தொ. பரமசிவன் மறைவு : திராவிடப் பண்பாட்டிற்கும், தமிழினத்திற்கும் பேரிழப்பு – செ. சண்முகசுந்தரம்
தமிழகத்தின் ஆகச் சிறந்த நாட்டாரியல் ஆய்வாளரான தொ. பரமசிவன் காலமானார். தமிழகத்தின் சமூகப் பண்பாட்டு உரிமைகளுக்கான ஆபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் இச்சூழலில், தமிழகப் பண்பாட்டின் அசலான அரிச்சுவடியைக் கண்டளித்த ஆய்வாளர் தொ. பரமசிவன் அவர்களின் மறைவு தமிழ்ப்பண்பாட்டு உலகத்துக்கு, தமிழ் நாட்டாரியல் ஆய்வுலகத்துக்கு பேரிழப்பாகும். பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்தாலும், கள ஆய்வுப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தமிழ்ச்சூழலைப் பாதிக்கும் சமூக, அரசியல், பண்பாட்டுப் பிரச்னைகள் அனைத்துக்கும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்தவர். அவருடைய ஆய்வுலகம் அவருக்கு முன்னரான ஆய்வுத்தளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைந்திருந்தது. தமிழ்சமுதாயத்தின் மீது தன்னுடைய எதார்த்தமான ஆய்வின் மூலம் ஒளியைப் பாய்ச்சியவர் தொ.ப. முனைவர் பட்டத்திற்கான ஆய்வை புதுமைப்பித்தன் குறித்துதான் அவர் செய்வதாக இருந்தது. ஆனால் அவருடைய பேராசிரியர் அவரது ஆய்வுப் பொருளை அழகர் கோவிலை நோக்கி நகர்த்தினார். அந்த வகையில் புதுமைப்பித்தன் குறித்த ஆய்வுலகை நாம் இழந்துவிட்டோம் என்றே சொல்லவேண்டும்.
அழகர் கோவில் குறித்த அவரது ஆய்வு வெளிவந்த போது, பல்கலை. ஆய்வுப்புல வட்டாரங்களில் கடும் அதிர்வை அது ஏற்படுத்தியது. அழகர் கோவிலுக்கும், அக்கோவிலோடு தொடர்புடைய நான்கு சாதிகளுக்கும் இடையேயான தொடர்புகளை அதில் அவர் விவரித்திருப்பார். சமூக ஆதரவினைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டு வைணவம் சிறு தெய்வ வழிபாட்டுக்கு நெகிழ்ந்து கொடுத்த நிலையை இக்கோயிலின் ஆய்வு மூலம் தொ.ப. விரிவாக விளக்கியிருப்பார்.
தொ. பரமசிவத்தைப் பொருத்தவரை சாதி என்பது உண்மையுமில்லை, பொய்யுமில்லை. தமிழ்ச்சமுதாயம் என்பது சாதிய அடுக்குகளினால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கட்டிடம். உங்களது சாதி என்பது நீங்கள் எதுவரை திருமண உறவு வைத்துக் கொள்கிறீர்களோ அதுவரை மட்டுமே என்பார். சாதியை அழிக்கமுடியாது. ஆனால் கரைக்க முடியும் என்பார். தமிழ் மக்களின் சமூகவியல் வரலாறு என்பது சாதிகளின் வரலாறே. அதனால்தான் தன்னுடைய அடுத்த ஆய்வுத்திட்டமாக தமிழகத்தின் நானூறுக்கும் மேற்பட்ட சாதியப் புராணங்களை ஆய்வு செய்வது என அவர் முடிவெடுத்திருந்தார். அந்த ஆய்வுத்திட்டத்தை அவர் கொண்டு செலுத்தினாரா, அப்படி செலுத்தியிருந்தால் அது எந்த தூரத்தில் உள்ளது என்பது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள்தான் சொல்லவேண்டும். சாதியாக மக்கள் திரள் இருக்கும்போது, சாதியை உணராமல், தமிழ் மக்களையும் அறிய முடியாது என்றார். சாதி கொடுக்கும் பாதுகாப்பையும் அவர் சில சமயங்களில் குறிப்பிடத் தயங்கவில்லை. பண்டைய இனக்குழு சமூகத்திலிருந்து உருவாகி வந்ததுதான் சாதி என்று அவர் உரைப்பார்.
சாதிகளின் ஒத்திசைவை அவர் எப்போதும் வலியுறுத்தினார். ஒவ்வொரு சாதிகளுக்கென்று, சாதிகளின் அடிப்படைக் கூறுகளாக பண்டைய இனக்குழு சமூகத்திலிருந்து கட்டப்பட்டிருக்கும் பொருளாதாரத்தையும், தொழிலையும் அவர் ஆய்வுக்கு உட்படுத்தினார். இயல்பாகவே சாதிகளுக்கிடையே ஒத்திசைவும், சமாதானமும் உண்டு என்பதை அவர் பல சமயங்களில் எடுத்துக் கூறியுள்ளார். எந்த ஒரு சாதிக்கலவரமும் சில நட்களுக்கு மேல் போனது கிடையாது. ஓரிரு உயிரிழப்புகள் இருந்தாலும் கடைசியில் சாதிகளுக்குள் சமாதானமே ஏற்படும் என்பார்.
இந்து மதத்தின் வருணாசிரமப் படிநிலைகளையும், இந்து மதத்தையும் அவர் கடுமையாகத் தாக்கினார். தமிழக நிலப்பரப்பில் அத்தனை கோயில்களும் அவருக்கு அத்துப்படியானாலும் அவர் ஒரு நாத்திகராகவே இருந்தார். தமிழகக்கோயில்கள் ஒவ்வொன்றும் தமிழக சமூக வரலாற்றைத் தெரிவிக்கும் பொக்கிசங்களாக அவர் பார்த்தார். தன்னுடைய அழகர் கோவில் ஆய்வுக்காக ஓராண்டு காலம் அக்கோவில் சம்பந்தப்பட்ட களப்பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். தெருவில் சந்திக்கும் ஒவ்வொரு மக்களையும் தகவல் களஞ்சியங்களாக அவர் பார்த்தார். பல்கலைக் கழக ஆய்வுத்துறைகளின் மேசை இடுக்குகளில் அவர் முடங்கிப் போய்விடவில்லை. நா. வானமாமலைக்குப் பிறகு நாடாரியல் துறையில் கடுமையாக உழைத்தவர் தொ. ப வாகத்தான் இருக்கமுடியும். பேராசிரியர் சிவசுவையும், பேராசிரியர் லூர்துவையும் நாம் புறக்கணிக்கமுடியாது.
பள்ளிப் பருவத்திலேயே திராவிட இயக்கத்தின் மீதான அவருடைய பற்றே அவரை இறுதி வரை பெரியாரின் அடிச்சுவட்டை பின்பற்ற வைத்தது. பெரியாரின் மீதான அத்தனை கருத்தியல் தாக்குதல்களையும் அவர் கண்டனம் செய்தார். பெரியாரின் சமூகவிடுதலைக் கருத்துகளையும், பெண் விடுதலைக் கருத்துகளையும் அவர் போற்றினார். ஆனால் பண்பாட்டுத் தளத்தில், இலக்கிய வெளியில் பெரியாரின் போதாமையை அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை. திராவிடத்திற்கும், தமிழுக்குமான முரண்பாட்டை அவர் தெளிவுபடத் தீர்த்து வைப்பார். திராவிடம் பண்பாட்டுத்தளத்தோடு தொடர்புடையது. தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களிலும் திராவிடத்தின் அத்தனை கூறுகளும் உண்டு. திராவிடமானது ஆரியத்தின் பண்பாட்டுத்தளத்திற்கு நேர் எதிரானது என்று அவர் உரைத்தார். திராவிடத்தின் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளாக தாய் தெய்வ வழிபாட்டையும், தாய்மாமன் முக்கியத்துவத்தையும் அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.
பெரியாரின் அடிச்சுவட்டில் தனது ஆய்வுலகப் பயணத்தை அமைத்துக் கொண்டதனால்தான் தொ. ப. வின் ஆய்வுலகத்தை மதவாதிகளால் கடத்திப்போக இயலாமல் போய்விட்டது. மதவாதிகளின் பெருந்தேசியத்தையும், ஒற்றைக் கலாச்சாரத்தையும், ஒற்றை மொழியையும் தனது ஆய்வுலகின் வழியாகவே தொ. ப முழுமையாக நிராகரித்தார்.
கடவுள் என்பதற்கும், தெய்வம் என்பதற்கும் அவர் வெளிப்படுத்திய வேறுபாட்டை வேறு எந்த ஆய்வாளரும் அவ்வளவு தெளிவாக விளக்கியிருக்க முடியாது. பெரும் நிறுவனமாக மாறிப்போயிருக்கும் பெருங்கோயில்களில் குடியிருப்பவை கடவுள் எனவும், கிராமப்புறங்களில் வெகு சனங்களின் கடவுளே தெய்வங்கள் என்றும் அவர் வேறுபடுத்துவார். நாட்டாரியல் தெய்வங்கள் மட்டுமே உண்மையான வெகுசனங்களின் கடவுள் என அவர் உரைப்பார். ஆங்கிலேயர் வரும்வரை இங்கு இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது என்று சொல்லும் தொ. ப., இந்து தேசியம் என்பதை முற்றிலும் நிராகரிக்கிறார்.
ஒற்றைக் கடவுள், ஒற்றை தேசம், ஒற்றை பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம் என்பதையெல்லாம் தொ. ப. முற்றிலும் நிராகரிக்கிறார். அதனால்தான் அண்ணாவின் “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்னும் சொற்றொடரையும் இத்தளத்திலேயே தொ. ப., நிராகரிக்கிறார். ஆயிரமாயிரம் கடவுள்கள் இருக்கவேண்டும் என்கிறார் தொப. தான் தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டாரியல் ஆய்வுப்புலத்திற்கும், திராவிடத்திற்கும் இடையே முரண்பாடு கிடையாதா என்பதற்கு இல்லை என்கிறார். பெரியார் ராமனின் உருவ பொம்மையை எரித்தார், பிள்ளையார் சிலையை உடைத்தார். பெரும் கோயில் நிறுவனங்களின் ஆதிக்கத்தைத்தான் பெரியார் கேள்விக்குட்படுத்தினார். பெரியார் எந்த நாட்டார் சிறு தெய்வங்களின் சிலைகளையும் உடைக்கவில்லை என்கிறார் தொ.ப.
தனது நாட்டாரியல் கள ஆய்வுகள் மூலமாக, பார்ப்பனியத்திற்கு எதிரான, வைதீகத்திற்கு எதிரான, உயர் சாதி ஆதிக்கத்திற்கு எதிரான வெகுமக்களின் சனநாயகப்பூர்வமான வழிபாட்டு முறைகளின் மீது தொ.ப. ஒளியைப் பாய்ச்சினார். சிறு தெய்வ, நாட்டாரியல் தெய்வ வழிபாடுகளில் நிலவிய ஒழுங்கற்ற தன்மையை, அசைவ உணவு வழிபாட்டு முறைகளை. பலியிடுதல்களை அவர் உயர்த்திப் பிடித்தார். அதனால்தான் கோயில்களில் ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்கள் பலியிடுவதைத் தடுத்து அப்போதைய முதல்வர் செயலலிதா சட்டம் கொண்டு வந்தபோது தொ.ப. அதைக் கடுமையாக எதிர்த்தார். பெரியார் இருந்திருந்தால் இச்சட்டத்தை எதிர்த்திருப்பார் என்றும் அவர் சொன்னார். அச்சட்டத்தை கி. வீரமணி ஆதரித்திருந்தார் என்பதை நினைவு கூர்வது நலம்.
இந்து தேசியத்தை மறுத்து நூல் வெளியிட்ட தொ. ப., தமிழ்த்தேசியத்தை உயர்த்திப் பிடித்தார். சங்ககாலம் தொட்டு தமிழ் மண்ணில் நிலவிய பண்பாட்டுக் கூறுகளை இலக்கியத்தின், தொல்லியலின் துணை கொண்டு ஆராய்ந்தார். எனவேதான் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கும் சக்திகளுக்கு தொ.ப. எப்போதும் கசக்கவே செய்தார். ஈழப்படுகொலையின் போது பெரிதும் மனம் உடைந்து போனார் தொ.ப. தான் இறக்கும் வரையிலும் இப்படுகொலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் காரணமானவர்களை மன்னிக்கப்போவதில்லை என்று ஒரு முறை கூறினார். செம்மொழி மாநாட்டில் பங்கேற்க மறுத்தவர். கட்சி மார்க்சியர்கள் மீதும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். தேசிய இனப்பிரச்னையில் 1925 முதலே அவர்கள் தவறிழைத்து வருகிறார்கள் என்றார். பெரியாரை காலம் தாழ்த்தியே இடதுசாரிகள் உணர்ந்தார்கள் என்றார். கீழ்வெண்மணியில் 44 கூலித் தொழிலாளிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்னும் வாதத்தையும் தொ.ப. விமர்சனம் செய்வார். அவர்கள் கூலித்தொழிலாளிகள் மட்டுமல்ல, தலித்துகளும் கூட என்பார். இப்படி தமிழ்ச்சமுதாயம் எதிர்கொண்ட ஒவ்வொரு சமுதாய, அரசியல் பிரச்னையிலும் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவே எடுத்துரைத்தார்.
உடல்நிலை சரியில்லாதபோதும் கூட, கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பண்பாட்டு நெருக்கடிகளுக்கு அவர் முகம் கொடுத்தார். தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு விளையாட்டை மத்திய அரசும், நீதிமன்றங்களும் தடை செய்தபோது தொ.ப. அதைக் கடுமையாக எதிர்த்தார். சல்லிக்கட்டு காளை ஒன்றும் வனவிலங்கு கிடையாது என்று அவர் பதில் சொன்னார்.
பெயருக்குப் பின்னே சாதிப்பெயரை இட்டுக்கொள்வது பெரியாரின் பாதிப்பினால் தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருப்பது குறித்து அவர் பெரிதும் பெருமைப்பட்டார். தற்போது பெயருக்குப்பின்னே சாதிப் பெயரை போடும் கலாச்சாரம் பெருகி வருவது குறித்து தனது எதிர்ப்பையும், கோபத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.
“சாதிப்பெயர் இல்லாமல் இருக்கின்ற தைரியம் இந்தியாவிலேயே தமிழர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த வீட்டிலும் யாரும் நீங்கள் எந்த ஜாதி என்று விருந்தினரை விசாரிப்பதில்லை. இஸ்ரோவின் தலைவர் மாதவன் நாயர், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட், மிஸ்ரா, குப்தா என்று சாதிப்பெயர் இல்லாமல் மற்ற மாநிலங்களில் இருப்பதில்லை. நாம்தான் மூன்று தலைமுறைகளாகச் சாதிப்பெயர் துறந்து இருக்கிறோம். இது பெரியாராலேயே சாத்தியமாயிற்று” ஒரு முறை ஒரு பேட்டியில் இப்படி பதில் சொல்லியிருப்பார் தொ.ப.
இக்கட்டுரை எழுதி முடிக்கும் தருவாயில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது. முனைவர் தொ. ப. பரமசிவன் யாதவ் காலமானார் என்று தலைப்பிட்டு ஒரு சாதிச்சங்கம் அஞ்சலி போஸ்டர் அடித்த செய்தி அது. தொ.ப. வின் பெயரையே சரியாகத் தெரியாமல், தொ. ப. பரமசிவன் என்று போஸ்டர் அடித்தவர்களுக்கு அவருடைய கருத்துகளும், உணர்வுகளும் எங்கே உரைக்கப்போகிறது?. காலமெல்லாம் பெரியார் சாதித்த எந்த லட்சியத்தை தொ.ப. விதந்தோதினாரோ, அதையும் சேர்த்தே எரியூட்டியிருக்கிறார்கள் சாதிச்சங்கத்தார்கள்.