காதலின் பெருவலி யாவுள
ஆர். பாலகிருஷ்ணன்
நிலவினை உடைத்து நட்சத்திரங்களாக்குங்கள்
அதுவே காதலர்க்கு உகந்தது
– சேக்ஸ்பியர்
‘’நான் அவனது தீரத்தில் மையல் கொண்டேன் அவனோ எனது பெண்மையின் மீது’’ என்று டெஸ்டிமோனோ தான் ஒதெல்லோ எனும் வெனிஸ் நகர ராணுவத் தளபதி ஒருவனை மணந்து கொண்டது குறித்து கூறுகின்றாள். வெனிஸ் நகரத்தை அதிகாரம் செலுத்திய இராணுவத் தளபதியாகிய ஒதெல்லோவும், அவ்விடத்தை சார்ந்த டெஸ்டிமோனோவும் காதலித்து திருமணம் புரிந்து கொண்டவர்கள். இவனுக்காக டெஸ்டிமோனோ தன்னுடைய வீட்டைத் துறந்து வெளியேறுகிறாள். இது மத்திய கால கட்டத்தில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிக்குரிய ஒன்றாக ஷேக்ஸ்பியரின் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஷேக்ஸ்பியர் மொத்தமாக எழுதிய நூல்கள் துன்பியல், இன்பியல், துன்ப இன்பியல் என மூவகைப்பட்டவை. அவற்றுள் சிறந்த துன்பியல் நாடகங்களுள் ஒன்று “ஒதெல்லோ தி மூர் ஆப் வெனிஸ்” எனும் ஒதெல்லோ, டெஸ்டிமோனோ மண வாழ்க்கை மற்றும் காதலினைச் சித்தரிக்கும் ஒரு படைப்பு.
ஒத்தெல்லோ (Othello) (ஒத்தெல்லோவின் சோகம்) என்பது வில்லியம் ஷேக்ஸ்பியரால் 1603 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் ஒரு துன்பியல் நாடகம். இது 1565 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பொக்காக்சியோவின் சீடனான சிந்தியோவால் எழுதப்பட்ட “ஒரு மூரிஷ் கேப்டன்” என்ற கதையின் அடிப்படையிலானது. இந்தக் கதையானது, அதன் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றிச் சுழல்கிறது: ஒதெல்லோ, வெனிஸ் இராணுவத்தில் ஒரு மூரிஷ் தளபதி மற்றும் அவரது துரோகத்தனமான கொடூரமான, ஒரு கீழ் நிலை அதிகாரி இயாகோ ஆகியோர் அந்த இரண்டு கதாபாத்திரங்கள் ஆவர். இனவெறி, காதல், பொறாமை, துரோகம், பழிவாங்குதல் மற்றும் மனந்திரும்புதல் ஆகியவற்றின் மாறுபட்ட மற்றும் நிலைத்து நிற்கும் கருப்பொருள்களால், ஒதெல்லோ இன்னும் கொண்டாடப்படும், இன்றைக் காலகட்டத்திற்கும் பொருந்தும் ஒரு நாடகம்.
ஒதெல்லோ கனவினுள் கூட அஞ்சும் அபாயங்கள் நிறைந்த நாடுகளில் பயணம் செய்து அவற்றைத் தனது வாளின் வலிமையினால் அடிபணிய வைத்தவன். போர்த் தந்திரங்களில் நுட்பமுடையவன். போரில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதில் கைதேர்ந்தவன். எனினும் அவனது காதலும், இல்வாழ்க்கையும் துயர் நிறைந்ததாக தனது அறியாமையின் பலனாகத் தானே அழிந்து போனவன். தனது காதல் மனைவியைக் ‘கள்ளக் காதல்’ ஐயங்களை தன் மனதில் நிரப்பிக் கழுத்தை நெறித்துக் கொல்லும் கொலைகாரன்.
ஒதெல்லொ டெஸ்டிமோனோவைக் கொல்ல நினைக்கும் இறுதிக் காட்சியில் அவளது குழந்தை போன்ற முகத்தினைக் காணச் சகியாதவனாகின்றான். நான் உன்னை முத்தமிடுகின்றேன், உன்னைக் கொல்லும் முன்பு, என்று உறங்கும் அவளது நெற்றியில் முத்தமிடுகின்றான்.
கொலையுண்ணத் தயாராக ஆனால் அது குறித்து அறியாமல் உறங்கும் உயிரை அழிக்கும் தருவாயில் அவள் முகத்தைக் காண வெட்கி அவளது முகத்தின் மேல் தலையணை ஒன்றை அழுத்தி, பின் அவளது சுவாச இயக்கத்தினை ஒடுக்கி அவளைக் கொல்கிறான். அவளைக் கொன்ற பின் தான் வாழ விரும்பாமல் தனது குறுவாளால் தன்னைக் குத்திக் கிழித்துக் கொள்கிறான். அத்தருணம் இயாகோவின் மனைவி நடந்த அனைத்தும் தன் கணவனின் சதி, டெஸ்டிமோனோவுக்கும் ராணுவ அதிகாரி மைக்கேல் காசியோவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று கூற ஓடி வருகிறாள்… ஆனால் அதற்குள் அனைத்தும் முடிந்து விடுகின்றன.
நிர்மூடன் அறியாமையினால் அழிவைத் தேடியவன். வாழ்வின் பொக்கிஷங்களைத் துய்த்து உணர மறுத்த பாவி. முட்டாள், மடையன் என்று எப்படி வேண்டுமாயினும் அவனை ஏசலாம். இயாகோ ஒதெல்லோவை ஏசும் வார்த்தைகளை இக்கட்டுரையில் பதிவு செய்தால் இனவெறிக்கெதிரானவர்கள் பேசும் வசையினை நாம் கூற வேண்டியிருக்கும் என்பதால் அது வேண்டாம்.
ஒதெல்லோ ஒரு கருப்பினப் படைத் தளபதி. போர்த்தந்திரங்கள் கற்றவன். சிறந்த ஒரு அதிகாரி. அவனது மனைவி டெஸ்டிமோனோ இவனிடத்தில் பேரன்பு கொண்டவள். இவனை மணமுடிக்கத் தன் தந்தையை விட்டு விலகுகிறாள். அவளது தந்தை ‘பிரபாண்ஷியோ’ இவளது இச்செயலை நினைத்துக் கலங்குகிறான். ஒரு வெள்ளை இனத்துப் பெண், ஒரு கருப்பினத்தானை ஏகிச் செல்வது இயல்புக்கு விரோதமானது என்று குமுறுகின்றான். எனவே ஷேக்ஸ்பியரின் நவீன விமர்சகர்கள் இக்நாடகத்தில் ‘இனவாதம்’ மறை பொருளாக உள்ளது என்று குறிப்பிடுகின்றனர். டெஸ்டிமோனோவிற்கு ஒரு சகோதரன் உள்ளான். இனி அவனது எதிர்காலம் எவ்வாறு நிலைபெறும் என்று பிராபாண்ஷியோ புலம்புகின்றான். ஆகவே இது அன்றைய நவீன மத்திய காலக்கட்டத்திற்கு அதனுடய கலாச்சாரத்திற்கு எதிரான செய்கை. ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் புரிதல் இயல்பற்றது.
”அவள் என்னை விட்டு விலகி வந்தது போல் உன்னை விட்டும் விலகிச் செல்வாள்” என்று அவர் ஒதெல்லோவிற்கு எச்சரிக்கை விடுக்கிறார். மேலும் ஒதெல்லோ ஒரு இஸ்லாமியன் என்பது இன்னும் சிக்கலை அதிகரிக்கின்ற ஒரு செயல். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பெரும்பாலும் யதார்த்தங்கள் மற்றும் வரலாற்று ஆதாரங்களைக் கொண்டவை. வெறும் புனைவுகளை அவர் முந்தைய கால கட்டத்து ‘அறவியல்’ இலக்கியங்களின் வழி உருவாக்கியவர் அல்ல. ஷேக்ஸ்பியரிடத்தில் ‘செனக்காவின்’ துன்பியல் சாரம் உள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுவதை நாம் காணலாம். முத்தாய்ப்பு வைத்தாற் போல், டெஸ்டிமோனோவின் தந்தையான பிரபாண்ஷியோவின் நண்பர்தான் ஒதெல்லோ. பொதுவாக நண்பர்கள் பற்பல வயதுகளிலும் இருக்கக் கூடுமென்றாலும் சற்றேறத்தாழ ஒரு சில ஆண்டுகளே அவரைக் காட்டிலும் இளையவர் ஒதெல்லோ என்று விமர்சகர்கள் கணிக்கின்றனர். இது ஒன்றாவது பெரும் அதிர்ச்சி, தனது தந்தையையொத்த கிட்டத்தட்ட நாற்பத்தைக் கடந்து விட்ட ஒரு மனிதனைப் பதின் பருவப் பெண்ணொருத்தி காதல் கொண்டு திருமணம் புரிவது என்பது அதிர்ச்சி மற்றும் அதிசயம். நம்மூரில் பெண்கள் முப்பத்தைந்து வயதுக்கு மேல் அதிக வயதுடைய மணமகன்களை நிராகரிக்கும் போக்கு அதிகமுள்ளது. இருபதில் உள்ள பெண்கள் முப்பது வயது ‘முதியவர்களை’ திருமணம் செய்து கொள்வதை ‘ஒரு வெட்கக் கேடான’ செய்கையாக ஊடகங்களில் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். ஆனால் நமது நாட்டில் தசரதன் (இராமாயணம்) போன்றோர் இளம் மனைவியரைத் திருமணம் செய்து கொண்டிருப்பதான பதிவுகள் உள்ளன. அது ஒரு சிக்கலாகவும் அன்று உணரப்படவில்லை – ஆனால் ஒதெல்லோ, டெஸ்டிமோனோ காதல் என்பது யேட்ஸின் காதலைப் போன்றது, தஸ்தயோவஸ்கி, அன்னா காதலைப் போன்றது. ஒரு முதியவரும் இளம் பெண்ணும் காதல் வயப்பட்டுள்ளதைப் புனைந்துள்ளது – லொலிதாவைப் போலப் பதிமூன்று வயதுப் பெண்ணை நாற்பது வயதான ஆணிடம் காதல் கொண்டதைப் போன்ற ஒன்று. ஆனால் லொலிதா மீதான மோகம் பீடொபீலியா என்றே நபகோவும் ஒப்புக்கொள்கிறார். ஒதெல்லோவின் வயது சற்று அதிகமானது என்பதை ‘அவன் ஒரு கிழட்டு மலையாடு; ஒரு இளம் கன்றினைக் காமுகித்தது போல’ என இயாகோ ஓரிடத்தில் குறிப்பிடுகிறான். இது ஒதெல்லோவின் வயதுக்குச் சான்று. இயாகோ இதனால் ஒதெல்லோ, டெஸ்டிமோனோ காதலைப் பிரிக்க, குடும்பத்தை சீர்குலைக்க எண்ணுகின்றான். ஆனால் இதற்கு எந்த உந்துதலும் (Motive) இல்லை என்றே கூறுகிறான். “I am a motive less hunter” அதாவது ஷேக்ஸ்பியரின் விமர்சகர்களான ஏ.சி பிராட்லி போன்றோர் ஒதெல்லோ ஒரு நிர்மூடன், இயாகோவிற்கு ஏதொரு தூண்டுதலும் இல்லாத ஒரு சதிகாரன் என்றே இந்த நியாயத்தை நிறுவ எண்ணுகின்றனர். உண்மை என்னவெனில் இவர்கள் அனைவரும் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க நினைக்கின்றனர்.
இளம் பெண்கள் முதிர்ந்த ஆணிடம் காம வயப்படுவதை நாம் ஈடிபஸ் சிக்கலாக உணரலாம். அதாவது ஈடிபஸ் சிக்கலின் மறுபக்கம் என்னவெனில் இது ஒரு எலெக்ட்ரொ காம்ப்ளெக்ஸ் தந்தையிடத்தில் மகளுக்கு அதிகம் உள்ள ஈர்ப்பு. ஆனால் முழுக்க முழுக்க இந்த ஈர்ப்பு மட்டுமே அவள் ஒதெல்லோவிடம் இருந்து வந்ததாக நாம் உறுதியாகக் கூற இயலாது. அவளது கதை கேட்கும் ஆர்வம் ஒதெல்லோவை அவனது வாழ்வனைத்தையும் ஒரு சாகசமிகுந்த தளகர்த்தனாகவே அவளுக்குச் சித்தரிக்கிறது. இது போதும் அவளுக்கு, தனக்கு காதலனாக இருப்பதற்கு தவிரவும் வேறு என்ன தகுதி வேண்டும் என்ற தர்க்கத்தில் சிக்கிக் கொள்ளும் அவள் மனம் அவனை நாடிச் சென்று விடுகிறது. இது எல்லா நிறங்குன்றியவர்க்கும் கிடைக்கக் கூடியதல்ல. இது அதனினும் அழகான ஒரு காதலாக மெய்ப்பித்த ஒன்றுதான். நாகரீக சமுதாயம் இந்த விஷயத்தை எப்படி அணுகி இருக்க வேண்டும்? விருப்பமுள்ள இருவர் மணமுடித்துக் கொள்கிறார்கள் என்று பார்த்திருக்க வேண்டும். இத்தகு திருமணங்கள் இன்றைய காலகட்டத்திலேயே ஏற்றுக் கொள்ளவியலாத நிலையில் அவ்வாறு பெண்களின் மனோபாவங்களே புராணிக மனோபாவங்களாக இன்றும் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் (30 வயது நிரம்பியவன் ஒரு கிழவனானவன் என்று பெண்கள் நம்புவது) இந்நிகழ்வை யாராலும் ஒப்புக் கொள்ள இயலவில்லை. மோகமுள் நாவலில் பாபு எனும் பிராமணன், சங்கீதத்தின் வழி உன்னதமாயிருந்த ஒரு இளைஞன் — பக்கத்து வீட்டு முதியவனின் இளம் மனைவியுடன் கள்ள உறவு கொள்கிறான். இது தவறு என்று அவனது மனசாட்சிக்குப் புரிவதே இல்லை; என்பதோடு வயது குறித்த தர்க்கங்கள் மூலம் அவனது புணர்வை நியாயப்படுத்தவும் செய்கிறான்.
இப்போது நாம் கேள்வியையும் கேட்போம் – இயாகோவின் வில்லத்தனத்திற்கு எந்த ‘மோடிவ்’வும் கிடையாதா? இருக்கிறது. கறுப்பினத்தான், வேற்று மதத்தினன். முதியவன். எவ்வாறு எங்களது பெண்ணைக் காதல் எனும் உணர்வு கொண்டு கவர்ந்து செல்ல இயலும்? எனவே அவனை அவர்கள் பல்வேறு தூற்றல்களுக்கு ஆட்படுத்தி அவனது முட்டாள் தனத்தை அம்பலமாக்கி அவன் விரும்பிய பெண் எங்கள் குலத்தினள் ஆனாலும் அவர்களை நாம் அழிப்போம். இவ்வாறு எங்கள் இனவாதத்தை நாங்கள் கட்டமைக்கிறோம் என்று நிறுவுகின்றனர். இரண்டு விதமான இனவாதம் இங்கே உள்ளது. வெண்தோலுடைய வர்க்கம் என்பது ஒன்று, இன்னொன்று இளமை எனும் இனவாதம். இளமை என்பது வாழப் பிறந்தது. அதிகாரத்தை ருசிக்கும் நிலையிலுள்ளது. முதுமை என்பது மரணத்தை நோக்கிச் செல்ல வேண்டியது. பெண்ணுணர்வுகளை அழித்துக் கொண்டு பற்றற்று நிற்க வேண்டியது. விமர்சகர்கள் யாரும் கேட்காத ஒரு பதிலற்ற கேள்வி ஒன்று உள்ளது. ஒதெல்லோ தனது வழ்க்கையின் முழு சுற்றினைக் கண்டவன். அவனுக்கு தன் முதிர்ந்த நிலையினும் திருமணம் என்பது ஏன் லபிக்கவில்லை?. மேலும் ஒரு சிறந்த ராணுவ அதிகாரியான ஒதெல்லோவுக்கு தன்னைச் சுற்றிச் சுழலும் சதி அறியாமல் போனதென்ன? இதனை ஷேக்ஸ்பியரின் விமர்சகர்கள் க்ரெடூலிட்டி (credulity) என்று குறிப்பிடுகின்றனர். அப்பாவி நிலை. ஆனால் இதற்கு மேல் அன்றைய விமர்சனம் ஆழமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையில் இது மேலாதிக்கத்தின் விளைவாக ஏற்பட்ட சேடிசம் (sadism). வெள்ளை இனவாதம்; ஃப்ராய்ட் இத்தகைய ஒதெல்லோவின் மனைவியின் கொலை பற்றிய கருத்தை, பொதுவாக ஒரு இடத்தில் குறிப்பிடுவார் — ஒன்று தான் எதனை நேசிக்கிறதோ அதனை அதுவே அழிக்கும் என்பார்.
ஷேக்ஸ்பியரின் விமர்சகர்கள் ஒதெல்லோவின் காதல் மற்றும் திருமணம் ஆகியன சரியற்றவை என்ற நிலையிலேயே இருந்து விளக்க முற்படுகின்றனர். ஒதெல்லோவிற்கும், டெஸ்டிமோனோவிற்கும் இடையிலான காதல் ஒரு நிறத் தாழ்மை கொண்ட முதியவன் ஒருவனுக்கும் இளம் பெண்ணிற்கும் இடையிலான காதல். எனவே அது நல்ல காதல் அல்ல என்பது அவர்கள் நிலை. ஆனால் காதல் ஒரு விசித்திரமான அனுபவம். அது எப்போதும் காதலர்கள் தங்களுக்குள் தேர்ந்தெடுத்துக் கொள்வதை அனுமதிப்பதில்லை. அதுதான் காதலர்களைத் தேர்வு செய்கின்றது. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் காதலர்களிடத்தில் உறுதி இருக்கின்றது. காதல் என்பது சுவர்க்கமாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பது அபத்தம் – அது பொறுப்புகளையும் வலிகளையும் சார்ந்த நபர்களிடம் சுமத்துகின்றது.
டெஸ்டிமோனோ ஏன் ஒதெல்லோவைத் தன் இணையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளது. பொதுவாக ஆண் ஒன்றைச் சார்ந்தே பெண் இயங்குதல் என்பது அனைத்துச் சமூகங்ககளில் இருக்கும் நியதி. பெண் ஆணின் ஒரு நிறைவு நிலையாகவே உள்ளதை லாகன், தாய்மை குறித்த விளக்கத்தின் போது கூறுகிறார். ஆகவே டெஸ்டிமோனோவின் ஆண் தேடல் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்று. அவள் ஒதெல்லோவைத் தேர்ந்தெடுப்பதற்குத் தனிப்பட்ட, அழகியல் சார் காரணங்களே இருக்க இயலும்.
ஒதெல்லோவின் காதலைக் ‘குருட்டுக் காதல்’ என்று வர்ணிக்கும் விமர்சகர்கள் இனவாதப் போக்கினை ஒப்புக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். உண்மையில் தனி மனித உணர்வுகளை எந்த நிபுணர், எழுத்தாளர் ஆகியோர் விளக்கிக் கூறவோ, முழுமையாகவோ உணர்ந்து கொள்ளவோ இயலாது. நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகள், ஆலோசனைகளாகவே இருக்க வேண்டும். அதிகாரச் செலுத்தங்களாக ஆகிவிடக்கூடாது. மத்தியதர வர்க்கத்திற்கென்று சில சிறுமையான நோக்கங்கள் உள்ளன. தங்களுடைய இல்லத்துப் பெண் எக்காலத்திலும் ஒரு தாழ்ச் சமூகத்தினன் ஒருவனுடன் மண உறவு எற்படுத்திக் கொள்ளலாகாது என்றளவில் உளவியல் நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் என்று ஒரு அறிவுவாதிகளின் குழுவை உருவாக்கி வைத்து அது தனது கலாசாரப் பாகுபாடுகளைப் பேணிக் கொள்கிறது. அவர்கள் ஒரு நல்ல ஆரோக்கியாமான சமூகத்தை உருவாக்க வழிகாட்டுகிறோம் என்ற போர்வையில் மத்தியதர வர்க்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உறுதுணையாக விளங்குவர். யாராவது ஒரு கல்லூரி மாணவி காதல் வயப்பட்டால், அது ஒரு தொழிலாளியாக இருந்துவிட்டால் உடனே இந்த அறிவுவாதிகளின் ‘’பெண்ணின் எதிர்காலம் சீரழிந்துவிடும்’’ என்ற மூளைப்பூச்சு ஆரம்பித்துவிடும். இது ஒரு தொழிலாளி அல்லது கடைநிலையாளனின் உணர்வுகளின் மீது தொடுக்கும் கடுமையான தாக்குதல். இத்தகைய மத்தியதர வர்க்கம் திருமண நிகழ்வினை ‘ஒரு பெரும் பேரமாகவே’ நடத்தி முடிக்கின்றது. ஒரு திருமணத்திற்கான ஒழுங்குகளாகிய சாதி, குலம், சம்பிரதாயங்கள், ஜாதகம், ஆண் பெண் கல்வி, வயது போன்றவை அனைத்துமே எவ்வாறு இத்தகு குடும்பங்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கான உபாயங்களை எற்படுத்திக் கொள்கின்றன என்பதே; ஏனெனில் திருமணங்கள் உருவாக்கப்படுகின்றன. இது அவ்வக் குடும்பப் பெண்களிடமும் ஒரு சூழ்நிலை மனோவியலாக உருவாக்கப்பட்டு விடுவதில் அத்தகைய பெண்களும் எவ்வாறு தம்முடல்கள் பேரங்களின் அடிப்படையில் அதிகாரமுடையோரால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று பெருமை கொள்கின்றனர். அதற்காகவே காத்திருக்கின்றனர். இவர்களிடத்தில் காதல் பெரும்பாலும் தோன்றுவதில்லை ஏனெனில் அவ்வுணர்வு உடல் மாற்றுகளை மீறி ஆன்மாவில் ஊடுரும் ஒரு நிகழ்வு. இது ஒதெல்லோவிற்குக் கிடைத்தது. ஒரு வேளை முதலில் டெஸ்டிமோனோவிற்கு இது கிடைத்திருக்கலாம். அவளே தான் காதல் வயப்பட்டதை எப்போதும் தெரிவிக்கின்றாள்.
மத்திய கால கட்டங்களில் உருவான காதல் இன்ப நாட்டம் உடையதாக இருந்ததினால் இது கிட்டாத ஒன்றாக, அதுவே சிறந்த காதலாக உணரப்பட்டுள்ளது. ஒரு கவித்துவ அளவீட்டுடன் இன்ப நாட்டமுள்ள, கற்பனை சார்ந்த உணர்வான காதல் உடலுறவை உனக்கு முதலில் அளிப்பது இல்லை. எனினும் மனித உடலின் தன்மையானது உணர்வுகளை நீண்ட காலம் புதைத்து வைக்கவல்ல ஒரு கூடு அல்லது அது புலனின்பத்தைக் கட்டிக், காதல் வழிந்தோடுவதையும் தடுத்துவிட இயலாது. ஒரு வகையில் இத்தகு உடலுறவில் பெண்ணுடல் இயல்பான விளையாட்டில் ஈடுபடும் பொழுது கனிகள் மிகுந்த சோலையில் பழுத்தவற்றைச் சுவைப்பதற்கு அது ஒப்பாகும். ஆனால் வெற்றுப் பாலுறவின் வழி காதலை அடைவது பொருத்தமற்றது என்று உளவியலாளர்கள் கூறுகின்றனர். காதல் உள்பட எந்த உணர்வையும் விளக்கிச் சொல்வதற்கு உளவியலாளர்கள், எழுத்தாளர்கள் என்று யாருக்கும் இயலாத ஒன்று. காதல் நமது வாழ்க்கையில் கிட்டாத ஒன்றினைத் தேடும் உணர்வுகளில் ஒன்றாக இருக்கிறது என லாகன் கூறுகிறார். காதல் இதனால்தான் ஒரு தேடும் உணர்வாக உள்ளது என்று அவர் கருதுகிறார். தனது எல்லைகளுக்கு அப்பால் நிலைத்துள்ள இருப்பின் பேருவகையாகக் காணப்படும் ஆன்மாவின் பொருளாக, உடலினை மீறி நிகழ்வதாகக் காதல் உன்னதமென லாகன் கூறுகிறார். மனிதர்கள் தம் படைப்பில் உள்ள வெறும் இருத்தல்சார் கூறுகளிலிருந்து சாராம்சத்தை உள்ளடக்கிய தேடலைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர். உடல் தேவைகள், புலனுணர்வு என்ற அனிச்சைகளை மீறிக் கிடைக்கும் அனுபவங்களை மனிதர்கள் தேடலாகப் பாவித்து செயல்படுத்தி வருவர். விலங்கிற்கு தன்புலன் தேவைகளுக்கேற்ப அதன் செயல்களை வெளிப்படுத்திக் கொள்ளுதல் இயல்பான ஒன்று. அவைகள் புலன் வெளிகளுக்கு வெளியில் அனுபவங்களைத் தேடும் வல்லமையற்றவை. மனிதனிடம் இத்தகு அனுபவங்கள் இருப்பது அவனது இயல்பு. ஆகவே காதல் ஒரு உடல் சார்ந்த விளைவே அல்ல என்பதால் அதற்கு இரு இணையான வளமான உடல்கள் தேவையில்லை, அது ஒரு மேல்நோக்கிய அனுபவமாகப் பயிலும் நிலையில் இரு மனிதர்களை அவர்கள் பெரும்பாலும் ஆண், பெண் என்றளவில் ஈர்த்துக் கொள்கிறது. ஆனால் இதற்கான தூண்டல் நமது கலாச்சாரம், குடும்பம் மற்றும் இந்தியச் சமுகங்களில் சாதி, இனப்பண்பாடுகளிலிருந்து சற்று எதிர்மறையாகக் கிட்டுகிறது. குறிப்பாக குழந்தைமையில் வலியுறுத்தப்படுகின்ற கட்டுப்பாடுகள், அவர்களின் மீதான ஒழுக்கப் பேணல் என்ற நடவடிக்கைகளுக்கு எதிராகக் காதல் விளைவதாக லாகன் கூறுகிறார்.
இவ்வுணர்வு அளித்தல் எனும் நிலையில் எவ்வாறுள்ளதென லாகன் கருத்துப்படி விளக்க முற்பட்டால் காதல் தருவது என்பது பொருளாக அல்ல, பொறுமை, சகிப்புத்தன்மை, பரிவு, மன்னித்தல் என்ற மற்ற குணங்களுடன் முழுமையாக இருக்கும் நிலையில் காதல் வினைகள், எதிர்பார்ப்புகள் நோக்கி இயங்குவதே அல்ல.
குழந்தைகளின் ஆழ்மனதில் உள்ள ‘வேண்டியது’ என்ற ஒன்றை உணராத நிலையில் பெற்றோர் அவர்களுக்கு வாங்கித்தரும் சாக்கலெட், டெட்டி பியர் போன்றவை தற்காலிகமாகக் குழந்தையின் தேவையை நிறைவு செய்யும் பொருளேயன்றி முழுமையாக அதன் வேண்டுகோளை நிறைவேற்றுவதல்ல.
காதல் எதனையும் பெற்றுக் கொள்ள உருவாக்கப்பட்ட உணர்வல்ல எனும் போதே, திருமணத்திற்காகவும், உடலின்பத்திற்காகவும் உருவாக்கப்படுகின்ற காதல், தேவை சார் காதல்தான். அதில் முழுக்க காதலின் புனிதமென்பது கிடையாது. கல்லூரிகளில் நட்புடன் பழகும் ஆண், பெண்கள் காதல் வயப்படுவது போன்றவை இத்தரத்தில்தான் ஆகும். வயது வந்து விட்டது, திருமணம் உடலின்பத்திற்காகக் காதல் ஒன்றை மேற்கொண்டாக வேண்டும் என்ற நிலையில் அரும்பும் இக்காதலைத் தமிழ் சினிமாக்கள் உரத்துப் புகழ் பாடுகின்றன. காதல் அதிகாரத்தில் உள்ளது; யார் ஒருவர் பலகீனராக உள்ளாரோ அவரை விழுங்கிக் கொள்ளுதல் குறிப்பாக பலவீனமான அல்லது அத்தகு சூழலில் வளரும் பெண்கள் காதலை ஒரு ஆறுதலாகக் தேர்ந்தெடுப்பர். இதற்கும் குழந்தைகளை நிந்திப்பதற்கும் வேறுபாடில்லை. மெய்யான காதல் சுயம்புவான உணர்வை வசீகரித்து முளைக்கும் ஒன்று. எல்லாத் தியாகங்களுக்கும் அது தயாராகி விடும் என்பதால் கலாச்சாரத்தையும் அது தியாகம் செய்யும். இதுதான் காதலின் பெருவலி – இதைத்தான் சமூகம் ஏற்றுக் கொள்வதில் முரண்பட்டு நிற்கிறது. பரிவு, ஒருங்கிணைவு, மெய்யுணர்வு எனும் குணங்கள் காதலர்க்குள் நிரம்பி அவை பண்பாடு என்று சொல்லப்படுவதன் மீது தாக்குதல் நடத்தும். அதற்குச் சமூக அங்கீகாரம் தேவையற்ற ஒன்று. ஆகவே காதலில் பொறாமை கிடையாது. ஆனால் காதல் ஆட்டம் அன்று நிறுத்தப்படுகிறது. சமூக அங்கீகாரம் உள்ள ஒரு காதல், ஒரு விளையாட்டாகத்தான் அது உள்ளது. அதில் மெய்யான காதல் இல்லை.
எனவே வெற்று விளக்கங்களை மீறிக் காதல் நிகழும் போது அதில் ஒதெல்லோவின் புனிதம் மிகையாகாமல் உள்ளது.
Reference : ‘A discourse against unequal marriages ‘Janet C Stadrupolous
ஆர் பாலகிருஷ்ணன் : ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.
E MAIL: rdada2001@gmail.com rdada2001@gmail.com; mobile 9362949350