நந்தவனத்தில் ஓர் ஆண்டி…..
சுவிசில் இருந்து சண் தவராஜா
சிறி லங்காவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கட்டுரை ஒன்றை எழுதப் போவதாக நண்பர் ஒருவரிடம் சொல்லியிருந்தேன். நான் ஒரு தலைப்புத் தருகிறேன் அதனை வைத்து எழுதுங்கள் என்றார். அவர் தந்த தலைப்புத்தான் ~நந்தவனத்தில் ஓர் ஆண்டி|. குதம்பாய்ச் சித்தர் என்பவர் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பாடிய பாடல் ஒன்றின் முதல் வரி அது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
முழுப் பாடலும் இதுவே. இந்தப் பாடல் விளக்கும் கருத்து இன்றைய அரசியல் சூழலுக்கும், எதிர்காலத் தமிழர் அரசியல் நிலைமைக்கும் ஒத்துவரக் கூடியதே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தேர்தல் பரப்புரைகள் தொடங்கி, அவை தொடர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் முடிவுகள் என்னாகும் என்பதை ஓரளவு ஊகிக்கக் கூடியதாகவே இருந்தது. அப்போது தேர்தல் முடிவின் பின்னர் ஒரு கட்டுரை எழுதுவதானால் அதன் தலைப்பாக ~கட்டியிருந்த கோவணமும்…| என எழுதலாம் என நினைத்திருந்தேன். கவிப் பேரரசு வைரமுத்துவின் ~வேட்டி பற்றிய கனவில் இருந்த போது, கட்டியிருந்த கோவணமும் களவு போனது| என்ற வரிகளில் இருந்து இந்தச் சொற்றொடரை எடுத்தாள நினைத்திருந்தேன். இந்தத் தலைப்புக் கூட இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருந்துவதாகவே இருப்பதாக நினைக்கிறேன்.
சாதனைகள்
சிறி லங்கா பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது நாட்டை ஆட்சி செய்தது ஐக்கிய தேசியக் கட்சி. பாரம்பரியம் மிக்க இந்தக் கட்சி முதலாவது அரசியல் அமைப்பையும். இரண்டாவது குடியரசு அரசியல் அமைப்பையும் நாட்டுக்கு வழங்கியிருந்தது. சிறி லங்காவை அதிகமான ஆண்டுகள் ஆட்சிசெய்த பெருமை பெற்ற இந்தக் கட்சியால் இந்தத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக் கூட வெற்றிபெற முடியவில்லை. நாடளாவிய அடிப்படையில் பெற்ற ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் மாத்திரமே இந்தக் கட்சியின் இருப்பைத் தக்கவைப்பதாக உள்ளது.
சிறி லங்காவின் இரண்டாவது பெரிய தேசியக் கட்சியான சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்ட சிறி லங்கா பொதுஜன முன்னணிக் கட்சி, தான் சந்தித்த முதலாவது நாடாளுமன்றத் தேர்தலிலேயே 145 ஆசனங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது. மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காகக் களமிறங்கிய இக் கட்சி கிட்டத்தட்ட அந்த எண்ணிக்கையை எட்டிப் பிடித்துள்ளது. பங்காளிக் கட்சிகளின் 6 ஆசனங்களுடன் அந்தக் கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவில் பெற்றுவிடும் வாய்ப்பு உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து – கடந்த அரசுத் தலைவர் தேர்தலின் பின்னர் உருவான – சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைப் பெற்று எதிர்க் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஒரு புதிய கட்சி, அதுவும் குறுகிய கால இடைவெளியில் 54 ஆசனங்களைப் பெறுவது ஒரு சாதனையே.
வடக்கே முன்னாள் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனைத் தலைவராகக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தனது கன்னித் தேர்தலிலேயே ஒரு ஆசனத்தைப் பெற்றிருக்கின்றது. கட்சியின் தலைவர் விக்னேஸ்வரன் 21,554 வாக்குகளைப் பெற்று முதல் தடவையாக நாடாளுமன்றம் செல்கின்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து 2010 ஆம் ஆண்டு பிரிந்து சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கடந்த முறையை விடவும் சுமார் மூன்று மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்று இம்முறை யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும், தேசியப் பட்டியலில் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது. யாழ் மாவட்டத்தில் இருந்து கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 31,658 வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
சோதனைகள்
தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் – நடைபெற்று முடிந்த தேர்தலில் – எவ்வாறு தோற்றுப் போனார்களோ, அதைப் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்திலும், கட்சியின் செயலாளர் கி; துரைராஜசிங்கம் மட்டக்களப்பிலும் தோல்வியைத் தழுவியுள்ளனர். கட்சியின் செயலாளர் கி. துரைராஜசிங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,650 வாக்குகளுடன் ஆறாவது இடத்துக்குத் தள்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேதனைகள்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலாக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதீத பரப்புரைகள் உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சுமந்திரன் அவர்களை ஒரு வழி பண்ணிவிட வேண்டும் என்பதில் கட்சிக்கு உள்ளே இருந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் காலத்தில் அதிக அவதூறுகளுக்கும் பழிச் சொற்களுக்கும் ஆளான ஒருவர் என்றால் அது சுமந்திரனாகவே இருக்க முடியும்.
இதில் உச்சக் கட்டமாக சக வேட்பாளர் ஒருவரின் வெற்றியை சுமந்திரன் களவாடி விட்டார் என்ற பரப்புரை வேகமாக முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் பல வதந்திகளும், காணொளிகளும் – உள்நோக்கத்தோடு, பொறுப்பற்ற தனமாக – சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. விகிதாசாரத் தேர்தல் முறைமை பற்றியும், தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை பற்றியும் அறிவோ தெளிவோ அற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசமப் பிரசாரத்திற்கு ஒருசில முறைசார் ஊடகங்களும் களம் தந்து முகஞ்சுளிக்க வைத்தமை வெட்கக் கேடானது.
தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கை
‘தங்களின் உள்ளக் கிடக்கையைத் தமிழ் மக்கள் இந்தத் தேர்தல் மூலம் வெளிக்காட்டி இருக்கின்றார்கள்” என ஒருவர் கூறுவாராக இருந்தால் அது வெற்று வார்த்தையாகவே இருக்க முடியும். ஏனெனில், இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு ஊடாக ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களை தமிழ் மக்கள் ஆதரித்து நிற்பது புலனாகின்றது.
2004 அம் ஆண்டுத் தேர்தலில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கி அழகு பார்த்தவர்கள் தமிழ் மக்கள். இம்முறை அதனைப் பத்தாகக் குறைத்துக் காட்டியுள்ளார்கள். உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாவிடில் அடுத்தமுறை முற்றாகவே காணாமற் போகவேண்டி ஏற்படும் என இதனைப் புரிந்து கொள்ள முடியுமா?
~தமிழ்த் தேசியம்| என்னும் கருத்துருவை ஆதரித்து நிற்பவர்களாகக் கருதப்படும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோரை வெற்றிபெற வைத்த மக்கள், ஏனைய மாவட்டங்களில் போட்டியிட்ட அவர்களது கட்சிக் காரர்கள் எவரையும் வெற்றிபெறச் செய்யவில்லை. திருமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியின் சார்பில் விடுதலைப் புலிகளின் முன்னைநாள் திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் ரூபன் (இராஜேந்திரம் யதீந்திரா) போட்டியிட்டு இருந்த போதிலும் கூட அவரும் தோல்வியையே தழுவியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் (ச. சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், த. சித்தார்த்தன்) திருகோணமலையில் போட்டியிட்ட இரா சம்பந்தனையும் வெற்றிபெற வைத்த மக்கள், மட்டக்களப்பில் இரண்டு புதிய முகங்களைத் தெரிவு செய்துள்ளனர். இங்கே இரா சாணக்கியன், கோ. கருணாகரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர். (கோ. கருணாகரன் 1989 தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றவர் ஆயினும் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கவில்லை என்பது நினைவில் கொள்ளத்தக்கது.)
சுமந்திரனைப் போன்று இல்லாது விட்டாலும் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கோ. கருணாகரன் தொடர்பிலும் தமிழ்த் தேசியவாதிகளின் எதிர்ப்புப் பிரசாரம் தேர்தலுக்குத் தேர்தல் இடம்பெறுவது வழக்கம். இம்முறையும் அது இடம்பெற்றது. அதனையும் மீறி அவர் வெற்றி பெற்றிருக்கின்றார். தவிர, – அவரே செய்தியாளர் சந்திப்பில் கூறியதைப் போன்று – கட்சிக்கு உள்ளேயும் அவருக்கு எதிர்ப்பு இருந்துள்ளது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சார்ள்ஸ் நிமலநாதன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரோடு வினோ நோகராதலிங்கம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மூவருமே முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே. எனினும் நோகராதலிங்கம் கடந்த முறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி இருக்கவில்லை.
இதேவேளை, வடக்கு கிழக்கில் போட்டியிட்டுத் தெரிவான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுள் மட்டக்களப்பில் முன்னைநாள் கிழக்கு முதலமைச்சர் சி. சந்திரகாந்தனுக்கும், யாழ்ப்பாணத்தில் அங்கயன் இராமநாதனுக்கும் அதிகூடிய விருப்பு வாக்குகளைத் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர். பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சந்திரகாந்தன், எந்தவொரு பிரசாரத்திலும் கலந்து கொள்ளாத நிலையில் 54,198 வாக்குகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார். மறுபுறம் அங்கயன் 36,365 வாக்குகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றார்.
மேலே சொல்லப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப் படுத்தியே வாக்குகளைக் கோரினர். தவிர, இதே கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் சிறி லங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிட்ட – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னனைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் – ச. வியாழேந்திரனும் வெற்றி பெற்றுள்ளார். ஆகவே, மக்கள் அபிவிருத்தியை ஆதரித்து நிற்கிறார்கள் எனக் கொள்வதா?
மட்டக்களப்பைப் பொறுத்தவரை சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் முஸ்லிம் விஸ்தரிப்புவாத எதிர்ப்பு என்ற புள்ளியில் ஒன்று சேர்பவர்கள். இதே கொள்கையைக் கொண்ட முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 29,379 வாக்குகளைப் பெற்றுள்ளார். (இது வழக்கமாக அந்த மாவட்டதில் இருந்து தெரிவு செய்யப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விடவும் அதிகமாகும்.) இவரும் தனது பரப்புரைகளின் போது முஸ்லிம் எதிர்ப்பு எனும் விடயத்தையே கையில் எடுத்திருந்தார். எனவே, கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் முஸ்லிம் விரோத நிலைப்பாட்டில் உள்ளனரா?
தேசியப் பட்டியல்
இம்முறை வடக்கு கிழக்கில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ளது. இவை யாருக்குக் கிடைக்கும் என்ற ஊகங்களும், யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விருப்பங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை பெரும்பாலும் இந்த ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கே வழங்கப்படும் என ஊகிக்கலாம். மூவின மக்களும் வாழும் மாவட்டம், இன முரண்பாடுகள் நிறைந்த மாவட்டம், எல்லைப்புற மாவட்டம் எனப் பல அம்சங்கள் கணக்கில் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன. அது மாத்திரமன்றி, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை முற்றாகவே இழந்துள்ள அந்த மாவட்ட மக்களுக்கு ஒரு தலைமைத்துவத்தை வழங்க வேண்டிய தேவையும் இருக்கின்றது.
ஆனால், கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் செயலாளர் கி; துரைராஜசிங்கம் ஆகியோர் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில் அவர்களில் ஒருவருக்கு தேசியப் பட்டியல் அசனத்தை வழங்கி கட்சியையும், அம்பாறை மாவட்ட தலைமைத்துவத்தையும் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது. முன்னொரு சந்தர்ப்பத்தில் மாவை சேனாதிராஜா அவர்கள் இவ்வாறு அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றி இருந்தார், அந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு இருந்தார் என்பதுவும் நினைவில் கொள்ளத்தக்கது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தனது தேசியப் பட்டியல் ஆசனத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வழங்க வேண்டும் என்பதே கிழக்கு மாகாண மக்களின் விருப்பாக உள்ளது. ஏற்கனவே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி வடக்கிற்கான கட்சி என்பதான ஒரு அபிப்பிராயம் உள்ள நிலையில் அந்த எண்ணத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு உத்தியாக இரு அமையக் கூடும்.
ஆனால், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களின் பார்வை வேறாக இருக்கிறது. மக்கள் பார்வையிலிருந்து இந்த விடயத்தை அணுகுவதை விட, கட்சியின் வளர்ச்சி என்ற கோணத்தில் இருந்தே இதனை அணுகுவது நல்லது என்பது அவர்களின் அபிப்பிராயம். அந்த அடிப்படையில் கட்சியின் செயலாளரான முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கி அவரைக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கட்சியை வளர்க்கப் பாடுபடுவதே சிறந்தது என்கிறார்கள் அவர்கள்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைவு
“தேர்தலில் எதிரெதிர் அணிகளில் போட்டியிட்டோம். தேர்தல் முடிந்து விட்டது. எதிர்வரும் காலங்களில் இணைந்து செயற்படுவோம் வாருங்கள்” என அறைகூவல் விடுத்துள்ளார் சுமந்திரன். இது சாத்தியமா?
தேசியப் பட்டியல் ஆசனம் உட்பட வடக்கு கிழக்கில் 18 ஆசனங்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்வசம் கொண்டுள்ளனர். இவை தவிர கொழும்பில் மனோ கணேசன் உள்ளிட்ட 9 தமிழ் ஆசனங்கள் உள்ளன. பொதுவான விடயங்களில் இவர்கள் இணைந்து செயற்படும் சூழல் உண்டா? தற்போது இல்லாது விடினும் எதிர்வரும் காலத்திலாவது இத்தகைய ஒரு கூட்டு அல்லது ஒருமைப்பாடு சாத்தியமா? இதற்கான விடையைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஆனால், தமிழ் மக்கள் இத்தகைய ஒரு ஒருங்கிணைப்பை எதிர்பார்த்து நிற்கிறார்கள். அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புரிந்து கொண்டால் மக்களுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது.
(இக்கட்டுரை 09.08.2020 அன்று வீரகேசரியில் முதலில் வெளிவந்தது)