கொரோனா: சிறார் ஏதிலிகள்…!
-இரா.மோகன்ராஜன்
உலகம் இப்போது முற்றிலும் முடங்கியிருக்கிறது. தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது. சக மனிதனைக் கண்டு தொலைவில் விலகிச் செல்கிறது. முககவசங்கள் முகத்தின் உறுப்புகளில் ஒன்றாகத் தொடங்கியிருக்கின்றன. தொற்றச்சம் கைகளைக் கழுவி ஊற்றுவதில் ஆயுள்ரேகைத் தேயத் தொடங்கியிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை கடந்துக் கொண்டிருக்க 3 வது அலை குறித்த எச்சரிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன. மூன்றாவது அலையென்பது 20 வயது வரையிலானக் குழந்தைகளைத் தாக்கக்கூடுமென்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துக் கொண்டுள்ளது.
பெரியவர் உலகில் மட்டுமேயானத் துயரங்கள் இப்போது சிறார் உலகையும் தொற்றத் தொடங்கியுள்ளது. வீதி மறுக்கப்பட்டச் சிறார் உலகம் எத்தனைக் கொடுமையானது என்பதுப் பெரியவர் உலகு அறியாதது. ஏற்கனவே வீதியின் இடங்களைத் தொலைக்காட்சியும், கைப்பேசியும் பறித்தெடுத்துக் கொண்ட நிலையில் கொரோனாப் பெருந்தொற்று அவர்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்துக் கொண்டுள்ளது.
வீடுகளுக்குள் முடக்கப்பட்டச் சிறார்கள் சிறகொடிக்கப்பட்டப் பறவைக்குச் சமானம். எல்லையற்ற கால்கள் நான்குச் சுவற்றுக்குள் சிறைவைக்கப்படும் துயரம் பறக்க இயலாத வண்ணத்துப் பூச்சியொன்றின் வாதைகளுக்கு நிகரானது.
கைபேசிக்குள்ளும், தொலைக்காட்சிப் பெட்டியினுள்ளும் வீதியின் புழுதிபோல் வருவதில்லை. உடல் தொட்டு விளையாடி அகமகிழ்ந்து உரையாடுவதுப் போல அலைபேசி விளையாட்டுப் பொழுதுகள் இருப்பதில்லை. ஆட்டம் என்றால் கொண்டாட்டம். கொண்டாட்டம் என்பது உடலால் ஆனது. உடலைக் கொண்டாடுவது. உடலைக் கொண்டாடுவதும் விளையாட்டும் வேறு வேறல்ல. உடலைக் கொண்டாடும் வீதி விளையாட்டுக்களைப் போலன்றி உடலைச் சவம் போலக்கிடத்துகிறது கைப்பேசி ஆட்டங்கள்.
ஏற்கனவே நகரக் குழந்தைகளின் பெரும் பொழுதுப் புத்தகங்களால் கிழித்தெறியப்படும் நிலையில் அலைபேசி நேரலைக் கல்வி அவர்களது கண்களை முற்றாகப் பறித்தெடுத்துக் கொள்கிறது. இவ்வுலகின் அதிசயங்களைத் தரிசிக்க வேண்டியக் கண்கள் கைபேசிக்குள் உறைகின்றன. உயிர்ப்பற்ற கல்வியும், உயிர்ப்பற்ற கண்களும் குழந்தைகளுக்கு வாதை செய்யும் புண்களாகிவிடுகின்றன.
செவியற்றவனின் ஓசையற்றவுலகும், குரலற்றவனின் மவுனமும், கண்களற்றவனின் இருண்மையும் குழந்தைகளின் உலகை ஒரு தொற்றுப் போல பீடித்துக் கொண்டுள்ளன. சிறாரற்ற வீதி சவம் தூக்கிப்போன வீடுகளைப் போன்று வீழ்ந்துக் கிடக்கிறது. சிறார்களைச் சூடிய வீதி இறுதி ஊர்வலத்தில் நசுங்கிப்போன மலர்களைப் போன்று வாடி உதிர்ந்துக் கொண்டுள்ளது.
திருவிழா அற்ற கோயில்களைப் போன்று வீதிகள் தம் கொண்டாட்டங்களை இழந்து கொண்டுள்ளன. துயரமும், கண்ணீரும், சாவோலமும் எஞ்சும் தெருக்களில் குழந்தைகள் அச்சத்துடன் முடங்கிக் கிடக்கின்றனர். மரணங்களின் கண்ணீரும், துயரமும், உதிர்ந்து கிடக்கும் வீதியை அவர்கள் அச்சம் நிறைந்த விழிகளால் எதிர் கொள்கின்றனர்.
தொற்று அச்சம் குழந்தைகளை ஒரு பூதமென விழியுருட்டி மிரட்டிக் கொண்டிருக்கிறது. தொட்டு விளையாடும், தொற்றி விளையாடும் குழந்தைகளைத் தொற்று தொற்றுமெனச் சொல்வது தொற்றிலும் கொடுமை. கண்ணுக்குத் தெரியாதப் பூதங்களைக் கதைகளில் மட்டுமே கேட்டறிந்தக் குழந்தைகளைக் கண்ணுக்குத் தெரியாதத் தொற்றின் கதைகள் தொற்றிக் கொண்டுவிட்டன. அவற்றின் கொடும் நகங்கள் அவர்களது கனவுகளைக் கீறி குருதிகளைக் குடிக்கின்றன.
ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தின் சகல விதிகளையும் கொண்டிருக்கும் தொற்று அவர்களைத் தேடி பிடிக்கிறது. மரணத்திடம் தோற்கும் குழந்தைகளைக் கண்ணாமூச்சியும் அறியாதது.
மரண அச்சமற்ற குழந்தைகளை அச்சமற்ற மரணம் ஒரு குழந்தை கடத்துபவனின் இரக்கமற்ற மூர்க்கத்துடன் கடத்திச் செல்கிறது.
ஏற்கனவே வீதி மறுக்கப்பட்ட நகரத்துச் சிறார்களைப் பாடப் புத்தகங்களும், பள்ளிச் சுவர்களும், மாலை வகுப்புக்களும் திண்றதுப் போக இப்போதுப் பாலியல் சீண்டல்களும் அத்துமீறல்களும் பெருந்தொற்றென அவர்களை தீண்டி ருசிக்கின்றன. வீதி மறுக்கப்பட்டச் சிறார் தொடங்கி வீதியில் உறங்கும் சிறார் வரையிலும் பெருமனநோய்த் தொற்றிய மடாலயங்களும், விடுதிகளும், நட்சத்திரப் பள்ளிகளும் சூறையாடுகின்றன.
தமது வேலைகளுக்கு இடைஞ்சலென மழலைக் குறும்புகளைச் சகியாதப் பெற்றோர் இளம் கைகளில் அலைபேசியையும், அலைபாயும் கண்களுக்குத் தொலைக்காட்சியையும் திணித்துவிட்டுச் செல்கின்றனர்.
சோட்டாபீமும், சின்ச்சானும், கிருஷ்ஷீமே அவர்களது கற்பனைக்கும், விளையாட்டுகளுக்கும் துணையாகிப் போனத் துயரம் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வன்முறையாகும்.
பெருந்தொற்று ஓர் பேரிடரைப்போல, யுத்த முனையொன்றின் விண்ணேறிவரும் யுத்த விமானமொன்றைப் போல சிறார் உலகின் மீது தமது பெருந்தொற்று கொத்தனிகளை வீசுகின்றன. துயரம் கவிழ்ந்த பதுங்கு குழிகள் போலச் சிறார் உலகின் வீடுகளில் நிச்சயமின்மையும், இருண்மையும், இருத்தலின் வாதையும் சூழ்கின்றன. வீதி மறுக்கப்படும் துயரம் யுத்தத்தினும் பார்க்கக் கொடுமையானது.
நகரத்துச் சிறுவனுக்கு காணொலியில் வரும் நண்பனிடம் பேசுவதற்கு எதுவுமிருக்கவில்லை. ஆனால் கால்சட்டைப் பையில் வைத்திருக்கும் விலை உயர்ந்த மிட்டாய்களைப் போல அவை ரகசியம் காக்கின்றன.
பெருந்தொற்று காற்று இடைவெளியெங்கும் மிதந்தலைகின்றன. அவை இப்போது கிராமத்து புழுதிப் படிந்தச் சாலைகளைக் கடந்து செல்கின்றன. வீதிகளே வீடுகளான அக்கிராமத்துச் சிறார்களுக்குப் பழைய ஓய்ந்துப் போன வேப்பமரத்துப் பிரசாசுகளைப் போலன்றி, மினியும், மாடனும் போலன்றி காத்துக் கருப்பென அச்சுறுத்துகிறது பெருந்தொற்றின் கதைகள் இன்று.
குளக்கரையிலும், ஓடை ஈச்சப் புதர்களிலுமிருந்தப் பழைய பேய்கள் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டுவிட்ட நாளில் பெருந்தொற்றின் அச்சம் அவ்விடத்தில் பதுங்கிக் கொண்டிருக்கின்றன இன்று. எனினும் கிராமத்துச் சிறார்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தொற்றின் கொடும் கரங்களுக்கு அப்பால் அவர்கள் ஒளிந்து விளையாடுகிறார்கள்.
குளத்தில் குதித்துக் கும்மாளமிடும் அவர்களை, மரங்களிலும், மட்டைகளிலும் தாவித்திரியும் அவர்களை அவ்வளவு எளிதில் தொற்றுவதற்கு கண்ணாமூச்சியின் நெளிவு சுளிவுகளை பெருந்தொற்று இனிதான் பழக்க வேண்டியிருக்கும்.
எனினும் கிராமத்துச் சிறாரின் சிறகுகளை அவ்வளவு எளிதில் ஒடித்துவிடும் கட்டுப்பாடுகள் இன்னும் இறக்குமதியாகியிருக்கவில்லை. தொலைக்காட்சிப்பெட்டி வழியும் அலைபேசி வழியுமான நகரத்து இறக்குமதிகள் மட்டுமே சதா அச்சமூட்டும் பெருந்தொற்றின் பேயுரு அவர்களை கொஞ்சம் வெருட்டுவதாகத்தான் இருக்கிறது.
பொது முடக்கம் வறுமை, பசி, என்று அலைவுற்றாலும் நாவல் மரங்களும், கொய்யா மரங்களும், நெல்லி மரங்களும், குளத்து மீன்களும் அவர்களுக்குக் கூட்டஞ்சோராகிவிடுகின்றன.
கூட்டம் சேரக்கூடாதென்ற பெருந்தொற்றின் முன்நிபந்தனைகளை பெருந்தொற்றுக்கே தெரியாமல் ஒளித்து வைத்துக் கொண்டு அவர்கள் விளையாடுகிறார்கள். பருவத்தின் அத்தனை விளையாட்டுக்களையும் அவர்கள் இப்போது விளையாடித் தீர்க்கிறார்கள்.
இரவு பகலென்பதும் காலத்தின் விளையாட்டாக கண்ணாமூச்சியாகத் தெரிகிறது அவர்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் வழி தொடங்கி திரும்பும் வரையிலும் கூட கல்வி அவர்களுக்கு இன்னுமொரு விளையாட்டாகவே கண்டடைகிறார்கள்.
கூட்டிலிருந்து விழும் அணிற்பிள்ளையை, மைனாக் குஞ்சை அதன் தாயிடம் ஒப்படைக்கும் இயற்கை அறம் கற்றவர்கள். பெற்றவர்கள். கன்றுகளைச் சொரிந்துவிட்டு, வழித்தவறிய ஆட்டுக்குட்டிகளைக் கொட்டில் சேர்த்துத் தெரு வீதியின், மீதமிருக்கும் விளையாட்டை அரைக்கால் சட்டைக்குள் எஞ்சிய மண்துகளுடன் சேர்த்தெடுத்து வீடுகளுக்குள் கொண்டுவருபவர்கள். பெருந்தொற்றின் இரக்கமற்ற நகரத்து கொடும் பற்கள் அவர்கள் அறியாதது.
குளத்து மீன்கள் நீருடன் கலந்திருப்பதுப் போன்று அவர்களுக்கு காற்று விடம், தொற்றல் தீது, என்று சொல்லி வைப்பதும், முடக்கி வைப்பதும் பருவத்து சிறையன்றி வேறில்லை.
எனினும் உலகம் சுருங்கி கைகளுக்குள் வந்துவிட்டது. மனிதன் சுருங்கி கைபேசிக்குள் போய்விட்டான். உலகத்தின் பிறிதொரு நகரம் என்பது கிராமத்தின் அருகாமை நகரமாகிவிட்டது. அங்கு விடும் மூச்சு கிராமத்தின் வெக்கையைக் கூட்டுகிறது.
பெயர் தெரிந்தப் பறவையைக் காட்டியக் கிராமத்தின் எல்லையற்ற ஆகாயம் போய், பெயர் தெரியாத பறவைகளைக் காட்டுகிறது கைபேசியின் சின்னஞ்சிறிய வானம். சுருங்கிய உலகின் பெருமகிழ்வும், பெருந்துன்பமும், பெருந்தொற்றும் இன்றைக்கு ஒரே வானத்தின் கீழ், ஒரே தரையின் கீழ் வந்துவிட்டபோது முந்தய வாழ்க்கையை, முகக்கவசமற்ற வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொள்வது என்பது இருத்தலின் ஆகப்பெரியத் துயரமாகும். அவலமாகும். நகரம், கிராமம் என்பதன் எல்லையைச் சுருக்கிவிட்டது அறிவியலின், வணிகத்தின், நுகர்வின் அரசியல்.
கிராமம், நகரம், வர்க்க ஏழைகள், வர்க்கப் பணக்காரர்கள் என சகல விளிம்புகளையும் கடந்து செல்லும் உயிர்வளியென தொற்றுப் பரவிச் சென்றாலும், விளிம்பு நிலையினரையும், வர்க்க ஏழைகளையும் சிறார்களையுமே கடும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இயற்கைப் பேரிடர் எல்லாவற்றுக்கும் இது பொருந்து மென்றாலும், பெருந்தொற்று மிகப்பெரிய சவாலாக இருக்கக் காரணம் சமூக இடை வெளியில் இருக்கிறது என்பது மருத்துவ வழியில் அல்ல சமூக வழியில் மெய்யான ஒன்றே.
ஊட்டச்சத்துக் குறைபாடும், பணி வாதையும் விளிம்பு நிலை மக்கள் மீதே குறிப்பாகத் தமதுப் பருவத்துக்கும் உடம்பிற்கும் மேலான உழைப்பைச் செலுத்தும், செலுத்த வேண்டியிருக்கும் சிறார் மீதே ஆகப் பெரும் சுமையாக விழுந்து அழுத்திக் கொண்டுள்ளன.
பெருந்தொற்றை எதிர்கொள்ளும் ஒரு ஆப்பிரிக்க நைஜீரிய அல்லது எதியோப்பியச் சிறுவனுக்கும் அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளின் சிறுவர்கள் சந்திப்பதற்குமான உடல், மன வழியிலான வேறுபாடுகளைப் பெருந்தொற்று அதேற்கேயுரியப் பண்புகளுடன் வேட்டையாடிச் செல்கிறது.
பூஞ்சையான, ஊட்டச்சத்து அற்ற சிறார்களுக்கும், சகல சத்துக்களும் கிடைத்து உண்டு கொழுக்கும் பிற சிறார்களுக்கும் ஊட்டச் சத்து கிடைப்பதற்கும், கிடைக்கப் பெறாமைக்கான இடைவெளியில் பெருந்தொற்றின் அசுர பாய்ச்சல் இருப்பது எவ்வளவு மெய்மையோ. அவ்வளவு மெய்மை அதற்கிடையிலான அரசிலுமாகும்.
சுரண்டலுக்கும், சுரண்டப்படுவதற்கும், ஒடுக்குவதற்கும், ஒடுக்கப்படுவதற்குமான இடைவெளி எவ்வளவோ அவ்வளவு இடைவெளி ஊட்டச்சத்திற்கும், அது கிடைக்கப்பெறாமைக்குமாக இருக்கிறது. மெய்யாகவே இந்த அரசியலே பெருந்தொற்று விளிம்பு நிலையினரைச் சூறையாடுவதற்கான ஆகப் பெரும் அரசியல், பொருளியற், சமூகக் காரணம். பெருந்தொற்று இயற்கையாக தோன்றியிருக்கலாம். இயற்கைப்பேரிடரில் ஒன்றாக. ஆனால் பிற இயற்கைப் பேரிடர் போன்றே அது விளிம்பு நிலையினரைச் சிறார்களைத் தாக்குவதற்குக் காரணமும் மனிதனின் இரக்கமற்ற அரசியலேயாகும்.
விளிம்புநிலையினரை விளிம்பு நிலையிலேயே வைத்திருக்கும் அரசியல் அது. சத்தான உணவுகள் அவர்களை சென்றடையாமல் தடுக்கும் சமூக ஏற்ற தாழ்வுகள், பொருளாதாரத் தடைகள், கல்வி, வேலைவாய்ப்புகளில் நிகழும் அரசியல் என விபரித்துக் கொண்டே போக முடியும். ஆக உணவுதானே என்று நினைப்பதும் அதில் அரசியல் எங்கிருந்து வரமுடியும் என்று கேட்பதும் இரக்கமற்ற அலட்சியம் மட்டுமல்ல இரக்க மற்ற அரசியலும் அதில் இருக்கிறது. தினமும் பசியோடு இரவு படுக்கப்போகும் மனிதர்கள் 1கோடி பேர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆக இப்படி உணவின்றி உறங்கப் போகும் அவர்கள் யாதொருவரும் நேர்த்திக்கடனோ அன்றி உண்ணா நிலை இருப்பவரோ அல்லர் என்பதை அறியத்தான் வேண்டும்.
தெருவோரச் சிறார்கள், யாருமற்றோர் இல்லங்களின் சிறார்கள், ஊனமுற்ற சிறார்கள் என கவனிப்பின் எல்லைக்குள், சமூகத்தின் எல்லைக்குள் வராத சிறார்கள் பல இலட்சக்காணோர் நோயின் பிடிக்குள் சிக்கும் வாயப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே கடந்து கொண்டிருக்கும் 2 வது அலை பல சிறார்களை யாருமற்றோராக்கியிருக்கிறது.
இதை கவனத்தில் கொண்டு அரசுகள் செயற்பட வேண்டி அவசர அவசியம் இருக்கிறது. ஏற்கனவே கொரோனாப் பெருந்தொற்றின் காரணமாக இறப்பவர்களைப் பேரிடர் சட்டங்களின் கீழ் கொண்டு வர இயலாது என்று ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில், அதற்கானக் காரணங்களில் ஒன்றாகப் போதுமான நிதி ஆதாரங்கள் கொரோனாப் பெருந்தொற்றுக்குத் திருப்பிவிடப்படும் நிலையில், நிதி சுமை ஏற்பட்டிருப்பதோடு பெருந்தொற்றில் இறப்பவருக்கு நிவாரணம் வழங்கப்படுமானால் அவை கூடுதல் சுமையாகிவிடும் என்றும் பேரிடர் பணிகள் தடைப்படும் என்றும் நீதிமன்றத்தில் கூறிக்கொண்டுள்ளது.
தமிழக அரசைப் பொறுத்தவரைக் கொரோனாப் பெருந்தொற்றில் பெற்றோரை இழக்கும் சிறாருக்கு ரூ 5இலட்சம் வைப்பு நிதியை அறிவித்துக் கொண்டுள்ளது. இது சிறார் குறித்த மாறிவரும் பார்வையின் அடையாளம் என்று சொல்லலாம். மேலும் தற்போதையக் கொரோனாச் சூழலில் தொற்று காரணமாக இறக்கும் இணை நோயாளருக்கு இணை நோயால் இறந்ததாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுவருவதுக் கவலைக்குரிய ஒன்றாகும். இணை நோய் காரணமாகவே தொற்றின் வீச்சு அதிகமாகியே அவர்கள் இறப்புக்கு ஆளாகின்றனர் எனவே அரசுகள் அவற்றைக் கவனத்தில் கொண்டுத் தொற்று இறப்பில் பாகுபாடு காட்டாமல் அனைவருக்குமே பொதுவானச் சான்றிதழை வழங்க வேண்டும்.
இணைநோய் இருந்துப் பெருந்தொற்றுக் காரணமாக இறந்துவிடும் பெற்றோரைக் கொண்ட சிறார்கள் இதனால் அரசின் உதவித் தொகையோ அன்றி வைப்பு நிதியோ கிடைக்கப்பெறாமல் போகும் வாய்ப்பு உருவாகிறது.
ஏற்கனவே அமைப்புச் சாரா தொழில்களில் ஈடுபடுத்தப்படும் சிறார் எண்ணிக்கை ஒரு தொகையாகக்கூட மதிக்கப்படுவதில்லை. தீப்பெட்டித் தொழில் தொடங்கிக் கட்டுமானப் பணிகள், கல்குவாரி என்று எங்கும் சிறார் உலகம் காயம்பட்டுக் கிடக்கிறது. தூக்கிச் சுமக்க இயலாத் துயரத்துடன் இருக்கிறது. பெரியவர்கள் சிறாருக்கு அவர்களது உலகை இப்படித்தான் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். கசப்பும், வாதைகளும் அச்சிறாரின் உடல்களில் வழியும் சீழும், கண்ணீரும் போலவே அவை இருக்கின்றன. பொன்னுலகைக் காண்பிக்க வேண்டாம். குறைந்தப் பட்சம் இந்த உலகு குறித்த சிறிது நம்பிக்கையாவது அவர்களுக்கு அளித்து வைக்கலாம்.
உலகெங்கும் குற்றச் செயல்களிலும், பாலியல் தொழிலிலும், போதைப் பொருட்கள் விற்பனைச் செய்வதிலும், யுத்த முனையென்றால் போர்க்கருவிகளைக் கையாளவும், துணைப் படைகளாகவும் சிறார்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்குப் போதிய ஊட்டச் சத்து எதுவும் வழங்கப்படுவதில்லை. வயதின் காரணமாக ஆற்றலும், சுறுசுறுப்புமான செயற்பாடும், சடுதியில் முடிவெடுக்கும் திறனுமே அவர்களை யுத்தமுனையில் நிறுத்தி வைக்கிறது. சாகடிக்கிறது. இப்படியான நிலையில் பரவிவரும் பெருந்தொற்று சிறார்களை உலகெங்கும் கனிசமாக நரபலி எடுக்கிறது. கேட்கிறது.
சிறார் எனும்போதுக் குறிப்பாகப் பெண் குழந்தைகள் குறித்து தனியே பேச வேண்டியிருக்கிறது. வளரிளம் பருவத்திலிருக்கும் பெண் குழந்தைகள், சிறுமிகள் படும் அல்லல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் அவர்கள் வறுமையிலும், பிணியிலும், ஊட்டச் சத்துக் குறைபாடுகளிலும் பலியானதுப் போக எஞ்சிப் பிழைப்பவர்கள் நரக வாழ்க்கையையே அனுபவிக்கிறார்கள்.
பாலியல் தொழிலில் சிறுவயதிலேயே ஈடுபடுத்தப்படும் சிறுமிகள் தொடங்கி, ஆபாச காணொளிகளில் கட்டாயமாக ஈடுபடுத்தலில், வீட்டு வேலைகளில், பிச்சை எடுப்பதில் என யாதொரு அவலமும் அவர்களது உடலையும், மனதையும், இருப்பையும் வாதையில் தள்ளிக் கொண்டுள்ளன.
வயதுக்கு மீறிய உடலுழைப்பில் தள்ளப்படும் அச்சிறுமிகள் தமக்கான ஊட்டச்சத்துக்கு மேலானப் பணிகளைச் செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதால் விரைவிலேயே அவர்கள் இரத்தச் சோகை, இளைப்பு உள்ளிட்ட பிணிகளுக்கு ஆளாகிவிடுகிறார்கள். ஊட்டச் சத்தை எதிர்பார்க்கும் பருவம் என்பதால் அது கிடைக்காத நிலையில் கடினமானப் பணிகளுக்கிடையே எந்த கணக்கிலும், குறிப்பிலும் வராமல் மரணமடைந்துவிடுகின்றனர். வேலை முடிந்ததும் இவ்வுலகிலிருந்து அகற்றப்பட்டுவிடுகிறார்கள். தூக்கியெறியப்படுகிறார்கள்.
உலகின் ஏதோ ஒரு மூலையில், சாலைகளில் கடும் வெயிலில் கையேந்தி நிற்கும் கிழிந்த உடையுடனானச் சிறுமிகளைக் காணமுடிம், நீர் எடுக்கத் தனது எடைக்கும் மீறிய குடம் சுமந்து தொலைவுகளைக் கடக்கும் சிறுமிகளைப் பார்க்க முடியும். தனது தங்கையோ, தம்பியோ இடுப்பில் சுமந்து கொண்டே சமையல் செய்யும் அடுப்பெரிக்கும் சிறுமிகள், தூரக்காடுகளில் சுள்ளிப் பொறுக்கிச் சுமந்து வரும் சிறுமிகள் என குடும்பத்தில் ஒரு பகுதி சுமையை சுமக்கும் சிறுமிகள் நமது இதயத்தை அழுத்துவதேயில்லை.
புஷ்டியானக் கொழுகொழுவென வகைவகையாக, ஐஸ்கிரீம், சாக்லேட் சாப்பிடும் மாநிற இந்தியக் குழந்தைகளைச் சிறுமிகளைத் தொலைக்காட்சி, சமூக ஊடக விளம்பரங்களில் அறிந்த அளவுக்கு நமக்கு வாழ்வை, இருந்தலைச் பெஞ்சுமையெனச் சுமந்துக் கடக்கும் சிறார்கள் பற்றித் தெரிவதில்லை. தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.
சோமாலியா நாட்டைச் சேர்ந்த 10, 14 வயதானச் சிறுமிகள் 1 வாரத்தில் 26 மணிநேரம் வீட்டு வேலைகள் செய்வதில் செலவிடுவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இது உலகில் வேறெந்த நாட்டையும் விட மிக அதிகமானது என்றும் அது குறிப்பிடுகிறது. கூலியில்லா உழைப்பாளியாக குடும்பத்தின் வேலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர் இச்சிறுமிகள்.
கொரோனாப் பெருந்தொற்று தென்னாப்பிரிக்க நாடுகளை சூறையாடி வருவதை அறிகிறோம், ஆயினும் அங்குள்ள ஊட்டச்சத்துக் குறைந்த சிறார் நிலை இன்னும் வெளி உலகை எட்டாமல் இருக்கிறது. ஏற்கனவே இங்கெல்லாம் மேலைநாடுகளின் மருந்து நிறுவனங்களின் தடுப்பூசி அரசியல் காரணமாகக் கொரோனாத் தடுப்பூசித் தட்டுப்பாடு செயற்கையாக நிலவிவருகிறது. போதிய அளவு ஊட்டச் சத்து உள்ளவர்களே தடுப்பூசித் தாங்கும் திறனில் இருக்க ஊட்டச் சத்தற்ற சிறார்களுக்கான ஊசியை போடுவதில் எந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டத் தகவல்கள் இருக்கவில்லை.
ஐ.நா அவையின் யுனிசெஃப் அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையொன்றில் ஆசியப் பகுதியின் 12 கோடி சிறார்கள் அடுத்த 6 திங்களுக்கு வறுமை, உணவுப் பாதுகாப்பின்மையை எதிர் கொள்ளக்கூடும் என்று எச்சரித்திருந்தது. மேலும் 60 கோடி சிறார்கள் தொற்றினால் பாதிக்கப்படும் இடத்தில் இருக்கிறார்கள் என்று கவலைத் தெரிவித்துக் கொண்டிருந்தது. இனிவரும் பெருந்தொற்றலைகளுடன் சேர்த்து புரிந்து கொள்ள முடியுமானால் அதன் வீச்சின் எல்லை தென்படக்கூடும்.
சிறார் உலகின் கனவுகளும், கொண்டாட்டங்களும் பெரியவர் உலகின் கருணையிலும், அன்பிலும், பாதுகாப்பிலும் கரிசனத்திலுமே தங்கியிருக்கிறது. அவர்களைக் கைவிடுதல் என்பது எதிர்வுலகைக் கைவிடுதலாகும். அவர்களை நிராகரித்தல் என்பது தமக்குத் தாமே நிராகரித்துக் கொள்தலாகும். நமது காலில் நிற்கும் அவர்களதுக் காலில் நாளை நாம் நிற்க வேண்டியிருக்கிறது. பெருந்தொற்றை பரிசளித்த நம்மை அவர்கள் மன்னிப்பதற்கும், மறப்பதற்கும் இவ்வுலகின் ஆகப் பெரியப் பேரன்பையும், பெரும் நேசத்தையும் இக்காலங்களில் அவர்களுக்குத் தருவதிலேயே அவர்கள் நமக்குத் திருப்பிச் செய்வதிலும், தருவதிலுமிருக்கும். இருக்கிறது.