முடக்கப்படும் நீதி
டாக்டர் சாய்பாபா.தில்லிப் பல்கலைக்கழக ராம்லால் ஆனந்த் கல்லூரியின் ஆங்கிலத்துறைப் பேராசிரியர்.தனது ஐந்து வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்.சக்கர நாற்காலியில் மட்டுமே அவரால் வலம் வர முடியும்.தினசரி வாழ்க்கையை ஒரு துணைகொண்டு தான் அவர் நகர்த்தமுடியும்.சக்கர நாற்காலி இல்லையென்றால் நான்கு கால் மிருகத்தைப் போலத்தான் அவரால் ஊர்ந்து செல்லமுடியும்.அவரது ஊனத்தின் உபவிளைவுகளாக அவருடைய முதுகுத்தண்டும்,இதயமும்,நுரையீரலும் கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.மொத்தத்தில் அவர் ஒரு 90 சதவிகித உடல் ஊனமுற்றவர்.ஆனால் இவரால்தான் இந்திய அரசுக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டில் பசுமை வேட்டை குறித்த அறிவிப்பை அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் வெளியிட்டார்.இந்தியாவின் செழித்துக் கிடக்கும் மத்திய பகுதியை,அதன் கனிம வளத்தை கார்ப்பொரேட்டுகளுக்கும்,முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதற்குத் தடையாக இருக்கும், அக்காடுகளில் வசிக்கும் பூர்வ குடிகளான பல லட்சக்கணக்கான பழங்குடி மக்களை வெளியேற்றும் திட்டம் தான் அது.அரசின் இவ்வேட்டைக்கு உதவும் பொருட்டு உச்சநீதி மன்றத்தால் சட்டவிரோத அமைப்பு என்று தீர்ப்பளிக்கப்பட்ட சல்வா ஜூடும் போன்ற நீதிக்குப் புறம்பான அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.இவர்களின் முற்றுகையின் கீழ் வந்த மத்தியப் பகுதியில் வசித்த பலலட்சம் பழங்குடி மக்கள் தங்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்தனர் அல்லது அரசின் முகாம்களில் தங்கினர் அல்லது மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தனர்.அரசின் அவ்வேட்டையை இந்தியாவின் அறிஞர்களும்,மனித உரிமை ஆர்வலர்களும்,விழிப்புடன் பணியாற்றும் பத்திரிகையாளர்களும் தடுத்து நிறுத்த பெரும் முயற்சி எடுத்துக் கொண்டனர்.ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதில் வெற்றியும் கண்டனர்.ஒருபுறம் மத்திய அரசும், சல்வா ஜூடும் அமைப்பும் பழங்குடி மக்களுக்கெதிராக நடத்திய தாக்குதல்கள்,மறுபுறம் மாவோயிஸ்டுகளின் அட்டகாசங்கள் என பழங்குடி மக்களின் வாழ்க்கை சின்னாபின்னமானது.
2011 ம் ஆண்டு பசுமை வேட்டைக்கு எதிராக இந்தியாவில் எழுந்த தீவிர குரல்கள் உலக அளவிலும் எதிரொலித்தது.எழுத்தாளர் அருந்ததிராய்,மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென் உள்ளிட்டவர்கள் பசுமை வேட்டைக்கு எதிராகவும், சல்வாஜுடும் நடத்திய படுகொலைகளைக் கண்டித்தும், மனித உரிமைகளுக்காகவும் உரத்து குரல் கொடுத்தனர்.அப்படியான போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்தான் பேராசிரியர் சாய்பாபா.அரசின் பசுமை வேட்டையை வன்மையாகக் கண்டித்தவர்.டாக்டர் பினாயக் சென்னைத் தொடர்ந்து அரசின் கோபப்பார்வை எந்நேரமும் இவரின் மீது பாயும் என எல்லோரும் எதிர்ப்பார்த்திருந்த வேளையில்தான் சாய்பாபா மீதான அரசின் தாக்குதல்கள் ஆரம்பமாகின.2013ம் வருடம் செப்டம்பர் 12 ல் பேராசிரியரின் வீட்டில் முதல்கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியது.திருடப்பட்ட ஒரு பொருளை அவரது வீட்டில் தேடுவதற்கான உத்தரவை மஹாராஷ்டிர மாநிலம் அஹேரி என்னும் ஊரின் மாஜிஸ்திரேட்டிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த ஆயுதம் தாங்கிய 50 போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.வீட்டில் பேராசிரியரும்,அவரது மனைவியும் இருந்தாலும் அவர்கள் தனியாக ஒரு அறையில் வைக்கப்பட்டனர்.வீட்டை சோதனையிடும்போது வீட்டிற்குச் சொந்தக்காரர் சார்பாக யாராவது இருக்கவேண்டும்,கைப்பற்றப்பட்ட பொருட்கள் சீலிடப்படவேண்டும் என்னும் சட்ட நெறிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.அவரது வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகளும்,பென் டிரைவ்களும் போலீஸாரால் எடுத்துச் செல்லப்பட்டன.சில நாட்களுக்குப் பின்னர் போலீஸார் கேட்ட ஹார்டு டிஸ்குகளுக்கான பாஸ்வேர்டும் பேராசிரியரால் தரப்பட்டது.அதன்பின்னர் 2014 ஜனவரி 9ல் போலீஸார் அவரது வீட்டில் வைத்து அவரை விசாரித்தனர்.பின்னர் மே 9 அன்று போலீஸாரால் அவர் கடத்தப்பட்டார். நேரடியாக வீட்டிற்கு வந்து அவரைக் கைது செய்தால் தில்லிப் பல்கலைக்கழக பேராசிரியர்களும்,மாணவர்களும் திரண்டுவந்து அதைத் தடுப்பார்கள் என போலீஸாருக்குத் தெரியும். மஹாராஷ்டிர மாநிலம் அஹேரிக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவர் பின்னர் நாக்பூர் மத்திய சிறையின் புகழ்மிக்க “அன்டா செல்”லில் சிறை வைக்கப்பட்டார்.
வெளிச்சம் புகாத மிகச்சிறிய அறை அது.சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச்சட்டத்தின்(Unlawful Activities Prevention Act) பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,அது போன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுதல்,பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதித் திட்டம் தீட்டுதல்,பயங்கரவாதக் குழுவின் உறுப்பினராக இருத்தல்,பயங்கரவாதக் குழுவிற்கு ஆதரவு திரட்டுதல்,ஆதரவுக் கூட்டம் நடத்துதல் இப்படியாகப் பல பிரிவுகளின் கீழ் (பிரிவு 13,18,20,38,39) அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.சிபிஐ(மாவோயிஸ்ட்) அமைப்பின் தோழர் நர்மதாவிடம் சேர்ப்பிப்பதற்காக ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழக மாணவர் ஹேம் மிஸ்ராவிடம் கம்ப்யூட்டர் சிப் ஒன்றை பேராசிரியர் சாய்பாபா கொடுத்தார் என்பதுதான் போலீஸ்தரப்பின் குற்றச்சாட்டு. பேராசிரியர் சாய்பாபாவும்,மாவோயிஸ்ட் தலைவர்கள் சிலரும் நடத்திய இணைய உரையாடல்கள் தங்கள் வசம் இருப்பதாகவும் சாய்பாபா “பிரகாஷ்” என்னும் பெயருடன் சாட் செய்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.ஆனால் இக்குற்றச்சாட்டுகளை சாய்பாபா வன்மையாக மறுக்கிறார்.தான் எவ்வித உரையாடலையும் நிகழ்த்தவில்லையென்றும்,தான் கம்ப்யூட்டர் சிப்பை ஹேம் மிஸ்ராவிடம் வழங்கவில்லை என்றும் பேரா.சாய்பாபா குறிப்பிடுகிறார். 14 மாத சிறைவாசத்திற்குப் பின்னர் கடந்த ஜூன் 30 அன்று மும்பை உயர்நீதிமன்றம் சாய்பாபாவுக்கு மூன்றுமாத பிணை வழங்கியது.’இனிமேலும் அவரது விடுதலையை தாமதம் செய்தால் அவரது அடிப்படை உரிமை விஷயத்தில் இந்நீதிமன்றம் தவறிழைத்துவிடும்’ என்றும் நீதிபதி தனது பிணை உத்தரவில் கூறியிருக்கிறார். 14 மாதத்திற்கும் மேல் முட்டை வடிவ சிறிய அறையில்(Anda cell) அடைக்கப்பட்டிருந்த அவரது உடல்நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அவரது மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது.
பேராசிரியர் சாய்பாபா குற்றம் இழைத்திருக்கிறாரா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.ஏனெனில் நீதிமன்றத்தின் மாண்பை பேராசிரியர் சாய்பாபாவே ஒப்புக்கொண்டிருக்கிறார். நாம் எழுப்பும் கேள்வி ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும்.வல்லமை பொருந்திய குடியரசான இந்தியாவுக்கு 90 சதவிகித ஊனமுற்ற பேராசிரியர் ஒருவரால் ஆபத்து என்னும் போர்வையில் எல்லா சட்ட விதிகளையும் புறந்தள்ளி,ஊனமுற்றவர் என்னும் அடிப்படையான கருணையைக் கூட அவரிடம் செலுத்த மறுத்துவிட்டு, அவரது சக்கர நாற்காலியை சேதப்படுத்தி,அவருக்கான அடிப்படை வசதிகளைக் கூட மறுத்து அவரை மனரீதியில் துன்புறுத்தியிருக்கும் நாக்பூர் சிறை நிர்வாகத்திற்கும்,மஹாராஷ்டிர போலீஸுக்கும் நமக்கான கேள்வி ஒன்றுதான்.மனித உரிமை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?தன்னை போலீஸார் அடித்துத் துன்புறுத்தவில்லை என்று தெரிவித்திருக்கும் சாய்பாபா,கழிப்பறைக்குச் செல்லும் அடிப்படை வசதியைக் கூட கால்கள் செயலிழந்த தனக்கு செய்து தரப்படவில்லை என்றும் அதனால் சிறையின் முதல் 72 மணி நேரத்திற்கு தான் சாப்பிடவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.இந்த உண்ணாவிரதத்தை மேலும் 72 மணி நேரத்திற்கு நீட்டித்தேன் என்றும் குறிப்பிடுகிறார்.முதல் 20 நாட்களுக்கு யாருடனும் பேசுவதற்குக் கூட தான் அனுமதிக்கப்படவில்லை,சிறையில் அப்பாவிகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆதிவாசி இளைஞர்கள்தான் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள் என்றும் பேரா.சாய்பாபா தெரிவிக்கிறார். நக்சலைட்டுகளுடனான தொடர்பில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஆதிவாசி இளைஞர்கள் பேராசிரியருடன் பேசிவிடக்கூடாது என்பதில் சிறை நிர்வாகம் குறியாக இருந்தது.ஆனால் அவ்விளைஞர்கள் அவருக்கு உதவுவதை எதுவும் தடுத்து நிறுத்தமுடியவில்லை.நாளுக்கு நாள் அவ்விளைஞர்களின் உதவி அவருக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது.நிலைமையை உணர்ந்து கொண்ட சிறை நிர்வாகம் தனது கண்காணிப்பை தளர்த்திக்கொண்டது.நான் யார் என்றே தெரியாமல் தினமும் இரண்டு இளைஞர்கள் முறை வைத்துக் கொண்டு என்னுடன் எட்டு மணிநேரம் வரை இருந்தார்கள் என்று சாய்பாபா குறிப்பிடும்போது அவ்விளைஞர்களின் கருணை உணர்ச்சியும்,மனிதாபிமானமும் தெரிகிறது.சிறை நிர்வாகத்தின் இருண்டு போன ஆன்மா சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது.
சிறைக்கு வெளியே தாம் ஆதிவாசிகளின் நலனுக்காகப் போராடியதாகவும் சிறைக்குள்ளே அவ்விளைஞர்கள் எனக்காகப் போராடியதாகவும் சாய்பாபா தெரிவிக்கிறார். சிறையில் இருந்த இந்த ஒரு வருடத்தில் சாய்பாபா சோர்வுற்று இருக்கவில்லை.ஆதிவாசி இளைஞர்களுக்கு அரிச்சுவடி முதல் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்தார்.இப்போது அவர்களில் பலர் ஆங்கிலத்தை வாசிக்கவும்,எழுதவும் முடியும்.ஒவ்வொரு மாதமும் அவரது மனைவியும், மகளும் அவரைச் சந்திக்கும்போது வீட்டிலிருந்து ஏராளமான நூல்களையும் நோட்டுகளையும் கொண்டு வந்து தருவார்கள்.தன்னுடைய சுறுசுறுப்பான வெளிஉலகில் படிக்கமுடியாத நூல்களையெல்லாம் அவர் படித்தார்.நிறைய மொழி பெயர்ப்புகளை செய்தார்.ரகசியமான முறையில் சில முஸ்லிம் கைதிகள் அவருக்கு உருது சொல்லிக்கொடுத்தனர்.உருதுக் கவிஞர்களான மீர்ஸா காலிப் மற்றும் மீர்ஸா ஹாடி ருஸ்வாவின் பாடல்களை அதன் உருது மூலத்தில் படிக்கவேண்டும் என்ற அவரின் வெகுநாள் கனவு நனவாகியது.உருது மட்டுமே இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்கமுடியும்,இந்தி அல்ல என்றும் அவர் கூறுகிறார்.ஏனெனில் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் உருதுச் சொற்கள் உள்ளன என்கிறார்.அவரின் சிறை வாழ்க்கை அவருக்கு ஏராளமான வலியைக் கொடுத்தாலும் அவர் கிஞ்சித்தும் மனம் தளரவில்லை.சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 99 சதவிகித ஆதிவாசி இளைஞர்கள் அப்பாவிகள் என்றும் சாய்பாபா தெரிவிக்கிறார்.மஹாராஷ்டிரா மாநிலத்தின் சிறை மேனுவலில் சித்ரவதைக்கு உடன்பாடான ஷரத்துகள் உள்ளன என்று தெரிவிக்கும் பேராசிரியர் சாய்பாபா,சிறைக்குள் நடக்கும் மரணங்களின் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.மனித உரிமைகளுக்காகவும்,ஜனநாயக உரிமைகளுக்காகவும் போராடுவதற்கு இந்த 14 மாத சிறைவாசம் தனக்கு வலுக்கொடுத்திருப்பதாகவும்,தான் ஒரு குற்றமும் செய்யாதவன் என்றும் பேராசிரியர் சாய்பாபா கூறுகிறார்.
2013ம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்தபோது இவ்வாறு கூறியிருந்தது: ” நகரங்களில் வசித்துக் கொண்டே சிபிஐ(மாவோயிஸ்ட்) இயக்கத்தை ஆதரிக்கும் அதன் கொள்கையாளர்கள்,ஆதரவாளர்கள்தான் மாவோயிஸ்டுகளை விட ஆபத்தானவர்கள்”.அதனால்தான் மனித உரிமை ஆர்வலர்களையும்,அரசின் அறமற்ற காரியங்களையும்,கார்ப்பொரேட்டுகளுக்கு ஆதரவான அரசின் கொள்கைகளையும் கண்டிக்கும் சமூக செயல்பாட்டாளர்களையும் மாவோயிஸ்ட்கள் என்றும்,தேச விரோதிகள் என்றும்,சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்றும் முத்திரை குத்தி ஜாமீனில் வெளிவரமுடியாதபடி உள்ளே தள்ளுகிறார்கள்.பினாயக் சென்னும்,சாய்பாபாவும் செய்த குற்றங்கள் என்ன? கனிம வளங்களை கார்ப்பொரேட்டுகளுக்குக் கொடுப்பதற்காக அங்கு வாழும் பழங்குடி மக்களை வெளியேற்றாதீர்கள்,பழங்குடி மக்களின் மீது “பசுமை வேட்டை” என்னும் போர்வையில் செய்யப்படும் கொடுமைகளை செய்யாதீர்கள் என்று குரல் கொடுத்ததுதான்.ஒரு முறை ஜூனியர் புஷ் கூறினார் : “நீங்கள் அமெரிக்கா பக்கம் இல்லையென்றால் பின்லேடன் பக்கம் இருப்பதாக அர்த்தம்”.அதுபோலத்தான் இங்கு ஆட்சியாளர்களின் மனநிலையும் இருக்கிறது : ” நீங்கள் அரசின்,கார்ப்பொரேட்டுகளின் பக்கம் இல்லையென்றால் மாவோயிஸ்டுகளின் பக்கம் இருப்பதாக அர்த்தம்.அதாவது பசுமை வேட்டையை(இப்போது எந்தப் பெயரும் இல்லை) நீங்கள் எதிர்த்தீர்கள் என்றால் நீங்கள் மாவோயிஸ்டுகள்”.முன்பெல்லாம் பாராளுமன்றத்தின் மேலவைக்கு அறிஞர்களும்,புகழ்மிக்க எழுத்தாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.அரசு வழுவிச்செல்லும் நேரங்களில் அரசை இடித்துரைப்பார்கள்.ஆனால் இப்போதெல்லாம் மேலவைக்கு கிரிக்கெட் வீரர்களும்,கார்ப்பொரேட்டுகளும்தான் நியமிக்கப்படுகிறார்கள்.இடித்துரைக்கும் அறிஞர்களும்,எழுத்தாளர்களும் பாராளுமன்றத்திற்கு வெளியே ஜந்தர் மந்தரில் பேசும்போது அவர்கள் அரசின் விரோதியாகிறார்கள்.
2002 குஜராத் கலவரத்தின் போது நரோடா பாடியா என்னும் இடத்தில் வன்முறை நிகழ்த்தி 97 பேரைப் படுகொலை செய்ததில் முக்கியக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.ஏப்ரல் 23,2015 அன்று கண் சிகிசைக்காக அவருக்கு பிணை தரப்பட்டது. ஆனால் சாய்பாபாவுக்கு மருத்துவமனையில் சலைன் ஏற்றும்போதுகூட, தனது முடமாகிப்போன கால்களைக்கொண்டு தப்பித்து ஓடிப்போகாமல் இருப்பதற்காக ஏகே – 47 அவரது தலையை நோக்கியபடி இருக்க, காவலர் ஒருவர் காவல் இருக்கிறார். குஜராத் கலவரத்தில் கொடும் குற்றம் செய்தவர்கள் மிக எளிதில் பிணையில் வெளிவருகிறார்கள்.சால்லு(சல்மான்கான்) சிறையில் இருந்தபோது ஆகப்பெரும் இந்திய அரசியல்வாதிகள் அவருக்காகக் கண்ணீர் வடித்தார்கள்.உடனே நீதிமன்றமும் அவரைப் பிணையில் விடுதலை செய்தது. மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் சஞ்சய்தத்துக்கு உடனே பிணை கிடைத்துவிடுகிறது. அப்படியிருக்க உண்மையான மக்கள் நாயகர்களான பினாயக் சென்னும்,சாய்பாபாவும் பிணையில் வெளிவர ஏன் இவ்வளவு போராடவேண்டியிருக்கிறது?.
(உயிர்மை,ஆகஸ்ட்,2015)