வளர்ச்சி யாருக்காக?!
என்னுடைய முகநூல் நண்பர் ஒருவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியின் புகழ்பாடி.அவரைப் புகழ்ந்து ஸ்டேட்டஸ் போட்டுக்கொண்டே இருப்பார்.அதைப்படிக்கும் நமக்கு வெறுப்பு மட்டுமே மிஞ்சும்.நரேந்திரமோடி அப்படிப்பட்டவர்,இப்படிப்பட்டவர் என்று எழுதும்போதும் அதற்கு வக்காலத்து வாங்கும்விதமாக அவர் கொடுக்கும் தரவுகளும் மிகக் கொடுமையாக இருக்கும்.அப்படிப்பட்ட ஒரு தரவைப் பார்ப்போமா!என் நண்பரும்,நண்பரின் நண்பரும் சமீபத்தில் அஹமதாபாத் சென்றிருக்கிறார்கள்.இருவரும் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கியிருக்கிறார்கள்.ஒரு நண்பன் தனது அறையைக் காலி செய்துவிட்டு பணம் பட்டுவாடா செய்ய தனது நண்பனோடு செல்கிறார்.காலைநேரமாதலால் சில்லறை இல்லை என்கிறார் ஹோட்டல் உரிமையாளர்.இப்போது நீங்கள் கிளம்புங்கள்,பிறகு உங்கள் நண்பர் வந்து பணத்தை கட்டிவிட்டுப் போகட்டும் என்று நண்பரை ரூம் வாடகை வாங்காமல் அனுப்புகிறார்.ஆஹா!மோடியின் குஜராத்தில் எவ்வளவு நேர்மை,நியாயம் பார்த்தீர்களா?இப்படியாகப் போகிறது நண்பனின் ஸ்டேட்டஸ்.ஒரு சாதாரண குஜராத்தியின் நேர்மையை மோடியின் நேர்மையாக பார்த்தோமானால்,மோடி தேசம் ஒரு காந்திதேசமாக வர்ணிக்கப்படுமானால் இதுபோன்ற நண்பர்களைக் கண்டு நாம் இரங்கத்தான் முடியும். இந்தியாவின் பிரதமராக மோடி வந்துவிட்டால் திஹார்,புழல்,வேலூர்,பாளையங்கோட்டை சிறைச்சாலைகளுக்கு வேலையே இருக்காது,எல்லாவற்றையும் இழுத்துப் பூட்டிவிடலாம் என்கிற ரேஞ்சுக்கு அவர் ஸ்டேட்டஸ் போடுவார் போல.பிறகு ஒரு மோடி பிரியரிடம் பேசிக்கொண்டிருந்தபோது குஜராத்தின் வளர்ச்சியைப் பார்த்தீர்களா என்று பொருளாதாரம் பேச ஆரம்பித்துவிட்டார். மோடியின் குஜராத்தில் பொருளாதாரத்தின் நிலை என்ன என்பது பற்றி நாம் உண்மையான புள்ளிவிபரங்களுடன் பேச எத்தனிக்கும்போது உடனே அவர்,’நீங்கள் என்னதான் சொல்லுங்கள்,மோடி அலைதான் இந்தியாவில் வீசுகிறது.அவர் பிரதமராக வந்தால்தான் நாட்டுக்கு நல்லது’என்கிறார்.
நரேந்திரமோடியை இத்தேர்தலின் மையப்புள்ளியாக பா.ஜ.கவும்,இந்துத்துவா இயக்கங்களும்,கார்ப்பொரேட்டுகளும்,அதன் ஊடகங்களும் ஆக்கி வைத்திருக்கின்றன.இந்தியாவின் கலாச்சாரம் ஒற்றையானதாக,இந்தியா ஒரு இந்து தேசமாக,இந்தியர்களின் மொழி ஒரே மொழியாக இருக்கும்பட்சத்தில் மோடியை மையப்படுத்துவதை நாம் சகித்துக்கொள்ளலாம்.ஆனால் இந்தியா என்பது ஒரு பல தேசியக் கலாச்சார,பண்பாடுகள் கொண்ட,பல மொழிகள் பேசுகின்ற,பல மதங்கள் கொண்ட ஒரு பன்மைத்துவ நாடு.இந்தியாவை இந்துத்துவாவின் கோரிக்கைகளுக்குள்,கார்ப்பொரேட்டுகளின் கண்ணசைவுக்குள் வைத்துவிடமுடியாது.அதன் பன்மைத்துவம் அப்படியே கடைபிடிக்கப்படுவதன் காரணமாகவே அது இன்னும் இந்தியாவாக இருக்கிறது.ஒரு மாநிலத்தின் போலியான வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி அதனையே இந்தியா முழுமைக்கும் ஒரு மாதிரியாகக் கொண்டு அம்மாநிலத்தின் முதல்வரையே இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி நடத்தப்படும் அழுகுணிப் பிரச்சாரங்கள் “இந்தியா ஒளிர்கிறது”என்ற பா.ஜ.கவின் 2004 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தைத்தான் நமக்கு நினைவுபடுத்துகின்றன.இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனிக்கலாச்சாரம் உண்டு.ஒவ்வொரு மாநில மக்களின் உழைக்கும் திறனும் வெவ்வேறானவை.மோடிக்கு முன்பே குஜராத் பொருளாதாரத்தில்,வளர்ச்சியில் முதன்மை பெற்றிருக்கும் மாநிலம்.மோடியின் கீழ் குஜராத்தின் வளர்ச்சி என்பது யாருடைய வளர்ச்சி என்னும் ஆய்வை தவிர்க்கும் ஊடகங்கள்,குஜராத் மாநிலத்தில் பெருகும் கார்ப்பொரேட்டுகளின் முதலீடுகளையும்,தனியார் துறையின்கீழ் செழிக்கும் கட்டுமானத்துறையையும்,Vibrant Gujarat Summit மூலம் கார்ப்பொரேட்டுகளை ஈர்க்கும் மோடியையும் மட்டுமே பிராதனப்படுத்தி இதுதான் மோடியின் ஸ்டைல் என்று பறைசாற்றுகின்றன. (Vibrant Gujarat Summit-ல் ஒப்புக்கொள்ளப்பட்ட முதலீடு உண்மையில் வந்துசேருவதில்லை என்பதையும் நாம் நினைவு கொள்ளவேண்டும்.)
மோடி பிரதமரானால் அவரது அமைச்சரவையில் நிதி மந்திரியாக பொருளாதாரம் தெரிந்த நபர் யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஏன் இல்லை?யஷ்வந்த் சின்ஹா இருக்கிறார் என்றால் நாமும் அவரது நிர்வாகத்தைப் பற்றி நன்கு சொல்லமுடியும்.சந்திரசேகர் அமைச்சரவையில் அவர் நிதி மந்திரியாக இருந்தபோதுதான் பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் கடன் வாங்க தங்கத்தைக்கொண்டு போய் அடமானம் வைத்தார்.வாஜ்பாய் அமைச்சரவையில் மீண்டும் நிதி மந்திரியாக பதவி வகித்தபோது 2001ல் அவர் பட்ஜெட் தாக்கல் செய்தபிறகு அதே மாதத்தில்மட்டும் 32 பில்லியன் டாலர் முதலீட்டை நாட்டைவிட்டுக் கொண்டு போயின அந்நிய நிறுவனங்கள்.
மன்மோகன் அரசு பொருளாதாரத்தை பாழ்படுத்திவிட்டது போலவும் தான்வந்துதான் அதை சீரமைக்கப்போவதாகவும் மோடி பேசிக்கொண்டிருக்கிறார்.உண்மையில் தற்போதைய நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன?மன்மோகனின் தாராளமய,உலகமயப் பொருளாதாரம் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை நாம் மறுக்கவில்லை.ஆனால் அதற்கு மாற்றாக மோடி என்ன வைத்திருக்கிறார்?மன்மோகன் கார்ப்பொரேட்டுகளை மடியில் கட்டி வைத்திருந்தார் என்றால் மோடி அவர்களை தனது தலைமேல் அல்லவா தூக்கி வைத்திருக்கிறார்!.மன்மோகன் அரசின் இந்தப் பத்தாண்டுகளையும் உலகின் பத்தாண்டுகளோடு நாம் ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் நேர்மையானதாக இருக்கமுடியும்.இந்தப் பத்தாண்டுகளிலும் உலகின் பெரும்பாலான நாடுகளில் தாராளமயக் கொள்கைகள் மிகக்கடுமையாக அமல்படுத்தப்பட்டன.உலகத்தின் நாடுகளில் ஏழை பணக்காரன் பாகுபாடுகள் உச்சத்தைத் தொட்டன.மேற்கு நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிகள் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளைக் காலிசெய்தன.பல வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார கட்டமைப்புகள் வீழ்ச்சி அடைந்தன.லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தின் வீழ்ச்சியைக் கண்டு உலகம் பயந்தது.இவ்வளவுக்கும் மத்தியில் இந்தியாவின் பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தது. மன்மோகன் நமக்கு எவ்வளவுதான் வேண்டாதவராக இருந்தாலும் இவ்வுண்மையை நாம் மறுக்கமுடியாது.மன்மோகன்சிங் மீது நம்முடைய விமர்சனம் என்ன?அவர் பிரதமராக இருந்தாலும் ஒரு பொருளாதார மேதையாக மட்டும்,பொருளாதார அதிகாரியாக மட்டுமாகவே செயல்பட்டார். நாட்டின் பொருளாதாரப் புள்ளிவிபரங்கள் அவருக்கு அத்துப்படி.ஆனால் நாட்டையும்,அதன் உண்மையான ஆன்மாவையும் அவர் அறிந்தாரில்லை.அவர் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் செல்வத்தை தாறுமாறாகப் பங்குபோட்டன. அவரது அயலுறவுக் கொள்கைகள் காங்கிரஸின் முதுகெலும்பை இல்லாமல் செய்துவிட்டன.இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது கண்டுகொள்ளாமலும்,இலங்கைக்கு ராணுவ ரீதியில் உதவியதன்மூலமும் இந்தியாவின் ஆன்மாவையே சிதறடித்தார்.
ஆனால் இதற்கு மாற்று என்பது நரேந்திரமோடியாக இருக்கமுடியுமா?இந்தியா முழுமைக்கும் தாராளமயக்கொள்கைகள் ஏற்படுத்துகிற விளைவுகளை நாம் பட்டியலிடுகிறோம்.ஆனால் ஒரு முழு மாநிலம் முழுவதும் தனியாருக்கும்,கார்ப்பொரேட்டுகளுக்கும் தாரை வார்க்கப்பட்டு இன்று அம்மாநில மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் 23163 ரூபாய் கடனாக,அவர்களது தலைவிதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2002ல் 45301 கோடியாக இருந்த அம்மாநில அரசின் கடன் தொகை 2013ல் 138978 கோடியாக உயர்ந்திருப்பதைத்தான் குஜராத்தின் வளர்ச்சி என்கிறார்களோ?
புள்ளிவிபரங்கள் அலுப்பூட்டக்கூடியவையாக இருந்தாலும் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அதுதான்.
இன்று இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகம் கொண்ட மாநிலங்கள் வரிசையில் குஜராத் மாநிலம் முன்னணியில் இருக்கிறது.நாரேந்திரமோடி சொல்லும் காரணம் என்ன தெரியுமா?”மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் சைவஉணவுக்காரர்களாகவும்,அழகுணர்ச்சி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்”.வளர்ச்சி என்னும் பெயரில் மக்களின் வரிப்பணத்தை கார்ப்பொரேட்டுகளுக்கு தாராளமாக தாரை வார்த்ததுதான் மோடியின் வெற்றி.அதுதான் பெரும்பணக்காரர்களுக்குமான வெற்றி.ஆனால் குஜராத் மக்களைப் பொறுத்தவரை அது தோல்வி.கார்ப்பொரேட்டுகளுக்கு அவர் வாரிவழங்கியது கொஞ்சம் நஞ்சம் அல்ல.ஒரு உதாரணம் பார்ப்போம்.மேற்குவங்க மக்கள் விரட்டி அடித்த டாடாவின் நானோவை வரவேற்று உபசரித்தார் மோடி.மோடி அப்போது என்ன சொன்னார் தெரியுமா? நானோவை குஜராத்திற்கு வரவழைக்க ஒரே ஒரு எஸ்.எம்.எஸ் மட்டுமே செய்தேன்.வந்துவிட்டது என்றார்.ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்ஸோடு தான் வேலை முடிந்ததா?இல்லை.டாடா கொடுத்த முதலீடு 2900 கோடி ரூபாய் மட்டும்தான்.அதற்குப் பதிலீடாக மோடி டாடாவுக்கு வாங்கிக்கொடுத்த வங்கிக்கடன் எவ்வளவு தெரியுமா? 9570 கோடி ரூபாய்.அதுவும் 0.1 சதவிகித வட்டிக்கு,20 வருடங்கள் கழித்து மாதாமாதம் திருப்பி செலுத்தினால் போதும்.அதுமட்டுமல்ல,நேனோ கார் தொழிற்சாலைக்குத் தேவையான நிலம் சந்தை மதிப்பைவிட விலை குறைவாக மோடி வாங்கிக்கொடுத்தார்.அந்நிலத்தைப் பதிவு செய்வதற்கு ஆன செலவையும்,பத்திரச்செலவையும்கூட மோடியின் அரசாங்கமே ஏற்றது.
கட்டுங்கடங்காமல் திறந்துவிடப்பட்ட திறந்தவெளிப்பொருளாதாரம் மக்களுக்கு என்னென்னவெல்லாம் தீங்குகளைச் செய்யும் என்பதை மேற்குலக நாடுகள் சந்தித்த பொருளாதார பிரச்னைகள் நமக்கு சொல்லித்தந்தன.ஆனால் நமது அரசுகள்தான் திருந்துவது இல்லை.அதனால்தான் கிங்ஃபிஷர் கம்பெனி பல்லாயிரங்கோடிகளை வங்கிகளிடம் ஏப்பம் விடமுடிகிறது.20000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டார்களின் பணத்தை சஹாரா குழுமம் விழுங்கமுடிகிறது.கார்ப்பொரேட்டுகள் கொள்ளையடிக்க இந்நாட்டை திறந்ததன் விளைவுதான் 2-ஜியும்,நிலக்கரி ஊழலும்.ஊழலுக்கான அடிப்படையே இந்தத் தாராளவாதமயமும்,அவிழ்த்துவிடப்பட்ட தனியார்மயமும்தான் என்னும் உண்மையை காங்கிரஸும் சரி,ஆம் ஆத்மியும் சரி,பாரதிய ஜனதா கட்சியும் சரி வெளியில் சொல்வதில்லை.போலிமதவாதம் பேசியே காங்கிரஸும்,வளர்ச்சி பற்றிப் பேசியே பா.ஜ.கவும் மக்களை சுரண்டுகின்றனர்.சுரண்டலின் அடிப்படையான இந்த தாரளமயத்தை யாரும் பேசுவார்களில்லை.உலகம் முழுவதும் தனியார்மயம் என்பது தவிக்கமுடியாதது,கடந்த பல பத்தாண்டுகளாக அமல்படுத்தப்படுகிறது.இனி அதைத் திரும்பிப்பார்ப்பது முடியாத காரியம் என்னும் வாதத்தையும் எடுத்துக்கொள்வோம்.காம்ரேடுகளும் கூட சிங்கூர்,நந்திகிராம்களைக் கடந்துதானே வந்திருக்கிறார்கள்! ஆனால் அரசிடம் கொஞ்சமாவது மனிதாபிமானமும்,அற உணர்வும் இருக்கவேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம்.எந்த அரசாக இருந்தாலும் இது நியாயமாரேரேரே…. என்றுதான் மன்றாட வேண்டியிருக்கிறது.இது எங்களுடைய அரசு என்று சாதாரண மக்கள் சொல்லும் அரசு வேண்டும் என்பது நம்முடைய கனவாகத்தான் இருக்கிறது.
காங்கிரஸ் அரசு மிகத்தீவிரமாக பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்தபோதும் கடந்த பத்தாண்டுகளில் ஏராளமான ஊழல்கள் வெளியான போதிலும் மக்கள் கேள்வி கேட்க சில அதிகாரங்களை அது ஏற்படுத்தித் தந்திருக்கிறது.Right To Information Act,தகவல் அறியும் உரிமைச் சட்டம்,காங்கிரஸ் அரசின் முக்கியமான சாதனை.கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமைச்சட்டம் அதன் மற்றொரு சாதனை.இவ்வேலைவாய்ப்பு மட்டும் கிராமப்புற மக்களுக்கு இல்லையென்றால் அரசின் பொருளாதாரக் கொள்கைகளினால் ஏற்பட்ட கொடுமைகள் கிராமப்புற ஏழை மக்களை இல்லாமல் செய்திருக்கும். இவ்வேலைவாய்ப்புகள்தான் இன்னமும் அவர்களை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.நகரத்தை நோக்கிய அவர்களது பயணத்தையும் தடுத்து வைத்திருக்கிறது. இதை ஏன் இங்கு சுட்டிகாட்டுகிறேன் என்றால் காங்கிரஸ் மத்திய அரசு தன்னுடைய பொருளாதாரக் கொள்கைகளின்மேல் கொஞ்சமாவது கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கிறது.ஆனால் குஜராத்தின் மோடி அரசு தனது மாநிலத்தை தனியார் முதலாளிகளிடமும்,கார்ப்பொரேட்டுகளிடமும் அப்படியே கொடுத்துவிட்டார் என்பதைத்தான் அம்மாநிலத்தின் நிலைமை தெரிவிக்கிறது. பொதுவிநியோகத் திட்டம் மிக மோசமாக செயல்படுவதையும்,கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் சரியாக செயல்படுத்தப்படுவதில்லை எப்பதையும்,கிராமப்புற,நகர்ப்புற தொழிலாளர்களின் கூலித் தொகை அகில இந்திய சராசரியைவிடக் குறைவு என்பதையும்,கல்விக்கும்,சுகாதரத்திற்கும் 1990-2010 காலக்கட்டத்தில் குஜராத் அரசு செலவழித்த தொகை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகமிகக் குறைவு என்பதையும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத்தின் வளர்ச்சி நாட்டின் சராசரி வளர்ச்சியைவிட சற்றே அதிகம்.ஆனால் தமிழ்நாடு,மஹாராஷ்டிரா மாநிலங்களின் வளர்ச்சியைவிட குஜராத்தின் வளர்ச்சி குறைவுதான்.இந்த வளர்ச்சியும் கூட மாநிலத்தின் சாலை,துறைமுகங்கள்,இருப்புப்பாதை,மின்சாரம் இவைகளை தனியாருக்கு ஒட்டுமொத்தமாக தாரை வார்த்ததன் விளைவாக ஏற்பட்டவைதான்.மின் உற்பத்தித் துறையில் அதானி குழுமத்தோடு மோடி செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி அடுத்த 25 ஆண்டுகளுக்கு 23625 கோடி ரூபாய் குஜராத் மாநில நிதி அக்குழுமத்துக்குத் தாரை வார்க்கப்படப்போகிறது.இதுபோலவே ரிலையன்ஸ்,எஸ்ஸார் ஸ்டீல் குழுமங்களுக்கும் மாநிலத்தின் நிதி தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. அதனால்தான் முகேஷ் அம்பானி மோடியை தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று புகழ்கிறார்.அவரது தம்பி அனில் அம்பானி மோடியை காந்தியோடும்,படேலோடும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.அதனால்தான் 75 சதவிகித கார்ப்பொரேடுகள் மோடியை பிரதமராக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர். இக்கார்ப்பொரேட்டுகளின் ஊடகங்கள் மோடியைத் தொடர்ச்சியாக உயர்த்திப் பேசுகின்றன.வேறு எதற்காக அதானி தனக்கு சொந்தமான பல விமானங்களில் ஒன்றை மோடியின் பிரச்சாரத்துக்குக் கொடுத்திருக்கிறார்?
கார்ப்பொரேட்டுகளுக்காக மோடியின் சேவையை இன்னும் நாம் கூறிக்கொண்டே இருக்கமுடியும்.மஹுவாவில் சிமென்ட் ஆலையை அமைப்பதற்கு 4000 ஹெக்டேர் விவசாய நிலங்களை நிர்மாவுக்கு மோடி அரசு விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி வழங்கியது.சுற்றுச்சூழலுக்கும்,தங்கள் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள்,குழந்தைகள் உட்பட 5000 மக்கள் காந்திநகருக்கு 350 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரையாக சென்று மோடியிடம் முறையிட்டனர்.ஆனால் மோடி அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.கார்ப்பொரேட்டுகளுக்காக ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் விவசாயிகளிடமிருந்தும்,மலைவாழ் மக்களிடமிருந்தும் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டுக்கொண்டே இருக்க, மற்றொருபுறம் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களும்,விவசாயிகளும்,கூலித் தொழிலாளர்களுமாக 16000 பேர் மோடியின் ஆட்சிக்காலத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.இந்த எண்ணிக்கை மாநில அரசின் கணக்கீடுகளின்படியே எடுக்கப்பட்டது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கூறுகிறார். இந்தியாவின் மிகப்பெரும் பில்லியனர்களை உருவாக்கித்தந்த குஜராத்தில்தான் 31.8 சதவிகித ஏழைமக்கள் இருக்கிறார்கள் என்று திட்டக்கமிஷன் தெரிவிக்கிறது.ஏழை பற்றிய திட்டக்கமிஷனின் உலகப்புகழ்பெற்ற வரையறையை இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும். அதாவது பல லட்சக்கணக்கான குஜராத்திகள் இரண்டு வேளை உணவுக்கு லாட்டரி அடிக்கிறார்கள். மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் குஜராத்தில் மிக மோசமாக செயல்படுத்தப்படுவதாலும், ஊட்டச்சத்துக் குறைபாடும்,குறைவான கூலியும்,பாதுகாப்பற்ற குடிநீரும் மக்களைக் கடும் வாழ்வாதார நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.65 சதவிகித கிராமப்புற மக்களுக்கு கழிப்பிடங்கள் இல்லாததால், பொது வெளியிடங்களில் மலஜலம் கழிப்பதால் மஞ்சள்காமாலை,வயிற்றுப்போக்கு,மலேரியா மற்றும் எண்ணற்ற நோய்களால் மக்கள் அவதியுறுவதும் மாநில அரசின் புள்ளிவிபரங்களின் மூலமே அறியமுடிகிறது.
மோடியின் வளர்ச்சி என்பது இந்துத்வாவின் வளர்ச்சி,கார்ப்பொரேட்டுகளின் வளர்ச்சி.அது ஏழையின் வளர்ச்சி அல்ல.குஜராத்தும் அதைத்தான் சொல்கிறது.அக்கட்சிக்குள் நடக்கும் சமீபகால நிகழ்வுகள் பா.ஜ.க. ஒரு ஜனநாயகக் கட்சி என்ற நம்பிக்கையையும் பொய்ப்பிக்க வைக்கின்றன.அதன் மூத்த தலைவர் அத்வானி விரும்பிய இடத்தில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.மற்றொரு மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் கட்சியைவிட்டு விலகிவிட்டார்.பா.ஜ.கட்சி போலிகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது என்கிறார் அவர். தேர்தலில் மோடியை முன்னிலைப்படுத்தவேண்டாம் என ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமை தனது பரிவாரங்களை அறிவுறுத்தியிருக்கிறது.கட்சிகளை போலிகள் ஆக்கிரமிக்கலாம்,ஆனால் தேசத்தை போலிகள் ஆக்கிரமிக்காமல் நாம்தான் பாதுகாக்கவேண்டும்.
(உயிர்மை,ஏப்ரல்,2014)