தன்னோடு பேசுதல் – ஷெமிலி பி ஜான்
தமிழில் ஆர். பாலகிருஷ்ணன்
ஷெமிலி பி ஜான் ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். கிழக்காசிய நாட்டில் பணி புரியும் இவர் அங்குள்ள பிரபல ஏடுகளில் படைப்புகளை எழுதி வருபவர். கவிதை இவரது முக்கியப் படைப்பு. ஆங்கிலக் கல்வியைக் கற்றதோடு அதில் இலக்கிய முதுகலைப் பட்டம் பெற்றவர். கேரளம் இவருக்குத் தாய் வீடு. பொதுவாகப் புலம் பெயர் மனிதர்களின் ஏக்கம் இவர் படைப்புகளில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. பஹரைனிலிருந்து வெளியாகும், GULF DAILY NEWS இவர் படைப்புகளைத் தாங்கி வந்துள்ளது.
தன்னோடு பேசுதல் என்ற கவிதைத் தொகுப்புக்கு சொந்தக்காரர் ஷெமிலி பி ஜான். மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர். அவர் ஆங்கிலத்தில் soliloquy என்ற தலைப்பில் எழுதிய கவிதைகளை இங்கு தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றேன். இந்தக் கவிதைகள் பலவும் அதீத படிமக் கூறுகள் உள்ளன எனலாம். படிமங்கள் பெரும்பாலும் பெண் சார்ந்தவையாக உள்ளன. ஒரு பெண் ஒரு உயிராக எதாவது தேடல் உள்ளவரா என்ற வினாவிற்கு விடை தேட இக்கவிதைகள் முயல்கின்றன எனலாம். இயற்கையின் பல் கூறுகளும் பெண் மயமாகவே காணப் படுகின்றன. இயற்கையின் அனைத்து வடிவங்களும் பெண்ணால் பார்க்கப்படும் படிமங்களாகவே உள்ளன. பெண் இந்த இயற்கையின் கூறுகள் முன் ஒரு உயிராக நிற்கிறாள். இயற்கை பெண் உணர்வுகளால் விளக்கப்பட இயலுமா? என்ற கேள்வி இக்கவிதைகளில் தொக்கி உள்ளது. உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இயற்கையின் அம்சங்களாக ஒளி, இருள், நிழல், மலர்கள், தாவரங்கள், நீர் நிலைகள் ஆகியன உள்ளன. அன்பு, காதல், மட்டற்ற காமம், வன்புணர்வு, நட்பு, சகோதரத்துவம் ஆகியன உணர்வுகளாக உள்ளன. இவை யாவருக்கும் உள்ள உணர்வுகள் என்ற போதும் பெண் நிலைவாதம் மாற்றுக் குறியீடுகளைக் கொண்டு இயங்குகிறது. பெண்ணின் இச்சை,ஏற்பு இயலாத கல்வி, செல்வம், ஒழுக்கம் ஆகியன தட்டையானவை என்பதை பெண்நிலைவாதமாக அவர் வலியுறுத்தும் போது அவர் நவீனப் பெண் நிலைவாதியாக உணரப் படுகிறார். சிறுமிகள், மனைவிகள், காதலிகள் ஆகியோர் வெவ்வேறு பெண் வடிவில் உள்ளவர்கள் எனினும் பொதுவான உணர்வுகளால் ஒத்த நீரோடையினில் உள்ளவர்கள் ஆவர். இவர்கள் மீது பொது மற்றும் குடும்ப வெளிகள் செலுத்திடும் அதிகாரம் மற்றும் வன் புணர்வு ஆகிய கொடுமைகள் ஒற்றைப் பரிமாணம் உடையவை. ஆண் தன்மை மட்டுமல்ல அதிகார முகம் கொண்டவை. எனினும் ஆண் பல்வேறு வடிவங்களில் இங்கு பெண்ணுக்கு வேண்டியவனாகவே தெரிகின்றான். அவனிடம் அமைப்புகள் சாராத நல்ல நடத்தைகள் உள்ளன. அவன் நம்பிக்கைக்கு உரியவனாகவும் இல்லாதவனாகவும் இருப்பதற்குக் காரணம் அவன் சார்ந்த அமைப்புதான் என்ற தெளிவான விளக்கம் இவர் கவிதையில் இல்லாத போதும் அவை விளங்கிக் கொள்ளும்படி உள்ளன. அதில் சிக்கல் இல்லை. இன்று எழுதி வரும் மற்றைய பெண் கவிஞர்கள் போன்ற ஒரு தொனி, நடை, அழகியல் ஆகியன இவர் படைப்பில் உள்ளன.
மொழி பெயர்ப்பில் எனக்கு இங்கு எளிமையே தென்பட்டது. காரணம் மலையாளம் நமக்கு அண்டை வீட்டு மொழி அச்சூழலும் அவ்வாறே. ஆகவே இங்கு இவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பினும் ஒரு மலையாளியின் உணர்வுகளையே படமாக்கி உள்ளன. அழகான படிமங்கள் இயற்கை சார்ந்து உள்ளன. எனினும் அவை சில இடங்களில் மிகையாக உள்ளன. ஒரு வேளை சற்று அதிக அளவு, கூடுதலாக ஒன்றைச் சுட்டும் போக்கு இவர் வசம் இருப்பது காரணமாக இருக்கலாம்.
தனிமையோடு பேசுதல் தொகுப்பில் இருந்து இரு கவிதைகளை மட்டும் இங்கு கொடுத்துள்ளேன்.
1.எனது குழந்தைக்கான உலகம்
என்னிடம் ஒன்றும் இல்லை அன்பே, மனச் சோர்வு ஒன்று தவிர
இந்தப் பீதி நிறைந்த உலகினில் வெம்மையில் நடனம் ஆடுதல்
ஆழ் இதயத்தை அரவணைத்துக் கொள்ள
ஒவ்வொருவரும் காணவியலாத நிலப்பரப்புகளை அடையவே
முயல்கின்றனர்.
உனது சிறு பாதங்களை நான் உணர இயலும்
அவை பெரிதும் தவழ விரும்பும் வேட்கையும்
சிறிய இதயத்தின் துடிப்பையும் நான் கிரகிக்க இயலும்
மகிழ்வுடன் காணும் அவற்றை நான் யாவரிடமும் பகிர்ந்து கொள்ள
விருப்பம்.
ஆயின் இவ்வுலகு மிகுந்த சினம் கொண்ட ஒன்று
நான் வியக்கின்றேன் என் இனிய இதயமே மனிதர் இயந்திர
மனிதர்களாய்
ஆகி விட்டனர். அவர்களிடம் உணர்வுகள் உணர்ச்சிகளும் இல்லை
வாழ்வதும் சாவதும் ஏன் என்றும் தெரியவில்லை.
நீ இவ்வுலகின் ஒளியினைக் காணப் பிறந்த போது
வியப்பாய், என் சிறிய அன்பே உன்னைச்
சுற்றியும் ஒரு ஒயாத கோஷம் உலகினில் ஒலிக்கும்
வலிமையுடையது வாழும், வாழப் போராடும்.
உன் குட்டி தேவதை சிரிப்பின் முன் நான் வண்ணத்துப் பூச்சிகள்
மற்றும் மலர்கள் பரப்ப விரும்பினேன். ஆனால் இங்கு
அவ்வாறு எதனையும் காண இயலவில்லை. வலிய தொழிற்சாலைகள்
மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் விழுங்கி விட்டன அவற்றை.
நீ சிரிக்க நான் எனது கனவினையே
அளிக்க இயலும். அமைதி நிறைந்த உலகின் கனவு
வண்ணங்கள் நிறைந்த அவை
உன்னை மனிதனாக ஆக்கும் ஆணாகவும்.
2.வேனில்
மேல் அலையும் ஒளிரும் பளபளப்பான மேகங்கள்
ப்ரகாசிக்கும் பின் சுழலும், சுழன்று ஆற்றல் அடையும்
ஒரு பெரிய பொன் துண்டு நகர்ந்து சிதறுண்டு போவது போல்
பொன் துகளால் எங்கும் வண்ணமிட்டு அலையும்
அங்குள்ள மேகங்கள் செந்நிறமாக உள்ளன
அவை உருக்கும், எரிக்கும் வெயிலில் இருந்து தப்ப நினைக்கின்றன
எனினும் மென் புன் முறுவல் கூடி
மறைக்கவே முயல்கின்றன – தம் துன்பம்
கருத்துத் தடித்த ஒரு கம்பளத்தின் கீழ்.
இருந்து வீழும் தண்னென்ற மழை
களங்கமற்ற இந்த வெய்யிலின் பரந்து விரிந்த வெளி
எங்கும் ஆளும் வலிவை அறிய மாட்டாதன.
குளிர் நிறைந்த உறக்கத்தின் வாயிலாக
அவளிடம் இன்னும் கனவுகள் மிஞ்சி உள்ளன
எல்லையற்றதன் கீழ்
அவளுக்கு வெஞ்சூட்டு ஏற்றி சமயங்களில் தவழ்ந்து கொண்டும் உள்ளன.
கனத்த மேகங்களின் தொட்டிலின் படலத்தின் மீது
நீலமும் வண்ணமும் தலை தாழ்த்தும்
மனிதனும் மிருகமும்
வளைந்து சோம்பல் முறித்து
அதன் அதிகாரம் மிகுதியும் அதிசயமானது
யாரும் அதன் எதிர் நில்ல இயலாது
நாம் அதன் முன் துரும்பு, சிறு பொருள்
பரந்து எரிக்கும் அதன் ஆற்றல் முன்.
ஆர் பாலகிருஷ்ணன் : ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.
E MAIL: rdada2001@gmail.com rdada2001@gmail.com; mobile 9362949350