யோகாவும் அடாலியும்
நரேந்திரமோடியின் வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச யோகா தினம் ஒவ்வோராண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.இதையொட்டி நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அதனை தனது சாதனையாகவும், ஒரு பிரச்சாரக் கருவியாகவும் மாற்றிக்கொண்டு மிகத்தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.யோகா இந்தியாவின் கொடை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.உடலுக்கும்,உள்ளத்துக்கும் உற்சாக மருந்தாகவும் அது இருக்கிறது.இந்தியா போன்ற உடல்நலக் கேடுகள் மிகுதியாக இருக்கும் ஒரு நாட்டிற்கு அதைத் தடுக்கும் மாபெரும் கருவியாக அது திகழும்.பா.ஜ.க தவிர்த்த கட்சிகள் அதை ஒரு மதக் கருவியாக பார்த்ததன் விளைவு இன்று யோகா என்னும் மதச்சார்பற்ற, மகத்தான கருவியை பா.ஜ.கவும்,நரேந்திரமோடியும் கையிலெடுத்திருக்கிறார்கள்.ஆனால் மோடி அரசு யோகாவைக் கொண்டு செய்யும் பிரச்சார நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கவேண்டும். யோகாவைப் பயன்படுத்தும் இஸ்லாமியப் பெரியவர்களின் படமும்,பாதிரியார்களின் படமும் நாம் இதுவரை கண்ணுற்றதில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான மாற்று மதத்தவர்களும் யோகாவை தினமும் செய்து மகிழ்கின்றனர் என்பது உண்மை. யோகாவின் அற்புதமான கூறுகளை மாற்று மதத்தினர் எதிர்க்கவில்லை.மாறாக அது கட்டாயமாக்கப்படுவதை மட்டுமே எதிர்க்கிறார்கள். இஸ்லாமியர்களின்,கிறித்துவர்களின் எதிர்க்கருத்துகளை, யோகாவை அவர்களின் மீது வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் சமன்படுத்திவிடமுடியாது.யோகாவின் அறிவியல்பூர்வமான பலன்களை அவர்களுக்கு விளக்குவது நம் நாட்டைப் போன்ற பல்கலாசார சமூகத்தை மேலும் வளப்படுத்தும்.
யோகா என்பது மிக தேர்ந்த குருவால் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படவேண்டும்.கும்பலாக சொல்லிக்கொடுப்பதற்கு அது ஒன்றும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா பயற்சி அல்ல.உலகம் முழுவதும் ஆத்திகர்களும்,நாத்திகர்களும் யோகாவை தங்களது உடல் நலத்திற்கு மட்டுமல்லாது ஆன்ம மலர்ச்சிக்கும் கூட உபயோகப்படுத்திக்கொண்டுதான் வருகின்றனர். கின்னஸ் சாதனை புரியும் நோக்கிலே மோடி அரசு டில்லி ராஜபாட்டையில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை வைத்து யோகா பயிற்சியை மேற்கொண்டது. யோகாவை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் முறை இதுவல்ல என்பது தேர்ந்த யோகிகளுக்குத் தெரியும்.யோகாவை மேற்கொள்ளாதவர்கள் கடலில் குதித்துவிடவேண்டும் என்னும் மோடியின் பரிவாரங்களில் ஒன்று சொல்லும்போது மிகப்பழமையான யோக முனிவர் பதஞ்சலியின் வாக்கியம் தான் நினைவுக்கு வருகிறது.பதஞ்சலி கூறினார்:” யோகா செய்வதற்கு மிக முக்கியமான நிபந்தனை அவர் முதலில் அஹிம்சையை கடைபிடிக்கவேண்டும்(யோகசூத்ரா 2:35)” மோடியின் “யோகி”களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மதத்தின் பெயரால் யோகாவை எதிர்க்கும் இஸ்லாமிய,கிறித்துவ மத அடிப்படைவாதிகள் உண்மையில் கண்டனத்துக்கு உரியவர்கள்.யோகாவை கின்னஸ் சாதனையாக்க விரும்புபவர்களிடமிருந்தும்,அதனை விற்பனையாக்கி கோடானுகோடி சம்பாதிப்பதற்குத் துணியும் நவீன யோகிகளிடமிருந்தும்,யோகா என்பது இந்து மதத்தின் ஒரு கூறு என்னும் தவறான புரிதலில் இருக்கும் இந்துக்கள் அல்லாத மக்களிடமிருந்தும் யோகாவைக் காப்பாற்றி நம் வருங்கால சந்ததிகளுக்கு அவற்றை முறையாகப் பயிற்றுவித்து நடைமுறைப்படுத்துவதன்மூலம் நமது வருங்கால தலைமுறை மருத்துவத்திற்குச் செய்யப்போகும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவுகளை நாம் தடுத்திட முடியும்.
யோகாவை தனது பிரச்சார நலன்களுக்கு பயன்படுத்திக் கொண்ட இந்துத்வாவாதிகள் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிற ஹரியானா மாநிலம் அடாலி கிராமத்தில் நடந்த வகுப்புக் கலவரத்தில் புதுமாதிரியான உத்தியை மேற்கொண்டிருக்கிறார்கள் .டெல்லியிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அடாலி கிராமத்தில் 7000 பேர் வசிக்கின்றனர்.1200 வீடுகள் இருக்கின்றன.இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 400 மட்டுமே.கிராமத்தின் மையப்பகுதியில் இருக்கும் ஒரு இடத்தில் இஸ்லாமிய மக்கள் பல்லாண்டு காலமாக தொழுகை நடத்தி வந்திருக்கின்றனர்.அப்பகுதியும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதுதான்.இந்துக்களும்,முஸ்லீம் அல்லாதவர்களும் இணக்கமாகவே பல பத்தாண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.தொழுகை நடத்தி வந்த பகுதியில் ஒரு மசூதியைக் கட்ட இஸ்லாமியர்கள் முயன்றபோது பிரச்னை ஆரம்பமானது.தங்கள் கிராமத்தில் இஸ்லாமிய அடையாளமாக விளங்கும் மசூதியை இஸ்லாமியர்கள் கட்டக்கூடாது என பெரும்பான்மையாக விளங்கும் இந்து மக்கள் தீர்மானிக்கிறார்கள்.நீதி மன்றத்தில் தடையாணையும் பெறுகிறார்கள்.சமீபத்தில் தடையாணை விலக்கப்பெற்றது முதல் பிரச்னை ஆரம்பமாகியது.நீண்ட சட்டப்போராட்டத்தில் இஸ்லாமியர்கள் வென்றபோதிலும் அங்கிருக்கும் இந்துத்வாவாதிகள் மசூதி கட்ட தடை செய்கிறார்கள். நீதிமன்றம் என்ன சொன்னாலும் மசூதி கட்ட அனுமதி கிடையாது என்று அங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் உறுதியாக நிற்கிறார்கள்.அரசு நிர்வாகமும் அவர்களுக்கு துணை நிற்கிறது.இந்நிலையில் மே மாதம் 25ம் தேதி அங்கு வகுப்புக் கலவரம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது.நாடெங்கிலும் இந்துத்வாவாதிகள் நடத்தும் வகுப்புக் கலவரங்கள் கொடும் வன்முறையிலும்,பல நூறு அப்பாவி மக்கள் காயமடைந்தும்,சிலர் வன்முறையில் இறந்தும்,பெண்கள் வன்புனர்வு செய்யப்பட்டு மானபங்கப்படுத்தப்படும் நிகழ்வுகள் வெகு சாதாரணமாக நிகழும்.ஆனால் அடாலியில் நிலைமை தலைகீழ்.வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதுடன் அங்கிருந்த விலை மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டன. காலம் காலமாக சேர்த்து வைத்திருந்த அவர்களது பொருளாதாரம் ஒரே நாளில் சேதமாக்கப்பட்டது. அவர்களுடைய கால்நடைகள் திருடிச் செல்லப்பட்டன.மொத்த இஸ்லாமிய மக்களும் ஊரை விட்டு ஓடினர்.இன்னமும்கூட பெண்களும்,குழந்தைகளுமாக 150 பேர் அகதி முகாமில் வசிக்கின்றனர்.அதே நேரத்தில் இக்கலவரத்தில் இஸ்லாமியர்கள் யாரும் கொல்லப்படவில்லை.இஸ்லாமியப் பெண்கள் யாரும் மானபங்கம் செய்யப்படவில்லை.எல்லாவற்றுக்கும் மேலாக உயிருக்குப் பயந்து வெளியேறிய இஸ்லாமிய மக்கள் கிராமத்தின் இந்துத் தலைவர்களால் மீண்டும் கிராமத்திற்கு திரும்ப வருமாறு அழைக்கப்பட்டனர்.கொளுத்தப்பட்டு இடிந்து போன வீடுகளில் இப்போது அவர்கள் வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை.மசூதி கட்டும் பேச்சை மீண்டும் எடுத்தால் என்னவாகும் என்று நினைத்துக்கொண்டு தடி எடுத்தவர்களின் அருகிலேயே வசிக்கும் நிலை மிகப்பெரும் கொடுமை.கலவரம் நடந்தபோது போலீஸ்காரர்கள் அதை வேடிக்கை பார்த்ததாக பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள் தெரிவிக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது கால்நடைகளையும்,வாகனங்களையும்,அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்து தவிக்கின்றனர். கலவரத்தில் எந்த உயிரிழப்பும் இல்லை என்பதாலும்,பெண்கள் யாரும் மானபங்கப்படுத்தப்படவில்லை என்பதாலும் ஊடகங்களும் இக்கலவரத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.வெளி உலகைப் பொறுத்தவரை அங்கு எதுவுமே நடக்கவில்லை.
இந்துத்வாவாதிகளின் செயல்கள் இனி இப்படித்தான் அமையப்போகின்றன.குஜராத் கலவரங்களுக்குப் பின்னர் இந்துத்வாவாதிகளுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் எதிர்ப்பலைகள் ஏற்பட்டன.பல நாடுகள் மோடிக்கு விசா தர மறுத்தனர்.அடாலியைப் போன்று நடக்கும் சம்பவங்கள் இஸ்லாமியர்களையும் அடிபணிய வைக்கும்.வெளி உலகிற்கும் நடந்தவைகள் மறைக்கப்படும் அல்லது விரைவில் மறக்கடிக்கப்படும்.தொலைநோக்குப் பார்வையோடு இந்துத்வாவாதிகள் திட்டமிடும் இது போன்ற நிகழ்வுகள் இந்துத்வத்தை மக்களிடம் தக்கவைப்பதோடு தொடர்ச்சியான ஆதரவையும் அவர்களுக்கு பெற்றுத்தரும்.
மோடி ஆட்சிக்கு வந்தபிறகான ஒரு ஆண்டு முழுவதும் மோடியின் பரிவாரங்களால் வெறுப்பை உமிழும் வார்த்தைகள் இஸ்லாமியர்களை நோக்கியும்,கிறித்துவர்களை நோக்கியும்,பெரியாரிஸ்ட்களை நோக்கியும் வீசப்பட்டிருக்கின்றன.இந்துத்வா வேலைத்திட்டங்கள் திட்டமிட்டு அனைத்து துறைகளுக்குள்ளும் நுழைக்கப்படுகின்றன.இந்திய வரலாற்றுக் கழகம் முதல் சமீபத்தில் கோவாவின் இந்திய சினிமா தொழில் நுட்பக்கழகம் வரை இந்துத்வாவாதிகள் நிலைகொண்டுவிட்டார்கள். இந்துத்வாவை எதிர்க்கும் அனைத்து கூறுகளையும் அவர்கள் திட்டமிட்டு அப்புறப்படுத்த நினைக்கின்றனர்.இப்படியாகத்தான் சென்னை ஐ.ஐ.டி.யின் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டத்தின் மீதான தடையும், பிறகு தமிழகத்தில் தோன்றிய இந்துத்வா எதிர்ப்பலைகளுக்குப் பிறகான அவர்களது பின்வாங்கலும்.நிலம் கையகப்படுத்தும் மசோதா ஒட்டு மொத்த விவசாயிகளையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தாமலே இச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இந்நிலையில் நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அத்வானி கூறுகிறார்.ஜூன் 25ம் நாளன்று 40 வருடங்கள் கடக்கும் நெருக்கடி கால நினைவுகள் மீண்டும் ஒரு பா.ஜ.க.தலைவரால் கிளறப்படுகிறது.ஒருவேளை அத்வானியின் வார்த்தைகள் யானை மணியின் ஓசையாகக் கூட இருக்கலாம்.
(உயிர்மை,ஜூலை,2015)