லஷ்மி சிவக்குமார் கவிதை
நான்கு கைகளுடன் திரியக்கூடியவனென
என்னைக் கேலிபேசினார்கள்-காரணம்
என்னிடம் ஒரு வயலினும்
அதை மீட்டும் வில்லும் இருந்ததால்
இந்த வயலின் என் கைக்கு வந்த
கதையைச் சொல்ல வேண்டுமானால்
நான் இந்த மண்ணுக்கு வந்த
வரலாறைக் காட்டிலும் துயரமானது
இன்னும் உங்களுக்குத்
தெளிவாகச் சொல்லவேண்டுமானால்
இக் கருவியின் கம்பிச் சரங்களுக்கும்
என் தொப்புள் கொடிக்கும்
இசைவான உறவென்று
எனக்குச் சொல்லப்பட்டிருந்தது
போகட்டும்
தொடக்கத்தில் பசியின் பொருட்டு
தாறுமாறாக மீட்டத் தொடங்கிய எனக்கு
பின்னாளில் லாவகப்பட்டதாக
கடற்கரை மணலில்
சில்லரையை விட்டெறிந்தார்கள்
இக்கருவியுடன் மட்டும்தான்
பேச்சுவார்த்தை எனக்கு
சிலபோது எனக்காகவும்
அது பேசுவதுண்டு
நான் வார்த்தைகளற்றவன் என்பதால்
இக் கருவியின்
அந்நிய கம்பிச் சரத்தில்
வில்லைக்கொண்டு தேய்க்கிறேன்
சண்முகப்ரியாவை அலையவிடுவதாக
கிசுகிசுத்தார்கள்.