கவிதாசரண் மறைந்தார்…! புகழஞ்சலி…
கவிதாசரண் இதழாசிரியரும், தமிழ்த்தேசிய உணர்வாளரும், தலித்திய சிந்தனையாளருமான கவிதாசரண் அய்யா நம்மை விட்டுப் பிரிந்தார்.
பேராசிரியர் வீ. அரசு அவர்கள் பதிவு.
அய்யா கவிதா சரண் இன்று(28.11.2021) மாலை 3.15 மணிக்கு மறைந்தார். 90 அகவையை நெருங்கிக் கொண்டிருந்தார். சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ மனையில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த சோகத்துடன் பதிவு செய்கிறேன். நாளை காலை 10 மணி அளவில் இறுதிச் சடங்குகள், திருச்சியில் நடைபெறுகிறது.
எழுத்தாளர் சுகுணா திவாகர் பதிவு.
கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டார்.
*
துயர்மிகு வாழ்விலும், கவிதாசரண் என்னும் இதழை ஓர் எழுத்தியக்கமாகவே முன்னெடுத்து நடத்தி வந்தவர் அய்யா கவிதாசரண்.
நான் நடத்திக்கொண்டிருந்த ஏர் இதழ்களைப் பார்த்தபிறகு, கவிதாசரண் இதழுக்குக் கட்டுரைகளை எழுதுங்கள் என்று உரிமையோடும் அன்போடும் கேட்பார். அதன்படி எனது கட்டுரைகள் சிலவற்றையும் கவிதாசரண் இதழில் வெளியிட்டிருக்கிறார்.
பேராசிரியர்கள் அரச முருகுபாண்டியன், அரங்க மல்லிகா ஆகியோர் மூலமாக நேரிடையாகப் பழகும் வாய்ப்பும் சூழல்களும் அமைந்திருந்தன.
பெண்மொழி குறித்த எனது ஆய்வுநூலை முழுவதுமாகப் படித்துவிட்டு, பல நாட்களில் பல மணிநேரங்கள் தொலைபேசியிலேயே பேசிடுவார். அந்தப் புத்தகம் அவ்வளவு பிடித்துப் போயிருந்தது. அந்த நூலுக்கு மிக விரிவான அணிந்துரையும் எழுதி அனுப்பியிருந்தார்.
என் எழுத்துலகை உள்ளன்போடு நேசித்து ஊக்கப்படுத்திய மிகச் சிலருள், அய்யா கவிதாசரணும் மிக முக்கியமாக இருந்திருக்கிறார்.
சென்னையில் இருந்த தமது வீட்டை விற்றுவிட்டு, தென்பகுதிக்கு வந்து மீதி வாழ்வைக் கழிக்க வேண்டும் என்றே பெருவிருப்பம் கொண்டிருந்தார். அன்னாரது துணைவியார் நோய்வாய்ப்பட்டு இருந்த காலங்களில் அடிக்கடி எம்மோடு பேசுவார்; எம்மையும் அடிக்கடிப் பேசச் சொல்வார். நின்றுபோயிருந்த கவிதாசரண் இதழை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்றும், கவிதாசரண் பதிப்பகம் தொடங்கி பல்வேறு நூல்களைப் பதிப்பித்துக் கொண்டுவர வேண்டும் எனத் திட்டங்கள் பல குறித்தும் நிறையப் பேசியிருக்கிறோம்.
திருமதி கவிதாசரண் அம்மையார் அவர்களது மறைவும் இழப்பும்தான் அய்யா கவிதாசரண் அவர்களை மிக அதிகளவு பாதித்திருக்கிறது. ஏற்கெனவே, தமது மகனை இழந்து தவித்த உணர்வும், பிறகு துணைவியாரை இழந்து தவித்த உணர்வும் அய்யாவை வெகுவாகப் பாதித்திருக்கிறது.
தமது இறுதிக் கால வாழ்வில் மேற்கொண்ட ஒரு சில தனிப்பட்ட முடிவுகளால் சென்னையிலிருந்து வெளியேறி, திருச்சிக்குக் குடிபெயர்ந்து மீத வாழ்வை அமைத்துக்கொண்டார். திருச்சிக்கு வந்தபிறகு, அவருடைய கவிதாசரண் இதழ் வட்டத்தொடர்பிலும் எழுத்து வட்டத் தொடர்பிலும் இருந்தவர்களோடு உறவை நீட்டித்துக்கொள்ள விரும்பாமல், அனைத்து வட்டத் தொடர்புகளையும் தவிர்த்தேதான் வந்தார். பலரது உறவுகள் அவரோடு தொடர்புகொள்ள முடியாமல் தவித்தன. எனினும், எல்லாவற்றையும் அவர் தவிர்த்தேதான் வந்திருக்கிறார்.
எமது நிமிர்வகம் – செம்பச்சை நூலகத் திறப்பு விழாவிற்கு அவரை வரவழைக்க அழைத்துப் பேசியபோதுகூட, இப்போதெல்லாம் பொதுவெளியில் வருவதற்கு விருப்பமில்லை மகராசன் என்றே சொன்னார். திருச்சியில எங்க இருக்கீங்க? வந்து பார்க்கிறேன் என்று சொன்னபோதுகூட அதைத் தவிர்க்கவே செய்தார். ஏதோ ஒன்றுக்காகச் சங்கடப்பட்டுக்கொண்டுதான் எல்லோரையும் தவிர்க்கிறாரோ என்று பல முறை யோசித்ததுண்டு. எனினும், அவரது முடிவில் யாரும் தலையிட முடியாதுதானே.
அன்னார் வாழ்ந்த காலத்தில் ஓர் இதழை எழுத்தியக்கமாய்க் கொண்டு வருவதற்கான மிகச்சிறந்த முன் மாதிரியாய் இருந்துவிட்டுப் போயிருக்கிறார். நானெல்லாம், கவிதாசரண் இதழைப் பார்த்துத்தான் ஏர் இதழையும் அப்படிக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏர் இதழின் உள்ளடக்கச் சாயல்கள் கவிதாசரண் இதழைப் போலத்தான் வெளிவந்தன.
இன்று, கவிதாசரண் என்னும் எழுத்துப் பயணி, தமது பயணத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். ஆயினும், அவரது இதழியல் பங்களிப்பும் எழுத்துப் பங்களிப்பும் தமிழில் நிலைத்திருக்கும்.
போய் வாருங்கள் அய்யா.
அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும் அஞ்சலியும்.
ஏர் மகாராசன்,
மக்கள் தமிழ் ஆய்வரண்,
வேளாண் மக்கள் ஆய்வுகள் வட்டம்.
பேராசிரியர் அ. மார்க்ஸ் பதிவு
மதிப்பிற்குரிய பெரியவர், எழுத்தாளர், இதழ் ஆசிரியர் கவிதாசரண் அவர்களுக்கு அஞ்சலிகள்…..
********
கவிதாசரண் அவர்களின் மரணச் செய்தி நேற்றிரவு அறிந்தேன். ஒரு காலகட்டத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருக்கின்றனர். நான் அவரைச் சந்தித்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகின்றன. அவரின் பிரிக்க இயலாத் துணையான அவரது மனைவி திருமதி கவிதாசரண் மறைந்த பிறகு அவர் சில காலத்திற்குப் பின் திருச்சி சென்றுவிட்டார். தொடர்ந்து பல ஆண்டுகளாக வந்து கொண்டிருந்த அவரது மாத இதழான கவிதாசரணும் நின்று போய் ஆறேழு ஆண்டுகள் ஆகின்றன.
ஆமாம். அவரது இதழ் பெயர் கவிதாசரண். அவர் பெயர் திரு கவிதாசரண். அவரது மனைவி திருமதி கவிதாசரண். அவர் அப்படித்தான் சொல்லிக் கொள்வார். அவரது இயற்பெயர், குலம், கோத்திரம், சாதி இவை யாருக்கும் தெரியாது.
ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான இதழ்களில் ஒன்றாக வந்த கவிதாசரண் இதழ் குறித்த ஆய்வு யாரும் செய்ததாகத் தெரியவில்லை. நினைவிலிருந்து மேலோட்டமாகச் சொல்வதென்றால் அதை இரு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதற்பாதியில் அது ஒரு சாதாரண இதழ். எந்தக் குறிப்பிட்ட முக்கிய பங்களிப்புகளையும் செய்ததாக அதைச் சொல்ல இயலாது. ஆனால் சோவியத் வீழ்ச்சிக்குப் பின் உலக அளவில் பல மாற்றங்கள் ஏற்பட்டதை அறிவோம். பெருங்கதையாடல்களுக்கு இனி காலமில்லை எனச் சொல்லிக் மொண்டிருந்த காலம் அது. தலித் இயக்கம் முதலான அடையாள அரசியல்கள் மேலெழுந்த காலம். நிறப்பிரிகை அந்தக் கால மாற்றத்தின் அடையாளமாக வெளிப்பட்ட ஒன்று. நிறப்பிரிகை நிற்கத்தொடங்கிய அந்தக் காலகட்டத்தில் கவிதாசரண் பெரிய மாற்றத்தைக் கண்டது. தனது பழைய அடையாளத்தைக் கைவிட்டுப் புதிய வரவேற்கத்தக்க அடையாளங்களுடன் அது வெளிப்போந்தது. முதலில் சிறிய அளவில் வந்து பின் அகன்ற வடிவில் வந்த காலத்தில் எனது கட்டுரைகள் நிறைய அதில் இடம் பெற்றன. இந்திய அளவில் தலித் எழுச்சியின் அடையாளமாக வந்த ”போபால் பிரகனம்” குறித்த என் விரிவான கட்டுரையும், நான் மொழியாக்கிய அதன் தமிழ் வடிவமும் அதில்தான் முதலில் வெளிவந்தது. (பின் அது குறு நூலாகவும் வெளிவந்தது.) அயோத்திதாசர் குறித்த என் விமர்சன நோக்கிலான முக்கிய கட்டுரை ஒன்றும் அதில்தான் வெளி வந்தது.
கவிதாசரண் இதழை இப்படிக் காலவாரியாகப் பிரிப்பதை அவர் ஒத்துக் கொண்டதில்லை.
எல்லாவற்றிலும் அவர் ஒரு தனித்துவமான கருத்தைக் கொண்டிருப்பார். ஒருமுறை என் கட்டுரை ஒன்றை வெளியிட்டு அது குறித்த விமர்சனம் ஒன்றையும் கூடவே வெளியிட்டிருந்தார். அந்த விமர்சனத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. என் மறுப்பை அவர் அடுத்த இதழில் வெளியிட்டிருந்தார் என நினைவு.
அவரது சாதி போன்ற அடையாளங்கள், அவரது இயற்பெயர் எல்லாம் யாருக்கும் தெரியாது. அவரது வாழ்வின் ஒரு முக்கிய அடையாளமாக இருந்த பத்திரிக்கையின் பெயர் ‘கவிதாசரண்’. அவரது பெயர் ’திரு கவிதாசரண்’. அவரது மனைவின் பெயர் ‘திருமதி கவிதாசரண்’ என மு.வி.நந்தினி பதிவு செய்த நேர்காணலில் குறிப்பிடுவார்.
இந்திய வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய ஒரு ஆகப் பெரிய கண்டுபிடிப்பு சிந்துவெளி ஆய்வு மற்றும் அதனுடன் இணைந்த திராவிட மொழிகளின் தனித்துவம் குறித்த கண்டுபிடிப்பு. அதனுடைய இன்னொரு பக்கம் சமஸ்கிருதம் இந்தியாவின் அடையாளம் இல்லை என்பது. இன்றளவும் சங்கிகளால் சகிக்க இயலாத அறிவியல் கண்டுபிடிப்பு அது. அதனூடாகப் பெரிய அளவில் அரசியல் பயன் அடைந்தவர்கள் நம் திராவிட இயக்கத்தினர்தான். ஆனால் அவர்கள் யாரும் அன்றுவரை கால்டுவெல் எழுதிய திராவிடமொழிகளின் பொதுத்தன்மை குறித்த ஆய்வை முழுமைப்படுத்தித் தமிழில் வெளியிட யாரும் முனையவில்லை. அதை மொழியாக்கி வெளியிட்ட மகத்தான சாதனையை – தனி ஒருமனிதனாக, ஆம் தனி ஒரு மனிதனாக நின்று தகுதியானவர்களின் உதவியோடு அதை வெளியிட்டது அவரது வாழ்வின் உச்சபட்சச் சாதனை. அவரே சொல்லியுள்ளதுபோல சென்னையில் இருந்த தன் வீட்டை அடகு வைத்து அதை வெளியிட்டார். இப்போதுபோல பி.ஓ.டி முறையில் அச்சிடாமல் அதிக அளவில் அச்சிடப்பட்ட அந்த நூல் அவர் எதிர்பார்த்ததுபோல விற்பனையாகவில்லை. நண்பர்கள் பலருக்கும், நான் உட்பட, அதை நன்கொடையாகத்தான் தந்தார்.
அவருக்கு எல்லாமாக இருந்த அவரது மனைவி இறந்தபின் அவருக்கு வாழ்வில் பெரிய அளவில் ஆர்வமில்லாமல் போயிற்று. பத்திரிகையும் நின்றுபோனது. திருச்சியில் அவரது பூர்வீக வீடு ஒன்று இருந்தது. அங்கு இடம் மாறினார். அவரது மனைவி இறந்தபோது சென்னையில் அவரது வீட்டிற்கு நானும் அருள் எழிலனும் சென்றது நினைவுக்கு வருகிறது.
என்னுடைய இரண்டாவது மகள் சென்னையில் ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்தபோது எப்படியோ பழக்கமாகி அவரும், அவரது துணைவியாரும் அவளை அடிக்கடி வந்து சந்திப்பது, வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடந்த ஏதோ ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது அங்கு அப்போது படித்துக் கொண்டிருந்த என் மகள் அவருக்குப் பழக்கம். அவர் மாமிச உணவு சாப்பிடாதவர் என்பதால் என் மகளை அவரும் அவரது மனைவியும் அசைவ ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவள் விரும்பியதை வாங்கித் தருவார் என அவள் ஒருமுறை என்னிடம் சொன்னதைக் கண்களில் நீர் கசிய நினைத்துப் பார்க்கிறேன்.
அன்னாருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள்.
கவிஞர் யவனிகா ஸ்ரீராம் பதிவு:
தொன்னூறுகளின் பிற்பகுதியில் பின்நவீன அறிமுகமும் அதற்கான உரையாடல்களும் காத்திரமாய் சிற்றிதழ்ச் சூழலில் பேசு பொருளான போது மிகக் கிண்டலுடன் தமிழ் சாதியத்தை முன்னிருத்தி முற்போக்கு மற்றும் பின் அமைப்பியல் வாதிகளுடன் அய்யா அதெல்லாம் இருக்கட்டும்
இந்த சாதி இருக்கிறதே அதனைத்தாண்டி உங்கள் பின் நவீன அறங்கள் எதையும் இங்கு முன்வைக்க முடியாது என்று எகத்தாளமாக ஏளனம் செய்த பெரியாரிஸ்ட்கவிதாச்சரண்
அதற்கான உரையாடல்களை தனது கவிதாச்சரண் இதழில் இவர் ஒரு சாதியவாதி என பலரும் விமர்சித்தபோதும்
இருக்கட்டும்
உங்கள் நியாயங்களை முன் வையுங்கள் என தன் இதழில் பலரையும் எழுதவைத்து அதைப் பலியிட்டார்
அந்தவகையில் பலரும் எழுத வாய்ப்பளித்தவர்
இதுவரையில் அவரது சாதிய
சம்சயங்கள்
முக்கியமான கேள்வியாக நீடித்துவர ஒருகாலத்தில் அவர் அதற்கான கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்
அருவருப்பானவர் என்று கூட புறக்கணிக்கப்பட்டவர்
ஏன் எனில் அக்கால தேசிய உணர்ச்சிகள் படு கேவலமாக ரொமாண்டிஸைஸ் பண்ணப்பட்டிருந்தன
தீவிர நக்ஸலுக்கும் இந்திய புதிய சுதந்திரகொண்டாட்டங்களுக்கும் இடையே அந்நியமான எம் எல் சிக்கல்கள் இவ்வாறுதான் இருந்தன
என் ஞாபகம் சரியாக இருக்குமானால்
தொன்னூறுகளில் அதிரடியாக
ஊடுறு
விய
நிறப்பிரிகைக்கும் அக்கால இடை நிலைச் சாதியங்களுக்கும் எக்காலத்திற்குமான பார்ப்பனீயத்தின் உளவு மற்றும் அதிகார வரலாற்றின் வேவு பார்ப்பிற்கும் அதன் நைச்சிய தலித்திய அனுசரனைக்கும் ஆன இக்கட்டுகளை அவரே கவிதாச்சரணில் அம்பலப்படுத்தி அனைத்து உரையாடல்களும் தனது இதழில் முரண்பட அனுமதித்தார்
அ மார்க்ஸ் போன்றோரின் சிறுபான்மையினர் மீதான கரிசனம் பெரும்பான்மை இந்துத்துவ அதிகார மையங்களை உடைக்கும் அணியமாகும் போது இந்துத்துவ சாதிய வர்ணங்களின்
கீழான தலித் பாட்டாளி வர்க்க உரிமைகளுக்கு மேற்சொன்ன சிறுபான்மை மதவியப் புனிதங்களின்
பங்கு என்னவாக இருந்தது என்பதை அவர் தூரப்படுத்தி விடுகிறார்
இதற்கிடையேதான்
கவிதாச்சரண் எங்கே தான் முட்டாளாக்கப்பட்டேன் என வினவி நின்றார்
பெரும் பான்மை சிறுபான்மை என்பது இடம் காலம் மதம் இனம் தேச வர்த்தமானங்களில் நிலவியது இருக்கட்டும்
இந்திய சாதியக்கட்டுமானங்களில் அனைத்து உற்பத்தி உறவும்
ஆண்டானைடிமை வர்க்கங்களும் இன்றளவும் தொடர்ந்து நீடிக்கின்றன என்பதை அவர் தன்னால் இயன்ற அத்தனை இடப்படுத்தலுக்கும் இடையே தோல்வியாக ஏற்றுக்கொண்டார்
அன்னாருக்கு ஆழ்ந்த செவ்வணக்கங்கள்