பூமியின் புதிர் மண்டிலங்கள்
என்னதான் மனிதன் அறிவியல், தொழில்நுட்பம் துணைகொண்டு மண்ணிலும், விண்ணிலும் ஆதிக்கம் செலுத்தினாலும், இயற்கை எப்போதுமே அவனுக்குப் புரியாத புதிராகவே முன்சென்றுகொண்டிருக்கிறது. அப்படியான சில புதிர்களைப்பற்றித்தான் இக்கட்டுரையில் பார்க்கிறோம்..
பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle)
மனிதனால் புரிந்துகொள்ளமுடியாமல், புதிராகவே நீடிக்கும் பல இயற்கை நிகழ்வுகள் பூமியெங்கும் விரவிக்கிடக்கின்றன. பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் அப்படி மனிதர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மர்ம முடிச்சுகள் நிறைந்த ஒரு பகுதியாக பெர்முடா முக்கோணத்தைச் ( Bermuda Triangle ) சொல்லலாம். அது, பிசாசு முக்கோணம் (Devil’s triangle) என்றும் அழைக்கப்படுகிறது.
பெர்முடா முக்கோணம் என்பது, அட்லாண்டிக் பெருங்கடலின் வடக்கில் அமைந்த கடற்பரப்பாகும். அந்த முக்கோணத்தின் மூன்று உச்சிகளில் (vertices) ஒன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தெற்கு ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி (Miami) நகரமாகவும், இரண்டாவது ப்யூடோ ரியோ –வின் தலை நகரான சன் ஜுயானும் (San Juan, Puerto Rio), மூன்றாவது உச்சி, கிரேட் பிரிட்டனுக்கு வடக்கில், அந்நாட்டிற்குச் சொந்தமான பெர்முடா (Bermuda) தீவும் ஆகும்.
பெர்முடா முக்கோணத்தை வைத்து ஏராளமான திகிலூட்டும் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 1978-இல் ‘The Bermuda Triangle’ என்னும் ஒரு திரைப்படமும் வெளிவந்து பார்வையாளர்களுக்குத் திகிலூட்டியது. ரேனே கடோனா ஜூனியர் (Rene Cardona Jr) என்பவர் அப்படத்தின் இயக்குநர். ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய இருமொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படம்.
பொதுவாகவே , இயற்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியவில்லை என்னும்போது, அந்தப்பழியை பூமிக்கு வெளியிலிருந்து பறக்கும் தட்டுகளில் வருவதாக நம்பப்படும் அடையாளம் தெரியாதவர்கள் (UFO – Unidentified Flying Objects) மீது போட்டுவிடுவது வழக்கமாக உள்ளது.
அதுபோலவே, பெர்முடா முக்கோணம் எனப்படும் பரந்துவிரிந்த கடற்பரப்பில் பயணிக்கும்போது, கப்பல்களும், விமானங்களும், சுவடே இல்லாமல் காணாமல்போனதன் பின்னணியில், வெளிக்கோள்வாசிகளே இருப்பதாக முதலில் நம்பப்பட்டது. ஆனாலும், அந்த கருதுகோள் புறக்கணிக்கப்பட்டு, வேறுசில அறிவியல் காரணங்கள் முன்வைக்கப்பட்டன.
அவற்றில் ஒன்று, ‘குடா ஆறு’ (Gulf Streem) . மெக்சிகோ வளைகுடாவில் (Gulf of Mexico) புறப்படும் ஒரு குடா ஆறு, , ஃப்ளோரிடா நீரிணையின் (Florida Strait) வழியாகப்பாய்ந்து, வட அட்லாண்டிக் பெருங்கடலை அடைகிறது. சுருக்கமாகச் சொன்னால் அது பெருங்கடலில் பாயும் ஒரு ஆறு. எந்த ஒரு ஆற்றையும்போலவே, அந்த ஆறும் கடலில் மிதக்கும் அத்தனைப் பொருட்களையும் அடித்துச் செல்லும் பண்புகொண்டது. கப்பல்களும், நாவாய்களும் இப்படித்தான் காணாமல் போயிருக்கக்கூடும் என்பது ஒரு பார்வை.
கண்ட மடிப்புகளில் (Continental Shelves) மிகப்பெரிய பரப்பில் படிந்திருக்கும் மீதேன் ஹைட்ரேட் (Methane Hydrate) வெளியிடும் இயற்கை வாயுக்கள் மற்றொரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்த இயற்கை வாயுக்கள், கொதிநிலையில் உருவாகும் குமிழிகளைப்போல, கடல்நீரில் மிகப்பெரிய நீர்க்குமிழிகளை உருவாக்கிவிடுகின்றன. அதனால் ஏற்படும் நுரை (foam), அங்குள்ள கடல்நீரின் அடர்த்தியை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. . அதன் காரணமாக, அந்தப்பகுதியில் அந்த நேரத்தில் பயணிக்கும் கப்பல்கள், முன்னறிவிப்பு இல்லாமலேயே கடலில் மூழ்கிவிடுகின்றன என்பது மற்றொரு அறிவியல் விளக்கம்.
ஆனாலும், அமெரிக்காவைச் சேர்ந்த நிலவள அறிவியல் ஆய்வாளர் ஒருவர், அப்படி ஒரு மீதைல் ஹைட்ரேட் வாயுக்குமிழ் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்டது என்றும் அதன்பிறகு அப்படி ஒரு நிகழ்வு இதுநாள் வரை ஏற்படவில்லை என்றும் கூறுவது அதனை மறுதலிக்கிறது.
பெர்முடா முக்கோணக் கடல்பகுதியின் மீதாக, மூன்றுமணி நேர பயிற்சிக்காக, 14 வீரர்களுடன் புறப்பட்ட அமெரிக்கப் போர்விமானம்-19 (Flight 19), தரைத்தளத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, காணாமல்போனது. 13 பேருடன் அதனைத் தேடிச்சென்ற மற்றொரு கப்பற்படை விமானமும் காணாமல் போனது. எவ்வளவோ தேடியும், அவற்றைப்பற்றிய யாதொரு தடயமும் கிட்டவில்லை.
விமானம் எண் 19-இன் தலைவர் கடைசியாகத் தொடர்புகொண்டபோது, தனது ‘திசைகாட்டி’ (campus) செயலிழந்துவிட்டது என்றும் அதனால் திசை அறியமுடியாத குழப்பத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஏன் திசைகாட்டி செயலிழந்தது என்பதற்குத் தெளிவான விளக்கம் எதுவும் கிடைக்கவில்லை.
பெர்முடா முக்கோணப்பரப்பில் வீசும் பயங்கரமான ஆற்றல்மிகுந்த புயல்காற்றுகளும், மனிதப்பிழைகளும்கூட காரணிகளாக முன்வைக்கப்படுகின்றன. மேலும், பெர்முடா முக்கோணம் என்று சொல்லப்படும் மிகப்பெரிய கடற்பரப்பை ( 1,300,000 ச.கி.மீ. முதல் 3,900,000 ச,கி.மீ வரை) கணக்கில்கொள்ளும்போது, அங்கு நிகழ்ந்திருப்பதாகச் சொல்லப்படும் கப்பல், விமானங்களின் இழப்புகள் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை என்றும் கடல் ஆய்வாளர்களில் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
பெர்முடா முக்கோணத்தைப் பற்றிய செய்திகள், கதைசொல்லிகளால் மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்று ‘ பெர்முடா முக்கோணம் புதிர் அவிழ்க்கப்பட்டது ’ ( Bermuda Triangle Mystery Solved 1975) என்னும் நூலின் ஆசிரியர் லேரி கூஷே (Larry kusche) கூறுவது குறிப்பிடத்தக்கது. இதே லேரி கூஷே தான், ஜப்பான் நாட்டின் டோக்கியொ நகருக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ‘டிராகன் முக்கோணம்’ ( Dragon Triangle) அல்லது ‘பிசாசுக்கடல்’ (Devil’s sea) பற்றியும் அறிந்து சொன்னவர் ஆவார்.
அமைதி மண்டலம் : (Silent Zone)
அட்லாண்டிக் பெருங்கடலின் பெர்முடா முக்கோணம் போலவே, அவிழ்க்கமுடியாப் புதிர்களையும், பல புதிரவிழ்ப்புக் கதைகளையும் கொண்டதாக இருகிறது, மெக்சிகோ நாட்டின் பாலைவனத்தில் உள்ள ஒரு நிலப்பரப்பு.
மெக்சிகோ நாட்டின் போல்சன் (Bolson) நகருக்கு அருகில், மின்தொடர்புகள் துண்டிக்கப்பட்டு,, மின்சாதனங்கள் செயலிழந்து விடுவதாகச் சொல்லப்படும் 50 ச.கி.மீ. பரப்பிலான பாலைவனப்பகுதிதான் ‘அமைதி மண்டலம்’ (Silent Zone) என்று அழைக்கப்படுகிறது. அப்பகுதிக்குக் கிழக்கில் பெரிய மலைத்தொடர் ஒன்றும் காணப்படுகிறது.
அமைதிமண்டலம் என்று குறிப்பிடப்படும் பாலைவனப்பகுதியிலிருந்து, ஏறத்தாழ 40 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஊர்களில் வசிக்கும் மக்கள், இப்பகுதியைப்பற்றி சொல்லப்படும் விநோதமான கதைகளைப்பற்றி அறிந்துவைத்திருக்கிறார்கள்.
கதைகளின் ஆரம்பம் :
1930-ஆம் ஆண்டில் ஒருநாள் ஃப்ரான்சிஸ்கோ சராபியா (Francisco Sarabia) என்னும் விமானி, அந்த பாலைவனப்பகுதி மீது பறந்துகொண்டிருந்தபோது, அவரது ரேடியோ தொடர்புக்கருவியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, அவசரமாகத் தரை இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரது விமானத்தின் வழக்கமான செயல்பாடுகளில் ஏதோவொன்று குறுக்கிட்டு, குழப்பத்தை ஏற்படுத்துவதாக அவர் நம்பினார்.
அதன் காரணமாக, எலக்ட்ரானிக் சாதனங்கள், அந்த குறிப்பிட்ட பகுதியில் செயலிழந்து போவதாகச் சொல்லப்பட்டன. எந்த ஒரு மின்சைகையையும் அனுப்பவும் முடியவில்லை, பெறவும் முடியவில்லை. மின்சைகையே இல்லாத அந்த இடம்தான், ‘அமைதி மண்டலம்’ (silent zone) என்று அழைக்கப்படலானது.
அதன் பிறகு 1964-ஆம் ஆண்டில், ஹேரி டி ல பேனியா (Harry de la Pena) என்னும் பொறியியலாளர், அந்த பாலைவனப்பகுதியின் வழியாக எண்ணை கொண்டுசெல்லும் குழாய்களைப் பதிப்பதற்காக, விமானத்தில் பறந்து நிலப்பரப்பை ஆய்வுசெய்தார். அப்படிப் பறந்து செல்லும் வேளையில், குறிப்பிட்ட பகுதியைக் கடக்கும்வரை, அவரது ரேடியோ தொடர்பு சாதனங்கள் செயலிழந்துவிட்டன என்பதை அவதானித்தார். அவர்தான், அப்பகுதிக்கு, ‘அமைதி மண்டலம்’ (Silent Zone) என்னும் பெயரைச் சூட்டியவர்.
ஆர்வம் காரணமாக, பொறியியலாளர் ஹேரி டி ல பேனியா (Harry de la Pena) ‘அமைதி மண்டலம்’ பற்றி அறிவதற்காக மீண்டும்மீண்டும் அந்த பாலைவனத்தின்மீது பறந்தார். அவருடைய ஆய்விலிருந்து, ‘அமைதி மண்டலம்’ நிலையாக ஓரிடத்தில் காணப்படுவதில்லை என்றும், அது இடம்விட்டுஇடம் நகர்ந்துகொண்டிருப்பதாகவும் சொன்னார்.
அதன்பிறகுதான், ‘அமைதி மண்டலம்’ பற்றி பறக்கும் தட்டில் வரும் வேற்றுலக மனிதர்கள், போலி அறிவியல், சதிக்கோட்பாடு (conspiracy theory) உள்ளிட்ட பல்வேறு கதைகள் பேசப்படலாயின.
அமைதி மண்டலத்தில் விழுந்த அமெரிக்க ராக்கெட்:
பனிப்போர் காலகட்டத்தில், புதிய மெக்சிகோ-வில், ‘ வெண் மணல் ஏவுகணை தளம்’, (White Sand’s Missle Base) விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டுகளை மீண்டும் தரையிறக்கும் சோதனைகளை Athena RTV (Reentry Test Vehicle) என்னும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி செய்துவந்தது.
1970 ஆம் ஆண்டு ஜூலை 11-இல், Athena RTV 123 D ராக்கெட், உடாஹ் பச்சை ஆறு வளாகத்திலிருந்து ஏவப்பட்டது. ( Green River Complex in Utah) .அந்த ராக்கெட்டின் கடைசி அடுக்கில் கோபால்ட்-57 என்னும் கதிர்வீச்சுத்தனிமம் இருந்தது. அந்த கடைசி அடுக்கு, புதிய மெக்சிகோவின் வெண்மணல் பாலைவனத்தில் (White Sands, New Mexico) விழும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திட்டமிடப்பட்டிருந்த இலக்கிலிருந்து, 500 மைல்கள் தள்ளிப்போய், அமைதி மண்டலத்தில் விழுந்துவிட்டது.
அப்படி, கதிர்வீச்சுத்தனிமத்துடன் விழுந்து நொறுங்கிய ராக்கெட்டையும், கதிவீச்சுத்தனிமம் அடைக்கப்பட்டிருந்த குழலையும் கண்டெடுக்க அமேரிக்கா, மெக்சிகோ அரசிடம் அனுமதி வேண்டியது. அனுமதி கொடுத்ததோடு, தனது நாட்டு அதிகாரிகளையும் துணைக்கு அனுப்பியது, மெக்சிகோ அரசு.
அவர்கள், அமைதிமண்டலத்தில் நுழைந்தபோது, அவர்களது தொலைதொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டன. தொலைக்காட்சி மற்றும் செயற்கைக்கோள் சைகைகளும்கூடத் துண்டிக்கப்பட்டுவிட்டன என்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், அமெரிக்க அறிவியிலாளர்கள் அதுபற்றி அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை.
பல வாரங்களின் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அமெரிக்க தேடுதல்குழு கோபால்ட்-57 கதிர்வீச்சுத்தனிமம் அடைக்கப்பட்டிருந்த குழலைக் கண்டுபிடித்தது. அந்தப்பகுதியில் கதிர்வீச்சு நொறுங்கல்களை அகற்றும் பணியையும் செய்தது. அப்பகுதியிலிருந்தத் தாவரங்களையும் சேர்த்து 20 டன் கதிர்வீச்சு மண்ணை அகற்றி, வெண்மணல் பாலைவனத்தில் கொட்டியிருக்கின்றனர்.
அமைதிமண்டலப் பாலைவனப்பகுதில் செறிந்திருக்கும் காந்தத்தாதுக்கள் காரணமான ஆற்றல்மிகு காந்தப்புலம், மின்சைகைகள் இழப்பிற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று இன்றைய ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மெக்சிகன் அரசும், அறிவியல் அமைப்புகளும், அமைதி மண்டலத்தில் அறிவியல்சார்ந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளன. ‘அமைதி மண்டலத்தின்’ புதிரவிழ்ப்பை விடவும் அங்கு காணப்படும் பல்வேறு வகையான தாவரங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறது, அந்நாட்டு அரசு.
31 வகையான தாவர இனங்கள், உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காதவை. பாதுகாக்கப்பட வேண்டிய 75 விலங்குகள் அங்கு உள்ளன.
அமைதி மண்டலத்தின்மீது விமானத்தில் பயணிக்கும்போது, தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததும், தவறுதலாக அமெரிக்க ராக்கெட் அப்பகுதியில் விழுந்ததும், கதிர்வீச்சுக் குழலைத் தேடி அலைந்ததும் ஆகிய நிகழ்வுகளே, அமைதி மண்டலம் பற்றிய பல கட்டுக்கதைகளுக்கு இட்டுச்சென்றன என்று சொல்லப்படுகிறது.
என்றாலும், அப்படிப்பட்ட கற்பனைக் கதைகள், அறிவியல் விளக்கங்களுக்கு முன்னோடியாக அமைந்திருக்கின்றன என்னும் வரலாற்றையும் புறம் தள்ளிவிடமுடியாது என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர், அறிவியல் ஆய்வாளர்கள்.
பூமியில் மரண மண்டிலம்:
ஆப்பிரிக்கக்கண்டத்தில், எதியோப்பியா நாட்டில், டலோல் (Dallol) என்னும் இடத்தில் காணப்படும் நீர்நிலைகளில் ஏராளமாக நீர் இருக்கிறது. ஆனாலும், எந்த உயிரினமும் இல்லை.
டலோல் நிலப்பரப்பில், குளமாக, குட்டையாக நீர் தேங்கியுள்ளது. அப்பகுதியில், நிலத்தடியில் இயற்கையாகவே ஏற்படும் புவிச்சூடு (Hydro-thermal effect) காரணமாக, தேங்கியுள்ள நீரானது, அதிக சூடாகவும், அடர் உப்பாகவும், அடர்மிகு அமிலத்தன்மையுடனும் உள்ளது.
பொதுவாக, சில நுண்ணுயிரிகள் (micro-organisms), அதிகச்சூடு, அதிகக்குளிர் என்று எந்த ஒரு மிகைஎல்லைச் சூழலிலும், தங்களைத் தகவமைத்துக்கொண்டு வாழும் பண்புகொண்டவை. அப்படிப்பட்ட நுண்ணுயிரிகள்கூட, டலோல் புவிச்சூடு நிலப்பரப்பில் உள்ள நீர்நிலைகளில் இல்லை.
டலோல் புவிச்சூடு நிலப்பரப்பு, டனாகில் (Danakil) எரிமலைக் கிண்ணத்தின்மீது (Volconic Crater) அமைந்துள்ளது. அப்பகுதி முழுவதும் உப்பால் நிறைந்துள்ளது. புவிச்சூடு கரணமாக வெளிக்கிளம்பும் விஷவாயுக்கள் (toxic gases) நீரைக் கொதிக்கச் செய்துவிடுகிறது. அதன் காரணமாக, கடுங்குளிர் காலத்தில்கூட, அப்பகுதியில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் (450C) அளவிற்கு உயர்ந்துவிடுகிறது. பூமியிலேயே, டலோல் நிலப்பரப்புத்தான், மிகைசூடான இடமாகும் (hottest place on the Earth)..
மிகவும் துல்லியமான ஆய்வுக்கருவிகளைக்கொண்டு, மிகவும் கவனமாகப் பகுப்பாய்வு செய்ததில், எந்த ஒரு நுண்ணுயிரியும் (microbs) அந்த நீர்நிலைகளில் உயிர்வாழவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, ஃப்ரான்ஸ் நாட்டின் ‘தேசிய அறிவியல் ஆய்வு மையத்தின்’ உயிரியல் ஆய்வாளர் லபாஸ் கார்சியா (Lapaz Garcia) கூறுகிறார். அவர், டலோல் நிலப்பரப்பில் ஆய்வுசெய்த, ஃப்ரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் அறிவியல் கூட்டுக்குழுவின் தலைவரும் ஆவார்.
எந்த ஒர் உயிரினமும் வாழமுடியாத, டலோல் நீர்நிலைகளைக் கொண்ட நிலப்பரப்புத்தான், பூமியின் மரண மண்டிலம் (Earth’s Dead Zone) என்று அழைக்கப்படுகின்றது..
டலோல் மரணமண்டில ஆய்வுமுடிவுகளைக் காரணம்காட்டி, பூமியில் மட்டுமல்ல, வேறு எங்குமே நீர் இருக்கிறது என்பதனாலேயே உயிரும் இருக்கும் என்னும் கோட்பாடு நிராகரிக்கப்படுவதாக, டலோல் ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.
பெருங்கடல் மரணமண்டிலம்: (Ocean Dead Zones)
நிலத்தில் உள்ளது போலவே, பெருங்கடல்களிலும் மரண மண்டிலங்கள் காணப்படுவதாக கடல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிலத்திலிருந்து அதிக அளவிலான பாஸ்பரஸ் (Phosphorus) கடலுக்குச் செல்லுமானால், கடல்நீரில் உள்ள உயிர்வாயுவின் (Oxygen) அளவு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் வாழமுடியாத ‘மரண-மண்டிலங்களை’ (dead zones) உருவாக்கிவிடும். அதனை, நிலப்பரப்புத் தாவரங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன. தாவரங்கள் செழித்து வளர்வதற்குத் தேவையான பாஸ்பரஸ் சத்துக்களை, நிலத்திலிருந்தே பெற்றுக்கொள்வதால், கடலுக்குச் செல்லும் பாஸ்பரஸ் அளவைத் தாவரங்கள் குறைத்துவிடுகின்றன. இது ஒரு இயற்கைச் சமநிலை ஆகும்.
இதற்கு மாறாக, மனிதர்களால், பெருங்கடல்களில் கொட்டப்படும் பல்வேறு வகையானக் கழிவுகளால், கடல்நீர் மாசுபடுகிறது. அந்தக் கடல்மாசு உயர்ந்து உயர்ந்து, அப்பகுதியில் உயிர்வாயு-நீக்கம் (depletion of oxygen) நடைபெறுகிறது
இப்படி உயிர்வாயு குறையும் பகுதியில் வாழமுடியாத சூழல் ஏற்பட்டு, அங்கு வாழ்ந்த உயிரினங்கள், அப்பகுதியை விட்டு வேளியேறி வேறு பகுதிகளுக்குச் சென்றுவிடுகின்றன. அப்படிப்பட்டப் பகுதிகள்தான், ‘பெருங்கடல் மரண மண்டிலங்கள்’ (Ocean Dead Zones )என்று அழைக்கப்படுகின்றன.
பல பத்தாண்டுகளாக, அறிவியலாளர்கள் பெருங்கடல் மரண மண்டிலப்பகுதிகளை, தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர். அந்த ஆய்வுகளிலிருந்து, நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டலக் கடல் பகுதிகளில்தான், இப்படிப்பட்ட மரண மண்டிலங்கள் உருவாகியுள்ளன என்று தெரியவருகிறது.
அதோடு, ஏற்கனவே கண்டறியப்பட்டு, பதிவுசெய்யப்பட்ட மரணமண்டிலங்களை விடவும் பல பத்து மடங்கு எண்ணிக்கையில் புதிதாக பெருங்கடல் மரணமண்டிலங்கள் உருவாகியுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலைகொள்ள வைத்திருக்கிறது. இப்படிப்பட்டச் சூழலிலும், கடலில் கலக்கும் விவசாயக் கழிவுகளையும், கொட்டப்படும் மற்ற கழிவுகளையும் கட்டுப்படுத்துவதன்வழியே, பெருங்கடல் மரணமண்டிலங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முடியும் என்பது சற்று ஆறுதலைத்தருகிறது.