புதுமைப்பித்தன் கதைகள் – மக்கள் பதிப்பு – எளிய மக்களைச் சென்றடையும் அறிவுலகம்…
– செ. சண்முகசுந்தரம்
இந்த வருடத்தில் பதிப்புத்துறையின் பேசுபொருளே “புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு” விலை நிலவரம்தான். எப்படி 640 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட, கெட்டி அட்டையுடன் கூடிய ஒரு புத்தகத்தை விலை ரூ 100 மட்டும் என விற்பனை செய்யமுடியும்? தற்போதைய விலை நிலவரப்படி பதிப்பகத்தார் இதற்கு நிர்ணயித்திருக்க வேண்டிய விலை ரூ. 600. ஏனென்றால் இப்போது ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் என்றே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வேறு எப்படி இது சாத்தியமாகியிருக்க முடியும்?. ஒரு புத்தகத்தின் அடக்கவிலை ரூபாய் 150 க்கும் மிகாமல் இருக்கும். மீதத்தொகை ரூபாய் 50 என்பது பதிப்பகத்தாருக்குக் கிடைத்த நன்கொடை மூலம் ஈடு செய்யப்பட்டது எனவும் அறியமுடிகிறது. அப்படியானால் இப்புத்தக உருவாக்கப் பணியில் ஈடுபட்டு உழைத்த பணியாளர்களுக்கு ஊதியம் எப்படிக் கொடுத்திருக்க முடியும்? இதை சிரமேற்கொண்டு செய்த பதிப்பகத்தின் உரிமையாளர்கள் எப்படி தொடர்ந்து பதிப்பகத்தை நடத்திட முடியும்? அவர்களுக்கு தொடர்ச்சியாக நன்கொடை வருவது சாத்தியமா? இப்படிப் பல கேள்விகள் எல்லோருக்கும் எழுவது போலவே எனக்கும் தோன்றியது.
புத்தகப் பதிப்பிக்கும் பணியைத் தொடர்ச்சியாக நடத்திட ஒரு பதிப்பகம் தொழில் முறையிலும் வெற்றியை ஈட்டவேண்டும். இல்லையென்றால் சில நூல்களை மட்டும் மலிவு விலையில் பதிப்பித்துவிட்டு, அப்பதிப்பகம் காணாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. முன்பெல்லாம் சோவியத் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மார்க்சிய நூல்கள் வேன்கள் மூலமாக என்.சி.பி.எச் நிறுவனம் ஊர் ஊராக விற்பனை செய்யும். அப்போது சோவியத் ஒன்றியம் கம்யூனிசக் கருத்துகளைக் கொண்டு சேர்க்க பெருமளவுக்கு உதவி செய்தது. அதனால் மலிவு விலையில் நூல்கள் தயாரித்து விற்பனை செய்ததும் சாத்தியமாகியிருந்தது. ஆனால் அதுபோன்ற மிகப்பெரும் பணியை, மிகச்சிறந்த பணியை இப்போது சாத்தியமாக்கியிருக்கிறார்கள் சீர் வாசகர் வட்டத்தினர்.
தமிழ் புத்தகப்பதிப்புத் துறையை கார்ப்போரேட் மட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் வேறு சில பதிப்பகங்களும் உண்டு. கொள்ளை லாபம் மட்டுமே அவர்களுடைய குறிக்கோள். இது போன்ற சூழலில் சீர் வாசகர் வட்டத்தினர் இதுபோன்ற பணியைத் தொடர்ந்து செய்திடவேண்டும். அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் நிறைய நன்கொடைகள் கொடுத்து உதவவேண்டும். மேலும் சில புகழ்மிக்க நூல்களை இதுபோன்ற மக்கள் பதிப்புகளில் அவர்கள் கொண்டுவரவேண்டும். சீர் வாசகர் வட்டத்தினர் மட்டுமே இதைச் செய்யவேண்டுமென்பதில்லை. மனசு உள்ள பதிப்பகங்கள் செய்ய முயற்சிக்கலாம். மாக்சிம் கார்க்கியின் தாய், டால்ஸ்டாயின் போரும் அமைதியும், உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞர்களின் முக்கிய நூல்கள் இப்படி கொண்டுவரலாம். எளியமக்களின் மத்தியில் அறிவுலகம் சென்றடைய இதுபோன்ற முயற்சிகள் பயன் கொடுக்கும். அதோடு பதிப்பகம் தொடர்ச்சியாக நடைபெற ஓரளவு பணமும் அவர்கள் சம்பாதித்துக் கொள்ளவேண்டும். சீர் வாசகர் வட்டத்தினர் தொடர்ந்து சீரோடும் சிறப்போடும் வெற்றிநடை போட வாழ்த்துகள்.