திப்புசுல்தானும்,நவீன பேஷ்வாக்களும்
திப்புசுல்தான் பிறந்ததினமும்,இறந்ததினமும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்ற கர்நாடக காங்கிரஸ் அரசின் அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி மிகக் கடுமையாக எதிர்த்திருக்கிறது.பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சீரங்கப்பட்டணத்தை தலைமையிடமாகக் கொண்டு இன்றைய கர்நாடகத்தின் முழு பகுதி,கேரளா,தமிழ்நாடு,மஹாராஷ்டிரா மாநிலங்களின் சில பகுதிகள் என நல்லாட்சி புரிந்த திப்பு சுல்தான் தான் இந்துத்வாவாதிகளின் சமீபத்திய இலக்கு.திப்பு சுல்தான் ஒரு மதவாதி. குடகு மற்றும் மங்களூர்ப் பகுதி இந்துக்களை துன்புறுத்தினார் என்பதும்,கேரளாவில் பிறமதத்தினரை மதமாற்றத்திற்கு உட்படுத்தினார் என்பதும் திப்புவின்மீது இந்துத்வாவாதிகள் தொடுக்கும் குற்றச்சாட்டு. ஆர்.எஸ்.எஸின் சர்சங்ஜாலக்கான மோகன் பாகவத்தின் “இந்தியா, இந்து நாடாக மாற்றப்படவேண்டும்” என்னும் ஆசைக்கனவுக்கு திப்புசுல்தான் போன்ற ஆட்சியாளர்கள் வரலாற்று எதிரிகளாகவே தொடர்ந்து இருந்துவருவார்கள். ஆனாலும் கடந்தகால வரலாற்றைத் தங்களுக்கேற்ற விதத்தில் திருத்தி எழுதுவதில் அவர்கள் வல்லவர்களாக,சூழ்ச்சி மிக்கவர்களாகவே இருக்கிறார்கள்.அதனால்தான் கடந்தகாலம் முழுவதும் இந்து மதத்தைச் சார்ந்தது,இஸ்லாமிய ஆட்சியாளர்கள் அனைவரும் இந்துக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி நடத்தினார்கள் என்றெல்லாம் கூசாமல் வரலாற்றைத் திரிக்கமுடிகிறது.வேறொருபுறம் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின்(Indian council of Historical Research)தலைவராக ஒரு இந்துத்வாவாதியை(சுதர்சனராவ்) நியமனம் செய்துகொண்டு தங்களுக்கு வேண்டிய வரலாற்றை எழுதவும் முடிவு செய்துவிட்டார்கள்.இராமாயணமும்.மகாபாரதமும் உண்மையில் கி.மு.இத்தனை ஆண்டில் நிகழ்ந்தது என்று அறிவிக்க ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. கடந்தகால உண்மைகளைத் திரிக்க இந்துத்வாவாதிகள் செய்யும் முயற்சிகளை வரலாற்று அறிஞர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.மைசூர் ஆட்சியாளரான திப்புசுல்தான் பற்றிய இந்துத்வாவாதிகளின் அவதூறுகளை முறியடிக்கவும் வரலாறே நமக்கு துணை நிற்கிறது.
திப்புசுல்தான் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அவர் நடத்திய ஒவ்வொரு போரும் ஒவ்வொரு இந்தியனாலும் வணங்கி போற்றத்தக்கது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அப்போருக்கு எதிராக ஆங்கிலேயருடன் கைகோர்த்துக் கொண்டு நாட்டைக் காட்டிக்கொடுத்த,அடுத்த 150 ஆண்டுகளுக்கு இந்தியாவை அடிமைப்படுத்தும் ஆங்கிலேயரின் திட்டங்களுக்கு மனப்பூர்வமாக ஆதரவு கொடுத்த திப்புவின் எதிரிகளான மராட்டிய ஆட்சியாளர்கள் அனைவரும் இந்து பேஷ்வா ஆட்சியாளர்கள் என்று வரலாறு கூறுவதை இந்துத்வாவாதிகள் படிக்கவேண்டும். மற்றொருபுறம் ஆங்கிலேயர்களுக்கு காட்டிக்கொடுக்கும் வேலை செய்து வந்தவர்கள் ஹைதராபாத் நிஜாம்கள் என்பதைக் காணும்போது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும்,ஆதரவாகவும் இருந்தவர்களை மதக்கண்ணோட்டம் கொண்டு பார்ப்பது எவ்வளவு பெரிய பிழை என்பது புரிந்துபோகும். இந்தியாவின் வரலாறு என்பது இஸ்லாமிய மன்னர்கள் ஆண்ட இடைக்கால வரலாற்றையும் உள்ளடக்கியதுதான். இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் முதலாக இந்தியா என்னும் காலனி நாட்டில் மதவாதிகள் செய்துவந்த குழப்பம்,அதன் விளைவாக ஏற்பட்ட பிரிவினை, அதனைத் தொடர்ந்து இந்துக்களுக்கும்,இஸ்லாமியர்களுக்கும் விளைந்த சொல்லொணாத் துயரங்கள் அனைத்தையும் வரலாறு மறக்காது,மன்னிக்காது. இத்துயரங்களோடு நவீன இந்தியாவில் மதவாதிகளால் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் தாங்கிக்கொள்ள திப்புசுல்தான் காட்டிய தீரமும்,நேர்மையும் நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகின்றன. தங்களது குற்றங்களையும்,வரலாற்றுப் பிழைகளையும் திப்பு சுல்தானின் முதுகுக்குப் பின்னால் மறைக்க முயலும் இந்துத்வாவாதிகளின் செயல்கள் அனைத்தையும் இந்திய மக்கள் அறிவார்கள். திப்புசுல்தான் எல்லா வகைகளிலும் ஒரு மிகச்சிறந்த சமநிலை ஆட்சியாளராகத் திகழ்ந்தார் என்று வரலாற்று ஆவணங்கள் காட்டுகின்றன.அவர் ஒரு இஸ்லாமிய மன்னராக இருந்தபோதிலும்,தனது நாட்டின் 90 சதவிகித இஸ்லாமியரல்லாத மக்களுக்கு மதரீதியாக துன்பத்தைத் தராமல் ஆட்சிபுரிந்தார். தனது அரசுக்கு எதிராக,குடிமக்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களின் தூண்டுதலால்,மராட்டியர்களின் தூண்டுதலால் செயல்பட்ட தனது நாட்டின் குடிமக்களை, அவர்கள் மலபார் நாயர்களாக இருந்தாலும்,கிறித்துவர்களாக இருந்தாலும்,இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர் தண்டித்தார்.திப்புவின் ஆட்சியில் இந்துக்களும்,இஸ்லாமியர்களும்,கிறிஸ்துவர்களும் சம உரிமை பெற்ற மக்களாகவே வாழ்ந்தனர் என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன.ஒவ்வொரு சமயத்தவரும் அவரவர் மத ஆச்சார சட்டங்களைப் பின்பற்றி வாழ்வதற்கு முழு உரிமை தரப்பட்டிருந்தது.”ஒரு மதத்தைச் சேர்ந்தவன் பிற மதத்தினரையோ,மத குருமார்களையோ இழிவு செய்ய முயன்றால் அவன் குற்றவாளியாவான்” என்று திப்புசுல்தான் வகுத்த சமயச்சட்டம் கூறுகிறது.
சுவாரசியமான சம்பவம் ஒன்றைக் காண்போம்.திப்புவின் காலத்தில் ‘பீர்லதா’ என்ற இஸ்லாமிய சித்தாந்தி ஒருவர் சீரங்கப்பட்டணத்தில் இருந்தார்.அவருக்கு எண்ணற்ற சீடர்கள் உண்டு.ஒருமுறை சீரங்கப்பட்டணத்து முக்கிய வீதிகளில் இந்துக்களின் சாமி ஒன்று உற்சவக் கோலத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.அந்த ஊர்வலத்தைப் பார்த்து பீர்லதாவின் சீடர்களில் சிலர் எள்ளி நகையாடினர்.இதைப் பார்த்ததும் ஊர்வலத்தில் வந்த இந்துக்கள் ஆத்திரம் அடைந்தனர்.பீர்லதாவின் சீடர்களை நையப்புடைத்துவிட்டனர்.இதனைக் கேள்விப்பட்டு மிகவும் சினம் கொண்ட பீர்லதா, திப்புவிடம் முறையிட்டார்.’ஒரு முஸ்லீம் ஆளும் ஆட்சியில் முஸ்லீம்களுக்குப் பாதுகாப்பு இல்லையே!!’ என்று புலம்பினார்.திப்பு விசாரணை நடத்தினார்.குற்றம் முழுவதும் பீர்லதாவின் சீடர்களின்மீதே இருப்பதை உணர்ந்தார்.பீர்லதாவுக்கு கீழ்க்கண்டவாறு கடிதம் அனுப்பினார்:”சட்டத்தின் கண்ணுக்கு இந்துக்களும்,முஸ்லீம்களும் சமமாகவே தோன்றுவர்;நியாயப்படி குற்றம் செய்தவர்களைத்தான் அடியேனால் தண்டிக்கமுடியும்”.திப்புவின் பதில் பீர்லதாவை மிகுந்த கோபத்திற்குள்ளாக்கியது.அவர் மீண்டும் ஆத்திரத்தோடு திப்புவுக்கு ஒரு கடிதம் எழுதினார்: “இதுதான் உங்கள் மனோபாவமா?அப்படியென்றால் அடியேன் உங்கள் நாட்டைவிட்டே சென்று விடுகிறேன்.இப்படிக்கு பீர்லதா” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.உடனே திப்புவும் “அதுதான் தங்களின் விருப்பம் என்றால் தங்கள் விருப்பப்படியே நடந்துகொள்ளலாம்!” என்று பதில் அனுப்பிவிட்டார்.மனமொடிந்து போன பீர்லதா நாட்டைவிட்டே வெளியேறி சென்னைக்குச் சென்று தமது கடைசி காலத்தைக் கழித்தார்.
திப்புவின் காலத்தில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடந்தன.ஒன்று.மங்களூர் கிறித்துவர்களின் எதிர்ப்பை அவர் அடக்கிய நிகழ்வு.இரண்டாவது மலபார் நாயர்களின் சட்டவிரோதச் செயல்களை அவர் சமாளித்தமுறை.பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியரின் பிரச்சாரத்தால் கிறித்துவ மதத்தைத் தழுவியவர்கள் இந்த மங்களூர் கிறித்துவர்கள்.இவர்கள் 150 ஆண்டுகாலம் தன்னிச்சையாக வாழ்ந்தவர்கள்.ஹைதர் அலி மங்களூரைக் கைப்பற்றியதிலிருந்து இவர்கள் மைசூர் ஆட்சியை எதிர்க்கத் தலைப்பட்டனர்.திப்புவின் காலத்தில் அவர்களின் எதிர்ப்பு பன்மடங்கு கூடியது.1783ம் ஆண்டு மங்களூர் மீது படையெடுத்துவந்த ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டனர்.ஆங்கிலேய படைத்தளபதி மேத்தியூசுக்கு 33000 ரூபாய் மதிப்புள்ள உதவிகளையும் அவர்கள் செய்தனர்,இதனால் வெகுவாகக் கோபம் கொண்ட திப்பு மங்களூர் கிறித்துவர்களின் அரசியல் பலத்தைக் குறைக்க ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.மங்களூர் கிறித்துவர்களை அவ்விடங்களைவிட்டு வெளியேற்றி மைசூரின் பல்வேறு இடங்களில் குடியமர்த்தினார்.இதனால் அவர்களின் அரசியல் பலம் மங்கிப்போனது.திப்பு எடுத்த இந்நடவடிக்கை ஒரு அரசியல் நடவடிக்கை மட்டுமே.மைசூர்ப் பகுதிகளில் குடியேற்றப்பட்ட மங்களூர்க் கிறித்துவர்கள் தங்கள் மதத்தையும் அசட்டை செய்து மனம்போன போக்கில் வாழந்தனர்.திப்புவைப் பொறுத்தமட்டில் எந்த மதத்தினராயினும் அவரவர் மதவழிபாட்டில் அவர்கள் முறைப்படி இருக்கவேண்டும் என்று விரும்பியவர்.எனவே மங்களூர் கிறித்துவர்களை சீர்திருத்தம் செய்வதற்கு குருமார்களை அனுப்புமாறு கோவாவில் இருந்த போர்த்துகீசிய வைஸ்ராயிக்கும்,கோவாவின் தலைமை பிஷப்புக்கும் கடிதம் எழுதினார். அந்தக்கடிதங்கள் இன்றும்கூட கோவாவின் வரலாற்று ஆவணக்காப்பகங்களில் உள்ளன.
மங்களூர் கிறித்துவர்களைப் போலவே மலபார் நாயர்களும் மைசூர் ஆட்சியை எதிர்த்தவர்கள்.ஹைதர் அலி ஆண்டபோதும்கூட நாயர்கள் அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.திப்புவின் ஆட்சியிலும் அது தொடர்ந்தது.நாயர் கிளர்ச்சிகளின் கோரங்கள் இன்னமும்கூட மலபார்ப் பகுதிகளில் புராணக்கதைகள் போன்று வர்ணிக்கப்படுகின்றன.மலபார் நாயர் பெண்கள் மத்தியில் இருந்துவந்த இக்காலத்திற்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களான ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள்,நாயர் பெண்கள் மேலாடையின்றித் திரிதல் போன்றவற்றை ஒரு இஸ்லாமிய மன்னனின் கண்கொண்டு பார்த்ததினால் திப்பு அவர்களின் பழக்கவழக்கங்களை மாற்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.ஒழுக்கச்சட்டங்கள் கொண்டுவந்தார்.திப்புவின் சட்டங்கள் அனைத்தும் நாயர்களை சீர்திருத்தம் செய்வதற்காக மட்டுமே. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்துமதத்தைச் சீர்திருத்தம் செய்யக் கொண்டுவரப்பட்ட சட்டங்களான உடன்கட்டை ஏறுவதைத் தடைசெய்யும் சட்டம்,சாரதா சட்டம் போன்ற சட்டங்களும் மதவெறிச்சட்டங்களா? என்று “திப்புவின் அரசியல்” நூலின் ஆசிரியர் சுஜாவுதீன் சர்க்கார் கேள்வி எழுப்புகிறார். திப்புவின் ஒழுக்க சட்டப்பிரகடனத்தைப் பற்றிக் குறிப்பிடும் வரலாற்று ஆசிரியர் கே.எம்.பணிக்கர், “திப்புவின் இந்தப்பிரகடனம் மதவெறியால் செய்யப்பட்டதல்ல,மாறாக மக்களின் நன்மையிலும்,ஒழுக்கநிலையிலும் அக்கறை கொண்ட ஒரு சீர்திருத்தவாதியின் சிந்தனையே அல்லாமல் மற்றவரை மதமாற்றம் செய்யும் மதவெறி உணர்வு அல்ல” என்றுத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.மங்களூர் கிறித்துவர்களிடமும்,மலபார் நாயர்களிடமும் கடுமையாக நடந்துகொண்ட திப்பு சுல்தான் மலபார் பகுதியில் வாழ்ந்த சிரியன் கிறித்துவர்களையும்,ஆர்மீனியன் கிறித்துவர்களையும்,மைசூர்ப் பகுதிகளிலும்,தமிழகப் பகுதிகளிலும்,மலபார் கடற்கரைப்பகுதிகளிலும் வாழ்ந்து வந்த இந்து மதத்தினரையும் மிகுந்த பாசத்துடன் நடத்தினார் என்று வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
திப்புசுல்தான் தனது ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு தனி சலுகைகள் காட்டினார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.இதற்கான விடையைத் தேடும்முன்னர் திப்புவின் சமகாலத்திய அரசுகளாக அப்போது இருந்த மராட்டிய அரசைப் பற்றியும்,ஹைதராபாத்தின் நிஜாம் அரசு பற்றியும் நாம் குறிப்பிடவேண்டும்.மராட்டிய பேஷ்வா அரசு ஒரு வெளிப்படையான இந்து அரசாகவே செயல்பட்டது.அதன் நிர்வாகத்தில் பெயருக்குக்கூட ஒரு இஸ்லாமியர் இல்லை.ஹைதராபாத் நிஜாமின் ஆட்சி அப்பட்டமான ஒரு இஸ்லாமிய ஆட்சி.ஆனால் திப்புசுல்தான் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் அவர் எல்லா சமயத்தவருக்குமான சமய சகிப்புத்தன்மை மிக்க ஆட்சியை நடத்தினார்.அவரது ஆட்சியில் நிர்வாகப் பேரதிகாரிகளாகவும்,முக்கிய பேரமைச்சர்களாகவும் இந்துக்களே இருந்திருக்கிறார்கள்.அமைச்சர்கள் வரிசையில் திவான் பூரணையாவும்,திவான் கிருஷ்ணாராவும் முக்கியமானவர்கள்.காவல் துறையின் ஒற்றர் பிரிவிற்கு ஆஞ்சி ஷாமையா என்ற ஷாம ஐயங்கார் தலைமைப் பொறுப்பில் இருந்துள்ளார்.வரி வசூல் துறையின் பொருளாளராக இருந்தவர் சுப்பாராவ்.திப்புவின் மாவட்ட அதிகாரிகளில் சிறந்து விளங்கியவர்களுள் முக்கியமானவர் ராஜா ராமச்சந்திர ராவ் என்பவர்.திப்புவின் தூதர்களில் முக்கியமானவர்கள் அப்பாஜி மற்றும் சீனிவாசராவ்.சிவாஜிராவ் மற்றும் ஹரிசிங் இருவரும் திப்புவின் சிறந்த தளபதிகள்.உண்மை இவ்வாறு இருக்க திப்புவின் ஆட்சியைப் பற்றிய அவதூறுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
திப்பு சுல்தான் இந்துக்கோயில்கள் பலவற்றை இடித்துத் தள்ளியவர் என்ற அபாண்டக் குற்றச்சாட்டை இந்துத்வாவாதிகளும்,ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்களும் எப்போதும் கூறிவருகிறார்கள்.இதற்கு எவ்வித ஆதாரத்தையும் அவர்கள் கொடுப்பதில்லை.திப்புசுல்தான் இந்துக்கோயில்களைப் புதுப்பித்தமைக்கும்,ஏராளமான கொடைகளை கோயில்களுக்குத் தந்தமைக்கும்,இந்து மடங்களுக்கு ஆதரவு தந்தமைக்கும், மடாதிபதிகளை மாண்போடு நடத்தியமைக்கும்,கிறித்துவ தேவாலயங்களை நிர்மாணித்தமைக்கும் எண்ணற்ற பட்டயங்களும்,சாசனங்களும்,ஆதாரங்களும் அடுக்கடுக்காக இப்போது கிடைத்து வருகின்றன.அவை எல்லாவற்றையும் பட்டியலிடுவதற்கு இங்கு இடமில்லை.அவைகளை மிகச் சுருக்கமாகக் காண்போம்.திப்பு தந்த ஆதரவால் சீர்பெற்று விளங்கிய திருக்கோயில்களில் முதன்மையானது சீரங்கப்பட்டணத்து சீரங்கநாதர் கோயிலாகும்.இந்தக் கோயில் விஜயநகர ஆட்சிக்காலத்தின்போது சீரங்கப்பட்டணத்தில் கட்டப்பட்டது.இக்கோயிலுக்கும்,திப்புவின் மாளிகையான பட்டன் மகலுக்கும் இடையில் உள்ள தொலைவு 300 அடிகூட கிடையாது.காலம் தவறாமல் இக்கோயிலில் ஆராதனை நடப்பதற்கு திப்புவின் அரசு வேண்டிய உதவிகளைச் செய்துள்ளது.இக்கோயிலில் திப்புவின் பெயரைத் தாங்கிய பிரசாதம் வைக்கும் வெள்ளிப்பாத்திரங்கள் ஏழும்,பல தீபத்தட்டுகளும்,ஊதுவத்தி நிலைப்புத்தண்டுகளும் இருப்பதை இன்றும்கூட காணலாம். திப்பு ஒரு இஸ்லாமிய வெறியனாக இருந்திருந்தால் தலைநகர் கோட்டைக்குள் சீரங்கநாதர் கோயிலை மட்டுமல்ல,அங்கிருந்த அனுமர் கோயில்களையும்,சைவ சமயக் கோயில்களையும் கூட விட்டு வைத்திருக்கமாட்டார்.மைசூருக்கு மேல் திசையில் மேல்கோட்டை என்னும் ஊரில் சிறந்து விளங்கும் கோயில்கள் இரண்டு உண்டு.நரசிம்மசாமி கோயில் மற்றும் நாராயணசுவாமி கோயில்.இவ்விரு கோயில்களுக்கும் தங்கத்தாலும்,வெள்ளியாலும் திப்பு அளித்த கொடைப்பொருட்கள் எண்ணற்றவை. நஞ்சன்கூடு சைவதலத்தில் நஞ்சுண்டேஸ்வரர் ஆலயமும்,திருகாந்தேஸ்வர சுவாமி ஆலயமும் புகழ்பெற்றவை.இக்கோயில்களிலும் திப்புவின் கொடைப் பொருட்கள் உள்ளன.திருநஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் திப்புவின் பெயரால் எத்தனையோ கொடைப்பொருட்கள் காணப்பட்டாலும் அவற்றிற்கெல்லாம் சிகரமாக அக்கோயிலில் ஒரு மரகதலிங்கம் இருக்கிறது.கோயிலின் பார்வதி சிலைக்கு இடப்புறத்தில் அந்த லிங்கம் வைக்கப்பட்டுள்ளது.ஒன்பது அங்குல உயரம் உள்ள அந்த லிங்கம் பளிச்சிடும் பச்சைக் கல்லால் ஆனது.அந்த லிங்கம் திப்புவால் வழங்கப்பட்டதால் அதற்கு பாதுஷா லிங்கம் என்றே பெயரிடப்பட்டுள்ளது.மைசூர் அரசின் ஆட்சிப்பகுதி முழுவதுக்குமான திப்புவின் கொடைகளை நீண்டப் பட்டியிலிட்டுக்கொண்டே செல்லலாம்.
இந்துமதக் கோயில்களுக்கு மட்டுமில்லை,இந்து மத ஞானிகள் வாழ்ந்த மடங்களுக்கும் ஏராளமான கொடைகளை அவர் வழங்கியுள்ளார்.பாபா புதன்கிரி என்ற ஊரில் தத்தாத்ரீய பீடம் என்ற மடம் இருக்கிறது.அந்த மடத்திற்கு ஆனகுண்டி அரசவம்சத்தினர் 20 சிற்றூர்களை இனாமாகத் தந்து இருந்தனர்.இந்த இனாம் உரிமை பின்வந்த அரசர்கள் காலத்தில் நீக்கப்பட்டிருந்தது.ஆனால் திப்புசுல்தான் மீண்டும் அந்த 20 சிற்றூர்களையும் அந்த மடத்திற்கே உரிமையாக்கினார்.புஷ்பகிரி என்ற இடத்தில் உள்ள புஷ்பகிரி மடத்திற்கு திப்பு சுல்தான் இரண்டு சிற்றூர்களை வழங்கியிருக்கிறார். ஷிமோகாவிற்கு வடகிழக்கே குட்லி சிருங்கேரி மடம் இருக்கிறது.இந்த மடம் ஸ்மார்த்த பிராமணர்களுக்குத் தலைமை பீடமாகும்.மூன்றாம் மைசூர்ப் போர்க்காலத்தில் திப்புவின்மீது படையெடுத்துவந்த மராட்டியர்கள் இந்த மடத்தைத் தாக்கிக் கொள்ளையடித்தனர்.மராட்டிய பேஷ்வா இந்து அரசு, முக்கியமான இந்து மடத்தைக் கொள்ளையடித்தது என்பது வரலாற்றில் படிந்துகிடக்கிற அழிக்கமுடியாத கறை.இதைக்கண்டு சினமடைந்த குட்லி சுவாமிகள் மராட்டிய பேஷ்வா அரசை சமயப் பிரஷ்டம் செய்துவிடப்போவதாக பயமுறுத்தினார்.இதைக்கேட்டு பயந்துபோன மராட்டிய பேஷ்வா அம்மடத்திற்கு 4 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக அனுப்பிவைத்தார்.அந்த நஷ்ட ஈட்டுப் பணத்தில் பாதியை குட்லி சுவாமிகள் தனது மடத்திற்கு எல்லா காலத்திற்கும் உதவிகள் செய்துவருகிற திப்புவுக்கு அனுப்பிவைத்தார்.மூன்றாம் மைசூர் போரின் இறுதியில் ஆங்கிலேயர்கள் திப்புவின்மீது திணித்த கடுமையான சமாதான உடன்படிக்கையின்படி திப்பு ஆங்கிலேயர்களுக்கு அளிக்கவேண்டிய போர் இழப்பு ஈட்டு நிதிக்காகவே குட்லி சுவாமிகள் அத்தொகையை திப்புவுக்கு அளித்தார். இதுபோலவே சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி என்ற திருத்தலத்தில் சாரதா பீடம் இருக்கிறது.திப்புவின் ஆட்சிக்காலத்தில் சிருங்கேரி சாரதாபீடம் போல வேறெந்த மடமும் அரசின் ஆதரவைப் பெற்றதில்லை.அம்மடத்தில் இன்றும் 200க்கும் மேற்பட்ட “சன்னது”க்கள்(sanads) இருக்கின்றன.அவற்றில் திப்புவின் சன்னதுகள் மட்டும் 30.அந்த சன்னதுகளும்,பட்டயங்களும்,மற்ற ஆவணங்களும் சிருங்கேரி மடத்தின் தலைவரான ஜகத்குரு சச்சிதானந்த பாரதி சுவாமிகளின்மீது திப்பு சுல்தான் எந்த அளவு மதிப்பு வைத்திருந்தார் என்பதைக் காட்டுகின்றன.மூன்றாம் மைசூர்ப் போரின்போது பரசுராம்பாவ் தலைமையில் வந்த மராட்டியப் பெரும்படை சிருங்கேரியை முற்றுகையிட்டு அந்த மடத்தைக் கொள்ளையிட்டுச் சென்றது.சிருங்கேரி மடத்தில் மராட்டிய இந்து அரசு கொள்ளையிட்டுச் சென்ற பொருட்களின் மதிப்பு 60 லட்சம் ரூபாய்.மடத்தின் மூல தேவதையான சாரதா தேவியின் சிலையையும் கூட மூலபீடத்தில் இருந்து பெயர்த்து எறிந்துவிட்டனர் மராட்டியப் படையினர்.சிருங்கேரி சுவாமிகளும் கரகலா என்ற ஊருக்குத் தப்பிச்சென்றுவிட்டார்.அங்கிருந்து திப்புவிற்கு கடிதம் எழுதினார்.அழிந்துபோன தனது மடத்தை மீண்டும் புனருத்தாரணம் செய்ய திப்புவின் உதவியை நாடினார்.சாரதா தேவியின் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்வதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்து தரும்படி அரசின் கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு அம்மடத்திற்கு ஒரு பெரிய வெள்ளி பல்லக்கும், சுவாமிக்கு வேண்டிய ஆடை ஆபரணங்களையும்,வேறு பொருட்களையும் திப்பு வழங்கினார்.ஒருமுறை மராட்டியர்களுடன் சமரசம் பேச சிருங்கேரி சுவாமிகளையே அனுப்பி வைத்தார் என்றால் திப்புசுல்தான் மடத்தின்மீது கொண்டிருந்த மதிப்பை நாம் அறியமுடியும்.குருவாயூர் கோயிலுக்கும் ஏராளமான கொடைகளை அவர் வழங்கியுள்ளார்.காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலை கட்டிமுடிப்பதற்கு 10000 பொன்களை திப்பு வழங்கியிருக்கிறார்.
இந்துக் கோயில்களுக்கு மட்டுமல்ல கிறித்துவ மதத்தினருக்கும் பல்வேறு உதவிகள் செய்திருக்கிறார்.கடப்பை மாவட்டத்தில் உள்ள புலிவெண்ட்லா என்ற ஊரில் இருந்த கிறித்துவ தேவாலயத்தைப் புதுப்பிக்க திப்புசுல்தான் உதவியிருக்கிறார்.திப்பு சுல்தானின் ஆட்சியில் இந்துக்களின் எண்ணிக்கை 90 சதவிகிதம்.முஸ்லிம்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம்.எனவே திப்புசுல்தான் அரசு தந்த அறநிலைய மானியங்களும் அதே விகிதத்தில் இருந்துள்ளதை திவான் பூரணையா தந்த கீழ்க்கண்ட தகவலின்படி தெரியவருகிறது.
இந்து தேவஸ்தானங்கள்,அக்ரகாரங்கள் — 1,93,959 வராகன்கள்
பிராமண மடங்கள் — 20,000 வராகன்கள்
இஸ்லாமிய ஸ்தாபனங்கள் — 20,000 வராகன்கள்
திப்புவைப் பற்றிய உண்மை இவ்வாறிருக்க திப்புவைப் பற்றிய அவதூறுகள் ஆங்கிலேய எழுத்தாளர்கள் முதல் இன்றைய இந்துத்வா அறிவுஜீவிகள் வரை பெருக்கப்பட்டுக்கொண்டே வருகின்றன.ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை இந்தியாவில் காலூன்ற விடக்கூடாது,அது அடுத்த இருநூறு வருடங்களுக்கு நாட்டை முழுவதுமாக அடிமைப்படுத்திவிடும் என்று முன் உணர்ந்த தீர்க்கதரிசியான திப்பு, ஆங்கிலேயருக்கு எதிராக பிற இந்திய அரசர்களோடு கூட்டுச் சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட தயாராக இருந்தார்.ஆனால் திப்புவின் நட்பு அழைப்பை ஏற்க மறுத்தது அன்றைய மராட்டிய பேஷ்வா இந்து அரசுதான்.திப்புவின் உண்மையான தேசபக்தியை இஸ்லாமிய வெறுப்பு கொண்ட பேஷ்வா மராட்டிய அரசும்,ஆங்கிலேய கைக்கூலியான ஹைதராபாத் நிஜாம் அரசும் கொச்சைப்படுத்தின.நவீன இந்திய அரசுக்கு முன்மாதிரியாக விளங்கிய சமயச்சார்பற்ற திப்புவின் அரசை எப்படியாவது வீழ்த்தி,தங்களது ஏகாதிபத்திய எல்லையை விரிவுபடுத்த சதி செய்த ஆங்கிலேயருக்கு மராட்டியரும்,ஹைதராபாத் நிஜாமும் மோசம் போயினர்.வரலாற்றுப் பிழையை செய்தவர்கள் மராட்டியரும்,நிஜாமுமே.திப்பு அப்பழுக்கற்ற சமயச்சார்பற்ற ஒரு ஆட்சியாளன்.நவீன இந்தியாவுக்கு திப்புசுல்தான் மட்டுமே ஒரு முன்னோடி அரசனாக இருக்கத் தகுதியானவன். திப்புவின் பிறந்தநாளையும்,இறந்தநாளையும் கொண்டாட இந்துத்வாவாதிகள் மறுப்பதினால் ஏற்பட்டுள்ள களங்கம் திப்புவுக்கு அல்ல,மாறாக இந்திய மக்களுக்கும்,பேஷ்வாவின் நவீன வழித்தோன்றல்களான இன்றைய மோடி அரசுக்கும்தான்.
(உயிர்மை,பிப்ரவரி,2015)