மதுவெனும் அரக்கன்
இன்றைக்கும் அந்தத் துக்கச்செய்தியை நான் பெற்றேன்.என்னுடன் பணியில் சேர்ந்த ஒரு பெண்ணின் கணவர் குடிநோயினால் மரணமடைந்துவிட்டார்.எங்கெங்கு நோக்கினும் குடிநோய் குறித்த செய்திகளாகவே உள்ளன.இது ஒரு தொடர்கதையாக நீண்டுகொண்டே செல்கிறது.முன்பெல்லாம் எப்போதாவது நடந்தது. இப்போது அடிக்கடி நிகழ்கிறது.கல்லீரலும்,வயிறும் உப்பியும்,வீங்கியும் விடுகிறது.தெரிந்த பெண்ணின் கணவர்,நண்பர்,அலுவலக ஊழியர்,மனைவியின் தோழியின் கணவர்,நண்பரின் நண்பர்,அத்தை மகன்,பெரியப்பா மகன் இப்படியாக துக்கச்செய்திகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.குடியினால் சிதிலமடைந்த இவர்களின் வீடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் அவ்வீட்டில் குடிகொண்டிருக்கும் துக்கத்தின் ஆழத்தை என்னால் அனுமானிக்க முடிகிறதே தவிர முழுவதும் உணரமுடியவில்லை. ஒவ்வொருமுறையும் இத்துக்க செய்தி என்னைத் தாக்கும்போதெல்லாம் தவறாமல் என் நினைவுக்கு வருபவர்கள் என் குடிகார உறவினர்கள் இருவர்.ஒருவர் குடித்து,குடித்து திருமணவாய்ப்பை இழந்து விரைவிலேயே செத்துப் போனவர்.இன்னொருவர் தன் பழக்கத்தை தன் மகனுக்கும் தெரிந்தோ,தெரியாமலோ தொற்றிவிட்டவர்.இன்றைக்கு அம்மகன் ஒரு தேர்ந்த,முழுநேர குடிகாரர்.அம்மகனுக்கும் இப்போது 13 வயதில் ஒரு மகனிருக்கிறார்.எனக்கு பயமாக இருக்கிறது.
சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் திரையரங்கத்திற்கு சினிமாவிற்குச் சென்ற அனுபவங்கள் நன்றாக நினைவிருக்கிறது.அத்திரையரங்கத்திற்கு எங்கள் வீட்டிலிருந்து குறுக்காகத்தான் செல்லவேண்டும்.பள்ளிக்கூட மைதானம்,குளம்,மாதாகோவில் தாண்டியவுடன் தண்டவாளத்தைக் கடப்பதற்கு முன்னர் ஒரு சாராயக்கடையையும் கடந்தாகவேண்டும்.அது சற்று ஒதுக்குப்புறமாகத்தான் இருக்கும்.ஒவ்வொரு தடவை அதைக் கடந்து செல்லும்போதும் என்னுடைய ஓரக்கண்ணால் அக்கடையைப் பார்ப்பேன்.இரண்டு அல்லது மூன்று குடிமகன்கள் அங்கு நின்றுகொண்டிருப்பார்கள்.தாடியும்,மீசையுமாக,ஒடிசலான அல்லது தடியான தேகத்துடன் அவர்கள் போதைக்காட்சி தருவார்கள்.சிறுவனாக இருந்தபோது சாராயக்கடை எனக்குள் ஏற்படுத்தியிருந்த பிம்பங்கள் இவர்கள்தான்.இம்மனிதர்களை கடைத்தெருக்களில் பார்க்க நேரிடும்போதெல்லாம் எனக்குள் ஒருவித பயமும்,வெறுப்பும் தொற்றிக்கொள்ளும்.விரைவாக அவர்களைக் கடந்துசென்றுவிட வேண்டும் என்று வேகமாக நடப்பேன். இன்னும் சில ஆண்டுகள் கழித்து தந்தையின் கடைக்கு அடிக்கடி செல்லும்போதெல்லாம் ஆற்றிற்கு அக்கரையில் “சாராயக்கடை” பெயர்ப்பலகை பளிச்சென்று கண்ணுக்குத் தென்படும்.மாலைவேளைகளில் அங்கு வரும் குடிமகன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். குடிப்பழக்கம் அங்கொன்றும்,இங்கொன்றுமாக அப்போது இருந்தது.இன்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.இப்போதெல்லாம் நமது இளைஞர்கள் எதற்கும்,கொஞ்சமும் வெட்கப்படுவது கிடையாது.மதுவை திறந்தவெளிகளில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க மடக்கென்றுக் குடிக்கிறார்கள்.மதுவின் வாசனையறியாத கடந்த தலைமுறையின் பெரும்பகுதி இத்தலைமுறையை அதிர்ச்சியோடும்,வேதனையோடும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.என்ன செய்யப்போகிறோம் என்று கைபிசைகிறார்கள்.
சமீபத்தில் மதுவுக்கெதிரான ஒரு கலந்துரையாடலை நண்பர்கள் மத்தியில் நடத்தினோம்.பெண்களும் கலந்துகொண்டனர்.பெரும்பாலானவர்கள் விதவைகள்.அவர்கள் கூட்டத்தில் பேசும்போது குடியினால் தங்கள் குடும்பம் பட்ட வேதனைகளையும்,இழப்புகளையும் எடுத்துரைத்ததோடு மதுவை எதிர்த்துப் போராட உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
ஆனால் காலம் கடந்து சென்றுகொண்டிருக்கிறது.நமது கண்முன்னே நம்முடைய அடுத்த தலைமுறை புதைகுழியில் வீழ்ந்துகொண்டிருக்கிறது.தந்தையை,தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலையில் இருக்கவேண்டிய மகன் மருத்துவமனையில் கல்லீரல் வீங்கப் படுத்துக்கிடக்கிறான்.பக்கத்தில் அவனது தாயும்,தந்தையும்,மனைவியும் பரிதவித்துக் கிடக்கிறார்கள்.அவனுடைய சிறுகுழந்தைகள் விரைவில் தந்தையை இழக்கப்போகிறோம் என்றப் புரிதலின்றி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.நாட்டை,சமூகத்தை,நட்புகளை,உறவுகளை,குடும்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக இந்தக்குடி சீரழித்துக் கொண்டிருக்கிறது.சந்தோஷமோ,துக்கமோ இன்றைய இளைஞன் மது கேட்கிறான்.மதுக்கடைகளை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறான்.துளி மதுவும் விஷம்தான் என்பதை அவன் உணரவில்லை.போதைக்கும்,மகிழ்ச்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை அவன் உணர்வதில்லை.அவன் உணரும் நேரம் வரும்போது காலம் கடந்துவிட்டிருக்கும். அருகாமைப் பள்ளிகளைப் புறக்கணிக்கும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு அருகாமையிலேயே இருக்கும் மதுபானக்கடைகளை எவருக்கும் பயமின்றி நாடுகிறார்கள்.கல்விக்கண் திறக்கவேண்டிய ஆசிரியர்கள் சிலரும் பாட்டில்களைத் திறக்கிறார்கள்.தங்களது மகள்களையொத்த மாணவியரிடம் தகாது நடக்கிறார்கள்.எல்லாம் குடியின் ஒழுங்கில்,போதையின் கண்காணிப்பில் நடைபெறுகிறது.தந்தை குடிக்கிறார்,மாமா குடிக்கிறார்,சித்தப்பா குடிக்கிறார்,ஆசிரியர் குடிக்கிறார்,பெண்கள் குடித்துவிட்டு நடனமாடுகிறார்கள்,பிடித்த ஹீரோக்கள் குடிக்கிறார்கள்.இவர்களின் வழியில் பாவப்பட்ட மாணவனும் 13 வயதிலேயே மதுவின் மடியில் அடைக்கலமாகிறான்.பிரசவ வலியைக் குறைக்க அந்தக் காலத்தில் மது பெண்களுக்குத் தரப்பட்டிருக்கிறது.இன்று மது பல பெண்களின் கர்ப்பப்பைகளின் திறவுகோளாக மாறி உள்ளது.இது பற்றி கேட்டால் நாம் நாகரிகம் தெரியாதவர்கள்.பழைய கற்காலத்தவர்கள்.பண்பாட்டின் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் என் மகளை அழைத்துக் கொண்டு கடைவீதிக்குச் செல்லும்போது மதுபானக்கடை ஒன்றைக் கடந்து செல்லவேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது.அப்பா இங்கு என்ன இவ்வளவு கூட்டம்?கேட்டாள் மகள்.எல்லோரும் மதுபானம் குடிக்கிறார்கள்.இது மதுபானக்கடை என்றேன்.உடனே மகள் சொன்னாள்.அப்பா அது ஒரு படத்தின் பெயர்.இந்தக் கடைக்கு வேறொரு பெயர் இங்கிலீஸ்ல சொல்லுவாங்கள்ல என்றாள்.மது பற்றிய சித்திரங்கள் எதிர்காலத் தலைமுறையின் மனங்களில் மிகத் தெளிவாகப் படிந்துபோய்விட்டன.
சமீபத்தில் என் ஊருக்குச் சென்றிருந்தேன்.என்னுடைய நண்பனின் பதிமூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவன் வீட்டு வாசலில் அவனுடைய படத்தை ஒரு ஃப்ளக்ஸ் போட்டு வைத்திருந்தார்கள்.மாணவப்பருவத்திலிருந்து ஆரம்பித்திருந்த அவனுடைய குடிப்பழக்கம் காலப்போக்கில் தீவிரமாகி வெவ்வேறு நோய்களும் அவனை முழுமையாக அடிமைப்படுத்தியிருந்தது.அவன் இறந்தபொழுது ஒன்றுமே புரியாமல் விளையாடிக்கொண்டிருந்த அவனுடைய இரண்டு வயது மகள் சில நாட்களுக்கு முன்னர் பெரியவளாகியிருந்தாள்.அவன் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அப்படத்தை ஒருகணம் உற்றுப்பார்த்தேன்.அவன் இறந்த அன்று இன்னொரு நண்பனின் தோளில் முகம் புதைத்து நான் அழுதகாட்சி என் கண்முன்னால் வந்துசென்றது.
(தினமணி, 10.09.2013)