தோழர் எஸ்.வி. ராஜதுரை – பல்பரிமாண சமூகப்போராளி
தமிழ் இந்துவுக்காக தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்களின் சுருக்கமான வரலாற்றை எழுதுவதற்காக, அவரின் எழுத்துகளை மீண்டும் ஒருமுறை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தோழர் எஸ். வி. ஆர் தமிழ்ச்சமுதாயத்திற்கும், தமிழ்நாட்டு இடது இலக்கியத்திற்கும், பிற மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் பல்வகை மொழியாக்கத்திற்கும், மனித உரிமைப் பணிகளுக்கும் அவர் ஆற்றியுள்ள பங்கைக் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. இக்கட்டுரை வெளிவந்தபிறகான அடுத்தடுத்த நாட்களில் எஸ். வி. ஆர் குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் சில தோழர்களால் மேற்கொள்ளப்பட்டன. நான் செய்த வேலை மிகச்சரியானது என அப்போதுதான் உணர்ந்துகொண்டேன். ஒருவித மனத்திருப்தியும் எனக்கு ஏற்பட்டது. எஸ். வி. ஆரிடம் சில தோழர்கள் குறை கண்டுபிடிப்பது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. குறைகளற்ற மனிதர் யார்? ஆனால் அவரின் வாழ்நாள் சாதனைகளை ஒரு அறுநூறு வார்த்தைகளில் எழுதுவதைக் கூடப் பொறுத்துக்கொள்ள இயலாத தோழர்களின் மார்க்சிய அறம் குறித்து நான் சலிப்படைகிறேன்.
தமிழ் இந்துவில் வெளியான கட்டுரையின் முழுவடிவம் கீழே:
– செ. சண்முகசுந்தரம்
எஸ்.வி. ராஜதுரை என்னும் மார்க்சிய அறிஞர் தமிழகத்தின் அறிவுச்சூழலில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் குறிப்பிடத்தக்கவை. மார்க்சிய அறிஞர் என தம்மைப் பற்றி யார் குறிப்பிட்டாலும் அவர் கோபம் கொள்வார். தனக்கென எந்தவொரு அங்கீகாரத்தையும் மறுப்பவர். ஆயல் கலை இலக்கியப் பண்பாட்டுக் களம் சார்பாக வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆயல் விருது எஸ்.வி.ஆருக்கு வழங்கப்படவிருக்கிறது. ஏற்கனவே குத்தூசி அறக்கட்டளை அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. அவர் ஒரு கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா முழுமைக்குமான ஒரு சிறந்த மனித உரிமைப் போராளி. தமிழ்நாட்டில் சுயமரியாதை, திராவிட இயக்கங்கள் உருவாக்கிய ஒரு வெளியில், சுயம்புவாகத் தோன்றியவர். தமிழகத்தின் முதன்மையான சிந்தனையாளர். சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கு எஸ்.வி.ஆரின் வாழ்கையையும், எழுத்துகளையும் ஒருவர் அறிந்திருக்கவேண்டியது மிக முக்கியமானது.
இளம் வயதில் திமுகவின் மீது குறிப்பாக ஈ.வெ.கி. சம்பத் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். 1965 இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார். எஸ்.வி.ஆர் ஒரு முறை பெரியார் பங்கேற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்திருக்கிறார். நிகோலாய் ஆஸ்ட்ரோவ்ஸ்கி எழுதிய “வீரம் விளைந்தது” நாவல்தான் தன்னை ஒரு கம்யூன்ஸ்ட் ஆக்கியது என அவர் சொல்வதுண்டு. மனிதர்களில் ஆகச்சிறந்த மனிதாபிமானியாக, சக மனிதனை நேசிப்பவனாக உள்ளவன் மட்டுமே கம்யூனிசத்தை நோக்கி வரமுடியும். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு எஸ்.வி.ஆர்.
தொடர் வாசிப்பு அவரை மேலும் மேலும் இடதுபக்கம் திரும்பச் செய்தது. எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோரோடு இணைந்து கோவையில் சிந்தனையாளர் மன்றத்தை தொடங்கி, அதில் தத்துவ உரையாடல்களை மேற்கொள்கிறார். இதன் நீட்சியாக புதியதலைமுறை மார்க்சிய இதழ் தொடங்கப்படுகிறது. தீவிர மார்க்சிய லெனினிய கட்சி செயல்பாடுகளில் நுழைகிறார். ‘பரிமாணம்’ இதழிலும் அவர் தொடர்ச்சியாக எழுதுகிறார். ‘இனி’ என்னும் சிறுபத்திரிகையை நடத்தினார். தொடக்கத்தில் சிறுகதைகளை மட்டுமே எஸ்.வி.ஆர். எழுதி வந்தார். படைப்பிலக்கியத்தில் மிகப்பெரும் ஆளுமையாக வரவேண்டும் என்ற ஆசையும் அவருக்கிருந்தது. மனோ என்னும் பெயரில் எழுதிவந்த மனோகரனை எஸ்.வி.ஆர். ஆக மாற்றியது அவரின் நெருங்கிய நண்பர் க்ரியா ராமகிருஷ்ணன்தான். 1980 களில் அவர் சென்னையில் வசித்தபோது, எஸ்.எஸ்.கண்ணணோடு இணைந்து கார்ல் மார்க்ஸ் நூலகத்தைத் தொடங்கினார். ரோஜா லக்சம்பர்க் படிப்பு வட்டத்தை ஏற்படுத்தி அதில் தொடர்ச்சியாக மார்க்சிய உரையாடலை முன்னெடுத்தார்.
எஸ்.வி.ஆரின் தொடக்ககால நூலான ‘அந்நியமாதல்’ மார்க்சியம் பற்றிய பல பிரச்னைகளை முதல்முறையாக தமிழில் அறிமுகப்படுத்தியது. அது மட்டுமல்ல, பல பிரச்னைகளில் வழக்கமாக மார்க்சியவாதிகள் கொள்ளும் அணுகுமுறையிலிருந்தும் அது விலகி நின்றது. அதனால்தான் அது ஒரு அசல் நூலாக தமிழக அறிவுச்சூழலில் போற்றப்பட்டது.
எஸ்.வி.ஆரின் அறிவு நாட்டமும், தேடலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தும். இணையவசதிகள் இல்லாத 1970 களில் சாத்தர் குறித்தும், இருத்தலியல் குறித்தும் பயின்று அதை மற்ற நண்பர்களுக்கும் போதித்தவர் எஸ்.வி.ஆர். தான் பெற்ற அறிவை மற்றவரும் பெறவேண்டும் என்ற பெரும் ஆவல் கொண்டவர். அவருக்கு வாசிப்பைத் தவிர இசையும், சினிமாவும், நாடகமும் கொள்ளைப் பிரியம். தான் வாழ்ந்துவரும் கோத்தகிரி வீட்டில் பெரும் நூலகத்தோடு இசைத்தட்டுகளையும் அழகாகப் பராமரித்து வைத்திருப்பார். மேலை நாட்டு இசை என்றாலும், புகழ்மிக்க அயல்மொழிப் படங்கள் என்றாலும் அவருக்கு பெரும் விருப்பம். எந்தவொரு அயல்மொழி திரைப்படம் குறித்தும், இசைமேதை குறித்தும் அவருடன் நீங்கள் உரையாட முடியும். எஸ்.வி.ஆரிடம் நீங்கள் ஒரு மாணவனாக ஏராளம் கற்கமுடியும்.
எஸ். வி. ஆரின் மார்க்சிய அறிவு குறித்து நாம் வியப்படையாமல் இருக்கமுடியாது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இணைந்து படைத்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், இளம் மார்க்சிய அறிஞரான மார்ஸெல்லோ முஸ்ட்டோவின் நூலையும் தமிழில் பெயர்த்திருக்கிறார். எஸ்.வி.ஆர். எழுதிக்குவித்த நூல்கள் கிட்டத்தட்ட நூறுக்கும் மேலாக இருக்கும். கம்யூனிசம், தத்துவம், சோவியத் இலக்கியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம், பெண்ணியம் என்னும் தலைப்புகளில் இந்நூல்களை அடக்கலாம்.
ஸ்டாலினிச சோவியத்யூனியனை விமர்சனம் செய்த அதே நேரத்தில் லெனின் காலத்திய போல்ஷ்விக் சோவியத் மரபை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இச்சூழலில் அவர் உருவாக்கிய நூல்தான் “ரஷ்யப் புரட்சியின் இலக்கிய சாட்சியம்”. அவருடைய வாழ்வை ஆக்கிரமித்திருந்த இரு பெரும் பகுதிகளை இந்நூல் இணைத்தது. மார்க்சியம், ரஷ்யப் புரட்சி, போல்ஷ்விக் மரபு, போல்ஷ்விக் முன்னோடிகள் குறித்த வாசிப்பும், அக்கறையும் ஒரு பகுதி. சோவியத் இலக்கியங்கள் நமக்கு கற்றுதந்த பாடங்கள் மறுபகுதி. அதுபோல தமிழ்ச்சூழலில் மார்க்சிய மரபை பெரியாரியலோடும், தமிழ் அடையாள அரசியலோடும் இணைத்து எடுத்துச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்துவார்.
மண்டல் கமிசன் காலத்திற்குப் பிந்தைய சூழல் அவரை மெல்ல பெரியாரியத்தை நோக்கி நகர்த்தியது. திருச்சி பாரதிதாசன் பல்கலை. பெரியார் உயராய்வு மையத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற எஸ்.வி.ஆர். ரோஜா முத்தையா நூலகத்தோடு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு குடிஅரசு இதழ்களைப் பதிவேற்றம் செய்யும் முயற்சியில் இறங்கினார். எழுத்தாளர் வ. கீதாவோடு இணைந்து அவர் எழுதிய நூல் “பெரியார் : சுயமரியாதை – சமதர்மம்”. ஆங்கிலத்திலும் வெளியான இந்நூல் தமிழ் அறிவுச்சூழலில் மட்டுமல்லாது அகில இந்தியா முழுமைக்கும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுவரை தட்டையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்த பெரியாரை நோக்கி பொதுவுடமைவாதிகள் நகர்ந்து வருவதற்கு இந்நூல் பெரும் உதவி புரிந்தது. அது மட்டுமல்ல, இந்நூலில் மார்க்சிய தத்துவ அறிஞரான கிராம்சியோடு பெரியார் ஒப்புமைப்படுத்தப்பட்டிருந்தார். பெரியாரியலைக் கோட்பாடாக்கும், தத்துவமயப்படுத்தும் முயற்சியை இந்நூல் தொடங்கி வைத்தது.
மார்க்சிய லெனினிய இயக்கங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலங்களில், அதன் நீட்சியாக மனித உரிமை மீட்புச் செயல்பாடுகளில் அவர் தன்னை மிகத்தீவிரமாக ஈடுபத்திக் கொண்டார். தூக்குதண்டனையிலிருந்து சன்னாசி என்பவரைக் காப்பாற்றியதில் எஸ்.வி.ஆருக்கு மிகப்பெரும் பங்கிருந்தது. மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பதில் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர், பாலகோபால் உள்ளிட்டோரோடு சேர்ந்து பல இயக்கம் கண்டவர்.
நீண்ட நாட்கள் சிறைப்பட்டிருந்த புலவர் கலியபெருமாளை விடுதலை செய்வித்ததில் எஸ்.வி.ஆருக்கு பெரும் பங்குண்டு. பெருஞ்சித்திரனார், புலவர் கலியபெருமாள் மற்றும் பதினாறு இயக்கங்களை இணைத்து ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்புக் கூட்டமைப்பைத் தொடங்கியதிலும் எஸ்.வி.ஆரின் பங்கு அளப்பரியது. பொதுவுடமை, தமிழியம், சாதி எதிர்ப்பு என்னும் மூன்று தளங்களும் இணைந்திருந்த பெண்ணாடம் ஒடுக்கப்பட்டோர் உரிமை மீட்புக் கூட்டமைப்பு மாநாட்டில் எஸ்.வி.ஆர் முழுமையாகப் பங்கேற்றார். பெருஞ்சித்திரனார் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களாக பிணை வழங்கப்படாதிருந்தபோது அதற்கு எதிராக அப்போது தமிழ்நாடு பி.யு.சி.எல் அமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த எஸ்.வி.ஆர், முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யர் உள்ளிட்ட இந்தியா முழுமைக்கும் இருந்த மனித உரிமைப் போராளிகளிடம் கையெழுத்து இயக்கத்தை நடத்தி நீதித்துறை வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். அடுத்த ஓரிரு மாதங்களில் பெருஞ்சித்திரனாருக்கு பிணை கிடைத்தது. இக்காலகட்டத்தில் தமிழ்த்தேசியத்தின் மீதான விமர்சனத்தோடும், அவர்களோடு இணைந்தும் எஸ்.வி.ஆர் பணியாற்றியவிதம் சிறப்புக்குரியதாக இருந்தது.
எஸ்.வி.ஆர். மிகவும் கறாரானவர். கோபக்காரர். குழந்தை மனம் கொண்டவர். மிக மோசமான உடல்நலத்தை சகித்துக்கொண்டு கடந்த இருபது வருடங்களில் அவர் எழுதிக்குவித்தது ஏராளம். அதன் ரகசியத்தை நீங்கள் கேட்டால் சகு (துணைவியார்) என்பார். அவர் மிகச்சிறந்த அறிவுஜீவியானாலும்கூட, ஒரு எளிய அரசியல் புறச்சூழல் அவருடைய மனதைப் பெரிதும் பாதித்துவிடும். மிகச்சிறந்த மார்க்சிய லெனினியக் கவிஞரான கோரக் பாண்டே மரணித்தபோது அவர் தேம்பி தேம்பி அழுதிருக்கிறார். சோவியத் உடைவுக்குப் பிறகு அங்கிருந்து வெளியான நாவல்களும், நூல்களும் விவரித்திருந்த சோவியத் காலக் கொடுமைகளை அவர் வாசித்தபோது அவர் தனக்குள் கடுமையான மனத்துன்பத்தை அடைந்தார் என அவரது சக தோழரான எழுத்தாளர் வ. கீதா கூறுவார். ஒரு அசலான மார்க்சியவாதியை நீங்கள் மனோவின் பிம்பத்தில் காணமுடியும்.