மார்கிஸ் டீ சேட்: இன்பம் துய்க்கும் இயந்திரம்
1740 ஆம் அண்டு ஜூன் 2 ஆம் திகதி பிரெஞ்சுப் படையதிகாரியான தந்தைக்கும் பிரெஞ்சு அரச குடும்பத்திற்கு நெருங்கியவரான தாய்க்கும் மகனாகப் பிறந்தார் டொனாசியன் பிரான்காயிஸ் டி சேட். தமது பல குழந்தைகளும் மரணமடைந்துவிட டி சேடின் பெற்றோருக்கு மிஞ்சியவராக இருந்தவர் டி சேட் மட்டும் தான். சிறுவயது முதலே டி சேடுக்கு அவரது தாயின் அரவணைப்புக் கிடைக்கவில்லை என்பதால், அவரது தாயின் மீது டி சேட் மிகுந்த வெறுப்புக் கொண்டிருந்தார்.
தனது நான்காவது வயதிலேயே தாயின் உறவினர்களிடம் அனுப்பப்பட்டவர் டி சேட். பாட்டியும் அவரது ஐந்து பெண்களும் டி சேடை வளர்த்தார்கள் எனவும், மட்டுமீறிய பெண்களின் அன்பினால் கெடுக்கப்பட்ட டி சேட் ஆண்மகனாக வளர வேண்டும் எனும் காரணத்திற்காக மார்கிஸ் அவரது தந்தைவழி சொந்தக்காரரான அபே டி சேடிடம் அனுப்பப்பட்டார்.
முதலில் டி சேட் சந்தித்த உறவுக்காரர்களான ஐந்து பெண்களில் நான்கு பேர் கன்னியாஸ்திரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மார்கிஸ் டீ சேடுக்கு அப்போது ஆறு வயதே நிரம்பியிருந்தது. பெற்றோர்களிடமிருந்து தனித்த நிலையிலேயே பிற்பாடான சேடின் வாழ்வு கழிந்தது. 1776 ஆம் ஆண்டு அவர் தனது தந்தைவழி உறவினரும், மனிதனது ஆக்கப் பண்புகளைப் போற்றிய தத்துவவாதி ரூஸோவின் நண்பருமான அபே டி சேடின் பொறுப்பில் சென்று சேர்ந்தார்.
பிரபுக்கள் வர்க்கத்தைச் சேர்ந்த அபே டி சேட் ஒரு ஆசைநாயகியைக் கொண்டிருந்தார். ஒரு விபச்சார விடுதியையும் அவர் நடத்தினார். தேவாலயத்தில் மிக முக்கியமான மனிதராகவும் அவர் இருந்தார் அவருடைய தோட்டத்தில் அடிக்கடி கூட்டுக்கலவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. தன்வீட்டில் ஒரு நூலகத்தையும் அவர் கொண்டிருந்தார்.
1750 ஆம் ஆண்டு தனது 10 ஆம் வயதில் தேவாலயத்தினால் நடத்தப்பட்ட பள்ளியில் கல்வி கற்கப் புகுந்தார் மார்கிஸ். நாடகக் கலையின் மீதான தீவிர ஈடுபாட்டை அவர் அங்குதான் கற்றுக்கொண்டார். தனது 15 ஆம் வயதில் பிரெஞ்சுப் படையில் இணைந்த மார்கிஸ் 7 ஆண்டுகள் படையில் பணிபுரிந்தார். தனது இருபத்து மூன்றாம் வயதில் தனது விருப்பத்திற்கு மாறாகத் தன்னை விடவும் வசதியான ரெனி என்னும் பெண்ணை மணந்தார் மார்கிஸ். மணமாகிய 6 மாத காலத்திலேயெ விலைமாது ஒருவரிடம் வன்முறையாக நடந்து கொண்டதான குற்றசாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் மார்கிஸ்.
23 வயது வரையிலுமான மார்கிஸின் அனுபவத்தை இங்கு நாம் தொகுத்துக் கொள்வது நல்லது. அவரது கல்விமுறை முழுக்கவும் கிறித்தவ தேவாலயப் பின்னணி கொண்டதாக இருந்தது. தேவாலயத்தில் படித்த பிள்ளைகளை நெறிப்படுத்த பாதிரியர்கள் சாட்டையால் குதத்தில் விளாசுவதை அன்று வழக்கமாகக் கொண்டிருந்தனர். மட்டுமீறிய கண்டிப்பும் பாலுறவு ஒடுக்குமுறையும் கொண்டதாக அவரது கல்விப் பின்னணி அமைந்திருந்தது.
கன்னியாஸ்திரிகளான தனது உறவினப் பெண்களால் மார்கிஸ் கெடுக்கப்பட்டவராக இருந்தார் என்றும் அவரது வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவரது தந்தை வழி உறவினரான அபே டிசேட் தீவிர கிறிஸ்தவராகத் தம்மைக் காட்டிக் கொண்டாலும், ஆசைநாயகியை வைத்துக் கொண்டிருந்தவராகவும, விபச்சார விடுதி நடத்தியவராகவும் கூட்டுக் கலவிகளை ஏற்பாடு செய்தவராகவும் அவர் இருந்தார்.
அவரது 7 ஆண்டுகள் படைவாசத்தில் கழிந்தது. தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் தனித்து வாழ்ந்தவராக அவர் இருந்தார். கிறித்தவ மதபோதகர்களின் வன்முறை மற்றும் பாலுறவு சார்ந்த இரட்டை வேடங்கள், சொந்த வாழ்வில் வன்முறை நிறைந்த பாலுறவு நடவடிக்கைகள் போன்றவற்றை நேரடியாகக் கண்டவராக இருந்தார் மார்கிஸ்.
மதவாதிகள் முன்னிறுத்திய இயந்திரவயமான கருத்துமுதல்வாதத்திற்கு எதிராக இயந்திரப் பொருள்முதல்வாதமும், மறுமலர்ச்சியுகக் காரணகாரிய நோக்கும், நாடகமும் கற்ற மார்கிஸ் நிலப்புரபுத்துவ வர்க்கத்தினரின் பாலுறவை மட்டுமீறிக் கொண்டாடியவராகவே இருந்தார். திருமண வாழ்வுக் காலத்திலான 8 ஆண்டுகளில் அவர் இரு ஆண்மகவுகளுக்கும் ஒரு பெண்குழந்தைக்கும் தந்தையானார்.
சமகாலத்தில் அவர் விலைமாதரிடம் வன்முறையாக நடந்துகொண்ட காரணத்திறகாக மும்முறை சிறைத்தண்டனைகள் பெற்றார்.
1771 ஆம் ஆண்டு அவரது வாழ்வை முற்றிலும் மாற்றிய நிகழ்ச்சி இடம் பெறுகிறது. அவரும் அவரது நண்பரும் இரு விலைமாதரை விலைபேசி அழைத்துச் சென்று விஷமூட்டிக் கொல்ல முயன்றனர் எனும் பெயரில் மரணதண்டனை விதிக்கப்பெறுகின்றனர். மார்கிஸ் தனது மனைவியின் இளைய சகோதரியை தன்னுடன் அழைத்துக் கொண்டு இத்தாலிக்குத் தப்பிச் செல்கிறார். அவரது இன்மையில் அவரது கொடும்பாவிக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. அவரது நண்பர் கொல்லப்படுகிறார். பிற்பாடு கைதுசெய்யப்படும் டி சேட் மறுபடியும் இத்தாலிக்குத் தப்பிச் செல்கிறார்.
தனது தாயாரின் மரணத்தறுவாயில் திரும்பி வந்த டிசேட் தனது மாளிகையில் வேலைக்காரப் பெண்களிடம் வன்முறையாக நடந்து கொண்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படுகிறார். அவர் மீதான விஷமூட்டிக் கொல்ல முயன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் தனது அன்புக்குரிய தனது இளைய மகளைத் தன்னுடன் அழைத்துச் சென்ற டி சேடின் துரோகத்தை மாமியாரால் மறக்க முடியவில்லை. மருமகனை அவர் பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தார்.
மனநிலை சரியில்லாத உறவினர் எனும் பேரில் அரசிடம் மார்கிஸை நிரந்தரமாகச் சிறையிலடைக்க ஒரு கடிதம் பெறுகிறார் மாமியார். அதன்படி மார்கிஸ் சிறையில் இருக்கும் காலத்திற்கான செலவினத்தை அவரது மாமியார் ஏற்கிறார். 1778 ஆம் ஆண்டிலிருந்து 1790 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் பிரெஞ்சுப் புரட்சி வாகைசூடும் நாள் வரை, 13 ஆண்டுகள் தனது வாழ்வைத் தொடர்ந்து சிறையில் கழிக்கிறார் மார்கிஸ். பிரெஞ்சுப் புரட்சிக்காலம் வரையிலான இந்த 13 ஆண்டுகளில் தான் பிரச்சினைக்குரிய தனது அனைத்து நூல்களையும் மார்கிஸ் எழுதுகிறார்.
1789 ஆம் அண்டு பாசில் சிறை உடைப்பின் பின், 1790 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத்தில் மார்கிஸ் புதிய புரட்சி அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்படுகிறார். இதே ஆண்டில் இவரது மனைவி இவரிடமிருந்து சட்டபூர்வமாக விவகாரத்துப் பெறுகிறார்.
1790 ஆம் ஆண்டிலிருந்து 1794 வரையிலான ஐந்து ஆண்டுகள் மார்கிஸ் பிரெஞ்சுப் புரட்சியை அனுபவம் கொண்ட ஆண்டுகள். இந்த ஆண்டுகளில் 4 ஆண்டுகள் புரட்சியின் ஆதரவாளராகப் பல்வேறு புரட்சிகரப் பிரசுரங்களை எழுதுகிறார் அவர். மருத்துவமனைச் சீர்திருத்தங்கள், சட்ட ஆக்கல் முறைமைகள், ஆட்சியமைப்பில் ஜனநாயகப் பரவலாக்கம் போன்றவை குறித்த பிரசுரங்களை இந்த ஆண்டுகளில் வெளியாகின்றன. புரட்சிகரக் கவுன்சில் பிரிவொன்றின் நீதிபதியாகவும் மார்கிஸ் அமர்கிறார். தனது மாமியார் உள்பட பல்வேறு மீதானவர்களின் மரணதண்டனையை மார்கிஸ் இரத்துச் செய்கிறார்.
புரட்சிக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் 1793 ஆம் ஆண்டு மார்கிஸ் கைது செய்யப்படுகிறார். வேறு சிறைச்சாலையொன்றுக்கு மாற்றப்பட்ட குளறுபடியால் மரணதண்டனையிலிருந்து மார்கிஸ் தப்பிக்கிறார். புரட்சியின் தலைவர்களான மாரட், ரோபர் ஸ்பியர் போன்றவர்கள் அரசவம்சத்தவர்க்கு ஆதரவான படையினரால் கொல்லப்பட்டதையடுத்து, மாபெரும் ரத்தளக்களறியை அடுத்து, 1794 ஆம் ஆண்டு மார்கிஸ் விடுதலை செய்யப்படுகிறார். 1795 ஆம் ஆண்டிலிருந்து 1781 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் மார்கிஸ் தான் சிறையில் எழுதிய நூல்களை அனைத்தையும் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்.
இக்காலத்திய வறுமை அவரை வியாபார ரீதியிலான புத்தகங்களையும் எழுதத் தூண்டுகிறது.
1781 ஆம் ஆண்டு ஆபாச எழுத்துக்களுக்காக மார்கிஸ் கைது செய்யப்படுகிறார். மருத்துவக் காரணங்களுக்காக அவர் தொடர்ந்து சிறை வைக்கப்படுகிறார். 1814 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி நள்ளிரவில் அமைதியான தூக்கத்தில் அவரது உயிர் பிரிகிறது. சுரண்டன் மனநலக்காப்பகத்தில் அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது இளைய மகனின் விருப்பப்படி, சாரன்டன் கல்லறையில் முழுமையான கத்தோலிக்க மதச்சடங்குகளின்படி மார்கிஸ் டி சேடின் உடல் அடக்கம் செயயப்படுகிறது.
மார்கிஸின் இறுதிக் காலத்தில் புறஉலகம் மதித்த அனைத்து விடயங்களையும் மதித்தவராக, அமைதியாக வாழ்ந்து மரணமுற்றார் டி சேட் என்கிறது அவரது வரலாற்றுக் குறிப்புகள்.
மார்கிஸ் டி சேடின் மிகவும் பேசப்பட்டதும், அவரது முக்கியமானதுமான நாவல் எனக் கருதப்படும் தி ஹன்ட்ரட் அன்ட் டுவன்டி டேஸ் ஆப் சோடம் அவரது வாழ்காலத்தில் பிரசுரிமாகவில்லை. நூறு ஆண்டுகளின் பின், 1930 களில்தான் இந்த நாவல் பிரெஞ்சு மொழியில் வெளியானது. தொண்ணூறுகளில் மார்கிஸ் டி சேடின் புதினங்கள், டயரிக் குறிப்புகள், அரசியல் கட்டுரைகள் என அவரது அனைத்து எழுத்துக்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.
மார்கிஸின் படைப்புக்களிலும் அவரது வாழ்விலும் அவரை ஆக்கிரமித்திருந்தமை மூன்று பிரதான விடயங்கள்தான். வன்முறை, பாலுறவு வேட்கை, கிறித்தவம் போன்றவைதான அவை.
தனிமையையும் வன்முறையையும் அவர் தனது நான்காவது வயதிலிருந்தே அனுபவிக்கிறார். தேவாலயப்பள்ளிக் கூடங்களில் புட்டத்தில் சவுக்கால் அடிப்பதை அவர் அனுபவிக்கிறார். பிரெஞ்சுப்படையில் அவர் பணியாற்றிய 7 ஆண்டுகளில் அவர் எதிர்கொண்டவை வன்முறைiயும் மரணமும் உடலின் சிதைவுமாகவே இருந்திருக்கிறது. அவரது தாய்வழிப் பெண்களிடமும், அவரது தந்தைவழி உறவினரிடமும் அவர் பெற்றது கட்டளைத்தன்மை வாய்ந்த கிறித்தவ ஒழுக்கமும் இரட்டை வேடமும் தான். இந்தக் காலங்களில் அவர் அரச வம்சத்தினரின் பாலுறுவு விகாரங்களையும் வன்முறைiயையும் கூட்டுக் கலவியையும் அறவியல் போலித்தனத்தையும் நேரடியிலாக எதிர்கொள்கிறார்.
அவரது தந்தைவழி உறவினரின் நண்பரான ரூஸோவின் எழுத்துக்கள் மனிதனின் ஆக்கத்தை மட்டுமே முன்வைத்திருக்க, அவற்றை நக்கல் செய்தவையாகவே மார்கிஸின் புதினங்கள் அமைகின்றன. மார்கிஸின் ஆளுமையில் இடம் பெற்ற முக்கியமான ஒரு வரலாற்றுண்மையை இங்கு நாம் ஞாபகம் கொளவது நல்லது. மார்கிஸ் தன்னை ஒரு அரச வம்சத்தவராகவும் லிபர்டைன் ஆகவும் கருதி வந்திருக்கிறார்.
லிபர்ட்டைன்களிடமிருந்து தான் இரண்டு விதங்களில் வித்தியாசப்படுவதாகவும் மார்கிஸ் தெரிவிக்கிறார். தனது இயல்பான பாலுறவு வேட்கையை தான் வெளிப்படுத்தி வந்திருப்பதாகவும், தான் குற்றவாளியோ அல்லது கொலைகாரனோ இல்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.
லிபர்டடைன் என்பதற்கான பதினெட்டாம் நூற்றாண்டு அர்த்தத்தினை இங்கு நாம் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது. லிபர்டடைன், லிபர்டேரியன் போன்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை நாம் ஒன்றென இங்கு குழப்பிக்கொள்ளக்கூடாது. லிபர்டேரியன் எனும் சொல் பக்குனின் போன்ற அராஜகவாதிகளை முன்வைத்தும், இன்று அதிகமும் மார்க்சிய விமர்சன-சாம்ஸ்க்கிய அரசியலை முன்வைத்துமே பாவிக்கப்படுகிறது. ஆனால் லிபர்டைன் எனும் சொல் இங்கிலாந்தில் விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்திலும், பிரான்சில் முடியாட்சிக் காலத்திலும் வழக்கிலிருந்த ஒரு வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும். இவர்கள் பிரதானமாக முறைசாரா பாலுறவுகளை தமது அன்றாட வாழ்வில் கடைபிடிப்பவர்கள். தமது அனுபவங்களை எழுத்திலும் முன்வைப்பவர்கள்.
இன்று போர்னோகிராபி அல்லது நீல எழுத்து என்று சொல்லப்படுபவைகளை அன்று அதிகமும் எழுதியவர்கள் இந்த வர்க்கத்தினர்தான். பதினாறாம் நூற்றாண்டில் மதத்தின் மீதான சுதந்திர சிந்தனையை முன்வைப்பவர்கள் என அறியப்பட்ட இவர்கள், பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் பாலுறவில் சுதந்திரமாகச் செயல்படுபவர்கள் ஆனார்கள். இயல்பில் பிரபுக்களான இவர்கள் தமது களியாட்டங்களுக்கான செலவினங்களைத் தாமே வழங்குபவர்களாக ஆனார்கள். இவர்களது எழுத்துக்கள் கிறித்தவ மத எதிர்ப்பானதாகவும், ஆண் உடலின் வன்முறை சார்ந்த பாலுறவு வேட்கை கொண்டதாகவும் இருக்கும். குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துதல், சித்திரதை, கொலை, உடலைச் சரக்காகப் பாவித்தல், உடலைச் ஜடவயமாக்கல் போன்றனவே இந்த எழுத்துக்களின் முக்கியமான அமைவாகும்.
இம்மாதிரியான எழுத்துக்களில் பெரும்பாலுமானவை பெயரிலிகளின் பெயரிலேயே வெளியிடப்பட்டன. மார்கிஸ் இத்தகைய பிரெஞ்சு லிபர்டைன் பாரம்பர்யத்தில் வந்தவர்.
பிற லிபர்ட்டைன்களிடம் இருந்து மார்கிஸ் வேறுபடும் புள்ளிதான் என்ன?
மார்கிஸ் மனித மனத்தின் இருண்டு பக்கங்களை பயமின்றி ஆழ்ந்து சென்று வெளியிட்டவர். மனிதர்களை ஜடவாயமாக்குதல், காமத்தின் அப்பட்டமான சுயநலம், அகவயமாவதால் மனிதாயப்படுத்தலுவுக்கு எதிராக சட்டங்களை உருவாக்கும் கொடூரம் போன்றவற்றை மார்கிஸ் சித்தரித்தார். மனித வக்கிரத்திற்கும் குற்றங்களுக்கும் பின்னணியாக அமைந்த காமநோக்கத்தை மார்கிஸ் வெளிப்படுத்தினார்.
பாலுறவில் விளையும் சித்திரவதை, மகிழ்வு விளைவித்த மரணம் நோக்கிய வன்முறை, போன்றவற்றைப் புரிந்து கொள்ள மார்கிஸ் எழுத்துக்கள் நமக்குப் பயன்படும். இவ்வகை எழத்துக்கள் எப்போதுமே எழுப்பும் சவால்கள் ஒழுக்க ரீதியானவையும் அறவியல்புகள் தொடர்பானதுமாகவே இருக்கும்.
மார்கிஸினது முக்கியத்துவம் என்பதனை பெரும்பாலுமான சிநதனையாளர்கள் இருவகையிலேயெ ஏற்கிறார்கள். முதலாவதாக மனிதனது இரண்டு பக்கத்தினை மறுமலர்ச்சியுக தர்க்கத்தின் அடிப்படையின் நீட்சியாக தனது தத்துவத்திலும் புனைவுகளிலும் முன்வைத்ததன் மூலம் மிகப்பெரிய எச்சரிக்கையொன்றினை மார்கிஸ் உலகுக்கு அளித்துச் சென்றிருக்கிறார்.
இரண்டாவதாக மதத்திற்கும் பாலுறவுத் தூய்மைக்கும் உள்ள உறவை வலியுறுத்துவதன் மூலம் மனிதனது இயல்பான பாலுறவை ஒடுக்கின வகையில் எல்லையற்றுப் பெருகிய மனித வக்கிரத்தையும் அதனால் விளையும் குற்றச் செயல்களையும், வன்முறையையும் மார்கிஸ் தனது படைப்புக்களின் மூலம் எச்சரிக்கையாக மனித குலத்தின் முன் வைத்துச் சென்றிருக்கிறார்.
மார்கிஸ் பற்றி நிறைய மாய பிம்பங்களும் கட்டுக் கதைகளும் நிலவுகின்றன. அவரது கதை சொல்லலையும் அவரது சொந்த வாழ்வு நடவடிக்கைளையும் காலம் கடந்தும் பின்பற்றுவது என்பதனை ஒரு பாணியாகவும், சரக்குவழிபாட்டுத் தன்மை கொண்ட வழிபாட்டுணர்வுடனும் கடைபிடிக்கும் நிலைபாடுகளும் இன்று உலகெங்கும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மார்கிஸினது முக்கியத்துவமும் பொறுத்தப்பாடுகளும் வரலாற்று முக்கியத்துவமும் எவ்வாறுதான் அமைந்தபோதும், அவரது வாழ்வுகுறித்த நிகழ்கால அறவியல்பு சார்ந்த வாசிப்பு என்பதும் முக்கியமானதாகும்.
மார்கிஸ் விவசாயப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பிரபுவர்க்கத்தின் பிரதிநிதியாகத்தான் வாழ்ந்தார். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பலவந்தப்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் குறித்து மார்கிஸ் பற்றிப் பேசுகிற தத்துவவாதிகள் அல்லது எழுத்தாளர்கள் அதிகமும் அக்கறைப்படுவது இல்லை. அவர்களது வாழ்வு குறித்து அதிகமும் பதியப்படவும் இல்லை.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு பதியப்படுமானால் அவ்வேளை லிபர்டைன்களதும் மார்கிஸினதும் வன்முறைகள் எத்தனை குரூரமானதும் வலிமிக்கதுமான விளைவுகளை பாலியல் தொழிலாளர்களிடமும் கிராமப்புற விவசாயப் பெண்களினதும் அவர்களது தாய்மார்களினதும் வாழ்வில் உருவாக்கியிக்கிறது என்பதனை ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.
மார்கிஸ் தனது வாழ்காலத்தில் அவரது முக்கியமான நாவல்கள் எதனையும் தனது சொந்தப் பெயரில் வெளியிடவில்லை. இரசாபாசத்திற்காகவும் விற்பனைக்காகவும் அவர் பல நாவல்களை தேவைக்கும் அதிகமான பக்கங்களில் இட்டுக்கட்டி எழுதியிருக்கிறார். அவ்வப்போது தணிக்கை முறையிலிருந்தும் கில்லட்டின் தலைவெட்டும் தண்டனையிலிருந்து தப்புவதற்காகவும் தான் லிபர்டைன் இல்லை எனவும், பெண்கள் சித்திரவதை செய்யப்படுவதைத் தான் ஆதரிப்பவன் இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தான் குற்றவாளி இல்லை என்று மார்கிஸ் சொல்வதை ஸீமன் தீ பூவா போன்ற பெண்நிலைவாதிகள் ஏற்பதில்லை. நேரடியாக மார்கிஸிடம் அனுதாபம் காட்டுவதென்பது அவருக்கு துரோகம் செய்வதாகும். ஒரு குழந்தையின் தொண்டைக்குழி ஒரு காமாந்தகாரனால் பிளக்கப்படும் போதெல்லாம் நாம் அவருக்கு எதிராக நிற்கிறோம். அவருடைய முக்கியத்துவமானது அவரைச் சாதாரணமாக விட்டு விலகிவிடுவதில்லை. அவர் எல்லாவிதமான சுலபமான பதில்களையும் விவாதத்திற்கு உட்படுத்துகிறார் என்பதுதான். அவரது வாக்குமூலத்தின் மாபெரும் முக்கியத்துவம் என்பது அதன் தொந்தரவு செய்யும் தகைமையில்தான் உள்ளது என்கிறார் ஸீமன் தீ பூவா.
மார்கிஸின் தத்துவ நிலைபாடும் அதனது தர்க்க நீட்சியும் அதனது இருண்மையும் அது தரும் வரலாற்று ரீதியிலான படிப்பினைகளும்தான் இன்று பேசப்படத்தக்க விசயங்களேயொழிய அவரது நாவல்கள் அல்லது அவரது கதாநாயக நாயகியின் பாலியல் சாகசங்கள் அல்ல. மார்கிஸை இன்றும் படிக்கலாம். அது எழுப்பும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்குத் தானேயொழிய அதனைக் கொண்டாடும் காரணத்திற்காக அல்ல என்கிறார் மார்க்சியக் கலை விமர்சகரான டேவ் வீச். மார்கிஸை தடை செய்ய வேண்டியதும் இல்லை. அதற்காக அவரைக் கொண்டாட வேண்டிய அவசியமும் இல்லை என்கிறார் அவர்.
மார்கிஸ் டி சேட் மறைந்து ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் கடந்துவிட்டது.
கலாச்சாரத்தின் அங்கமாகிவிட்ட சூழலில், உடல் அரசியல், தணிக்கை எதிர்ப்பு போன்ற என்னதான் பேசினாலும், ஜடத்தன்மைக்கும் நுகர்வுத் தன்மைக்கும் எதிரான, கிளர்ச்சியூட்டும் வகை பாலுறவு எழுத்துக்களுக்கு அந்நியமானதாகத்தான் நிஜமான பாலுறப் பிரச்சினைகளைப் பேசுகிற படைப்புகள் இருக்க முடியும்.
உலகின் புகழ்வாய்ந்த பெரும்பாலமான படைப்பாளிகளின் படைப்புகள் வயதளவில் சிறுபிராயத்தைத் தாண்டிய ஆண்பெண்கள், மத்தியதரவயது ஆண் பெண்கள் போன்றோருக்கிடையிலான முறைசாரா உறவுகள், ஒடுக்கப்ட்ட பாலுறவு வேட்கைகள் போன்றவற்றைப் பேசுவன ஆகும். முஷ்டி மைதுனமும் உக்கிரமான உடலுறவுகளும் இவர்களது படைப்புகளில் இடம் பெறுகின்றன. கிளர்ச்சித் தன்மையை மட்டுமே மையமாகக் கொணடவை அல்ல இவர்களது படைப்புகள். இவர்தம் படைப்புகளில் குழந்தைகளைப் பாலுறவில் ஈடுபடுத்தும் கிளர்ச்சியூட்டும் சித்தரிப்புகளையோ அல்லது முதியவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் சிறுவர் சிறுமியர் பார்வையைப் பரவசமாக்கி கதை சொல்லும் காட்சியமைப்புக்களையோ நாம் பார்க்கவியலாது. இத்தகையை தன்மை கொண்டவை நிச்சயமாக குழந்தைகள் மீதான பாலுறவுக் குற்றத்தன்மை கொண்டவை என்பதானால்தான் இத்தகைய எழுத்துக்கள் இலக்கியத் தன்மையையோ படைப்புத் தன்மையையோ பெறமுடிவதில்லை.
பாலுறவில் உச்சநிலையை அறியாத பெண்களையே பெரிதும் கொண்ட ஒரு சமூகத்தில் சுயபாலுறவையோ முறைசாரா பாலுறவையோ சித்தரிப்பதை பிரச்சினையின் அடிப்படையில் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் குழந்தைகள் மீதான மட்டுமீறிய வன்முறை கொண்ட ஒரு சமூகத்தில், குழந்தைகள் வன்பாலுறவில் ஈடுபடுத்தப்படுவதை கலை சார்ந்த பிரச்சினை எனப் புரிந்து கொள்வதிலோ, கலை சார்ந்த அக்கறை கொண்டதெனப் புரிந்து கொள்வதிலோ கொடும் தார்மீகத்தன்மை நெருக்கடி உள்ளது.
ஜடத்தன்மையும் நுகர்வுத்தன்மையும் குற்றத்தன்மையும் கொண்ட பாலுறவு எழுத்துக்களுக்கும், பாலுறவு ஒடுக்குமுறைக்கு எதிரான பாலுறவு நடவடிக்கைகளைப் பேசும் எழுத்துக்களுக்கும் இடையிலான வித்தியாசமே அந்த எழுத்தின் இலக்கியத் தன்மையையும் படைப்புத் தன்மையையும் தீர்மானிக்கிறது. இவ்வகையில் பாலுறவு வியாபாரிகள் உடல் அரசியல் போன்ற கோஷங்களை தமது எளிய நோக்கங்களுக்குக் கடத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது விழிப்பு நிலையில் உள்ளவர்களது கடமையாகிறது.
மார்கிஸினது படைப்புக்களையும் அவரது வாழ்வையும் ஒருவர் சமனாக வைத்துப் பார்க்கக் கூடாது என்பதில் எவ்வளவு உண்மை உள்ளதோ, அதே அளவு உண்மை அவரது படைப்பையும் அவரது வாழ்வையும் முற்றிலும் பிரித்துவிட முடியாது என்பதிலும் இருக்கிறது. அவரது படைப்புக்களில் வெளிப்படும் மனித நடவடிக்கைளுக்கும் அவரது சொந்த வாழ்வு சார்ந்த நடவடிக்கைகளுக்கும் இருக்கும் ஒரேயொரு வித்தியாசம் அவர் கொலைகளில் ஈடுபடவில்லை என்பதுதான். மற்றபடி அவர் படைப்புக்களில் வெளிப்படுத்திய வன்பாலுறவு, சித்திரவதை, தன்னின்பம் மட்டுமே பிரதானம் என்று கருதியமை போன்ற அனைத்தையும் அவர் வாழ்வில் கடைபிடித்தவராகவே இருந்திருக்கிறார்.
சிறுமியரையும் வறிய விவசாயப் பெண்களையும் வெறும் பண்டமாகப் பாவித்தவராகவே அவர் இருந்திருக்கிறார். இந்த வகையில் பதினெட்டாம் நூற்றாணடில் பிரபு வர்க்கத்தவர்க்கு மட்டுமே இருந்த சலுகைளைப் பயன்படுத்திக் கொண்ட பாலுறவுச் சுரண்டல்காரரது வாழ்வாகவே அவரது வாழ்வும் இருந்தது. அன்றும் சரி இன்றும் சரி, என்றும் அவரது இந்நிலைபாடு கொண்டாட்டத்திற்கு உரியது அல்ல. பெண் உடலை நுகர்வுப் பண்டமாக்கி ஜடமாக்கி அதன் மீது மட்டுமீறிய சித்தரவதையையும் வன்முறையையும் பாவித்த அவரது வாழ்முறை கொண்டாட்டத்திற்கு உரியது அல்ல. அவரது வாழ்வை நாம் நிராகரித்துவிட்டாலும் கூட பாலியல் சார்ந்த மருத்துவத்துறை வக்கிரங்களுக்கு அவரது வாழ்முறையை ஒரு பகுப்பாய்வுக் கருவியாகப் பாவிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
அதனது தீவிரமான எல்லைகளை அவதானித்துக்கொண்டு, மத அடிப்படைவாத்திற்கும் பாலுறவு ஒடுக்குமுறைக்கும் மதநிறுவனங்களின் இரட்டைநிலைபாட்டுக்கும் இருக்கும், உறவையும் ஒழுக்கவிதிகளையும் நாம் நிச்சயமாகவே விமர்சனத்திற்கு உட்படுத்தியே ஆகவேண்டும். மார்கிஸின் பாலுறவு நுகர்ச்சியின் மறுமுனையில் மத அடிப்படைவாதமும் தூயகிறித்தவமும் அதனது ஒடுக்குமுறைசார்ந்த நிறுவனங்களும் இருந்தது என்பதனையும் நாம் மறந்துவிடமுடியாது. அதே வேளை மார்கிஸை வழிநடத்திய இயந்திரத் தன்மையான தத்துவ மூலதாரங்களையும், ஆன்மாவும் சதையும் சிந்தனையுமான மனித உடலை வெறுமனே நுகர்வு சார்ந்த பண்டமாகப் பாவித்த அவரது வாழ்வையும் நாம் நிராகரித்து விடவே வேண்டியிருக்கிறது.
மார்கிஸை முனவைத்து முரணற்ற விதத்தில் இன்று அவரைத் தூய ஜனநாயகப் போராளியாகவும் பெண்களினதும் ஆண்களினதும் பாலுறவு விடுதலையைப் பேசியவர் என்று கொண்டாடுவதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமா? நீல இலக்கியமும் நீலப்படங்களும் சித்திரவதைகளும் வன்பாலுறவும் மட்டுமீறிய வகையில் நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாக ஆகியிருக்கும் ஒரு சூழலில் மார்கிஸ் தனது வாழ்வில் கடைபிடித்த ஒரு சோதனையை நாம் கொண்டாட முடியுமா? இரண்டுக்குமான பதில் இல்லை என்பதாகவே இருக்கும்.
இட்லரது கருத்தியலையொட்டிய ஒரு அரசியலை, மனிதகுல வரலாற்றின் இருண்ட பக்கத்தைக் காண்பித்த வக்கிரமான வரலாற்றுத் தருணம் என நாம் மதிப்பிடுவதைப் போலத்தான், பாலுறவுச் சித்திரவதையை முன்வைத்து அதற்கு மறுமலர்ச்சியுக காரண காரிய மதிப்பீட்டையும் வழங்கி, பாலுறவு-வன்முறை-மரணம் போன்றவற்றுக்கான இடையறாத தர்க்கத்தையும் வழங்கிய வகையில் மறுமலர்ச்சி யுக மனிதனின் இருண்டபக்கம் குறித்த ஒரு சித்திரத்தினை மார்கிஸ் தனது தத்துவப் பிரதியுடனான ஊடாட்டங்களின் வழி வழங்கினார் என்றே நாம் மதிப்பிட முடியும்.
அரசியல் அதிகாரம் சார்ந்தும் பாலுறவு அதிகாரம் சார்ந்துமான மனிதனது இருண்ட பக்கம் குறித்த இரு சாட்சியங்களாக நிற்கிறது இரண்டு சொற்கள். அவை பாசிசம் மற்றும் சாடிசம் என்பதாகும். மார்கிஸ் தன்னை தாவரங்களோடும் விலங்கினத்தோடும் கடலோடும் வைத்துப் பார்த்தவர். ஆக்கமும் அழிவும் மனித இயற்கை என்றவர் அவர்.
சிந்தனையும் உழைப்பும் கொண்டு உலகை அழகாகவும் சிருஷ்டிக்கும் வல்லமை படைத்தது ஆண்பெண் கலவியில் விளைந்த மானுடம் மட்டுமே என்பதை அவர் தேடிக் கண்டுபிடிக்காதது அவருக்கு நேர்ந்த, அவர் காலத்தின் அவலம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.