வரவர ராவ் – சிறகொடிக்கப்பட்ட சிறைப் பறவை
இந்தியாவின் பன்மைத்துவம் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டு அவ்விடத்தில் ஒற்றைத்துவம் திணிக்கப்படும்போது, அதனால் பாதிக்கப்படும் ஆதிவாசிகளும், மத சிறுபான்மையின மக்களும் இயல்பாகவே இதனை எதிர்த்துத் திரண்டெழுகின்றனர். பண்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதாரத்தில் பன்மைத்துவக் கூறுகள் இயல்பாகவே அமைந்திருக்கும் ஒரு நாட்டில், இக்கூறுகளின் தன்மை சிதைக்கப்படும்போது, மக்கள் கிளர்ந்தெழுவதில் வியப்பில்லை.
உலகமயமாக்கலும், தாராளமயமாக்கலும் இந்தியாவில் பரவத்தொடங்கிய பிறகு, இந்தியாவின் இயற்கைச் செல்வங்கள் அனைத்தும் கார்ப்பொரேட்ரேட்களுக்குக் கையளிக்கப்பட்டுவிட்ட சூழலில், அச்செல்வங்கள் குவிந்து கிடக்கும் வனங்களைத் தங்களின் வசிப்பிடங்களாகக் கொண்டிருக்கும் ஆதிவாசிகள், நகர்ப்புறங்களுக்கு சேரிவாழ் மக்களாக இடம்பெயர்கிறார்கள். இடம்பெயர விரும்பாதவர்கள் தங்களின் பூர்விகக் குடிகளின் நிலத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தினைத் தொடங்குகிறார்கள். எனவேதான் வனங்களின் பூர்விகக் குடிகள், ஆயுதம் தரித்திருக்கும் மாவோயிஸ்ட்களை, தங்களைக் காப்பாற்ற வந்திருக்கும் மீட்பர்களாகவே கருதுகிறார்கள்.
தெலுங்கின் புரட்சிகர எழுத்தாளரும், கவிஞருமான வரவரராவ் நிச்சயமாக ஒடுக்கப்படும் ஆதிவாசி மக்களின் பக்கமாகவே நிற்பவர். 1970 களில் ஆந்திரப் பிரதேசத்தில் சூறாவளியாய்த் தாக்கிய நக்சல்பாரி எழுச்சிகளின் மத்தியில் தன்னுடைய கல்லூரிப் பேராசிரியர் பணியினூடே புரட்சிகர எழுத்தாளர் சங்கமான “விராசம்” அமைப்பைத் தொடங்கினார். புரட்சிகர ஜனநாயக முன்னணி என்னும் அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் செயல்படுகிறார். புரட்சிகர இலக்கியங்களைக் கொண்டுவர ஷ்ருஜனா என்னும் தெலுங்கு இதழையும் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
தமிழின் இன்குலாப் போன்ற எழுத்துகள் அவருடையவை. தீ பறக்கும் எழுத்துகள். 9/11 க்குப் பிறகான உலகமயச்சூழலில் தங்களின் உரிமைகளுக்காகக் கிளர்ந்தெழுந்துப் போராடும் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டும் ஏகாதிபத்தியங்களை நீங்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்? என்று ஒருமுறை கேட்டபோது அவர் தனது கவிதை நடையிலேயே பதிலைச் சொன்னார்:
“நேற்று வெள்ளை மனிதன் பகத்சிங்கை பயங்கரவாதி என்றான்
இன்று கருப்பு மனிதன் நக்சல்பாரியை பயங்கரவாதி என்கிறான்
நாளை உலகம் இவர்களை இருண்ட வானின் சிவப்பு நட்சத்திரம் என்பார்கள்”.
“உலகமய சூழலில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்படுவார்கள். எதிரிகள் எங்களுக்குக் கொடுக்கும் பெயர் பற்றிக் கவலையில்லை”.
1973 முதல் வரவரராவின் மீது 25 வழக்குகளுக்கும் மேலாக தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆந்திரப்பிரதேச அரசைக் கவிழ்க்க அவர் சதி செய்ததாக ஒரு வழக்கு சொல்கிறது. ஒரு போலீஸ்காரரைக் கொலை செய்ய முயன்றதாக வேறொரு வழக்கு குறிப்பிடுகிறது. இப்படியாக ஒவ்வொரு வழக்கிலிருந்தும் அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. இறுதியாக அவர்மீது இப்போது பிரதமர் மோடியைக் கொலைசெய்ய அவர் சதித் திட்டம் போட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர் கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டு மும்பைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
எளிய மக்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக அவர் இதுவரை ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்திருக்கிறார். அரசு அவர் மீது ஒவ்வொரு முறை வழக்குத் தொடுக்கும்போதும் அது தோல்வியையே சந்தித்திருக்கிறது. அவரை ஒரு கிரிமினலாக மக்களுக்குக் காட்ட நினைக்கும் அரசின் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் அவருடைய எழுத்துகளை வாசித்திருக்கிறார்கள். அவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வருகை தந்திருக்கிறார்கள். 1990 இல் ஒருமுறை வாரங்கல்லில் நடைபெற்ற “உழுபவனுக்கு நிலம் வேண்டும்” இயக்கத்தின் மாநாட்டில் கூடியிருந்த 12 லட்சம் மக்கள் மத்தியில் அவர் உரையாற்றியிருக்கிறார். பயந்துபோன ஆந்திர அரசு வரவரராவை முடக்குவதற்கான வேலைகளைச் செய்தபோதுதான் அவர் வாரங்கல்லிலிருந்து ஹைதராபாத்திற்குக் குடியேறினார். அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி, கவிஞர், விமர்சகர், சமூகப் போராளி, மனித உரிமைப் போராளியும் கூட.
நாடுமுழுவதும் நடக்கும் போலீஸ் என்கவுன்டர்களுக்கு எதிராகவும், மத அடிப்படைவாத வன்முறைகளுக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்தார். வரவரராவின் குரல் அரசுக்கு மிகுந்த எரிச்சலையே அளித்திருக்கும். ஆயுதம் தாங்கிப் போராட்டம் நடத்தும் மாவோயிஸ்ட்களுக்கும், பசுமை வேட்டையில் ஈடுபட்டிருக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடக்கும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வரவரராவ் பலமுறை முயன்றிருகிறார். மாவோயிஸ்ட்கள் கடத்திச் சென்ற போலீஸ்காரர்களைக் காப்பாற்றி மாவோயிஸ்ட்களிடமிருந்து மீட்டுக் கொண்டுவந்த வரவரராவை ஒருமுறை சத்தீஸ்கரின் முதல்வர் ராமன்சிங் அழைத்துப் பாராட்டியிருகிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, மாவோயிஸ்ட் தலைவரான ஆசாத்தை பேச்சுவார்த்தை வலையில் வீழச்செய்து, வஞ்சகமாகச் சுட்டுக்கொன்ற அரசின் செயலை வரவரராவ் கடுமையாகவே கண்டனம் செய்துவந்தார். அது மட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் நடக்கும் மனித உரிமை மீறல்களை அவர் கண்டித்து வந்தார். அதற்கெதிராகக் குரல் கொடுத்தார். சரியான சமயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அரசு, பீமா கொரேகான் வன்முறைச் சம்பவத்தைக் கையிலெடுத்தது. அச்சம்பவத்தை மையப்படுத்தி அரசு ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியது. வரவரராவ், ஆனந்த் டெல்டும்டே, சுதா பரத்வாஜ், சோமா சென் உள்ளிட்ட ஏராளமான மனித உரிமைவாதிகளை, அரசியல் செயற்பாட்டாளர்களை, வழக்கறிஞர்களை உபா சட்டத்தைப் பயன்படுத்தி உள்ளே தள்ளியது.
1990 ஆம் ஆண்டில் அவர் எழுதிய “The Other Day” என்னும் கவிதையில் உள்ள வரிகள் மட்டுமே நினைவுக்கு வருகின்றன.
In what discourse
Can we converse
With the heartless?
(இதயமில்லாதவர்களோடு
எந்த மொழியில்
உரையாட முடியும்?)
கடந்து 22 மாதங்களாக ஒரு விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரவரராவின் உடல்நிலை மே மாத வாக்கில் மிகவும் மேசமானதாகவும், அவர் நினைவு தவறி கீழே விழுந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட அவரை மூன்று நாட்களுக்குள் மீண்டும் சிறைக்கே அனுப்பி விட்டது மருத்துவமனை. மீண்டும் ஜூலை முதல் வாரத்தில் அவருக்கு நினைவு தவறி, உடல்நிலை மோசமானது.
புகழ்பெற்ற வரலாற்றாளர் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட அறிஞர் குழாமும், வெகுஜன ஊடகங்களும் வரவர ராவுக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை உரத்து எழுப்பிய பிறகுதான் அரசு பணிந்தது. சிறைத்துறை அவரை ஜேஜே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன் அவரைக் கவனிக்க எந்த ஏற்பாடுகளுமற்று மோசமான நிலையில் அவரை அங்கே கண்டதாக அவரது மருமகன் வேணுகோபாலும், மனைவியும், மகள்களும் தெரிவிக்கின்றனர். சிறுநீர் கழித்த உடைகளோடு அவர் தனித்து விடப்பட்டிருந்ததாகவும், தொலைவில் மட்டுமே பாதுகாப்புக் காவலர்கள் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர் அவருக்கும் கோவிட் 19 பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மருத்துவமனை உறுதி செய்கிறது. அதன்பின்னர் அவரது உடல்நிலை குறித்த எந்த ஒரு தகவலும் அவரது குடும்பத்தினருக்கோ, பொதுவெளியிலோ வெளியிடப்படவில்லை. மருத்துவமனையிலிருந்து ஏதும் தகவல் வராதநிலையில் வரவரராவின் உறவினர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுக முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.
வரவர ராவ் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை விடுவித்து, அரசு செலவில் அவருக்கு உயர்தர சிகிச்சை வழங்கப்படவேண்டும்.
“சிறைச்சாலை என்பது எதிர்ப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ஒரு நிறுவனம். மக்களை அடைத்து வைப்பதற்காக உள்ள அந்த அமைப்பு, உயரமான மதிற்சுவர்களாலும், அதன்மேல் மின் வேலிகளாலும் சூழப்பட்டது. உடல் இயக்கமும்கூட அங்கே கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. காலமும்கூட அங்கே நின்றுபோகிறது. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும் அது கைதிகளின் வாழ்க்கையை உறிஞ்சித் தின்றுகொண்டே இருக்கிறது. நான்கு சுவர்களுக்கு இடையே கைதிகள் அடைக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களின் மனம் மட்டும் கடல்களுக்கும், கண்டங்களுக்கும் இடையே சுதந்திரமாகச் சுற்றித்திரியும் சுதந்திரமும், வலிமையும் கொண்டது”.
சிறை குறித்து வரவரராவ் கடந்த 2018, மே மாதம் Economic and Political Weekly இதழில் எழுதியதுதான் மேற்கண்ட வாசகங்கள். ஒன்பது வருட சிறை வாழ்க்கை அவரை ஒன்றும் செய்துவிடவில்லை. மாறாக அவருடைய மன உறுதியைத் திடப்படுத்தவே செய்தது. இப்போதும் கூட அவருடைய முதுமையும், கோவிட் 19 தொற்றும் அவருடைய உடலியக்கத்தை வேண்டுமானால் சிதைத்துப் போடலாம். ஆனால் எளிய மக்களுக்கான விடுதலை அரசியலை மையப்படுத்திய அவருடைய சிந்தனைகள், எங்கும் கிளை பரப்பி வாசனை வீசவே செய்கிறது.
(bostonreview, thewire.in, firstpost.com, Economic and Political Weekly, The Indian Express, Scroll.in, theprint.in, thefederal.com, keetru.com முதலிய ஊடகங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது)