தோப்பில் முஹம்மது மீரான் – இஸ்லாமிய வாழ்வியலின் அசல் பிரதி
“இஸ்லாமும், இஸ்லாமியர்களும் இன்று உலகெங்கும் தவறாகப் புரியப்பட்ட மதமும், மக்களும் ஆகும். முஸ்லிம்களில் சிலர் கூட இஸ்லாத்தை அதன் உண்மையான பொருளில் சரிவரப் புரிந்துகொள்ளாமல் பல தவறான புரிதல்கள் உடையவர்களாகவே இருக்கின்றனர்” என்று ஒரு நூல் மதிப்புரையில் எழுதியிருப்பார் தோப்பில். அப்படிப்பட்ட இஸ்லாத் குறித்தும், இஸ்லாமை வாழ்வியலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள இஸ்லாமியர்கள் குறித்தும் தனது எழுத்துகளின் வழி தமிழ் மக்களுக்குப் புரியவைத்த தோப்பில் முஹம்மது மீரான் எனும் எழுத்தாளுமை சமீபத்தில் காலமானார். நாஞ்சில் நாட்டின் இஸ்லாமிய வாழ்வியலை தனது எழுத்துகளில் வடித்தெடுத்தவர் அவர். இஸ்லாமியப் பண்பாடு என்பது அயல் கிரகத்துப் பண்பாடு என்று இப்பொழுதும் கருதிக் கொண்டிருக்கும் நம்மில் சிலருக்கு மத்தியில், இஸ்லாமியர்களின் வாழ்க்கையை, அதன் பல்வேறுபட்ட குணாதிசயங்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டியவர் தோப்பில்.
தான் சார்ந்த மதம் குறித்த தெளிவானப் பார்வையையும், மக்களின் வாழ்க்கை மீது அம்மதம் செலுத்திய தாக்கத்தின் மீதும் கூரான விமர்சன நோக்கை அவர் கொண்டிருந்தார். அதனால் தமக்கு என்ன நேருமோ என்று அவர் சோர்ந்து போய்விடவில்லை. அவரின் பல்வேறு எழுத்துகளும் சீர்திருத்த இஸ்லாமிய மாத சஞ்சிகைகளில்தான் தொடராக வெளிவந்திருக்கின்றன. இஸ்லாமிய சமூகத்திற்குள் சில முற்போக்கான எண்ணங்களை விதைத்துச் சென்றதில், சென்று கொண்டிருப்பதில் இவ்விதழ்களுக்கு ஆழமான பங்குண்டு. அவருடைய முதல் நாவலான ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ யின் கதைகளமான தேங்காய்ப்பட்டணம் கிராமம்தான் அவருடைய சொந்த ஊர். நாஞ்சில் நாடு முழுவதும் கடலோரக் கிராமங்களில் இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் அதிகம். சுதந்திரத்திற்கு முன்னர் வரை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இணைந்திருந்தது நாஞ்சில் நாடு. பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளை விட திருவாங்கூர் மன்னர் சமஸ்தானத்தில் அடக்குமுறைகள் அதிகம். கல்வி வாய்ப்புகள் குறைவு. அதிலும் இஸ்லாமியர்கள் வசிக்கும் கிராமங்களில் மேலைக் கல்விக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. அக்கிராமங்களில் இஸ்லாமியப் பழமைவாதமே ஆட்சி புரிந்தது. மதராஸாக்கள் அதிகம். எங்கும் மதக்கல்வி. எனவே வைதீகம் சார்ந்த மூடநம்பிக்கைகளும் அதிகம். பேய்கள், ஜின்கள், பைத்தியங்கள் குறித்த கருத்தாக்கங்களும், புனைவுகளும் மிக அதிகம். தோப்பிலின் எழுத்துவழி இவைகளை நாம் வாசிக்கும்போதும், ஒருகாலத்தில் அறியாமையில் வாழ்ந்து வந்திருக்கும் அம்மக்களைக் குறித்து தெரிந்து கொள்ளும்போதும் நமக்கு வியப்பும், ஆச்சரியமும், பரிதாபமுமே ஏற்படுகிறது.
கடந்துபோன ஒரு நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றை தனது எழுத்துகளில் மிக அநாயசமாகக் கடத்திச் செல்கிறார் தோப்பில். அவிழ்க்கமுடியா அதன் கடின முடிச்சுகளை அவிழ்த்து நமக்கு அதன் இன்னொரு பகுதியைக் காண்பிக்கிறார். அதுவே வரலாறாகவும் போய்விடுகிறது. புனைவு கலக்கும்போது அதுவே நாவலாகவும் பரிணமிக்கிறது. தோப்பிலின் பேனா, காலம் என்னும் மையினால் எப்போதும் இட்டு நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது என்றுமே தீர்ந்து போயிருக்கவில்லை.
மலையாள மொழிவழி கல்வி பெற்றிருந்தாலும் கூட தனது தாய்மொழி தமிழை சிறப்புறக் கற்று நமக்கு ஆறு நாவல்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஏராளமான நூல் மதிப்புரைகளையும் ஆக்கித் தந்திருக்கிறார் தோப்பில். தமிழ் மொழி மீதான, தமிழர்கள் மீதான அவருடைய நேசத்தை அவருடைய எழுத்துகளில் நாம் காணலாம். மதரஸா போர்டில் அரபிக்கு பதிலாக தமிழை எழுதிய மாணவன் ஐதுரூஸை பிரம்பால் நொறுக்கும் மோதின் லெப்பை குறித்து ஒரு கடலோர கிராமத்தின் கதையில் எழுதியிப்பார். செய்யக்கூடாத ஒரு பாவத்தைச் செய்ததைக் கேட்டது போல ஒரு நடுக்கம் மோதினுக்கு ஏற்பட்டது என அவர் எழுதுவார். மோதின் கேட்பார்: ” இறைவனின் திருவேதத்திலுள்ள வசனங்களை எழுதும் போர்டில் காபிர்களின் மொழியை எழுதுவதா?”. இப்போது மதரஸாக்களில் மட்டுமில்லை, தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிக்கூடங்களிலும் தமிழ் ஒரு காபிர் மொழியாகவே இருந்து வருகிறது. தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தமிழ்ச் சிறார்கள் வெட்கப்படுவதையும் நாம் பதிவு செய்யவேண்டும்.
கடற்புறமும், அதன் இயற்கைச் சூழலும், அங்கு வசிக்கும் மனிதர்களும், அவர்களின் குண இயல்புகளும், மீன் வாசமும், மக்களின் வறுமையும்தான் தோப்பிலின் கதைகளில் ஜொலிக்கும் முத்துகள். கடலின் இயற்கை அழகைக் கொஞ்சி எழுதும் தோப்பில், அதன் கரைகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பக்கங்களையும் மிக அழகாகவே எழுதியிருப்பார். கதைமாந்தர்களின் எளிய வாழ்க்கைமுறைகளை சொல்லிச் செல்லும் தோப்பில், அவர்களை நம் மனசோடு உலவவிடும் வல்லமை பெற்றவராகவும் இருப்பதுதான் சிறப்பு. அசனார் லெப்பையின் சில அசட்டுத்தனமான செயல்களை, அவருடைய வறுமையோடுதான் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவேண்டும். தோப்பில் படைக்கும் பாத்திரங்கள் நமக்கு சில வேளைகளில் சுவாரசியமானவையாகவும், சில வேளைகளில் அவர்களின் மீது வெறுப்பை உமிழவேண்டும் என்கிற வேட்கையை நம்மிடம் ஏற்படுத்துபவையாகவும் இருக்கும்.
இஸ்லாமிய சமயப் பிரதிகளில் பெண்கள் குறித்த நிலைப்பாடு எவ்வாறு வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரான இஸ்லாத் சமுதாயத்தில், பெண்களின் இருப்பும், அவர்களின் மீதான வெறுப்பும், அவர்கள் அனுபவிக்கும் துன்பமும், அவர்களின் அறியாமையும் தோப்பிலின் நாவல்களில் சொல்லப்பட்டுள்ள விதம் எவரையும் உருகச் செய்யும். சாய்வு நாற்காலியின் மரியமும், துறைமுகத்தில் கதீஜாவும், ஒரு கடலோர கிராமத்தின் கதையில் நூஹூபாத்துமாவும், ஆயிஷாவும் இன்னமும் நம் கண்களில் நடமாடிக்கொண்டே இருப்பவர்கள்.
தோப்பில் என்றுமே இஸ்லாம் மதப்பிரதிகளை கேள்விக்குட் படுத்தியதில்லை. அதன் வைதீகத்தன்மையை, அதன் சடங்குகளை, இஸ்லாம் பெயரிலான மூடநம்பிகைகளை அவர் என்றும் சகித்துக் கொண்டதில்லை. இஸ்லாத்தின் சடங்கார்த்தங்களில் பெரிய பங்கினை வகிக்கும் ஜின்கள், பேய் பிசாசுகள் பற்றிய கற்பனையை அவர் உடைக்கிறார். ஒரு பாழடைந்த வீட்டில், ஒரு இளம்பெண் தூக்கில் தொங்கிய அவ்வீட்டில், ஊர் மக்களால் வெளியேற்றம் செய்யப்பட்ட மீரான் பிள்ளையின் குடும்பமான காசீம் தனது அம்மா, தங்கையோடு குடியேறுகிறான் என்பதை ‘துறைமுகம்’ நாவலில் தோப்பில் சொல்லியிருப்பார். வெளியூர் செல்லும் மீரான்பிள்ளை, இரவு வெகுநேரம் ஆகிவிட்டதால் தன் ஊருக்கு நடந்தே வருகிறார். பேய் நடமாட்டம் இருப்பதாகச் சொல்லப்படும் இடத்தைக் கடக்க பயம் கொள்ளும் மீரான்பிள்ளை, பின்னர் சக தொழிலாளிகளோடு அவ்விடத்தைக் கடக்கிறார். மதம் என்கிற பெயரில் செய்யப்படும் மூடநம்பிக்கைகளை, தனது பாத்திரங்களின் மூலம் தோப்பில் நிராகரிக்கிறார்.
அதைபோலவே இஸ்லாம் என்கிற சாயம் பூசி உலா வரும் போலிச் சமயவாதிகளையும் தோப்பில் தோலுரிக்கிறார். ஒரு கடலோரகிராமத்தின் கதையில் உலவும் தங்ஙள் முஸ்லியார் செய்யும் அயோக்கியத் தனங்களை தோப்பில் அடையாளம் காட்டுகிறார். எல்லா சமயங்களிலும் கடவுள் பெயரைச் சொல்லி பிழைப்புவாதம் செய்யும் கும்பல்கள் மிகுதியாக உலவும் இன்றைய சூழலில், “ஒரு கடலோர கிராமத்தின் கதை”யின் தங்ஙளும், “துறைமுக”த்தின் முகமது அலிகான் இப்னு ஆலிசான் முஸ்லியாரும் முக்கியமான படைப்புகள். மக்களை விழிப்புணர்வு கொள்ளச்செய்யும் பாத்திரங்கள். திருடனாக வாழ்க்கை நடத்தி, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஊரைவிட்டு ஓடிய ஒருவன், அறியாமை மிகுந்த மக்களை, மதத்தின் பெயரைச் சொல்லி ஏமாற்றி வஞ்சக வாழ்க்கை நடத்தி வந்த முகம்மது அலிகானை தோப்பில் அம்பலப்படுத்துகிறார். ஊரிலிருந்து ஓடிச்சென்றதிலிருந்து, நாகூர் தர்ஹாவில் தவமிருந்தது, பின்னர் அஜ்மீர் சென்று சேர்ந்தது, பின்னர் ஒரு நொடியில் அஜ்மீரிலிருந்து ஊர் வந்து சேர்ந்தது என்று அவர் விடும் கதைகள்தான் எத்தனை எத்தனை. இறுதியில் நிக்காஹ் அன்று இளம் பெண்ணை ஏமாற்றி எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு தலைமறைவானதையும், இது குறித்து ஊர் முதலாளி பரீத்துப் பிள்ளையிடம் கேள்வி கேட்கப்போன அவள் தந்தை பொடிக்கண்ணுவுக்கு நேர்ந்த அவலத்தையும் தோப்பில் தனக்கேயுரிய கதை சொல்லல் பாணியில் விவரிக்கிறார்.
தோப்பிலின் கதைகள் எல்லாவற்றிலும் இடம் பிடிப்பது தீப்பெட்டியும், அதனுள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் துண்டு பீடியும். ஒரு ஏழைக் குடியானவனின் அத்தியாவசியப் பொருட்கள் இவை. சில சமயங்களில் அதுவே அவனுடைய பசியையும் ஆற்றவல்லது. சில நேரங்களில் அத்தீப்பெட்டிக்குள் ஒரு சிறு தீக்குச்சியும் கூட இருப்பதில்லை. வறுமையின் உச்சத்தைக் காண்பிப்பதற்கு தோப்பிலை விட்டால் வேறு யார் இருக்கமுடியும்?. அதைப்போல தொந்தி வயிற்றைக் குறிக்க அவர் அடையாளப்படுத்தும் சொல் குடவண்டி. அவருடைய நாவல் முழுக்க விரவி நிற்கும் நாஞ்சில் நாட்டு வட்டாரச் சொற்களும், இஸ்லாமிய சமயம் சார்ந்த சொற்களும் நாவலின் வாசிப்பில் தடையை ஏற்படுத்துவதில்லை. மாறாக நாவலின் மொழிவளத்தைக் கூட்டவே செய்கின்றன. தோப்பிலின் எழுத்துகளில் இஸ்லாமிய வாழ்வியல் இருக்கிறது. மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் கருத்தியல்கள் இருக்கிறது. அதற்கும் மேலாக அறியாமையில் தகிக்கும் மக்களை நத்திப் பிழைக்கும் ஊர் முதலாளிகளின் அதிகார மையங்களை அவர் கேள்விக்குட்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
துறைமுகத்தின் கொழும்பு முதலாளி ஈ.பீ.கு ஆகட்டும், முஹல்லத் தலைவர் பரிது பிள்ளை ஆகட்டும், கடலோர கிராமத்தின் கதையில் வரும் அகமதுகண்ணு முதலாளி ஆகட்டும், பள்ளிவாசலின் பெயரைச் சொல்லி, இஸ்லாத் பெயரைச் சொல்லி, தனக்கு ஆமாம் சாமி போடும் கூட்டத்தையும், அடியாட்கள் பலத்தையும் துணை கொண்டு, மூட நம்பிக்கைகளின் துணையுடன், மக்களின் எழுத்தறிவின்மையின் ஆதரவுடன் சாதாரண அப்பாவி மனிதர்களின் மீது சவாரி செய்யும் இவர்களது நடவடிக்கைகளை தோப்பில் தனது எழுத்துகளில் கூர்மையாக வெளிப்படுத்துகிறார். சமயத்தின் பெயரைச் சொல்லி மக்களைச் சுரண்டும் கூட்டம் உலகில் எங்கு சென்றாலும் ஒரே தன்மையுடனேயே வலம் வருகிறார்கள். அவர்களுக்குத் தேவை அதிகாரம். மக்களின் அறியாமையும், பொய்யும், புரட்டும், மதச் சாயங்களும் அவர்களுக்கான எரிபொருள். அதனால்தான் மக்கள் விழிப்புணர்வு பெறுவதை முதலாளிகளும், ஆதிக்கவாதிகளும் என்றுமே விரும்புவதில்லை. அதனால் மதப்பிரதிகளில் இல்லாத கருத்துகளை, மோதின்களின், போலி ஹாஜியார்களின் உதவியுடன் அவைகள் சமயக் கருத்துகள் என உருவேற்றப்பட்டு சாதாரண மக்களை கேள்வி கேட்பதிலிருந்து அவர்களை தடுத்து நிறுத்திவிடுகிறார்கள். மேலைக்கல்வி(ஆங்கிலக்கல்வி) முறையும் (ஒரு கடலோரக் கிராமத்தின் கதை), ஆண்கள் கிராப் வெட்டிக் கொள்ளுதலும் (துறைமுகம்) இப்படித்தான் தடுக்கப்படுகின்றன. அப்படியென்றால் ஜின்னா இஸ்லாமியர் இல்லையா என்கிற கேள்விக்கு ஆமாம் என்ற பதிலைச் சொல்லும் முதலாளி, பிறிதொரு இடத்தில் முஸ்லிம் லீக்குக்கு ஆதரவாகப் பேசும்போது ஜின்னா பத்தரை மாத்து தங்கம் என்றும் சொல்கிறார்.
புன்னப்புரா போராட்டம் குறித்தும், திருவாங்கூர் சமஸ்தானத்து மன்னர் அரசதிகாரம் மக்களை எப்படி வதைத்தெடுத்தது என்பது குறித்தும் ‘துறைமுகம்’ நாவலில் வரலாறும் பேசுகிறார் தோப்பில். இஸ்லாமிய அடையாளங்களோடு தெருவில் உறங்கும் மம்மதாஜியை போலீஸ்காரர்கள் இரவில் பிடித்துச் செல்கிறார்கள். அது குறித்த விழிப்புணர்வற்ற நிலையில் இருக்கும் மக்கள், அதிகாரத்தின் பிடியில் அவர் நெறிபட்டு உயிர்துறப்பது குறித்து கேலியும், கிண்டலும் செய்யும் ஊர் மக்களின் அறியாமையின் ஆழம் குறித்து அடையாளம் காட்டுகிறார் தோப்பில். நக்சலைட்டுகள், பகத்சிங் குறித்தெல்லாம் துறைமுகத்தில் வாசிக்கும்போது தோப்பிலின் சிந்தனையின் வீச்சு நமக்குப் புலப்படுகிறது.
மஹ்மூத்தும், காசீமும் தோப்பில் படைத்திட்ட இரு முக்கிய கதாபாத்திரங்கள். இப்பாத்திரங்களின் மூலமே தோப்பில் தனது கருத்துகளை உலவவிடுகிறார். பள்ளிக்கூடம் கட்ட அகமதுகண்ணு முதலாளி இடம் தர மறுப்பதும், தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நிலத்தை அப்பள்ளிக்கூடம் கட்டுவதற்காக மஹ்மூத் அரசுக்கு வழங்குவதும் அகமதுகண்ணுவின் தூண்டுதலினால் மஹ்மூத் ஊர் விலக்கம் செய்யப்படுவதும், எதற்கும் அஞ்சாத மஹ்மூத் ஊராரின் ஒத்துழைப்பின்றியே தனது மகளுக்கு நிக்காஹ் செய்விப்பதும் தோப்பிலின் புரட்சிகர எழுத்துகள் (ஒரு கடலோர கிராமத்தின் கதை). அதுபோலவே பரீது பிள்ளைக்கெதிரான காசீமின் எதிர்நடவடிக்கைகளும், அவனுடைய அரசியல் ஆளுமையும், போராட்ட ஆளுமையும், ஊர் முழுதும் காலரா பாதிக்கப்பட்டபோது மக்களுக்காக அவன் செய்யும் சேவைகளும் தோப்பிலின் செதுக்கலான எழுத்துகள்.
தோப்பிலின் நாவல்களில் காதலையும், காமத்தையும் நாம் உய்த்துணரலாம். பரீது, ஆயிஷா காதலை தோப்பிலைவிட உருக்கமாக வேறு யார்தான் எழுதியிருக்கமுடியும்? ஆயிஷாவின் திருமண வாழ்க்கை நிராசையில் போனபிறகு பரீதின் மீது ஆயிஷாவிடம் துளிர்க்கும் காதலையும், காமத்தையும் மிகச்சரியாகக் கையாண்டிருப்பார் தோப்பில். அதுபோல சாய்வு நாற்காலியின் முஸ்தபாகண்ணுவின் காமமும், கடலோரக் கிராமத்தின் கதையின் தங்ஙளின் லீலைகளும் மறக்கமுடியாதவை.. கதைக்களனுக்கு வலுசேர்ப்பவை. மாறாக சாய்வு நாற்காலியின் மரியமும், கடலோரகிராமத்தின் நூஹூபாத்துமாவும், ஆயிஷாவும், துறைமுகத்தின் கதிஜாவும் அற்புதமான பெண் படைப்புகள் என்று இஸ்லாமிய ஆண் சமுதாயம் பேசலாம். ஆனால் அவர்கள் வீறுகொண்டு எழவேண்டியவர்கள். எல்லாவித அடிமைத்தனங்களையும் எதிர்த்து குரல் கொடுத்திருக்க வேண்டியவர்கள்.
இஸ்லாமிய சமூகம் மூடநம்பிக்கைச் சடங்காச்சாரங்களிலிருந்து விடுபடவேண்டும் என்பதே தோப்பிலின் சதா சிந்தனையாக இருந்து வந்திருக்கிறது. இஸ்லாமியச் சமூகத்தின் வாழ்வியலில் சீர்திருத்தம் வேண்டும் எனக் கோரி நிற்பவர் தோப்பில். சீர்திருத்தக்காரர். பழமைவாதத்தை முற்றிலும் எதிர்ப்பவர். தனது எழுத்துலகின் தொடக்கக் கட்டத்தில் வகாபியிசம் நோக்கிய சாய்மானம் அவருக்கு இருந்த காரணத்தினால்தான் பழமைவாதிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட்டு அவர் நெல்லையில் குடியேறினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தனது வாழ்வின் பிற்காலத்தில் வகாபியிசம், இஸ்லாம் சமூகத்தில் ஏற்படுத்திய சமய வரட்டுவாததைப் புரிந்துகொண்டவர். பல பத்தாண்டுகளுக்கு முன்புவரை இஸ்லாமிய வாழ்வியலில் இரண்டறக் கலந்திருந்த சடங்காச்சாரங்களிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டும் என்ற உந்துதல் அவருடைய எழுத்துகளில் மிக அதிகமாக இருந்து வந்திருக்கிறது. அதே நேரத்தில் நபிகள் குறித்தும், இஸ்லாத்தின் பிரதிகளான ஹதீஸ்கள் குறித்தும் அவர் என்றும் கேள்வி எழுப்பியதில்லை. மக்களை அறியாமையிலேயே வைத்திருக்கும் சமயச் சடங்குகளை எதிர்த்து வந்திருக்கும் அதே சமயம், அம்மக்களின் வறுமைக்குக் காரணமாகத் திகழ்ந்த பணக்காரர்களின் போக்கிரித்தனங்களையும் தொடர்ந்து தனது எழுத்துகளில் அம்பலப்படுத்துகிறார். அது ஒரு கடினமான பணி.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் இஸ்லாம் சமூகத்தின் வீழ்ச்சியை அவதானித்த இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் பலரும் இஸ்லாமியர்கள் கல்வி கற்கும் அவசியத்தை பரப்புரை செய்தனர். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் அப்படித்தான் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் ஊரில் அரசுப் பள்ளிக்கூடமும் தொடங்கப்பட்டு, மஹ்பூப்கான் என்னும் இஸ்லாமியரும் அங்கு ஆசிரியராகப் பணிபுரிய வருகிறார். மக்களின் மூட நம்பிக்கையும், அகமதுகண்ணு முதலாளியின் சூழ்ச்சியும் மஹ்பூபின் முயற்சியை நாசம் செய்கிறது. இறுதியில் பள்ளிக்கூடமும் எரியூட்டப்படுகிறது என்பதை தோப்பில் மிகவும் ஆக்ரோசத்தோடு கதையை நகர்த்திச் செல்கிறார் (ஒரு கடலோர கிராமத்தின் கதை). ஊரின் பணக்கார முதலாளிகள் தங்களின் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள வருங்கால சந்ததியினரும், இதுகாறும் அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்துவரும் மக்களின் குழந்தைகளும் கல்வி அறிவைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து வந்திருக்கின்றனர். அதுபோலவே துறைமுகத்தில் காசிமும் தனது பள்ளிப்படிப்பை போராடித்தான் பெறமுடிகிறது. அதன் தொடர்ச்சியாக விடுதலைப் போராட்டம் குறித்த அறிவையும் பெறமுடிகிறது.
ஐம்பதாண்டுகளில் இஸ்லாமியப் பெண்களின் சமூகப் பாத்திரம் குறித்து ஆய்வு செய்தோமானால் நாம் தோப்பிலின் பிரதிகளையே பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இஸ்லாமியப் பெண்கள் குறித்த மிகைப்படுத்தல்கள் அவரது எழுத்துகளில் இல்லை. இஸ்லாமிய ஆண்களின் மேல் கட்டப்படும் காமசூத்ரன்கள் பட்டங்களும் அதில் இருக்காது. இஸ்லாமியப் பெண் எழுத்தாளரான சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலுக்கு விமர்சனம் எழுதிய தோப்பில்(தீராநதி, 2006, ஜனவரி), சல்மாவின் எழுத்துகள் இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரானதாகவும், இஸ்லாமியப் பெண்கள் குறித்த மதிப்பீடுகள் நடுநிலைமை தவறி எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சித்தார். அதே நேரத்தில் “இந்த நாவல் முன்வைக்கும் சமூக விமர்சனங்கள், பெண்களின் உள்ளத்திலிருந்து எழுகின்ற கேள்விகளாக ஒலிக்கின்றன” என்று சல்மாவைப் பாராட்டவும் அவர் தயங்கவில்லை. ‘இஸ்லாமிய சமூகம் ஒரு பூடகப்படுத்தப்பட்டுள்ள சமூகம்’ என்று எழுதியுள்ள அந்நாவலின் முன்னுரையாளரையும் தோப்பில் சாடுகிறார். இஸ்லாமிய சமூகம் அடைகாக்கும் மௌனம் குறித்து ஏற்கனவே நிறைய இஸ்லாமிய எழுத்தாளர்கள் எழுதியாகிவிட்டது என்கிறார் தோப்பில்.
தோப்பிலின் நாவல்கள் வரலாறையும் பேசுமாதலால், முதல் உலகப்போர் காலத்திலிருந்தே தென் தமிழகத்தில் நிலவிய சமய நல்லிணக்கத்தை அறிந்துகொள்ளமுடியும். கடலோரக் கிராமங்களில் வாழ்க்கை நடத்திய மீனவகுல மக்களோடும், நாடார் இன மக்களோடும், இஸ்லாமிய மக்களின் இணக்கத்தை நாவல் நெடுக நாம் காணமுடியும்.
தோப்பில் முஹம்மது மீரான், தான் வாழ்ந்த காலத்தில் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றிருக்கிறார். ஆனால் அந்த அங்கீகாரம் மட்டும் அவருக்குப் போதுமானதா? இல்லை. மலையாள மொழியின் ஜாம்பவனான பஷீர்தான் அவரது ஆதர்சம். கேரளத்தில் பஷீருக்குக் கிடைத்த அங்கீகாரம் தோப்பிலுக்கும் தரப்பட்டிருக்கவேண்டும். இனியாவது தரப்படவேண்டும் என்பதே தமிழ் எழுத்துலகின் எதிர்பார்ப்பு.
“என்னுடைய ஆறாவது நாவல் இது” என்று குடியேற்றம் நாவலின் என்னுரையில் சொல்லியிருப்பார் தோப்பில். இதுவே இறுதி நாவலாகவும் அமைந்துவிட்டது. சமீபத்தில்தான் இந்நாவலைப் படித்தேன். 1498 முதல் 1663 வரையான காலக்கட்டத்தில் பறங்கியரை எதிர்த்த தமிழ் மரைக்காயர்களின் போராட்ட, வீர வரலாறை மையப்படுத்தியும், அவ்வீரர்களின் தற்கால சந்ததிகளின் ஒரு பிரிவினர் வாழும் துன்பியல் வாழ்வையும் தோப்பில் மிக அழகாக தனக்கேயுரிய எழுத்து நடையில் விவரித்திருப்பார். பெரியதம்பி மரைக்கார் பெத்தப்பா, மகன் சின்னதம்பி மரைக்கார் பெத்தப்பா…அவர்களின் போராட்ட வரலாறையும், தற்கால வரலாறையும் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பின்னிப் பிணைந்து கதையை நமக்குச் சொல்லிச் செல்வதில் அவருக்கு நிகர் அவரே. இஸ்லாமியர்கள் அந்நியர்கள் என்று புலம்பும் நபர்களும், தமிழுக்கும், இஸ்லாத்துக்கும் என்னப்பா சம்பந்தம் என்பவர்களும் அவசியம் வாசிக்கவேண்டிய எழுத்துகள் அவருடையவை.
“தமிழன் தன்மானம் இழந்துவிட்டான்டா” என்ற பெரியதம்பி மரைக்கார் பெத்தப்பாவின் குரல்தான் எனக்கு இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
தோப்பிலுக்கு என் கண்ணீர் அஞ்சலி.
(அம்ருதா, ஜூன், 2019)