ஜெய்பீமும் காம்ரேடுகளும் – விடுதலை வித்துகள்
செ. சண்முகசுந்தரம்
மலைவாழ் மக்களிடமிருந்து (சமவெளிப்பகுதிகளில் அல்லது மலைப்பகுதிகளில் எதுவொன்றில் வசித்தாலும்) நம்மை வேறுபடுத்தும் காரணிகள் எண்ணற்றவையாக இருக்கின்றன. முதலாவதாக அம்மக்களின் வாழ்வியல் முறையானது தொன்றுதொட்டு சனாதனத்திலிருந்து விலகியே இருந்து வந்திருக்கிறது. ஒரு இன மக்களிடம் சனாதனம் ஆதிக்கம் செலுத்துவதற்கு அது செய்யும் மிக முக்கியமான குறுக்கீடு என்பது அவர்களின் வணங்கு முறைகளில் மாற்றத்தையும், அவர்களின் உணவு முறைகளில் மாற்றத்தையும் ஏற்படுத்துவது. ஆனால் சனாதனத்தின் ஆட்டத்தை மலைவாழ்மக்கள் இதுநாள் வரை விரும்பி ஏற்றதில்லை. பாம்பு பிடிக்கிறத நிப்பாட்டுனா, பன்றி மாமிசம் சாப்பிடுறத விட்டுட்டா நான் உனக்கு சர்டிபிகேட், வேலை எல்லாம் தருகிறேன் என்று சொன்னாலும்கூட அவர்கள் தங்கள் பழக்கவழக்கங்களை என்றைக்கும் விட்டுத்தரப்போவதில்லை.
படத்தின் தொடக்கத்திலேயே நாயகனும், நாயகியும் அவர்களின் சொந்தங்களும் உணவுக்காக வயல்வெளிகளில் வரப்புகளில் உள்ள எலிகளை வேட்டையாடுவது காண்பிக்கப்படுகிறது. வயிற்றுப் பசியை ஆற்றுவதற்கு எலியை வேட்டையாடுவது அம்மக்களின் உணவுக் கலாச்சாரம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நிலமும், வேறு வாழ்வாதாரங்களும் அற்ற நிலையில் வாழும் இம்மக்கள் தங்களின் பசியைப் போக்க வேறு என்னதான் செய்வார்கள். கடும் பஞ்சக் காலங்களில், காவிரி டெல்டாவில் விவசாயம் பொய்த்துபோன கடந்த காலங்களில் நிலமற்ற விவசாயக் கூலிகளின் உணவும் வயல் எலிகளாகத்தான் இருந்திருக்கின்றன. காட்டைவிட்டும், மலைகளைவிட்டும் விரட்டி அடிக்கப்படும் பழங்குடி இன மக்கள் தற்காலங்களில் வேடையாடக் கிடைப்பது எலியும், பன்றியும், உடும்பு வகைகளுமே. இப்படியாக அம்மக்களின் உணவும், கலாச்சாரமும் வெகுவாக வேறுபட்டு நிற்பதுதான் அம்மக்களை சாதி ஒதுக்குதல் செய்வதற்கும், கல்வி கிடைக்க விடாமல் ஒதுக்கப்படுவதற்குமான முக்கியக் காரணிகள். சனாதனத்தின் தற்போதைய வெகு தீவிர ஆதரவாளர்களான பிற்பட்ட, மிக பிற்பட்ட மக்கள் பழங்குடி மக்களை வெறுத்து ஒதுக்குவதும் இக்காரணிகள்தான்.
“அடியே என் தங்கமே… உம்மேல ஆனடி… நான் சாகுறதுக்கு முன்னால… நீ கல்வூட்டுகாரியா ஆவறியா இல்லையான்னு மட்டும் பாரு”. செங்கணியிடம் ராஜாகண்ணு தரும் வாக்குறுதி என்னவாகும் என்னும் பதற்றம் தொடக்கத்திலேயே நம்மைப் பற்றிக்கொள்கிறது. விளிம்புநிலை மக்களின் ஆயுள்காலக் கனவான வசிப்பதற்கு ஒரு வீட்டையும், கொஞ்சம் நிலத்தையும் அடைவதற்குள் அவர்கள் என்னபாடு படவேண்டியிருக்கிறது?
மலைவாழ் மக்களுக்கும், அரசின் நிர்வாகத்திற்கும் காலம் காலமாக முரண்பாடுகள் கூர்மைப்பட்டே வந்திருகின்றன. கூர்மையடைந்து தீவிரமாகும் அப்போராட்டங்கள் சில நேரங்களில் ஆயுதப்போராட்டங்களாகவும் உருக்கொள்கின்றன. தங்களை ஒரு நாட்டின் பிரஜையாக மதிக்க நிர்வாகம் மறுக்கும்போது ஒரு மலைசாதி இளைஞன் வேறு வழியில் செல்வதற்கு நாட்டம் கொள்கிறான். ” வெறும் இருளன்னு சொன்னா போதுமா? பாம்ப புடிப்பானாய்யா இவன்?” என்று தாசில்தார் கேட்பதும் “பாம்ப புடிக்கவேணாம்… படிக்கணும்… அதுக்காகத்தான் இங்க வந்திருக்கோம்” என சாதிச் சான்றிதழ் கேட்டு வந்திருக்கும் இருளர்கள் பதிலுக்கு பேசுவதும்… கூடவே ஒரு இருளர் சாதி இளைஞனின் குரல் இப்படி ஒலிக்கும்: “நாம ஒரு சர்டிபிகேட் கேட்டா அவரு பத்து சர்டிபிகேட் நம்மள்ட்ட கேக்குறாரு… பேசாம நல்லபாம்ப புடிச்சி தாசில்தார் ஆபிசுல விட்டுடணும்… அப்புறம் அதப்புடிக்க நம்மளத்தான கூப்புடணும்”… கூர்மையாக கவனியுங்கள். தங்களுக்கான நீதி மறுக்கப்படும்போது அவர்களின் பாதை எப்படி செல்கிறது என்று.
ஒரு கலைப்படைப்பு இவ்வளவு தூரத்திற்கு நம் மனசாட்சியை உலுக்கி எடுக்கமுடியுமா? என்னும் கேள்விக்கு “ஆம்” எனத் தெளிவாக விடையளித்திருக்கிறது ஜெய்பீம். நம் மனசாட்சியை மட்டும் உலுக்கவில்லை. நம்மை குற்றவாளிக்கூண்டில் ஏற்றவும் செய்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சனாதனத்தின் பெயரால் வளர்த்தெடுக்கப்பட்ட சாதி என்னும் பேய் போடும் உச்சக்கட்ட ஆட்டங்களை இன்னமும் சகித்துக்கொண்டு, ப்ரைம் வீடியோவில் கண்ணீர் மல்க ஜெய்பீம் பார்த்து முடித்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப எத்தனிக்கும் பொதுச்சமூகம் இனியும் குற்றவாளிக்கூண்டிலிருந்து தப்பிக்கமுடியாது.
ஜெய்பீம் குறித்த பல்வேறுபட்ட விமர்சனங்கள் அலை அலையாக வந்தவண்ணம் இருக்கின்றன. வேறு எப்படத்திற்காகவாவது இப்படியான எண்ணற்ற விமர்சனங்கள் வந்திருக்கின்றனவா? வேறு எந்த ஒரு படமும் இப்படியான பேசுபொருளை உள்ளடக்கி வந்தனவா? இல்லை. நாம் வாழும் சமூகத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்வியல்முறையும், அவர்களுடைய இருப்பும் ஆளும் நிர்வாக அதிகார வர்க்கத்தினால், உயர்சாதி வர்க்கத்தினரால், வர்க்கப்பிரிவினையின்பால் ஆதிக்கமாகப் பிரிந்து நிற்கும் மேல்தட்டு வர்க்கத்தினால் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்படும் நிலையில் அம்மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கமுடியும்? எதிர்வினை அம்மக்களைச் சார்ந்ததாக மட்டுமே இருக்கமுடியாது. இருக்கவும் கூடாது. அடக்கி ஒடுக்கும் வர்க்கத்தின் சில பிரதிகள் ஒடுக்கப்படும் மக்களின் சார்பாக களம் இறங்கிப் போராடும் நிகழ்வை உலக வரலாறு நெடுகக் காண்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை அளித்த மார்க்சும், எங்கெல்சும் எளிய, வறிய வகுப்பைச் சார்ந்தவர்கள் அல்ல. ரஷ்யப் புரட்சி நடத்திக் காட்டிய லெனின் ஒடுக்கப்பட்ட எளிய பிரிவினைச் சார்ந்தவரல்ல.
ஒடுக்கப்படும் பிரிவின்பால் ஏற்படும் அன்பும், அக்கறையும் மட்டுமே இவர்களை ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நோக்கித் தள்ளுகிறது. பல நூறு வருடங்களாக இப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. விவசாயிகளின் வர்க்கத்தை தொழிலாளர் வர்க்கம் வழிநடத்தி மட்டுமே புரட்சியை வெற்றியாக்கிட முடியும் என்பதை ரஷ்யப் புரட்சி நிரூபித்தது. எளிய மக்களை உய்விப்பதற்கு அவர்கள் மட்டுமே போராடிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதல்ல தீர்வு. ஒடுக்கும் பிரிவைச் சார்ந்த சிலர் அதற்கான முன்னெடுப்புகளைச் செய்யும்போது ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைத்தனங்கள் விரைவில் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே இருக்கின்றன. அதனால்தான் இருளர் இன மக்களின் மேம்பாட்டிற்கு பேராசிரியர் கல்யாணி உழைத்துக் கொண்டிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் சட்டப்போராட்டங்களுக்கு சந்துருக்களும், ரத்தினங்களும், பாலமுருகன்களும் தன்னலம் கருதாமல் இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டம் என்பது ஒரு வலிமையான ஆயுதம். அதை யாருக்கு ஆதரவாக உபயோகப்படுத்திக் கொள்கிறோம் என்பதில்தான் ஒடுக்கப்பட்டவர்களுக்கான சட்டப்பூர்வ விடுதலை அடங்கி இருக்கிறது.
ஜெய்பீம் சாதி ஆதிக்கத்திற்கு எதிரானதா? போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிரானதா? ஆமாம். ஜெய்பீம் என்றாலே இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம் என்பதுவே. ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைதான் ஜெய்பீமின் இறுதி இலட்சியம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை வாங்கித் தரவல்லவர்கள் அனைவரும் ஜெய்பீம் விதைகளே. எல்லா ஒடுக்கப்பட்டவனும் தலித்தே. அமெரிக்காவில் இனவெறி ஒடுக்குபவனின் ஆயுதம் என்றால் இங்கு சாதிதான் ஆயுதம். விசாரணையின்றி சிறைச்சாலைகளின் கொட்டடியில் நசிந்துக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான சிறைக்கைதிகளுக்கு மத்தியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? தலித்துகளும், பழங்குடி மக்களும், இஸ்லாமியர்களும் மட்டுமே விசாரணைக் கைதிகளில் பெரும்பான்மையினர் என்னும் உண்மை நம்மைச் சுடவில்லையா?
ஜெய்பீம் உன்னதமான ஒரு கலைப்படைப்பு. ஒவ்வொரு ஃப்ரேமும் நம்மை உச்சபட்ச உணர்வு நிலைக்கே இட்டுச் செல்கிறது. சூர்யாவின் அபாரமான நடிப்பாற்றலும், உழைப்பும் படத்தில் கொட்டிக்கிடக்கிறது. படத்தின் நாயகியான லிஜோமோல் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கு முன்னரே இருளர் இன மக்களுடனே வாழ்ந்திருக்கிறார். படத்தின் சப்-இன்ஸ்பெக்டரின் நடிப்பு உச்சபட்சமான நடிப்பு. லாக்கப்பில் மக்களை அடித்துக் கொடுமைப்படுத்தும் ஒவ்வொரு ஷாட்டிலும், ஷாட் எடுத்து முடிந்த பிறகு அம்மக்களிடம் இடைவிடாது மன்னிப்பு கேட்டபடியே இருப்பாராம். ஏனென்றால் வீசும் லத்தி உண்மையிலேயெ கொஞ்சமாவது வலியை அடி வாங்குபவருக்கு கொடுத்துவிடுமாம். படத்தில் ஒவ்வொருவரும் தங்களின் அபாரமான நடிப்பாற்றலை செலுத்தியதன் விளைவுதான் படத்தின் மகத்தான வெற்றிக்கும் காரணமாக அமைந்துபோய்விடுகிறது.
படத்தின் வெற்றி எதுவாக இருக்கமுடியும்? நம் ஒவ்வொருவரின் மனசாட்சியை உலுக்கி நம் ஒவ்வொருவரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிவிடுகிறதே… அதுதான் படத்தின் வெற்றியே. லாக்கப் மரணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் மட்டுமே குற்றவாளியா? இல்லையே. செங்கணியைக் கூட்டி பேரம் பேசும் டி.ஜி.பி. செய்யும் குற்றமும் சப்-இன்ஸ்பெக்டர் செய்த குற்றத்திற்கு குறைவானதல்லவே. பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தடையேற்படுத்தும் பப்ளிக் ப்ராசிக்யூட்டரும், எம்.பி சீட்டுக்காக அலையும் அட்வகேட் ஜெனரலும் என்ன சாதாரணமான குற்றவாளிகளா? தன் கணவனுக்காக வீதி வீதியாக அலைந்து திரியும் செங்கணியின் துயர் துடைக்க ஒரு சுண்டு விரலைக் கூட அசைக்காத ஊராட்சித் தலைவரும், ஊர் மக்களும் சாதாரணக் குற்றவாளிகளா? சாதிப்பித்து பிடித்தலையும் ஒவ்வொருவனும் ஜெய்பீமுக்கு எதிரானவனே.
ஜெய்பீம் திரைப்படம் இன்றைக்கு அதைக் கண்ணுறும் எல்லா மக்களின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்து வருவதைக் காண சகிக்கமுடியாதவர்கள் அதற்கெதிரான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி விட்டார்கள். எதிர்பார்த்தபடியே புளுத்துப் போன சனாதன, ஆதிக்கவாதிகளாக மட்டுமே அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு போர்வைகளுக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா நிறங்களுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். எல்லா தேசியங்களின் கீழும் தங்களை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் போராட்டக் காலம் தொட்டு எளிய மக்களின் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் இயக்கமாகத் திகழ்வது செங்கொடி இயக்கமே. வெண்மணி முதல் வாச்சாத்தி வழி நீதி கேட்டு நெடிய பயணம் செய்யும் இயக்கம் செங்கொடி இயக்கம். ஆளும் அதிகாரவர்க்கம் நிகழ்த்தும் அனைத்து அத்துமீறலையும் தட்டிக் கேட்கும் ஒரே இயக்கம் செங்கொடி இயக்கம். அநீதி நடக்கும் ஒரு இடத்துக்கு முதலில் சென்றடைவது செங்கொடியாகத்தான் இருக்கமுடியும். விளிம்புநிலை மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், அம்மக்களுக்கு எழுத்தறிவு முதல் வாழ்விடத்திற்கான பட்டா பெறும் போராட்டம் வரை அனைத்துக்கும் துணை நிற்பது செங்கொடி இயக்கமே. வாச்சாத்தியிலும் சரி, வெண்மணியிலும் சரி செங்கொடி இயக்கம் வீறுகொண்டு எழுந்த வரலாற்றை நாம் அறிந்தே இருக்கிறோம். எளிய மக்களின் கடைசிப் புகலிடம் செங்கொடி இயக்கம் மட்டுமே. கோட்பாடுகளையும், சில நடைமுறைத் தவறுகளையும் சுட்டிக்காட்டி செங்கொடி இயக்கத்தையும், எளிய தலித் மக்களையும் பிரிப்பதற்கான செயல்கள் காலம்தோறும் நடந்துகொண்டேதான் வந்திருக்கின்றன. ஜெய்பீமையும், காம்ரேடுகளையும் என்றைக்குமே நிச்சயமாகப் பிரித்துவிட இயலாது.
படம் வெளியான நாள்தொட்டே ஜெய்பீமுக்கும், இப்படத்திற்கும் என்ன சம்பந்தம்? அல்லது இப்படத்தில் ஜெய்பீம் என்றொரு முழக்கம் கொஞ்சம் கூட இல்லையே? அல்லது ஜெய்பீம் என்னும் போர்வைக்குள் ஒரு கம்யூனிஸ்ட் வழக்கறிஞருக்கு என்ன வேலை இருக்கமுடியும்? என்னும் விசாரணைகளை சில தோழர்கள் நடத்தி வருகிறார்கள். அம்பேத்கர் காலம் தொட்டே நீலத்திற்கும், சிவப்புக்குமான கருத்து மோதல்கள் தீவிரமாக நடந்து வந்திருக்கிறது. ஜெய்பீம் காம்ரேட் என்னும் அனந்த்பட்வர்த்தனின் ஆவணப்படத்தை பலரும் பார்த்திருக்கக்கூடும். இவ்விரு கருத்துகளுக்குமான மோதல் இன்று வரை தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருந்து வந்திருக்கிறது. இனியும் இருக்கும். வரட்டு வாதங்களின் கீழ் ஒன்றுதிரளும் சில காம்ரேடுகளும், சில அம்பேத்கரிஸ்ட்களும் போட்டுக்கொள்ளும் சமூக அக்கறையற்ற விவாதங்களே.
புத்தர் தனது சொகுசான வாழ்வைத் துறந்து பரிநிர்வாணம் அடைய வேண்டி இப்புற உலகத்தோடு போராட்டம் நடத்துகிறார். அன்னம் துறக்கிறார். தூக்கம் தொலைக்கிறார். மக்களைத் துறந்து வெகுதூரம் சென்று காட்டிலும், மலையிலும் கடும் தவம் புரிகிறார். அதாவது இவ்வுலகத்தின் அனைத்து நிலையாமைகளுக்கும் எதிராகப் போரிடுகிறார். இப்போராட்டத்தில் தனது உடலை இழக்கிறார். வயிறு ஒட்டிப் போகிறது. உடலின் அனைத்து எலும்புகளும் வெளித் தெரிகிறது. அப்படியும் அவருக்கும் நிர்வாணம் கிட்டவில்லை. இவ்வழியில் பரிநிர்வாணம் அடையமுடியாது என்றுணர்ந்த புத்தர், பின்னர் இவ்வுலகத்தோடு இணைந்து, மக்களோடு மக்களாகி தனது அகத்தை முழுமையாக அறிந்த பின்னரே பரிநிர்வாணம் அடைகிறார். பரிநிர்வாணம் அடைந்த சாந்த சொரூபியான புத்தரை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞர் சந்துரு வணங்கும் புத்தர் இப்புற உலகத்தோடு போராடிக்கொண்டிருக்கும் வயிறு ஒட்டிய புத்தர். அநீதிகளுக்கு எதிராகப் பொங்கி எழும் உத்வேகத்தை இந்த புத்தர்தான் தரமுடியும். ஜெய்பீம் வெறும் முழக்கம் மட்டுமே அல்ல. ஜெய்பீம் என்பது சமூகநீதிக்கான, அநீதிக்கெதிரான போராட்டத்தின் குறியீடு. விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் குறியீடு. வெளிச்சத்திற்குள் இருளைத் தேடும் மனிதர்களைப் போல, ஜெய்பீம் படத்திற்குள் ஜெய்பீம் முழக்கத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள் நம் தோழர்கள். அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் எல்லோருக்கும் சொந்தக்காரன் ஜெய்பீம்.
சமகாலத்து நிகழ்வுகள் குறித்த கலைப்படைப்புகளை உருவாக்குவது மிக்க சவாலானது. ஜெய்பீம் அப்படிப்பட்ட படைப்புகளுள் ஒன்று. காலம் கடந்து உருவாக்கப்படும் படைப்புகளில் முரண்கள் குறைவாகவே இருக்கும். அதுவே நிகழ்காலத்தில் உருவாக்கப்படும்போது சம்பந்தப்படும் பாத்திரங்களின் பெயர்கள் மட்டுமாவது தவிர்க்கப்படவேண்டும். ஜெய்பீமின் வழக்கறிஞர் சந்துரு, புகழ்மிக்க ஓய்வுபெற்ற நீதிபதியான சந்துருவை குறியீடு செய்கிறார். படைப்பில் வேறு பெயர் தரப்பட்டிருக்குமானால், சட்டத்தையே ஆயுதமாக்கி இப்போதுவரை எளிய, விளிம்புநிலை மக்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் வழக்கறிஞர்களான ரத்தினங்களையும், பாலமுருகன்களையும் கூட அது குறியீடாக்கி இருக்கும். நிகழ்கால ஆளுமை ஒருவரை கலைப்படைப்பில் நேரடியாகப் பெயரிடும்போது அவருடைய எதிரிடை அம்சங்கள் குறித்தும் பொதுவெளியில் விவாதிக்கும் அபாயம் நேரிடுகிறது.
படத்தில் லாக்கப் காட்சிகள் நீங்கலாக மிகுதியான நேரத்தை நீதிமன்றங்களே எடுத்துக்கொள்கின்றன. அதுவும் பொருத்தமானதே. நீதிமன்றங்களின் நடைமுறை நீதிபரிபாலன முறை குறித்தும், அரசியல் சட்டம் வடிவமைத்துக் கொடுத்திருக்கும் சட்டகத்துக்குள் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு நீதியை எப்படிப் போராடி பெறமுடியும் என்பது குறித்தும் புரிந்துகொள்ளமுடிகிறது.
நிஜ உலகத்திற்கு வருவோம். பழங்குடி இன மக்களான இருளர் இன மக்களையோ அல்லது குறவர் இன மக்களையோ கடந்து செல்லும் வாய்ப்பு உங்களுக்கு வரும்போது நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுக்கக்கூட வேண்டாம். குறைந்தபட்சம் அவர்களிடம் நீங்கள் என்றைக்காவது நெருங்கிப் பேசியதுண்டா? உங்கள் ஊர்ப் பேருந்து நிலையங்களில் ஊசி, ஊக்கு, பாசிமணி விற்கும் குறவர் இனப் பெண்களிடம் நீங்கள் காசு கொடுத்துப் பொருட்கள் வாங்கியதுண்டா? நம் அகத்துக்குள்ளிருந்தே விசாரணை தொடங்கட்டும்.