மம்தா – மிக்ஸி – மாணிக்ஃபார்ம்
மின்சாரம் இல்லாத ஒரு முன்னிரவில் ஒரு சிறிய விளக்கின் வெளிச்சத்தில் டாஸ்மாக் கடை ஒன்றில் நடந்துகொண்டிருந்த கோலாகல வியாபாரத்தைப் பற்றி என் மனைவி வியப்புடன் பேசிக்கொண்டிருந்தாள்.குடியினால் தனது தோழியின் கணவன் அற்பாயுசுவில் போய்விட்டது பற்றி அவள் மிக்க கோபம் கொள்வாள்.வெறுப்படைவாள்.மற்றொரு தோழியின் கணவனும் அதே பாதையில் போய்க்கொண்டிருப்பது பற்றி மிக்க கவலை கொள்வாள்.ஆனால் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் டாஸ்மாக் செழித்து வளர்ந்துகொண்டே வருகிறது.அவ்விளம் செடிக்கு தண்ணீர் ஊற்றி ஊற்றி வளர்த்து கொண்டிருக்கும் குடிமகன்கள் அதன் பழுத்த கனிகளை அரசு அனுபவிக்கத் தருகிறார்கள். தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாக டாஸ்மாக் மாற்றப்பட்டுவிட்டது.டாஸ்மாக் குடிமகன்களுக்கு போதை தருகிறதோ இல்லையோ,அரசுக்கு நல்ல போதையைத் தந்துகொண்டிருக்கிறது.டாஸ்மாக் தரும் செல்வத்தால் மக்களை இலவச போதையில் ஆழ்த்துகிறது அரசு.அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியபோது, ‘எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம்’ என சில குரல்கள் என் காதிலும் விழுந்தன.சுயமரியாதை மக்களை எட்டிப் பார்க்கும் தருணங்களில் அவ்வித எதிர்ப்பு ஒலி கிளம்பும்.உடனே அதுவும் நின்றுவிடும்.பெரியாரோடு சுயமரியாதையைத் தொலைத்து நெடுநாட்களாகிவிட்டது. இலவச தொலைக்காட்சிப் பெட்டியை வேண்டாம் என நானும் என் நண்பனும் மறுத்தபோது நாங்கள் ஊரோடு ஒத்து வாழத் தெரியாதவர்கள் என்று தூற்றப்பட்டோம்.மக்கள் வாங்கி தங்கள் வீடுகளின் பரண்களில் போட்டு வைத்திருக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி எந்த ஏழைக் குடும்பத்தின் வயிற்றில் அடித்து டாஸ்மாக்கில் சேர்க்கப்பட்ட பணத்தில் வாங்கியதோ?இல்லாதவர்கள் மட்டும் அதைப் பெற்றிருப்பார்களானால் டாஸ்மாக் வருமானம் அரசுக்கு தேவைப்பட்டிருக்காது.இல்லாதவர்கள் என்பவர்களை வரையறுக்க,அவர்களைக் கண்டுபிடிக்க அரசு இயந்திரத்தால் முடியாதா என்ன?டாஸ்மாக் போதைபணம் இருப்பதற்காக நடுத்தரவர்க்கத்து மக்களுக்குக் கூட மிக்ஸியையும்,கிரைண்டரையும்,மின்விசிறியையும் அரசு கொடுக்குமானால் அது அறமற்ற அரசாகத்தான் இருக்கமுடியும். ஒவ்வொரு ஊரிலும் 10 பேர் ஒன்றிணைந்து இலவசங்களை மறுத்தால் இலவசத்திட்டங்களின் பயன்பாடுகளை உண்மையான ஏழைகளுக்கு மட்டும் குறுக்கிக் கொள்ள அரசு முயற்சிகள் எடுக்கும்.இலவசங்களை கைநீட்டிப் பெறும்போது நம் வீட்டிற்குப் பக்கத்தில் சாலை போடும்போதும்,தண்ணீர் தொட்டிகள் கட்டும்போதும் அப்பணிகள் ஊழல் இல்லாமல் திட்டத்தின் முழுபணமும் சரியாக செலவு செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கும் அருகதையை நாம் இழந்துவிடுவோம்.
நமது நாட்டில் அரசியல்வாதிகளின்,ஆட்சியாளர்களின் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் தனிநபர் தாக்குதல்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அந்நடவடிக்கைகளில் கருத்து சுதந்திரங்களும்,தனிநபர் மனித உரிமைகளும் அப்பட்டமாக மீறப்படுகின்றன.100 க்கு 30 பேர் வாக்களித்து 10 பேரின் வாக்குகளை மட்டுமே பெற்றுகூட ஒருவர் 100 பேருக்குமான மக்கட் பிரதிநிதியாகிவிடுவதுதான் நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சோகம்.தேர்ந்தெடுத்த மக்கட்பிரதிநிதிகளை 5 வருடங்கள் வரை ஒன்றுமே செய்யமுடியாது என்னும் நிலைமையினால் நமது மாநில அரசுகளும்,மத்திய அரசும் சில வேளைகளில் பாசிசத்துக்கும் மேலான இஸங்களோடு செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை மத்திய அமைச்சரவையிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டதை விமர்சித்து தனக்கு வந்த கார்ட்டூன் ஒன்றை தனது நண்பர்களுக்கு ஃபார்வேட் செய்த ஜாதவ்பூர் பல்கலைப் பேராசிரியர் மஹாபத்ரா மேற்குவங்க அரசால் கைது செய்யப்பட்டு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கவும் பட்டிருக்கிறார்.34 ஆண்டுகள் கழித்து இடதுசாரிகள் பெற்றெடுத்த பெயரை ஆட்சிக்கு வந்து 34 வாரங்களிலேயே மம்தா பெற்றிருக்கிறார்.பத்திரிகைகளில் வரும் கார்டூன்களும்,கருத்துப்படங்களுமே ஒரு நாட்டின் கருத்து சுதந்திரத்தை பறைசாற்றும்.மதியின் கார்டூன்களை ரசிக்காதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை.வீரியமிக்க ஒரு கட்டுரை சாதிக்காததை ஒரு கார்டூன் சாதித்துவிடும்.மேற்குவங்கப் பேராசிரியரின் மீதான தாக்குதலின்மூலம் சில ஆயிரம் பேர் மட்டுமே பார்த்திருக்கவேண்டிய அக்கேலிப்படத்தை நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் பார்க்கக்கூடியதாக மாற்றி தன் புகழை மம்தா பரப்பியிருக்கிறார்.அரசியலில் பலவருடங்கள் அனுபவமிருந்தாலும் இதுபோன்ற கத்துக்குட்டி வேலைகளின்மூலம் தானும் ஒரு சராசரிதான் என்பதை மம்தா வெளிப்படுத்தியிருக்கிறார். சி.பி.எம்.கட்சித்தொண்டர்களுடன் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் யாரும் பேசக்கூடாது,அவர்களது திருமண நிகழ்ச்சிக்கு போகக்கூடாது,டீக்கடையில் சந்தித்தால்கூட அவர்களுடன் அரட்டை அடிக்கக் கூடாது என்றெல்லாம் அக்கட்சியின் அமைச்சர் ஒருவர் பத்வா விதித்திருக்கிறார்.கேட்டுக்கொண்டிருக்கும் தொண்டர்கள் கைதட்டுகிறார்கள்.ஹிட்லர் ஜெர்மனியில் நடத்திய மூளைச்சலவையும்,இன வெறுப்புப் பிரச்சாரமும்தான் என் கண் முன் வந்தது.
இலங்கை எத்திசையில் பயணிக்கிறது என்பதில் யாருக்கும் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இல்லை. வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் கொழும்புவிலும்,வடக்கு-கிழக்கு பகுதிகளிலும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. காணாமல் போன பல நூறு அப்பாவி தமிழ்மக்களும்,சில முஸ்லீம்களும்,சிங்களவர்களும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.தமிழ் உதிரிக்குழுக்கள் நடத்தும் ஆள்கடத்தல் வேட்டை சொல்லில் அடங்காது.இதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாயை அவர்கள் சம்பாதிக்கின்றனர்.இன்னமும் உள்நாட்டு அகதிகளாக அடைத்துவைக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வாழும் மானிக் முகாமைப் பார்வையிடப் போவதாக லேட்டஸ்ட் இந்திய தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள சுதர்சன் நாச்சியப்பன் கூறுகிறார்.40000,50000 வீடுகள் கட்டித்தரப்படும் என்றெல்லாம் இந்தியா பண உதவி செய்ததே! அதெல்லாம் என்னவாயிற்று?என இலங்கை அரசிடம் கேட்கமட்டும் யாருக்கும் வக்கில்லை. வடக்கிலும்,கிழக்கிலும் ஏராளமான புத்த விகாரைகள் அமைக்கப்பட்டுவிட்டன. வட-கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்துவிட்டன. ராஜபக்சவின் விருந்தில் கை நனைக்கும் இந்தியாவின் ராஜதந்திரம் மட்டும் எப்போதும் தோல்வியே அடைகிறது.
(அம்ருதா,மே,2012)