தேய்ந்துபோகும் விளைநிலங்கள்
எங்கள் ஊரைச்சுற்றி மட்டுமல்ல,தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரைச்சுற்றிலும் இன்று விவசாயம் நடைபெறவில்லை.மாறாக ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.சென்ற வருடம் வரை நன்றாக விளைச்சலைத் தந்த நிலங்கள்கூட இவ்வருடம் வீட்டு மனைகளாக மாறி நிற்கின்றன.வரிசையாக எங்கெனும் மஞ்சள் கற்களும்,மஞ்சள் பலகைகளும் முளைத்து நிற்கின்றன.நேற்றுவரை பயிர் செழித்து வளர்ந்து உணவு தந்த பூமி இன்று மலடாக மாற்றப்பட்டுவிட்டது.நகர்ப்புற விரிவாக்கமும்,ரியல் எஸ்டேட் பெருக்கமும் ஊரில் குளங்களையும்,ஏரிகளையும்,வயல்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் சிறு சிறு கால்வாய்களையும் தூர்ந்து போகச்செய்துவிட்டன.குளங்களின் மீது வீடுகளையும்,ஏரிகளின் மீது சாலைகளையும் இன்றைக்கு எல்லா ஊர்களிலும் பார்க்கலாம்.நகர்ப்புறங்களை விரிவாக்கினால் நாடு விரிவடைவதாக இன்றைய நவீனப் பொருளாதார மேதைகள் சொல்கின்றனர்.உணவு தரும் நிலங்களை அழித்தோமானால் உணவும்,விவசாயியும் என்னாவார்கள்?உணவு விஷமாக மாறியதும்,விவசாயி இடம்பெயர்ந்து நகரத்தின் தெருக்களில் கூர்க்காவாக மாறியதும்தான் நாம் கண்ட பலன்கள்.இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.ஒரு கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.14.4 கோடி விவசாயிகள் விவசாய நிலங்களை விற்றுவிட்டு விவசாயக்கூலிகளாக மாறியிருக்கிறார்கள். ஒருபுறம் கிராமப்புற,நகர்ப்புற ஏழை மக்கள் குடிசைகளிலும்,தெருக்களிலும் இன்னமும் உறங்கிக்கொண்டிருக்க,நடுத்தரவர்க்கத்து மக்கள் அரிசி வாங்குவதுபோல நிலங்களையும்,ப்ளாட்டுகளையும் வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.விளைநிலங்களை தரிசாக மாற்றுவதிலும்,தரிசை காசாக மாற்றுவதிலும் இவர்களது பங்கு முக்கியமானது.
ரியல் எஸ்டேட் தொழில் சிக்கலான வலையமைப்பைக் கொண்டிருக்கிறது.நடுத்தரவர்க்கத்து மக்கள்,ஏழை விவசாயிகள்,அரசியல்வாதிகள்,அதிகாரிகள் உள்ளடங்கிய வலைப்பின்னல் அது.மிகக்குறைந்த விலையில் விவசாய நிலங்களை வாங்கும் இடைத்தரகர்கள் அரசியல்வாதிகளின்,அதிகாரிகளின் உதவியுடன் வளம் கொழிக்கும் வீட்டு மனைகளாக மாற்றி நடுத்தரவர்க்கத்து மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.தங்களது பொற்காலங்களை மேலும் மேலும் பிரகாசமாக்கிக் கொள்ள நடுத்தரவர்க்கத்து மக்களும் களத்தில் இறங்குகிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்களின் தந்திரம் மிக வலியது.பொட்டல்காட்டில் “சொர்க்கத்தின் கிளை” ஒன்று வருவதாகச் சொல்லி அதைச்சுற்றிலும் வீட்டு மனைகளைத் தயாரிக்கிறார்கள்.தரகர்கள் துணையுடன்,இரைக்காகக் காத்திருக்கும் மீன்களைப்போல விளங்கும் நடுத்தரவர்க்கத்து மக்களைக் கவர்கிறார்கள்.அவர்கள் சேமித்து வைத்திருக்கும் கொஞ்சம் நஞ்சம் பணத்தையும் மனைகளில் முதலீடு செய்கிறார்கள்.சில சமயம் அம்முதலீடுகளை இழக்கவும் செய்கிறார்கள்.தங்கள் குழந்தைகளின் கல்வியை,உணவை,ஊட்டச்சத்தை,பொழுதுபோக்கைக் கூட தியாகம் செய்து சேர்த்த சேமிப்புதான் இவை.ரியல் எஸ்டேட்காரர்களை நம்பி நடுத்தெருவில் நிற்கும் நடுத்தரவர்க்கத்துக் குடும்பங்கள் நிறைய உண்டு.ஏமாற்றுபவர்களை சட்டம் கொண்டு தடுத்துவிடலாம்.ஆனால் ஏமாறுபவர்களை எந்த சட்டத்தாலும் காப்பாற்றமுடியாது.
ரியல் எஸ்டேட் தவிர பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களும் தங்களின் எதிர்காலத்தேவைக்காக மிகப்பெருமளவில் விவசாய நிலங்களையும்,கிராமத்து நிலங்களையும் வாங்கிக்குவிக்கின்றன.10 ஏக்கரில் ஒரு தொழிற்சாலை நிறுவப்படவேண்டுமானால்,அதைச் சுற்றிலும் 500 ஏக்கர் நிலம் வாங்கப்படுகிறது.அத்தொழிற்சாலைகள் உறிஞ்சும் தண்ணீர் சுற்றியுள்ள பகுதிகளையும் வறண்டதாக்கிவிடுகிறது.நவீனமயமாகி வரும் வேளாண்மைத் தொழிலிலிருந்து வெளியேற்றப்படும் எஞ்சிய விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையளிக்க தொழிற்சாலைகள் அவசியந்தான்.ஆனால் அத்தொழிற்சாலைகள் மீதமுள்ள விவசாயத்தையும் அழித்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டுமல்லவா?
ஆனால் இச்சூழலை எதிர்த்து விவசாய வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தும் விவசாயிகளையும் நாம் சந்திக்கலாம்.எங்கள் எதிர்வீட்டு தாத்தா ஒருவர் அப்படிப்பட்ட விவசாயி.தேசிய நெடுஞ்சாலைக்குப் பக்கத்திலேயே பல ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரர்.தனது நிலத்தைச் சுற்றி ரியல் எஸ்டேட்காரர்கள் தங்கள் தொழிலைப் பார்க்கத்தொடங்கினாலும் இவர் மட்டும் தான் செய்து வரும் கரும்பு,சோளம் விவசாயத்தைக் கைவிடுவதாக இல்லை.நிலங்களை விற்றுவிட்டு சொத்து பிரிக்கவேண்டும் என்னும் குடும்பத்தாரின் கோரிக்கைகளையும் அவர் நிராகரித்துவிட்டார்.ரியல் எஸ்டேட்காரர்கள் எவ்வளவு நாளைக்கு அவரை விட்டுவைப்பார்கள் என்றுத் தெரியவில்லை.சில மாதங்களுக்கு முன்னர் என் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன்.ஊரில் உள்ள நிலபுலன்களையெல்லாம் விற்றுவிட்டு பணி நிமித்தமாக நகர்ப்புறத்தில் குடியேறிய வகையைச் சேர்ந்தவன் நான்.கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தந்தையின் மறைவு காரணமாக ஒரு வருடம் விவசாயம் பார்க்கும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டது.மானாவாரி சாகுபடிதான்.பாமணி ஆற்றிலிருந்து நம்மங்குறிச்சி கால்வாயில் தண்ணீர் இறைத்துவிட்டு, இரவோடு இரவாக வயலுக்குப் பாய்ச்சி விளைந்த நெல்லை வீட்டுக்குக் கொண்டுவந்தபோது இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்ட காலம் அது.ஆனால் அந்தக் கால்வாய் இன்று சிதைந்துபோய்விட்டது.பாசனத்தைப் பாதுகாக்கும் பெரிய ஏரியின்மீதும்,பெருவாரியான விளைநிலங்களின்மீதும் கிழக்குக் கடற்கரை சாலை செல்கிறது.சாலையின் இரு மருங்கிலும் இருந்த விளைநிலங்கள் வீட்டு மனைகளாகிவிட்டன.சாலையைவிட்டு இறங்கி, நான் கைவிட்டுப்போன நிலங்களை நோக்கி நடந்தேன்.என்ன ஆச்சரியம்!அந்நிலங்கள் மட்டும் ஒரு தீவாக வேலி அடைக்கப்பட்டிருந்தது.வேலிக்கு உள்ளே பச்சைப் பசேலென்று நெற்பயிர்கள் காய்த்துக் குலுங்கின.ஒரு பெண்மணி மட்டும் வேலிக்கு வெளியே காவல் இருந்தார்.அவர் எனக்கு ஒரு காவல் தெய்வமாகவே தெரிந்தார்.அவரை நோக்கி கைகூப்பிக் கும்பிட்டேன்.
நிலங்களுக்கும்,மனிதர்களுக்கும் இடையேயான முரண்பாடுகள் கூர்மையடைந்துகொண்டேவரும் இக்காலக்கட்டத்தில் அந்நிலங்களை வளம்மிக்கதாக மாற்றி,பயிர்கள் செழித்து வளரச்செய்தோமானால் மனிதசமுதாயம் எவ்வளவு பலன் பெறும்!
(தினமணி, 11.10.2013)