ஹத்ராசும் ராமராஜ்ஜியமும்
ராமர் கோயிலுக்கான பூமி பூஜைகள் போட்டு முடிக்கப்பட்ட சில தினங்களிலேயே ராம ராஜ்ஜியத்திற்கான அஸ்திவாரமும் ஹத்ராசில் போடப்பட்டிருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதும் எந்த இந்து வர்ணாசிரம தர்மத்தை சிரம் மேற்கொண்டு காந்தி ஆதரித்து வந்தாரோ, அதே இந்து வர்ணாசிரமத்தையே தாங்களும் கடைபிடிப்பதாக யோகி ஆதித்யநாத் கூறிக்கொள்ளக்கூடும். எந்த ராமராஜ்ஜியம் வேண்டும் என்று காந்தி வேண்டினாரோ அதே ராமராஜ்ஜியம்தான் தற்போது நிறுவப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மோடி சொல்லக்கூடும். காந்தி கனா கண்ட ராமராஜ்ஜியத்தின் தலைகீழ்வடிவம் மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது. ராமராஜ்ஜியத்தில் காந்தியின் ரூபாய் நோட்டுகளும் இடம்பெறக்கூடும். நவீன இந்தியாவில் ரூபாய் நோட்டுகளில் மட்டுமே காந்தியம் இருக்கும் என்று அவருக்குத் தெரியவந்திருந்தால், ரூபாய் நோட்டுகளில் தன் உருவம் இடம் பெறக்கூடாது என்று காந்தி அன்றே மறுத்திருப்பார்.
ராமராஜ்ஜியத்தின் சட்டங்கள் இனி இந்திய அரசியல் சாசனச் சட்டங்களாக இருக்கமுடியாது. இந்துச்சட்டங்களாகவே இருக்கும். சாதியப் படிநிலைகளைப் போற்றிப் பாதுகாப்பதும், சாதிச் சட்டங்களை மதித்து நடக்காதவர்கள் தண்டிக்கப்படுவதும், கொல்லப்படுவதும், பின்னர் தன்னிச்சையாக எரியூட்டப்படுவதும் இனி நடக்கக்கூடும். கூடும். அல்ல…நடக்கத் தொடங்கியாகிவிட்டது. ராமராஜ்ஜியத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவன் வசிக்கும் வீடு, அருகில் வசிக்கும் மேல்சாதிக்காரன் வீட்டைவிட பெரிதாக இருக்கமுடியுமா? அவனுக்குத் தனியாக விளைநிலங்கள் இருக்கமுடியுமா? அவனது தோலின் நிறம் வெண்மையாகவோ அல்லது சிவப்பாகவோ இருக்கஇயலுமா? அவனுக்கு அழகான பெண்கள் பிறக்கமுடியுமா? முடியாது…கூடாது…இயலாது.
ராமராஜ்ஜியத்தின் ஆக்டோபஸ் கரங்களில் இரண்டாயிரம் வருடப் பழமையான சனாதனச் சட்டங்கள் இருக்கின்றன. அச்சட்டங்கள் இளம் தலித் பெண்களைச் சுவைக்கவும், அவர்களின் நாக்கை அறுத்துக் கொலை செய்யவும் அனுமதிக்கும்.
ஹத்ரசில் அவ்விளம்பெண் செய்த குற்றம்தான் என்ன? மேல்சாதி தாக்கூர் சாதியினரும், பிராமணர்களும் பெரும்பான்மையினராக வசிக்கும் அக்கிராமத்தில் வால்மீகி சமூகத்தின்(தாழ்த்தப்பட்ட வகுப்பாருள் ஒரு பிரிவினர்) சில வீடுகளும் உண்டு. அப்பெண்ணின் தந்தைக்கு நிலமும் உண்டு. அவளுடைய உறவினர்கள் சிலர் அருகாமை தில்லியில் வேலைக்குச் செல்வதினால், அவள் குடும்பத்தில் வறுமையும் கிடையாது. அவர்கள் வசிக்கும் வீடும் அருகில் உள்ள தாக்கூர் பிரிவினர் வசிக்கும் வீடுகளைவிடப் பெரியது. கடந்த காலங்களில் முதல் குற்றவாளி சந்தீப்பின் தந்தை இறந்துபோன பெண்ணின் தாத்தாவை தாக்கியக் குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்தவர். பின்னர் என்ன கேட்கவா வேண்டும்? ஜென்மப் பகைக்கு?
தாழ்த்தபட்ட வால்மீகி வகுப்பு மக்கள் மீது அக்கிராமத்தின் மேல்சாதியினர் கடந்த காலங்களில் இழைத்த சாதியக் கொடுமைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. மேல்சாதியினரின் கடைகளுக்கு பொருட்கள் வாங்கவரும் வால்மீகி வகுப்பினரின் ரூபாய் நோட்டுகளின் மீதும், பொருட்களின் மீதும் தண்ணீர் தெளித்தபின்பே மேல்சாதியினரால் தீண்டப்படும். இந்த அவலத்தைக் கண்ணுற்ற பின்னரும்கூட காந்தி சிரித்துக் கொண்டேதான் இருக்கிறார்.
பெண்களின் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக நீங்கள் கவனம் பெறவேண்டுமென்றால் நீங்கள் மேல்சாதிப் பெண்ணான அல்லது தலித்தல்லாத பெண்ணான நிர்பயா போன்று இருக்கவேண்டும். அப்போதுதான் அது மீடியாக்களின் மீது உடனடி கவனத்தைத் திருப்பும். அவர்கள் உங்களின் உடலுறுப்புகளை உடனடியாக சோதனை செய்வார்கள். தடயங்கள் அழியாமல் காப்பாற்றப்படும். கீழ்சாதிப் பெண் என்றால் அதோகதிதான். உங்களுடைய உடலின் மீதான பரிசோதனைகள், சம்பவம் நடந்து ஒருவாரத்திற்கு மேல்தான் நடத்தப்படும். அதற்குள் இருந்த தடயங்கள் அனைத்தும் அழிந்துவிடும். அல்லது அழிக்கப்பட்டுவிடும். அல்லது தடயங்களைச் சுமந்திருக்கும் உடலே அழிக்கப்படும். எரியூட்டப்படவும் கூடும். பாலியல் குற்றமே இழைக்கப்படவில்லை என்று அரசுகள் சாதிக்கக்கூடும். இக்குற்றங்கள் வெறுமனே கொலைக்குற்றங்களாக மாறக்கூடும். தான் இரன்டு நபர்களால் பாலியல் வன்புனர்வு செய்யப்பட்டதாகவும், தன் தாயைக் கண்ட பிறகு மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டதாகவும் தன்னுடைய மரண வாக்குமூலத்தில் அப்பெண் கூறியிருப்பதனால்தான் குற்றவாளிகளைக் கைது செய்தது சாத்தியமாகி இருக்கிறது.
பெண்களுக்கெதிரான குற்றங்கள் இந்த ஆண்மைய சமுதாயத்தில் காலம்தோறும் பல்கிப் பெருகியவண்ணமே இருந்திருக்கிறது. பாதிக்கப்படும் பெண்ணின் சாதி, நிறம், வர்க்கம் இவைகளைப் பொறுத்தே அவர்களுக்கான நீதியும் கிடைக்கப்பெறுகிறது. நிர்பயாவுக்கு நீதிவேண்டிய போராட்டத்தில் அக்குற்றவாளிகளுக்கு உடனடடியாக மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்று எழுந்த கூக்குரல்கள் இப்போது எழவேயில்லை. அசல் ராமராஜ்ஜியமாக உருமாற நம் தேசத்து மக்களுக்கு முழுத் தகுதியுண்டு என்பதை இப்போதைய சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. நிர்பயாவுக்காக முன்பு கிளர்ந்தெழுந்தவர்கள் இப்போது என்னவானார்கள்? ஏன் தலித் பெண்கள் பாதிக்கப்படும்போது வாய்திறக்க மறுக்கிறோம்? எது நம்மைத் தடுக்கிறது? முப்பத்து முக்கோடி பெண் தெய்வங்களின் வாரிசாக ஒரு தலித் பெண் இருக்கக்கூடாதா? பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சக்கட்ட கொடுமைகளிலும் கூட சாதியப் படிநிலைகள் பார்க்கப்படவேண்டுமா?
ராமராஜ்ஜியத்தின் கால்கோள் மிக ஆழமாக, அகலமாகப் போடப்படுகிறது. ராஜ்ஜியத்தின் அஸ்திவாரங்களாக தலித்துகள், பிற்பட்ட சூத்திர சேனைகள் இருக்க, மாளிகைகளில் அமர உயர்சாதியினரும், பார்ப்பனர்களும் துடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கே தலித் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டு, கேட்பாரின்றி எரியூட்டப்படலாம். தலித் பெண்களின் உடல்களைத் தீண்ட மட்டும் ராஜ்ஜியத்தின் காளைகளுக்கு அனுமதி உண்டு. அவள் சாம்பலின் புகை ராஜ்ஜியத்தின் இரவின் கருமையினூடாகப் போய்விடவேண்டும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய அரசியல் கட்சிகள் போக, அம்மக்களுக்காகவே கட்சி நடத்தும் இயக்கங்களும் உண்டு. உயர்சாதி அரசியல் பகடைகளில் உருண்டு தேய்ந்து மாயமாகிப் போன மாயாவாதிகளும் உண்டு. அதிகாரத்தில் இருந்தபோது ஒடுக்கப்பட்ட தலித்துகளின் வாழ்வியலை மேம்படுத்தி, கல்வி, வேலைவாய்ப்புகளில் பல தலைமுறைகளுக்கு முன்னிறுத்தும் வேலையைச் செய்திருக்கவேண்டியவர்கள் உயர்சாதி அதிகாரவட்டத்தோடு அதிகாரத்தைச் சுவைத்ததோடு எல்லாவற்றையும் மறந்தே போனார்கள். பாதிக்கப்பட்ட பெண், கல்வியை இடையில் நிறுத்தியவள். உத்திரப்பிரதேசத்தில் தலித்துகள் கல்வி பெறுவதை தாக்கூர்களும், பிராமணர்களும் தடுக்கலாம், கேள்வி கேட்கலாம், கேலி செய்யலாம். தலித்துகள் கல்வி பெறுவதை எந்த இந்திய அரசியல் சட்டம் தடுத்தி நிறுத்தியது?
கோத்ரா படுகொலைகள் நடைபெற்ற பிறகான குஜராத்தில் இஸ்லாமியர்களின் மீது நடத்தப்பட்ட பச்சைப் படுகொலைகளைக் கண்டித்து மோடியிடம் முறையிட்ட அடல் வாஜ்பாயி இப்போது நினைவுக்கு வருகிறார். அப்போது வாஜ்பாயி மிக நல்லவராகக் காட்சி தந்தார். அதேபோல இப்போது யோகி ஆதித்யநாத்துக்கு மோடி அரசியல் அறிவுரைகள் கூறக்கூடும். மோடி மிகமிக நல்லவராக மாறக்கூடும். நாளை யோகி ராமராஜ்ஜியத்தின் பிரதமராகக்கூடும். யோகியும் மிக நல்லவர் என்று சொல்லத்தக்க ஒரு நபரும் வரக்கூடும். இந்திய அரசியலில் எல்லாமும் சாத்தியம்.
நிர்பயா போராட்டங்களில் வீதியில் இறங்கிப் போராடிய பெண்கள், குழந்தைகள் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இப்போது யோகியை ஆதரிக்கிறார். விசாரணை ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது போதுமானது என்கிறார். மம்தாவும், இடதுசாரிகளும், காங்கிரசாரும் வீதிகளில் போராடுகிறார்கள். நாடு முழுவதும் சமூகச் செயற்பாட்டாளர்களின் போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. நாடெங்கும் எழும் குரல்கள் நமக்கு நம் தேசத்தின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. உங்களின் குரலும் ஓங்கி ஒலிக்கட்டும்.