நோய்க்காலத்து அகதியின் பாடல்
பாடல்-1
நிலம் பூத்த காலையில்
உன் பிறப்பின் சேதி
எனக்கு சொல்லப்பட்டது மகளே!
முன்னொரு நாளில்
நிலமிழந்தவனின் பாதம்
கரைதேடி கடல்மீது
நிலைகொள்ளாதிருந்ததை
மீண்டும் உணர்ந்தன.
வெயிலேறித் தகித்த கோடை நாளில்
வாரி அணைத்தபோது
இந்த உலகமே
சுபிட்சமாயிருந்தது.
உனையேந்திய
என் கரங்களில்
இழந்துபோன என் நிலம்
புன்னகைக்கக் கண்டேன்.
பாடல்-2
தாயொடு தனித்திருக்கும்
சேயுன் மனம்
அச்சத்தில் இருப்பதை அறிகிறேன்.
துள்ளியோடும் மென்பாதங்களின்
தவிப்பு புரிகிறது மகளே.
கொடுநோய்க் காலம்தான் இது.
பள்ளியின் நண்பர்களை மட்டுமல்ல
வீட்டருகாமை நண்பர்களையும்
பாராதிருக்கும் இக்காலத்தே
நேரலை வகுப்புகள்
உன்னம்மைக்கும் பெரும்சுமைதான்.
பாடல்-3
வேப்பம் பழங்கள்
விழுந்து கிடக்கும்
நம் தெருவில்
தகரத் தடுப்பைக் கண்டு
அச்சப்படாதே மகளே.
அவசர ஊர்தியின் வருகை
அதிகரித்திருப்பதாக அலைபேசினாய்.
கொரோனா மாதிரி சேகரிக்குமிடத்தில் நீ
வேப்பங் கனிகளைச் சுவைப்பதாக புகாரளித்த
அயல்வீட்டு சுட்டிப்பையனின் வாயில்
கனித்துண்டு இல்லாத பின்பே
என் சுவாசம் நிலைபெற்றது மகளே.
வேப்பங் கனிகளைச் சுவைக்கும் பிள்ளைகளுக்கு
ஒன்றினுள் ஒன்றாய் உள்ளடங்கியிருக்கும்
வாழ்வின் இருபக்கம் குறித்து
நாம் கற்றுத்தரத் தேவையில்லை.
ஊர்திகள் நசுக்கிச் சென்ற விதைகளை
பொழுதுபோக்காய்
சேகரித்து வைத்துக்கொள்க மகளே!
பிறிதொரு பருவகாலத்தில்
புகைமூட்டி
நாம் கதைத்து நினைவுறலாம்.
பாடல்-4
வீட்டுக்குள்
அடைந்திருக்க இயலாமல் சண்டையிடுவதாக
உன்னம்மா கூறியதிலிருந்து
முன்பொருநாள் சிறுபிராயத்தே
யுத்தம் பீடித்திருந்த என் தேசத்தின்
பதுங்குகுழி வாழ்வை
இக்கொடிய நோய்க்காலம் நினைவுறுத்துகிறது.
உனக்கு வீடும்
எனக்கு பங்கரும் என
வடிவங்கள்தான் மாறியிருக்கிறதே தவிர
துயரங்கள் அல்ல மகளே.
பாடல்-5
நிலமிழந்த மனிதர்களிடத்து சொல்வதற்கு
கதைகள் ஏராளமிருக்கிறது
துயரங்களே நிறைந்திருப்பதால்
கேட்பதற்கு யாரும் விரும்பியதில்லை மகளே.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
இக்கொடிய நோய்க்காலம்
எல்லா நிலத்திலிருந்தும்
துயரத்தின் பாடலை பகிர்கிறது.
மன ஆறுதலுக்காகவேனும்
செவிமடுக்கின்றனர் இப்போது
துயரத்தின் பாடல்களுக்கு.
பாடல்-6
தொழில் நிமித்தம்
தனித்திருக்கும்
உன் தந்தையின்மீது
கோபம் கொள்ளாதே மகளே!
நிலமிழந்து
சொந்தபந்தமிழந்து
கரையேறியவனின் உள்ளத்தே
உனக்குக் கேட்காதபடிக்கு
பேரலை சத்தமிட்டபடியிருக்கிறது.
நோய்க்காலத்தின்
அவசர ஊர்தியின் சத்தங்கள்
நாளை உனக்குள்ளும் ஒலித்தபடியிருக்கலாம்.
இப்போதைக்கு நாம்
ஒருவருக்கொருவர் அன்பாயிருப்போம்
எட்ட நின்றே.
பாடல்-7
போர்நிலத்தின் பரபரப்பை
ஒத்திருக்கிறது மகளே
இக்கொடு நோய்க்கால
மருத்துவமனை
இறுக்கமான முகத்தோடு இறங்குவோரும்
மலர்ச்சியான முகத்தோடு ஏறுவோருமென
ஊர்திகள் விரைந்துகொண்டிருக்கின்றன.
இறந்து போனவர்களின் இறுதிக் கனவுகள்
உதிராத சொற்களுக்குள் தேங்கியிருக்கிறது.
மருத்துவமனையின் பூந்தொட்டிகளில்
மலர்கள்
மலர்வதையும் உதிர்வதையும்
ஒருவேளை நீ கண்ணுற்றால்
சலனமற்றுக் கடக்க கற்றுக்கொள்.
பக்குவமாதலின் முதல்படியிது மகளே.
பாடல்-8
பிள்ளையைப் பிரிந்த பெற்றோர்
பெற்றோரைப் பிரிந்த பிள்ளைகள்
உதவியாளர்களற்ற மாற்றுத்திறனாளிகள்
காதலன் காதலி இப்படி
எண்ணற்ற மனிதர்கள்
நிலம் பறிக்கப்பட்டு துரத்தப்படவர்கள்போல்
துயரங்கள் சுமந்து தனித்திருப்பது
என்னை தொந்தரவு செய்கிறது.
நம்மைப் பிரித்து வைத்திருக்கும்
இந்நோய்காலம்
கொடுங்காலம்தான் மகளே.
பாடல்-9
கொடிய நோய்க்காலத்தில்
சத்தமற்று நிகழ்ந்த
எதிர்வீட்டு மரணம்
என்னுள்
கடந்த காலங்களை நினைவுறுத்துகிறது மகளே
குண்டுகளில் சிதைந்த
என் அம்மம்மாவின் தசைத்துணுக்குகளை
இப்படித்தான் சத்தமற்று
பதுங்குகுழிக்குள் புதைத்துவிட்டு வந்தோம்.
கனவு கண்டு திடுக்குற்ற உன்னிடம்
நான் சொன்னது கதையென சமாதானம் சொன்னாலும்
கதையாக உன்னுள் கடத்திய வரலாறு மகளே.
ஒரு கனவைப்போல்
இக்கொடிய காலத்தைக் கடந்திடுவோம்
நம்பிக்கைகொள் மகளே.
பாடல்-10
இந்த நூற்றாண்டின்
பேரவலங்களைச் சுமந்தலையும்
மானிடப் பிறவிகள்
நாம் மகளே.
போர் தின்ற நிலத்தின் கதைபோல்
நோய் தின்ற நிலத்தின் கதைகளை
வேப்பங்கொட்டைகளை புகைமூட்டி
கதைத்திடும் நாளில்
நீ தாயாகவும்
நான் சேயாகவும்.
பாடல்-11
நொச்சி
தும்பை
வாகையென
மன்னர்களின் மகுடத்தில்
மலர்களையும்
கைகளில்
குருதி வழியும் வாளையும்
தந்த பாணர்களையிட்டு வெட்கப்படுவதாக
நீ சொன்ன நாளில்
துவக்கின் பிடிமானத்தை விட்ட
உன் தந்தையும்
கவிதை எழுதத் துவங்கியதை
சொல்லாமலே மறைத்துவிட்டேன்
மகளே.
பாடல்-12
வாகையின் செம்பூக்களை
இரத்தக் காடென்றேன்
கொண்டலின் மஞ்சள் மலர்களை
பொன் மேனியென்றேன்
தும்பை நொச்சிகளை
முத்துப் பற்களென்றும்
வேல் விழியென்றும்
நான்
எழுதிவைத்த தாள்களை
கிழித்துப் போட்டபடி
பெண்கள்
வெறும் உடலல்ல என்றாய்.
கல்வியைப் பிடுங்கிவிட்டு
கருவிகளை வழங்கும் கயமையை
உனக்கு
சொல்லித்தரத் தேவையில்லை மகளே.
பாடல்-13
மண்வாசத்தை நுகர்ந்தபடிக்கு
உங்கள் சிறுபிராயத்து
மண்ணின் வாசம்
இப்படித்தான் இருந்ததா
எனக் கேட்ட மகளிடம்
எப்படிச் சொல்வேன்
கந்தக நெடியும்
குருதி வீச்சமும்
பங்கரின் வெம்மையுமே
நான் நுகர்ந்த
மண்வாசமென.
இந்த வாசத்திலிருந்து
அவற்றின் மணம் வேறுபட்டதெனும்
சொல்லைத் தவிர வேறு சொல்
இப்போதைக்கு
என்னிடமில்லை மகளே.
பாடல்-14
நிலத்தைப் பிரிந்த
உறவுகளைப் பிரிந்த
சிறார்களின்
மனங்களைக் குறித்து
யாரேனும் அக்கரை கொண்டார்களோ
அறியேன்.
வலிகளும் வன்மங்களும்
மாறிமாறி வதைக்கும்
மனம்
உன்போன்ற சிறார்களுக்கு ஏற்படாதிருக்க
இந்நோய்க்காலத்தைச் சபிக்கிறேன்
மகளே.
பாடல்-15
நோய்க்காலத்தின்
ஊரடங்குச் சாலையில்
இரவு மழை
உதிர்த்த மலர்களை
நசுக்கிச் செல்கின்றன
பாதங்களும் சக்கரங்களும்.
மயானத்தின் பேரமைதியை
நிகர்த்திருக்கும்
போர்நிலத்தின்
ஊரடங்கை
இனி எப்போதைக்கும்
எவரேனும்
பாராதிருக்கவே விரும்புகிறேன்.
மலர்களைப்போலவே
இந்த மனித வாழ்வும்
என்பதை மறவாதே
மகளே.
பாடல்-16
இரையும் வானூர்திகளும்
வெடிக்கும் குண்டுகளும்
படையெடுப்புகளின் விரட்டலில்
ஓடிக்கொண்டிருந்தவர்களில்
கடலைத் தாண்டும்
துர்ப்பாக்கியத்தை
போர் நிலம் வழங்கியது.
இந்தக்
கொடுநோய்க் காலத்திலும்
யாரும் துரத்தாமலே
சனங்கள்
அங்கும் இங்குமாக
ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
கூடவே நோயும்
பரவலில் தீவிரமாகிறது.
பாறையில் மோதிச் சிதறும்
அலையின் துளிகளைப் போல்
இடம்பெயரும் சனங்களின்
அங்கலாய்ப்பில்
இருத்தலின் இயலாமை.
கடலொதுக்கிய கிளிஞ்சலாய்
கரையொதுங்கிய நான்
உனக்கு தந்தை
என்பதற்கு அப்பால்
அகதியென்றும்
நினைவில்கொள்க மகளே