நடராஜரின் புன்னகையும், தீர்ப்பின் ரகசியமும்
புத்தாண்டில் மிகவும் மகிழ்ச்சியான மனிதராக இருந்துகொண்டிருப்பவர் சுப்பிரமணியசுவாமியாகத்தான் இருக்கமுடியும்.சங்கராச்சாரியார் விடுதலையிலும் சரி தில்லைக் கோவில் நிர்வாகம் மீண்டும் தீட்சிதர்களின் கைகளில் வந்துள்ளதிலும் சரி,அவரைப்போல மகிழ்ந்து கொண்டாடுபவர் யாராக இருக்கமுடியும்?.ஒரு சாதாரண அரசியல் ஞானம் கொண்டவனுக்கு சுப்பிரமணியம் சுவாமி என்பவர் அரசியலில் வேடிக்கைகளை நிகழ்த்தும் ஒரு விகடகவி.ஆனால் உண்மை நாம் நினைப்பதைவிடப் பெரியது.அது பிரம்மாண்டமானது.நியாம்கிரி மலையை கார்ப்பொரேட்டுகளுக்கு தாரை வார்க்கக்கூடாது என்னும் வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நியாம்கிரி வாழ் பழங்குடி மக்கள் வேண்டியபோது “இவ்வழக்குக்கும்,உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என பதிலுக்கு வினவிய உச்சநீதிமன்றம்,தில்லைக் கோவில் வழக்கில் தன்னையும் ஒரு நபராக அவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று சுப்ரமணியசுவாமி கோரியபோது “இவ்வழக்குக்கும்,உங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என திருப்பிக்கேட்கவில்லை. அவரது கோரிக்கையை ஏற்று உடனடியாக அவ்வழக்கில் அவரையும் இணைத்துக்கொண்டது.சுவாமியின் தந்திரமான வாதங்களும்,தமிழக அரசு வேண்டாவெறுப்பாக வழக்கை நடத்தியதும் தில்லைக் கோவில் மக்களிடமிருந்து பறிபோய் மீண்டும் தீட்சிதர்களிடமே சென்றுசேர்ந்துவிட்டது.
இதற்குமுன்னர் 1888ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் முத்துசாமி அய்யர்,ஷெஃபர்டு என்னும் இரு நீதிபதிகள் தில்லை நடராஜர் கோவிலின் மீது தீட்சிதர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்னும் தீர்ப்பை தெளிவாகவே வழங்கி உள்ளனர்.அத்தீர்ப்பை அப்போதே மதிக்காத தீட்சிதர்கள் தொடர்ந்து கோவிலின் நிர்வாகத்தை,அதிகாரத்தை தாங்களே மேற்கொண்டுவந்தனர். பின்னர் குமாரசாமி ராஜா,ராஜாஜி ஆட்சிக்காலங்களிலும் கூட வழக்கு விசாரணை நீண்டுகொண்டே வந்தது. தீட்சிதர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டே வந்தது.காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் இவ்வழக்குகளிலிருந்து தமிழக அரசு தன்னை விடுவித்துக்கொண்டது.கோவில் தீட்சிதர்களின் முறைகேடுகள் உச்சத்தைத் தொட்டபோதுதான் அப்போதைய எம்.ஜி.ஆர். அரசு 05.08.1987ல் கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டது.தீட்சிதர்கள் நீதிமன்றம் நாடினார்கள்.பிப்.2009ல் செயல் அதிகாரியை நியமித்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு சொன்னது.மீண்டும் முறையிட்டார்கள்.சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து மீண்டும் தெளிவானதொரு தீர்ப்பை செப்.2009ல் வழங்கியது.தீட்சிதர்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு உள்ளது:
“பொது தீட்சிதர்களோ அல்லது அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் கட்டவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அரசியல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது.
சிதம்பரம் நடராஜர் ஆலயம் சோழ, பாண்டிய மற்றும் விஜயநகர அரசர்களால் 10 முதல் 13-ம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டுள்ளது. சைவர்கள் மற்றும் வைணவர்கள் இணைந்து இந்த ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளனர். எனவே, இந்த கோயில் தங்கள் சமூகத்துக்கே உரியது என்று பொது தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது.
நடராஜர் ஆலயத்துக்குச் சொந்தமான 400 ஏக்கர் விளைநிலங்கள், காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்துக்கு பொது தீட்சிதர்கள் பல ஆண்டுகளாக முறையான கணக்கு எதையும் வைத்திருக்கவில்லை. எனவே, ஆலயத்தை நிர்வகிக்கும் கடமையிலிருந்து பொது தீட்சிதர்கள் தவறிவிட்டனர் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் முடிவு செய்துள்ளார். கோயிலுக்கு வழங்கப்பட்ட “கட்டளைகள்’ மற்றும் நிலங்களை அடையாளம் காணவும், வருவாயைப் பெருக்கவும் செயல் அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சரியானதே. சிதம்பரம் நடராஜர் ஆலயச் சொத்துகளை முறையாக நிர்வகித்திருந்தால், திருப்பதி மற்றும் பழனிக்கு நிகராகச் செல்வத்தைப் பெற்ற ஆலயமாக மாறியிருக்கும். வரலாறு மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த நடராஜர் ஆலயத்தைப் புதுப்பிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் ரூ. 50 கோடியிலான திட்டத்தை 13-வது நிதி கமிஷனிடம் செயல் அதிகாரி அளித்துள்ளார். நடராஜர் ஆலயத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும் என்ற இந்து அறநிலையத் துறையின் ஆர்வத்தை இது காட்டுகிறது. செயல் அதிகாரிக்கான பணிகளும், அதிகாரங்களும் அரசாணையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. செயல் அதிகாரி நியமனத்தால் பொது தீட்சிதர்கள் யாரும் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோயிலைச் சிறப்பாக நிர்வாகம் செய்ய பொது தீட்சிதர்களும், செயல் அதிகாரியும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்தே செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். செயல் அதிகாரியும் கோயில் நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் செயல் அதிகாரி நியமனத்தில் தலையிட்டால், அது பாரம்பரியமிக்க கோயிலைக் காக்கும் கடமையிலிருந்து நீதிமன்றம் தவறியதுபோல் ஆகும். அவ்வாறு செய்தால் பழம்பெருமை வாய்ந்த கோயில் அழிவதோடு, பொது தீட்சிதர்களின் வருவாய் ஆதாரமும் பாதிக்கும்”
மதிப்பிற்குரிய உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பை பார்த்ததா,இல்லையா.தெரியவில்லை.பல ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போதே ஏராளமான வரலாற்றுப்பூர்வ ஆதாரங்கள்,தொல்லியல் ஆதாரங்கள்,கல்வெட்டு மற்றும் பட்டயங்களின் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டிருக்கும்.
தில்லை நடராஜர் கோவிலுக்கென்று ஆகமவிதிகள் இருக்கின்றன,சம்பிரதாயங்கள் இருக்கின்றன,தீட்சிதர்கள் பரம்பரை பரம்பரையாக அக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர்,சுல்தான்களின் படையெடுப்பின்போது தீட்சிதர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்,அவர்களது தியாகங்கள் மதிக்கப்படவேண்டும் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.சரி.அப்படியானால் இந்திய சுதந்திரத்திற்குப் பாடுபட்டு மக்களை வழிநடத்திய தலைவர் ஜவஹர்லால் நேரு என்பதற்காக அவரது வாரிசுகளுக்கு இந்திய நாட்டை எழுதி வைத்துவிடமுடியுமா என்ன? (சுதந்திரத்திற்குப் பிந்தைய காலங்களில் பெரும்பாலும் அவரும்,அவரது வாரிசுகளும்தான் ஆட்சியை அனுபவித்திருக்கிறார்கள் என்பது வேறு).திருவிதாங்கூர் சமஸ்தானத்து வாரிசுகளுக்கே பத்மனாதசுவாமிக் கோவிலின் பாதாள அறைகளில் வைக்கப்படிருக்கும் தங்கப்புதையலை தாரை வார்த்துவிடலாமா?ஆடல் மகளிர் என்னும் போர்வையில் ஒவ்வொரு கோவிலிலும் ஏராளமான தேவதாசிப் பெண்களை வைத்துக்கொண்டு ஒழுக்கநெறியில் பிறழ்ந்து உழன்றார்களே அப்போதைய கோவில் அதிகாரவர்க்கத்தினர்.அது ஒரு வழிவழி சம்பிரதாயம் என்று இப்போதும் வைத்துக்கொள்ளமுடியுமா?
ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.கோவில் என்பது ஒரு சமூக நிறுவனம்.மக்களிடம் ஆன்மிகம் என்னும் பெயரில் கொஞ்சமாவது மனஅமைதியைக் கொண்டுவரும் ஒரு இருப்பிடம். காலம் காலமாக பொதுமக்களின் உழைப்பும்,வியர்வையும்,இரத்தமும்தான் அரசர்களின்,செல்வந்தர்களின் செல்வமாக மாறிக்கொண்டே இருக்கிறது.மன்னர்களின்,செல்வந்தர்களின் செல்வத்திமிர் ஒவ்வொரு கோவிலையும் தங்கமுடையிடும் வாத்துகளாக மாற்றியது.அக்கோவிலுக்கு ஏராளமான சொத்து சேர்ந்தது.காலப்போக்கில் ஒவ்வொரு கோவிலும் ஒரு மிகப்பெரும் நிலக்கிழாராக மாறிப்போனது.சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் மதசம்பிரதாயங்களைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவுகள் கொண்டுவரப்பட்டன.அதில் தவறில்லை.அப்பிரிவுகளுடன் அக்கோவிலின் நிர்வாகத்தையும் போட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.
தில்லைக் கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற கொலைகளில் தீட்சிதர்களுக்கும் தொடர்பிருப்பதாக, நடராஜர் கோவில் சொத்தை போலி ஆவணங்கள் தயாரித்து தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக, தீட்சிதர்களுக்குள்ளாகவே கோஷ்டி மோதல்கள் நடந்ததாக,சிற்றம்பலத்தில் தமிழில் தேவாரம் பாடுவதற்கு ஆறுமுகசாமிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் தீட்சிதர்கள் அவருக்கு இடையூறு செய்ததாக, பக்தர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக தீட்சிதர்களின்மீது குற்றம் சொல்லப்படுகிறது.வழக்குகளும் பதியப்பட்டிருக்கிறது. தீட்சிதர்கள் கோவில் பணிகளில் மட்டுமல்ல,பல்கலைக்கழகத்தில் ஊழியர்களாகவும்,உள்ளாட்சிப் பணிகளில் வார்டு கவுன்சிலர்களாகவும் பணிபுரிகிறார்கள். இப்படியாக தீட்சிதர்களின் லீலைகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.இப்படியான ஒழுங்கீனங்களைத் தவிர்க்க ஒட்டுமொத்தமாக தீட்சிதர்களை கோவிலில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் எனக்கேட்கவில்லை.குறைந்தபட்சமாக ஆலயத்தின் நிர்வாகத்தை செயல் அலுவலரிடமாவது மீண்டும் ஒப்படைக்கப்படவேண்டும்.
அம்பலத்தில் தமிழில் தேவாரம் பாடக்கூடாது என்னும் வாதத்திற்கு வருவோம். தில்லை சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடிய ஆறுமுகசாமி என்னும் சிவனடியாரை 2000-ம் ஆண்டில் தீட்சிதர்கள் அடித்து,அப்புறப்படுத்தினர். கோவிலில் தேவாரம் பாடுவது ஆன்மிகமா,இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கு இந்து மடாதிபதிகளின் சபை ஒன்றை அமைக்கவேண்டும் என்றும் சுப்பிரமணியசுவாமி கூறுகிறார்.தொடர்ச்சியான எட்டாண்டுப் போராட்டத்திற்குப்பின்னர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர் தினமும் தேவாரம் பாடினாலும் அவருக்கு தீட்சிதர்களால் தொடர்ச்சியாக தொந்தரவுகள் தரப்படுகிறது. ஆலய வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்..திருஞானசம்பந்தரும்,திருநாவுக்கரசரும்,சுந்தரரும் சிதம்பரம் சென்று 11 தேவாரத் திருப்பதிகங்களைப் பாடியுள்ளனர்.தமிழகம் முழுவதும் எல்லாச் சைவத்தலங்களிலும் பாடப்பட்ட மூவர் தேவாரமும் சிதம்பரம் நடராஜர் கோவிலில்தான் ஒன்றாகத் தொகுத்து வைக்கப்பட்டிருந்தன.கரையான் அரித்தது போக எஞ்சியவற்றை முதலாம் இராசராசன்(கி.பி.1014)நம்பியாண்டார் நம்பி மூலம் எடுத்துக் காப்பாற்றினார்.பல தளங்களில் சிறப்பாகத் தேவாரப்பதிகங்கள் பாடிய 48 பிடாரர்களை(ஓதுவார்கள்)இராஜராஜன் தான் எடுத்த தஞ்சைப்பெருவுடையார் கோவிலில் பாட நியமித்தான்.அவர்களில் சிலர் தில்லையை சேர்ந்தவர்கள்.எனவே இராஜராஜனுக்கு முன்பே சிதம்பரத்தில் தேவாரம் பாடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. தில்லை அம்பலத்தில் இரவு,பகல் பாராமல் எப்பொழுதும் இடைவிடாமல் அங்கு திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகங்களைப் பாடிக்கொண்டிருக்கவேண்டும் என்பதற்காக முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சர் நரலோகவீரன் காலிங்கராயன் அக்கோவிலுக்கு பெரும் கொடையளித்தான் என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது(தென்னிந்தியக்கல்வெட்டுத் தொகுதி 4:கல்வெட்டுத்துறை ஆண்டறிக்கை 1888ஆம் வருடம் எண்.120).
ஓலைச்சுவடியில் இருந்தால் தேவாரம் அழிந்துவிடும் என்று கருதிய காலிங்கராயன் அவை முழுவதையும் செப்பேடுகளில் பொறித்து சிதம்பரம் கோயிலில் சிற்றம்பலத்தில் வைத்தான்.இச்செய்தி,
“முத்திறந்தார் ஈசன் முதல்திறத்தைப் பாடியவாறு
ஒத்தமைத்த செப்பேட்டின் உள் எழுதி-இத்தலத்தில்
எல்லைக் கிரிவாய் இசை எழுதினான் கூத்தன்
தில்லைச் சிற்றம்பலத்தே சென்று”
என்னும் பாடலாக மேற்சொன்ன கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் “தென்வேந்தன் கூன் நிமிர்த்த செந்தமிழர்” என்றே கூறப்படுகிறார்.
தில்லைக் கோயிலில் இறைவனை வேளூர்கிழவன் கூத்தாழ்வான் தன் துணைவி கொத்தலர்குழலியோடு “புகழ்த் தமிழ்ப்பாமாலை” பாடி வணங்கியுள்ளான். (சிற்றம்பலத்தில் தமிழோசை,வரலாற்றுக்குறிப்புகள்,முனைவர் புலவர் செ.இராசு,தமிழர் கண்ணோட்டம்,அக்டோபர்,2006). தில்லைக் கோவிலின் அம்பலத்தில் தமிழ் ஏறுவதற்கு இனி என்னதான் ஆதாரங்கள் வேண்டும்?
இனி கோவிலின் கடந்த கால நிர்வாக வரலாறுகளைப் பார்ப்போம்.
சோழர்களின் குலதெய்வம் தில்லை நடராஜப்பெருமான்.சோழர்கள் காலத்தில் அரசனின் ஆணைகள் அடங்கிய ஓலைகள் கண்காணி செய்வார்,கார்யம் செய்வார்,சமுதாயம் செய்வார்,கோயில் நாயகம் செய்வார்,திருமாளிகைக்கூறு செய்வார்,கோயில் கணக்கர் ஆகியோருக்கே அனுப்பப்பட்டது.இவர்கள் எவரும் தீட்சிதர் இல்லை.அரசன் கட்டுப்பாட்டிலேயே கோயில் நிர்வாகம் இருந்தது.1311 முதல் 76 ஆண்டுகள் சிதம்பரத்தில் பூஜை செய்யப்படவில்லை.விஜயநகர இரண்டாம் அமைச்சன் முத்தய்ய தண்டநாயகன்தான் பூஜைக்கு ஏற்பாடு செய்தான்.பீஜப்பூர் சுல்தான் போன்றோர் தொல்லையால் சிதம்பரம் நடராஜர் 1648 முதல் 1686 வரை கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் 10 மாதங்கள் 20 நாட்கள் நடராஜர் துறையூர் பாளையக்காரர் ரெட்டியார் பாதுகாப்பிலும்,குடுமியான்மலையிலும்,பின்னர் மதுரையிலும் இருந்ததாக வரலாறு.செஞ்சி மராட்டிய மன்னன் சாம்போசி காலத்தில்தான் நடராஜர் மீண்டு(ம்) வந்தார்.17ம் நூற்றாண்டில் ஒருமுறை பூஜை தடைப்பட்டபோது லிங்கம் நாயக்கர் என்ற வீரசைவர் முயற்சியால் அப்பூஜை தொடர்ந்தது. 17ம் நூற்றாண்டு தொடங்கி தொடர்ந்து சைவ அடியார்களாலேயே கோவில் நிர்வகிக்கப்பட்டு வந்திருப்பதை ஆதாரங்களுடன் காட்டமுடியும்.1610ல் கும்பகோணம் சைவவேளார் சிவப்பிரகாசரும்,1684ல் தில்லைச்சிற்றம்பலத் தவமுனியும்,1702ல் பாதபூசை அம்பலத்தாடுவாரும்,1711ல் தில்லை காசித்தம்பிரானும்,1827ல் முத்தையாத்தம்பிரானும் சிதம்பரம் கோயில் நிர்வாகிகளாக இருந்துள்ளனர்.திருவாரூர்க் கோயிலிலும்,திருப்பனந்தாள் மடத்திலும் உள்ள பத்து சிதம்பரம் செப்பேடுகளில்தான் மேற்கண்ட ஆதாரங்கள் உள்ளன. அண்மைக்காலம் வரை பிச்சாவரம் ஜமீந்தார் நிர்வாகத்தில்தான் சிதம்பரம் கோயில் நிர்வாகம் இருந்தது.இரவு பூஜை முடிந்து கோவில் பூட்டப்பட்டு சாவி ஜமீனுக்குச் செல்லும்.காலையில் சாவி கோவிலுக்கு வரும்.தீட்சிதர்களுக்குள் ஏற்படும் பிணக்கை தீர்த்து வைக்கும் நடுவராகவும் ஜமீன் செயல்பட்டுள்ளது.05.11.1911ல் கூட 12 தீட்சிதர்கள் பிச்சாவரம் ஜமீந்தார் சூரப்ப சோழனாருக்கு எழுதிய கடிதத்தில் இது உறுதிப்படுகிறது. கிடைக்கும் வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் தீட்சிதர்களின் சொத்துதான் தில்லைக்கோவில் என்பதற்கான ஆதாரம் துளியும் இல்லை. அரசு உடனடியாக கோவில் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சட்டம் ஒன்றை கொண்டுவரவேண்டும்.தீட்சிதர்கள் அக்கோவிலின் ஊழியர்களாக மாற்றப்படவேண்டும்.
தில்லை நடராஜர் ஆலயத்தை பன்னாட்டு முதலையான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் சுப்பிரமணியசுவாமி ஒப்பிடும்போதே,செல்வம் கொழிக்கும் தனியார் நிறுவனமாக தில்லை ஆலயத்தை தங்களுடனேயே வைத்துக்கொள்ளவேண்டும் என்னும் சு.சுவாமியின்,தீட்சிதர்களின் ஆசையை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்கிறதோ இல்லையோ நாம் புரிந்துகொள்ளவேண்டும். நடராஜத் திருமேனியின் ஆனந்தத் தாண்டவத்தின் வேகம் மிக அதிகம் என்றாலும், அந்த அசைவின் வேகம் காட்டாமாலேயே, திருமுகம் மிக மிக அமைதியாக புன்முறுவலோடு காணப்படும்.நாமும் வழக்கில் வேகத்தையும்,தீர்ப்பில் எப்போதும் புன்னகையையும் காட்டிக்கொண்டிருப்போம்!.
(தீராநதி,பிப்ரவரி,2014)