சீனா 2020 – ஒரு அறிமுகம் – ஜான் பெல்லாமி ஃபாஸ்டர்
மொழியாக்கம் : செ. சண்முகசுந்தரம்
உலகப் பொருளாதார மேலாதிக்கத்திற்காக, நூற்றாண்டுகளாக நடக்கும் தொடர்ச்சியான பல உலகப் போர்களினால், முதலாளித்துவத்தின் வரலாறு தேக்கமடைந்திருக்கிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டிலும்கூட, உலகப் பொருளாதாரத்தின் மீதான மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடக்கும் மற்றுமொரு மோதல்நிலையை நோக்கியே நிலவும் சூழல்கள் சுட்டுகின்றன. புரட்சிக்குப் பிந்தைய சீன சமூக உருவாக்கமானது முற்றிலும் முதலாளித்துவமோ அல்லது சோசலிசமோ அல்லாத தனித்துவமும், சிக்கலும் இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
ஜார்ஜ் டபுள்யூ. புஷ் நிர்வாகத்தில் வெளியுறவுக் கவுன்சிலின் செல்வாக்கு மிக்க தலைவரும், ‘ஏகாதிபத்திய அமெரிக்கா’ என்னும் கருத்தாக்கத்தின் மிக முக்கிய தளகர்த்தருமாகிய ரிச்சர்ட் ஹாஸ் ஆகஸ்ட் 2020 இல் இப்படி எழுதுகிறார் : “இரண்டாவது பனிப்போருக்கான (இம்முறை சீனாவுடன்) வாய்ப்புகள் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட மிக அதிகம். உண்மையான போருக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகம் என்பதுதான் மிக மோசமானது”. வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் சக்திகளுக்கு இடையேயான தவிர்க்கமுடியாத முறுகல்நிலைதான் இதற்குக் காரணம் என்று சொல்வதில் ஹாஸுக்குத் தயக்கம் இருக்கமுடியுமா என்ன?
சீனாவுக்கு எதிரான தற்போதைய அமெரிக்க வர்த்தக யுத்தம் அமெரிக்கா / கனடா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் என்னும் முத்தரப்பு பன்னாட்டு நிறுவனங்களை தங்களின் உலகளாவிய பொருளுற்பத்தி சந்தைகளில் உள்ள முக்கிய உற்பத்தி இணைப்புகளை சீனாவிலிருந்து அகற்றி அவற்றை தன்னுடைய ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டுள்ள இந்தியா, மெக்சிகோ போன்ற குறைந்த ஊதிய நாடுகளில் கட்டாய இடமாற்றம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவை பலவீனப்படுத்தவும், உலகப் பொருளாதாரத்தின் மீது தனது நிகரற்ற மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டவும் அமெரிக்கா செய்யும் முயற்சியே இது.
ஜூலை 2020 இல், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக்கேல் பாம்பியோ, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் தற்போதைய உணர்வுகளுக்கு குரல் கொடுத்து, உலகப் பொருளாதாரத்தின் மீது “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் [சிசிபி] மேலாதிக்கத்திற்கான வடிவமைப்புகள்” என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்க நூற்றாண்டுக்கு பதிலாக “சீன நூற்றாண்டு” என்று இடமாற்றம் செய்திருக்கிறார். சீனாவின் விரைவான வளர்ச்சியை “சீனா அச்சுறுத்தல்” என்று பாம்பியோ அழைக்கும் நிலையில், வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் வெளியுறவுக் கொள்கை வட்டங்களில் வெளியுறவு வட்டாரங்களில் உலவும் தகவல்களின்படி வாஷிங்டனும், அதன் கூட்டாளிகளும் அரசியல், கருத்தியல், தொழில்நுட்பம், நிதி மற்றும் இராணுவத் தலையீடு இவைகளடங்கிய ஒரு கலப்பின யுத்த மூலோபாயத்தை ஊக்குவிக்கின்றனர். இவை சீனாவின் முன்னேற்றத்தை குறைக்கவும் அல்லது முற்றிலுமாக நிறுத்தவும், அதை மீண்டும் அமெரிக்க மேலதிக்கத்திற்கு அடிபணியச் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. COVID-19 வந்ததிலிருந்து சீனாவைப் பற்றிய அமெரிக்க விமர்சனங்கள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஊடகங்களின் பொதுவான ஆதரவுடன், டொனால்ட் டிரம்ப் முன்வைக்கும் “சீனா வைரஸ்” பிரச்சாரமானது, அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி மக்களிடையே சீனாவுக்கு பாதகமான கருத்துக்களை உருவாக்குவதில் வெற்றி பெற்ற ஒரு பிரச்சார நடவடிக்கையாக அமைந்துவிட்டது.
அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவை மட்டுமே நம்புவதற்கு பதிலாக, இந்த போர்க்குணமிக்க சீன எதிர்ப்பு நிலைப்பாடு இப்போது இரு கட்சிகளின் அரசியல் நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சீனாவின் எழுச்சியுடனும், தேய்ந்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்துடனும் தொடர்ப்புப்படுத்தி, உலகளாவிய பொருளாதார நிலைகளின் விளைவுகளைக் கண்டு அஞ்சும் பல அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பணக்கார நலன்களால் இந்நிலைப்பாடு ஆதரிக்கப்படுகிறது. அதிகக் கட்டணங்கள் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை கருத்தில்கொண்டு, பல நிறுவனங்களும் இப்போது தங்கள் உற்பத்தியை சீனாவிலிருந்து இடமாற்றம் செய்ய முயல்கின்றன. சில பெரிய பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள், குறிப்பாக உயர் தொழில்நுட்பத்துறையில் ஈடுபட்டுள்ளவை, லாபகரமான சீன சந்தையை இழப்பது குறித்து இயற்கையாகவே கவலை கொண்டிருக்கின்றன. இருப்பினும், இப்பனிப்போரை விரும்பாத வேறு சில பெரிய நிறுவனங்கள் இதுவரை அமைதியாகவே இருந்துவருகின்றன.
சீனாவிலிருந்து விலகிச் செல்லும் இந்த மூலோபாய உத்தியானது, உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச ஆதிக்கத்தை மீட்டெடுப்பதற்காகவும், சீனாவைப் பலவீனப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ பலப்படுத்தலின் ஒரு நடவடிக்கையாக டிரம்ப் நிர்வாகம் 2021 ஆம் நிதியாண்டில் 705 பில்லியன் டாலர் நிதியை கோரியிருப்பதையும் நாம் இணைத்துப் பார்க்கவேண்டும். சீனாவின் மீதான அமெரிக்காவின் முறுகல் நிலை, சீனா கோரும் தென்சீனக் கடல் ஆதிக்கத்தோடு ஒப்பிட்டு, அதைக் கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தப்பட்டாலும், டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்க வர்த்தகக் கொள்கையின் பொறுப்பாளரான பீட்டர் நவரோ போன்ற நபர்கள் சீனாவுடன் வரவிருக்கும் மேலாதிக்கப் போர்கள் என்று வெளிப்படையாகக் குறிப்பிடுவதில் இது ஆழமான வேர்களைக் கொண்டுள்ளது. இச்சூழலில்தான் சீனாவை ராணுவரீதியில் கட்டுக்குள் கொண்டுவர புதிதாக உருவாக்கப்படும் இந்திய-பசிபிக் கூட்டணியில் இந்தியாவையும் கொண்டுவருவதற்கு அமெரிக்கா எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
சீனாவைப் பொறுத்த அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயத்தின் இம்மாற்றத்திற்கு முக்கியமான காரணம் சீனாவின் அபரிதமான வளர்ச்சி மட்டுமே. ஆண்டுதோறும் 6 சதவீதமாக வளரும் சீனப்பொருளாதாரம் ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது, அதே நேரத்தில் ஆண்டுதோறும் 2 சதவிகிதமாக வளரும் அமெரிக்கப் பொருளாதாரம் ஒவ்வொரு முப்பத்தைந்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே இருமடங்காகிறது. கூடுதலாக சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, சீனா, தன் வளர்ச்சிக்கு விலையாக இதுவரை மேற்குநாடுகளுக்குக் கொடுத்துவந்த பெரும்தொகை கணிசமாகக் குறைந்திருக்கும் அதேசமயத்தில், மேற்கத்திய நிறுவனங்களின் தொழில்நுட்ப ஏகபோகத்தையும் சீனா தகர்த்திருக்கிறது. ஆகவே, சீனா தடுத்து நிறுத்த முடியாத ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. இன்னமும்கூட தனிநபர் வருமானத்தில் அளவிடப்படும்போது ஒப்பீட்டளவில் ஏழை நாடாக அது இருந்தாலும் கூட, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா இப்போது உருவெடுத்திருக்கிறது.
வாஷிங்டன் தலைமையிலான முத்தரப்பு / முக்கூட்டு நடவடிக்கைகள் பெய்ஜிங்கை எந்த அளவு பாதிக்கும்? இருபதாம் நூற்றாண்டின் பனிப்போர் ஆண்டுகளைப் போல, சீனாவை “கட்டுப்படுத்துதல்” அல்லது தனிமைப்படுத்துதல் என்று அழைக்கப்படும் ஒரு மூலோபாய உத்தி இனி சாத்தியமில்லை. ஏனெனில் சீன உற்பத்தி முழு உலகப் பொருளாதாரத்தோடும் பின்னிப் பிணைந்திருக்கிறது. பாம்பியோ சொல்வது போல், “இது கட்டுப்படுத்துவதைப் பற்றியது அல்ல. கம்யூனிஸ்ட் சீனா ஏற்கனவே எங்கள் [பொருளாதார] எல்லைகளுக்குள் உள்ளது”. மாறாக, சீனாவின் முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக இருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (சி.சி.பி)யின் பிடியை உடைத்து புதிய பனிப்போரில் சீனாவை தோற்கடிப்பதே அமெரிக்காவின் மூலோபாய உத்தியாக இருக்கமுடியும். எனவே, சீனப் பொருளாதாரம் மீதான வாஷிங்டனின் தாக்குதல்கள் முதன்மையாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தாக்குதல்களாக கருதப்படுகின்றன. கட்சியின் நம்பகத்தன்மையை சேதப்படுத்துவதும், அதன் வெளி மற்றும் உள் முரண்பாடுகளை பயன்படுத்திக் கொள்வதும் அதன் மூலம் சீன அரசை பலவீனப்படுத்துவதுமே இதன் குறிக்கோள். சோவியத் யூனியனை அகற்றியது போல் அல்லாது, இது அமெரிக்காவையும் உலகளாவிய ஏகபோக நிதி மூலதனத்தையும் உள் சீன நலன்களின் ஆதரவோடு நகர்த்தவும் சீனாவின் அரசு மற்றும் பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் அனுமதிக்கும் வகையில் தொடர்ச்சியான அமெரிக்க (மற்றும் மேற்கத்திய) ஆதிக்கத்தை உறுதிசெய்யும் வகையிலும் அமையும்.
இருப்பினும்கூட ஏகாதிபத்தியத்தின் இப்புதிய மூலோபாய உத்திக்கு எதிராக மகத்தான உள் மற்றும் வெளித் தடுப்புகளை சீனா உருவாக்கியுள்ளது. உலகின் முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் அது முற்றிலும் ஒரு வலைப்பின்னலாகப் பிணைக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கின் பெல்ட் மற்றும் சாலை முயற்சிகள்(Belt and Road Initiatives) சீனாவின் உலகளாவிய புவிசார் அரசியல் நிலையை மாற்ற முடியாத வகையில் விரிவுபடுத்துகிறது, எனினும் எதிர்காலத்தில் சீனா, உலகளாவிய தெற்கின் நாடுகளுடன் கொள்ளும் உறவுநிலையை (கிடைமட்ட அல்லது படிநிலை ஏகாதிபத்தியமுறை) பொருத்தே இது அமையும்.
சீனாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் வெளிப்புற புவிசார் அரசியல் உறவுகளை விட முக்கியமானது சீனப் புரட்சியின் உள்ளார்ந்த மரபு. சீன மக்களிடமிருந்து வலுவான ஆதரவை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி(CCP) தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும், சீனாவில் மூலதனத்தின் பல்வேறு ஊடாடல்களின் வளர்ச்சி இருந்தபோதிலும், சோசலிசத்துடன் தொடர்புடைய பல முக்கிய மூலோபாய-பொருளாதார மாறிகள், மறு உற்பத்திக்கான சமூக வளர்சிதை மாற்ற அமைப்பாக விளங்கும் முதலாளித்துவத்தின் “கட்டுப்பாடற்ற தன்மை” க்குக் காரணமான “விரோத மையவிலக்கு” லிருந்து ஒரு பகுதியை விடுவிக்கின்றன. சீனப்பொருளாதாரத்தின் முதலாளித்துவமற்ற துறையாக அரசுசார் துறைகள் தவிர, அரசுத்துறை வங்கிகள் மூலம் அரசு செய்யும் நிதிக்கட்டுப்பாடும், நிலத்தின் மீதான தனியார் உடைமை இல்லாமையும் அடங்கும்.
அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் நிதிகளின் மீதான அரசின் கட்டுப்பாடானது, முக்கியத் துறைகளில் பொருளாதாரத் திட்டமிடலை, அதிக முதலீட்டு விகிதத்துடன் தொடர அனுமதிக்கிறது. அதே நேரத்தில், வங்கிகளின் மீதான அரசின் உரிமையானது, சீனாவின் பணமதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், டாலரின் நிதி மேலாதிக்கத்திற்கு எதிராக தன்னைக் காத்துக் கொள்ளும் திறனுக்கும் அடிப்படையாகும். சமீர் அமீன் இறப்பதற்கு சற்று முன்னர் வாதிட்டபடி, வங்கி நிதி மீதான அரசக் கட்டுப்பாட்டை சீனா நீக்குவதானது, பொருளாதார ரீதியாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கு சமமானது. சீன வளர்ச்சி மாதிரியை அழிக்கக்கூடிய ஆயுதத்தை, உலக மூலதனத்தின் ஏகாதிபத்திய மையத்திடம் ஒப்படைப்பதற்கு சமமானது இது.
சீனாவில் நிலத்தின் மீதான சமூக உரிமையானது, தற்சமயம் கிராமப்புற சமூகங்களால் ஓரளவு நிர்வகிக்கப்பட்டு வரும்போதிலும், 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீட்டு பொறுப்புமுறை சீன வேளாண் உற்பத்தியில் மிகப்பெரும் வெற்றியை தந்துள்ளது. உலகின் மொத்த விவசாய நிலமான 6 சத நிலத்தில், உலகின் 22 சதவிகித உணவு உற்பத்தியை சீனா சாதித்திருக்கிறது. சோசலிச நிலமானியமும் கூட அடிப்படையான கிராமப்புற புனரமைப்பு இயக்கம் வளர்வதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது. கிராமப்புற சீன சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற சோசலிச அடித்தளங்கள், கிராமப்புற புனரமைப்பு இயக்கத்தை உருவாக்குவதில் சாத்தியமாக்கியதன் வழி, கூட்டுத் தேவைகளைப் பெறுவதற்கான தொடர்ச்சியான மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கிறது. அரசின் கிராமப்புறப் புத்துயிர்ப்பு மூலோபாய உத்திகளின் மூலம் 2017 முதல் இது பலப்படுத்தப்பட்டுள்ளது. “சுற்றுச்சூழல் நாகரிகத்தை” உருவாக்குவதற்கான தனது இலக்கை நோக்கி சீனா முன்னேறுகிறது என்னும் எந்த உரிமை கோரலும் இந்த கிராமப்புற புனரமைப்போடுதான் தொடங்கமுடியும்..
இந்த ஒட்டுமொத்த வரலாற்று சூழலில் சீனத் தலைமையின் மூலோபாய உத்தி என்ன? இந்தக் கட்டத்தில் திட்டவட்டமான முடிவுகள் எதுவும் சாத்தியமில்லை. கடந்த காலங்களில், கூட்டு நில உடைமை மற்றும் உற்பத்தி சாதனங்களின் மீதான அரசு உரிமை, குறிப்பாக பெரிய வங்கிகளின் மீதான அரசின் உரிமை, அரசு மற்றும் தனியார் நலன்களிடமிருந்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன, ஆனால் இறுதியில் அவை பாதுகாக்கப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் நிதிமயமாக்கலினால் சீனப் பொருளாதாரம் சமத்துவமின்மையை கொண்டிருப்பதாக வகைப்படுத்தப்படுகிறது. உலகப் பொருளாதார( பண்ட) இணைப்புசங்கிலியின் ஒரு கண்ணியான சீனாவின் ஆகப்பெரும் தனியார்துறையின் புலம்பெயர் தொழிலாளர்கள், கார்ப்பொரேட்டுகள் வழி உலகின் வடக்கு(செல்வந்த) நாடுகளால் கடும் சுரண்டலுக்கு ஆட்படுகிறார்கள். முரண்பாடாக, சீனாவின் ஏகபோக மூலதனத்தின் மேல் தாக்குதல் தொடுக்கும் அமெரிக்க மேலாதிக்கத்தை சமாளிக்க உலகளாவிய தொழிலாளர் நடுவர் மன்றத்தில் சீனா வகிக்கும் பங்கு முக்கிய பங்காற்றுகிறது. எனவேதான் ஒரு மாற்றுப் பாதையைக் காண சீனா கட்டாயப்படுத்தப்படுகிறது.
வேகமாக மாறிவரும் இந்த உலகளாவிய சூழ்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் சீனாவில் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் பங்கை புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தையும், அரசுச் சொத்தின் முக்கியத்துவம் மற்றும் கிராமப்புற புத்துயிர் பெறுதலுடன் இணைந்த, புதிய பாரம்பரிய பொருளாதாரத்தின் உச்சக்கட்ட தாராளவாதத்தின் நிராகரிப்பையும் வலியுறுத்தியுள்ளார். உலகப் பொருளாதாரத்தில், வளர்ந்துவரும் ஏகாதிபத்திய மூலதனத்தின் விரோதப்போக்குக்கு முகம்கொடுக்கும் வகையில், சீனா தனது அமைப்பின் முதலாளித்துவமற்ற மூலாபாயக் கூறுகளை பாதுகாக்க முயல்வதின் அனைத்து அறிகுறிகளும் இப்போது தெரிகின்றன. மக்களை தங்களின் இருப்பிடங்களிலேயே தயார் செய்யும் புரட்சிகர மக்கள் யுத்த மாதிரி ஊக்குவிக்கப்பட்டதும், அதன் வெற்றியுமே, கோவிட் 19 க்கான சீனாவின் பதிலாக அமைந்தது. இது அரசியலின் உள் திடத்தையும், மக்களின் புரட்சிகரத் தன்மையையும் சுட்டிக் காட்டுகிறது.
இந்த சிக்கலான சூழலில், மார்க்சிய விமர்சனப் பகுப்பாய்வு மூலம் சீனாவின் மாறும் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதும், இந்த வரலாற்றுத் தருணத்தில், புதுப்பிக்கப்பட்ட தீவிரமான, சமத்துவ மாற்றத்தின் சாத்தியக்கூறுகளை அங்கீகரிப்பதும் மிக முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம்.
(மூலக்கட்டுரையை வாசிக்க – https://monthlyreview.org/2020/10/01/china-2020-an-introduction/)