மலாலாவும்,அமெரிக்க இயங்கியலும்
யூசுப் மலாலா…
அவள் நினைவுதவறி மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு அவளைப்பற்றி நான் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி என் நினைவுக்கு வருகிறது.அவை முஹம்மது இக்பாலின் வரிகள்:
” பெண்ணை அடிமையாய் எண்ணும் முஸல்மான்
திருக்குர் ஆனால் பயனடையாதவனாவான்”.
இன்று மலாலா உலகம் புகழும்,போற்றும்,துதிக்கும்,ஆராதிக்கும் ஒரு பெண்.சிகிச்சைக்குப் பின்னரான அவளது தோற்றத்தில் அளவிடமுடியாத கருணையும்,வீரமும்,அழுகும் கூடியிருக்கிறது.ஒவ்வொரு நாட்டின் தலைவரிடமிருந்தும் அவள் விருதுகள் பெறும்போது சிரமப்பட்டு வெளிப்படுத்தும் புன்னகை ஆயிரம் அர்த்தங்கள் நிரம்பியது.உலகெங்கும் பெண்குழந்தைகளின் கல்விக்காக அவள் தனது விருதை சமர்ப்பிக்கிறாள்.பாகிஸ்தானில் பெண்குழந்தைகளுக்கென்று பள்ளிக்கூடம் நிறுவி சேவை செய்ய அவள் விருப்பம் தெரிவிக்கிறாள். படுகொலை செய்யப்பட்ட பெனாசீர் புட்டோவைப் போல பாகிஸ்தான் பிரதமராக வேண்டும் என்ற கனவும் அவளுக்குண்டு.அவளை ஒரு மந்திரப்பெண்ணாகவே பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பள்ளி வாகனம் ஒன்றில் சுடப்பட்டுக் கிடந்தவள் அவள்.தினம் தினம் கொத்துக்கொத்தாக உயிர்கள் காவுவாங்கப்படும் பாகிஸ்தானில் அவள் மட்டும் புத்துயிர் பெற்றது எப்படி?
பெண் எப்படி எல்லா மதங்களுக்கும் எதிரியாகிப்போனாள்?தெரியவில்லை.”நான் ஆணுக்கும்,பெண்ணுக்கும் சம உரிமை தரப்படவேண்டும் என்று கோரமாட்டேன்.ஆணுக்கும்,பெண்ணுக்கும் இயற்கை வேறுபட்ட தொழிற்பாடுகளைத் தந்துள்ளது.அதைச்சரிவரச் செய்தால் ஆரோக்கியமான வளர்ச்சியுள்ள குடும்பத்தைக் காணலாம்” என்று முகம்மது இக்பால் கூட கூறுகிறார்.பிருந்தாவனத்து விதவைகளை எப்படி எல்லாம் நடத்துகிறார்கள் என்பதை தீபாமேத்தாவின் water திரைப்படம் சொல்கிறது.(சமீபத்தில் அவர்களை விமானத்தில் கொல்கத்தா வரைக்கும் அழைத்துச் சென்றது தனிக்கதை).கன்னியாஸ்திரிகள் படும் அவஸ்தைகள் நாம் அறியாதது அல்ல.பௌத்தமும்,சமணமும் பெண்களை அறவே வெறுக்கின்றன.
அமெரிக்காவைக் கதிகலங்க வைக்கும் தலிபான்கள் மலாலாவுக்கு அஞ்சுகிறார்கள்.மலாலாவை எப்படியும் கொன்றே தீருவோம் என சூளுறைக்கிறார்கள். மலாலா எழுதி விரைவில் வரவிருக்கும் ‘I am Malala’ என்னும் புத்தகத்தை தடை செய்திருக்கிறார்கள்.ரத்தவெறி அவர்களிடம் கொதிக்கிறது.சரி.மலாலாவைச் சுட்டுக் கொல்ல அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.தங்களின் செயல்களை நியாயப்படுத்தும் அவர்களின் செயலறம் எதுவாக இருக்கமுடியும்?தங்களின் செயல்களுக்கு குர்ரானிலிருந்தும்,ஹதீஸ்களிலிருந்தும் அவர்கள் வியாக்கியானம் தரப்போகிறார்களா?பெண் குழந்தைகளின் கல்வியை தீமை என குர்ரான் சொல்கிறதா?
கி.பி.7ம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு முன்னரே மிக உயர்ந்த கலாச்சார,பண்பாட்டு,அறிவியல் துறைகளில் இஸ்லாமியப் பேரரசு சாதனைகளைப் புரிந்திருந்தது.இந்தியக்கணிதமும்,பாரசீகத்தின் கலாச்சாரமும் இஸ்லாத்தின் பண்பாட்டு அடிப்படையை பலப்படுத்தியிருந்தன.ஆனால் ஐரோப்பாவின் அறிவியல் முன்னேற்றத்தையும்,பகுத்தறிவுவாதத்தையும் இஸ்லாம் எடுத்துக்கொள்ளத் தவறியதன் உடனடி விளைவாக முஸ்லிம்களின் கல்வி ஒளி மங்கிப்போயிற்று என நாம் சொல்லமுடியும்.18ம் நூற்றாண்டின் வஹ்ஹாபிவாதம் இஸ்லாத்தை தன் கட்டுக்குள் கொண்டுவந்தது.’தூய இஸ்லாத்திற்குத் திரும்புங்கள்’ என்பது வஹ்ஹாபிகளின் அழைப்பு.இஸ்லாமியப் பண்பாடு இதுவரை சம்பாதித்துக் கொடுத்த அனைத்தையும் அழித்தொழிக்க அது உறுதி பூண்டது.அது நவீனக் கல்வியை எதிர்த்தது.இஸ்லாத்தின் பன்முகத்தன்மையை சிதைத்தது.இசையை வெறுத்தது.அழகியலைப் புறந்தள்ளியது.அரபு தேசியவாதத்தை முன்னிறுத்தியும்,துருக்கிய,பாரசீக தேசியங்களை எதிர்த்தும் அது இஸ்லாத்தை ஒரு நாடோடிக்குழுவாக பல நூற்றாண்டுகள் பின்னோக்கி இழுத்து மாற்ற முயற்சித்தது. இஸ்லாத்தின் வரலாற்றுப் புகழ்மிக்க புனிதத்தலங்களை வஹ்ஹாபிகள் தகர்த்தனர்.ஷியாக்களின் புனித நகரான கர்பலாவைத் தாக்கி அங்கிருந்த இமாம் ஹுஸைனின் சமாதியை அழித்தனர்.நபிகளின் சமாதி மண்டபத்தையும்கூட தகர்க்கும் எல்லைவரை அவர்கள் சென்றனர்.இந்தப்பின்னணியில் தான் ஆப்கனில் தலிபான்களின் ஆட்சியின்போது பாமியான் புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்டதை நாம் நோக்கவேண்டும்.தாலிபான்கள் நவீன வஹ்ஹாபிகள்.இஸ்லாம் ஒரு அசைவியக்கம் கொண்ட சமூக இயக்கம் என்பதை தலிபான்கள் ஒப்புக்கொள்வதில்லை.ஓடும் நதியைத் தேக்கி அதைச் சாக்கடையாக மாற்றும் முயற்சியில்தான் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.துள்ளும் மீன்கள் போன்ற மலாலாக்கள் நதிகளில் மட்டுமே வாழமுடியும்.சமயத்தூய்மை,தீவிரவாதம்,எளிமை என்னும் மூன்று காரணிகள் மட்டுமே வஹ்ஹாபிவாதத்தின் அடிப்படை.தலிபான்களின் அடிப்படையும் அதுதான்.வஹ்ஹாபிகளுக்கும்,தலிபான்களுக்கும் ஒரே ஒரு வேற்றுமையை மட்டுமே நாம் காட்டமுடியும்.வஹ்ஹாபிகள் தங்களது காலத்தில் மோட்டார் வாகனத்தையும்,தொலைபேசிகளையும் “பித் அத்”,அதாவது இஸ்லாத்திற்கு எதிரானவை என்றனர்.ஆனால் இவ்விரண்டையும் பயன்படுத்தியே தலிபான்கள் தங்களது எல்லாவித தீய நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்கின்றனர்.ஒழுக்கம் என்று தாம் கருதிய அனைத்தையும் வன்முறைமூலம் நிலைநிறுத்தலாம் என்ற வஹ்ஹாபிகளின் கோட்பாடு விபச்சாரிகளைக் கல்லெறிந்துக் கொல்லும் செயல் மூலம் தலிபான்களிடம் மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகளில் இன்னமும் நிலவுகிறது என்பதை நாம் நோக்கவேண்டும்.
அல்-சவூத் குடும்பத்தினர் தங்களது ஆட்சியை சவூதி அரேபியாவில் பலப்படுத்திக்கொள்ள வஹ்ஹாபிகளை நன்கு பயன்படுத்திக்கொண்டனர்(1880-1953).மன்னரின் சர்வாதிகாரம் பதிலுக்கு வஹ்ஹாபிகளுக்கும்,அதன் தீவிர இஸ்லாத்திற்கும் சேவை செய்யவேண்டும்.நாடு முழுவதும் மக்களின் வாழ்க்கையை தீவிர இஸ்லாத்திற்குள் கொண்டுவரவேண்டும்.மன்னரும் அவ்வாறே செய்தார்.சபாலா போரில்தான்(1929) வஹ்ஹாபிகள் சவூதி மன்னரால் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டனர்.புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளமும்,அதன் மூலம் கிடைத்த வருமானமும் சவூதியையும்,மேற்கு நாடுகளையும் ஒன்றன் மீது ஒன்று ஈர்த்தன.சவுதி மன்னர்கள் நவீனத்துவத்தை நோக்கிக் கவரப்பட்டனர்.பைஸல் என்னும் மன்னர் பலத்த எதிர்ப்புக்கிடையே புரொய்தா நகரில் பெண்களுக்கான கல்லூரி ஒன்றைத் தொடங்கினார்.இஸ்லாத்தைச் சுற்றி நிகழ்ந்த அறிவியல்,சமூக முன்னேற்றங்கள் இஸ்லாத்தின் போக்கை மாற்றியமைத்தன.அப்படி இல்லாதிருக்குமானால் வஹ்ஹாபிகளினால் ஷைத்தானின் கருவிகள் எனப்பட்ட விமானங்களையே அல்கொய்தாவினர் கடவுளின் வரமாகக் கருதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்திருக்கமுடியாதல்லவா?
18ம் நூற்றாண்டின் தலிபான்களான வஹ்ஹாபிகள் இஸ்லாமிய பன்மைத்தன்மைக்கு மரண அடி கொடுத்தனர் என்பதைப் பார்த்தோம்.முகம்மது நபிகள் தொடக்கம் இன்று வரை இஸ்லாத்தின் ஏற்ற இறக்கங்கள்,வீழ்ச்சி புத்துயிர்ப்புகள் இவற்றை ஆரோய்ந்தோமானால் பல விடைகள் கிடைக்கின்றன.”சமயம் நவீனமாக இருந்து பயனில்லை;அது அசைவியக்கமுள்ளதாக இருக்கவேண்டும்”என்ற இக்பாலின் வலியுறுத்தலோடு விடைகளை ஆராய்வோம்.
“ஒவ்வொரு வரலாற்று யுகமும் முஜ்தஹிதுகளைப்(அதாவது இஸ்லாமியச் சட்டங்களுக்கு பகுத்தறிவுப்பூர்வமான சுதந்திர விளக்கத்தை வழங்கும் அறிஞர்கள்)பெற்றுள்ளது.அவர்கள்தான் பிரச்னைகளுக்கான தீர்வுகளை வழங்குவார்கள்.ஒவ்வொரு யுகமும் அதன் தேவையைப் பொறுத்தும்,அதன் இயங்குதன்மையைப் பொறுத்தும் புதுப்புது பிரச்னைகளைத் தோற்றுவிக்கின்றன.இறந்துபோன முஜ்தஹிதுகளிடம் நமக்கான தீர்வு இல்லாதபட்சத்தில் இன்றைய பிரச்னைகளுக்கான தீர்வுகள் எங்கிருந்து வரும்?நாம்தான் நமது ஆராயும் அறிவையும்,விசாரணை சக்தியையும் வளர்க்கவேண்டும் என்று நவீன யுகத்தில் இஜ்திஹாதிற்கான(சுதந்திர விசாரணை)தேவையை சர்செய்யத் அஹ்மதுகானும் வலியுறுத்துகிறார்.அதாவது மலாலாவை தலிபான்கள் தண்டிக்க முயன்றால் முழு முஸ்லிம் சமுதாயமும் திரண்டெழுந்து தலிபான்களுக்கு எதிராகப் போராடவேண்டும்.தவறினால் இஸ்லாம் உலகத்திற்குள் தலிபானிஸம் நவீன வஹ்ஹாபியிஸமாக வேர்விட்டு வளரும்.
19ம் நூற்றாண்டிலும்,20ம் நூற்றாண்டிலும் இஸ்லாம் தந்த முஜ்தஹிதுகளாக சர் செய்யத் அஹ்மதுகானையும்,முகம்மது இக்பாலையும் குறிப்பிடலாம்.இருவரும் அக்காலத்திலேயே பெண்கல்வியை ஆதரித்துள்ளனர்.பெண்மையைப் போற்றியுள்ளனர்.இஸ்லாத்தின் சிந்தனையிலும்,பண்பாட்டிலும் அறிவியலுடனோ முன்னேற்றத்துடனோ பகைமை பாராட்ட ஆதாரங்கள் இல்லை என்பதைத் தமது சொற்பொழிவுகளில் இக்பால் வலியுறுத்துகிறார்.ஆண்-பெண் இருவருக்குமிடையிலான அன்பை குர்ரான் இப்படி சொல்கிறது:”அவர்கள்(பெண்கள்) உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள்(ஆண்கள்) அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்(அல்-குர்ரான் 2:287).இக்கருத்தை இக்பால் அஸ்ரா ஓ ரமூஸ் கவிதைப்படைப்பில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“ஆணின் நிர்வாணத்தை
ஆடையாய் மறைப்பவள் பெண்
அழகிய இதயத்துக்கான ஆடையை
அன்பினால் தருபவன் ஆண்”.
இக்பாலின் நோக்கில் சமூக நடவடிக்கைகளில் இஸ்லாம் ஆணுக்கும்,பெண்ணுக்கும் சமவாய்ப்புகளை வழங்குகிறது.பொருளாதாரத்தில்,கல்வியில்,சுதந்திரத்தில்,தலாக் பெறுவதில் சம உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது.பெண்மைக்கு அளிக்கும் பெருமையே நம் சமுதாய வளர்ச்சிக்குத் தூண்டுதல் என்று அவர் பாடியதில் அவர் காண விரும்பிய அத்தனை உரிமைகளையும் பெற்ற பெண் அங்கு தோன்றினாள்.அதனால்தான் முஸ்லிம்களைப் பார்த்துக் கூறினார்:
“பெண்ணை அடிமையாய் எண்ணும் முஸல்மான்
திருக்குர் ஆனால் பயனடையாதவனாவான்”.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் மலாலாவை தலிபான்களுக்கெதிரான ஒரு துருப்புச்சீட்டாக மாற்றியுள்ளன.மலாலாவுக்காக நீங்களும்,நானும் கண்ணீர் வடித்திருப்போம்.ஆனால் மேலை நாடுகள் வடிக்கும் கண்ணீர் முதலைக்கண்ணீர்.அது மிகவும் ஆபத்தானது.அது தலிபான்களின் செயலைவிட ஆபத்தானது.ஒரே ஒரு மலாலாவைத் தாங்கி தாங்கி அரற்றும் மேற்குலகம்,அமெரிக்கா தினம் தினம் பாகிஸ்தானிலும்,ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா விமானங்களை அனுப்பி குழந்தைகளையும்,பெண்களையும் கொன்றுகுவிக்கும்போது மௌனம் சாதிக்கிறது.கொல்லப்படும் பிஞ்சுகளில் எத்தனை எத்தனை மலாலாக்கள் இருப்பார்களோ?சமயத்தின் பெயரைச் சொல்லி கொலைகள் புரியும் தீவிரவாதிகள் தலிபான்கள் என்றால் ஜனநாயகத்தின் பெயரைச்சொல்லி படுகொலைகள் புரியும் ஏகாதிபத்தியவாதிகளை ஏகாதிபத்தலிபான்கள் என அழைக்கலாமா?இது மலாலா மீதான அன்பு அல்ல.மேற்குலகம் காலம்காலமாக இஸ்லாத்தை தனது மிகப்பெரும் எதிரியாகக் கருதி வந்திருக்கிறது.கிறிஸ்துவ சமயத்தையும்,தாங்கள் சார்ந்த ஆரிய இனத்தையும் உலகின் மற்றெல்லா இனங்களையும்,சமுதாயங்களையும்விட உயர்வானது என்ற வெறி ஆரம்பகாலம் தொட்டே நிலவிவருகிறது.
ஜோன்ஸ்,ஹும்போல்ட்,மாக்ஸ்முல்லெர் போன்றோரின் ஆய்வுகள் ஆரிய இனம்,ஆரியப்பண்பாடு என்னும் கருத்தாக்கங்களை உருவாக்கின.நவீன ஐரோப்பியர்கள்,இந்திய பிராமணர்கள் ஆகிய இருவருக்கும் ஆரிய இனத்தவரே மூதாதையர் என ஜெர்மானிய ரொமாண்டிக் சிந்தனையாளர்கள்(ஐரோப்பாவில் தொழில் நாகரிகமும் துவக்ககால முதலாளித்துவமும் ஏற்படுத்திய சமூக-பண்பாட்டுச் சீரழிவு,அறிவின் ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து என்றோ இருந்த ஒரு பொற்காலத்தை நினைத்துக்கொண்டிருந்தவர்கள்)விடை வழங்கினர்.ஆரிய இனத்தின் மேலாண்மைக்குக் காரணம் உலகின் அரசியல்,இலக்கிய வரலாற்றின்மீது இந்தோ-ஜெர்மானிய மொழிகளும் பண்பாடும் மாபெரும் தாக்கம் ஏற்படுத்தியதுதான் என்று அவர்கள் கூறினர்.இப்படியான இனவெறியினை மையப்படுத்தி சிலுவைப்போர் தொடக்கம் ஈராக் போர் முடிய இஸ்லாத்தையும்,அதன் மக்களையும் அடிமைப்படுத்தும் முயற்சியில் மேற்குலகம் சற்றே வெற்றி கண்டபோதிலும் நியூயார்க் நகர இரட்டை கோபுரத்தகர்ப்பு அவ்வினவெறியைப் பிடித்து உலுக்கியது.இஸ்லாத்தைக் கடத்தி மூர்க்கத்தனமான கொலைவெறியில் இறங்கிய மத்திய,நடுத்தர வர்க்கத்து இஸ்லாமிய இளைஞர்களின் முட்டாள்தனமான செயலே இரட்டைக் கோபுரத் தகர்ப்புச் சம்பவம்.அதைவிட கோழைத்தனமான செயலைச் செய்தார் ஜார்ஜ் புஷ்.அல்கொய்தா இயக்கத்தின் ஒசாமாபின்லேடன் விரித்த வலையில் விழுந்தார் அவர்.அல்கொய்தா இயக்கத்தை சர்வதேசநீதியின் முன் நிறுத்தியிருக்கவேண்டியவர் ஒசாமாபின்லேடனின் தரத்துக்குத் தாழ்ந்து பதிலுக்கு பயங்கரவாதம் பேசினார்.உயிருடனோ,பிணமாகவோ என்றார்.நவீன சிலுவைப்போர் என்றார்.தகர்க்கப்பட்டது அமெரிக்காவின் முதலாளித்துவ இதயமும்,அமெரிக்க ராணுவத் தலைமையகமும் அல்லவா!
இஸ்லாமியத் தீவிரவாதத்தின் மூலகாரணம் என்ன?
எட்வர்ட் ஸெய்யீத் கூறுகிறார்:
“இஸ்லாமிய உலகில்-எண்ணெய் உற்பத்தி செய்யும் உலகில்,அரபு உலகில்,மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதார நலன்களுக்கும்,ராணுவ நலன்களுக்கும் முக்கியமான இந்தப் பகுதிகளில்-வெகுகாலமாக நடந்தேறிவரும் அமெரிக்கத் தலையீட்டின் இயங்கியல் வெளிப்பாடு அது.அந்த நாடுகளில் நீங்கள் வாழ்வீர்களேயானால்-அங்குள்ள மக்களின் விருப்பங்களுக்கும்,ஆசைகளுக்கும்,இச்சைகளுக்கும் எதிராக விடாப்பிடியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் அமைந்திருப்பதை உணரமுடியும்.அமெரிக்கா தனது கொள்கைகளாகக் கூறிக்கொள்கிற ஜனநாயகம்,சுயநிர்ணய உரிமை,பேச்சுரிமை,கூடுவதற்கான உரிமை,சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அதன் நடவடிக்கைகள் இல்லை எனவும் அதன் சுயநலத்தின் அடிப்படையில்தான் அமெரிக்கா செயல்படுகிறது எனவும் அரபுமக்கள் எண்ணுகின்றனர்.அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் அடிப்படையில் மக்கள் ஆதரவு இல்லாதவர்கள்.அந்நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு எதிராக-அந்த ஆட்சியாளர்களை அமெரிக்கா ஆதரித்து வருகிறது.வன்முறையும்,அரசியலும் கலந்த,மக்கள் ஆதரவில்லாத இந்தச் சூழ்நிலையில் மக்களைக் கவர்ந்துள்ள தலைவர்களுக்கு, குறிப்பாக மதத்தின் பெயரால் பேசுகிறவர்களுக்கு-அதுவும் இங்கே இஸ்லாமின் பெயரால் பேசுகிறவர்களுக்கு,அமெரிக்காவுக்கு எதிரான புனிதப்போர் பற்றியும்,ஏதோ ஒரு வகையில் அமெரிக்காவை வீழ்த்தவேண்டும் என்பது பற்றியும் பேசுவது எளிதாகிவிட்டது.நாம் சோவியத் யூனியனை தோற்கடித்தோம்,அமெரிக்காவையும் தோற்கடிக்கமுடியும் என்கிற எண்ணம்.இத்தகைய மூர்க்கத்தனத்திலிருந்து சீக்குப் பிடித்த மதவுணர்விலிருந்து மற்றவர்களைத் துன்புறுத்தும்,மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கும் வெறி கிளம்புகிறது.”
குவைத்தை ஈராக் ஆக்கிரமித்ததையடுத்து உடனடியான போருக்குத் தயாரிப்புகள் செய்த அமெரிக்கா,சிறிது காலத்திற்குமுன்னர்தான் பனாமா நாட்டின் மீது படையெடுத்து அதை சிறிதுகாலம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை வசதியாக மறந்து போனது.ஆப்கன் நாட்டை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோது ஆப்கன் முஜாகிதீன்களை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அவர்களை ‘சுதந்திரப்போராட்ட வீரர்கள்’ என்னும் பட்டத்தை ரீகன் வழங்கியது அமெரிக்காவுக்கு நினைவிருக்கிறதா?சோவியத் யூனியன் ஆப்கனை ஆக்கிரமிப்பதற்கு முன்பே அமெரிக்காவின் நேச நாடுகளான இஸ்ரேலும்,துருக்கியும் பிற நாடுகளின் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தார்களே?அப்போது அமெரிக்காவின் வீரம் எங்கே போனது?1970 களில் அமெரிக்காவின் நேசநாடான இந்தோனேஷியா ஆயிரக்கணக்கான திமோர் நாட்டவர்களைக் கொன்று குவித்ததே!இந்தோ-சீனாவில் தலையீடு செய்து அங்குள்ள விவசாயச் சமூகங்களை அழிவுக்கு உட்படுத்திய அமெரிக்கா இதுவரை நீதியின் பக்கம் வந்தது உண்டா?
எட்வர்ட் ஸெய்யித் சொல்கிறார்: “பயங்கரவாதம் என்பது பற்றிய விளக்கம் மிகவும் துல்லியமாக இருக்கவேன்டும்.அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் பாலஸ்தீனியர்களின் செயலை உலக வர்த்தக மய்யத்தில் நடந்த தாக்குதலிலிருந்து நாம் வேறுபடுத்திப் பார்க்கமுடியும்.”
அவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கத் தவறியதன் விளைவுதான் சமீபத்தில் இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது உலகநாடுகள் கைகட்டி வேடிக்கை பார்த்தது.
மலாலாவைக் கொண்டாடுவது முக்கியமல்ல.யார் கொண்டாடுகிறார்கள் என்று கவனிப்பதில்தான் நமது அக்கறை இருக்கவேண்டும்.மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளாவின் காந்தியவழி அறப்போராட்டத்திற்குச் செவிசாய்க்காத,புனே கபீர்கலா மஞ்சின் ஷீத்தல் ஷாத்தேவை இடைவிடாமல் துரத்தி அடிக்கிற,தனது பூமியை கார்ப்பொரேட்டுகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள ஆயுதமேந்தும் அப்பாவிப் பழங்குடிப் பெண்களின்மீது பசுமைவேட்டைப் படைகளை ஏவி,அவர்களைக் கொன்று,அவர்களின் சடலங்களை கால்நடைகளின் சடலங்களைப் போல அவமதிக்கிற நம்முடைய இந்திய அரசு மலாலாவை அழைத்து ஒரு விருது கொடுக்குமானால் அதுதான் மிகப்பெரும் கேலிக்கூத்தாக இருக்கும்.
(தீராநதி,நவம்பர்,2013)