தமிழகக் கல்விச்சூழல் மாறுமா?
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் போட்டியிடுவதற்கு வசதியாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கடந்த ஒருசில ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரையிலான சமச்சீர் பாடத்திட்டங்களை மாற்றி அமைத்து வந்திருக்கிறது. மேல்நிலைப் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டபிறகு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்வுகளின் முடிவுகள் சமீபத்தில் திடீரென்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. மாநிலம் முழுமைக்குமான மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மாவட்ட வாரியான தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சதவிகிதம் தவிர, வேறு எந்த ஒரு புள்ளிவிபரங்களும் பள்ளிக்கல்வித்துறையினால் வெளியிடப்படவில்லை. பள்ளிகளுக்கிடையே ஆரோக்கியமற்றப் போட்டிகளைத் தவிர்க்கவும், மாணவர்கள் நலன் கருதியும் தொடர்ந்து நான்காவது ஆண்டாகத் தரவரிசைப் பட்டியல், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை மற்றும் மதிப்பெண் வகைப்பிரிவு பட்டியல் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை.
ஆனாலும் மாநிலம் முழுக்க பல பள்ளிகள் தங்கள் மாணவர்கள் பெற்றிருக்கும் அதிகபட்ச மதிப்பெண்களையும், பாடவாரியான மதிப்பெண் பட்டியல்களையும் வெளியிட்டிருக்கிறது. தனியார் பள்ளி நிர்வாகங்களின் இதுபோன்ற விளம்பரங்கள் இவ்வாண்டு அதிகமாகவே உள்ளது என்னும் நிலையில், அரசே மாணவர்களின் மதிப்பெண் குறித்த முழுமையான புள்ளிவிபரங்களை வெளியிட்டிருக்கவேண்டும். அதன்மூலம், மாற்றி அமைக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடத்திட்டங்களின் தரம் குறித்தும், பாடத்திட்டங்களில் இந்த வருடம் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் கல்வியாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்.
சென்ற வருடம் மாற்றி அமைக்கப்பட்ட மேல்நிலை வகுப்புகளுக்கான சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்கள் முழுவதும் அகில இந்திய மருத்துவ, பொறியியல் நுழைவுத்தேர்வுகளை மனத்தில் இருத்தியே தயாரிக்கப்பட்டன. மருத்துவப் படிப்புக்கான சேர்க்கைகள் அனைத்தும் நீட் எனப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் சூழலில், மேல்நிலைத் தேர்வுகளின் மதிபெண் அடிப்படையில் வழங்கப்பட்ட மருத்துவப் படிப்புகள், தற்போது பெரும்பாலான தமிழ்நாட்டு மாணவர்களின் தொலைதூரக் கனவுகளாகி விட்டன. நீட் தேர்வுகளுக்கு முன்பு பெருவாரியான அரசுப்பள்ளி மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களும் மருத்துவப் படிப்புகளுக்கு தேர்ச்சி பெற்றது கடந்தகால வரலாறு மட்டுமே. நீட் தேர்வுகளுக்குப் பிறகான சூழலில் தமிழக சமச்சீர் பாடத்திட்ட மாணவர்களின் ஒரே போக்கிடமாக அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வு மட்டுமே என்றானது.
நீட் தேர்வும், JEE எனப்படும் பொறியியல் நுழைவுத்தேர்வும் சிபிஎஸ்சி பாடத்திட்டங்களின் அடிப்படையில் நடத்தப்படுவதாலும், அதனால் பெருவாரியான சமச்சீர் பாடத்திட்ட மாணவர்கள் மத்தியப் பாடத்திட்டமான சிபிஎஸ்சி பாடத்திட்டப் பள்ளிகளுக்கு இடம் மாறுவதைத் தடுப்பதற்காகவும் சமச்சீர் மேல்நிலைக் கல்விப் பாடத்திட்டங்கள் இப்போதைய வடிவில் மாற்றி அமைக்கப்பட்டன. அகில இந்திய நுழைவுத்தேர்வுகளின் எதிர்பார்ப்புகளை இப்பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்துவிட்டதா என்னும் ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், இவ்வருடம் இத்தேர்வுகளின் மூலம் எடுத்த மதிப்பெண்கள் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக்குப் போதுமானதாக இருக்குமா என்பதே பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. நம் தமிழக மாணவர்களின் பொறியியல் உயர் கல்வித் தாகத்தை அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வே தணிக்கிறது. மேல்நிலை வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே மாணவர்களின் கல்லூரிகளை நிர்ணயம் செய்கிறது. அதனால் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இப்பாடங்களுக்கான தேர்வுகளில் மாணவர்கள் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிட அரசு கடமைப்பட்டுள்ளது .
திருத்தி அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைப் பாடத்திட்டங்கள் மிகவும் கடினமாக இருப்பதாக ஏற்கனவே மாணவர்களும், ஆசிரியர் அமைப்புகளும், கல்வியாளர்களும் கருத்து தெரிவித்திருந்தனர். திருத்தி வடிவமைக்கப்பட்ட மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் அகில இந்தியப் பொறியியல் நுழைவுத்தேர்வான JEE ADVANCED நிலைக்குத் தேவையான அளவுக்குத் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. தேர்வு எழுதும் எட்டு இலட்சம் மாணவர்களும் ஐ.ஐ.டி க்குச் செல்லப்போகிறார்களா? என்னும் கேள்வியையும் நாம் கேட்க வேண்டியுள்ளது.
. இவ்வாண்டு நடைபெற்ற சிபிஎஸ்சி மேல்நிலை இரண்டாம் ஆண்டுத் தேர்வில் சென்னை மண்டல அளவில் முதலிடம் பெற்றிருக்கும் மாணவரின் பேட்டி இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தான் எதிர்பார்த்த மதிப்பெண் 500 க்கு 490 எனவும் ஆனால் தமக்குக் கிடைத்ததோ 498 எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இவ்வருடம் சிபிஎஸ்சி மேல்நிலைத்தேர்வுகளில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், சமச்சீர் பாடத்திட்டங்களில் மாணவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்கள் குறைவு என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அரசு முழுமையான புள்ளி விபரங்களை வெளியிடும் பட்சத்தில் மட்டுமே நாம் இக்கருத்துகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளமுடியும். அப்படி உண்மையாக இருக்கும்பட்சத்தில், தமிழ்நாட்டின் கிராமப்புற, ஏழை, நடுத்தர வகுப்பினரின் கல்விக் கனவுகள் சிதைந்து போகாவண்ணம் அண்ணாப் பல்கலைக் கழக பொறியியல் இடங்களுக்கான கலந்தாய்வில், சமச்சீர் பாடத்திட்ட மாணவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவேண்டும்.
தற்போதைய கோவிட் 19 நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சிபிஎஸ்சி வரும் கல்வி ஆண்டுக்கான மேல்நிலைக் கல்விப் பாடங்களை முப்பது சதவிகிதம் அளவுக்கு குறைத்திருக்கிறது. எனவே சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வும், அதிக மதிப்பெண்கள் பெறுவதும் சுமையாக இருக்கப்போவதில்லை. ஆனால் மாநிலப் பள்ளிக் கல்வித்துறை இன்னமும் வரும் கல்வி ஆண்டுக்கான சமச்சீர்ப் பாடத்திட்டங்களில் செய்யக்கூடிய மாற்றங்களை அறிவிக்கவில்லை. ஏற்கெனவே திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் மாணவர்களுக்கு கடும் சுமையை ஏற்படுத்தியுள்ள சூழலில், கோவிட் 19 பாதிப்புகளில் தவிக்கும் தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் எப்போது திறக்கும் என்னும் நிச்சயமற்ற நிலையில், சமச்சீர் பாடத்திட்டங்களை விட சிபிஎஸ்சி பாடத்திட்டங்கள் எளிமையாக உள்ளதால் அதன் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று அண்ணா பொறியியல் பாடக் கலந்தாய்வில் மிகுதியான பொறியியல் இடங்களைப் பெற்றுவிடக்கூடிய அபாயமான சூழலில் அனைத்து வகுப்புகளுக்குமான சமச்சீர் பாடத்திட்டங்கள் நாற்பது சதவிகிதம் அளவுக்குக் குறைக்கப்படவேண்டும், கற்றல் எளிமையாக்கப்படல் வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.