மத தேசியங்களும்,பன்முக இலக்கியங்களும்
எழுத்தின் அதிகாரம் வலியது.ஆற்றல் மிக்கது.நேரடியாகத் தாக்கும் வலிமை பெற்றது.அத்தகைய மொழியின் வலிமையை பல்மடங்கு பெருக்கும் ஆற்றல் அப்துல்கலாம் அவர்களுக்கு உண்டு.துறவு வாழ்வு நடத்தி,தோற்றத்தில் ரிஷியை ஒத்துள்ள கலாமின் மொழி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவும் சர்வவல்லமை படைத்தவை. இளம் வயதில் அவரைத் தரிசிப்பதற்காக நண்பர்களுடன் மைசூருக்கு நெடும்பயணம் போனதுண்டு.அன்றைக்கு எனக்கு அவர் சூஃபி ஞானியாகத் தோன்றினார்.குடியரசுத் தலைவர் என்ற மகுடத்தை அப்போது அவர் அணிந்திருக்கவில்லை.அன்று அவர் ராமகிருஷ்ண மடத்தில் மிகச் சிறந்த உரை ஒன்றை நிகழ்த்தினார்.இந்துத் துறவிகளின் மீது எப்போதும் அவருக்கு அலாதியானப் பிரியம் உண்டு.இந்து மதத்தின் மீதான அவரின் ஈடுபாட்டிற்குக் காரணம் அவர் பிறந்த ஊர் ராமேஸ்வரம் என்பதாகக் கூட இருக்கலாம்.
கடந்து போன மாதம் ஒன்றில் விஞ்ஞானிகள்,வரலாற்றறிஞர்கள் மற்றும் வேதவிற்பன்னர்கள் பங்கேற்ற மகாநாடு ஒன்று டில்லியில் நடைபெற்றது.கிறித்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில்(2000 BC)நடைபெற்றதாகக் கூறப்படும் நிகழ்வுகளை விஞ்ஞானப் பூர்வமாக ஆராயும் அந்த மாநாட்டில் கலாம் இவ்வாறு பேசுகிறார்: “ராமனோடும்,ராமாயணத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிற நிகழ்வுகளை உங்களது ஆய்வுகள் உண்மை என நிரூபிக்குமானால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.ஏனென்றால் ராமாயணத்தோடு மிகவும் நெருங்கியத் தொடர்புடைய ராமேசுவரத்தில்தான் நான் பிறந்தேன்.அங்கிருக்கும் ராமநாதசுவாமிக் கோயிலின் லிங்கத்தை ராமன் தரிசித்திருக்கிறார்.ராமாயணத்தை அறிவியல் பூர்வமாக ஆராய்வதில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.இலங்கையின் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் ராமனும்,அனுமனும்,லட்சுமணனும்,சுக்ரீவனும்,வானரசேனங்களும் எவ்விடத்தில் தங்களது தளங்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை அறிவியல்பூர்வமாக நிறுவினால் மிக்க மகிழ்ச்சி அடைந்த மனிதனாக நான் இருப்பேன்”
அக்னிச்சிறகுகளிலிருந்து அக்னிக்குண்டத்தின் பிழம்பாக மாறிவிட்ட கலாமின் எழுத்துகள்,பேச்சுகள் அக்னி வெள்ளமாகப் பாய ஆரம்பித்துவிட்டன.கலாமைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கிற பிம்பம் அவரது பேச்சின் ஆழத்தில் புதைந்துக் கிடக்கும் உண்மையை நாம் உணராமல் செய்துவிடுகிறது.அதனால் அவரது சொற்கள் இளம் தலைமுறையினரை மெய்யானக் கனவுலகிற்குள் அழைத்துச் சென்றுவிடுகின்றன.மெய்யான கனவை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்,சுய உணர்வுக்கு வரும்வரை.
ராமாயணம் பற்றிய கலாமின் பேச்சுக்களை மீண்டும் படிக்கும்போது சமீபத்தில் தில்லிப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட பேராசிரியர் ராமனுஜத்தின் ‘முன்னூறு ராமாயணங்கள்’ என்றக் கட்டுரை தான் நினைவுக்கு வந்தது.இந்திய நாட்டின் கலாச்சாரத்தை,பண்பாட்டை ஒற்றையாகத்திரிக்க காலம் காலமாகச் செய்யப்படும் முயற்சிகளின் அடுத்தக்கட்டம்தான் இப்பாடத்தை நீக்கிய நடவடிக்கை.ராமாயணம்,ராமன்,சீதை,அனுமன்,லட்சுமணன் இவர்களை/இவைகளை தூய இறைமைகளாகச் சித்தரிப்பதைத் தாண்டியும் இவர்கள்/இவைகள் பற்றிய மாற்றுக்கருத்துகளும்,மாற்றுப்பார்வைகளும் இந்தக் கட்டுரையில் இருக்கும்போது அதை எப்படி பல்கலைக்கழகத்தில் நீடித்திருக்க அனுமதிப்பார்கள்? இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பாகங்களிலும் வழங்கிவரும் ராமாயணத்தின் பல்வேறு வடிவங்களை,கதைகளை,கதை மாந்தர்களின் மாறுபட்ட குணாதிசயங்களை நாம் இதுவரை எண்ணியுள்ளதற்கு மாறுபட்ட முறையில் கட்டுரையாசிரியர் விவரிக்கிறார்.ராமாயணம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த,ஈடுபட்டுள்ள பல்வேறு இலக்கிய,வரலாற்று அறிஞர்களின் கருத்துகளை,ஆய்வுகளை அவர் மேற்கோள் காட்டுகிறார்.வால்மீகி சொன்னது போலவோ,கம்பன் பாடியது போலவோ மட்டும் ராமாயணம் இல்லை.சமண மதத்திலும் ராமாயணக் கதைகள்,வடிவங்கள் உண்டு.அதில் சீதை ராவணனின் மகளாகச் சித்தரிக்கப்படுகிறார்.ராவணன் பத்துத் தலை அரக்கன் அல்ல.அவன் ஒரு மிகச் சிறந்த சமணன்.சமஸ்கிருதத்தில் மட்டும் பல்வேறு உருவங்களில்(இதிகாசமாக,காவியமாக,பாடல் தொகுப்பாக,புராணங்களாக இன்னும் எண்ணற்றவை)ஏறத்தாழ 25 அல்லது அதற்கும் மேற்பட்ட ராமாயணங்கள் இருக்கின்றன என்பதை கட்டுரை உறுதி செய்கிறது. 16-ம் நூற்றாண்டைச் சார்ந்த அத்யாத்மா ராமாயணம் என்றப் பிற்கால ராமாயணத்தில் காணப்படும் சுவைமிகு நிகழ்வு ஒன்றை பேராசிரியர் ராமானுஜம் நம்முடைய கவனத்துக்கு உட்படுத்துகிறார்:’ராமர் காட்டுக்குப் போகவேண்டிய தருணத்தில் சீதை உடன்வரவேண்டாம் எனத் தடுக்கிறார்.சீதை கேட்கவில்லை.நானும் வருவேன் எனப் பிடிவாதம் செய்கிறாள்.ராமனும் விடாப்பிடியாக மறுக்கவே சீதை சொல்கிறாள்:இதற்கு முன்னர் எண்ணற்ற ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.அதில் எதிலாவது சீதை காட்டிற்குள் செல்லவில்லை என்பதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?சீதையின் வாதம் வெல்லுகிறது.சீதையும் காட்டிற்குச் செல்கிறாள்’. சீதையின் பிறப்பு ரகசியம் குறித்து நிலவும் பல்வேறு கதைகளையும் பேராசிரியர் நமக்குத் தருகிறார். கன்னட ராமாயணத்தில் ராவணனின் மகளாக,ராவணனே தனது மூக்கின் வழியாகப் பெற்றெடுக்கும் சீதையை நமக்குக் காட்டும் பேராசிரியர்,சமஸ்கிருதப் பிரதிகளில் உள்ள ராமாயணத்தில் ஜனகன்,ஏர் உழப்பட்ட நிலத்திலிருந்து சீதையைக் கண்டெடுத்ததாக உள்ளது எனச் சொல்கிறார்.
புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் H.D.சங்காலியா,1961-ல் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் வெளியிட்ட ‘Evening Talks with Sri Aurobindo’ என்ற நூலை மேற்கோள்காட்டி,’ராமர் ஒரு வரலாற்றுப் பாத்திரம் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை’என அரவிந்தர் தனது சீடர் ஒருவரிடம் கூறுவதைக் குறிப்பிடுகிறார்.த.பரமசிவ அய்யர் என்பவர் ராமாயணத்தின் வரலாறு மற்றும் புவியியலை ஆய்வு செய்து 1940-ம் ஆண்டில் எழுதிய நூலின் பெயர்’Ramayana and Lanka’.அப்போதைய பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நுண்விளக்கப் படத்தாள்களைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்படும் பகுதிகள் குறித்த தனது ஆய்வை மேற்கொண்டு இந்நூலை எழுதியுள்ளார். ராவணன் ஒரு கோண்டு பழங்குடி இனத்தலைவன் எனத் தெரிவிக்கும் பரமசிவ அய்யர்,கோண்டு பழங்குடியினருக்கும்,ஆரியர்களுக்கும் இடையே நடைபெற்றப் போராட்டமே ராமாயணம் என்பதை தெளிவுபடுத்துவதோடு ராவணனின் லங்காவும்,இன்றைய ஸ்ரீலங்காவும் ஒன்றல்ல.ராவணனின் லங்கா என்ற ஒன்று இருந்திருக்குமானால் அது மத்தியப்பிரதேசம்,ஜபல்பூருக்கு அருகேதான் இருந்திருக்கும் என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைக்கிறார்.தனது வாதங்களுக்கு ஜபல்பூர் கெஜட்டை மேற்கோள் காட்டுகிறார்.
சீதையின் பிறப்பு,சீதையின் திருமணம்,சீதையின் வனவாசம்,சீதை சிறைப்படல்,சீதையை அனுமன் காப்பாற்றுதல்,ராமனும்,சீதையும் ஒன்றிணைதல்,இருவரும் அயோத்தி(யா)திரும்புதல்,சீதை சிதையேறுதல்,சீதை காட்டிற்கு அனுப்பப்படுதல்,லவ-குச குழந்தைகள்,குழந்தைகளுக்கும்,ராமனின் படைகளுக்கும் இடையே நடக்கும் சண்டை,இறுதியில் சுபம் வரை ராமாயணத்தின் கதை என நம் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும் சித்திரம் என்பது மொழிக்கு மொழி,நாட்டுக்கு நாடு,மதத்துக்கு மதம் வேறுபட்டுக் கிடக்கும்போது,ராமாயணத்தின் ஒற்றைப் பரிமாணத்தை மட்டும் உண்மை என நம்பி,ராமாயணம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிகழ்விடங்களை ஆராயவேண்டும்,அவை உண்மையாக இருக்குமானால் நான் பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்றெல்லாம் ஒரு புகழ்மிக்க அறிவியலாளர் அப்துல்கலாம் அவர்கள் பேசும்போது பேராசிரியர் ராமானுஜம் தனது கட்டுரையின் இறுதியில் அமைத்துள்ள நகைச்சுவைக் கதைதான் நினைவுக்கு வருகிறது: “ஒரு பண்பட்ட,புத்திசாலி மனைவிக்கு பண்பற்ற ஒருவன் கணவனாக வாய்க்கிறான்.தனது கணவனை நாகரிகம் மிக்கவனாக மாற்ற எண்ணும் மனைவிக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.ராமாயணப் பிரசங்கம் செய்ய கிராமத்திற்கு ஒரு பெரியவர் வந்திருக்கிறார்.அப்பிரசங்கத்தைக் கேட்க தன் கணவனை அனுப்பவேண்டும்,ராமாயணக் கதைகளைக் கேட்பதன்மூலம் அவன் பண்பட்டவனாக மாறமுடியும் என உறுதி செய்துகொள்கிறாள்.முதல்நாள் பிரசங்கத்திற்கு தன் கணவனை அனுப்புகிறாள். கணவனோ கடைசி வரிசையில் அமர்ந்து சிறிது நேரத்தில் உறங்கிவிடுகிறான்.பிரசங்கம் மறுநாள் அதிகாலை வரை தொடர்கிறது.பிரசங்கம் முடிந்ததும் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்படுகிறது.தூங்கிக்கொண்டிருந்தவன் வாயிலும் இனிப்பு ஊட்டப்படுகிறது.தூங்கி எழுந்தபின்பு வீட்டிற்குச் சென்ற கணவனிடம் ராமாயணக்கதை எப்படி இருந்தது என மனைவி கேட்க,’மிகவும் இனிப்பாக இருந்தது’என அவன் சொல்ல,மனைவி மகிழ்ந்து போனாள். இரண்டாம் நாள் பிரசங்கத்திலும் அவன் தூங்கிப்போய்விட,அவன் மீது வேறொருவன் அமர்ந்து பிரசங்கம் கேட்க,விடிகாலையில் வீட்டிற்குச் சென்ற அவனிடம் கதை பற்றி மனைவி கேட்க,’விடிகாலை ஆக ஆக கனத்துப்போய் விட்டது’ என கணவன் பதில் சொல்ல,ராமாயணக்கதையின் உணர்ச்சி வேகத்தை கணவன் நன்கு புரிந்துகொண்டுவிட்டான் என மனைவி பூரித்துப்போனாள். மூன்றாம் நாள் பிரசங்கத்தின்போது குறட்டைவிட்டு தூங்கிகொண்டிருந்த அவன் வாயில் ஒரு நாய் சிறுநீர் கழித்துவிட்டுச் சென்றது.விடிந்து வீட்டிற்குச் சென்ற கணவனிடம் கதை பற்றி மனைவி கேட்க,’மிகவும் உப்பாக இருந்தது’ என கணவன் பதில் சொல்ல,ஏதோ தவறு நடக்கிறது என எண்ணிய மனைவி விபரம் கேட்க,ஒவ்வொரு நாளும் தான் தூங்கிப்போனது பற்றி கணவன் மனைவியிடம் பகர்ந்தான். மறுநாள் பிரசங்கத்திற்கு கணவனை அழைத்துச்சென்ற மனைவி அவனை முதல் வரிசையில் அமரவைத்து,இரவு முழுவதும் தூங்காமல் இருக்கவேண்டும் எனக் கண்டிப்போடு கூறிவிட்டுச் சென்றாள்.மிகப் பொறுமையாகப் பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்த அவன் கதையில் மிக்க ஈடுபாடு காட்டலானான். ராமனின் மோதிரத்தை வாங்கிக் கொண்டு சீதையைக்காண கடலைத் தாண்டிச் சென்று கொண்டிருந்த அனுமனைப் பற்றி பிரசங்கர் அப்போது சொல்லிக்கொண்டிருந்தார்.அனுமன் கொண்டு சென்ற மோதிரம் திடீரென கடலில் விழுந்துவிட்டது.கடலில் விழுந்த மோதிரத்தைத் தேடி சீதையிடம் உடன் கொண்டுசெல்லவேண்டும்.என்ன செய்வது? எனப் பிரசங்கப் பெரியவர் சோகமாகக் கேட்க,முன்வரிசையில் அமர்ந்திருந்த கணவன்,’ அனுமன் கவலைப்படாதே,நான் அதைத் தேடித் தருகிறேன்’என்று மேல்நோக்கிக் குதித்தான், கடலுக்குள் சென்று மோதிரத்தை எடுத்து வந்து பிரசங்கரிடம் நீட்டினான்.இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஊர்மக்கள் இவன் ஒரு அசகாய சக்தி படைத்த ராம,அனுமன் பக்தன் என வியந்து போற்றினர்.அவனும் அப்பட்டத்தை நிலைப்படுத்திக்கொண்டான்.மக்களின் மரியாதையைப் பெற்றான்.மனைவியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள்”.ராமாயணக் கதைகளைக் கூர்ந்து கேட்கும்போதும்,கவனிக்கும்போதும் என்ன நடக்கும் என்பதை இக்கதையின் மூலம் பேராசிரியர் ராமானுஜம் சுவையாகச் சித்தரிக்கிறார்.
இப்போது கலாமின் பேச்சுக்கு வருவோம்.
அப்துல்கலாம் யாரிடமோ தீவிரமாக ராமாயணக் கதையைக் கேட்டிருக்கிறார்.
ராமாயணம் பற்றியும்,அதன் வரலாற்று நிகழ்வுகள்,போக்குகள்,அதன் பன்முகத்தன்மை பற்றியெல்லாம் ஆய்வு செய்யும் பொறுப்பை பேராசிரியர் ராமானுஜம் போன்ற வரலாற்றறிஞர்களிடம் விட்டுவிடுவதுதான் எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
சுதந்திரக்கருத்துகள் வெளியிடப்படும் தளங்களையும்,வெளியிடும் மானுடர்களையும் இன்று அரசு எந்திரம் காலிசெய்து கொண்டே வருகிறது.அரசுக்கும்,அரசியல்வாதிகளுக்கும் பிரச்னைகளின் மூலங்கள் பற்றி விளங்கியிருக்கின்றன.எனவேதான் பிரச்னைகள் எப்போதும் பாதுகாக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.சிந்தனையாளர்களின்,எழுத்தாளர்களின் சொற்களும்,எழுத்துகளும் மட்டும்தான் நாட்டிற்கு ஒளியைத் தரும்.ஆனால் அரசும் அதன் எந்திரங்களும் இருளை மட்டுமே விரும்புகின்றன. தங்களின் அதிகாரம் மிக்க மொழிகளை மக்களின் மீது திணிக்கின்றன.கருத்து சுதந்திரத்தின் நீரோடை நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வற்றாத ஜீவநதியாக ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும்.எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரினுக்கு அளிக்கப்பட்டு வந்த தார்மிக ஆதரவு அரசால் விலக்கிக் கொள்ளப்பட்டு அவர் அநாதையாக்கப்பட்டார்.இடதுசாரிகளும்கூட அவருக்கான அடைக்கலத்தை விலக்கிக்கொண்டனர்.’லஜ்ஜா’ நாவலை அவர் எழுதினார்.பாபர் மசூதி இடிக்கப்பட்டு,அது நொறுங்கி வீழ்ந்தபின்னர் வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அதில் அவர் ஆவணப்படுத்தியிருந்தார். ‘டிசம்பர் 6,1992 அன்று பாரதீய ஜனதாக் கட்சி வங்காளதேசத்தின் 10 லட்சம் இந்துக்களை முஸ்லீம் வெறியர்களிடம் ஒப்படைத்துவிட்டது’ எனக் காட்டமாகப் பதிவு செய்தார்.ஆனால் அறமற்ற முறையில் லஜ்ஜா நாவலை தனதுப் பிரச்சாரத்திற்கு அக்கட்சி பயன்படுத்திக்கொண்டது என்பது தனிக்கதை.’குரான் மாற்றியெழுதப்படவேண்டும் என்று தான் சொன்னதாகச் சொல்லப்பட்டவை உண்மை அல்ல,நான் சொன்னது இஸ்லாமிய ஷரிய சட்டங்களைத்தான்’ என அவர் திரும்ப திரும்பச் சொன்னாலும் அவருக்குக் காது கொடுத்துக் கேட்போர் யாரும் இல்லை. அடிப்படைவாதிகளின் சர்க்கரைப் பொங்கலான ‘பாத்வா’தஸ்லிமாவுக்குப் பரிமாறப்பட்டது.வங்கதேசத்தைத் துறந்த அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.ஒருமுறை ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தாக்கப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது.ஹைதராபாத் மக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்குச் சற்றும் குறைந்ததல்ல இந்நிகழ்வு.நாடு தலை குனிந்தது.வெட்கித்தது.பின் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் அவர் இந்தியாவைவிட்டுப் பிரிந்து சென்றார்.எழுத்தாளர்களுக்கான,சுதந்திரக்கருத்துக்களுக்கான சரணாலயமாக இருந்திருக்கவேண்டிய இந்தியா மிருகக்காட்சி சாலையின் விலங்குகளின் கூடாரமாக மாறிப்போனது.
சமீபத்திய ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொள்ளமுடியாமல் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தடுக்கப்பட்டிருக்கிறார்.’சாத்தானின் கவிதைகள்’சிறந்த நூலா,ருஷ்டி சிறந்த எழுத்தாளரா என்பதெல்லாம் இருக்கட்டும்.சல்மான் ருஷ்டியினால் இஸ்லாம் மதத்திற்கே ஆபத்து என்பதுபோல சில இஸ்லாமியர்கள் நடத்தும் போராட்டமும் சரி,இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குப் பயந்து சல்மானின் வருகைக்காக சில அடிப்படைப் பாதுகாப்பு வசதிகளைச் செய்ய மறுத்த,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அதைரியப்படுத்திய மத்திய,மாநில அரசுகளின் மறைமுக நடவடிக்கைகளும் சரி கருத்து சுதந்திரத்தைப் பேணிகாக்க விரும்பும் மனிதர்களுக்கு மிகுந்த கவலையைத் தந்துள்ளது.
ஒரு எழுத்தாளன் தனது நுண்ணுணர்வைப் பலதளங்களில் பிரதிபலிக்கச் செய்து மக்களுக்காக ஒரு படைப்பை உருவாக்குகிறான்.உண்மையானப் படைப்பு மக்களைத் தாக்குகிறது.இடியென அவர்கள் மீது இறங்குகிறது.சமகாலக் கருத்துகளைப் புரட்டிப் போடுகிறது.மதங்கள் கட்டமைத்துக்கொடுத்திருக்கிற கருத்துகளையும்கூட அது கேள்விக்கு உட்படுத்துகிறது.தஸ்லிமாவின் லஜ்ஜா இந்துக்களின் மீதான இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தாக்குதல்களை அம்பலப்படுத்தியது.அவரது கவிதைகளில் பெரும்பாலானவை பாலியல் சார்ந்தவைகளாக இருந்தபோதிலும் தஸ்லிமா அனுபவித்த இன்னல்களையும்,அவருக்கு ஏற்பட்ட அவமானங்களையும் அது பிரதிபலிக்கிறது.தனது நாட்டின் சக எழுத்தாளர்கள் கூட தன் உடலின்மீது ஏற்படுத்தியுள்ள காமக்காயங்களை தனது சுயசரிதைப் புத்தகங்களில் தோலுரித்துக்காட்டுகிறார்.அதனால்தான் அவர் தனது நாட்டிலிருந்து துரத்தப்பட்டார்.
மதத்தின் பெயரால் ஈரானியத் தலைவர் அயதுல்லா கொமேனி சல்மான் ருஷ்டிக்கு மரணதண்டனை அறிவித்தார்.ராமாயணத்தின் புனிதத்தை களங்கப்படுத்தியதாக பேராசிரியர் ராமானுஜத்தின் கட்டுரை தில்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டது.ஒரு வகுப்பின் தேர்வு வினாத்தாளில் முகம்மது என்றப் பெயரை தவறான இடத்தில் பயன்படுத்தியதாக ஆசிரியர் ஜோசப்பின் கையை கேரளாவின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இயக்கத்தவர்கள் வெட்டி எடுத்தார்கள்.பால்தாக்கரேயை அவதூறு செய்கிறது எனச்சொல்லி ரோஹிண்டனின் ‘Such a Long Journey’ என்றப் பாடம் மும்பைப் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டது.இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம்.
“சுத்தமான,கலப்பற்ற இனம் அல்லது தேசியம் என்ற ஒன்று இல்லை.அப்படி ஒன்று இருக்கமுடியுமானால் அதன் எல்லைகளும் கற்பனைகளும் தாண்டப்படக்கூடிய ஒன்றாகவே இருக்கும்.ஆக தேசியமும்,இலக்கியமும் இயல்பாகவே எதிரெதிரானவைதாம்” என்றார் போர்ஹே.அதாவது இந்து தேசியமும்,இஸ்லாமிய தேசியமும் மக்களின் மகத்தான இலக்கிய முயற்சிகளுக்கு எதிரெதிரானவையாகத்தான் இருக்கும்.எனவேதான் இவைகள் செழுமையான பன்முகத் தேசியத்தை எப்போதும் ஏற்பதில்லை.
(தீராநதி, மார்ச் 2012)