களும், பெண்களும் பணியாற்றிக் கொண்டிருந்த க்ரெங்கோல்ம் துணித் தயாரிப்புத் தொழிற்சாலையைக் காணச் சென்றார். “அது என் விதியைத் தீர்மானித்தது. உழைக்கும் மக்கள் இவ்வளவு தூரம் அடிமைப்பட்டு வாழும்போது, என்னால் அமைதியான, மகிழ்ச்சிகரமான வாழ்வு வாழ முடியாது என முடிவு செய்தேன்… ”என்பது கொலந்தாயின் பதிவு. இயக்கத்தில் சேருவது என்று அவர் எடுத்த முடிவு கணவருடன் முரண்பாடுகளை ஏற்படுத்தியது. தனக்கு எதிராக கொலந்தாய் எடுத்த தனிப்பட்ட முடிவு அது என கணவர் கருதினார். அப்போது கணவரையும், குழந்தையையும் விட்டு விட்டு ஜூரிச் நகருக்குப் பயணமாகிறார் கொலந்தாய்.
பேராசிரியர் ஹென்ரிக் ஹெர்க்னெர் அவர்களிடம் அரசியல் பொருளாதாரம் படிக்கிறார் கொலந்தாய். உழைக்கும் வர்க்கப் புரட்சிகர நோக்கங்களுக்கான ஓர்மை மிக்க வாழ்க்கை தொடங்கியது. 1890-களின் இறுதியில், ஜார் ஆட்சி பின்லாந்து நாட்டின் சுதந்திரத்தையும், ஓரளவுக்கு அங்கிருந்த விடுதலையையும் அழிக்க முற்பட்டது. பின்லாந்து தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார். அரசியல் பொருளாதாரம் சார்ந்து அறிவியல் பூர்வமாக அவர் மேற்கொண்ட முதல் பணி பின்லாந்து குறித்த முழுமையான ஆய்வாக அமைந்தது. தொழிற்சாலைகளுக்கும், பின்லாந்து உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கை மற்றும் பணிச்சூழல் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள உறவு குறித்த ஆய்வு அது.
இதன்பிறகு கொலந்தாய் திரும்பிப்பார்க்கவே இல்லை எனலாம். பெற்றோர் இறந்து விட்டனர். இவரும், கணவரும் ஏற்கெனவே நீண்டகாலமாகப் பிரிந்தே வாழ்ந்தனர். மகன் மட்டும் இவரின் பராமரிப்பில் இருந்திருக்கிறான். ரஷ்யப் புரட்சிகர இயக்கம், உலகம் முழுவதிலும் இருந்த உழைக்கும் வர்க்க இயக்கம் ஆகியவற்றிற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் இவர். காதல், திருமணம், குடும்பம் இவையெல்லாம் இரண்டாம் பட்சமாக மாறின. கணவர் மீது அன்பு இருந்தாலும், அந்த அன்பு தன்னுள் ஏதோ ஒர் எல்லையைக் கடந்ததும் பெண் என்ற தன்மையில் அது தியாகத்தைக் கோரியதால் மீண்டும் தன்னுள் கலக உணர்வு திமிறிக் கொண்டு எழுந்தது என உனர்கிறார். தானே தேர்ந்தெடுத்த ஆணிடமிருந்து விலக வேண்டி வந்தது. அப்படி விலகா விட்டால் தனது தன்னிலைத்துவத்தை இழக்க வேண்டிவரும் என இவருக்குப் பட்டிருக்கிறது.
தன்னுடன் நெருக்கமானவர்களாக இருந்த எந்த ஆண்மகனும் தனது உலகப் பார்வை, விருப்பங்கள், முயற்சிகள் ஆகியவற்றுக்கு வழிகாட்டுகிறவராக இருக்கவில்லை. மாறாக, “நான்தான் அவர்களது வழிகாட்டியாக இருந்தேன். எனது வாழ்க்கைக்கண்ணோட்டம், அரசியல் ஆகியன வாழ்வில் இருந்து பெற்றவை; இடையறாமல் நூல்களைப் பயின்றதனால் பெற்றவை“ என்று எழுதுகிறார் கொலந்தாய். வெறும் ஏட்டுப்படிப்போ அல்லது வாழ்க்கை அனுபவமோ மட்டும் நமக்கு வழிகாட்டுவதில்லை. பட்டறிவும் படிப்பறிவும் இணைகோடுகளாக இருந்தால் மட்டுமே வாழ்க்கைக் கண்ணோட்டமும், அரசியலும், கொள்கைப்பிடிப்பும் சித்திக்கும்.
1911-இல் பாரீசில் குடும்பத்தலைவிகள் போராட்டம், 1912-இல் பெல்ஜியத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் போராட்டம், 1914-இல் உலகப்பெரும் போருக்கு எதிரான போராட்டம் என தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் களங்களில் நேரடியாகப் பங்கேற்றார் கொலந்தாய். 1907-ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் உழைக்கும் பெண்கள் சங்கம் ஒன்றைத் தொடங்கியதில் முதன்மைப் பங்காற்றினார் இவர். அப்போதைய ஜார் அரசவைக்கு எதிராக ‘ஆயுதம் ஏந்துமாறு’ இவர் எழுதிய கட்டுரையொன்றில் குறிப்பிட்டதையடுத்து, இவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. பிடிபட்டால் பல்லாண்டு கால சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டிருக்கும். எனவே இவர் தலைமறைவாகச் சென்றார். இவருடைய மகன் நண்பர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டிருந்தான். கொலந்தாயின் வீடு விற்கப்பட்டு, ’சட்டத்திற்குப் புறம்பான’வராக அறிவிக்கப்பட்டார். 1908, டிசம்பர் முதல் இவரின் புதிய அரசியல் புகலிட வாழ்க்கை தொடங்கியது. 1917-இல் ஜாரின் ஆட்சி கவிழ்க்கப்படும் வரை அரசியல் அகதியாக ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் வசித்து வந்தார். ஜெர்மனிக்குப் போனதுமே ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியில் உறுப்பினரானார். கார்ல் லீஃப்னெக், ரோஸா லக்ஸம்பர்க், கார்ல் காவுட்ஸ்கி உள்ளிட்ட பல முக்கியமானவர்கள் அங்கு அலெக்சாண்டிராவின் தோழர்களாயிருந்தனர். இவர்கள் தவிர, ரஷியாவில் பெண் தொழிலாளர்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பதில் கிளாரா ஜெட்கின் கொலந்தாயின் செயல்பாடுகளில் பெருமளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தார்.
படிப்பதில் போலவே, எழுத்திலும் மிகத்தீவிர நாட்டம் கொண்டிருந்தார் கொலந்தாய். ’புதுமைப்பெண்’ என்பது இரு பகுதிகளில் எழுதப்பட்ட ஒரு நீண்ட கட்டுரை. ’ஆகச்சிறந்த காதல்’ ஒரு குறுநாவல். ’தாய்மையும் சமூகமும்’ என்பது களத்தில் இவர் நேரடி ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்து எழுதப்பட்ட முதல் ஆய்வுநூல். போருக்கு எதிரான இயக்கத்தின் பிரசுரமாக இவர் எழுதிய ‘போரால் யார் லாபம் அடைகிறார்கள்?’ என்ற சிறுநூல் மிகவும் பரபரப்பாக விற்பனையானது. ’சிறகுகள் முளைத்த காதல்’ ஒரு கட்டுரை. ‘காதல் தடங்கள்’ என்ற தலைப்பில் மூன்று குறுநாவல்களை எழுதினார். சமூக பொருளாதார ஆய்வு நூலான ‘புதிய ஒழுக்க அறமும், உழைக்கும் வர்க்கமும்’, மற்றும் ‘அரசியல் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் நிலைமை’ என்ற மற்றோர் ஆய்வுநூல், ’கம்யூனிசமும் குடும்பமும்’, ‘வர்க்கப்போராட்டமும் பாலியல் உறவுகளும்’ ஆகியவை உள்பட ஏராளமான கட்டுரைகள். இவையெல்லாம் அவர் எழுதியவை.
கொலந்தாயுடன் ஒரு மானசீக உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளரும், ஆய்வாளரும், அரங்கவியலாளருமான பேராசிரியர் அ.மங்கை. கொலந்தாய் வாழ்ந்த கண்டத்தை-ஐக்கிய சோவியத் சோஷலிஸ்ட் குடியரசைக் கனவு கண்டவர்களில் ஒருவராக இந்த உரையாடலைத் தான் நிகழ்த்த விரும்புவதாக அவர் தொடங்குவது கவனத்திற்குரியது. “நூறாண்டுகளுக்கு முன்பு கொலந்தாய் எழுப்பிய கேள்விகள் சோவியத் புரட்சியை மேலும் புரட்சிகரமாக்கின. திருமணம், பாலியல் உறவு, பாலியல் சாராத நெருக்கம், கம்யூனிஸ அறம் சார்ந்த தனி வாழ்வு, அதனடியொற்றி எழுந்த புதுமைப்பெண் ஆகியவை தொடர்பாக கொலந்தாய் நடைமுறைப்படுத்திய சட்ட, நிர்வாக அமைப்புகள் இன்றும் நுணுகி ஆராயத்தக்கவை. திருமணம் என்ற பந்தம், அதனைத் தூக்கிப்பிடிக்கும் மத நிறுவனங்கள், சடங்கா சாரங்கள், ஆண் ஆதிக்க மனோபாவம், பெண்ணடிமை பேணுதல் ஆகியவற்றை கொலந்தாய் அடியோடு மறுத்தார். குறிப்பாக, மதாலயங்களின் பிடியிலிருந்து திருமணத்தை மீட்டு, மதம் சாராத சமூக உறவாக மாற்றினார். அதனால், மத நிறுவனங்களின் எதிர்ப்புக்கும் ஆளானார். மண முறிவை சட்டபூர்வமாக ஆக்கியதில் பெரும்பங்கு ஆற்றினார்…” என்று கொலந்தாய் சோவியத் சமூக அமைப்பினுள் நிகழ்த்திய பல புரட்சிகரமான மாற்றங்களை மங்கை தொகுத்துத் தந்திருக்கிறார்.
கருக்கலைப்பை சட்டபூர்வமாக ஆக்கியவர் கொலந்தாய். இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் செய்த இந்தத் துணிகரமான முன்னெடுப்பை இன்றளவும்கூட பல்வேறு நாடுகளின் அரசுகளால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அமெரிக்க, ஐரோப்பிய உலகில் மிகப்பெரிய விவாதப்பொருளாக இச்சிக்கல் இன்றும் நீடிக்கிறது. லெனின் தலைமையில் அமைந்த புரட்சி அரசில் சமூக நலத்துறையின் அமைச்சராகப் பதவி வகித்தவர் கொலந்தாய். அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்ததற்குக் காரணம், இவர் மேற்கொண்ட பல முற்போக்கான, தீவிர சமூக நல, பெண்கள் நல நடவடிக்கைகளே. நார்வே நாட்டின் ரஷ்யத் தூதராகப் பிற்பாடு பணியாற்றினார். இந்தப்பொறுப்பை வகித்த முதல் பெண் வரலாற்றில் இவர்தான்.
“வரலாற்றின் திருப்புமுனையாக இருந்த யுகத்தைச் சேர்ந்தவள் நான்…” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் கொலந்தாய். ஆனால், ஆணாதிக்கம் மிக்க அன்றைய சமூகம் அவரை அவ்வளவு எளிதில் முன்னோக்கிப் போக அனுமதிக்கவில்லை. இன்றைக்குமே அதுதான் நிலைமை என்னும் போது, கொலந்தாயின் காலம் வேறு என்ன செய்திருக்கும்? “எமது தன்முனைப்புக்கும், இன்னொருவர் மீது கொண்ட உணர்வுப் பிடிப்புக்கும் இடையே தொடர்ந்து மல்லுக்கட்டியதால் எமது வலிமைகள் சிதறுண்டு போயின…” என்கிறார் அலெக்சாண்டிரா கொலந்தாய். பெண்களின் வலிமைகளைச் சிதறடிப்பதில் குடும்பம், காதல், பாலுறவுகள் எத்தகைய முதன்மைப்பங்கு வகிக்கின்றன என்பதற்கு, கொலந்தாயின் வரலாறு ஒரு சாட்சியமாயிருக்கும்!
(தமிழ் இந்து பொங்கல் மலரில்(2022) வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம்)