வறண்ட காவிரியில் தொலைந்த மனிதம்
2004 -ம் ஆண்டு தமிழ்நாட்டை சுனாமி தாக்கி ஒரு மாதம் கழித்து கர்நாடக மாநிலம் JSS மஹா வித்யாபீடத்தைச் சேர்ந்த பெரியவர்கள் சுனாமி பாதித்த பகுதிகளுக்கு தங்களால் ஆன உதவிகளைச் செய்ய முடிவு செய்தனர்.மைசூர் குடிமக்கள் பேரவையும்(Mysore citizens’ forum) அவர்களோடு இணைந்து கொண்டனர்.திட்டம் தயாரிக்கப்பட்டது.கடலூர் மாவட்டம் முதலியார்க்குப்பம் கிராமத்தில் பாதிக்கப்பட மீனவர்களுக்கு குடியிருப்புகளை கட்டிக் கொடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டு அடுத்த ஓராண்டில் அப்பணிகள் முடிக்கப்பட்டு ஆறறை கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 240 வீடுகள் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சுனாமி பாதித்த தமிழக மக்களுக்கு சக கர்நாடக மக்கள் செய்த மிகப்பெரிய மனிதாபிமான உதவி இது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவில் பெய்த பேய்மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக போர்வைகள் உட்பட பத்து இலட்சம் மதிப்புடையநிவாரணப் பொருட்கள் திருச்சியிலிருந்து மைசூருக்கு அனுப்பிவைக்கப்பட்டன.பாதிக்கப்பட்ட கர்நாடக மக்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் செய்த மனிதாபிமான உதவி இது.இவ்விரு நிகழ்வுகளிலும் தனது சிறந்த பங்களிப்பைச் செய்தவர் தஞ்சை மருத்துவர் ச.மருதுதுரை.கர்நாடகா தரப்பிலும் ஏராளமான நல்ல உள்ளங்களான அவருடைய நண்பர்கள்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்கால ஆணை அரசிதழில் 11.12.1991 அன்று வெளியிடப்பட்டது.அன்றைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா 13.12.91 அன்று மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்தினார்.அன்று ஆரம்பித்த கர்நாடகவாழ் தமிழர்களுக்கெதிரான கலவரம் 1992 ஜனவரி வரை நீடித்தது.ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் அகதிகளாயினர்.இலங்கையிலிருந்து,பர்மாவிலிருந்து அகதிகளைப் பெற்றுவந்த தமிழ்நாடு இந்தியாவிலிருந்தும் அகதிகளைப் பெற்றது.கர்நாடக அரசின் கணக்குப்படி 17 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.300 கோடி ரூபாய் மதிப்புடைய தமிழர்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.கலவரம் பற்றி விசாரிப்பதற்கென அமைக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் ஆணையம் ஒருவர்மீதும் குற்றம் சாட்டவில்லை.நிர்வாக அமைப்பு முறையில் ஏற்பட்ட தோல்வி என்று பரிந்துரைத்தது.கர்நாடகாவில் வேற்று இனத்தவர் செல்வாக்கும் ஆதிக்கமும் செலுத்துவதால் கன்னடர்களுக்கு ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியே கலவரத்திற்குக் காரணம்.வேற்று இனத்தவர் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று வெங்கடேஷ் ஆணையம் பரிந்துரைத்தது.இழப்பீடு பற்றி அது வாய் திறக்கவில்லை.பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டுதான் இழப்பீட்டிற்கான ஆணையை 15.04.1999 அன்று பெற்றனர்.
மேற்கண்ட இரண்டு முரண்பட்ட நிகழ்வுகளை நாம் கூர்ந்து நோக்கவேண்டும்.இயற்கை ஒரு மனிதனை அழிக்கும்போது உதவிக்கு ஓடிவந்து கருணையைச் சுரக்கும் இன்னொரு மனிதன்,மற்றொரு தருணத்தில் வெறிபிடித்த மிருகமாக மாறிப்போகிறான்.குறுகிய இன உணர்ச்சி,மொழி உணர்ச்சி,மாநில உணர்ச்சி அவனை கடைநிலை மிருகமாக மாற்றிவிடுகிறது.
முதல்நிகழ்வு தனியொரு மனிதனால் சாதிக்கப்பட்டது.அடுத்த நிகழ்வு வெறிபிடித்த கும்பலால் நிறைவேற்றப்பட்டது.
மிக எளிய மனிதர்களால் நிறைவேற்றப்படும் இத்தகைய மனிதாபிமான உதவிகளை இரு மாநில அரசுகள் ஆதரித்து ஊக்கப்படுத்தியிருக்குமேயானால் இவ்விரு மாநில மக்களிடையே பகைமை உணர்வுகள் குறைந்திருக்கும்.திருவள்ளுவர் மற்றும் சர்வக்ஞர் சிலைகள் சாதிக்காததை இத்தகைய மனிதாபிமான பரஸ்பர உதவிகள் சாதித்திருக்கும்.
இந்தியா போன்ற பல்வேறு இன,மொழி பேசும் மக்களடங்கிய ஒரு சமுதாயத்தில் தண்ணீர்முதல் தக்காளி வரை மிக எளிதில் பகையை ஏற்படுத்திவிடமுடியும். தங்களுக்குள்ளான பிரச்னைகளை தாங்களாகவே தீர்த்துக்கொள்ளும் வலிமையும் அவர்களிடம் உண்டு.சமீபத்தில்கூட இரண்டு மாநில விவசாயிகள் பல கட்டமாக சந்தித்துப் பேசினர்.அதைக் காவிரிக்குடும்பம் என்றனர்.ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளமுடியும்,விருந்து சாப்பிடமுடியும்.ஆனால் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வதற்கான உண்மையான அதிகாரம் அவர்களுக்குத் தரப்படவில்லை.அவர்களுக்கு உண்மையான அதிகாரம் தரப்பட்டிருக்குமானால் காவிரிப் பிரச்னை தீர்ந்துவிடும் என நான் சொல்ல வரவில்லை.நீர்ப்பற்றாக்குறைக் காலத்தில் இருக்கும் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்ற முடிவை அவர்கள் எட்டியிருப்பார்கள்.தங்களது அணைகளில் அடுத்த போகத்திற்காக தண்ணீரை இப்போதே தேக்கிவைக்காமல் தமிழகத்திற்கு திறந்துவிட்டிருப்பார்கள்.இது ஒன்றும் கற்பனை அல்ல.உண்மையான அதிகாரத்தை அந்த ஏழை விவசாயிடம் கொடுத்துப் பாருங்கள்.கீழ்வேளூர் ராஜாங்கமும்,ஆண்டாங்கரை அப்துல் ரஹீமும் தற்கொலை செய்துகொள்ள கர்நாடக விவசாயிகள் அனுமதித்து இருக்கமாட்டார்கள்!!.
காவிரிப் பிரச்னை மிக நீண்ட வரலாற்றினைக் கொண்டது.பிரிட்டீஷ் ஆட்சியின் கீழிருந்த சென்னை மாகாணத்திற்கும்,மைசூர் அரசுக்கும் இடையே 1892-ல் காவிரி நீர் பகிர்வு சம்பந்தமாக முதன்முதலில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.அதன்படி முதன்மையான ஆறுகள் அட்டவணை A -ல் சேர்க்கப்பட்டன.முக்கியத்துவமற்ற சிற்றாறுகள்,ஓடைகள் அட்டவணை B,C என வகைப்படுத்தப்பட்டன.ஒப்பந்தத்தின் கீழ்க்கண்ட விதிகள் முக்கியமானவை.
- சென்னை அரசின் ஒப்புதல் இல்லாமல் மைசூர் அரசு அட்டவனை A ஆறுகளில் அணைகள் கட்டக்கூடாது.
- அட்டவணை A ஆறுகளில் புதிய நீர்த்தேக்கமோ,அணைக்கட்டோ கட்ட விரும்பினால் மைசூர் அரசு சென்னை அரசுக்கு அது குறித்த திட்ட விபரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும்.
- ஏற்கனவே உள்ள தனது பாசனத்திட்டங்களுக்குப் பாதிப்பு வராத நிலையில் மைசூரின் புதிய திட்டங்களை சென்னை அரசாங்கம் மறுக்கக்கூடாது.
- புதிய அணைகள் கட்டுவதில் இரு தரப்பினருக்கும் உடன்பாடு ஏற்படவில்லையென்றால் பிரச்னையை இரு அரசுகள் அல்லது இந்திய அரசால் நியமிக்கப்படும் தீர்ப்பாளர்கள் முடிவுக்கு விட்டுவிடவேண்டும்.
கோலார் தங்கவயலுக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய காவிரியில் சிவசமுத்திரத்தில் ஒரு நீர்மின் நிலையத்திற்கான நீர்த்தேக்கம் கட்ட மைசூர் சென்னையின் ஒப்புதலைக் கோரியது.1892 ஒப்பந்தத்திற்கிணங்க 1900 -ல் சென்னை அரசு அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. 1906-ல் மைசூர் அரசு காவிரியில் கண்ணம்பாடியில் அணைகட்ட திட்டம் முன்மொழியப்பட்டது.இதுதான் கிருஷ்ணராஜசாகர் திட்டம்.அணையின் முழுக் கொள்ளளவு 41.5 டி.எம்.சி.அதே காலக்கட்டத்தில் மேட்டூர் அணைகட்டும் திட்டத்தை தமிழகம் முன்மொழிந்தது.இவ்விரு அணை தொடர்பாக இவ்விரு அரசுகளுக்கும் உடன்பாடு ஏற்படாததால் இந்திய அரசு இப்பிரச்னையை தீர்ப்பாளர் முடிவுக்கு விட்டது.1913 சூன் மாதம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எச்.டி.கிரிஃபின் அவர்கள் தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.1914 -ம் ஆண்டு(நீதித்துறை கவனிக்க : அதாவது மறு ஆண்டே) சென்னை,மைசூர் அரசுகள் முறையே மேட்டூர்,கண்ணம்பாடி அணைகளைக் கட்டிக்கொள்ளலாம் என்று கிரிஃபின் தீர்ப்பளித்தார்.கண்ணம்பாடி அணை கட்டினால் தனது பழைய பாசனப் பகுதிக்கு பாதிப்பு வரும் என உணர்ந்த சென்னை அரசு இத்தீர்ப்பை ஒத்துக்கொள்ளவில்லை.இந்திய அரசிடம் முறையீடு செய்தது.சென்னையின் முறையீட்டை இந்திய அரசு நிராகரித்தது.சென்னை அரசு இலண்டனில் உள்ள இந்தியா அமைச்சரிடம் முறையிட்டது.சென்னை அரசின் கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்த இந்தியா அமைச்சர் மைசூர் அரசுக்கு மேல்முறையீட்டிற்கான வாய்ப்பினையும்,சென்னை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பினையும் அளித்தார்.மைசூர் அரசு பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுத்தது. பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் 1921 சூலையில் இரு அரசுகளும் கிரிஷ்ணராஜசாகர்(கண்ணம்பாடி)அணை கட்டுவதற்குரிய வரைவு விதிகளையும் ஒழுங்குமுறைகளையும் இறுதி செய்தன.இந்த வரைவு உடன்பாட்டில் இரு அரசுகளின் தலைமைப் பொறியாளர்கள் கையொப்பமிட்டனர்.காவிரியில் சென்னை அரசுக்கு அனுபவ பாத்தியதை உரிமை உண்டு(Prescriptive Rights) என்பதை முதன்முதலாக அறிவித்த முக்கியத்துவம் 1921-ம் ஆண்டின் கிருஷ்ணராஜசாகர் வரைவு விதிகளுக்குண்டு.மேற்கண்ட வரைவை மைசூர் அரசு ஏற்கவில்லை.உபரி நீரைப் பகிர்ந்து கொள்ள சென்னை உரிமை கோரக்கூடாது.அனுபவபாத்தியதை உரிமையுடன் சென்னை நின்றுவிடவேண்டுமே தவிர புதிய அணைகள் கட்டுவதில் சென்னை தலையிடக்கூடாது என்பது மைசூரின் வாதம்.இந்த வாதத்தை மைசூர் அரசு இன்று வரை கடைப்பிடித்துவருகிறது.இறுதியில் 1924,பிப்ரவரி 18-ம் நாள் கிரிஷ்ணராஜசாகரில் அணைகட்டுவது பற்றி இருதரப்புக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்பின் இணைப்பாக கிரிஷ்ணராஜசாகர் ஒழுங்குமுறை விதிகள் சேர்க்கப்பட்டன.ஆனாலும் இயற்கையால் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறை காலத்தில் கி.ரா.சாகர் அணைத் தண்ணீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என ஒப்பந்தம் கூறவில்லை. இரு அரசுகளும் புதிய நீர்த்தேக்கங்கள் கட்டிக்கொள்வது,நீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றிய நடைமுறைகளை ஒப்பந்தத்தின் விதி 10 தெளிவாகக் கூறுகிறது.ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கின்ற அனுபவத்தைக் கொண்டு உபரி நீரை(ஒப்பந்தம் எதிர்பார்த்தைவிடக் கூடுதலாக வரும் நீரை)எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று மறுஆய்வு செய்யவேண்டும் என்று விதி 10-ன் உட்பிரிவு XI கூறுகிறது.இதைத்தான் ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்குப்பிறகு செல்லாததாகிவிட்டது என்று கர்நாடக அரசு திரித்துக் கூறுகிறது.1950 களிலிருந்தே ஒப்பந்தத்திற்குப் புறம்பாக கர்நாடகத்தில் அணைகள் கட்டத் தொடங்கிவிட்டனர்.பின்னர் ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர்விட மறுத்தனர்.
1972 மே மாதம் அப்போதைய கர்நாடக முதல்வருடன் அப்போதைய தமிழக முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவரும் ஒப்புக்கொண்ட செய்தி புதிய உடன்பாடு வரும்வரைக்கும் 1972 மேமாதம் பயன்படுத்திய தண்ணீருக்கு மேல் எந்த மாநிலமும் கூடுதலாக நீரைப்பயன்படுத்தக் கூடாது.கர்நாடகம் 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் பாசனப்பரப்பை விரிவுப்படுத்தக் கூடாது.1971-ல் இந்திய அரசின் உண்மை அறியும் குழு அளித்த விபரத்தின்படி 1971-ல் கர்நாடகத்தில் காவிரிப்பாசனப் பரப்பு 4.42 இலட்சம் ஏக்கர் மட்டுமே.1971-ல் தமிழகத்தின் பாசனப்பரப்பு 25.30 இலட்சம் ஏக்கர்.கிருஷ்ணசாகரும்,மேட்டூரும் கட்டுவதற்கு முன்பே தமிழ்நாட்டில் 14,44,000 ஏக்கர் நிலங்களுக்குக் காவிரியாறு பாசனம் தந்து வருகிறது.ஆனால் கர்நாடகத்தில் அக்காலத்தில் 1,11,000 ஏக்கர் மட்டுமே பாசனம் பெற்று வந்தது.கர்நாடகத்தில் 1959 இல் திறக்கப்பட்ட கபினி அணையின் மூலம் புதிதாகக் கொண்டுவரப்பட்ட பாசனப் பரப்பு 4,47,000 ஏக்கர்.1965-ல் திறக்கப்பட சுவர்ணவதி நீர்த்தேக்கம் மூலம் புதிதாக வந்த பாசனப் பரப்பு 7000 ஏக்கர்.1968-ல் திறக்கப்பட்ட ஏமாவதி நீர்த்தேக்கம் மூலம் 7,01,000 ஏக்கர் புதிய பாசனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.1979-ல் திறக்கப்பட்ட கிருஷ்ணராஜசாகர் வருணாக்கால்வாய் மூலம் 80000 ஏக்கரும்,1979-ல் கிருஷ்ணராஜசாகரை நவீனப்படுத்தியதன்மூலம் 5000 ஏக்கரும் புதிய பாசன விரிவாக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டன.1983-ல் திறக்கப்பட்ட யகாச்சி நீர்த்தேக்கம் 53000 ஏக்கருக்குப் புதிய பாசனம் தருகிறது.இவ்வாறு இன்னும் பல திட்டங்கள் போட்டு நிறைவேற்றி 1990 வரை மொத்தமாக 21,38,000 ஏக்கர் நிலத்தைக் கர்நாடகம் பாசனத்திற்குக் கொண்டுவந்துள்ளது.1924 ஒப்பந்தத்தை 1959-ல் கபினி அணை கட்டத்தொடங்கியதிலிருந்தே கர்நாடகம் மீறியது. கர்நாடகத்திலோ,தமிழ்நாட்டிலோ புதிய அணைகள் கட்டினால்,திட்ட வரைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு,கருத்து முரண்பாடுகளைப் போக்கி,அவற்றிற்கு இரு தரப்பும் இசைவு தெரிவிக்கவேண்டும்.1924 -ம் ஆண்டு ஒப்பந்தத்தின் இம்முக்கியமான விதியை ஒருகாலத்திலும் கர்நாடகம் கடைப்பிடித்தது கிடையாது.தமிழகத்தின் இசைவு இல்லாமலேயே இந்த நீர்த்தேக்கங்களைக் கட்டியது.
நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது,அதன் இடைக்காலத் தீர்ப்பு,இடைக்காலத் தீர்ப்பை கர்நாடகம் நிராகரித்தல்,தமிழகத்தின் வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்யாத இறுதித் தீர்ப்பு.இப்போதைய பிரச்னைகள் எல்லாம் தனிக்கதை.தான் கையெழுத்திட்ட,தான் ஒப்புக்கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களின் ஷரத்துகளை தானே மீறுவதுதான் கர்நாடகத்தின் அறம்.பலநூறு ஆண்டுகளாக காவிரியை நம்பி வாழும் பல லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பற்றி அதற்குக் கவலையில்லை.
காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள இரு அரசுகளும் ஏற்படுத்திக்கொண்ட ஏறக்குறைய நடுநிலையான ஒப்பந்தங்களான 1892,1924 காவிரி ஒப்பந்தங்களை காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு ரத்து செய்துவிட்டது.1892,1924 ஒப்பந்தங்கள் செல்லுமா,செல்லாதா,நீடிக்கலாமா,கூடாதா என்ற கேள்விகள் நடுவர் மன்றத்தின் விசாரணை வரம்பில் வைக்கப்படவேயில்லை.ஒட்டுமொத்தமாக காவிரிநீர்ப்பகிர்வு குறித்து முற்றிலும் புதிய அடிப்படைகளை உருவாக்கும் அதிகாரம் இந்த நடுவர் மன்றத்திற்கு வழங்கப்படவில்லை.
நதிநீர்ப்பிரச்னைகள் கிளம்பும்போது கூடவே இன்னொரு பூதமும் கிளம்பும்.அதுதான் கங்கை-காவிரி இணைப்பு,தென்னக நதிகள் இணைப்பு.இந்த பூதத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட தீனி போட்டு வளர்த்திருக்கிறார்.முன்னாள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் டாக்டர் கே.எல்.ராவ் என்பவர் வகுத்த திட்டம்தான் இது.இவர்தான் தமிழ்நாடு,கர்நாடகா இடையே காவிரிநீர்ப்பங்கீடு பற்றிப் பேசி சலித்துப்போனவர்.மத்திய அரசின் நீர்வளத்துறை இத்திட்டத்தை ஆய்வு செய்து இது நடைமுறைசாத்தியமற்றது என்று 1980-ல் நிராகரித்துவிட்டது.கங்கை-காவிரி இணைப்புத் திட்டத்திற்கு வடமாநிலங்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிக்கும்.சட்லெஜ்-யமுனை இணைப்புக் கால்வாய் திட்டம் இன்னமும் செயல்படாமல் கிடக்கிறது.ராஜீவ்-லோங்காவால் உடன்பாட்டில் சட்லெஜ் தண்ணீரை அரியானாவுக்கும்,ராஜஸ்தானுக்கும் பஞ்சாபியர் அனுமதிக்கவேண்டும் என்பதும் ஓர் அம்சம்.லோங்காவால் துரோகிப் பட்டம் சூட்டப்பட்டு கொல்லப்பட்டார்.சட்லெஜ் நீர் உரியவாறு அரியானாவுக்குப் போகவில்லை.முல்லைப்பெரியாறு திட்டமே நதிநீர் இணைப்புத் திட்டம்தான்.100 ஆண்டுகளுக்கும் மேலாக இணைக்கப்பட்டிருந்த முல்லைப் பெரியாறும்,வைகையாறும் கேரள அரசின் முரட்டுப்பிடிவாதத்தால் துண்டிக்கப்படுகின்றன.பக்கிங்ஹாம் கால்வாய் விசாகப்பட்டினம் முதல் வேதாரண்யம் வரை 500 மைலுக்கு ஆந்திராவையும் தமிழகத்தையும் இணைப்பது.அதைத் தூர் எடுத்தால் மலிவான சரக்குப் போக்குவரத்து ஆந்திராவுக்கும்,நமக்கும் சாத்தியம்.அது ஏன் செயல்படுத்தப்படவில்லை?.
தக்காண ஆறுகளை இணைப்பதற்காக தென்னக முதல்வர்களைச் சந்திப்பேன் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி 2007-ல் கூறினார்.எந்த முதல்வரும் இத்திட்டத்தை ஆதரிக்கவில்லை.கேரளமுதல்வர் எதிர்த்துப் பேசினார்.
நீரியல் நிபுணர் குழு ஒன்று தமிழக ஆறுகளில் வீணே கடலுக்குள் போகும் 230 டி.எம்.சி. நீரைத் தேக்க தடுப்பு அணைகள் கட்டப்படவேண்டும் என்றும் அதற்கு 1000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் 2002-ல் ஒரு விரிவான அறிக்கை தந்தார்கள்.தமிழகத்தின் முன்னாள்,இந்நாள் முதல்வர்கள் இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை.
நதிநீர்ப் பிரச்னை வரும்போது பேசப்படும் மற்றொரு பொருள் மாற்றுப்பயிர் சாகுபடி.தமிழ்நாட்டிற்கே உணவு வழங்கும் காவிரி டெல்டாவில் நெற்பயிர் பயிரிடப்படவில்லை என்றால் தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.விளைச்சல் நன்றாக இருக்கும்போதே உணவுப்பொருட்களின் விலை உச்சக்கட்டத்தைத் தொட்டுக்கொண்டுள்ளது.நெற்பயிர் சாகுபடி கிடையாதென்றால் அல்லது குறையுமென்றால் தமிழ்நாட்டுமக்களுக்கான பொதுவிநியோகத்திட்டம்அடியோடு பாதிக்கும்.தமிழக மக்களின் உணவுத் தேவையை பிறமாநிலங்களிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ எதிர்பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.நெற்பயிர் சாகுபடியில் தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தலாம்.குறுகியகால நெற்பயிர்களைப் பரிந்துரை செய்யலாம்.
மற்றுமொரு கோரிக்கையும் உள்ளது.நெய்வேலியிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மின்சாரத்தை தடை செய்யவேண்டும்.அது ஒரு பொருளாதாரத்தடை.அது அம்மாநில மக்களிடையே நம்முடைய கோரிக்கைகள் பற்றிய விழிப்புணர்ச்சியைக் கொடுக்க உதவும்.நெய்வேலியிலிருந்து பெறும் 500 அல்லது 1000 மெகாவாட் மின்சாரத்தை கர்நாடகம் வேறு வழிகளில் பெறும்போது இவ்வழியும் நமக்கு பயனில்லாமல் போகும்.நமக்கு வேண்டியது நீடித்த நிலைத்த தீர்வு.அதற்கு ஒரே வழி தீர்ப்பாயங்கள் தரும் உத்தரவுகளைச் செயல்படுத்த அணைகள்,ஆற்றுவழிகள் அனைத்தும் தேசியமயமாக்கப்படவேண்டும்.
இந்தியா போன்று பல இன,மொழி பேசும் மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப்பிரச்னைகளை மத்திய அரசு தலையிட்டு தீர்த்துவைக்கவேண்டும்.வெறும் பார்வையாளராக இருக்கக்கூடாது.திரு.கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழக அரசும்,தஞ்சை மாவட்ட விவசாயிகளின் அமைப்பும் காவிரிப்பிரச்னைக்காக மத்திய தீர்ப்பாயம் வேண்டி உச்சநீதிமன்றத்தில் 1971- ல் வழக்கு தொடுத்தபோது அன்றைய பிரதமர் இந்திராகாந்தி தலையிட்டு வழக்கை திரும்பப் பெறச்செய்தார்.தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் பின்னடைவாக இது கருதப்படுகிறது.காவிரிப்பிரச்னையை தீர்த்து வைப்பேன் என்று வாக்கு தந்த இந்திராகாந்தி அதை நிறைவேற்றவில்லை.நெருக்கடி காலத்தின்போது இந்திரா காங்கிரஸ் கட்சியின் தென்னிந்திய தளபதி தேவ்ராஜ் அர்ஸ் தான் கர்நாடக முதல்வர்.தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி கர்நாடகத்திற்கு காவிரிப் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்த 900 கோடி ரூபாய் உலக வங்கிக் கடனைப் பெற்றுத் தந்தார் இந்திரா.
அன்றைக்கு(1972) வழக்கு மட்டும் திரும்பப் பெறாமல் இருந்திருக்குமானால் காவிரித் தீர்ப்பாயம்(நடுவர் மன்றம்)1970 களில் அமைக்கப்பட்டிருக்கும்.கண்டிப்பாக பிரச்னை தீர்க்கவும் பட்டிருக்கலாம்.சுயநலத்திலேயே உழன்று கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகள் அண்டை மாநிலங்களுடனான பிரச்னைகளைத் தீர்ப்பதில் லாயக்கற்றவர்களாகத் திகழ்கிறார்கள்.தற்போதைய மத்திய அரசின் ஊமைத்தனத்திற்கு தொலைநோக்கு இல்லாத இப்போதையத் தலைவர்களை மட்டுமே குற்றம் சொல்லமுடியும்.
இன்று இப்பிரச்னை ஒரு தற்கொலைப் பிரச்னையாக மாறியிருப்பதற்கு இரு மாநில அரசியல்வாதிகள்,மத்திய அரசு,நீதித்துறை எல்லோரும் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்.இயற்கை நிறைவாகத் தரும்போது திருப்திப்பட்டுக்கொள்ளும் நாம் அது குறையை ஏற்படுத்தும்போது மட்டும் ஏன் திணறிப்போகிறோம்? இயற்கையை கொஞ்சம் அல்ல நிறைய,நிறைய சிதைத்துக் கொண்டே செல்லும் நமக்கு அது மட்டும் நிறைவாகத்தரவேண்டும் என எப்படி எதிர்பார்க்கமுடியும்?
காவிரி டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வாழ்வாதாரம் சீர்குலைவுக்கு ஆளாகத்தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன.தொடர்ச்சியான நதிநீர்ப் பிரச்னை,தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளின் உதாசீனம்,பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வைத்திருக்கும் போக்கு,விளைநிலங்களை விரைவாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்,வேறு வேலை வாய்ப்புகளைத் தேடி இடம்பெயரும் டெல்டா விவசாயத் தொழிலாளர்கள்,விளைநிலங்களை மனைகளாக வாங்கிப் போட்டுவிட்டு சாப்பாட்டுக்கு மைசூர் பொன்னியை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர்,விவசாயிகளை புழுப்பூச்சிகளைப் போல பார்க்கும் அரசு,வங்கி அதிகாரிகள்,பிரச்னை வந்தால் மட்டுமே அது பற்றி சிந்தனை கொள்ளும் தமிழக,கர்நாடக ஆளும் வர்க்கங்கள்,இரு மாநிலங்களிலும் மக்களை உசுப்பி விடும் சுயநலக் கட்சிகள்,மௌனமாகிப் போன மனசாட்சி கொண்ட இரு மாநில மக்கள்,வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு,தனது அதிகாரம் வெற்று வேட்டாகிப் போவதை இயலாமையுடன் நோக்கும் உச்ச்சநீதிமன்றம்,களவாடப்படும் குளங்கள்,ஏரிகள்.யாரிடம் போய் முறையிடுவது?
இரு மாநில அரசுகளும் தங்களுக்குச் சாதகமான புள்ளி விபரங்களை அளிக்க முடியும்.அதை வைத்துப் பேச முடியும்.நியாயத்தை யாரும் பேசுகிறார்கள் இல்லை.வெள்ளக் காலத்தில் இலட்சக்கணக்கான கனஅடி தண்ணீரை தமிழகத்திற்குத் திறந்துவிட முடிகிற கர்நாடகத்தால் ஒரு நொடியாவது அத்தண்ணீரை தேக்கிவைத்துக்கொள்ள முடியுமா? அந்த நியாயத்தை மட்டுமாவது கர்நாடகம் சிந்துத்துப் பார்க்கவேண்டும்.நீர்ப்பற்றாக்குறையாக இருக்கும் காலத்தில் தஞ்சை டெல்டா விவசாயிகள் எப்படியெல்லாம் தவித்துப்போகிறார்கள் தெரியுமா?பாமணி ஆற்றில் தண்ணீர் வந்து நம்மங்குறிச்சி வாய்க்காலில் மோட்டார் போட்டு இறைத்துவிட்டு அதனை நான்கு கிலோமீட்டர் தொலைவுள்ள மருதங்காவெளியின் வானம் பார்த்த பூமிக்கு கொண்டுவந்து,இரவில் வாய்க்கால் வரப்பில் படுத்து,பாம்புகளுடன் பழகி சொற்பத்தண்ணீரையும் வயலுக்குப் பாய்ச்சிய அனுபவங்கள் என் நினைவில் நிழலாடுகின்றன.சமீபத்தில் அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது அவ்விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மனைகளாகியிருந்தன.வாய்க்கால் தூர் வார வராத அதிகாரி அவ்விளைநிலங்களை அளந்து மனைக் கற்கள் போட ஓடோடி வருகிறார்.என்ன தேசம் இது?.
(தீராநதி,ஜனவரி,2013)