ஜெயகாந்தன், அனந்தமூர்த்தி : – இருவேறு துருவங்கள்
தமிழின் இலக்கிய ஜாம்பவான் ஜெயகாந்தனையும், கன்னட இலக்கிய உலகின் ஜாம்பவான் யு.ஆர். அனந்தமூர்த்தியையும் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் எனக்கு உண்டு. தங்கள் எழுத்துலகை மீறி சமூகவெளியில் பயணித்த இவ்விருவரின் சிந்தனைப் போக்குகள் வெவ்வேறு திசைகள் கொண்டவை. பார்ப்பனரல்லாதவரான ஜெயகாந்தன் சற்றுத் தூக்கலான பார்ப்பனிய சிந்தனையைக் கொண்டவர். பிறப்பால் பார்ப்பனராக இருந்தபோதிலும், தனது சிந்தனையின், எழுத்தின் ஒவ்வொரு நகர்விலும் பார்ப்பனியத்தை இல்லாமலாக்கியவர் அனந்தமூர்த்தி.
நாடறிந்த ஒரு எழுத்தாளன் என்னும் முறையில் நாடு எதிர்நோக்கும் காத்திரமான சமூகப் பிரச்னைகளுக்கு எதிர்வினையாற்றிய முறையிலும் அனந்தமூர்த்திக்கும், ஜெயகாந்தனுக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளி மிகப்பெரிது. பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னரான சூழலில் இஸ்லாமியர்களின் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டிக்க அனந்தமூர்த்தி என்றுமே தயங்கியதில்லை. 2002 குஜராத் கலவரங்களுக்குப் பொறுப்பான நரேந்திமோடி இந்தியாவின் பிரதமரானால் தான் நாட்டைவிட்டே வெளியேறப்போவதாக அனந்தமூர்த்தி கூறியது வெறும் வாய்ப்பேச்சாக இருக்கமுடியாது. அவரது அறச்சீற்றத்தின் உச்சமாகவே அதனைப் பார்க்கவேண்டும். ஆனால் மோடி அரசை ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்ட ஜெயகாந்தன் அவருடைய ஆட்சியைப் பற்றி மதிப்பீடு செய்வதற்கு கால அவகாசம் மட்டுமே கேட்டார்.
அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலையும், ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கரா நாவலையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கமும் எனக்கு உண்டு. இவ்விரு நாவல்களும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்திருந்தால் இந்த ஒப்புமைக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் கூடத் தோன்றும். எதிரெதிர் திசையில் பயணிப்பது என்ற ஒன்றைத்தவிர இவ்விரு நாவல்களின் சுவையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. சம்ஸ்காரா நாவலை எப்படி ஒரே மூச்சில் படித்து முடித்துவிட முடியுமோ அதுபோலவே ஜெயஜெய சங்கராவையும் படித்து முடித்துவிடமுடியும். தனது இயல்பான எழுத்து நடையில் தனது கூரிய பேனா முனையினால் பார்ப்பனிய உலகின் அருவருப்பான அம்சங்களையும், காலத்திற்கு ஒவ்வாத அதன் பொய்மைகளையும் மையமாகவே கிழித்துக் காட்டியிருப்பார் அனந்தமூர்த்தி. அதனால்தான் சம்ஸ்காரா மிகப்பெரும் அதிர்வுகளை அது வந்த காலத்தில் ஏற்படுத்தியது.
ஜெய ஜெய சங்கராவில் மிகவும் பிரயத்தனப்பட்டு ஆரிய – பிராமணப் பிரச்சாரம் செய்திருக்கும் ஜெயகாந்தனின் எழுத்துகள் சில நேரங்களில் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தவே செய்யும். இவ்விரு இலக்கிய ஆளுமைகளுமே தனித்தனியான செல்திசையைக் கொண்டிருந்தவர்கள். ஆனாலும்கூட அவர்களின் படைப்புகள் வழி அவர்களை அணுகி, அவர்களின் சிந்தனையை உற்று நோக்கும்போது இயல்பாகவே ஒப்புமை உருவாவதை நாம் தடுத்துவிட இயலாது.
பார்ப்பனராகவே இருந்தபோதிலும், சமூகத்தின் வருணப் பாகுபாடுகளை கண்டனம் செய்ய அனந்தமூர்த்தி என்றுமே தவறியதில்லை. சமூகத்தின் மீதான பார்ப்பனர்களின் கட்டுக்கடங்காத ஆதிக்கத்தை அவர் கேள்விக்குட்படுத்தினார். அவரது எழுத்துகள் தார்மீக எதிர்ப்பாகக் கிளம்பி இச்சமூகத்தின் மீது வெடித்துச் சிதறியது. உயர்சாதி ஆதிக்கத்தின் ஒவ்வொரு சடங்கையும் அவர் கேள்விக்கு உட்படுத்தினார். அவருடைய பாரதிபுரம் நாவலையும், சம்ஸ்காரா நாவலையும் நான் வாசித்திருக்கிறேன். சமூகத்தின் உயர்சாதி அழுக்குகளின்மீது அவர்நடத்திய வெடிகுண்டு தாக்குதலாகவே அந்நாவல்களை நான் பார்த்தேன். அப்படித்தான் உயர்சாதி மக்களும் பார்த்தார்கள். அத்தகைய பெருவெடிப்பை நிகழ்த்திக்காட்டிய மாபெரும் சகாப்தவீரனாக அனந்தமூர்த்தி திகழ்ந்தார்.
உயர்சாதி கதாபாத்திரங்கள்தான் அவருடைய கதாநாயகர்கள். வில்லனும் அவர்களே. காலாவதியாகிப் போன மரபின் அழுகியக் கூறுகளைக் கண்டிக்கும் அதே நேரத்தில், உண்மையான மரபின்பால் நேசம் கொண்டவர் அனந்தமூர்த்தி. பாரதிபுரம் நாவலில் ஒரு பிராமண இளைஞன், மேலைக் கல்வியிலும், நாகரிகத்திலும் தோய்ந்து போயிருக்கும் ஒருவன் தனது பூர்விகக் கிராமத்தில் இருக்கும் கோவிலுக்குள் தீண்டத்தகாத இளைஞர்களைக் கொண்டு நடத்தும் புரட்சிகளை அனந்தமூர்த்தி சித்தரித்திருப்பார். நாவலின் கதாபாத்திரங்கள் வெற்றி பெற்றதோ இல்லையோ அனந்தமூர்த்தி வெற்றி பெற்றார். சமஸ்காரா நாவலும் அது வந்த புதிதில் மிகப்பெரும் அதிர்வை பார்ப்பனிய சமூகத்தில் ஏற்படுத்தியது. மிகச்சிறிய நாவல்தான். ஆயிரம் இரண்டாயிரம் பக்கங்கள் இல்லை. ஆனால் அதன் தாக்கம் மிக அதிகம். தனக்கேயுரிய எள்ளலோடு பார்ப்பனிய சமுதாயத்தின் வேர்களைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கியிருப்பார்.
கர்நாடகாவில் ஒரு கிராமத்தின் அக்ரஹாரம்தான் கதையின் மையம். பிராணேஸாசார்யார் பிராமணதர்மத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் அக்ரஹாரத்தின் மதிப்பிற்குரிய பிராமணர். பிராமண தர்மத்திற்கெதிராக செயல்படும் ஒழுங்கீனம் பிடித்த நாரணப்பா அக்ரஹாரத்தில் வசிக்கும் முக்கியமான பாத்திரம். சனாதன மதத்தின் அனைத்து விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு, குடி, மாமிசம், பரத்தைகளோடு கும்மாளமிட்டு வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் என்னும் மந்திரத்தை ஓதுவதன் மூலம் தனக்கென அக்ரஹாரத்து இளைஞர்கள் மட்டுமல்ல, வேறு சாதி இளைஞர்களையும் கவர்ந்திழுத்து இசையின் மூலமாக, கூத்தின் மூலமாக தன் வாழ்வை இன்பமாகக் கழிப்பவர். தான் சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டால் இஸ்லாத்துக்குப் போய்விடுவேன் என பயமுறுத்தியே தான் வாழ்ந்த காலத்தில் தன்னை யாரும் பிராமண மதத்திலிருந்து சாதி விலக்கம் செய்யாமல் பார்த்துக்கொண்டவர்.
பிளேக் நோய் கண்டு நாரணப்பன் அக்ரஹார வீட்டில் செத்துப்போய்விடுகிறார். நாரணப்பனின் உறவினர்களும் அந்த அக்ரஹாரத்தில் இருந்தாலும், சாதிப் பிரஷ்டம் செய்யாத போதிலும் அவரது சவத்தை எரியூட்ட அக்ரஹாரத்து வாசிகள் யாரும் முன்வரவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று பிராணேஸாச்சார்யாவுடன் நீண்ட ஆலோசனைகள் செய்கிறார்கள். ஒரு சமூகத்தின் நடைமுறைச் சிக்கலுக்கான தீர்வை வேதத்தில், தர்ம சாஸ்திரத்தில் சல்லடை போட்டுத் தேடும் ஆச்சார்யார் ஆற்றின் அக்கறையில் இருக்கும் அனுமன் தெய்வத்திடம் தீர்வு வேண்டி முறையிடச்செல்கிறார். ஒரு சவத்தை எரியூட்ட மறுத்து தெய்வத்திடம் தீர்வு நோக்கிச் செல்லும் வேடிக்கையான அக்ரஹாரத்து மனிதர்களைக் கண்முன் நிறுத்துகிறார் அனந்தமூர்த்தி. எவ்வித தீர்வையும் காணாத பிராணேஸாசார்யார் வழியில் தன்னை நாரணப்பனின் ஆசை நாயகியான சந்திரியிடம் ஒப்படைக்கிறார்.
பிராணேஸாசார்யாவிடம் தீர்வு கிடைக்காத நிலையில் அக்ரஹாரத்து மனிதர்கள் தங்களது பீடத்தின் தலைவரை சந்திக்கச் செல்கிறார்கள். சாவின் விளிம்பில் நிற்கும் தனது மனைவியைக் கவனித்துக் கொள்ளும் பொருட்டு ஆச்சார்யார் மட்டும் அவர்களோடு செல்லவில்லை. தனக்கு நேர்ந்த புது அனுபவத்தை மறைக்கமுடியாமலும், உண்மையை ஒப்புக்கொள்ள முடியாமலும் அக்ரஹாரத்தின் தனிமை வெம்மையில் திணறுகிறார் ஆச்சார்யார். அக்ரஹாரத்து வீடு ஒன்றில் பிணம் நாறுகிறது. எலிகள் சுருண்டு சுருண்டு விழுந்து செத்துப்போகின்றன. பிளேக் வேகமாகப் பரவுகிறது. பிணத்தை எரியூட்டாமல் அப்பிணவாடையால் அக்ரஹாரத்தை வட்டமிடும் கழுகுகளைக் கண்டு அதைக் கடவுளின் வாகனம் என்று கைகூப்பித் தொழும் அவலத்தை அனந்தமூர்த்தி காட்டுகிறார். அக்ரஹாரம் நாறுகிறது. கழுகுகள் எல்லா வீடுகளிலும் கிடக்கும் செத்த எலிகளைக் கொத்திக் கொத்தி தங்கள் உணவாக்குகின்றன.
சம்ஸ்காராவின் பிரேணேஸாசார்யாரோடு ஜெயஜெய சங்கராவின் மஹாலிங்கம் ஐயரையும், சனாதன மத எதிர்ப்பு பிரச்சாரம் என்னும் கூறை மட்டும் எடுத்துக் கொண்டுப் பார்த்தால் நாரணப்பாவோடு சதாசிவம் ஐயரையும் ஒப்பிட்டுப்பார்த்து ரசிக்கலாம். பிராமண தர்மத்தைப் பின்பற்றுவதிலும், அமல்படுத்துவதிலும், அதன் மரபுக்குச் சிறு தீங்கு அண்டாமலும் பாதுகாத்து வந்தவர்கள் பிரேணேஸாசார்யாவும், மஹாலிங்க ஐயரும். நாரணப்பனின் உடலை அக்ரஹாரத்திலேயே போட்டுவிட்டு, தனது மனைவியின் சவத்தை மட்டும் எரியூட்டிவிட்டு நாரணப்பன் விஷயத்தில் தர்ம சாஸ்திரத்தில் ஏதும் சொல்லவில்லை என்ற சாக்கிட்டு, அக்ரஹாரத்தை விட்டே அகலும் ஆச்சார்யார் ஒருபுறம். தனது தம்பி சதாசிவ ஐயர் சுதேசி சக்திகளோடு சங்கரபுரத்தில் ஏற்பாடு செய்திருக்கும் லிங்கேஸ்வரர் ஆலய நுழைவுப் போராட்டத்தையொட்டி பிராமணதர்மமும், அக்ரஹாரத்தின் புனிதமும் தனது தம்பியால் கெட்டுப்போவதைத் தான் பார்க்கக்கூடாது என்னும் எண்ணத்தில் பெரியவாளின் உத்தரவுப்படி தனது அக்ரஹாரத்தை விட்டு நீங்கி காசி சங்கர மடத்திற்குச் செல்லும் மஹாலிங்க ஐயர் மறுபுறம். தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்படும் இஸ்லாமியர்களை தனது அக்ரஹாரக் கோவில் குளத்திற்குள் அழைத்து வந்து, மரபுக்கு எதிராக அங்கு வாழும் மீன்களைப் பிடித்து விடுவது, மாமிசம் சாப்பிடுவது, சமூக சீர்திருத்தம் என்னும் பெயரில் பிராமண ஒழுங்கிற்கு மாறுபாடான அனைத்து செயல்களையும் செய்வது என்று நாரணப்பன் ஒரு பக்கம். தேசசேவை என்னும் பெயரில் சங்கரபுரத்திற்கு புறத்தே இருக்கும் சேரிவாழ் மக்களுக்காக மூங்கில்குடி ஆஸ்ரமம் அமைத்து தனது குடும்பத்துடன் அங்கேயே குடியேறும் சதாசிவ ஐயர் மறுபுறம். நாரணப்பனின் ஆசை நாயகியான சந்திரியிடமே பிரேணேஸாசார்யார் தன்னைப் பறிகொடுத்து தான் இதுகாறும் சேர்த்து வைத்திருந்த ஆச்சார ஆஸ்திகளையும் பறி கொடுக்கிறார். மனைவியின் சவத்தை எரியூட்டிய பிறகு இலக்கில்லாமல் அலைகிறார். மனைவியின் துக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் தீட்டுச் சடங்கு நாள் கழியும் முன்னரே, தன்னை யாரும் அடையாளம் காணாதவாறு மறைந்து மறைந்து கோவிலின் மடப்புறத்தில் உணவு உட்கொள்கிறார். அவரை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு பிராமணரிடமிருந்து தப்பித்து தான் செய்த அனைத்து தவறுகளையும் ஒப்புக்கொள்ள தனது கிராமம் திரும்புகிறார். இத்தோடு சம்ஸ்காரா நிறைவடைகிறது. சனாதன ஆச்சாரங்களை மரபோடு வர்ணிக்கும் அனந்தமூர்த்தி, அதன் அழுகிப்போய்கிடக்கும், முடை நாற்றம் வீசும் மன விகாரங்களையும் பேசுகிறார். பார்ப்பனியம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள வீழ்ச்சியைப் பற்றியும், அதன் விளைவான பஞ்சமர்களின் கொடுமையான துன்ப துயரங்களையும் காட்சிப்படுத்த அவர் தவறவில்லை.
ஆனால் ஜெயகாந்தன் அப்படியில்லை. அவர் பார்ப்பனியத்தைத் தூக்கிப்பிடிக்கிறார். தொடக்ககாலத்தில் கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டு விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியிருப்பார் சிறுகதை ஆசிரியர் ஜெயகாந்தன். கால ஓட்டம் அப்பிம்பத்தை உடைக்கிறது. சங்கர மடத்தின் ஆசியுடன் ஜெய ஜெய சங்கர எழுத ஒப்புக்கொண்டு எழுதி முடிக்கிறார்.
சங்கரபுரம் என்னும் ஊரின் அக்ரஹாரத்தின் சீரழிவுக்குக் காரணம் சதாசிவ ஐயரும், நாத்திகர்களும், சுதேசிகளும் ஏற்பாடு செய்யும் லிங்கேஸ்வரர் ஆலய நுழைவுப் போராட்டம்தான் காரணம் என்கிறார். ஆலயப்போராட்டம் நடைபெறுவதற்கு முன்னரே தனது மகனான சங்கரனை சங்கர மடத்தில் விட்டுவிட்டு தனது மனைவியோடு காசி செல்கிறார் மஹாலிங்கம் ஐயர். மஹாலிங்கம் ஐயர் சென்ற பின்பு சாதி விலக்கம் செய்யப்படும் சதாசிவம் ஐயர் சங்கராபரண ஆற்றின் அக்கறையில் இருக்கும் சேரியில் மூங்கில் குடி ஆசிரமம் அமைக்கிறார். உண்மையான காந்திய சேவையில் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் அவர் தனது மகளை சங்கரனின் தோழனும், தீண்டப்படாதவனுமாகிய ஆதிக்கு மணம் முடிக்கிறார். சங்கரனும்,ஆதியும் பால்யகாலத் தோழர்கள். தொட்டுக்கொள்ளாத தோழர்கள். சங்கராச்சாரியராக பரிணாமம் பெற்றிருக்கும் சங்கரன் சங்கரபுரத்திற்கு அருகில் இருக்கும் ஆதியின் ஊருக்கு வருகிறார். ஆதியை அடையாளம் கண்டு கொள்கிறார். ஆதியைச் சந்திக்கிறார். ஆதியின் மனைவியும் தனது சகோதரியுமான சுதந்திரதேவியையும் அவர்களுடைய குழந்தைகளையும் சங்கரர் சந்திக்கிறார். சிங்கராயர் என்னும் விடுதலைப்போராட்ட வீரரின் மகனான சத்தியமூர்த்தியின் ஆதர்ச சீடர்களாக ஆதியின் மகன் மகாலிங்கமும், பண்டிதரின் மகளான உமாவும் திகழ்கின்றனர். தன்னால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மகாலிங்கம் சிங்கராயரின் “மனவெளி” இல்லத்தில் வசிப்பது அறிந்து மனவெளி இல்லத்திற்குச் செல்கிறார் ஆதி. தனது தீவிர இடதுசாரி சிந்தனைகளுக்காக சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டு ஆறு மாதத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறான். அவன் சிறையில் இருக்கும் சமயத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்படுகிறது. திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொகையாகக் கைது செய்யப்பட்டு அவன் தங்கியிருக்கும் சிறையில் உள்ள சித்திரவதைக் கொட்டிலில் அடைக்கப்படுகிறார்கள். இரவு முழுவதும் அவர்கள் சித்திரவதைச் செய்யப்பட்டு தாங்கள் பொது வாழ்விலிருந்தும் அரசியலிலிருந்தும் வெளியேறிவிடுகிறோம் என்ற உறுதி மொழி அளித்தால் மட்டுமே சித்திரவதையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். இதை எதிர்க்கும் சத்தியமூர்த்தி சிறை அதிகாரியான தனது நண்பன் மூர்த்தியிடம் தீவிரமாக முறையிடுகிறான். தான் ஒரு அம்பு தான் என்றும் எய்பவர்கள் வெளியே அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றும் மூர்த்தி சத்யமூர்த்திக்குத் தெரிவிக்கிறான். அவசரநிலை காலத்தில் மகாலிங்கமும், உமாவும் தலைமறைவாக இருக்கிறார்கள். அவசரகால நிலையை எதிர்த்தும், பாசிசத்தை நோக்கிச் செல்லும் அதிகார வர்க்கத்தை எதிர்த்தும் இவர்கள் மறைமுகமாக வேலை செய்கிறார்கள். மனவெளி இல்லத்தை விட்டு விட்டு சதாசிவம் ஐயர் ஏற்படுத்தி இருந்த மூங்கில் குடி ஆஸ்ரமத்தை புதுப்பித்து அங்கே குடியேறிவிடுவது என்னும் சிங்கராயர், ஆதி, பண்டிதர் இவர்களின் முயற்சிகளுக்கு அவசரகால சூழல் தடை போடுகிறது. தனது சிறு பிராயத்தில் சங்கரனோடு ஆற்றங்கரையில் கோடு தாண்டாமல் விளையாடியதையும், சங்கரன் பயிற்றுவித்த பாடங்களையும், கரை புரண்டு ஓடிய சங்கராபரண நதியையும் நினைத்துப் பார்க்கிறார் ஆதி. அது இப்போது வற்றிப் போய் விட்டதையும், கோவிலின் மைதானத்தில் பெரியார் சிலையும், கட்சிக்கொடிகளும் இருப்பதையும் தெரிவித்து எல்லாமே வறண்டு போய்விட்டது என்பதை சூசகமாகத் தெரிவிக்கும் ஜெயகாந்தன், நிமிர்ந்து நிற்கும் கோவிலின் கோபுரம் என்றும் மாறாது நிற்கும், அதாவது இந்த ஆரியமும், சனாதனமும், மரபுகளும் என்றென்றைக்கும் இருக்கும் என்பதை உணர்த்தி நாவலை முடிக்கிறார்.
கடந்த பல நூறு ஆண்டுகளாக இச்சமூகம் வர்ணங்களால், சாதிக் கொடுமைகளால் பிளக்கப்பட்டு ரத்தம் உறிஞ்சப்பட்டு வந்திருப்பதை அவர் உணராமல் இல்லை. ஆனாலும் அவர் அதை நாவலில் காட்டிக்கொள்ளவில்லை. அவருடைய விசுவாசம் மாறிப்போனதற்கான அர்த்தம் இது. பெரியார் என்னும் நாத்திகவாதியால்தான் பூஞ்சோலையாக இருந்த இந்து சமூகம் சிதைந்து போய் விட்டது என்னும் தனது சிந்தனையில் பூத்த பூக்களையும் அவ்வப்போது சிதறடிக்கிறார். ஆதிக்கமாகிப் போன காங்கிரஸ்வாதிகளைச் சாடுகிறார். அவசரநிலைப் பிரகடன நிலையை எதிர்த்தும் எழுதுகிறார். அதற்கெதிராகப் போராடும் இளைஞர்களைப் பற்றியும் எழுதுகிறார். காந்திய வழியில் நடத்தப்படும் ஆசிரம வாழ்க்கை பற்றியும் எழுதுகிறார். ஒரு தலித் எப்படி இருக்கவேண்டும் என்ற அவரது சிந்தனை ஆதி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் நன்றாகவே வெளிப்படுகிறது. ஒரு தீண்டத்தகாதவன் ஆலயத்தில் நுழைய மறுக்கவேண்டும். பெரியவாளின் முன்புறம் பேசும்போது பெரியவாளை இவரோ அல்லது பெரியவாள் அவரையோ தீண்டமுடியாதவாறு தெளிவான ஒரு வேலி இருக்கவேண்டும். குழந்தைப் பருவ சங்கரனை ஆற்றின் சுழலிலிருந்து குடுமியைப் பிடித்து ஆதி காப்பாற்றலாம், ஆனால் அவரது ஈர வஸ்திரத்தை மட்டும் தொடக்கூடாது. ஆனால் அதற்கு ஜெயகாந்தன் ஒரு அற்புதமான ஒரு நொண்டிச்சாக்கை சொல்லுவார். ஆதி தீண்டத்தகாதவன் இல்லையாம். பிராமணன் கூட தீண்டமுடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பவனாம்!!.
அவசரநிலையை ஆதரித்து பண்டிதர் கூறும் கருத்துகள் ஜெயகாந்தனின் கருத்துகள்தான் என்பதையும் பின்னர் அது பற்றி அவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டார் என்பதும், அவசரநிலையின் அலங்கோலங்களுக்குக் காரணம் அன்றைய அதிகாரிகளின் வர்க்கத்தினர்தான் என்றும், அவசர நிலைக்குக் காரணமான இந்திராகாந்தி பரிசுத்தமானவர் என்று ஜெயகாந்தன் பிறிதொரு தருணத்தில் சொல்லுவதும் நாவலில் வரும் மூர்த்தியின் கூற்றுக்கு எதிர்ப்பதமாகவே இருக்கிறது. அவசரநிலைக் காலத்தில் சிறைகளின் கொட்டடிகளில் நடக்கும் சித்திரவதைகளின் மூலம் திராவிட இயக்கத்தவர்கள் அரசியலிலிருந்து வெளியேற்றப்படுவதை ஜெயகாந்தனும் ரசிக்கிறார். ஏனென்றால் திராவிட இயக்கத்தவரை அவர் அந்த அளவு வெறுக்கிறார். அது ஒரு இயக்கமே அல்ல என்னும் மனநிலைதான் அவருக்கு இருந்துள்ளது. பண்டைய இந்தியாவின் சமூக அவலங்களுக்கு பிராமணர்களின் கொடுமை எப்படி காத்திரமான பாத்திரம் வகித்ததோ அதுபோல இன்றைய சமூக அவலங்களுக்குக் காரணமாக பெரியார் என்னும் கொடுமை இருப்பதாக அவர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறார்.
திராவிட இயக்க வெறுப்பு அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதற்கான பதிலைப் பெற அவரது பரிணாம வளர்ச்சியை நோக்கி நாம் போகவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். அதிலிருந்து விலகினார். காங்கிரஸில் இணைந்தார். அவசரநிலையை ஆதரித்தார். பின்னர் அதை எதிர்த்தார். “ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கொளுத்தவேண்டும், நீங்கள் என்ன எழுதிக்கொண்டிருகிறீர்கள்” என்னும் பெரியாரின் கேள்விக்கு எதிர்மறையான பதிலையே தந்தார். சங்கரமடத்தின் விருப்பப்படி ஜெயஜெயசங்கர எழுதினார். ஜெயேந்திர சுவாமிகளின் உலக சமாச்சாரங்களை அவர் கண்டிக்கவில்லை. மாறாக ஆதரித்தார். பெரியாரை சகட்டுமேனிக்கு முற்றும் முழுதாக எதிர்த்ததும், சங்கரமடத்தை முழுதாக ஆதரித்ததும் பார்ப்பனியம் அல்லாமல் வேறென்ன? ஆரம்பம் முதலே திராவிட இயக்கத்தின்பால் இனம்புரியாத வெறுப்பும், பெரியார் மீது பகையும் கொண்டு விளங்கி இந்திய, ஆரிய, இந்துத்துவ தத்துவ மரபின் அடி ஆழத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டு அம்மரபை தூக்கி நிலைநிறுத்துவதே தனது குறிக்கோள் என்று வரிந்துகட்டி எழுதி வந்த ஜெயகாந்தனிடம் பார்ப்பனியம் குடிகொண்டு கோலோச்சியதில் என்ன வியப்பு இருக்கமுடியும்? இந்துயிஸம் என்பது ஒரு மதம் அல்ல. இஸ்லாம், கிறித்துவம் போல அது ஒரு மதம் அல்ல. சொல்லப்போனால் பிற மதத்தவர்களையும் உள்ளடக்கிய ஒரு மதம்தான் இந்துமதம் என்கிறார் அவர். அவருடைய கூற்றுக்கும், ஆர்.எஸ்.எஸின் மோகன் பாகவத்தின் கூற்றுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?எல்லா மதங்களையும் அணைத்துக் கொள்ளுகிற ஒரு மதத்தில் வெறி எப்படி வரமுடியும் என வினவுகிறார் ஜெயகாந்தன். அப்படியானால் அவர் குஜராத் கலவரத்துக்கும், பாபர் மசூதி இடிப்புக்கும் சரியான பதிலைத் தந்திருக்கவேண்டும். மோடியின் இந்துத்வாப் பிரச்சாரத்தை அனந்தமூர்த்தி போல எதிர்த்திருக்கவேண்டும். ஜெயகாந்தனால் அப்படி எதிர்க்கமுடியாது. இந்துத்வாவாதிகள் செய்யும் எதிர்மறைப் பிரச்சாரங்களைக் கண்டித்துப் பேசியிருக்கமுடியாது. அப்படி செய்யவேண்டுமானால் அவர் முதலில் ஆரியத்தையும், இந்துத்துவத்தையும் பிரிந்திருக்கவேண்டும். சங்கர மடத்தைப் பிரிந்திருக்கவேண்டும். முடியாத காரியத்தை ஜெயகாந்தனால் எப்படிச் செய்திருக்கமுடியும்?
ஜெயகாந்தன் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் ஆளுமை என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை. பாரதியும், புதுமைப்பித்தனும் அவரது ஆதர்சனங்கள். இடதுசாரி இயக்கமும், காங்கிரஸ் இயக்கமும் தனது பெற்றோர்கள் என்று அவர் ஒரு முறை சொல்லியிருப்பார். “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” நாவலும் அவருடைய ஹென்றி படைப்பும் மிகவும் உன்னதமானவை. பிற நாவல்கள் குறித்தும்கூட விமர்சனங்களும் உண்டு, பாராட்டுகளும் உண்டு. ஆனால் ஒரு எழுத்தாளன் என்பவன் காலத்தின் கோலங்களுக்கு ஏற்ப வினையாற்றவேண்டும். அறச்சீற்றம் வேண்டும். அந்த அறச்சீற்றத்தில் ஆரியத்தின், திராவிடத்தின் சமூகத்திற்கு ஒவ்வாத கருத்துகள் எரிக்கப்படவேண்டும். பல சமயங்களில் தான் போட்டுக் கொண்ட கோடுகளை விட்டுத் தாண்டாத கோலங்களாகவே ஜெயகாந்தன் இருந்துவிட்டார்.