நாடாளுமன்றத்தின் மீதான மஞ்சள் புகைத் தாக்குதல்
டிசம்பர் 13 அன்று காலை புதிய நாடாளுமன்றத்தின் பார்வையாளர் பகுதியிலிருந்து எம்பிக்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் தாவிக்குதித்த இரு இளைஞர்கள் கலர் புகையை வெளியிடும் குப்பியை வீசியிருக்கிறார்கள். அவர்களை எம்பிக்களே மடக்கிப் பிடித்து அடித்து காவலர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டில் தீவிரவாதிகள் நடத்திய நாடாளுமன்றத் தாக்குதல் தினத்தன்று இச்சம்பவம் நடைபெற்றது தவிர, அத்தாக்குதலுக்கும், இத்தாக்குதலுக்கும் துளியும் ஒப்பிட்டுப் பேச இயலாது என எம்பிக்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. எனவே நாட்டின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமரும் இச்சம்பவம் குறித்துப் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையை அரசு தார்மிகமாக ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக நூற்றுக்கணக்கான எம்பிக்களை சஸ்பென்ட் செய்கிறது. நாடாளுமன்றம் ஆளும் கட்சி எம்பிக்களுக்கு மட்டும் என்ற கோணத்தில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. மூன்று மாநிலத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக வீறு கொண்டு எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறித்து வருவது கண்கூடு.
நாடாளுமன்றத்திற்குள் புகுந்த இரு இளைஞர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கும் அதிகமாக இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தங்களின் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை அல்லது வேலையே கிடைக்கவில்லை என்பதுதான் இந்த இளைஞர்களின் கோபமாக இருந்திருக்கிறது. கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்துவிட்டு ஆடு மேய்க்கும் தொழில் செய்துவந்த மனோரஞ்சன் என்னும் இளைஞர்தான் நாடாளுமன்றத்தில் மஞ்சள் நிற புகைகக்கிய குப்பியை வீசியது. இவரோடு கூட வந்த சாகர் சர்மா என்பவர் குடும்ப வறுமைச் சூழலால் பன்னிரெண்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திய மிகவும் கெட்டிக்கார மாணவர். சமஸ்கிருதத்தில் உயர்பட்டம் வாங்கிய நீலம் வர்மா என்னும் பெண்மணி, ” இவ்வளவு படித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை, நான் உயிரோடு இருந்து என்ன பயன்?” என்று அடிக்கடி தன் தாயாரிடம் சொல்வாராம். மற்றுமொரு இளைஞரான அமோல் ஷிண்டே என்பவர் கோவிட் பெருந்தொற்று சமயத்தில் ராணுவத்தில் சேரும் வாய்ப்பை இழந்தவர்.
இப்படியாக இளைஞர்களின் கோபம் ஆளும் அதிகாரவர்க்கத்தின் மீது அதிகரித்துக் கொண்டே வருகிறது. நவம்பர் 2023 மாதப் புள்ளிவிபரப்படி வேலை செய்யக்கூடிய மக்களில் ( Total Labour Force ), 9.2 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை (Unemployment Rate). 2022 ஆம் ஆண்டின் கணக்குப்படி தோராயமாக 52 கோடி மக்கள் வேலை செய்யவல்ல, செய்யக்கூடிய நிலையில் உள்ளவர்கள் என்றால் 4.8 கோடி பேருக்கு வேலையே இல்லை என்னும் நிலைமையைக் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பு ( Centre for Monitoring Indian Economy) தந்த புள்ளி விபரங்களைத்தான் நாம் மேலே பார்த்தோம். அந்த 4.8 கோடி பேரை பிரதிநிதித்துவம் செய்பவர்கள்தான் இந்த நான்கு பேரும். நாட்டில் வேலையின்மையும், வறுமையும், பணவீக்கமும் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் அரசோ ஆண்டுக்கு 7.3 சதம் ஜிடிபி பொருளாதாரம் உயர்ந்து வருவதாகக் கணக்கு காண்பிக்கிறது.
வேலை வாய்ப்பின்மை, மணிப்பூர் கலவரத்தில் மத்திய அரசின் கையாலாகத்தனம் என அனைத்தையும் தங்களது கோரிக்கைகளில் இந்த இளைஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அடிப்படையில் திருடர்களோ, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களோ அல்லர். மனோரஞ்சன் மிகச்சிறந்த வாசிப்பாளர். சேகுவேரா, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, பிளேட்டோ, அரிஸ்டாட்டில் நூல்களைத் தொடர்ந்து வாசிப்பவர் என அவருடைய தந்தை தன் மகன் குறித்துக் குறிப்பிடுகிறார். இளைஞர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்க்க அரசு தவறுமானால், இதுபோன்று சிந்தனைகளில் இளைஞர்கள் ஈருபடுவது தவிர்க்க முடியாததாகிப்போகும். 1929 ஏப்ரல் 8 அன்று பகத்சிங் ஆங்கிலேய அரசின் செவிகளில் உரத்துக் கேட்கச் செய்யவேண்டும் என்பதற்காக, யாருக்கும் தீங்கு நேராவண்ணம் நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசி வெடிக்கச் செய்தார். அப்போதுகூட அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அவரை அடிக்கவில்லை. பகத்சிங்கையும், அவரது தோழரையும் பத்திரமாகக் காவலர்களிடம் ஒப்படைத்தார்கள்.