பிளேக் ( கொள்ளை நோய் ) – ஆல்பர் காம்யூ
கடந்த பல நூற்றாண்டுகளாக இவ்வுலகில் போர் ஏற்படுத்திச் சென்ற கோர வடுக்கள் கணக்கிலடங்காதவை. எல்லை, இனம், மொழி, மதம், பண்பாடு, பெண்கள் இப்படி நாடுகளும், சமூகக் குழுக்களும் ஒருவரையொருவர் சண்டையிட்டுக் கொள்ளுவதற்கு காரணங்கள் ஏராளம். இக்காரணங்களுக்கடியில் ஆணவமும், கர்வமும், வெறுப்பும், காமமும், பேராசையும் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. போரை நியாயப்படுத்தக் கூறப்படும் ஒவ்வொரு காரணமும் அப்போரையும், சண்டையையும் மிக நீண்டு கொண்டு செல்லப் போதுமானவையாக இருக்கின்றன.போருக்கு மத்தியில் கர்வம் செழித்து வளருகிறது. அன்பு மண்டியிட்டு மன்றாடுகிறது.
உலகப்போர்களுக்கு முன்னரே இவ்வுலகம் கடும் போரில் சிக்கியுள்ளது. வரலாற்றுக் காலம் தொடக்கம் சென்ற நூற்றாண்டின் உலகப்போர் வரை இவ்வுலகம் ஏராளமான யுத்தங்களைக் கண்டிருக்கிறது. செந்நிறக்குருதி பெருக்கெடுத்து இம்மண்ணை சகதியாக்கிய வரலாற்றை யாரும் மறுக்கமுடியாது. மண்ணுக்கான யுத்தம் இன்னமும் உலகில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இவ்வுலக யுத்தங்களுக்கு மதங்கள் முக்கியக் காரணங்களாக இருந்து வந்திருக்கிறது. மதத்துக்கான மிகச்சிறந்த உணவு வன்முறைதான். ஒரு மதம் செழித்திருக்க அது வேண்டுவது பலிகளை. மனிதர்களை, இனத்தை, மொழியை, குழந்தைகளை, பெண்களை அது பலியாகக் கேட்கிறது. போரும், மதமும் மிகச்சிறந்த துணைவர்கள். ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்பவர்கள். மதங்களின் நாடித்துடிப்பு போர். போர் மட்டுமே. வரலாற்றைக் கூர்ந்து நோக்கும்போது நமக்குத் தெளிவாகப் புலப்படுவது ஒன்றுதான். மதங்களின் வளர்ச்சியில் போர் செழித்து வளருகிறது என்பதுதான். மனிதர்களின் ஆன்ம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய மதங்கள் எல்லாப் போர்களுக்கும் காரணங்களாக இருக்கின்றன. கிளை மதங்களும் எதிர் கிளை மதங்களும் மேலும் மேலும் போர்களை பிரசவித்திருக்கின்றன.
அதிகாரத்தின் விருப்பத்திற்காக நடத்தப்படும் போர்கள் மனித உயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. மனிதகுலம் பெரும் அவலத்தைச் சந்திக்கிறது. அந்த அவலம் ஒரு கொள்ளை நோயை ஒத்தது என்னும் பொருளுக்குத்தான் புகழ்பெற்ற பிரெஞ்ச் எழுத்தாளர் ஆல்பர் காம்யூ வந்து சேர்ந்திருப்பார். இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்திச் சென்ற உளவியல் பாதிப்புகள் ஐரோப்பாவில் மிகக்கடுமையாக இருந்தபொழுதில் காம்யூ தனது எழுத்தின் மூலம் அப்பாதிப்புகளை சரி செய்ய முயன்றார்.
ஆல்பர் காம்யூவை ஒரு இருத்தலியல்வாதியாக, அபத்தவாதியாக நாம் அறிந்திருப்போம். அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை அத்தேசத்தின் விடுதலைப் போராளிகளை சித்திரவதை செய்யாமலாவது இருங்கள் என்று பிரெஞ்ச் அரசாங்கத்திடம் காம்யூ கோரிக்கை வைத்தபோது அவரை ஒரு முட்டாள் என்று அல்ஜீரியாவின் விடுதலைக்குப் போராடிய தேசிய விடுதலை முன்னணியினர் எள்ளி நகையாடியதையும் அறிவோம். மனித இனத்தின் துன்பம் தவிர்க்க அறிஞர்களும், மானுடவாதிகளும் செய்யும் முயற்சிகள் பைத்தியக்காரத்தனமானவைகள் என்று காலம் காலமாக எள்ளி நகையாடப்பட்டு வந்திருக்கிறது. அமைதியும், அடக்கமும் அடிமைகளின் சின்னங்களாகத்தான் மதிக்கப்படுகின்றன. அதிகாரத்திடம் நீங்கள் போடும் கூச்சல்கள் வெறும் வெற்றாகத்தான் முடிந்திருக்கும்.
அந்நியனில் முழு அபத்தவாதியாக பரிமளிக்கும் காம்யூ பிளேக்கில் (பிரெஞ்சிலிருந்து தமிழில் ச.மதனகல்யாணி,ஆனந்தா பதிப்பகம்,புதுச்சேரி) அப்படியல்ல. அது ஒரு நம்பிக்கையூட்டும் நாவல்.இருளின் மத்தியில் வெளிச்சத்தை விதைக்கும் நாவல்.மீண்டும் இருள் வந்து சூழக்கூடும் என்ற நம்பிக்கையின்மையை(நம்பிக்கையின்மை அல்லது முன்னெச்சரிக்கை என்று நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டாலும் சரி)அது கோடு காட்டிச் சென்றாலும் இருளின் வெளியில் வெளிச்சத்தைப் புலரச் செய்த நாவல்.
கொள்ளை நோய்(பிளேக்) நாவலில் தனது எழுத்தின் முதல் தளமான அபத்தத்தை விட்டு வெளியேறுகிறார் காம்யூ. பிரெஞ்ச் காலனி ஆட்சிக்குட்பட்ட ஆல்ஜீரியாவின் கடலோர நகரமான ஓரான், நாவலின் களம். 194 -ன் இளவேனிற்பருவத்தில் நகரத்தில் கொள்ளைநோயின் அறிகுறிகள் ஆரம்பம் ஆவதாக காட்டப்படுகிறது. 194 -ல் என்று காம்யூ குறிப்பிடுவது நாஜி ஜெர்மனி பிரான்ஸை ஆக்கிரமித்த காலம். அப்போது அல்ஜீரியாவில் சிக்கிக்கொண்ட காம்யூ பிரான்ஸ் செல்லமுடியவில்லை என்ற வரலாற்றுப் பின்புலத்தை இத்தருணத்தில் நினைவில் கொள்ளலாம். நாடு கடத்தப்பட்டது போன்ற உணர்வினை காம்யூ அப்போது பெற்றார்.இந்நாவல் முழுவதும் அவ்வுணர்வினை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.
மருத்துவர் பெர்னார்ட் ரியேக்ச் ஒரு முக்கிய கதை மாந்தர். இக்கதையைச் சொல்லும் கதாசிரியராகவும் அவர்தான் காட்டப்படுகிறார்.தனது அலுவலகத்திலிருந்து வெளிவரும் வேளை செத்துப்போன ஒரு எலியின் மீது அவரது கால் இடறுகிறது. அதைத்தொடர்ந்து நகரம் முழுவதும் செத்துப்போன எலிகள் குவியல் குவியலாக கிடக்கின்றன. நகரத்து எலிகள் எல்லாம் தெருவுக்கு வந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றன. இதன் தொடர்ச்சியாகத்தான் நகரில் கொள்ளை நோய் பரவுகிறது. நகரம் வெளிஉலகோடு தொடர்பு கொள்வது துண்டிக்கப்பட்டு கொள்ளை நோயால் முற்றுகையிடப்படுகிறது. நகரம் அடைக்கப்படுவதற்கு சில தினங்கள் முன்னர், நோய்வாய்ப்பட்டிருக்கும் தனது மனைவியை நகரத்தைவிட்டு வேறு ஒரு இருப்பிடத்திற்கு மாற்றிவிடுகிறார் மருத்துவர். முற்றுகையிடப்படப்போகும் நகரத்தில் தனது மகனான மருத்துவர் ரியேக்சுக்குத் துணையாக அவரது தாயார் வருகிறார்.
கொள்ளை நோயை உருவாக்கும் கிருமிகள் எலிகள் மூலமாக மனிதர்களுக்குப் பரவுகிறது. போரை உருவாக்கும் நாஜிக்கள் நேசநாடுகள் என்னும் எலிகள் மூலமாக நேசநாடுகளின் மக்களுக்கு நோயை எடுத்துச் செல்கிறார்கள். முதலில் நாஜிக்கள் எலிகளான நேசநாடுகளைப் பிடித்துவிடுகிறார்கள். பின்னர் அந்நாடுகளின் மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி வதைக்கிறார்கள்.
நேசநாடுகளைக் கொல்வதன்மூலமாக அந்நாடுகளின் மக்களையும் நாஜிக்கள் கொல்கிறார்கள். நாவலின் முடிவில் கொள்ளை நோயின் அழிவில் மீண்டும் எலிகள் துள்ளி விளையாடுவதை காம்யூ காட்டியிருப்பார். கொள்ளை நோய் தற்சமயம் மறைந்து போயிருப்பதாகவும் சொல்லியிருப்பார். நோய்க்கிருமிகள் எங்கு வேண்டுமானாலும் பதிந்திருக்கலாம் என்பார். நோய்க்கிருமிகள் எலிகள் என்னும் நேசநாடுகளில் ஆழப்பதிந்துபோய்தான் கிடந்திருக்கிறது. வேறு வகைக் கிருமிகளாக உருமாறிப்போய்விட்ட அக்கிருமிகள் உலகப்போர் முடிவடைந்த பின்னரும் அல்ஜீரியா போன்ற நேசநாடுகளின் காலனிகளை வாட்டி வதைத்தது. நாஜிக்களுக்கு எதிராக செயல்பட்ட அமெரிக்காவும், சோவியத் யூனியனும் பனிப்போர் காலத்தில் உலக மக்களை துன்பத்தில் தள்ளியது.
கொள்ளை நோயை எதிர்த்து மருத்துவர் ரியேக்ச் செயல்படும் விதத்தை நாம் இங்கு குறிப்பிடவேண்டும். காம்யூவின் எழுத்துத் தளம் மாறுவதையும் இங்கு நாம் அவதானிக்கவேண்டும். அந்நியனில் தனது தாய் இறந்தபின்னர் மூன்று நாட்களுக்கு பெண்களுடன் காமத்தில் திளைக்கும் நாயகனின் அபத்தத்துடன் இந்நாவலின் நாயகனும், கதை சொல்லியும் ஆன மருத்துவர் ரியேக்ச்சின் கொள்ளை நோய்க்கெதிரான செயல்பாடுகள், அடுத்த நொடியைப் பற்றிய கவலையில் இறங்காமல் நிகழ்கால நொடிவரை நோயை எதிர்த்து அவர் செயல்படும்விதத்தை ஒருவித நம்பிக்கைத்தனத்துடனும், கிளர்ச்சியுடனும் ஒப்பிடலாம். நோயின் உச்சத்தில் மருத்துவரின் பணி என்பது வெறும் சாவைக் கணக்கெடுப்பது மட்டுமே என்னும் நெருக்கடியான தருணத்திலும் மருத்துவர் ரியேக்ச்சிடமிருந்து எந்த அபத்தமான செயலையும் நாம் காணமுடியவில்லை.
நாவலில் வரும் மற்றொரு முக்கிய பாத்திரம் ஜான் தர்ரௌ. ஓரான் நகர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் இவன், நகரில் அதிகமாய் இருந்த ஸ்பெயின் நாட்டு நாட்டியக் கலைஞர்களோடும், இசைக்கலைஞர்களோடும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறான். இவன் அதிகம் காணப்படும் இடம் கடற்கரை. கடலில் நீச்சலடிப்பது இவனுக்கு நிரம்பவும் பிடிக்கும். அந்நியன் நாயகனுக்கும் கடலில் நீச்சலடிப்பதுதான் பிடித்திருக்கும். இந்நாவலில் வரக்கூடிய தர்ரௌவின் குறிப்புகளை ஆழ்ந்து பார்ப்போமானால் காம்யூவின் குரலை அதில் கேட்கலாம்.
“எனக்கு ஒன்றே ஒன்றில்மட்டும் ஈடுபாடு; அதுதான் என் உள்ளே அமைதி காண்பது”
“வினா: நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி?
விடை: நீண்ட அந்த நேரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது”.
கொள்ளை நோய் என்று அறிவிக்கப்பட்டபிறகு மருத்துவர் ரியேக்ச்சின் மன ஓட்டமும், அவரது இயல்பும் எவ்வாறு இருந்தது என்று பார்ப்போம்.
“வரலாறு அறிந்த சுமார் முப்பது கொள்ளை நோய்கள், ஏறக்குறைய பத்து கோடி மக்களின் உயிரைக்குடித்தன. ஆனால் பத்துகோடி சாவுகள் என்றால் என்ன? போர் செய்திருந்தால் ஒரு சாவு என்ன என்பதை அறிந்திருப்போமோ என்னவோ!ஏனென்றால் இறந்த ஒரு மனிதனை நேரில் பார்த்தால்தான் சாவுக்கு ஓர் அழுத்தம் உண்டு”. “கொள்ளை நோய் என்னும் சொற்றொடர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்னவோ உண்மைதான். அதனால் என்ன? அது போய்விடும். ஆனால் எடுக்கவேண்டிய நடவடிக்கை என்னவென்றால், அடையாளம் கண்டுகொள்ளவேண்டியதைத் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளவேன்டும். தேவையற்ற கனவுகளை நிரந்தரமாய்த் தூக்கி எறிய வேண்டும். அதற்கான பாதுகாப்புகளைக் கையாளவேண்டும். பிறகு கொள்ளை நோய் போய்விடும்”.
“…தன் பணியைத் திருத்தமாய்ச் செய்வதுதான் இன்றியமையாதது. “காம்யூ என்றால் அபத்தம் என்று படிந்து போய்விட்ட பொதுப்புத்தியில் ரியேக்ச்சின் வாயிலாக, தர்ரௌவின் வாயிலாக நம்பிக்கை பற்றியும், தீர்மானமான முன்னெடுப்புகளைப் பற்றியும் காம்யூ பேசுவது நமக்கு ஆச்சரியத்தையும், வியப்பையும் கொடுக்கிறது.
கொள்ளை நோய் நகரை முற்றுகையிடுகிறது.நகரத்தின் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. நகரிலிருந்து வெளி உலகத்திற்கான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டன. புகைவண்டி, விமான சேவை, தபால் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. அத்தியாவசிய தந்தி சேவை மட்டும் செயல்படுகிறது. சில நாட்களுக்கு மட்டும் இந்நிலை இருக்கும் என்றுதான் மருத்துவர் ரியேக்ச் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் நினைத்தனர். ஆனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. மீண்டும் விரைவில் ஒன்று சேர்ந்துவிடுவோம் என்று எண்ணி பிரிந்து சென்ற அல்லது பிரிவுக்கு ஒப்புக்கொண்ட இளம் காதலர்கள்தான் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பிரிவால் அரற்றினர்.
ஓரான் நகரில் அரபு மக்களின் வாழ்க்கை நிலைமையைப் பற்றி ஆய்வு செய்து செய்தி சேகரிக்க வந்திருந்த ரேய்மோண்ட் ராம்பேர்ட் என்னும் பாத்திரம் பற்றி இங்கு சொல்லியாகவேண்டும். தனது காதலியைப் பிரிந்து வந்திருந்த ராம்பேர்ட் கொள்ளை நோயை ஒட்டி ஓரான் நகரில் சிக்கிக்கொண்டான். நகர் முற்றுகையிடப்படுவதற்கு முன்பே அரசின் பல அதிகாரிகளிடம் நன்கு பரிச்சயமான அவன், மருத்துவர் ரியேக்ச்சிடமும் நன்கு பழகுகிறான். நகரின் கதவுகள் அடைக்கப்பட்டபிறகு சில நாட்கள் கழித்து காதலியைப் பிரிந்த துயரைத் தாங்கமுடியாமல் மருத்துவரை அணுகுகிறான். தனக்கு கொள்ளை நோய் இல்லை என்னும் சான்றிதழை அவர் தரவேண்டும்.அதைக்கொண்டு அதிகாரிகளிடம் பேசி நகரை விட்டுச் சென்றுவிடமுடியும் என்ற உறுதியில் அவன் இருந்தான். ஆனால் மருத்துவர் அவனுக்கு அந்த சான்றிதழைக் கொடுக்க மறுத்துவிடுகிறார். ராம்பேர்ட்டைப் போலவே ஏராளமான மக்கள் அப்படி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். அது சரியானதல்ல என்கிறார் மருத்துவர்.
அதற்கு ராம்பேர்ட் ” நோய் தொற்றாதவர்களை வெளியே விடுவதில் என்ன தயக்கம் இருக்கமுடியும்” என்று வினவுகிறான். ஆனால் இது முட்டாள்தனமானது என்று மருத்துவர் கூறுகிறார். நோயையும் அது ஏற்பத்தியிருக்கிற உளவியல் தாக்கத்தையும் நாம் எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் மருத்துவர். இது மனிதாபிமானமற்றது,தங்களைப் போன்ற காதலர்களை இவ்வாறு பிரித்து வைத்திருப்பது அநியாயமானது என்று புலம்புகிறான் ராம்பேர்ட்.
ராம்பேர்ட்டின் வேதனைகளை புரிந்துகொண்ட மருத்துவர், அன்பால் இணைந்த எல்லோரும் ஒன்று சேரவேண்டும் என்று மனமார விரும்புவதாகவும் ஆனால் சட்டதிட்டங்கள் இருக்கின்றன என்றும் கூறுகிறார். மருத்துவர் உண்மை சாரா நிலையில் இருப்பதாகவும், தர்க்க ரீதியில் பேசுவதாகவும் ராம்பேர்ட் குற்றம் சாட்டுகின்றான். பொது நன்மை என்பது ஒவ்வொருவரின் மகிழ்ச்சியால் அமைவதுதான் என்றும் ராம்பேர்ட் மருத்துவரிடம் கூறுகிறான். தனிநபரின் அன்பு, மகிழ்ச்சி, ஆசை போன்றவற்றை பொது நலத்திற்காக தியாகம் செய்துவிடவேண்டும் என்னும் செய்தியை மருத்துவர் ரியேக்ச் வாயிலாக காம்யூ நமக்குத் தரும்போது காம்யூவின் எழுத்தில் ஏற்படும் மாற்றத்தை நாம் அவதானிக்கமுடிகிறது. ராம்பேர்ட்டின் வாயிலாக தனிமனித இருத்தலையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை என்று நாம் அறிந்தாலும் இறுதியில் ராம்பேர்ட் தப்பிப்போக நாள் குறித்த அன்று அவன் தப்பிப்போகவில்லை. மருத்துவரின் தர்க்கத்தை ஏற்றுக்கொண்டு கொள்ளை நோய் கண்டவர்களுக்கு சேவை செய்ய முடிவு செய்கிறான். காதலியின் பிரிவுத்துயரை மக்களின் துயர் வெல்கிறது. கொள்ளை நோய் முடிவுக்கு வந்து நகருக்கு வரும் முதல் புகைவண்டியில் தன்னைக் காணவரும் காதலியைக் கண்டு அவளை கட்டித் தழுவி கண்ணீர் விடுகிறான் ராம்பேர்ட்.
காம்யூ தன்னுடைய எழுத்தின் உச்சத்திற்குச் சென்றுவிடுகிறார்.
கொள்ளை நோய் ஏற்பட்டதற்கு இறை ரீதியான காரணத்தை பாதிரியார் பனெலௌக்ச் விளக்குகிறார். பகைவருக்காக ஆண்டவனால் தருவிக்கப்பட்டதுதான் கொள்ளை நோய் என்று அவர் கூறுகிறார். ஆண்டவனின் கொள்ளை நோய் ஆணவம் பிடித்தவர்களையும் ஆன்மிகக் கண்களை இழந்தவர்களையும் அடிபணியச் செய்கிறது.இதைச் சிந்தித்து ஆண்டவனிடம் அடிபணியுங்கள் என்கிறார் அவர். பாதிரியாரிடம் நாம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்? ஆனால் கொள்ளை நோய் இன்னும் தீவிரமாகப்போகும் எதிர்வரும் சில நாட்களில் பாதிரியார் பனெலௌக்ச்சும் மருத்துவர் ரியேக்ச்சுடன் சேர்ந்து கொள்ளை நோய் சேவையில் தன்னை முழுமையும் ஈடுபடுத்திக் கொள்கிறார். இறுதியில் அவரும் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்துபோகிறார்.
கொள்ளை நோய் பற்றிய பாதிரியார் பனெலௌக்சின் மறையுரை பற்றி தர்ரௌவும், மருத்துவர் ரியேக்சும் உரையாடிக்கொள்வது பற்றியும் குறிப்பிடவேண்டும்.கடவுளை நம்புகிறீர்களா? என்னும் தர்ரௌவின் கேள்விக்கு மருத்துவர் இல்லை என்று விடையளித்துவிட்டு தொடர்கிறார்:
“நான் இருட்டில் இருந்துகொண்டு தெளிவாய்ப் பார்க்கமுயல்கிறேன். இதுதான் ஆதாரம் என்று நம்புவதைவிட்டு எவ்வளவோ காலமாகிவிட்டது. பனெலௌக்ச் ஏட்டுச் சுரைக்காய் மனிதர். சாவதை அதிகமாய்க் கண்டதில்லை. அதனால்தான் உண்மை என்ற பெயர் கொடுத்து அதைப்பற்றிப் பேசுகிறார். ஆனால் ஒரு சாதாரண கிராமத்துப் பாதிரியார் தன் திருச்சபையின் ஆட்சிக்குள்ளிருக்கும் ஆட்களை நிர்வகிக்கும் நிலையில், மரணப்போராட்டத்தில் இருக்கும் ஒருவனின் சுவாசத்தைக் கேட்டபின் என்னைப்போலத்தான் நினைப்பார். முதலில் அவர் வேதனைக்கு மண்டியிடுவார். பின்னர்தான் அதில் மாட்சிமையைக் காணமுயல்வார்.”
“….. உலக ஒழுங்கு சாவினால்தான் நேர்படுத்தப்பட்டுள்ளது என்பதால் கடவுளை நம்பாது இருப்பதும் அவன் மௌனமாய் இருக்கும் விண்ணை நோக்கிக் கண்களை உயர்த்தாமல் மரணத்தை எதிர்த்துப் போராடுவதும் அவனுக்கு நல்லதாய் இருக்குமோ?”
இதையெல்லாம் உங்களுக்கு யார் கற்பித்தது என்ற தர்ரௌவின் கேள்விக்கு மருத்துவர் ரியேக்ச் ‘வறுமை’ என்று பதில் கூறுகிறார்.
தர்ரௌவுக்கும் மருத்துவர் ரியேக்சுக்கும் நடக்கும் உரையாடல் தர்ரௌவின் புகழ்பெற்ற கேள்வியால் உச்சநிலையை அடைகிறது.
“கடவுள் இல்லாமல் ஒருவன் அறவோனாக இருக்கமுடியுமா?” என்னும் தர்ரௌவின் கேள்விக்கு மருத்துவர் ரியேக்ச் பதில் கூறுகிறார்: “வீரத்தனமும்,புனிதத்தன்மையும் உண்மையில் எனக்கு ஒரு பொருட்டல்ல,ஒரு மனிதனாக இருப்பதில் மட்டுமே நான் அக்கறை கொள்கிறேன்”.
மருத்துவர் ரியேக்சுக்கும் கிரேண்டுக்கும், மருத்துவருக்கும் தர்ரௌவுக்கும் இடையிலான உரையாடல்கள் வாயிலாக காம்யூ நம்மிடம் பேசுகிறார்.
‘மனிதனைக் கொள்கை என்னும் சிறைக்குள் அடைக்கமுடியாது’. நாணயம் என்றால் என்ன என்னும் ராம்பேர்ட்டின் கேள்விக்கு மருத்துவரின் பதில் : ” பொதுவாக அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் என் நிலையில் என்னுடைய பணியைச் செய்யவைப்பது அதுதான்.”
“அன்பாய் இருத்தல் அல்லது ஒன்றாய் இறத்தல் .வேறு வழியில்லை”. மருத்துவர் ரியேக்சின் வழி காம்யூவின் இவ்வரிகள் இவ்வுலக தத்துவக் கோட்பாடுகளின் தளத்திலிருந்தும் வெகு தூரத்தில் அமைந்திருக்கும் உண்மையான ஆன்மிகத் தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
கொள்ளை நோய் தீவிரமடைந்த காலத்தில் நகர மக்கள் அனுபவிக்கும் கொடும் துன்பம் நாவலில் விரிவாக சித்தரிக்கப்படுகிறது. மக்கள் ஒருவரை மற்றொருவர் சந்தேகிக்கின்றனர். நோய் பீடித்தவர்கள் நாற்பது நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுகின்றனர். பாதிரியார் பனெலௌக்சும், க்ரேண்டும், தர்ரௌவும், ராம்பேர்ட்டும் தனித்தனி சேவைக்குழுக்களில் பணிசெய்கின்றனர்.
நகரத்து மக்கள் தங்கள் இறந்தகாலத்து அன்பையும், எதிர்கால நம்பிக்கையையும் ஒருசேர மறந்துபோய்விடுகிறார்கள் அல்லது தொலைத்துவிடுகிறார்கள். நிகழ்காலத்தில் மட்டும் வாழ்கின்றனர். ஆனால் பித்துப்பிடித்த நிலையில்தான் இருந்துவருகிறார்கள். ஒவ்வொரு நாள் விடியும்போதும் அம்மக்களின் நம்பிக்கை அதலபாதாளத்திற்குச் சென்றுவிடுகிறது. நாள்தோறும் நோயாளிகளின் மத்தியில் மிகக்கடுமையாக உழைக்கும் மருத்துவர் ரியேக்ச் கூட சில வேளைகளில் மனச்சோர்வுக்கு ஆட்படுகிறார். திறந்தவெளி சிறைச்சாலையில் வசிக்கும் மக்களாக ஓரான் நகரவாசிகள் மாறுகிறார்கள். நகர நிர்வாகம் செலுத்தும் அதிகாரத்திற்குக் கட்டுப்படும் மக்கள் சில வேளைகளில் நகர வாயிலை அடைத்து நிற்கும் கதவுகளைத் தகர்த்து தப்பிக்கும் முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். காவலர்களின் குண்டடிக்கு ஆளாகி இறக்கிறார்கள்.
கொள்ளை நோயினால் பயனடைந்த ஒரே உயிராக கோட்டார்ட்டைத் தான் சொல்லவேண்டும். கொள்ளை நோய் ஆரம்பம் ஆவதற்கு முன்னர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோற்றுப்போகும் கோட்டார்ட் நோய் பரவிய வேளையில்,நகரம் அடைபட்டுக் கிடக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பான முறையில் கடத்தலுக்கு துணைபுரிந்து பெரும் செல்வம் சேர்க்கிறான். இந்நாவலில் கோட்டார்ட் செய்யும் செயல்கள் மட்டுமே அபத்தமாக நமக்குப்படுகிறது. அந்நியனில் நாயகனின் ஒவ்வொரு செயலும் நமக்கு அபத்தமாக இருக்கும்.
இலக்கிய உலகத்திலும், அறிவு உலகத்திலும் ஆல்பெர் காம்யூ ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பிரம்மாண்டமானவை. ஒதுக்கித்தள்ள முடியாதவை. பிரெஞ்சுப் பூர்விகம் கொண்ட ஒரு ஏழைத் தொழிலாளி குடும்பத்துக்கு மகனாக அல்ஜீரியாவில் 1913 ல் பிறந்தார் காம்யூ.வறுமையில் உழன்றார். அல்ஜேர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது தனது கல்விச் செலவுகளை ஈடு கட்டும் பொருட்டு பல வேலைகளில் ஈடுபட்டார். இறுதியில் பத்திரிக்கைத் துறையை தேர்ந்தெடுத்தார்.
அல்ஜீரியாவின் காபிலைப் பகுதி வாழ் முஸ்லிம் பழங்குடி மக்களின் மோசமான வாழ்க்கை தரத்தைப் பற்றி அவர் எழுதிய ஒரு கட்டுரை அல்ஜீரியா அரசை திரும்பிப் பார்க்கவைத்தது. மக்களிடமும் அவர் செல்வாக்கு பெற்றார். பின்னர் பத்திரிகை துறையையும் விட்டுவிட்டு முழு நேர எழுத்தாளராக மாறினார். 1935 முதல் 1938 வரை அவர் நடத்திய நாடகக்குழு உலகப் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளை நாடக வடிவில் கொண்டு வந்தது. நாடகத்தில் மிகுந்த ஈடுபாட்டை காட்டினாலும் மிகச்சிறந்த புதினங்களையும்,கட்டுரைகளையும் அவர் எழுதினார். இரண்டாவது உலகப்போர் நடந்தபோது பிரெஞ்ச் மக்களின் நாஜி எதிர்ப்பில் முன்னணியில் நின்ற புகழ் பெற்ற எழுத்தாளராக அவர் விளங்கினார்.
அவ்வேளையில் தலைமறைவு பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்த Combat – ன் ஆசிரியராகவும் பணிபுரிந்து புகழ்மிக்க கட்டுரைகளையும், தலையங்கங்களையும் தீட்டி உலகப் புகழ் பெற்றார். அவரது அந்நியன் நாவல் அவரை புகழின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இலக்கிய உலகின் புறக்கணிக்கப்படமுடியாத ஆளுமையாக அவர் மாறினார். “ழான் பால் சார்த்தரின் இருத்தலியல் (Existentialism) கோட்பாட்டுடன் இவரது சிந்தனைகள் பெரிதும் பிணைக்கப்பட்டிருந்தாலும், “தான் ஒரு கலைஞன்’ என்று மட்டும் இவர் உணர்த்திக்கொண்டேயிருந்தார். மனிதம் சிதைந்து தன் மேன்மையை இழந்து வந்த ஒரு காலகட்டத்தில் வாழ்வை அதன் சகல பரிமாணங்களிலும் தீவிரமாக வாழ்ந்துவிட முனைந்த இந்த மனிதன் ஒரு கலைஞனாகவும் ஒரு தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர்” என்பார் க.நா.சு.
அந்நியன், வீழ்ச்சி, பிளேக் நாவல்களும், காலிகுலா முதலிய நாடகங்களும், சிசிபஸின் புராணம், புரட்சிக்காரன் முதலிய தத்துவக் கட்டுரைகளும் இவரது முக்கிய படைப்புகள். விபத்துக்குள்ளான அவரது காரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட, அவர் எழுதி வந்த முற்றுப்பெறாத நாவலின் கையெழுத்துப் பிரதியிலிருந்து ‘முதல் மனிதன்’ என்னும் நாவல் பதிக்கப்பட்டது. இன்றைய மனிதனின் மனசாட்சிப் பிரச்னைகளுக்கு தீர்மானமான கலை வடிவம் தந்தவர் என்ற அடிப்படையில் 1957-ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது இவருக்கு வயது நாற்பத்து மூன்று மட்டுமே. 1960,ஜனவரி 4ல் நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் காம்யூ மரணமடைந்தபோது சாதாரண மக்களின் மனசாட்சியாக விளங்கிய ஒரு சுடர் அணைந்து போனதாகவே இலக்கிய உலகமும், அறிவுலகமும் கருதியது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இவ்வுலகிற்குத் தேவைப்பட்ட ஆன்ம பலத்தை காம்யூ தனது எழுத்துகளின் மூலம் வழங்கினார். அதிகாரத்தின் கோரப்பசிக்கு எதிராக என்றும் குரல் கொடுத்த காம்யூ சோவியத் யூனியனின் (அடிமைத்தன) கட்டாய உழைப்பு முகாம்களையும், ஃபிராங்கோவின் ஸ்பெயினுக்கு ஆதரவளித்த அமெரிக்க ஐக்கிய நாடுகளையும் ஒரு சேர எதிர்த்து குரல் கொடுத்தார். மரணதண்டனைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டு காம்யூ நிகழ்த்திய ஏற்புரையில் இப்படிக் கூறுகிறார்: “எழுத்தாளர்களின் பணி வரலாற்றை உருவாக்குபவர்களுக்கு சேவை செய்வதல்ல, மாறாக அவ்வரலாறு கட்டுப்படுத்துகிறவர்களுக்கு சேவை செய்வதே”. இதை இப்படியும் சொல்லலாம்: ‘அதிகாரத்திற்கு சேவை செய்வதல்ல, அவ்வதிகாரத்தினால் மிதிபடும் மக்களுக்கு சேவை செய்வது’.