தமிழ்த் தேசியத்திற்கான நெருக்கடிகள்
இந்த மாத தமிழ்நேயத்தோடு ‘ஏன் வேண்டும் தமிழ்த்தேசியம்’ என்னும் ஒரு சிறு நூலையும் சேர்த்து எனக்கு அனுப்பியிருந்தார் கோவை ஞானி அவர்கள். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் இயக்கத்தின் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்த்தேசியம் தொடர்பான ஒரு கலந்தாய்வுக்காக ஞானி அவர்கள் எழுதிய ஒரு விரிவான கட்டுரைதான் இச்சிறு நூல். கூடவே தமிழ்த்தேசியம் தொடர்பான வேறு இரு கட்டுரைகளும் இந்நூலில் அடக்கம்.
சிற்றிதழ், தமிழ்த்தேசியம், மார்க்சிய விடுதலை, மார்க்சிய மெய்யியல், கீழை மார்க்சியம் என ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருப்பவர் ஞானி. அவரது தமிழ்த்தேசியம் ஒவ்வொரு தமிழனும் ஏற்றுக் கொள்ளக்கூடியது. அவரது தமிழ்த்தேசியம் சங்க இலக்கியத்திலிருந்து, திருவள்ளுவரிலிருந்து, தொல்காப்பியனிலிருந்து, இளங்கோவிலிருந்து புறப்பட்டிருப்பது. அதன் மெய்யியல்களை சாரமாகப் பிழிந்து தருவதில் ஞானி வல்லவர். அந்த சாரமெல்லாம் ஒன்று சேர்ந்ததுதான் தமிழ் மெய்யியல். தமிழ்த்தேசியத்திற்கான ஊற்று தமிழ் மெய்யியல். தமிழ் மெய்யியல் என்ற சாளரத்தின் வழி தரிசிப்பதுதான் உண்மையான தமிழ்த்தேசியமாக இருக்க முடியும். அத்தமிழ்த்தேசியத்தை நோக்கி தமிழறம் என்ற ஒளிக்கீற்றை தமிழ் மெய்யியல் செலுத்திக்கொண்டே இருக்கும். தமிழ்த்தேசியத்திற்கு அறம்தான் அடிப்படை. அறமற்ற தமிழ்த்தேசியம் வெறும் பிரச்சாரம் மட்டுமே. தமிழ்த்தேசியம் புரிந்து கொள்ள, அதன்படி நடந்து கொள்ள தமிழனுக்கு தனிப்பயிற்சியோ, தனித்தெளிவோ தேவையில்லை. அவனது உயிரோடு, உடலோடு ஒட்டியக் கருத்தாக்கமே தமிழ்த்தேசியம். சங்ககாலத்தில் தமிழ்நாடு அரசியல் ரீதியில் ஒன்றில்லை. “செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலத்தும்” என்பதற்கேற்ப பன்னிரு நாடுகள் இருந்தாலும் தமிழறம் செழித்து வளர்ந்ததற்கு மிக முக்கியக் காரணம் தமிழ்ச்சமுதாயத்தின் அடிப்படை தகர்ந்து போகாமல் இருந்ததுதான். தொல்தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படை திணைப்பிரிவை மையமாகக் கொண்ட சாதிகளற்ற வாழ்க்கை முறையும், ஆண்-பெண் சமத்துவமும். தற்கால சாதி அன்று இல்லை. தமிழ்மதம் இருந்தது. வைதீகம் இருக்கவில்லை. பண்டைய வேளிர் அரசுகள் சோழ, சேர, பாண்டிய அரசுகளாக வலுப்பட்டபோது அதன் அரசர்கள் மாமன்னர்களாக மாறிப்போனார்கள். அதிகாரவர்க்கமாகத் திரிந்தார்கள். தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள புரோகிதர்களை, பார்ப்பனர்களை இறக்குமதி செய்தார்கள். இப்படித்தான் மனுதர்மமும், பார்ப்பனியமும் தலைகாட்டத் தொடங்கியது. ஆண்-பெண் அசமத்துவம் ஆரம்பித்தது. இவ்வாறாக தமிழ்ச்சமுதாயத்தின் அடிப்படை கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ந்து போனது. சங்ககாலத்தின் முற்பகுதியில் தமிழ் மெய்யியல் வளர்ந்தது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பதம் தமிழ் மெய்யியலின் உச்சம்.
பண்டைய சமத்துவ தமிழ்ச்சமூகம், இனக்குழு சமூகம் பிற்கால தீமைகளின்பால் வீழ்ந்துபட்டதற்கு பிராமணியத்தை முழுமையாகக் குற்றம்சாட்டமுடியாது என ஞானி கூறுகிறார். ஆனால் பார்ப்பனியத்தை அப்படியாக நாம் விடுவித்துவிடமுடியாது. பண்டைய தமிழ்மன்னர்கள் தங்களின் மேலாதிக்கத்தை மக்களின் மீது நிறுவுவதற்காக, தங்களின் முற்றாதிக்கம் நீடித்து நிலைப்பதற்காக பார்ப்பனர்களின் தயவைப் பெற்றனர். இறக்குமதி செய்யப்பட்ட பார்ப்பனர்களுக்கு நிலங்கள் கிராமம் கிராமமாக வழங்கப்பட்டன. வேள்விக்குடி செப்பேடுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. மனுதர்மத்தைக் கொண்டுசெலுத்த சிறந்த ஊடகமாக மன்னர்களை பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொண்டனர். படைவீரர்களையும், பார்ப்பனர்களையும் கட்டித் தீனிபோட நிலவரி அரசனுக்குக் கைகொடுத்தது. சாமானிய மக்கள் கசக்கிப் பிழியப்பட்டனர். அரசனும், பார்ப்பனனும் நன்கு அனுபவித்தனர். பெரும் கோயில்களையும், மாட கோபுரங்களையும் கட்டி கலைகளையும் நன்கு அனுபவித்தனர். பிரம்மாண்டங்கள் போற்றப்பட்டன. நாட்டின் எல்லை பெரிதாக அவர்கள் விரும்பினர். தமிழின் மெய்யான அறத்தைத் துறந்த அவர்கள் ஆதிக்க உணர்வை வளர்த்துக் கொண்டனர். பெரிய ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் வெட்டப்பட்டன. நீர்ப்பாசன வசதிகள் பெருகின. விளைச்சல் அதிகரித்தது. அரசனின் வரிவருவாயும் பெருகியது. கோயிலின் சொத்துகளும் பன்மடங்கு பெருகியது. “பாசனமுறை மற்றும் விவசாயமயமாக்கல் முதலியவை வைதீகமயமாக்கலுடன் பிணைந்து நிற்பதை அகத்தியர் கதை முதலியவை நிறுவுகின்றன. இவ்விவசாயமயமாக்கலால் இனக்குழு மக்கள் உள்ளிழுக்கப்பட்டனர். இவ்வாறு விவசாயமயம் ஆக்கப்படும்போது இனக்குழு மக்களிடையே இருந்த பொது உரிமை அழிக்கப்பட்டு அவர்களது பொதுநிலங்கள் அரசர்களால் அபகரிக்கப்பட்டு, அவை வேள்விக்குடிகளாக மாற்றப்பட்டு பார்ப்பணர்களுக்கு ‘தானம்’ வழங்கப்பட்ட வரலாற்றிற்கு எண்ணற்ற சங்கப்பாடல்கள் சாட்சியாக உள்ளன”(பொற்காலங்களும்,இருண்ட காலங்களும்,பொ.வேல்சாமி,பக்கம்-25,26).
மன்னர்கள், புரோகிதர்கள், படைப்பிரிவுகள் வேண்டுமானால் மன்னர்களின் ஆட்சியைக் கொண்டாடலாம். நிலவரியால் கசக்கி பிழியப்பட்ட சாதாரண விவசாயக்குடிமக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? இல்லை. இச்சுரண்டல் முறைகளை சகியாமல் அவர்கள் பலப் போராட்டங்களையும் நடத்தினார்கள். தஞ்சாவூரில் புஞ்சைக் கிராமக் கல்வெட்டு ஒன்றில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை கோயில் நிர்வாகத்தார் பறித்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி கிடைக்காத நிலையில் அக்கோவிலின் முன் தீ வளர்த்து உயிர்த்தியாகம் செய்த நிகழ்வு கூறப்பட்டுள்ளது. சில சமயங்களில் ஆட்சியின் அநீதிகளையும், நிலவுடைமையின் கொடுமைகளையும் தாங்கமுடியாத மக்கள் ஆயுதம் தாங்கி போராடியும் இருக்கிறார்கள். நிலங்களை இப்படித்தான் பங்கிடவேண்டும், கோயிலுக்கு இன்ன இன்ன உரிமைகள் இருக்கின்றன என்று கோயில் சுவர்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகளை இடித்து அழித்திருக்கிறார்கள். தமிழ்மன்னர்களின் பராக்கிரமங்களை சிலாகித்துப் பேசும் தமிழ்த்தேசியவாதிகள் சிலர் அம்மன்னர்கள் தொல்தமிழ்ச் சமுதாயத்தின் கூறுகளை சிதைத்துப் போட்டது பற்றி எதுவும் கூறுவதில்லை. ‘அக்காலத்தில் சோசலிசம் இருந்ததா, மார்க்சியம் இருந்ததா என்றெல்லாம் கேட்கக்கூடாது’ என கூடுதலாக நம்மைப் பகடியும் செய்கிறார்கள். மார்க்ஸ், எங்கெல்ஸ் கடந்த நூற்றாண்டுகளில் தோன்றியிருக்கலாம். சோசலிசம் என்ற பதமும்கூட சமீபத்தில் வந்ததாக இருக்கலாம். ஆனால் தமிழறம் என்ற ஒன்று சங்ககாலத்திலிருந்தே தமிழ்நாட்டில் தமிழ்மண்ணோடு, மக்களோடு பிண்ணிப் பிணைந்து இருந்த ஒன்று. பலநூறு ஆண்டுகளாக தமிழ்மக்களிடம் நிலவி வந்துள்ள சமத்துவம்தான் மிகச்சிறந்த சோசலிசம். சங்ககாலத்தின் பிற்பகுதியிலிருந்து தமிழர்களின் சமத்துவம் வீழ்ந்து போனதற்குக் காரணமாக அமைந்த மாமன்னர்களின் எதேச்சாதிகார மனுதர்ம நடவடிக்கைகளை கேள்வி கேட்கக்கூடாதெனச் சொல்வதில் என்ன நியாயம் இருக்கமுடியும்?
இன்றைய தமிழ்ச்சமூக உருவாக்கத்தில் சாதியக்கட்டுமானங்களுக்கு இருக்கும் பங்கு எல்லையற்றது. இக்கட்டுமானங்களுக்குக் காரணம் பார்ப்பனியம். நம்முடைய எல்லா தீமைகளுக்கும் மூலகாரணம் பார்ப்பனியமா? என்ற கேள்விக்கு இல்லை என விடை தருகிறார் ஞானி. பார்ப்பனியம் நம் மடத்தைப் பிடித்ததற்கு அது மட்டும் காரணமல்ல, நாமும்தான் என்கிறார் ஞானி. பார்ப்பனியம் வளர்ந்ததற்கு தமிழ் மன்னர்கள் ஆற்றிய ‘மகத்தான பங்களிப்பு’ம், அவர்கள் கொடுத்த இடமும்தான் மிக முக்கிய காரணம். மதமும், பிராமணர்களும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரிகளல்லர் என்கிறார் ஞானி. அப்படியானால் மதமும், பார்ப்பனியமும் தோற்றுவித்துள்ள ‘சாதி’ தமிழ்த்தேசியத்திற்கு எதிரியல்ல என்றாகும். இன்றையச்சூழலில் சாதிதான் தமிழ்த் தேசியத்திற்கு முக்கியமான எதிரி. தமிழர்களை ஒன்றுபடவிடாமல் சுக்குநூறாகப் பிளவுபடுத்தி வைத்திருப்பதும் இந்த சாதிதான். இப்படியாக ஞானியின் தமிழ்த்தேசிய உருவாக்கம் பல முரண்பாடுகளையும் கொண்டுள்ளது. மதம் மட்டும் அன்பாக, அறிவாக அறியப்படுமானால் அது நம்மை ஆள்வதற்கு எவ்வித ஆட்சேபமுமில்லை என்கிறார் ஞானி. மதம் நம்மை ஆள்வதற்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தந்துவிடக்கூடாது. அது எப்படியிருந்தாலும் சரி, அன்பாக, அறிவாக, தலைவனாக அது எவ்வடிவை எடுத்தாலும் நாம் மயங்கிவிடக்கூடாது. மதம் என்பது ஒரு நிறுவனம். அது செய்யும் அரசியலும் ஏராளம். மதங்களைப் பற்றிய நமது பார்வை அன்பு, அறிவு என்கின்ற தளங்களினுள் மட்டும் சுருங்கிப்போய்விடக்கூடாது. மதங்களின் அன்பு நஞ்சாகலாம், அதன் அறிவு பாசிசமாகலாம். எனவேதான் ஞானியின் இம்முடிவை எதிர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இந்தியச் சூழலில் தமிழ்த்தேசியம் ஒரு இக்கட்டான நிலையை அடைந்திருக்கிறது. தேசிய இனங்களுக்கு உண்மையானக் கூட்டாட்சியை, இறையாண்மையை அளிக்க இந்தியாவின் அரசியல் சட்டம் மறுக்கிறது. இந்தியாவின் தேசிய இனங்களுக்கு இப்போது நிம்மதி இல்லை, அமைதி இல்லை என்ற ஞானியின் கூற்று முற்றிலும் உண்மை. காஷ்மீர் தொடங்கி நாகலாந்து, வடகிழக்கு மாநிலங்கள், தமிழ்நாடு எனப் பல்வேறு இடங்களில் இந்திய நாட்டிற்குள் தங்கள் தேசிய இனங்களுக்கு ஏற்பட்டிருக்கிற அவமதிப்புகள் பற்றி விவாதிக்கப்படுகின்றன. பல்வேறு இடங்களில் கலகங்களும் நடக்கின்றன. அவை கொடூரமாக நசுக்கவும் படுகின்றன. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிந்து செல்லவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஞானி ஆதரவு தரவில்லை. பிரியவேண்டிய அவசியமில்லை. இந்தியாவையே ‘தமிழ் இந்தியா’வாக மாற்றவேண்டும் என்கிறார். ஞானியின் இச்சிந்தனைக்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆரியர் வருகைக்கு முற்பட்ட இந்தியா திராவிடருக்குடையது. அத்திராவிட மக்களின் மொழி தொன்மையான தமிழ். ஆரியர் வருகைக்குப்பின் ஏற்பட்ட இரு இனக்கலப்பு. அதன் விளைவான மக்கள். பலதரப்பட்ட இந்திய மொழிகள். இம்மொழிகளின் இலக்கணங்களுக்கு அடிப்படை தமிழ். சிந்துவெளிமக்கள் தமிழர். இப்படியான பழந்தமிழை, பழந்தமிழரை நினைத்து ஞானி சொல்லியிருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவை தமிழ் இந்தியாவாக மாற்றிவிடமுடியுமா? பழந்தமிழர்களின் பெருமைகளைத் தொகுத்து வெளியிடப்படும் நூல் ஒன்றிற்கு வேண்டுமானால் தமிழ் இந்தியா என்று பெயர் சூட்டிக்கொள்ளலாம். ந.சி.கந்தையாப்பிள்ளை தொல்தமிழகம் குறித்து தான் எழுதிய ஆய்வு நூல் ஒன்றுக்கு ‘தமிழ் இந்தியா’என்று பெயரைச் சூட்டியிருக்கிறார். பேராசிரியர் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் ‘தமிழ் இந்தியா’ என்னும் ஆங்கில நூல் ஒன்றை எழுதியுள்ளார். ஒரு காலத்தில் நாவலந்தீவு என வழங்கப்பட்ட இந்தியா மற்றும் பழங்குமரிக்கண்டம் அடங்கிய நிலப்பகுதி முழுவதும் தமிழர்கள் நிரம்பியிருந்தார்கள். ஆரியர் வருகைக்குப் பின்னர் விந்தியமலைக்குத் தெற்கே உள்ள நிலப்பகுதி மட்டும் தமிழர்களின் நிலமானது. தொல்காப்பியர் காலத்தில் வடவேங்கடம் முதல் தென்குமரி என்றானது. இந்தியாவின் மேலடுக்கு ஆரியமாகயிருக்கலாம். அதன் கீழடுக்கு தமிழர்கள்தான் என்கிறார் ஞானி.
இந்தியதுணைக்கண்டத்தில் முதல் செவ்வியல் மொழி தமிழ்தான் என்பது குறித்தும், சமஸ்கிருதத்தில் புகழ்மிக்க இலக்கியங்கள் தோற்றம் பெற்ற குப்தர்கள் காலத்திற்கும் பல நூற்றாண்டுகள் முன்னதாகவே தமிழின் செவ்விலக்கியங்கள் தோன்றியுள்ளன என்பது குறித்தும் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. தமிழ்தான் பிற தென்னிந்திய மொழிகளைத் தோற்றுவித்தது என்பதும் கருத்து வேறுபாடின்றி நிறுவப்பட்டிருக்கும் உண்மை. அது போகட்டும். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு ஒத்துழைக்குமா? கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு ஏற்பாடுகள் செய்யுமா?கச்சத்தீவில் மீன்பிடிக்கும், வலை உலர்த்தும் இழந்துபோன உரிமையை மத்திய அரசு மீண்டும் பெற்றுத்தருமா? இந்தியாவின் மத்திய ஆளும்வர்க்கத்தை நோக்கி மடியேந்தி பிச்சையெடுக்கும் நிலைதான் தமிழ்நாட்டின் உண்மை நிலை. ‘தேசம் ஒருமைப்பட்டிருக்கவேண்டும் என்பதற்கான நியாயங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன’ என்ற ஞானியின் கருத்தை இந்தியதேசியவாதிகள் மறுக்கமுடியுமா? பண்டைய இந்தியா ஒரு தமிழ் இந்தியா என்று வேண்டுமானால் பெருமை பீத்திக்கொண்டு திரியலாம். இந்தியாவிற்குள் தமிழ்நாட்டின் இருப்பு தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில் ‘தமிழ் இந்தியா’ என்று ஞானி கூறுவது மிகையாகத்தான் உள்ளது. மறுபுறம் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் நம் இன மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஒற்றுமை படாத நமக்கு, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மோசமான நிலையை எட்டினாலும் ஒன்றுபாடாத நமக்கு ‘தமிழ் இந்தியா’ என்னும் கனவு தேசத்தை அடைய என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.
தமிழ்ச்சமூகத்தின் இன்றைய வீழ்ச்சிக்கு பார்ப்பனியத்தின் பங்கை ஞானியும் ஏற்கிறார். மறுக்கவில்லை. அதே நேரத்தில் இந்தியாவிலிருந்து நம்மைத் துண்டித்துக் கொள்ளத் தேவையில்லை எனவும் பகர்கிறார். “இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்வதாகிய ஒரு உண்மையான கூட்டாட்சியாக மாற்றியமைக்கும் முறையில்தான் நம் செயல்பாடுகள் அமையவேண்டும். இந்தியாவின் பிறதேசிய இனங்களோடு இத்தகைய விவாதங்களை நாம் ஒழுக்கமைக்கவேண்டும்”(பக்கம்-57). உண்மையான இறையாண்மையுடன் கூடிய கூட்டாட்சிக்கு தமிழ் மக்களாகிய நாம் போராடவேண்டும். இப்போராட்டத்தில் பிறதேசிய இனங்களையும் இணைத்துக்கொள்ளவேண்டும். தேசிய இனங்கள் சுயாட்சியுரிமையைப் பெறவெண்டும். இக்கூட்டாட்சியில் பதவி ஒருவரிடம், அதிகாரம் பிறிதொருவரிடம் இருக்காது. சமத்துவம் மலரும். கனிம வளங்கள் கொள்ளை போகாமல் காப்பாற்றப்படும். ராணுவமும், துணை ராணுவப் படைகளும் பாசறைகளுக்குள்ளிருந்து வெளிவரமாட்டா. தேசிய இனங்களின் மொழிகள் உரிய முதல் மரியாதையைப் பெற்றிருக்கும். ‘இந்திய அரசியலமைப்பு ஒரு கூட்டமைப்பாக இருந்தாகவேண்டும் என்ற முறையில் நமக்குள் சிந்தனைத் தெளிவு தேவை’ என ஞானியும் குறிப்பிடுகிறார்.
பெரியார் காட்டும் பகுத்தறிவுப்பாதையும், மார்க்ஸ் காட்டும் வர்க்கப்பார்வையும் மிகவும் இறுக்கமானவை. இவ்விறுக்கத்தைத் தளர்த்த நமக்கு உதவுவது தமிழ் மெய்யியல் என்று ஞானி கூறுகிறார். சங்க இலக்கியங்கள், சித்தர்கள், பாரதி, பாரதிதாசன், பெரியார், புதுமைப்பித்தன் இவைகள்/ இவர்கள் தரும் தமிழ் மெய்யியலைப் பருகவேண்டும். வரலாறு தமிழ்மக்களிடம் விட்டுச் சென்றிருக்கும் ஏராளமான கசடுகளை, தளைகளை தமிழ் மெய்யியல் மூலமே போக்கமுடியும். தேசிய இனங்களுக்குள் புரிதல் ஏற்படுமானால் மிகச்சிறந்த கூட்டமைப்பாக இந்தியா விளங்கும். தேசிய இனங்களின் விடுதலைக்காக ஆயதமேந்திப் போராடுவதை ஞானி ஆதரிக்கவில்லை. மக்கள்திரள் போராட்டத்தைத்தான் ஞானி பரிந்துரைக்கிறார்.
“தமிழகத்திற்குள் நாம் தமிழ்த்தேசியம் என்று பேசினோமேயொழிய பிற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள தேசிய இனங்களோடு நம் உறவை வளர்த்துக் கொள்ளவில்லை. காஷ்மீர், நாகலாந்து, ஜார்கண்டு முதலிய மாநிலங்களில் நடைபெறும் கடுமையானப் போராட்டங்கள் குறித்து நமக்கு அக்கறையில்லை” என ஞானி சாடுகிறார். ஈழப்பிரச்சினையை எத்தனை மாநிலங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறோம் என நம்மைப் பார்த்து ஞானி கேட்கிறார்.
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் தமிழ்த் தேசிய நகல் அறிக்கையின் மீதான ஞானியின் திறனாய்வும் புத்தகத்தின் இறுதியில் அமைகிறது. தமிழ்த்தேசியம் குறித்த மிகவும் பிடிவாதமான, தீவிரமான கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சியினர். அவர்களின் தீவர தமிழ்த் தேசியம் குறித்த அக்கறையை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். அவர்களது தீவிரப் போக்கை ஞானி பல இடங்களில் மறுதலிக்கிறார். இறையாண்மை உள்ளக் குடியரசாக தமிழகம் இருந்திருந்தால் தமிழீழம் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று அறிக்கை கூறுவதைப் பற்றி ஞானி ஆச்சரியப்படுகிறார். ஈழப்போரின்போது கலைஞர் இந்தியாவுக்கு எதிராகக் குரலை உயர்த்தியிருந்தால் அது ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும்கூட பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். இந்தியாவின் அரசியல் சட்டத்தை முழுவதுமாக திருத்தம் செய்வதற்கான உந்துதலும் ஏற்பட்டிருக்கும் எனக்குறிப்பிடும் ஞானி, கலைஞருக்கு அத்தகைய அக எழுச்சி சாத்தியமற்றது என சரியாகவே சொல்கிறார். ஆனால் வைகோ அதைச் செய்திருக்கமுடியும் என ஞானி கோடிட்டுக் காட்டுகிறார். தமிழ்நாட்டு தேர்தல் கட்சிகளின் தமிழ்த்தேசியங்கள் நமக்கு எவ்வித நம்பிக்கையையும் தரவில்லை. வெற்றுக் கோஷங்களாக, வெற்றுப் பிரச்சாரங்களாக அவை மறைந்துவிடுகின்றன. தமிழறம் கடைபிடித்து இந்தியாவை இறையாண்மையுடன், தன்னாட்சியுடன் கூடிய தேசிய இனங்களின் கூட்டமைப்பாக மாற்றியமைப்பதில் வெற்றி பெறும்போதுதான் தமிழ்த்தேசியத்தின் முழு மலர்ச்சியையும் நாம் தரிசிக்கமுடியும்.
இறுதியான ஒரு கட்டுரையில் ஈழத்தில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த கொடூரங்களைக் குறிப்பிடும் ஞானி, தமிழ்நாட்டு விடுதலைக்குமான வாய்ப்புகளும் பறிபோய்விட்டது என்கிறார். தமிழ்த்தேசியம் என்ற நமது நம்பிக்கை குறித்து ஒரு மீள்சிந்தனை தேவை என்று ஞானி குறிப்பிடுகிறார். ஈழத்தமிழகம் விரைவில் விழித்துகொள்ள வாய்ப்புகள் வரும் என்று ஞானி முன்னறிவிக்கிறார். இன்றைய நிலவரப்படி ஈழத்தமிழர்கள் தங்கள் தாயகத்தில் மீண்டும் முளைத்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவுதின நிகழ்வுகள் சிங்கள அரசு, ராணுவ அச்சுறுத்தல்களையும் மீறி யாழ் பல்கலையிலும், வேறு பகுதிகளிலும் நிகழ்ந்துள்ளன. ஈழமக்களின் குரலாக மன்னார் மறைமாவட்ட ஆயர் ஜோசப் ராயப்பு திகழ்கிறார். அக்டோபர் 2008க்கும் ஜூலை 2009க்கும் இடைப்பட்ட காலத்தில், இலங்கை அரசின் புள்ளிவிபரங்களின்படி இறுதிப்போரின் கடைசிக் கட்டங்களில் படுகொலை செய்யப்பட்ட 1,46,679 தமிழ் மக்களைப் பற்றி இலங்கை அரசிடமும், ஐ.நா.விடமும் ஆயர் நியாயம் கேட்கிறார். புலம்பெயர்ந்த தமிழர்களும் தங்கள் ஈழ மண்ணிற்காக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். தனது நாட்டுக் கொடியை தனது காரில் கட்டாமல் லண்டனில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைந்து மறைந்து சென்ற ராஜபக்ச, தான் ஒரு சர்வதேச குற்றவாளி என்பதை நிரூபித்திருக்கிறார். ஈழமண்ணிலும், புலம்பெயர்ந்த தேசங்களிலும் வீரம் செறிந்த போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்மக்கள் இருக்கும்வரை ஞானி குறிப்பிடும் ‘தமிழ்தேசியம் குறித்த மீள்சிந்தனை’க்கு அவசியம் இல்லை. தினம்தினம் டாஸ்மாக்கின்முன் நின்றுகொண்டு அதன் பிராண்டுகளைப்பற்றியும், சுவை பற்றியும் விவாதித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களையும், ஏதோ ஒரு தொலைக்காட்சிமுன் நின்று டப்பாங்குத்து ஆடிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு யுவதிகளையும் வைத்துக்கொண்டுள்ள நாம்தான் தமிழ்த்தேசியத்தின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படவேண்டும்.
(01.08.2012 அன்று எழுதப்பட்ட கட்டுரை)