திரையிலும் உதித்த சூரியன் – கலைஞரின் திரைப்படங்களில் சனாதன எதிர்ப்பும் சமத்துவமும்
கலைஞர் தமிழக அரசியலில்,தமிழ்ச்சமூகத் தளத்தில் ஈடு இணையில்லாத தலைவராக இயங்கியவர் என்பதை தமிழகம் இன்று ஒருமித்த குரலில் சொல்லிக்கொண்டுள்ளதை நாம் பார்க்கிறோம். அதுபோலவே தமிழ்த் திரை உலகிலும் கூட கலைஞருக்கு ஈடாக ஒருவரும் இயங்கியதில்லை என்பதையும் நாம் பார்க்கமுடியும். ஆம் 1947 துவங்கி 2011 வரை அதாவது தனது 24 வது வயதிலிருந்து 87 வது வயதுவரை கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் தொடர்ந்து கதை,திரைக்கதை,வசனம், தயாரிப்பு என தமது தமிழ்த்திரைப்பங்களிப்பைச்செய்துவந்துள்ளார்.
அந்தவகையில் தனது சமூக அரசியல் செயல்பாட்டின் ஒர் அங்கமாகவே சினிமா பங்கேற்பையும் கருதியுள்ளார் என்பதை அவரது தொடர் செயல்பாடு, மற்றும் ஈடுபாடு போன்றவற்றில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம். சிலர் கலைஞரை ஆட்சிக் கட்டிலில் இல்லாத காலகட்டங்களில் எழுத்து, சினிமா என இயங்கியவராக குறிப்பிடுவர். ஆனால் நாம் அவரது கதை வசனத்தில் வெளிவந்துள்ள திரைப் படங்களின் காலவரிசைப் பட்டியலை பரிசீலிக்கும் போது ஆட்சியில் இருந்த, இல்லாத போது என்ற வேறுபாடு பெரிய அளவில் இன்றி அவரது திரைப் பங்களிப்பு தொடர்ந்துள்ளதைக் காண்கிறோம்.
ஆனால் 1995 லிருந்து 2005 வரை பத்து ஆண்டுகள் மட்டும் தமிழ்த் திரையோடு தொடர்பின்றி இருந்துள்ளார். அதில் முதல் 5 ஆண்டுகள் ஆட்சியிலும் பின் 5 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமலும் இருந்துள்ளார். இந்த பத்து ஆண்டு இடைவெளிக்கான காரணம் தெரியவில்லை. ஆகவே சினிமா பங்கேற்பு என்பதும் கலைஞரின் சமூக அரசியல் செயல்பாட்டின் ஓர் அங்கம்தான் என்பதைப் புரிந்து கொள்கிறோம். அத்துடன் கலைஞர் என்ற பெயர் , அடையாளம் நூற்றுக்கு நூறு சதவீதம் அவருக்குப் பொருத்தமானது என்பதோடு அவறன்றி வேறு எவருக்கும் இந்த அளவுக்குப் பொருத்தமானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதையும் நாம் உறுதியாகக்கூறலாம்.
பொதுவாக நூறாண்டு(1916-2015)கால தமிழ்ச் சினிமாவை சுதந்திரப் போராட்டகாலச் சினிமா (1916-1947), திராவிட இயக்ககால சினிமா(1947-1970), நவீன யதர்த்தவாதச் சினிமா(1971-1990), உலகமய காலச் சினிமா(1991-2015) என்று பிரித்துக் கூறுவர். இந்த பகுப்புகளின் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சிலர் தீவிரமாக இயங்கியதையும், அக்கால கட்டத்தில் மட்டுமே அவர்கள் கோலோட்சியதையும், அடுத்த கட்ட சினிமாக்களில் அவர்களால் தொடர்ந்து நிற்க முடியாமல் காணாமல் போய்விட்டதையும் நாம் காண்கிறோம்.
ஆனால் கலைஞரோ சுதந்திரப்போராட்ட காலச்சினிமாவுக்குப்பின் திரைத் துறைக்குள் (1947) நுழைந்தாலும், அதன் பிறகு வந்த திராவிட இயக்க சினிமா என்ற அடையாளத்தைக் கட்டமைத்தவர்களில் முதன்மையானவராகவும், அதன் பின் வந்த காலகட்டச் சினிமாக்களிலும் தொலைந்து போகாமல் பயணித்தவராகவும்காணப்படுகிறார்.
சுதந்திரப்போராட்ட காலத்தில் அவர் பள்ளிப்பருவச் சிறுவனாக அவரது சொந்த ஊரில் எழுத்து,பத்திரிக்கை, நாடகம், சுயமரியாதை இயக்க அரசியல் ஈடுபாடு என இயங்கி இருக்கிறார்.மிகச்சரியாக தனது வாலிப பருவத்தில் 23 வது வயதில் சினிமாவுக்குள் நுழைந்த கலைஞர் அதன் வளர்ச்சி மாற்றங்களுடன் பயணித்து நான்கு தலைமுறை நடிகர்கள், இயக்குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து வேலை செய்துள்ளார். இவ்வாறு நான்கு தலைமுறையினருடன் வேலை செய்தவர்கள் மிகக்குறைவே.
உதாரணத்திற்கு தனது தந்தை வயதுடைய உடுமலை நாராயணகவி(1899-1981) பாடல் எழுதிய படத்திற்கு கதைவசனம் எழுதியவர் தனது பேரன் வயதுடைய கவிஞர் பா.விஜய் (1974) நடித்த (இளைஞன் -2011) படத்திற்கும் கதைவசனம் எழுதியுள்ளார். இவ்வாறு மூன்று வெவ்வேறு அரசியல் போக்குடைய காலகட்டச் சினிமாவில் பயணித்த போதும் பிற சினிமாக் காரர்களைப் போல அந்த அந்தக் கால கட்டங்களில் மேலோங்கும் சமூக, அரசியல் போக்குகளோடு சமரசம் செய்து கொண்டு அதில் தங்களைக் கரைத்துக் கொள்வதைப் போலன்றி அதாவது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் ஒர் துரும்பைப் போலன்றி எதிர் நீச்சலிடும் மீனைப்போல கலைஞர் உடன்பாடற்ற அரசியல் போக்குகளின் ஆதிக்கத்தை எதிர்த்து தனது திரவிட இயக்க சமத்துவ கொள்கைகளை வசனங்களாக்கி திரையில் முழங்கினார்.
எடுத்துக்காட்டாக1950 களில் கலைஞரின் சக தோழர்களாக இருந்து திரையில் திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கருத்துகளை முழங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன் போன்றோர் பின்னாளில் ஜாதி,மத,ஆன்மீக சிந்தனைகளில் மூழ்கிப்போய் தடம்புரண்டதையும் நாம் காண்கிறோம். ஆனால் கலைஞர் மட்டும் தனது கொள்கையில் விடாப்பிடியான பற்றுக் கொண்டவராக, தான் இறுதியாக கதைவசனம் எழுதிய திரைப்படம் வரை பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூக நீதி, சமத்துவம், ஆதிக்க எதிர்ப்புக் கருத்துகளை முன் வைத்ததைக் காண்கிறோம். இது பெரியார் கொள்கைகளில் அவருக்கு இருந்த பற்றுறுதியைக் காட்டுகிறது. அவர் பகுத்தறிவுக் கருத்துகளை மட்டுமின்றி ஜாதி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகவும் கதையும்,வசனமும் தொடர்ந்து எழுதியுள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்தது. அதனை அவரது இளமைப் பருவத்தில், திராவிட இயக்ககாலச் சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ்ச் சினிமாவானது திராவிட, பொதுவுடமைக் கருத்தியலை புறந்தள்ளி உலகமய, ஜாதிய கருத்துக்களைப் பேசத்துவங்கிய (சின்னக்கவுண்டர், முதல் மரியாதை, தேவர்மகன், எஜமான்…)1980 களின் இறுதிப் பகுதியிலும் வெளிவந்த தனது ஒரே ரத்தம், நீதிக்குத் தண்டனை போன்ற படங்களில் முன்வைத்தார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும்.
தமிழ்ச் சினிமா வரலாறு 1916 ல் துவங்கினாலும் 1931 ல் அது பேசத்துவங்கிய (முதல் பேசும் படம் காளிதாஸ்) பிறகே பெரும் கவனத்தையும், செல்வாக்கையும் பெற்றது. இத்தகைய தமிழ்ச் சினிமாவுக்குள் கலைஞர் நுழைந்த1947க்கு சற்று பின்பாக தி.மு.க. (1949) தோற்றுவிக்கப் படுகிறது.
1947 ல் கலைஞர் ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களிடம், சினிமாவுக்கு கதை வசனம் எழுத சேலத்திற்குப் போகிறேன் என்று விடைபெற்றுச் செல்கிறார். இது ஒரு வகையில் திராவிடர் கழகத்தில் இருந்து விடை பெற்றுக் கொள்ளும் நிகழ்வாகவும் அமைந்து போனது.
ஆம்1947-ல் துவங்கி 1967-ல் தி.மு.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையிலான இருபதாண்டுகளில் சமூக அரசியல் தளத்தில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டதைப்போன்றே திரைத்துறையிலும் கலைஞர் சுமார் 35 திரைப் படங்களுக்கு கதை, திரைக்கதை,வசனம் எழுதி திராவிட இயக்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.
அதாவது தான் கதை, வசனம் எழுதிய படங்களின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிபாதியை இந்த(1947-1967) இருபது ஆண்டுகளில் எழுதி உள்ளார். ஆக கலைஞர் மிகத் தீவிரமாக ஓர் போர் வீரனைப்போல திரையில் இயங்கிய காலம் இவைதான் என்றால் அது மிகை இல்லை. இதனை கலைஞரின் சினிமாப் பங்களிப்பின் முதற்கட்டம் என்று கூறலாம். அவரது இந்த முதற்கட்டம் திராவிட இயக்க சினிமா என்ற பொதுப் பகுப்புடன் (1947-1970) இயைந்தும் போகிறது.
இனி இந்த முதற்கட்டத்தில் சமத்துவத்தை உயர்த்திப்பிடித்த கலைஞரது திரைப்படங்களில் சிலவற்றை பற்றிப் பார்க்கலாம்.
1) ராஜாராணி; இத்திரைப்படம் 1956 ஆம் ஆண்டு கலைஞரின் கதைவசனத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.
இதில் சிவாஜியும் பத்மினியும் நடித்திருந்தனர். ஏ.பீம்சிங் இயக்கினார்.இப்படம் பால்ய விவாகம் எனும் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தும், விதவை மறு மணத்தை வலியுறுத்தியும், ஆண் பெண் சமத்துவத்தையும் கலைஞர் வசனம் மூலம் பேசிய திரைப்படமாகும். ”விதவை” என்று சொல்வதற்கு மாறாக ”கைம்பெண்” என்று சொன்னால் ஒன்றுக்கு இரண்டாக பொட்டு வைக்கலாம் எனப்பின்னாளில் கலைஞர் எழுதுவதற்கு வெகு காலத்திற்கு முன் 1956 லேயே அதை திரைப்படத்தில் பேசிவிட்டார்.
2)குறவஞ்சி: இது 1960 ல் கலைஞரின் கைவண்ணத்தில் வந்த திரைக்காவியமாகும், இப்படத்தில் சிவாஜி, சாவித்திரி போன்றோர் நடித்திருந்தனர். இயக்கம் ஏ.காசிலிங்கம்.
இப்படம் உயர் ஜாதி (என்று சொல்லப்படும்) மந்திரி மகனுக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதி மீனவப்பெண்ணுக்கும் இடையிலான காதலையும், ஜாதி,தீண்டாமை ஏற்றத்தாழ்வை எதிர்த்து ஜாதி மறுப்பு கலப்புத்திருமணத்தையும் பேசியதோடு ஜாதியைக் கட்டிக்காக்கும் வேதத்தையும், மேல் குலத்தோரையும் எதிர்த்து கலைஞர் போர்முழக்கம் செய்த மிகச்சிறந்த திரைப்படமாகும்,
3)தாயில்லாப்பிள்ளை; இது 1961 ஆம் ஆண்டு கலைஞரது கதைவசனத்தில் வெளி வந்த ஓர் உன்னதத்திரைப்படமாகும். இப்படத்தில் டி.எஸ்.பாலையா, எம்.எஸ்.விஜயாள், ஆர்.எஸ்.மனோகர், கல்யாணக்குமார் போன்றோர் நடித்து இருந்தனர். ஓர் பார்ப்பனக்குடும்பத்தில் நடைபெறும் ஜாதி மீறிய காதல், கல்யாணம் மற்றும் பார்ப்பன அதிகாரம் பற்றியும், பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டையும் கலைஞரது திரைக்கதையில் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்திய திரைப்படமாகும். இயக்கம் பிரசாத்.
பார்ப்பன பாஷையை கலைஞர் மிகச் சிறப்பாகக் கையாண்டு வசனம் எழுதியிருந்ததைக்கண்டு அன்று பார்ப்பனர்களே வியந்து போனதாக திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 4)அவன்பித்தனா: 1966 ஆம் ஆண்டு கலைஞரது திரைக்கதை வசனத்திலும் .ப.நீலகண்டன் இயக்கத்திலும் வெளிவந்த திரைப்படமாகும், இதில் எஸ்.எஸ்.ஆர், சகஸ்ரநாமம், ஆர்.விஜயகுமாரி, டி.எஸ்.பாலையா போன்றோர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகர் எஸ்.எஸ்.ஆர் அழகிரி டீ கடையை நடத்துகிறார், துவக்க காட்சியிலேயே இப்படி ஒரு வசனம் “பாவம் பாட்டாளிகள் பசி எடுக்கும்போது வந்து சாப்பிடட்டும், பணம் இருக்கும்போது கொடுக்கட்டும்” இத்திரைப்படத்தில் ஜாதி மறுப்பு கலப்பு மணத்தையும், வர்க்க சமத்துவத்தையும் கலைஞர் பேசுகிறார்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அறிஞர் அண்ணாவின் கதைக்கு கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய ரங்கோன் ராதா(1956), மா.லட்சுமணன் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதிய எல்லோரும் இன்னாட்டு மன்னர் (1960) போன்ற எத்தனையோ திரைப்படங்களில் , மூட நம்பிக்கை எதிர்ப்பு, உழைப்பின் பெருமை, தமிழ்ப் பற்று, திருவள்ளுவர் புகழ் பாடுதல், வள்ளுவத்தின் சிறப்பைப் பேசுதல், பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தல் என கலைஞர் திரைப்படத்தை தனது கொள்கைப் பிரச்சாரக் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டதற்கு ஏராளமான உதாரணங்களைக்காட்ட முடியும்.
இவ்வாறு 1947க்கும் 1970க்கும் இடையே இன்னும்பல திரைப்படங்களில் கலைஞர் ஆண் பெண் சமத்துவம், சமூக சமத்துவம், வர்க்க சமத்துவம் பற்றிபேசியுள்ளார். ஆனால் சுருக்கம் கருதி இத்துடன் முடித்துக்கொள்வோம்.
இரண்டாம் கட்டம் (1970-1990): இக்காலகட்டத்தில் கலைஞர் சுமார் 25 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இவ்வனைத்து திரைப்படங்களைப் பற்றியும் நாம் இங்கு பேச முடியாது, சுருக்கமாக ஓரிரு படங்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.
1978 ஆம் ஆண்டு வெளிவந்த வண்டிக்காரன்மகன் அண்ணாவின் கதைக்கு கலைஞர் திரைக்கதை வசனம் எழுதி அமிர்தம் இயக்கிய படமாகும், இப்படம் ஓர் ஜமீன்தாரின் ஆணாதிக்கம், ஜாதி ஆதிக்கம், வர்க்கத் திமிரால் பாதிக்கப்படும் ஏழை வண்டிக்காரன் மகன் அப்பண்ணையாரை எதிர்த்துப் போராடி பழிவாங்கும் கதையைச் சொன்ன படமாகும். இதில் ஜெயசங்கர், ஜெயசித்ரா, அசோகன், மனோரமா போன்றோர் நடித்திருந்தனர். இக்காலகட்டத்தில் வந்த திரைப் படங்களில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஓர் திரைப்படம் 1981 ல் கலைஞர் குங்குமம் வார இதழில் தொடர் கதையாக எழுதி பிறகு 1987 ஆம் ஆண்டு கலைஞரால் திரைக்கதை வசனமும் எழுதப்பட்டு மு.க.ஸ்டாலின் அவர்கள் நந்தகுமார் எனும் (அருந்ததியர்)தலித், ஜாதி-தீண்டாமை ஒழிப்பு போராளியாக முக்கிய வேடத்திலும் நடித்து வெளிவந்த ஒரே இரத்தம் திரைப்படமாகும். இப்படத்தில் கார்த்திக், சீதா,மனோரமா, மாதுரி, பாண்டியன், கிஸ்மு,ராதாரவி, வீராச்சமி போன்ற பலரும் நடித்திருந்தனர். ஜாதி, தீண்டாமைக்கு எதிரான கலைஞரது போர்ப் பிரகடனமே இப்படம் என்று சொல்லும் அளவுக்கு மிகத்தீவிரமாக ஒவ்வொரு காட்சியும் அமைந்திருந்தது. ( கலைஞரின் ஒரே ரத்தம் திரைப்படம் குறித்து எனது விரிவான விமர்சனக் கட்டுரை 2019 ஏப்ரல் வெள்ளைக்குதிரை இதழில் வந்துள்ளது).
பின்னாளில் பெரியார் நினைவு சமத்துவ புரம் திட்டத்தை கலைஞர் கொண்டுவந்த போது அதற்கான எண்ணம், ஒரே இரத்தம் திரைப்படத்திற்கு திரைக்கதைவசனம் எழுதும்போதே தனக்கு ஏற்பட்டதாக நெஞ்சுக்கு நீதியில் பதிவு செய்துள்ளார்.
இதே காலகட்டத்தில் வந்த நீதிக்குத்தண்டனை-1987, நியாயத்தராசு-1989 போன்ற திரைப்படங்களும் சனாதனஎதிர்ப்பையும், சமத்துவத்தையும் பேசிய படங்களாகும். மேலும் இக்காலகட்டதில் ஆட்சியாளர்களின் ஊழல், அதிகார முறைகேடு, காவல்துறை அராஜகம் போன்றவற்றையும் எதிர்த்து வசனம் எழுதியுள்ளார்.
மூன்றாம் கட்டம் (1990-2011); இந்த காலகட்டத்தில் தான் கலைஞர் 1995 முதல் 2005 வரை ஒரு பத்தாண்டுகள் திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதாமல் ஒதுங்கி இருந்துள்ளார். 1990-1995 க்கு இடையே இரு திரப்படங்களுக்கும், 2005-2011 க்கு இடையே 7 திரைப்படங்களுக்குமாக மொத்தம் 9 திரைப்படங்களுக்கு திரைக்கதைவசனம் எழுதியுள்ளார்.
இவற்றில் புதியபராசக்தி-1995, கண்ணம்மா-2005, மண்ணின் மைந்தன் -2005, இளைஞன் -2011 ஆகிய படங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை ஆகும்.
புதிய பராசக்தி திரைப்படத்தில் கிராமப்புற பெரிய மனிதர் காவல் துறை துணையோடு ஏழை எளியமக்களை கொடுமைப் படுத்துவதையும், நிலங்களை பறித்துக் கொள்வதையும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்வதையும் எதிர்த்து சின்னச்சாமியும் அவன் மனைவி பராசக்தியும் போராடுவதைக் காட்டியது.
கண்ணம்மா திரைப்படம் இசுலாமியரின் இந்திய தேசப்பற்றையும், அதேசமயம் பாரதி மன்றம் மூலம் கண்ணன் விழாக் கொண்டாடும் வில்லன், நாயகி கண்ணம்மா மீது ஆசிட் வீசக்கூடிய கொடிய மனம் படைத்தவனாகவும் இருப்பதை கலைஞர் எடுத்துக் காட்டியிருந்தார். இறுதிக் காட்சியில் கதா நாயகனும் கதா நாயகியும் டாக்டர் அம்பேத்கர் பெயரில் மருத்துவமனையைக் கட்டி திறப்புவிழா நடத்துவதோடு படம் நிறைவடைகிறது. மண்ணின் மைந்தன் திரைப்படம் ஜாதி மத மோதலைத்தூண்டும் தாதாக்களிடம் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும், ஜாதி வன்முறை கலவரங்களால் பாதிக்கப்படுவது ஏழைகளே என்ற உண்மையையும் கலைஞர் எடுத்துக்காட்டியிருந்தார்.
கலைஞரின் இளைஞன் திரைப்படம், ருஸ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலைத்தழுவி கலைஞரால் எழுதப்பட்ட கதை,திரைக்கதை வசனத்தில் அமைந்த படமாகும். இப்படத்தில் கவிஞர் பா.விஜய், குஸ்பு, நாசர், சந்திரசேகர், சுமன் போன்ற பலரும் நடித்து இருந்தனர். சுரேஸ்கிருஸ்ணா இயக்கியிருந்தார். இப்படம் ஓர் வெளி நாட்டு கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் அதன் கையாட்களுக்கும் தமிழ் நாட்டு தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பேசியது. இறுதியில் தொழிலாளர்கள் போராடி வென்று, கப்பல் கட்டும் நிறுவனத்தைக் கைப்பற்றி தொழிலாளர்களே நிறுவனத்தை நடத்துவதோடு படம் நிறைவடைந்தது.
1947-ல் ராஜகுமாரி திரைப்படத்தில் மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, மக்களாட்சி பற்றி வசனம் எழுதுவதில் துவங்கிய கலைஞரின் திரைப்பயணமானது ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் எதிர்ப்பு என்று சனாதன எதிர்ப்பில் பயணித்து முதலாளித்துவத்தை எதிர்த்து வர்க்க ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவ சமூதாயத்தைப் படைக்கும் இளைஞன் திரைப்படத்தில் வந்து நிறைவடைகிறது. இது கலைஞரின் மனப்போக்கை, இலட்சியத்தை நமக்கு உணர்த்துகிறது.
ஆகவே கலைஞரின் 65 ஆண்டு கால ஒட்டுமொத்த திரைப்படங்களுமே அது சரித்திரப்படங்களானாலும், சமூகப்படங்களானாலும், கதைக்களம் எதுவாக இருந்தாலும் அது சனாதன எதிர்ப்பையும் சமத்துவத்தையுமே மக்களுக்கு போதித்தது என்பதை நாம் உறுதியாகக் கூறலாம்.
மேலும் கலைஞர் புகழுக்காகவும் பணத்திற்காகவும் அல்லாமல் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதற்காகவே உணர்வுப் பூர்வமாக திரைத்துறையில் ஈடுபட்டார் என்பதை நாம் 1970 களுக்குப் பின் வந்த திரைப்படங்களின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. எம்ஜிஆர் பிரிந்து தனிக்கட்சி துவங்கி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், முன்னணி நடிகர்களும் கலைஞரின் திரைக்கதை, வசனத்தைப் பயன்படுத்தவும், பேசி நடிக்கவும் தயங்கியபோது தானே பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களைத் துவங்கி அதன் மூலம் தொடர்ந்து சமூக, அரசியல் படங்களை அமிர்தம்,ராம நாராயணன், எஸ்.ஏ.சந்திரசேகர், போன்றவர்களின் இயக்கத்தில் இரண்டாம் வரிசை நடிகர்களை நடிக்கவைத்து, தனது கொள்கைப் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தார். ஒருபோதும் ஓய்ந்து இருக்கவோ, தனது கொள்கையை மாற்றிக்கொள்ளவோ இல்லை.
மேலும் அவர் திரைப்படங்களுக்கு எழுதிய வசனங்களை அதிகாரம் கிடைத்தபோது செயல்படுத்திக்காட்டவும் செய்தார் என்பதற்கு பெரியார் நினைவு சமத்துவபுரங்களே சாட்சியாக நிற்கின்றன. அதோடு தனது குடும்பமே ஓர் சமத்துவபுரம்தான், அதில் அனைத்துச் ஜாதியினரும் கலந்துள்ளனர் என்று நெஞ்சுக்கு நீதி நூலில் பெருமை பொங்க கூறவும் செய்கிறார். இது தான் ”நான் அய்யங்கார் ஆத்துப் பெண்” என்று ஜாதிப்பெருமை பேசிய ஜெயலலிதா போன்றவர்களிடம் இருந்து கலைஞரை வேறுபடுத்தவும், அவர் எத்தனை தூரம் மேம்பட்டவராக, உண்மையாக வாழ்ந்துள்ளார் என்பதையும் காட்டுகிறது. ஆக சமத்துவத்தின்பால் தீராக் காதல் கொண்டவராக கலைஞர் இருந்தார் என்பதற்கான உதாரணங்களாக அவரது திரைப்படங்கள் அமைந்துள்ளன என்றால் அது மிகை இல்லை .