ஷாபாக் எழுச்சியும் நமக்கான படிப்பினைகளும்
உலகம் முழுவதும் இளைஞர்களின் போராட்டங்கள் உச்சத்தைத் தொடும் காலமாக இது இருக்கிறது.தங்களின் அரசுகள் பின்பற்றும் உலகமயக் கொள்கைகளை எதிர்த்தும், வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்தைத் தொடுவதைக் கண்டித்தும் இனப்பிரச்னைகளுக்காகவும்,மத வன்முறைகளை எதிர்த்தும் இளைஞர்கள் ஆக்ரோஷமாகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.வெறும் ஆர்ப்பாட்டமாகவும்,அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டும்,ஆயுதம் ஏந்தியும்,உண்ணாவிரதம் என்னும் அறப்போராட்டமாகவும் இவைகள் வடிவமெடுக்கின்றனசமீபத்தில்தான் அரபு வசந்தம் என்னும் பிரளயம் அரபு நாடுகளைப் புரட்டிப்போட்டது.ஜனநாயகப் போர்வையில் ஏகபோக ஆட்சி செய்த அதிகாரவர்க்கத்தினர் காணாமல் போயினர்.ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததைக் கண்டித்து தலைநகர் தில்லியிலும் ஒரு மிகப்பெரிய தன்னெழுச்சியானப் போராட்டம் நடந்து ஒரு வருடம் கடந்துவிட்டது.ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற அப்போராட்டம் ஒரு வருடத்திற்குள்ளாக அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையை வாங்கிக் கொடுத்தது.என்ன தண்டனை என்பது குறித்து நமக்கு கருத்துமாறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் காவல் மற்றும் நீதித்துறை அதிகாரவர்க்கங்கள் வளைந்து கொடுத்து இவ்வழக்கை மிக விரைவில் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனையையும் கொடுத்திருக்கிறது.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டதையொட்டிய சானல்-4 வெளியிட்ட அதிர்ச்சிகரமான காணொளிக்காட்சிகள் தமிழகத்தில் ஒரு மிகப்பெரும் மாணவப்போராட்டத்திற்கு இட்டுச்சென்றது.ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்தில் அச்சமயத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த வெற்றுத்தீர்மானத்தை இந்தியாவை ஆதரிக்க வைக்க அப்போராட்டங்கள் பெரும் முயற்சி எடுத்தது.இப்போராட்டங்களுக்கெல்லாம் கிரீடமாக அமைந்த போராட்டம் தான் சமீபத்தில் வங்கதேசத்தில் இளைஞர்கள் நடத்திய மாபெரும் எழுச்சிப் போராட்டம்.டாக்காவின் ஷாபாக் சந்தியில் நிகழ்ந்த எழுச்சி மிக்கப் போராட்டம்.
1971ல் ஒன்பது மாதங்கள் நீடித்த வங்கதேச விடுதலைப்போரின்போது பாகிஸ்தான் ராணுவம் தான் உருவாக்கிய கைக்கூலிகளின் உதவியோடு கிழக்கு வங்க மக்களை இனப்படுகொலை செய்தது.ஜமாத்-இ-இஸ்லாம்,அதன் வால்களான ரசாக்கர்கள்,அல்-பாதர் இயக்கத்தினர்,அல்-ஸாம் இயக்கத்தினர் இவர்கள்தான் பாகிஸ்தான் ராணுவத்தின் கைக்கூலிகள்.மாவோயிஸ்ட் இயக்கத்தினரை ஒழிக்கிறேன் எனக் கிளம்பிய இன்றைய இந்திய அரசு, தான் உருவாக்கி வைத்துக்கொண்ட கூலிப்படையான சல்வாஜூடும் போல அல்-பாதர்வாதிகளும்,ரசாக்கர்களும் பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ஜாடையை உணர்ந்து வங்கதேசமக்களை துவம்சம் செய்தனர்.ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளுமாக முடிவில் முப்பது லட்சம் வங்கஇன மக்கள் கொல்லப்பட்டனர்.பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சிதைக்கப்பட்டனர்.1947 இந்தியப்பிரிவினையின்போது கட்டவிழ்த்துவிடப்பட்ட வகுப்புக்கலவரத்தையொட்டிய கொடிய படுகொலைகளையடுத்து 1971ம் வருடம் மீண்டும் ஒரு மிகப்பெரிய அழிவை வங்கதேச இனப்படுகொலை வாயிலாக இந்தியத்துணைகண்டம் சந்தித்தது.இந்த ஒன்பது மாதங்களும் வங்கஇன மக்களின் மீது கொடிய இன வன்முறையை பாகிஸ்தான் ராணுவமும்,வங்கஇனமல்லாத அதன் கூலிப்படைகளும் நடத்தின. தோல்வியின் விளிம்பில் நின்ற பாகிஸ்தான் ராணுவம் விடுதலை அடையப்போகும் வங்கதேசத்தில் ஒரு அறிவுஜீவியும் உயிரோடு இருக்கக்கூடாது என்ற கொடும் முடிவை எடுத்து அதன் சிறந்த அறிஞர்களையும்,எழுத்தாளர்களையும்,கவிஞர்களையும் ஒரே இடத்தில் வைத்துப் படுகொலை செய்தது.அதற்குப்பிறகு இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர்-16,1971 அன்று இந்திய-வங்கதேச கூட்டுப் படைத்தலைமையிடம் சரணடைந்தது. 1971-ல் வங்கதேசம் விடுதலைபெற்ற பின்னர் நாட்டின் பிதாவான ஷேக் முஜிபுர் ரஹ்மான் அதிகாரத்தை ஏற்றார்.அந்த ஒன்பது மாதங்களில் நடைபெற்ற இன அழிப்புக் கலவரத்தில் பாகிஸ்தான் படையினருடன் பங்குபெற்ற ஜமாத் தலைவர்கள்,ரசாக்கர்கள்,அல் பாதர் இயக்கத்தினரை விசாரணைக்குக் கொண்டுவந்து தண்டிக்கவேண்டும் என்பதற்காக சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்தார்.1975ல் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டபின்னர் போர்க்குற்ற விசாரணை கிடப்பில் போடப்பட்டது.அதன்பிறகு ராணுவம் அங்கு ஆட்சியைக் கைப்பற்றி பின்னர் ஜனநாயகமும் மலர்ந்தபின்னரும்கூட போர்க்குற்ற விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வங்கதேச உருவாக்கத்தை எதிர்த்த,பாகிஸ்தான் படைகளோடு சேர்ந்து இனப்படுகொலையில் ஈடுபட்ட ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்பு பொதுத்தேர்தலிலும் நின்று ஒரு மிக முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்தது.1989ல் ராணுவஆட்சிக்கு எதிராக அவாமிலீக்கும்,ஜமாத்-இ-இஸ்லாமும் இணைந்து போராடியது.பின்னர் வங்கதேச தேசியக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு கூட்டணி ஆட்சியிலும் பங்கு வகித்தது. வங்கதேசத் தலைவர்கள் ஆட்சிக்கட்டிலின் சுகத்தில் போர்க்குற்றவாளிகளை கௌரவமிக்க கூட்டணித்தலைவர்களாக மாற்றிக்கொண்டனர். இம்முறை ஆட்சியில் அமர்ந்துள்ள ஷேக் ஹஸீனா போர்க்குற்ற விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி கொடுத்துதான் ஆட்சியில் அமர்ந்தார். 2010ல் முதலாம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.விசாரணை விரைவில் முடிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தில் 2012ல் இரண்டாவது விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டது.12 நபர்கள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட்டது. இதுவரை பத்து குற்றவாளிகளுக்கு தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மூவருக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டுள்ளது.போர்க்குற்ற விசாரணை அரசியல் வஞ்சம் தீர்க்கும்விதமாக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல,சில மேலை நாடுகளும்கூட கண்டனம் செய்தன. ஜமாத் கட்சி இனிவரும் தேர்தல்களில் போட்டியிடமுடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மொத்தமுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கில் அக்கட்சியின் செல்வாக்கு உள்ளது என்பதையும்,வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சியின் முக்கிய கூட்டணிக்கட்சியாக ஜமாத் உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.கிட்டத்தட்ட எல்லா இஸ்லாமிய நாடுகளும் விசாரணையைக் கைவிடும்படி கோரின.பிப்ரவரி 5ம் தேதி ஆணையம் மேலும் ஒரு தீர்ப்பை வழங்கியது.இம்முறை அது தூக்குதண்டனையை அறிவிக்கவில்லை.30 வருடங்கள் சிறையில் வைக்கத்தக்க ஆயுள்தண்டனையை அக்குற்றவாளிக்கு நீதிபதிகள் வழங்கினர்.அவர் அப்துல்காதிர் மொல்லா.ஜமாத்தின் துணைப்பொதுச்செயலாளர்.போர் நடந்தபோது கூலிப்படைகள் ஒன்றின் இளைஞரணித்தலைவர்.மீர்புரில் மட்டும் அவர் தலைமையிலானக் குழு 344 பேரை படுகொலை செய்த காரணத்தினால் ‘மீர்புரின் கசாப்புக்காரன்’ எனப்பெயர் பெற்றவர்.11 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு கொண்டவன்.எல்லாவற்றுக்கும் மேலாக பாடகி மெஹருன்னிஸாவைக் கொலை செய்தவர்.இவருக்குத்தான் நீதிபதிகள் ஆயுள்தண்டனை வழங்கினர்.இத்தனைக்கும் அவருக்கு எதிராக வலுவான சாட்சியங்கள் இருந்தன.எல்லோரும் என்ன, மொல்லாவே தூக்குதண்டனையைத்தான் எதிர்பார்த்திருந்தார்.அதனால்தான் நீதிபதிகள் தீர்ப்பை சொன்னபிறகு ஆண்டவனை வாழ்த்திவிட்டு வெற்றியின் சின்னமான ‘V’ யை காண்பித்துவிட்டுச் சென்றார்.அந்த ‘V’ சின்னம்தான் மொல்லாவை தூக்குமேடை வரை அழைத்துச் சென்றது.
II
வங்கதேச வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் நமக்கு ஒன்று தெளிவாகப்புரியும்.எப்போதெல்லாம் அது அரசியல்வாதிகளால்,ராணுவத்தால்,மதத்தீவிரவாதிகளால் மொத்தத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்களால் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுகிறதோ அப்போதெல்லாம் அது வெகுஜன மக்கள்திரள் போராட்டத்தின் மூலமாக மீண்டும் சரியான பாதையில் தன்னை இட்டுக்கொள்கிறது.1952ல் நடைபெற்ற மொழிப்போராட்டமாக இருக்கட்டும்(அப்போதைய பாகிஸ்தான் அரசு ஆட்சி மொழியாக வங்கமொழிக்குப் பதிலாக உருதுவை வங்க இன மக்களின்மீது திணித்தது.அதை எதிர்த்து கிழக்கு பாகிஸ்தானில் மிகப்பெரும் மக்கள் எழுச்சி உருவானது),1971-ன் விடுதலைப்போராட்டமாக இருக்கட்டும்,1989ல் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிரானப் போராட்டமாக இருக்கட்டும்,இதோ இப்போது நடத்தப்பட்டுக் கொண்டே இருக்கிற மதச்சார்பற்ற நாடு என்பதை நோக்கிய பயணமாக இருக்கட்டும்.எல்லாவற்றிற்கும் இது பொருந்தும்.மொல்லாவிற்குக் கிடைத்த ஆயுள்தண்டனை என்பது போதாது.அவருக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படவேண்டும் என்று அன்றையதினமே இளைஞர்கள் போராட்டத்தைத்துவக்கினர்.சமூக வலைத்தளங்கள் அதற்குப் பேருதவி புரிந்தன. டாக்காவின் முக்கியச் சந்திகளுள் ஒன்றான ஷாபாக் சந்தியில் இளைஞர்கள் குழுமத்தொடங்கினர்.மொல்லாவிற்குத் தூக்குதண்டனை வழங்கப்படவேண்டும் என்பது மட்டுமே அவர்களது கோரிக்கை அல்ல.தடம் மாறிச் சென்றுகொண்டிருக்கும் தங்கள் தேசத்தின் வரலாற்றை நேர் செய்ய அவர்கள் முடிவெடுத்தனர்.
ஷாபாக் எழுச்சியில் பங்குபெற்ற இளைஞர்கள் 1970களில் பிறந்திருக்கக்கூட இல்லை.ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது உறவினர் ஒருவரை போரில் இழந்திருக்கிறார்கள்.’ஜாய் பங்களா’ என்ற விடுதலைப்போராட்ட கோஷத்தை அவர்கள் உயர்த்திப் பிடித்தனர்.தினமும் மாலையில் அவர்கள் கூடினர்.அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பாடல்கள் பாடினர்.விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். ஷாபாக் எழுச்சியின் கர்த்தாக்களில் ஒருவரான அஹமது ரஜீப் ஹைதர் ஜமாத்-இ-இஸ்லாமின் மாணவர் பிரிவான இஸ்லாமிக் சாத்ர ஷிபிர் இயக்கத்தினரால் அவரது வீட்டிற்கு அருகிலேயே கொல்லப்பட்ட பின்னர் ஷாபாக் எழுச்சி புதிய உத்வேகத்தை அடைந்தது. மார்ச்,ஏப்ரல் மாதங்களில் ஷாபாக் எழுச்சி உச்சத்தைத் தொட்டது.மாணவர்கள்,ஆசிரியர்கள்,எழுத்தாளர்கள்,இசைக்கலைஞர்கள்,மனித உரிமை ஆர்வலர்கள்,பெண்ணியவாதிகள்,விடுதலைப்போராட்ட வீரர்கள்,ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள்,சாதாரண வெகுமக்கள் இப்படியாக மக்கள் ஷாபாக்கில் ஒன்று திரண்டனர். வங்கமக்களின் பண்பாட்டுத் திருவிழாவாக ஷாபாக் எழுச்ச்சி மாறிப்போனது.ஜமாத் இதைத் துளியும் எதிர்பார்த்திருக்கவில்லை.மதச்சார்பற்ற தேசியத்திற்காக தங்களை மீண்டும் அவர்கள் புதுப்பித்துக் கொண்டனர்.பெண்களும்,மாணவர்களும்,இசைக்கலைஞர்களும் பங்கேற்ற மாபெரும் பேரணிகளும் நடைபெற்றன.எழுச்சியைக் குலைக்கும் எண்ணத்தோடு கூட்டத்தில் ஊடுருவி கலகம் விளைவிக்க நினைத்த ஜமாத் கும்பலை மக்கள் விரட்டி அடித்தனர்.மாணவிகளும்,பெண்களும் ‘வெட்கக்கேடான ஆடை’ என்று ஜமாத்தால் சுட்டப்பட்ட ஜீன்ஸ் ஃபேண்டுகளை அணிந்துவந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்துக்கள் இட்டுக்கொள்ளும் இஸ்லாம் விரோதப் பொட்டுக்களை,குங்குமத்தை நெற்றியில் இட்டு வந்தனர்.இரவு நேர மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.இவை அனைத்தும் மொல்லாவிற்கு தூக்குதண்டனை வழங்கப்படவேண்டும் என்பதற்கு மட்டுமல்ல,தங்களது தேசத்தை மதவாதிகளிடமிருந்து மீட்கவும்,வங்கதேசியத்தை தூக்கிப்பிடிக்கவும்,தங்களது ஒவ்வொரு செயலிலும் மதச்சார்பற்ற தன்மை கடைபிடிக்கப்படவேண்டும் என்ற அவர்களது கனவை மெய்ப்பிக்கவும்தான்.
ஷாபாக் எழுச்சிக்கு அடிபணிந்த அரசு சர்வதேச விசாரணை ஆணையம்,1973 சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்தது.அதன்படி மொல்லாவிற்கானத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் செப்டம்பர் 17 அன்று மொல்லாவிற்கு மீர்புரின் ஹஜ்ரத் அலி லஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரைப் படுகொலை செய்த வழக்கில் தூக்குதண்டனை வழங்கியது. டிசம்பர்,12 இரவு அவர் தூக்கிலிடப்பட்டார்.
III
வங்கதேசத்தின் ஷாபாக் எழுச்சியை உலகின் சமகால எழுச்சிகளோடு ஒப்புநோக்கவேண்டும்.எகிப்தின் தாஹிரா சதுக்கத்தில் நிகழ்த்தப்பட்ட மாபெரும் எழுச்சி, அரபு வசந்தம்,இந்தியாவின் தலைநகர் தில்லியில் ஒரு வருடத்திற்கு முன்பு ஓடும் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட பாலியல் வல்லுறவுக்குக் கண்டனம் தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரும் ஆர்ப்பாட்டம்,வலுவான லோக்பால் மசோதா வேண்டி அன்னா ஹஸாரே தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப்போராட்டம்,பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரனின் படுகொலைக் காட்சிகள் வெளியிடப்பட்டதையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள்,மறியல்கள். இப்படி ஒவ்வொரு போராட்டத்தின் உயிரிழையும் வெவ்வேறானவை.சர்வாதிகாரம்,ஊழல்,இனப்படுகொலை,பாலியல் வல்லுறவு, மத அடிப்படைவாதம் இப்படியாக வெவ்வேறு காரணங்கள் கொண்டு போராட்டமும் வெவ்வேறு பரிமாணங்களைத் தொட்டன.அரபு நாடுகளின் சர்வாதிகாரிகளை இதுகாறும் ஆதரித்து வந்திருக்கும் அமெரிக்கா அரபுப் போராட்டங்களை சோசலிசவாதிகளும்,பயங்கரவாதிகளும் கைப்பற்றாதவாறு எச்சரிக்கையாகப் பார்த்துக்கொண்டது.தலைவரில்லா போராட்டங்கள் என அரபு வசந்தத்தை சோசலிசநாடுகளும்,உலகெங்கிலும் உள்ள இடதுசாரி இயக்கத்தவரும் அழைத்தனர்.சர்வாதிகாரிகளின் ஆட்சியை அகற்றியதே மிகப்பெரும் பணியாகிப்போன அரபு வசந்தத்திற்கு ஆட்சிகளின் கொள்கைகளையோ,கோட்பாடுகளையோ புரட்டிப்போட வழியில்லை.அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும்,மதத் தீவிரவாதத்திற்கும் சாவுமணி அடிக்க அதற்குத் தைரியமில்லை.ஆனால் மதத் தீவிரவாதத்தை எதிர்க்கும் முன்முயற்சியை வங்கதேசத்தின் ஷாபாக் எழுச்சி உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.மதம் என்பது ஒரு வாழும் முறை மட்டுமே.அது எப்படி ஆட்சிக்கான அடிப்படையாக மாறமுடியும் என ஷாபாக் எழுச்சி வினா எழுப்புகிறது. மத அடிப்படைவாதிகளை அது சாடுகிறது.நாட்டின் விடுதலைப்போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அது நினைவு கூர்கிறது.நாட்டிற்காக தியாகம் புரிந்த எண்ணற்ற அறிஞர்களை அது நன்றியுடன் வணங்குகிறது.தங்கள் நாட்டின் அரசியல் அமைப்பை தீவிர மதவாதிகளான ஜமாத்-இ-இஸ்லாமின் பிடியிலிருந்து விடுவிக்க அக்கட்சியையே தடை செய்யவேண்டும் என்பதிலும் ஷாபாக் எழுச்சி உறுதியுடன் நின்றது. போர்க்குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்னும் கோரிக்கையை ஷாபாக் எழுச்சி சாதித்திருக்கிறது.மொல்லாவின் மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.மரணதண்டனை குறித்த நமது பார்வையில் மாறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் வங்கதேச மக்களுக்கு வரலாறு விட்டுச்சென்றுள்ள கடுமையான காயத்திற்கு கொஞ்சம் மருந்து பூசப்பட்டுள்ளது.
வரலாற்றில் இந்தியப்பிரிவினை மிக ஆழமான வடுவை ஏற்படுத்தியிருந்தது.மதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு தேசம் உருவாகமுடியுமா?நிச்சயமாகக் கிடையாது.தேசவிடுதலைப் போராட்டத்தின்போது காந்தி உட்பட காங்கிரஸின் தலைவர்கள் இந்துமதக்குறியீடுகளை சகட்டுமேனிக்குப் பயன்படுத்தியதன் விளைவே தேசப்பிரிவினை. ஆர்.எஸ்.எஸ்ஸும்,முஸ்லீம்லீக்கும் மக்களிடம் நடத்திய தீவிர மதவாத வெறுப்புணர்வுப் பிரச்சாரத்தின் விளைவே இந்தியப்பிரிவினை.உண்மையான மதச்சார்பின்மை என்பது மதம் அரசியலிலிருந்து முற்றாக விலக்கிவைக்கப்படுவது.மதம் என்பது தனிநபர் பிரச்னை என்றப் புரிதலுடன் இருப்பது.பின்விளைவுகள் தெரியாமல் காந்தி மதத்துடன் அரசியலை லாவகமாகக் கலந்தார்.ராமராஜ்ஜியம் என்றார்.இன்றைக்கும் துணைக்கண்டம் ராமர் பிரச்னையினால் பற்றி எரிகிறது. 1992 பாபர்மசூதி இடிப்புக்குப் பின்னரும்,2002 குஜராத் வன்முறைக்குப் பின்னரும் அத்தீ மேலும் மேலும் கொழுந்து விட்டு எரிகிறது. ஒருமுறை தஸ்லிமா நஸ்ரின் குறிப்பிட்டார்: ”பாபர் மசூதியை இடித்ததன் மூலம் வங்கதேசத்தின் 10 லட்சம் இந்துக்களை அங்குள்ள மத அடிப்படைவாதிகளின் கைகளில் பா.ஜ.க. கொடுத்துவிட்டது”.
வங்கதேசம் போன்ற இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு தேசத்தில்,மத அடிப்படைவாதிகளின் அரசியல் கோலோச்சும் ஒரு தேசத்தில் மதச்சார்பற்ற அரசு வேண்டி,பொதுவாழ்விலும்,பண்பாட்டிலும் மதத்தைக் கலப்பதை தடை செய்யக்கோரி இளைஞர்கள் எழுச்சியுடன் போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் மதச்சார்பின்மை பேசும் நமது நாட்டில் மோடியும் அவரது பா.ஜ.கவும் வகுப்புவாதத்தை நல்லாட்சி என்னும் பெயரில் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள்.வரலாற்றுப் பிழைகளை சரிசெய்ய வங்கதேசத்தில் ஷாபாக் எழுச்சி நடக்கிறது.ஆனால் இங்கே வரலாற்றை தாவித் தாவி காவிப்பக்கம் இழுக்க முயற்சிகள் நடக்கிறது.வரலாற்றைத் தன்போக்கிற்கு இழுத்து மடக்குகிறார் மோடி.இப்போதைய அவரது வரலாற்று ஆயுதம் சர்தார் வல்லபாய் படேல்.சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் சமஸ்தானங்களை அடக்கி நாட்டோடு இணைத்ததற்காக அவர் இரும்பு மனிதர் எனப் போற்றப்படுகிறார்.பிரிவினைக்குப் பின்னரான இந்திய தேசத்தில் அவர் இஸ்லாமிய அமைப்புகளை வேண்டுமானால் வேறுகண் கொண்டு பார்த்திருக்கலாம்.ஆனால் இஸ்லாமியர்களை அவர் என்றும் வெறுத்ததில்லை.சர்தார் வல்லபாய் படேலை தனது வரலாற்று நாயகனாக சமீபத்தில் வரித்துக்கொண்ட மோடிக்கு வல்லபாய் படேலின் குணநலன்கள் பற்றித் தெரியுமா என்பது சந்தேகமே.1947ல் இந்தியப் பிரிவினையின்போது தில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் மசூதியில் அடைக்கலம் புகுந்திருந்த இஸ்லாமியர்களின் பாதுகாப்பில் நாட்டம் கொண்ட படேல் நேரடியாக அங்கு சென்று அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக்கொண்டார்.அங்கு பாதுகாப்பிலும் நிர்வாகத்திலும் இருந்த காவல் உயர் அதிகாரிகளை அழைத்து முஸ்லீம்களின் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவர்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.மோடிக்கு வருவோம்.2002ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்திற்குப் பின்னான காலத்தில் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இஸ்லாமியர்களைச் சென்று மோடி பார்த்ததில்லை. 3000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபின்னரும் அம்மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.ஆனால் படேலின் பெயரில் நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டங்களை நடத்துகிறார் மோடி.நாட்டின் ஒற்றுமையில் மோடிக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால் ஓற்றுமை ஓட்டத்தில் பங்கேற்றவர்களின் கழுத்தில் தேசியக்கொடியை அல்லவா கட்டியிருக்கவேண்டும்.சிறுபிள்ளைகளின் கழுத்தில் காவிக்கொடியைக் கட்டி அவர்களை ஒற்றுமை ஓட்டம் என்ற பெயரில் வகுப்புவாதக் குழியில் தள்ளப்பார்க்கிறது பாரதிய ஜனதா கட்சி.
நரேந்திரமோடி தான் ஒரு ஆக்கப்பூர்வமான சக்தி அல்ல என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார்.காந்தியின் ஆசைகளை நிறைவேற்றுவதில் மோடி பிரியம் கொண்டவர்!!.அதனால்தான் ‘காங்கிரஸைக் கலைக்கவேண்டும்’ என்ற காந்தியின் வேறொரு தருணத்தில்,வேறொரு நோக்கத்திற்காகக் கூறிய கூற்றை நிறைவேற்றியே தீருவேன் என்று மோடி உறுமுகிறார்.(ஏகாதிபத்தியத்திடமிருந்து அரசியல் விடுதலை பெறுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் அதனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டபடியால் அவ்வமைப்பு இனிமேலும் தொடருவதற்கான அவசியம் இனி இல்லை.ஆனால் அரசியல் விடுதலை பெற்ற இந்தியா சமூகவிடுதலையும்,பொருளாதார விடுதலையும்,நல்லொழுக்கத்தையும் பெறவேண்டும்.அதற்கு போட்டிமனப்பான்மை கொண்ட அரசியல் கட்சிகள் அவசியம் இல்லை.வகுப்புவாத அமைப்புகள் தேவையில்லை.இந்நோக்கத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உதிர்ந்து லோக் சேவாக் சங் என்னும் அமைப்பு ஏற்படவேண்டும் என்று காந்தி எழுதுகிறார்.)காந்தியின் ஆசைகளையெல்லாம் மோடி நிறைவேற்றுவாரா?! மோடியின் பிரச்சாரத்தினூடாக வெளிப்படும் வகுப்புவாத வெறியை இன்றைய இளையசமுதாயம் உணராமல் மோடி,மோடி என்று அவர் செல்லும் இடங்களிலெல்லாம் உரத்துக்குரல் எழுப்புகிறது.அரசியல் சார்பற்ற இளைஞர்கள்கூட காங்கிரஸின் ஊழலுக்கு மாற்று மோடி மட்டுமே என்று அறியாமையில் பிதற்றுகிறார்கள்.பிரதமராவதற்கு வேண்டிய முக்கியப் பண்பு திறமை அல்ல,நேர்மை மட்டுமே என்பதை அவர்களுக்கு எப்படிச் சொல்வது?
IV
வங்கதேச விடுதலை மொழிவழி தேசியத்தை உறுதி செய்கிறது, மதவழிதேசியத்தை அல்ல என்பதை நாம் அறிவோம்.ஷாபாக் எழுச்சி மீண்டும் வங்கஇன,வங்கமொழி தேசியத்தை உறுதி செய்திருக்கிறது.ஷாபாக் எழுச்சி ஈழத்தமிழர்களுக்கும் பாடம் வைத்திருக்கிறது.வங்கதேச இனப்படுகொலை நடந்து 42 ஆண்டுகள் கழித்துதான் போர்க்குற்றவாளிகள் தண்டனை பெற்றிருக்கிறார்கள்.அதுவும் ஒரே நாட்டிற்குள் நடத்தப்பட்ட விசாரணை.இலங்கையில் நடக்கும் தமிழினப்படுகொலை 1983 முதலே உலகின் கவனத்தை ஈர்த்து வந்திருக்கிறது.2009ம் ஆண்டில் நடந்த மிகப்பெரும் தமிழின அழிவு பற்றி உலகநாடுகள் கவனம் எடுத்திருந்தாலும் இந்தியா,சீனா,ரஷ்யா நாடுகளின் துணைகொண்டு சர்வதேச நெருக்குதலை இலங்கை அரசு தவிர்த்துவருகிறது.ஆனால் அது நீண்ட நாள் நீடிக்காது.இலங்கை அரசின் போர்க்குற்றத்தைப் பற்றிய விசாரணை நடத்த சர்வதேச சமூகத்திற்கு உரிய நெருக்கடிகளைக் கொடுக்க ஈழத்தமிழர்களுக்கு,புலம்பெயர்தமிழர்களுக்கு,தமிழ்நாட்டுத்தமிழர்களுக்கு ஷாபாக் எழுச்சி மிகப்பெரும் பாடம் கற்றுத்தந்திருக்கிறது.தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டமும்,எழுச்சியும் ஷாபாக்கின் எழுச்சி தந்த பொறியிலிருந்து கிளம்பவேண்டும். இந்தியப்பிரிவினை மதவழி தேசியத்தை வலியுறுத்தி நடத்தப்பட்டது.அது செயற்கையானது.அதனால்தான் மொழிவழிதேசியமான வங்கதேசியம் மதவழிதேசியத்தை வென்று வங்கதேசம் என்னும் தனிநாடு உருவானது.மொழிவழிதேசியத்தை சிதைத்து மதஅடிப்படைவாதத்தை முன்னிறுத்த ஜமாத் அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளை ஷாபாக் எழுச்சி முறியடித்துள்ளது.தமிழ்த்தேசியவாதிகளும் ஷாபாக்கிலிருந்து ஒன்று கற்றுக்கொள்ளவேண்டும்.தமிழ்த்தேசியம் செழிக்கவேண்டுமானால் அனைத்து தமிழ்த்தேசியவாதிகளும் ஓரணியில் திரண்டால் மட்டும் போதாது.பிளவுச்சக்திகளான சாதியவாதிகளையும்,இந்துத்துவா சக்திகளையும் அவர்கள் தயவுதாட்சண்யமின்றி விலக்கிவைக்கவேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்திடவேண்டும். அத்தகைய தமிழ்த்தேசியம்தான் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு அரணாக இருக்கமுடியும்.
(உயிர்மை,ஜனவரி,2014)